Monday, April 11, 2016

குடும்பத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயம்-எம்.என்.இக்ராம்


கடந்த 2016.04.03 முதல் 06 வரை துருக்கியின் தலை நகர் இஸ்தான்பூலில் சர்வதேச ரீதியாக குடும்ப வாழ்வை ஒழுங்கு படுத்தி பாதுகாக்கும் நோக்கில் ஒரு சாசனத்தை வரைவதற்கான சர்வதேச மாநாடு ஒன்று இடம் பெற்றது.இதனை சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியமும் இஸ்லாமிய நாடுகளின் தொண்டு நிறுவனங்களின் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.இதில் தலை சிறந்த அறிஞர்களது குடும்ப வாழ்வு சம்பந்தமான பல்வேறு ஆய்வுகளும் கலந்துரையாடப்பட்டு இறுதியாக குடுமப விவகாரங்களை ஒழுங்கு படுத்தும் நோக்கில் ஒரு சர்வதேச சாசனமும் வெளியிடப்பட்டது.
இந்த சாசனம் 1979 டிசம்பரில் ஐ.நாவால் முன்வைக்கப்பட்டCEDAW(Convention on the Elimination of all forms of Discrimination against Women-பெண்களுக்கெதிரான அனைத்துவிதமான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சமவாயம்) என்ற பெண் சமத்துவம் குறித்து வழியுருத்தும் உடன்படிக்கைக்கு சமானமான ஒன்றாகக் கருதப்படுகிறது. CEDAW குடும்ப ஒழுங்கை தகர்த்தெரியும் பல்வேறு எதிர்மறை விடயங்களை உள்ளடக்கியுள்ளது.இதில்  189 நாடுகள் கைச்சாத்திட்டு,அதன் திட்டங்களுக்கு ஒப்புதல வழங்கியுள்ளன.அதில் எமது நாடு உட்பட அறபு இஸ்லாமிய நாடுகளும் உள்ளடங்குகின்றன.அதன் எதிர்மறைப் பாதிப்பை நாம் எமது நாடு உட்பட சர்வதேச அளவில் எதிர் கொண்டு வருகின்றோம்.தன்னினச் சேர்க்கையை சட்ட பூர்வமாக்கள்,விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கள்,திருமணத்திற்காக வயது வரையறைகளை ஏற்படுத்தல்....என குடும்ப வாழ்வை தகர்த்தெரியும் பல அம்சங்களை சட்ட பூர்வமாக அரசுகளை செய்வதற்காக நிரப்பந்திக்கும் ஒரு ஒபபந்தமாக CEDAWகாணப்படுகிறது. 
அந்த வகையில் குடும்ப வாழ்வை பாதுகாப்பதற்கான இந்த சாசனம் அல்லது ஒப்பந்தம் CEDAW விற்கு பகரமான ஒன்றாக உலக அளவில் ஐ.ந உட்பட சர்வதேச நிறுவனங்கள்,நாடுகளிடம் முன்வைக்கப்பட இருக்கின்றது.இதன் உள்ளடக்கத்தை இங்கு தருகின்றோம்.
குடும்ப சமவாயம்
அறிமுகம்
            குடும்பம்தான் மனித உருவாக்கத்தின்,மனித இனத்தின் நீட்சியினதும் நிலை பேரினதும் ஆரம்ப காப்பிடமாக காணப்படுகிறது.இன்றைய மனித சமூகம் குடும்ப கட்டமைப்பை சிதைவிழிருந்தும் அழிவிலிருந்தும் பாதுகாப்பதற்கும் உயர் விழுமியங்களை விதைப்பதற்குமான பலமான தேவையை கொண்டிருக்கிறது.
            எமது இன்றைய காலப்பகுதியில் குடும்பமானது எல்லா மட்டங்களிலும் பாரியளவிலான ஆபத்துக்களுக்கு உட்படு வருகிறது,பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்து வருகிறது.அவற்றின் காரணமாக குடும்பக் கட்டமைப்பு உடைவை சந்தித்து வருகிறது.
            மனிதர்களுக்கிடையே காணப்படும் கலாச்சார ரீதியான,நாகரிக ரீதியான தொடர்புகளின் இடைவினையின் காரணமாகவும்,சர்வதேச ரீதியான உடன்படிக்கைகள்,சமவாயங்கள் வாயிலாக ஏற்படுத்திக் கொள்ளப்படும் சட்ட ரீதியான பிணைப்புக்களின் காரணமாகவும் மனித சமூகத்தில் அவற்றின் எதிர்மறையான பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.இவற்றிடையே,குடும்ப நிறுவனத்தை உயர்வாகக் கருதும் மார்க்க போதனைகளை கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகமும் பாரிய பாதிப்புக்களுக்கு உட்பட்டு வருகின்றது.இஸ்லாத்தின் மார்க்கப் போதனைகள் குடும்பத்தின் பலத்தையும்,செயற்திறனையும் பாதுகாக்கும் வகையில்,ஒழுக்க விழுமியங்களையும்,சட்ட அடிப்படைகளையும் கொண்டமைந்துள்ளன.
            இந்த சமவாயம்  மானிட இயல்போடும்,இஸ்லாமிய ஷரீஆ போதனைகள் உறுதிப்படுத்திய அனைத்து இறை வேதங்களதும் போதனைகளுடனும் உடன்படுகின்ற பொது அடிப்படைகளை அத்திவாரமாகக் கொண்டு அமைந்திருக்கிறது.இவை கலாச்சாரப் பல்வகைமையை அங்கீகரிக்கும் ஐ.நா வின சமவாயத்துக்கு ஏற்புடைய அமைப்பில் அமைந்து காணப்படுகிறது.
முதற் பிரிவு: குடும்பம் பற்றிய வரைவிலக்கணமும் அதன் நோக்கங்களும்
1.   முதலாம் விதி:
குடும்பம் பற்றிய வரைவிலக்கணம் :குடும்பம் என்பது ஒரு ஆணையும் பெண்ணையும் கொண்டமைந்த ஒரு சமூக நிறுவனமாகும்.இது இரு சாராரதும் திருப்திகரமான மன  ஒப்புதலுக்கமைய மேற்கொள்ளப்படும் சட்டபூர்வமான திருமண உடன்படிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும்.இந்த நிறுவனம் நீதியையும் நன்மையையும்,பரஸ்பர உதவியையும் கலந்தாலோசனையையும் அன்பையும்,இரக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டமைந்திருக்கும்.
2.   இரண்டாம் விதி:குடும்பம் என்பது ஒரு ஆண்,பெண் சோடியையும்,பிள்ளைகள் இருப்பின் அவர்களையும் உள்ளடக்கியதாக அமையப் பெற்றிருக்கும்.
3.   மூன்றாம் விதி:குடும்பத்தின் நோக்கங்களாக பின்வருவன அமையப் பெற்றிருக்கும்
3.1  கணவன் மனைவி இருவரதும் கற்பை பாதுகாத்தல் மற்றும் மானத்தை பாதுகாத்தல்.
3.2  சந்ததியை ஆரோக்கியமாகவும் சமூக ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதுகாத்தலும் பராமறித்தலும்.
3.3  மனித இனத்தின் நிலைப்பேற்றை உறுதிப்படுத்தல்.
3.4  மன அமைதியும் உறுதிப்பாடும்,அன்பு,இரக்கம்
3.5   பாதுகாப்பும்,இஸ்தீரத்தன்மையும் கொண்ட மனித சமூகத்தை கட்டியெழுப்பல்.
3.6  குடும்பம் ஒன்றை சார்ந்திருப்பதற்கான தேவைக்கு பதிலிருத்தல்
இரண்டாம் பிரிவு: குடும்பத்தின் சிறப்பியலபுகளும் பணிகளும்
4.   நான்காம் விதி:குடும்பம் பின்வரும் பண்புகளைப் பெற்றமைந்திருக்கும்
4.1  கணவன் மனைவி இருவருக்கிடையேயும் உரிமைகள் கடமைகள் விடயததில் நீதியையும் நேர்மையையும் நன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில் சமநிலை பேணும்
4.2  மானிட பிறவித்தன்மை,மானிட கண்ணியம்,சமூக,சட்ட ஆள்பேறு,சொத்துடைமை என்பவற்றின் அடிப்படையில் இரு பாலாரினதும் சமத்துவம்.
4.3  பரஸ்பர மன ஒப்புதலும் கலந்தாலோசனையும்
5.   ஐந்தாம் விதி:குடும்பத்தின் பணிகள்
5.1  முழுமையான அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்தல்.அது சிந்தனா,சமூக,பொருளாதார,அரசியல் ரீதியானது என அனைத்து பரப்பையும் அமைந்திருக்கும்.
5.2  பௌதீக ரீதியாகவும் மானசீக ரீதியாகவும் அதன் உறுப்பினர்களை பராமறித்தல்.இது அது கிளைத்த மூலத்தையும் அதிலிருந்து கிளைத்த கிளைகளையும் உள்ளடக்கும்.
5.3  அதன் அங்கத்தவர்களுக்கான தேக ஆரோக்கயத்தை பராமறிப்பதற்கும் உள ஆரோக்கியத்தை பராமறிப்பதற்குமான நிபந்தனைகளை பூர்த்தியாக்க உழைக்கும்.
5.4  அதன் அங்கத்தவர்களது அறிவு,உடல்,உள,உணர்வு சார் ஆற்றல்களை கல்வி புகட்டுவதாலும்,அறிவு புகட்டுவதாலும்,அனுமதிக்கப்பட்ட முறைகளில் ஆசுவாசப்படுத்துவதாலும் வளர்ச்சியுறச் செய்தல்.
மூன்றாம் பிரிவு : குழந்தையும் குடும்பத்தில் அதன் உரிமைகளும்
6.   ஆறாம் விதி:குழந்தை பற்றிய வரைவிலக்கணம்
குழந்தைப் பருவம் சிசுப் பராயத்தில் இருந்து பருவமடையும் வரையான காலமாகும்.
7.   ஏழாம் விதி:குடும்பத்தில் குழந்தையின் உரிமைகள் பின்வருமம் வகையில் அமைந்திருக்கும்.
7.1  உயிர் வாழ்வதற்கும் இருப்பிற்குமான உரிமை.இதற்கு பங்கம் விளைவிக்ககவோ,அதில் அத்து மீறவோ கூடாது.இந்த உரிமை சிசு நிலையிலிருந்து துவங்கும்.
7.2  சட்டபூர்வமான தாய் தந்தையரை சார்ந்திருப்பதற்கும் தனது மார்க்க,கலாச்சார,சமூக அடையாளங்களை சார்ந்திருப்பதற்குமான உரிமை.
7.3  தாய்ப்பாலுக்கான உரிமை.இது குழந்தையினதோ,தாயினதோ ஆரோக்கியத்துக்கு பாதிப்பு வராத வரையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
7.4  பாரமறிப்பை பெறுவதற்கான உரிமை.இது குழந்தைக்கான முழுமையான பரமறிப்பாகும்.அதன் பௌதீக,மானசீக ரீதியான அனைத்து விவகாரங்களையும் பராமறிப்பதைக் குறிக்கும்.இது பெற்றோரின் பிரிவின் போதும் தொடர்ந்திருக்கும் தன்மை கொண்டது.
7.5  செலவை பெற்றுக் கொள்வதற்கான உரிமை.இது உணவு,பாணம்,உடை,வாழ்விடம்,கல்விச் செலவு,மருத்துவச் செலவு,மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான செலவு என ஒரு குழந்தையின் சூழல் வழக்காறு வேண்டி நிற்கும் அனைத்து செலுவுகளையும் உட் பொதிந்ததாகும்.இது பெற்றோரின் பிரிவின் போதும் தொடர்ந்திருக்கும் தன்மை கொண்டது.இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையுடைய பிள்ளைகளுக்கும் இது உரித்துடையதாகும்.
7.6  குழந்தை விவகாரங்களை சுயமாக கையாளும் முதிர் நிலையை அடையும் வரை தன்னையும் தனது சொத்துக்களையும் பராமரிக்கும் பொருப்பாளரின் காப்பை(விலாயா) பெறும் உரிமை.
7.7  பௌதீக ரீதியாகவும் மானசீக ரீதியாகவும் எதிர்ப்படும் அனைத்து அத்து மீறல்கள்,உடல் ரீதியான சுரண்டல்கள்,சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் வேலைக்கமர்த்துதல்,பாலியல் ரீதியான அத்து மீறல்கள்,உடல் வியாபாரம்,நிர்ப்பந்த குடிப் பெயர்ப்பு போன்றவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை.
