Saturday, August 23, 2014

எமது முதன்மைப் பணி (மீள்பார்வையின் 300 வது இதழுக்காக எழுதிய கட்டுரை)

“அதிகமானோர் ஏனைய எல்லா பணிகளைப் பார்க்கிலும் இஸ்லாமிய தஃவா என்பது இலகுவான ஒரு பணி என நினைக்கின்றனர்.அது தமது வாழ்வில் தாம் ஆற்றும் கருமங்களிலையே இலகுவான கருமம் என எண்ணுகின்றனர்.ஆனால் அது ஒரு அரசியல் மாற்றத்திற்கான அழைப்பின் பணியைப் பார்க்கிலும்,பொருளாதார மாற்றத்திற்கான அழைப்பின் பணியைப் பார்க்கிலும்,அறிவியல் மாற்றத்திற்கான அழைப்பின் பணியைப் பார்க்கிலும்,சிந்தனை மாற்றத்திற்கான அழைப்பின் பணியைப் பார்க்கிலும் மிகவும் பரந்தது,சிக்கல் நிறைந்தது,அதிக ஆபத்துக்களைக் கொண்டது.
  ஒரு புரட்சியை செய்வது,ஒரு குறித்த சூழ்நிலையை மாற்றுவது,ஒரு ஒழுங்கை அகற்றிவிட்டு இன்னோர் ஒழுங்கை பிரதியீடு செய்வது என்பது மிகவும் இலகுவான காரியம்.அதற்கு பண்பாட்டு மாற்றமோ,மானிட நடத்தைக்கான உயிர்ப்பிப்போ அவசியப்படாது.இத்தகைய பணிக்காக செயற்படும் தலைமைகள் தமது பணிக்கான அழைப்பில் தூய்மையாய் இருப்பர்,அதற்காக உழைப்பர்,போராடுவர்.எனினும் அவர்களிடம் ஒழுக்கப் பண்பாடுகளோ,உயிர்ப்பு மிக்க மானிட நடத்தைகளோ காணப்படமாட்டாது.அவர்களது வாழ்வு மோசமான, கரை படிந்த்தாக காணப்படும்.எனினும் அவர்கள் இதனை தமது பணிக்கு முரணான ஒரு அம்சமாக பார்ப்பதில்லை.எனினும்,அல்லாஹ்வை நோக்கிய அழைப்பு,தஃவா;பண்பாட்டையும்,ஆன்மாவையும்,சிறந்த ஒழுக்கங்களையும்,மார்க்க,மானிட நடத்தையின் உயிர்ப்பையும் மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  எனவே,இந்தப் பணியை செய்வதற்கு;ஆழ்ந்த ஈமான்,உண்மையான நம்பிக்கை,உயர்ந்த தியாகம்,அரிதாய்க் காணக்கிடைக்கும் பிறர் நலன் முற்படுத்தல்,தெளிவான துணிவு,புரிதல் கொண்ட சிந்தனை,சரியான அறிவு,இறை ஞாபகத்தல் திளைத்த நாவு,இறை தொடர்புள்ள உள்ளம் என்பன அவசியப்படுகின்றன.இந்தப் பணியை செய்வோர் இறைவன் முன்நிலையில் பணிந்து போய்,அவனுக்கு முழுமையாய் அடிமைப்பட்டு(உபுதிய்யா வல்குஷுஃ)வாழ்வோராய்,அவனிடம் மன்றாடிப் பிரார்த்திப்போராய்,முழுமையாக றப்பானிய அச்சில் வார்க்கப்பட்டு வாழ்வோராய் இருக்க வேண்டும்.
 இஸ்லாமிய தஃவா என்பது வெறுமனே எத்திவைத்தலும் அறிவு போதித்தலுமல்ல.அது எத்தவைத்தல்,அறிவு போதித்தல்,உருவாக்கல் பண்படுத்தல் என நபியவர்களின் பணியை பிரதி செய்வதாக அமையும்-உம்மி சமூகத்திற்கு மத்தியில் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதரான அவர்,அவர்களுக்கு குர்ஆனை ஓதிக் காண்பித்து,அவர்களை பண்படுத்தி,வேதத்தையும் ஹிக்மத்தையும் அவர்களுக்கு கற்பிப்பார்.- ”