7.8  சீரான கொள்கை,சிறந்த ஒழுக்க விழுமியங்கள் என்பவற்றால் போசிக்கப்பட்டு வளரவதற்கான உரிமை.
7.9  ஆன்ம சமநிலை,தேசத்தை சார்ந்திருத்தல்,பரஸ்பர ஒத்துழைப்பு,சமாதானம்,நீதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட மானிடக் கூட்டுறவு என்பவற்றை பெறும் வகையில் கல்வியும் பயிற்சியும் பெறுவதற்கன உரிமை.
7.10       தனது சுயத்தை பாதுகாத்த வண்ணம் ஆன்மாவையும் மனதையும் உயரச்சி பெறச் செய்யும் வகையில் போசிக்கப்பட்டு வளர்வதற்கான உரிமை.
7.11       கற்பைப் பேணி, பிறழ்வு நடத்தை,குடும்ப நிறுவனத்துக்கு வெளியே பாலியல் தொடர்புகள் வைப்பது என்பவற்றை விட்டும் தவிர்ந்தும் அதன் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வூட்டப்பட்டும் போசிக்கப்பட்டு வளர்வதற்கான உரிமை.
நான்காம்பிரிவு: நீட்சி பெற்ற குடும்பம் அல்லது பெரும் குடும்பம்
8.   எட்டாம் விதி: பெரும் குடும்பம்
8.1  பெரும் குடும்பம் என்பது குடும்பததின் எஞ்சிய உறவுகளையும் இரத்த பந்தங்களையும் உள்ளடக்கிய குடும்பமாகும்.
8.2  பெரும் குடும்பம் பின்வரும் பெறுமானங்களை பேணி அமையும்
8.2.1      இரத்த பந்தம்,நன்மை,அன்பு,பரஸ்பர இரக்கம் என்பவற்றுக்கான பெறுமானங்களை பேணுதல்.
8.2.2      பௌதீக ரீதியான,மானசீக ரீதியான பராமரிப்பு,சமூகக் காப்பு போன்றவற்றை போதியளவு தமது குடும்பத்துக்குள்ளால் பெற்றுக் கொடுத்தல்.விஷேடமாக தேவையுடையோர்,வயது முதிர்ந்தோர்,விஷேட தேவையுடையோர் போன்றவர்கள் இந்த விடயத்தில் கவனத்துக்குறியோராவர்.அவர்களை கவனிப்பற்று விடுதல் கூடாது.
8.2.3      விஷேட தேவையுடையோருக்கு கௌரவமான வாழ்வை உத்தரவாதப்படுத்தல்.
8.2.4      பிரச்சினைகளின் போது இணக்கப்பாடு ஏற்படுத்தல்.
8.2.5      உறவினரை சேர்ந்து நடப்பதன் மூலம் பொதுவாகவும்,பிரச்சினைகள் ஏற்படும் போது இணக்கப்பாடு ஏற்படுத்துவதன் மூலமும்,அவர்களது சுக,துக்கங்களில் ஆதரவளிப்பதன் மூலமும் அவர்களுக்கு உபகாரம் புரிதல்.
ஐந்தாம் பிரிவு: குடும்ப ஒழுங்கு
9.    ஒன்பதாம் விதி:திருமனம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே இடம் பெறும் சட்ட பூர்வமான உடன்படிக்கையாகும்.இது மாத்திரமே குடும்பம் என்ற ஒழுங்கு ஏற்படுவதற்கான ஏக வழியாகும்.
10.  பத்தாம் விதி:திருமண ஒப்பந்தம் சுதந்திரமான தெரிவு,ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான திருப்திகரமான மன ஒப்புதல்,நன்மையான தொடர்பு,பரஸ்பர உபகாரம் என்பவற்றின் அடிப்படையில் அமையப் பெறும்.
11.  பதினோராம் விதி:திருமண ஒப்பந்தத்திற்கு தம்பதியினரின் தகுதி நிலை,பொருப்பை சுமப்பதற்கான இயலுமை என்பன நிபந்தனைகளாகக் கொள்ளப்படும்.
12.  பண்ணிரெண்டாம் விதி:திருமண ஒப்பந்தத்தின் அடியாக தம்பதியினருக்கு பரஸ்பர உரிமைகளும் கடமைகளும் உரித்தாகின்றன.அவை பரிபூரணமக நிறைவேற்றப்படுவது கடமையாகும்.
13.  பதின் மூன்றாம் விதி:குடும்பத்துக்கான செலவீனங்களை கணவன் தனது இயலுமைக்கும்,வசதிக்குமேற்ப சுமந்து கொள்வார்.வசதி பெற்ற மனைவி குடும்பத்துக்கான செலவீனங்களில் பங்களிப்பு செய்வது அவளது உபகாரமாகவே அமையும்.
14.  பதின் நான்காம் விதி:குடும்பம் என்பது ஒரு இணை நிறுவனமாகும்.அதனை நடாத்திச் செல்வது தம்பதியருக்கிடையேயான கூட்டுப் பொருப்பாகும்.கணவனுக்கு இதில் முதன்மைப் பொருப்பு காணப்படுகின்றது.அவன் குடும்ப விவகாரங்களை கலந்தாலோசனை,திருப்திகரமான பரஸ்பரமன ஒப்புதல்,நீதி,சமயோசிதம்,அன்பு,நல்லுறவு என்பவற்றினடிப்படையில் நிர்வகிப்பான்.
15.   பதின் ஐந்தாம் விதி:குடும்ப விவகாரங்களை நடாத்திச் செல்வது பங்களிப்புக்களில் சமநிலை பேணல்,முழுமைப்படுத்தல் என்ற அடிப்படையில் இடம் பெறும்.
16.  பதின் ஆறாம் விதி:குடும்பத்துக்குள்ளால் கடமைகள்,உரிமைகள் என்பவற்றை பங்கீடு செய்வது,தனி நபர்களின் இயல்பு நிலை வேறுபாட்டுக்கமையக் காணப்படும் சிறப்பு நிலையை கருத்தில் கொண்டு அமையும்.இது பெறுமானங்களில் பொருத்தப்பாடுடைமை,பரஸ்பர கௌரவ நிலை என்பவற்றை கருத்திற் கொண்டும் ஒருவரை தரம் குறைத்து அல்லது இரண்டாம் பட்சமாக நோக்குவதை மறுதத நிலையிலும் இடம் பெறும்.
17.  பதின் ஏழாம் விதி:பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளாக பூரண உபகாரம்,பராமறிப்பு,நல்லுறவு என்பன காணப்படுகின்றன.
18.  பதின் எட்டாவது விதி:குடும்ப உறுப்பினருக்கிடையிலான அனைத்து வகையான அநியாயங்களும்,துஷ்பிரயோகங்களும்,தீய பாதிப்பை கொண்டு வரும் செயற்பாடுகளும் தடுக்கப்பட்டதாகும்.
19.  பத்தொன்பதாவது விதி:உரிமைகளுக்கான உத்தரவாதத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் திருமண ஒப்பந்தத்திற்குறிய ஆவணம் பேணப்பட வேணடும்.
ஆறாம் பிரிவு: திருமண உறவை முடிவுக்கு கொண்டு வருதல்.
20.  இருபதாவது விதி:திருமண உறவின் அடிப்படை அது தொடரச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டமைவதாகும்.எனினும் அதனை தொடர்ச்சியாக பேண முடியாத போது,அதில் ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வுகளை தேடுவதற்கான அனைத்து வழிகளும்,படிகளும் இல்லாது போகின்ற போது மணவிலக்கை (தலாக்கை) நாட வேண்டி ஏற்படும்.
21.  இருபத்தொராவது விதி:மணவிலக்கு(தலாக்)இடம் பெறும் நிலையில் அது சட்ட பூர்வமானதாகவும்,சிறப்பான அமைப்பிலும் இடம்பெற வேண்டும்.
22.  இருபத்தி இரண்டாவது விதி:திருமண உறவு தொடர முடியாத நிலை ஏற்படுகையில் கணவனுக்கு சிறந்த முறையில் தலாக் சொல்லும் உரிமை காணப்படுகிறது.அதே போன்று தலாக்கை அல்லது குலூஃவை கோரும் உரிமை மனைவிக்கும் உண்டு.
23.  இருபத்தி மூன்றாவது விதி:தலாக் இடம் பெற முன்னர் ஏற்படும் பிரச்சினைகள்,பிளவுகளின் போது,தம்பதியினர் இருவரதும் குடும்பம் சார்பில் இரு சமயோசித புத்தியுள்ள,நீதியான மனிதர்களின் தலையீட்டின் மூலம் அவர்களுக்கிடையே இணக்கப்பாட்டையும் மீளுறவையும் ஏற்படுத்தி வைக்க முடியும்.
24.  இருபத்தி நான்காவது விதி:தலாக் இடம் பெறும் பட்சத்தில்,அதன் வகை தீர்மானிக்கப்பட்டு அதற்குரிய தேவைகள் நன்மையான முறையில் நிறைவேற்றப் படுவதோடு,அதனடிப்படையில் குடும்ப உறுப்பினர்களின் உரிமைகள் பெற்றுக் கொடுக்ப்படும்.
ஏழாம் பிரிவு:குடும்பத்தை பாதுகாப்பதில் அரசினதும் தன்னார்வ நிறுவனங்களதும் பொருப்பு
25.  இருபத்தி ஐந்தாவது விதி:அரசு குடும்பத்தை பாதுகாப்பதற்காக பின்வரும் விடயங்களை நிறைவேற்றுவது அதன் பொருப்பாகும்.
25.1   யாப்பு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் குடும்ப ஒழுங்கிற்கான பாதுகாப்பை வழங்குதல்.
25.2 குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் சமூக நிறுவனங்களை பங்கு கொள்ளச் செய்தல்.
25.3  தலாக்,மரணம் பேன்ற சந்தரப்பங்களின் போது பெண்ணையும் பிள்ளைகளையும் போக்கற்று அநாதரவாகும் நிலையிலிருந்து பாதுகாக்கும் வகையில் வசிப்பிடத்துடன் கூடிய புகழிடத்தை திருப்திகரமாக பெற்றுக் கொடுத்தல்.
25.4  குழந்தைகளின் மேலதிக நலன்கள் என்ற வகையில் அவர்களது கல்வியை தொடர்வதற்கும்,அவர்களது பௌதீக,மானசீக ரீதியான தேவைகளை நிறைவு செயது கொள்வதற்குமான ஏற்பாட்டை செய்து கொடுத்தல்.
25.5  குடும்பத்திற்கான மகிழ்ச்சியை பெற்றுக் கொடுக்கும் வகையிலும்,அதன் நிலைப்பையும்,இஸ்தீரத் தன்மையையும் பேணும் வகையிலும் சீரான குடும்ப கலாச்சாரத்தை பரப்புவதற்கான நடவடிக்க மேற்கொள்ளல்.
25.6  திருமணத்தை எதிர் நோக்கியிருப்பவர்களை குடும்பத்தின் பொருப்புக்களை சுமப்பதற்காக தகுதி படுத்தல்,குடும்ப உளவள ஆலோசனை நிலையங்கள்,குடுமப்பிரச்சினைகளில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தும் நல்லினக்க சபைகள் என்பவற்றை ஏற்படுத்தல் என்பவற்றில் சிவில் சமூக நிறுவனங்கள் தமது பங்களிப்புக்களை நிறைவேற்றச் செய்தல்.
25.7  திருமணத்திற்கான வழிகளை இலகுபடுத்தலும் அதற்காக தூண்டுதலும்.
எட்டாம் பிரிவு: சொததுப் பகிர்வு,மரணசாசனம்,இத்தா
26.  இருபத்தி ஆறாவது விதி:சொத்துப் பகிர்வு நீதி,பூரணப்படுத்தல்,பொருப்புணர்வு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையும்.
27.  இருபத்தி ஏழாவது விதி:மரணித்தவரது சொத்து அதற்குரியவர்களுக்கு உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.எந்த வாரிசும்(சொ்த்துப் பங்கு பெற வேண்டியவர்) அவருக்குரிய சொத்துப் பங்கை பெறுவதைவிட்டும் தடுக்கப்படவோ,அதனை கையாளுவதை விட்டும் தடுக்கப்படவோ கூடாது.
28.  இருபத்தி எட்டாவது விதி:மரண சாசனம் ஒரு நன்மையான காரியமாகக் கருதப்படும்.அதனை சட்ட ஏற்பாடுகளுக்கு ஏற்ப நிறைவேற்றுவது கடமையாகும்.
29.  இருபத்தி ஒன்பதாவது விதி:தலாக் சொல்லப்பட்ட பெண் அல்லது கணவனை இழந்த பெண் பரம்பரையை பேணுவதற்காகவும்,உள நிலையை கவனத்திற் கொள்ளும் வகையிலும் இத்தா இருத்தல் வேண்டும்.

07.04.2016

Saturday, March 19, 2016

ஜாமியா நளீமியாவின் இஸ்தாபகர் இலங்கையின் இஸ்லாமிய எழுச்சியின் முன்னோடிகளுள் ஒருவர்(05.10.2007,மீள்பார்வை-இதழ்-137)எம்.என்.இக்ராம்

“அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை உண்மைப்படுத்திய சில ஆளுமைகள் காணப்படுகின்றன.அவர்களில் சிலர் அதனை அடைந்து விட்டனர்.இன்னும் சிலர் எதிர்பாரத்திருக்கின்றனர்.அவர்கள் அதனை முற்றாக மாற்றிவிடமாட்டார்கள்”-அஹ்ஸாப்: 23-
இலங்கை்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான தொடர்பு மிகவும் தொன்மையானது.அது தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டியது.அவ்வகையான ஆய்வுகள் எமக்கு ஒரு செழுமையான வரலாற்றைத் தரலாம்.அதனைத் தாண்டி நமது அண்மைய வரலாற்றை ஒரு முறை மீட்டிப் பார்க்ககையில் நமது வரலாற்றை செழுமைப்படுத்திய நிறைய ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும் கண்டு கொள்கிறோம்.
அறிஞர் தாஸிம் நத்வி,மௌலவி மஸ்ஊத் ஆலிம்,கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்,அறிஞர் ஏ.எம்.ஏ அஸீஸ்...போன்ற பல ஆளுமைகள் நமது அண்மைய வரலாற்றில் நமக்கு தென்படுகின்றனர்.இந்த ஆளுமைகளுக்குள் சற்றும் குறைத்து மதிப்பிட முடியாத ஒருவராகத்தான் நாம் அல் ஹாஜ் நளீம் அவர்களைக் காண்கிறோம்.
1960/70கள் இலங்கையின் வரலாற்றில் முக்கியமான காலப் பகுதி.இலங்கையில் வாழும் பிரதான இனங்கள் தமது தனித்துவத்தை உணர்ந்து கொள்ள ஆரம்பித்த காலப்பகுதி.அக்காலம் இலங்கை முஸ்லிம்களை பொருத்தவரை கல்வி,கலாசாரம்,கொள்கைத் தனித்துவத்தை சமூகத்தளத்தில் சவால்களுக்கு மத்தியில் முன்னெடுப்பு செய்ய வேண்டிய தேவை உணரப்பட்டது.
இக்காலப் பகுதியில்தான் மஸ்ஊத் ஆலிம்,நளீம் ஹாஜியார்,அறிஞர் தாஸிம் நத்வி,ஏ.எம்.ஏ அஸீஸ்,ஹிபதுல்லாஹ் ஹாஜியார்...போன்ற சமூக செயற்பாடடாளர்கள் இலங்கை முஸ்லிம்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் சிந்திக்கத் தலைப்பட்டனர்.முஸ்லிம் சமூகத்தின் கல்விப் பிரச்சினை,பொருளாதாரப் பிரச்சினை,காலாசாரம்,தனித்துவம் சம்பந்தமான பிரச்சினை என அவர்களது சிந்தனைத் தளம் விரிவடைந்தது.
இதே 70 களின் காலப் பகுதியில் சர்வதேச அளவில் இஸ்லாமிய உம்மத் ஒரு எழுச்சிப் போராட்டத்தை முதிரச் செய்து கொண்டிருந்தது.மௌலவி மஸ்ஊத் ஆலிம்,அறிஞர் தாஸிம் நத்வி,அறிஞர் ஏ.எம் ஏ. அஸீஸ் போன்றோரின் சிந்தனைகளை அந்த எழுச்சி அலைகள் பதிக்காமல் விட்டு வைக்கவில்லை.இந்தப் பாதிப்புக்கள் சமூக செயற்பாடுகளுக்காக அவர்களுடன் ஒன்றிணைந்த அனைவரையும் ஈர்த்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
இந்தப் பின்னணியில் இருந்துதான் முஸ்லிம் கிராமங்கள் தோறும் நளீம் ஹாஜியாரால் கட்டப்பட்ட பள்ளிவாயில்களை,வறுமையால் பாதிக்கப்பட்டோருக்கு அவர் கட்டிக் கொடுத்த வீடுகளை,அவரால் செய்யப்பட்ட அவர்களது பிள்ளைகளது கல்வி மற்றும் திருமணங்களுக்கான உதவிகளை...நம்மால் பார்க்க முடிகிறது.(இது இந்தியா வரை வியாபித்துள்ளது)நளீம் ஹாஜியார் உட்பட அவரோடிருந்த சகாக்களால் முன் கொண்டு செல்லப்பட்ட இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கப் பணிகள் இவ்வகையில் கூர்மையாகப் பார்க்கப்பட வேண்டியவை.இலங்கை முஸ்லிம் கல்வி வரலாற்றில் ஒரு பெறும் திருப்பு முனையை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் சாதித்தது.
இப்பணிகள் எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற் போல் அல்லது இவ்வாறான பணிகளை சுமக்கும் சமூக செயற்பாட்டாளர்களை பயிற்றுவிக்கும் ஒரு தளமாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ஜாமிஆ நளீமியா.ஜாமிஆ நளீமியா நளீம் ஹாஜியாரும் அவரோடிருந்தவர்களும் முஸ்லிம் சமூகத்துக்காக விட்டுச் சென்ற ஒரு வக்பு சொத்து.
நளீம் ஹாஜியாரினதும் அவரது தோழர்களதும் பணிகள் அனைத்தின் மீதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு பணியாகத்தான் ஜாமிஆ நளீமியாவின் தோற்றம் அமைந்தது.இலங்கை முஸ்லிம்களது அனைத்துத் தளங்களிலும் பாதிப்புச் செலுத்தியுள்ள ஒரு கல்வி நிறுவனமாக ஜாமிஆ நளீமியா இன்று மாறியுள்ளது.அதன் சிந்தனை வீச்சுகள் இலங்கை முஸ்லிம்களையும் தாண்டி தமிழ் பேசும் உலகை நோக்கியும் வியாபிக்கிறது.
நளீம் ஹாஜியாரையும் இலங்கை முஸ்லிம்களையும் சர்வதேச முஸ்லிம் உம்மத்துக்கு அறிமுகம்(அண்மைய காலத்தில்) செய்த இடமாக நாம் ஜாமிஆ நளீமியாவைக் குறிப்பிடலாம்.நளீம் ஹாஜியார் ஞாபகப்படுத்தப் படும் போதெல்லாம் அதனுடன் சேர்த்து நளீமியாவும் மனக் கண் முன் தோன்றும்.அதே போன்று நளீம் ஹாஜியாரின் பங்களிப்புக்கள் பற்றிப் பேசும் போதெல்லாம் அங்கு மஸ்ஊத் ஆலிம்,ஹிபதுல்லாஹ் ஹாஜியார் போன்றோர் அவருடன் சேர்ந்து கொள்கிறார்கள்.இந்த அணியுடன் கலாநிதி சுக்ரியும் இணைந்து கொள்கிறார்.
1980 களின் பின்னால் இலங்கையில் உத்வேகம் பெற்ற இஸ்லாமிய எழுச்சியில் ஜாமிஆ நளீமியாவுக்கும் பல்கலைக் கழக மாணவர் சமூகத்துக்கும் பாரிய பங்களிப்புள்ளது.இந்தப் பங்களிப்பின் வேர்கள் நளீம் ஹாஜியாரையும் அவருடனிருந்த இஸ்லாமிய சிந்தனையாளர்களையும் போய்ச் சேர்கிறது.இது விரிவாக நிகழ்வுகளின் குறிப்புகளுடன் பார்க்கப்பட வேண்டியது.சில போது நாம் இப்படிக் குறிப்பிடுகையில் பலருக்கு வியப்பான கேள்விகள் எழக் கூடும்.ஏனெனில் முற்றத்து மல்லிகை மணப்பதில்லை என்பதுதான் அது.நாம் எப்போதும் அயல் வீட்டையும் அயல் முற்றத்தையும் பார்த்து வியந்து பழகியவர்கள்.நமக்கு நமது பூர்வீகங்கள் எப்போதும் அந்நியமானவை.இந்த அந்நியம் எப்பொழுதும் தொடரக் கூடாது.அது வரலாற்றை விட்டும் நம்மை அந்நியப்படுத்திவிடும்.வரலாற்றில் தோன்றிய ஒவ்வோர் ஆளுமைக்கும் அதேற்கேயுரிய பாத்திரத்தை கொடுக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
மேற்கின் காலனியம் நம்மில் வளர்த்த,நம்மை சிறுமையாகப் பார்க்கும் இந்த மனோ நிலை மோசமானது.தென்னாபிரிக்க மக்கள் தமது வரலாற்று செழுமைகளுடன் காலனித்துவத்தை எதிர்த்து உதைத்தெழும்பியது போல் நாமும் நமது வரலாற்றுச் செழுமைகளுடன் தனித்துவமாய் சிந்திக்க முற்பட வேண்டும்.இங்குதான் நளீம் ஹாஜியாரையும், நமக்குள்ளால் நிகழ்ந்து வரும் இஸ்லாமிய எழுச்சியையும் நாம் எப்படிப் பார்க்க வேண்டும் என்ற பார்வை நமக்கு வெளிச்சமாகிறது.இஸ்லாமிய எழுச்சி என்பது வெறுமனே சிந்தனையின் எழுச்சி மாத்திரமல்ல,அது செயற்பாட்டின் எழுச்சி.அதில் நளீம் ஹாஜியார் போன்றோருக்கும் பெரும் பங்குள்ளது.
நளீம் ஹாஜியார் பணத்தை கொடையாக மாத்திரம் தந்துவிட்டுச் சென்ற ஒரு முதலாளி அல்ல.அவர் ஒரு சிந்தனைப் பாரம்பரியத்தின் முதுகெழும்பாய் இருந்தவர்.நளீம் ஹாஜியார் வாழ்ந்த பூமியும்,அவரது உரைகளும்,அவரது தோழர்களும்,அவர நீர் வார்த்த சிந்தனையும் இதனை எமக்கு தெளிவாய் உணர்த்தும் சான்றுகள்.இந்தச் சான்றுகள் அழிந்து போகாமல் பாதுகாக்கப்பட வேண்டியவை.ஏனெனில்,அவை எமது வரலாறு.எமது வரலாற்றோட்டத்தில் ஒரு திருப்பு முனைக்குக் காரணமாய் அமைந்தவர்தான் நளீம் ஹாஜியார்.எனவேதான் நாம் அவரை அறிவுத் தந்தை என்கிறோம்.அல்லாஹ் அவரையும் அவரது பணிகளையும் பொருந்திக் கொள்ளட்டும்.அவருக்குப் பின்னால் எம்மை அவன் நேர் வழியில் செலுத்தட்டும்.
(நாம் ஒரு முறை வகுப்புத் தோழர்களுடன் வளாகத்தில் இருக்கையில் ஹாஜியார் வந்து நிர்வாகக் கட்டிடத்தின் கீழ் அமர்ந்தார்.அவருடன் உரையாடிக் கொண்டிருந்தோம்...அவரது மரணம் குறித்தே அதிகம் கதைத்தார்...அவரை அடக்கம் செய்யுமாறு நிர்வாகக் கட்டிடத்திற்கு முன்னால் இருந்த ஓர் இடத்தை காண்பித்தார்....அதுட ஹிகமத் என்ன தெரியுமா எனக் கேட்டுவிட்டு...வருபவர்கள் எனக்கு அப்பதான் துஆ செய்வார்கள் என்றார்...இந்த உரையாடிலிடையே ஹாஜியார் நான் இல்லாட்டி இதனை (நளீமியாவை)நீங்கள்தான் பார்த்துக் கொள்ளனும் செய்வீர்கள் தானே என்றார்.அப்போது அவரது பார்வையும் எனது பார்வையும் விபத்தாக நோக்கிக் கொண்டிருந்தன...அந்த வசனங்களின் பாதிப்பு இன்னும் மனதில் ஆளமாய் உள்ளது...எனவேதான்,அவர் மரணித்த போது விபத்துக்குள்ளாகி கால் சுகயீனமுற்றிருந்த போதும் சகோதரர்களின் உதவியுடன் இரவோடிரவாகச் சென்று அவரது ஜனாஸாவை தரிசித்து கப்ருக் குழியிலும் இரங்கிவிட்டு,இரண்டு ரக்காஅத்துக்கள் பள்ளியில் தொழுது பிரார்த்தித்துவிட்டு...ஜனஸாவில் கலந்து கொள்ள முடியாமையால் திரும்பினேன்....
அதன் தொடரில் அந்தக் காலப் பகுதியின் பிற்பாடு...பத்திரிகையில் வேலை செய்யும் காலத்தில் ஹாஜியார் வபாத்தான 27.09.2005 தினத்தின் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பை எழுதி வந்தேன்.ஒரு முறை பத்திரிகையின் பக்கங்களின் உள்ளடக்கமெல்லாம் நிறைவுற்ற பின்னர் ஹாஜியாரைப் பற்றி எழுத வேண்டும் என்ற போது அப்போது மீள்பார்வைக்கு பொருப்பாக இருந்த சகோதரர் சிறாஜ் தனது பத்தியை அதற்காக தந்தார்.2010 பின் அது இடம் பெறவில்லை.நேற்று இரவு வேறோர் தேவைக்காக மீள்பார்வை இதழ்களை புரட்டிய போது ஹாஜியார் பற்றிய கட்டுரைகள் கண்களில் பட்டது.அப்போது,அந்த நினைவுகள் உயிர்த்துக் கொண்டன.இன்று ஹாஜியாரின் நினைவுப் பேருரை இடம் பெற இருக்கிறது என்பதால் அவற்றில் ஒன்றை பதிவிடலாம் என்று இங்கு தருகிறேன்.அவர் பற்றி எழுதிய மற்றைய குறிப்புகளையும் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் காலங்களில் பதிவிட முனைகிறேன்.)

சமூக எழுச்சிக்கான அல்லது மாற்றத்திற்கான இஸ்லாத்தின் செயற்திட்டம்-02 எம்.என்.இக்ராம்

ikrammn@gmail.com
அறிமுகம்
சமூக எழுச்சி அல்லது மாற்றம் குறித்து பேசும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னுமோர் விடயம் காணப்படுகிறது.அது,இந்த விடயத்தில் ஆர்வம் காட்டுவோர் அல்லது ஈடுபடுவோர் தாம் ஏற்படுத்த விரும்புகின்ற மாற்றம் அல்லது எழுச்சி குறித்த முழுமையான வடிவத்தை அல்லது வரைபடத்தை எந்தளவு தூரம் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்ற விடயம்.சாதாரணமாக ஒரு சிறிய காரியம் அல்லது பயணம் மேற் கொள்பவரிடமே இந்தத் தெளிவு மன வரைபடமாக இல்லாத போது அவரது காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதில் பல இடர்பாடுகளை எதிர் கொள்வார்.ஒரு பயணத்தை மேற் கொள்பவர் பல திக்குகளிலும் திசை மாறி சுற்றிவருவார்.
இந்த வெளிப்பாட்டை நாம் சமூக மாற்றத்திற்காக உழைக்கின்ற செயற்களங்களிளே தெளிவாகக் காண்கிறோம்.இந்தத் தெளிவை சரியாக பெற்ற அணி குறி்த்த ஒரு காலப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நோக்கி பயணிப்பதைக் காண்கிறோம்.அப்படி தெளிவற்ற அணி குறித்த ஒரு வட்டத்தில் செக்குப் போன்று சுற்றிச் சுற்றி இருந்துவிட்டு,அதற்கப்பால் நகர முடியாத போது ஆளுக்கொரு சிந்தனையையும் நாளுக்கொரு திட்டத்தையும் வகுத்து வகுத்து,காலத்தையும் வளத்தையும் சில நியாயங்களை சொல்லிக் கொண்டு வீணடிப்பதைக் காண்கிறோம்.
சமூக விவகாரங்கள் குறித்து சிந்திப்பவர்களுள் பெரும்பாலானவர்கள் உணர்வு பூர்வமானவர்கள்.சமூகத்தின் நிலை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பர்.அதனை மாற்றுவதற்காக செயற்பட வேண்டும் என தூய்மையாக விரும்புவர்.எனினும் சமூகத்தின் நிலை,அதனை மாற்றுவதற்கான முறை,அதற்கான உழைப்பு என்பன குறித்து அறிவு பூர்வமாக சிந்திக்கவோ,திட்டமிடவோ முனைய மாட்டார்கள்.இவர்கள் பல போது சமூக எழுச்சிக்கு தடையான செயல்களை செய்பவர்களாக மாறிவிடுவர்.
இன்னுமோர் சாரார் இருப்பர்,அவர்கள் சமூக விவகாரங்கள்,அதன் நிலைகள் குறித்து அறிவதிலும் அதனுடன் தொடர்புபட்ட வகையில் வாசிப்பதிலும் சிந்திப்பதிலும் ஈடுபடுவர்.எனினும்,அது குறித்து விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்வதற்கோ,அதனடியாக வரும் தீர்மானத்தை வைத்து செயற்படவோ முனைய மாட்டார்கள்.இவர்கள் சமூக எழுச்சிக்கான செயற்பாடுகளை அதிகம் விமர்சிப்பவர்களாகவும்.அதனை எப்போதுமே கருப்புக் கண்ணாடியால் நோக்குபவர்களாகவுமே இருப்பர்.இவர்களும் கூட எழுச்சிக்கு தடைக்கற்களாக மாறிவிடுவர்.
இன்னுமோர் சாரார் இருப்பர் அவர்கள் விவகாரங்களை ஆய்வு பூர்வமாக அனுகுவதுடன் அதற்காக செயற்படவும் செய்வார்கள்.என்றாலும் அவர்களது செயற்பாட்டிற்கும் சமூகத்தின் யதார்த்தமான நிலைக்கும் இடையில் பெரும் இடைவெளி நிலவும்.இவர்களது ஆய்வுகளும் செயற்பரப்பும் தத்துவார்த்த வெளியில் சுழுன்று கொண்டிருக்கும்.
அடுத்த சாரார்தான் யதாரத்தமாக விடயங்களை அனுகி நடைமுறை உலகில் தொடர்ச்சியாக செயற்படக் கூடியவர்கள்.இவர்களால்தான் சமூக மாற்றங்களும் எழுச்சிகளும் சாத்தியப்படுகின்றன.இவர்கள் தொடர்ந்தேர்ச்சியாக சிந்தித்துக் கொண்டும் செயற்பட்டுக் கொண்டுமிருப்பர்.
இந்த விடயத்தை இமாம் ஹஸனுல் பன்னா அவரகள் தனது றஸாஇலில் பின்வருமாறு விளக்குகிறார்
“பேச்சுக்குரிய களம் கற்பனைக்குரிய களத்தைப் பார்க்கிலும் வேறுபட்டது,செயற்பாட்டுக்குரிய களம் பேச்சுக்குரிய களத்தைப்பார்க்கிலும் வேறுபட்டது,போராட்டத்துக்குரிய களம் செயற்பாட்டுக்குரிய களத்தைப் பார்க்கிலும் வேறுபட்டது.சரியான போராட்டக் களம் தவறான போராட்டக் களத்தைப் பார்க்கிலும் வேறுபட்டது.அதிகமானவர்களுக்கு கற்பனை பண்ண முடியும்,எனினும் உள்ளத்தில் தோன்றும் அனைத்துக் கற்பனைகளையும் வார்த்தைகளாக வடிக்க முடியாது.அதிகமானவர்களுக்கு பேச (கதையாடல்)முடியும்.எனினும் செயற்பாட்டின் போது இந்த அதிகமானோரில் குறைந்த தொகையினரே நின்று பிடிப்பர்,இந்த சிறு தொகையில் அதிகமானோருக்கு செயற்பட முடியுமெனினும் அவர்களில் சொற்ப தொகையினரே கடினமான போராட்ட வாழ்வினதும்,தொடர்ந்த செயற்பாட்டினதும் சுமைகளை சுமப்பர்.இந்த தேர்ந்த சிறு தொகைப் போராளிகளும் கூட அல்லாஹ்வின் பராமரிப்பு இல்லாது போனால் பாதையை தவர விட்டு இலக்கை அடைந்து கொள்ள முடியாது போவர்”
குறைந்த இழப்பில் கூடிய விளைவை கொண்டு தரும் தேர்ந்த போராட்டமாக சமூக மாற்றத்திற்கான அல்லது எழுச்சிக்கான செயற்பாடு மாற வேண்டுமாயின் அது பற்றிய சரியான தெளிவுடன் குறித்த செயற்பாட்டை கொண்டு செல்லும் அணி காணப்பட வேண்டும்.அந்த வகையில் முதலில் சமூக மாற்றம் தொடர்பில் பேசும் போது நாம் பயன்படுத்தும் சில சொற்பிரயோகங்கள் பற்றிய தெளிவை முதலில் பெற்றுக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
1. சமூக எழுச்சி அல்லது மாற்றம் என்றால் என்ன?
சமூக எழுச்சி அல்லது மாற்றம் குறித்து பேசும் போது நஹ்ழா(எழுச்சி),ஸஹ்வா(எழுச்சி),தஃயீர்(மாற்றம்),இஸ்லாஹ்(சீர்திருத்தம்),தஜ்தீத்(புணர் நிர்மானம்) போன்ற பிரயோகங்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.உண்மையில் இந்த சொற்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட செயன்முறைப் பரப்பபை கொண்டதாகக் காணப்படுகிறன.
‘நஹ்ழா’ என்ற சொல் மொழி ரீதியாக பலம்,சக்தி,அதிக இயக்கம்,எழுந்து நிற்றல்,முன்னோக்கிச் செல்லல் போன்ற கருத்துக்களை குறிக்கும்.லிஸானுல் அரப் இதனை குறித்த ஓரிடத்திலிருந்து எழுந்து செல்லல் என குறிப்பிடுகிறது.அதாவது ஒரு நிலையிலிருந்து இன்னோர் நிலைக்கு நகருதல்,இடத்தையும் தோற்றத்தையும் மாற்றுதல் என குறிப்பிடலாம்.அதனை தேங்கி பின்னடைந்திருந்த நிலைக்குப் பிறகு எழுந்து முன்னோக்கிச் செல்லுதல் எனக் கொள்ளமுடியும்.எனவேதான் இதனை நாம் தமிழில் எழுச்சி எனக் குறிப்பிடுகிறோம்.நாம் எழுச்சி எனக் குறிப்பிடும் போது அது மனவெழுச்சி,கிளர்ச்சி நிலை என்பதற்கப்பால் செயற்பரப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடு என்பதனை இங்கு தெளிவாக விளங்கிக் கொள்கிறோம்.அந்த வகையில் ஒரு சமூகம் தான் இருக்கின்ற பின்தங்கிய நிலையிலிருந்து எதிர்பார்க்கப்படும் சிறந்த நிலையை நோக்கி செல்வதற்காக அதனது சிந்தனை,செயற்பாடு,பலம் என அதன் தற் போதைய நிலையிலிருந்து மாறிச் செல்கின்ற,எழுந்து கொள்கின்ற செயற்பாட்டையே நாம் இங்கு எழுச்சி என்கிறோம்.
இங்கு இந்த சொல்லை நாம் பயன்படுத்தும் போது இன்னுமோர் பின்னணியையும் விளங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பிரயோகம் ஐரோப்பாவில் கி.பி14ம் நூற்றாண்டு முதல் கி.பி 17 வரை ஏற்பட்ட கிறிஸ்த்தவத்தின் அடக்கு முறைக்கெதிரான அறிவியல் எழுச்சியை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாகும்.இந்த வகையில் 'எழுச்சி' என்பதனை மதத்தை விட்டு தூரமான சிந்தனா ரீதியான செயற்பாடாகவும் மற்றும் நடைமுறையிலுள்ள அனைத்தையும் புறக்கணிக்கும் செயற்பாடாகவும் என ஐரோப்பிய பின்னணியில் நோக்குவதுண்டு.
நாம் இங்கு இந்த சொல்லை பிரயோகிப்பது இஸ்லாமிய பின்புலத்திலிருந்தாகும்.இதனை அறிஞர் மாலிக் பின் நபி, கலாநிதி ஜாஸிம் ஸுல்தான்,அப்துல் ஹமீத் அல்-கஸ்ஸாலி…போன்ற இஸ்லாமிய எழுச்சி செயற்பாட்டை ஆய்வு ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நோக்கிய பலரும் இஸ்லாத்தின் சமூக மாற்ற வேலைத்திட்டத்தை குறிப்பதற்காக இஸ்லாமிய பின்புலத்திலிருந்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த சொல்லைப் பற்றி பேசும் போது,இதே கருத்தில் முற்றிலும் இஸ்லாமிய பின் புலத்திலிருந்து பாவிக்கப்படுகின்ற 'ஸஹ்வா' என்ற சொல்லையும் இங்கு தொடர்பு படுத்தி விளங்கிக் கொள்வது பொருத்தமாகும்.இஸ்லாமிய எழுச்சியை குறிப்பதற்கான இந்தப் பிரயோகம் 20ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு பிரயோகமாகும்.இது தூக்கத்திலருந்து விழித்தல்,போதையிலிருந்து விழித்தல்,வானில் மேக மூட்டமற்ற நிலை..என மொழி ரீதியாக கருத்துக் கொடுக்கிறது.இதனை பிரயோகத்தில் நவீன காலத்தில் முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய ரீதியாக எழுச்சியடைந்தமையை குறிக்க பயன்படுத்துவர்.அப்படி பயன்படுத்துவோரில் பலர் அவ்வெழுச்சியை இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹாபின் செயற்பாட்டிலிருந்து துவங்குவர்.சிலர் அதனை இஸ்லாமிய எழுச்சி சர்வதேச ரீதியாக சமூகமயப்படத்துவங்கிய 1970 பதுகளிலிருந்து துவங்குவது பொருத்தம் எனக் குறிப்பிடுவர்.இன்னும் சிலர் இச்சொல் எழுச்சி செயற்பாட்டை மொத்தமாக குறிக்க பொருத்தமற்றது என மொழி ரீதியான பிரயோக நிலையிலிருந்து குறிப்பிடுவர்.இது எழுச்சி செயன் முறையின் ஆரம்ப செயல் நிலை என எழுச்சி செயற்பாட்டை ஆய்வு ரீதியாக விளக்க முற்பட்டவர்கள் இதனை அடையாளப்படுத்துவர்.ஸஹ்வா என்ற பிரயோகத்தை ஆரம்ப செயல் நிலையாக பார்ப்பதே அதன் மொழி ரீதியான உள்ளடக்கத்தை வைத்துப் பார்க்கும் போது பொருத்தமானதாகும். எனினும் இஸ்லாமிய இலக்கியப் பரப்பில் இச் சொல் நஹ்ழா என்ற சொல் குறிக்க வருகின்ற பரப்பை குறிப்பதற்காக பெருமளவில் பாவிக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் இங்கு மனதில் கொள்வதுவும் அவசியமாகும்.
அடுத்து இப்பரப்பில் பயன்படுத்தப்படும் சொற்பிரயோகம்தான் ‘தஃயீர்’ என்ற சொல்.இது,ஒன்றை ஒரு நிலையிலிருந்து இன்னோர் நிலைக்கு மாற்றுதல்,இதற்கு முன்னர் இல்லாத ஒன்றை ஏற்படுத்தல்,ஒன்று சீர் பெறுவதற்காக இருக்கின்ற நிலையை மாற்றி வைத்தல் போன்ற பொருள்களைக் கொடுக்கும்.இங்கு,இந்த சொல் மாற்றம் எனும் போது ஒன்றின் அடிப்படை அப்படியே இருக்க தோற்றம் மாறுவதையும் குறிக்கும்.அதே போல் ஒன்று முழுமையாக மாற்றத்துக்குட்படுவதையும் குறிக்கும்.இந்த இரண்டு கருத்தையும் குறிக்கும் வகையில் குர்ஆன் இச் சொல்லை பாவித்துள்ளது.சமூகமாற்றத்திற்கான அடிப்படை விதியை குர்ஆன் இச் சொல்லை பயன்படுத்தியே விளக்குகிறது.“அல்லாஹ் ஒரு சமூகம் தன்னைத் தானே மாற்றாதவரை அவர்களை மாற்றமாட்டான்”.இந்தச் சொல்லும் சமூக எழுச்சி அல்லது மாற்றம் என்ற பரப்பில் காணப்படும் செயன்முறைத் தொடரில்(Process) ஒரு பகுதியை குறிக்கின்றது.எனினும் மொத்தச் செயன்முறையும் ஏதோ ஒரு வகையில் மாற்றம் என்ற செயலுடன் தொடர்புருவதால் மொத்தமாகவும் இதனைப் பயன்படுத்த முடியுமெனினும் ஒரு போதாமை உணரப்படவே செய்கிறது.ஏனெனில் சில மாறா அடிப்படைகளும்,மாற்றத்தை வேண்டாத பகுதிகளும் சமூக எழுச்சிச் செயன்முறையில் காணப்படலாம்.
அடுத்து,‘இஸ்லாஹ்’ என்ற சொல்லும் ‘தஜ்தீத்’என்ற சொல்லும் இப்பரப்பில் பயன்படுத்தப் படும் பிரயோகங்களுள் முக்கியமானவையாகும்.இஸ்லாஹ் என்ற சொல் பஸாத்(சீர் கேடு)என்பதன் எதிர் பதமாகும்.இது ஒன்றை சீர்படுத்தல்,ஒன்றிலிருக்கும் சீர்கேடுகளை,மோசமானவற்றை அகற்றல்,ஒன்றின் சீரான நிலையை தொடர்ந்து பேணல்,ஒன்றை சிறப்பாக தயார்படுத்தல்… எனப் பொருள்படும்.இது இரண்டு விடயங்களுக்கிடையிலான அல்லது இருவருக்கிடையிலான பொருத்தப் பாடின்மைகளை நீக்குதல் என்ற கருத்தில் இருவருக்கிடையே அல்லது இரண்டு விடயங்களுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.இந்தப் பின்னணியில் குர்ஆனும் இச் சொல்லை சமூக சீர் திருத்த செயற்பாடு,இருவருக்கிடையே சமரசம் செய்தல்..போன்ற கருத்துக்களில் பயன்படுத்தியுள்ளது.இதனையும் எழுச்சி செயன்முறையில் காணப்படும் ஒரு தன்மை வாய்ந்த செயற்பரப்பை குறிக்கும் ஒரு சொல்லாகக் காணலாம்.அடுத்து இதனுடன் தொடர்பாக குறிப்பிடப்படும் அடுத்த சொற்பிரயோகம்தான் தஜ்தீத் எனும் புதுப்பித்தல், புணரிநிர்மாணம் செய்தல்,பழமைப்பட்டு,இத்துப்போன நிலையிலிருந்து அடிப்படை நிலைக்கு கொண்டுவருதல்…என்ற கருத்தைக் கொடுக்கும் சொல்லாகும்.இந்த சொல் மார்க்கத்தை புணர் நிர்மாணம் செய்தல் என்ற கருத்தில் நேரடியாக ஹதீஸில் பாவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியப் பரப்பில் மார்க்கத்தின் சிந்தனா,பிரயோக நிலைகளில் வருகின்ற தொய்வினை நீக்கி பழைய நிலைக்கு செம்மைப்படுத்தல் என்ற பரப்பில் பாவிக்கப்பட்டுள்ளது.இது பெரும்பாலும் மார்க்கத்தின் பிரயோக நிலைச் சிந்தனைகளில் ஏற்படுத்தப் படும் கால இடப் பொருத்தமான மாற்றங்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது என சிலர் கருதுவர்.இன்னும் சிலர் இது மொத்த மாற்றப்பரப்பையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது எனக் குறிப்பிடுவர்.
இதேபோன்று,இஹ்யாஉ(உயிர்ப்பித்தல்),இஆததுல் பினாஃ(மீளக் கட்டியெழுப்பல்),தன்மியா(அபிவிருத்தி)…போன்ற சொற்களும் இப்பரப்பில் பயன்படுத்தப்படுகின்றன.எனினும் நஹ்ழா என்பதன் மூலம் நாடப்படும் எழுச்சி என்ற பிரயோகம்,அதனுடன் தொடர்பான அனைத்துப் பிரயோகங்களையும் ஒன்று சேர்த்துக் கருத்துக் கொடுப்பதை அவதானிக்கலாம்.
இங்கு நாம் பேச வருகின்ற தலைப்பை புரிந்து கொள்ள இந்த பிரயோகங்களை விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.காரணம் மொழி சிந்தனைகளையும்,கருத்துக்களையும்,செயற்பாடுகளையும் வடிவமைக்கிறது.இந்தப் பிரயோகங்களை நாம் விளக்கியது போன்று மேலோடட்டமாக விளங்கும் போதே சமூக எழுச்சிப் பரப்பில் இடம் பெறும் வாதப் பிரதிவாதங்களின் பின் புலங்களை ஓரளவு விளங்கிக் கொள்ள முடியுமாக இருக்கும்.இங்கு நாம் இதனை விளக்கியமைக்கு, அத்தகைய வாதப் பிரதிவாதங்களுக்கு வெளியில் நின்று சரளமாக இத்தலைப்பை சாதாரண வாசகர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதுவும் ஒரு நோக்கமாகும். அதே நேரம் இப்பரப்பில் விவாதிப்பவர்கள் தெளிவுடன் இதனை அணுகுவதற்கு வசதியளிக்கும் என்பது அடுத்த நோக்கமாகும்.
உண்மையில் அல்-குர்ஆன் நபிமார்கள் மேற் கொண்ட பணியை விளக்க,தஃவா,இஸ்லாஹ்,ஜிஹாத்,கிதால்,தப்ஷீர்,தன்தீர்,அம்ரு பில் மஃரூப்,அன்நஹ்யு அனில் முன்கர்,தஃயீர்,தன்வீர்,ஸிராஜ்…என பல பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளது.இவை அனைத்தினூடாகவும் சிறந்ததோர் மனித நாகரிகத்தை கட்டியெழுப்ப அவர்கள் உழைத்தார்கள் என குர்ஆன் விளக்கும்.
அந்த வகையில்,இன்று உலக அளவிலும் சரி,தேசிய அளவிலும் சரி,சமூக மட்டத்திலும் சரி மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டம் ஒரு நாகரீகத்தை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடாகும்.அதனை நாம் சாதாரணமாக சிந்தனைகளை பேசுவதன் ஊடாகவோ,கருத்துக்களை வாதிப்பதனூடாகவோ மாத்திரம் செய்து விட முடியாது.அது ஒரு நாகரீகத்தை உருவாக்கும் பணி.மாலிக் பின் நபி தனது ஷுரூதுன் நஹ்லா என்ற நூலிலே,“தான் அந்த நூலை எழுதும் போது உடகார்ந்திருக்கும் அறையில் ஒரு சிலதைத் தவிர அனைத்துமே மேற்கு நாகரிகத்தின் உற்பத்திகளாகக் காணப்படுகின்றன.நாகரீகங்கள்தான் உற்பத்திகளை மேற் கொள்கின்றன.நாம் உற்பத்திகளால் நாகரீகங்களை வடிவமைக்க முடியாது.நாம் இன்னோர் நாகரிகத்திலிருந்து அனைத்தையும் வாங்க முடியாது.நாம் மனிதனையும் + மண்ணையும் + நேரத்தையும் வைத்து +2 இஸ்லாமிய மார்க்க சிந்தனை எனும் சாந்தைக் குழைந்து = நமது நாகரிகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.அதுதான் எமக்கான உற்பத்திகளை தரும் ” எனக் கூறுவது போன்று ஒரு பாரிய பணி.எனவே,அதனை மேற்கொள்வதற்கு ஒரு பாரிய வேலைத்திட்டம் தேவை.அது எப்படி அமையலாம் என்பதை அடுத்து வரும் அமர்வுகளில் கலந்துரையாடலாம், இன்ஷாஅல்லாஹ்.

சமூக எழுச்சிக்கான அல்லது மாற்றத்திற்கான இஸ்லாத்தின் செயற்திட்டம்-01 எம்.என்.இக்ராம்

ikrammn@gmail.com
ஆரம்பமாக
முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை இஸ்லாத்துடனான தனது உறவை சம்பிரதாய பூர்வமாக மட்டுப் படுத்திக் கொண்டு,தானுன்டு தனது வயிறும் வாழ்வுமுண்டு என்ற அளவில் சுருக்கிக் கொண்ட ஒரு சூழலில்,இஸ்லாத்திற்காக,அதன் இலக்குகளுக்காக செயற்பட முனைகின்ற போது,அதற்காக செயற்படும் கணக்கிடத்தக்க ஒரு சிலரும் இஸ்லாத்திற்காக உழைத்தல் என்பது எது?எப்படி என்ற தத்துவார்த்த சர்ச்சைகளுக்குள்ளால் இருந்து தசாப்தங்களாக வெளிவராத ஒரு சூழல் காணப்படுகிறது.இது சுபமானதா அல்லது அசுபமானதா என்பதற்கு அப்பால் இஸ்லாத்தின் இலக்குகளை நோக்கி எமது வாழ்வை வடிவமைப்பதில் ஒரு சிக்கலான சூழலை தோற்றுவித்துள்ளது எனக் குறிப்பிடலாம்.
இத்தகைய சிக்கலான சூழ்நிலை வரலாற்றில் பல கட்டங்களிலும் ஏற்பட்டதுண்டு.இத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம் தத்துவார்த்த வாதப்பிரதிவாதங்களைத் தாண்டி இஸ்லாத்தின் செயற்பரப்பை எளிமையான வடிவங்களால் விடுவித்த சீர்திருத்த செயற்பாடுகள்தான் நிலைபேறான மாற்றங்களை கொண்டு வந்திருப்பதைக் காணலாம்.இதற்கு உமர் இப்னு அப்துல் அஸீஸ்(றஹ்) அவர்களின் சீர்திருத்த முயற்சிகளையும் இமாம் ஹஸனுல் பன்னாவின் சீர்திருத்த முயற்சிகளையும் இரு வேறுபட்ட தளங்களில் இருந்து உதாரணமாகக் குறிப்பிட முடியும்.
இங்குதான் இஸ்லாத்திற்கான உழைப்பு எமது நாட்டைப் பொருத்த வரையில் ஒரு சிக்களில் கட்டுண்டு போயிருப்பதாக நாம் குறிப்பிடுகிறோம்.இதனை நாம் சிந்தனைச் சிக்கல் என்று குறிப்பிடுவதுவா?செயற்பாட்டுச் சிக்கல் என்று குறிப்பிடுவதுவா? என்பது விளங்கவில்லை.
இதனை இலகுவாகச் சொல்வதென்றால்,இஸ்லாத்திற்கான உழைப்பு அல்லது அதன் இலக்குகளை வாழ்வில் செயற்படுத்துவதற்கான உழைப்பு எங்கிருந்து துவங்கப் பட வேண்டும்?அது எதனை முதன்மைப்படுத்த வேண்டும்?அதன் பரப்பெல்லைகள் யாவை? என்பன பல தசாப்தங்களாக தத்துவாரத்த ரீதியாக இஸ்லாத்திற்காக உழைக்க முனையும் பலரும் எழுப்புகின்ற வினாக்கள்.இங்கு பிரச்சினை என்னவென்றால்,இந்த வினாக்களுக்கு பலரும் புத்தகங்களின் பக்கங்களிலிருந்து விடை தேட முயன்று ஈற்றில் சலித்துப் போய் விடை தெரியா பரப்பில் உலாவிக் கொண்டிருப்பர் அல்லது களத்திருந்து ஓய்ந்து போவர்.
இங்கு இஸ்லாத்தினை முன்நிறுத்தி உழைத்த பலரதும்,பல அமைப்புகள் நிறுவனங்களதும் அனுபவங்களை கோர்த்துப் பார்க்கின்ற போது,எல்லோரும் ஒன்றுபடுகின்ற ஒரு புள்ளியை நாம் இணம் காண முடியுமாக இருக்கிறது.அதுதான் இஸ்லாமிய ஆளுமைப் பிரச்சினை என்பது.இதனை சரியாகச் சொல்வதென்றால்,எல்லாரும் சொல்கிறார்கள்தான் ஆனால்,அவரது வாழ்வில் அதனைக் காண முடியவில்லை என்ற அங்களாய்ப்பு.இது இதனை உணர்கின்றவர்களிடத்திலுமிருக்கிறது.உணராதாரிடமும் உள்ளது.இதனை இன்னோர் வடிவில் சொன்னால் பிறழ்வாளுமைப் பிரச்சினை.
கசப்பாக இருந்தாலும் அனைவராலும் உணரப்படுகின்ற, பரிமாறப் படுகின்ற ஒரு முதன் நிலைப் பிரச்சினையாக இது காணப்படுகிறது.எனினும் அனைவரும் மிக இலகுவாக கடந்து போய் தமக்கான ஒரு சௌகரிய வட்டத்தில் வாழ்வதற்காக இதனை கிடப்பில் போற்று விடுகின்றனர்.இதனை மறப்பதற்கும் மறைப்பதற்கும் சிந்தனா, தத்துவ சர்ச்சையில் மூழ்கி மிதப்பதை ஆசுவாசமாகக் கருதுகின்றனர்.இதனால்,காலாகாலமாக இந்தப் பிரச்சினை அப்படியே இருந்து கொண்டிருக்கும் அதே வேலை இஸ்லாத்திற்கான உழைப்பும் ஒரு வட்டத்தைத் தாண்டி மேலே போகாமல் திண்டாடிக் கொண்டிருக்கும்.
இதனை அல்-குர்ஆன் மிக எளிமையாகக் குறிப்பிடுகிறது. “அல்லாஹ் ஒரு சமூகம் தன்னைத் தானே மாற்றாதவரை அவர்களை மாற்றமாட்டான்”.இந்தக் கருத்தை ஷஹீத் செய்யித் குதுப் அவர்கள் தனது ஹாதத் தீன் என்ற நூலில் குர்ஆனின் இதே எளிமையுடன் விளக்குகிறார்கள்.இஸ்லாம் என்பது மனித சமூகத்திற்கான தெய்வீக வழிகாட்டல்.அதனை மனிதர்கள் எவ்வளவு தூரத்திற்கு தம்மிலும்,தம்மைச் சூழவும்,தாம் வாழும் சூழலை,தமது சக்தியை,வளங்களை கருத்திற்கொண்டு பிரதிபலிக்கிறார்களோ அந்தளவிற்கு அது வெற்றி பெறும்.அதே நேரம் அதற்கான உழைப்பு என்பது அவர்களும் மார்க்கமும் சந்திக்கின்ற புள்ளியிலிருந்து ஆரம்பிக்கும்.அது அவர்கள் எந்த எல்லை வரை செல்கிறார்களோ அதுவரை அவர்களை அழைத்துச் செல்லும்.
இதுதான் எமது சமூக மாற்றத்திற்கான அல்லது சீர்திருத்தத்திற்கான அல்லது எழுச்சிக்கான வேலைப் பரப்பை அடையாளப்படுத்தும் எளிய வார்த்தைகள்.இங்கு வார்த்தை மேதமைகளோ,தத்துவார்த்த மயக்கங்களோ கிடையாது.செயற்பாட்டாளர்களுக்கான இடைவெளி மாத்திரமே காணப்படுகிறது.இங்குள்ள கேள்வி,ஒரு ஆரம்பப் பள்ளி ஆசானைப் போன்று பிள்ளைகளிடம் தானும் படித்து பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லிக் கற்பித்து அவர்களை சிக்களற்ற, வெளிப்படைத் தன்மையுள்ள ஆளுமைகளாய் வடிவமைக்கும் நிதானம் கொண்ட அந்த சிற்பிகள் யார் என்பதுதான்.

Wednesday, March 2, 2016

தாஈக்களின் கவனத்தை இழந்து நிற்கும் சமூக விவகாரங்கள் (18june2010மீள்பார்வை-200)-சில மாற்றங்கள் இருப்பினும் அன்று சொன்னவை இன்றும் பொருந்தும்-

அரசியலமைப்புச் சீர்திருத்தம், நிர்வாக எல்லைகளை மீள் வரைதல்,தேசியக் கல்விக் கொள்கை, மீள் குடியேற்றம்... என யுத்தத்துக்குப் பிந்திய எமது நாட்டுச் சூழலில் மாற்றங்களும், மாற்றங்களுக்கான தயார் நிலையும், நிகழ்வுகளும் என எத்தனை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை பெரும்பாலும் நீண்ட காலத் தாக்கம் கொண்ட மாற்றங்களாக அமையப் போகின்றன. குறிப்பாக சிறுபான்மை சமூகங்களின் சமூக அரசியல் இருப்பில் தாக்கம் செலுத்தும் நிகழ்வுகளாக இவை காணப்படுகின்றன.
அதே நேரம் எமது நாடு இன்று பாரியளவான பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு முகம்கொடுத்து வருவதோடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அதைப் பார்க்கிலும் ஆபத்தான நிலை இவற்றையெல்லாம் ஒரே பிடியில் அமுக் கிப்போட்டுவிடும் வகையில் காணப்படும் அரசியல் அராஜக மும் ஊடக அடக்குமுறையுமாகும். இதன் நேரடி விளைவு; எல்லா நிகழ்வுகளும் அதிகாரத்தில் உள்ளவர்களதும் அவர்களது நண்பர்களதும் விருப்புக்கு ஏற்ப மாத்திரம் கட்டமைக்கப்படுவதும் நிகழ்த்தப் படுவதுமாகும்.
இப்படியாக மாற்றங்களுக்கு முகங்கொடுத்துள்ள நாட்டின் இன் றைய சூழ்நிலைக்கு முன்னால் பொதுவாகவே சிவில் சமூகத்தின் எதிர்வினை மிகவும் மந்தமாகவே உள்ளது. சிறுபான்மையினரின் எதிர்வினை அதனிலும் மந்தமாக உள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகம் சார்பாக உருப்படியான எத்தகைய முன்னெடுப்பும் இடம் பெற்றதாகக் காண முடியவில்லை. இன்றைய இந்த சூழலில் சிறுபான்மையினர் கூடுதல் விழிப்பாகச் செயற்பட வேண்டிய தேவை இருந்தும் தமிழ்த் தரப்பின் ஒருசில செயற்பாடுகளைத் தவிர இரண்டாம் சிறுபான்மையான முஸ்லிம் சமூகம் இதுவரையில் எந்த நடவடிக்கைகளிலும் இறங்கியதாகக் காணவில்லை. வழக்கம்போல் அவர்கள் எதுவரையில்தான் காத்திருக்கிறார்களோ தெரியவில்லை.
அரசியல் ரீதியாக இரு பெரும் பான்மைகளுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம் சமூகம் இந்நிலைமாறும் தருணத்தில் தன் சார்பில் தீர்க்கமான முடிவுகளைக் கொண்டிருத்தல் மிகவும் அவசியமானதாகும். எனினும் அப்படியான எந்த திட்ட வரைபுகளும் இருப்பதாகத் தெரிவில்லை. அதனை யாரும் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் கொள்ள முடியாமல் காணப்படுகிறது. அரசியல் தலைமைகள் இதன்போது தீர்க்கமான முன்னெடுப்புக்களை செய்வார்கள் என எதிர்பார்ப் பது ஒரு நப்பாசையாகவே இருக்கும். அவர்களது முதற் கவனம் தத்தமது அதிகாரக் கதிரைகளை பாதுகாத்துக் கொள்வ திலேயே காணப்படுகிறது. ஆன்மீகத் தலைமைகள் என்போர் அதனைச் செய்வார்களா என்று பார்த்தால் இது தொடர்பான போதிய புரிதல் அவர்களிடம் காணப்படுவதாகத் தெரியவில்லை.
நாம் காலாகாலமாக முஸ்லிம் சமூகத்தின் தலைமை; அரசியல் தலைமை, ஆன்மீகத் தலைமை என இரண்டாக இருக்க முடியாது எனப் பேசி வந்தாலும் யதார்த்தத்தில் இந்நிலையில் பெரிய மாற்றங் கள் இடம்பெற்றதாகத் தென்படவில்லை. எப்போதும் போல் அரசி யல், சமூக விவகாரங்கள் என்று வரும்போது அரசியல் தலைமைக ளாக இருப்போர் ஏதாவது செய்தால்தான். இல்லாதபோது அது பற்றிய எந்த சலனங்களும் இருக்காது. மார்க்கம் என்று வருகின்ற போது ஆன்மீகத் தலைமைகள் பேசுவார்கள்.
இது இன்னும் நாம் எவ்வளவுதான் இஸ்லாத்தின் முழுமைத் தன்மை தொடர்பாகப் பேசியபோதும் நடைமுறையில் நாம் அதனை உள்வாங்கவில்லை என்பதனையே காண்பிக்கின்றது.இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நாம் அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட தொழுகைக்காக ‘பாங்கு’ சொல்லும் விவகாரம் தொடர் பாக இஸ்லாமியத் தலைமைகள் எடுத்த நடவடிக்கையையும் தற்போதுள்ள நிலையில் அவை காக்கும் மௌனத்தையும் குறிப் பிடலாம். பாங்கு சொல்வது மார்க்க விவகாரம், அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் வெறும் அரசியல் விவகாரம் என்று பார்க்கும் மத மனப் பாங்கிலிருந்து தாஈக்கள் மீண்டு வந்ததாக விளங்கவில்லை.
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏனைய அரசியல் வாதிகளைப் போன்றே பத்தோடு பதினொன்றாக இருக்கின்ற யதார்த்த நிலையில் தமக்காக அவர்கள் சமூகத்தை, அதன் நலன் களை அடகு வைப்பார்களேயொழிய சமூக நலனுக்காக தாம் எதையும் இழக்க முன்வர மாட்டார்கள். அத்தோடு எந்தவித இஸ் லாமியப் பின்னணியோ ஆன்மீகப் பக்குவமோ அற்ற, பேரளவில் முஸ்லிம் அரசியல்வாதிகளாக உள்ள அவர்கள் எமது சமூகத்தின் விவகாரங்களை நியாயமாகக் கையாள்வார்கள் என எதிர்பார்ப்பது அடிப்படையிலேயேபிழையான அம்சமாகும்.
இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்துகின்ற, வழிகாட்டுகின்ற மார்க்கம் எனப் பேசுகின்ற தாஈக்கள் முஸ்லிம் சமூகத்தின் இன்றைய சமூக அரசியல் விவகாரங்களிலும் தமது கவனத்தைச் செலுத்தியாக வேண்டும். எல்லா விவகாரங்களுக்குமான வழிகாட்டல், எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வு இஸ்லாத்தில் காணப்படுகின்றது என கொள்கையளவில் ஏற்றுள்ள நாம் அதனை நடைமுறையில் பிரயோகிக்க வேண்டிய பெருந்தேவை இன்று எமது நாட்டில் காணப்படு கின்றது. அதனை நடைமுறையில் பிரயோகிப்பதற்கு முன்னர் அதற்கான தீர்வுகளை முன்வைப்பதே ஒரு பெரும் செயற்திட்ட மாகக் காணப்படுகின்றது.
நீண்ட ஆய்வுகளையும் செயல மர்வுகளையும் கலந்துரையாடல் களையும் வேண்டி நிற்கிறது. ஆனால், எமக்கு முன்னால் இன் றுள்ள உடனடித் தேவை அதுவல்ல. மாற்றமாக, இன்று நாட்டில் பொதுவாக ஏற்படுத்தப்படப்  போகும் மாற்றங்களில் எமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கான விடயங்களை இந்த மாற்றங்கள் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவது, அதற்கானதோர் திட்டவரைபை நாம் சமூகமாகக் கொண்டிருப்பது.
இதனை ஜம்இய்யதுல் உல மாவை (இன்று அவர்கள் காலாவதியாகிவிட்டனர்அந்த இடத்திற்கு  NSC  பொருத்தம்) ) முன்னிலைப்படுத்திய நிலை யில் இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புக்களும் நிறுவனங்களும் துறைசார் நிபுணர்களைக் கொண்டு அரசியல்வாதிகளையும் அமர வைத்து செய்துமுடிக்க வேண்டிய கட்டாயத் தேவை காணப்படு கின்றது. இது எமது நாட்டில் இன்று நாம் முதன்மைப்படுத்த வேண்டிய (அவ்லவிய்யாத்) ஒரு விடயமாகக் காணப்படுகின்றது. இதன் கருத்து இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புக்களும் தாஈக்களும் தமது அடிப்படைப் பணிகளை விட்டுவிட்டு இதில் மூழ்க வேண்டும் என்பதல்ல. மாற்றமாக நீண்டகால அடிப்படை யில் இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையாகிய முஸ்லிம் சமூகத்தின் இருப்பில் தாக்கம் செலுத்தும் மாற்றங்களாக இவை அமையவிருப்பதால் அவசியம் இந்தத் தருணத்தில் நாம் பொருத்தமானதோர் தீர்வை  இதில் கொண்டிருக்க  வேண்டும். அதனை உரிய தரப்பிற்கு முன்வைக்க வேண்டும். இடம்பெறும் மாற்றத்தில் அதனையும் உள்ளடக்க வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் நாம் மௌனம் காப்பது பாவமான காரியமாகும். ஓர் அரசியல் பத்தியாளர் குறிப்பிட்டது போன்று தற் கொலைக்கு ஒப்பானதாகும். ஏனெனில், இங்கு நாமாக நமக்கான தீர்வுகளை இந்த மாற்றங்களில் உள்ளடக்க வேண்டுமென  கேட்கா மல் இருக்கின்ற போது அதிகாரத்தில் உள்ளவர்கள் தாமாக முன் வந்து எமக்கு எதனையும் தந்துவிடப்  போவதில்லை. அப்படி நாம் நினைத்தால் அதுவொரு மகா கற்பனையாகவே அமையும்.
அதிகாரத்தில் உள்ள தரப்பும் அதன் நண்பர்களும் எபபோதும் தமது நலன்களையேமுற்படுத்தும். இதன் போது சிறுபான்மையாக வாழும் எமது நலன்களில் அது பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தும். மாத்திரமல்ல எமது இருப்புக்குத் தீங்கு பயக்கக் கூடிய பல மாற்றங் களையும் அது கொண்டிருக்கப்  போகின்றது என்பதில் எந்த ஐயமும் கொள்ளத் தேவையில்லை. இதற்கு வரலாறு சிறந்த சாட்சியாக உள்ளது.
அந்தவகையில் அரசியலமைப்புத் திருத்தம், நிர்வாக எல்லை களை மீள்வரைதல், தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கம்  போன்ற விவகாரங்களில் நாம் கவனம் செலுத்துவது ஒரு மார்க்கக் கடமை. அது முஸ்லிம் சமூகத்தினதும் அதனடியாக இஸ்லாத்தினதும் நலனைக் காப்பதாக அமையும். அதே போல் முஸ்லிம் சமூகத்துக்கும் அதனடியாக இஸ்லாத்திற்கும் ஏற்படும் தீங்கைத் தடுப்பதாக அமையும். ”ஒரு விடயமின்றி ஒரு கடமை நிறைவேறாத போது அந்த விடயமும் கடமையாக மாறும்” என்ற பிக்ஹு விதியின்படி எமது சமூக, மார்க்க நலன்களைப் பாதுகாக்க நாம் இவற்றைச் செய்துதான் ஆக வேண்டியிருப்பின் இதனைச் செய்வது இன்றையசூழ்நிலையில் ஒரு சமூகக் கடமையாகக் காணப்படுகின்றது.
எனினும், இத்தகையதோர் பெரும் பொறுப்பொன்றுக்கு நாம் முகம்கொடுத்துள்ள நிலையிலும் எமது தாஈக்கள் இவை பற்றி எந்த விதத்திலும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதைப் பார்க்கின்ற போது சகிக்க முடியாமல் இருக்கின்றது. நாட்டை இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன, இராமனுடன் வந்த குரங்கு தான் ஆண் டால் என்ன என்பது போல் அவர்கள், தாமும் தமது பாடும் என இருப்பதைக் காண்கிறோம். சிலர் சற்று வித்தியாசமாய் பொதுமக்களைப்  போன்று நிகழ்வுகளை மட்டும் பேசிவிட்டு பெருமூச் செறிந்துவிட்டு செல்வதைத் தவிர வேறு எந்த உருப்படி யான மனோநிலையிலும் இருப்பதாகத் தெரிய வில்லை. இதற்குரிய அடிப்படைக் காரணம் நாம் ஏலவே குறிப்பிட்டது  போன்று நாம் இன்னும் மத மனோநிலையிலிருந்து மீண்டு இஸ்லாமிய மனோநிலைக்கு வராமையாகும்.
எனவேதான் பலஸ்தீனப் பிரச்சினையை இஸ்லாமியப் பிரச்சி னையாகப் பார்க்க முடிகின்ற எம்மால் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை அப்படிப் பார்க்க முடிவதில்லை. பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவை மார்க்கமாகப் பார்க்கும் எம்மால் அரசியலமைப்பு மாற்றத்தை அவ்வாறு நோக்க முடிவதில்லை. நிர்வாக எல்லைகளை மீள்வரைகின்ற போது எமது மும்மொழிவுகளை முன்வைப்பதை மார்க்கம் சார்ந்ததாக நோக்குகின் றோமில்லை. பொதுக் கல்விக் கொள்கையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களில் கவனம் செலுத்து வதை நன்மைதரும் காரியமாகப் பார்ப்பதில்லை.
அடுத்து, அப்படி இவற்றை அலட்டிக் கொள்ளாமைக்கான காரணம் எம்மிடம் காணப்படுகின்ற இயக்க ஊக்கமின்மையாகும். எப்போதும் சிரமங்களற்று செக்குத்தனமாக இருப்பதையே எம்மில் பலர் விரும்புகின்றனர். எப்போதும் ஒரேமாதிரியாக சிந்தித்தல், ஒரே மாதிரியாக செயற்படல் என்பதற்கப் பால் ஒரு எட்டும் வைக்கும் மனோநிலையில் பலரும் இல்லாதிருக் கின்றனர்.
தமது தஃவா செயற்பாட்டை வெறும் தொழின்மை (Professional) செயற்பாடாக மாத்திரம் கருதுகின்றனர். அதற்கப்பால் இலட்சிய மனப்பாங்குடன் சூழலில் நடக்கும் மாற்றங்களை கவனத்திற் கொண்டு செயலூக்கத்தோடு (Dynamic) இயங்கும் மனோநிலை படிப்படியாக குறைந்து  போகின்றதோ என சிந்திக்கத் தோன்றுகின்றது. சவால்களை விட்டு விலகி ஓடுகின்றோம். அதற்கு முகங்கொடுத்து மாற்றத்தை சாதிக்கும் மனோநிலை இல்லாமல்  போய்க் கொண்டிருக்கின்றது.
அடுத்து இஸ்லாமிய ஊடகப் பரப்பிலும் இந்த உயிர்ப்பைக் காண முடிவதில்லை. எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதனைப் பேச வேண்டுமென்ற அக்கறை இல்லாமல் பக்கம் நிரப்பும் வெறும் மனோநிலையுடன் அவை செயற்படுவதாகத் தோன்றுகின்றது. ஒரு சமூகத்தின் பிரச்சினையை பொதுப் புலத்தில் பேசுபொருளாக்குவதில் ஊடகங்களுக்குப் பெரும் பங்களிப்புள்ளது. எனினும் எந்தவித இலக்கு மற்று சமூக முக்கியத்துவமோ, தேசிய முக்கியத்துவமோ அற்ற செய்திகளையும் விடயங்களையும் அவை பேச முற்படுவது விசனத்திற்குரியது. இதனால் சமூகத்தில் எது முக்கியத்துவம் கொடுத்து நோக்கப்பட வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலை உருவாகின்றது.
இந்த நிலை மாற வேண்டும். தஃவாவை மாற்றத்திற்கான உயிர்ப்புள்ள செயற்பாடாக நாம் கருத வேண்டும். அந்த மாற்றம் சகல தளங்களையும் நோக்கி விரிய வேண்டும். மாற்றத்திற்கான வேர்கள் எங்கெல்லாம் காணப்படுகின்றதுவோ அங்கெல்லாம் நாம் ஊடு பரவ வேண்டும். நபியவர்களின் தஃவாவின் ஓட்டத்தை ஸீறாவில் அவதானிக்கின்ற போது இந்த உயிர்ப்பை, மாற்றத்திற்கான வேர்களைத் தேடிச் செல்லும் பாங்கை, சகல தளங்கள் சார்ந்த செயற்பாட்டை நாம் நன்கு காண முடியுமாக உள்ளது.

எனவேதான், இமாம் பன்னா அவர்கள் தமது சகோதரர்களைப் பார்த்து; “நீங்கள் சமூகத்தில் ஊடுருவும் ஒரு புதிய ரூஹ்” என்றார்கள். அந்த ரூஹ் சமூகத்தின் சகல தளங்களையும் ஊடுருவிப் பாயும். அது ஓரிடத்தில் இருப்புக் கொள்ளாது. அனைத்து இடங்களிலும் ஊடு பரவும் தாகம் அதில் இருந்து கொண்டே இருக்கும். அதனை அடக்க முடியாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அத்தகைய உயிர்ப்புள்ள செயற்பாட்டாளர்களால் எமது தஃவாக் களத்தையும் நிரப்ப வேண்டுமென பிரார்த்திப்போம்.  

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...