(முதக்கிராது ஸாஇஹின் பிஷ் ஷர்கில்அறபி-உஸ்தாத் அபுல் ஹஸன் அலி நத்வி)
 இன்று சமூகம் எதிர் கொள்ளும் சவால்களை பார்க்கின்ற பலரும்,எமது முதன்மைப் பணி என்ன என்பதனை வரையறை செய்வதில் பல்வேறு நிலைப்பாடுகளை முன்வைப்பதைக்காணலாம்.இனவாதப் பிரச்சினையை அதன் அகோரத்தைக் காண்போர் அதற்குப் பதிலளிப்பதுதான் எமது முதன்மைப் பணி என்கின்றனர்.இளைஞர்களின் நிலையை கண்டு மனம் வெதும்புவோர் அவர்கள் எதிர் கொள்ளும் குறித்த சில பிரச்சினைகளை தீர்ப்பதுதான் எமது பணி என்கின்றனர்.ஊடக உலகில் எமது சமூகத்தின் பின்னடைவைக் காண்கின்றவர்கள் ஊடகப் பணியே எமது முதன்மைப் பணி என்கின்றனர்.அரசியல் வங்கரோத்து நிலையைக் காண்போர் அரசியல் பணியை முற்படுத்துவர்.அறிவுப் பின்னடைவைக் காண்போர் அறிவை முற்படுத்துவர்.ஆன்மீக வணக்க வழிபாடுகளில் பின்னடைவைக் காண்போர் அதனை முற்படுத்துவர்.
 அதே நேரம் சமூகம் இதில் எதைத் தெரிவு செய்து முற்படுத்துவது எனத் தெரியாமல் ஒவ்வொரு பிரச்சாரத்தின் பின்னாலும் திணரிக் கொண்டிருக்கின்றது.உண்மையில் எதை முற்படுத்துவது என்று சொல்ல முடியாதளவு எமது பிரச்சினைகள் எமக்கு முன்னால் மலை போல் குவிந்துள்ளன.ஆனால்,இவற்றைப் பேசும் மனிதர்களை காண்கின்ற அளவுக்கு,இவற்றை தமது பிழைப்புக்காக,தம்மை,தமது விம்பத்தை முதன்மைப்படுத்துவதற்காக பயன்படுத்துபவர்களைப் பார்க்கின்ற அளவுக்கு,இவற்றுக்காக உண்மையாய் கவலைப்பட்டு,உண்மையாய் இவற்றை சுமந்து அவற்றை மாற்ற முனையும் நெஞ்சுரம் கொண்ட தூய மனிதர்களைக் காண்பது மிகவும் அரிதாகவே உள்ளது.
 ஆயிரமாயிரம் இனவாத எதிர்ப்பு பிரச்சாரங்களை,இளைஞர் சங்கங்களை,ஊடக நிறுவனங்களை,அரசியல் கட்சிகளை,அறிவு நிலையங்களை,ஆன்மீக வணக்கஸ்தளங்களை,சிந்தனைத் தொட்டிகளை உருவாக்கிவிடலாம்,கட்டிப் போடலாம். ஆனால்,இவற்றை நெஞ்சுரத்துடன் தூய்மையாய்,தொடர்ச்சியாய் சுமந்து செல்லும் மனிதர்களை எங்கே தேடுவது?
 இங்குதான் எமக்கு முன்னால் எத்தகைய சவால்கள் மாறி மாறி வந்த போதும் தூய்மையும் துணிவும் கொண்ட மனிதர்களைக் கொண்ட அணி உருவாக்கம் என்ற பணி என்றுமே மாறாத,நிலையான முதன்மைப் பணியாய் இருக்க வேண்டும் என்ற உண்மை மிகத் தெளிவாய் புலப்படுகிறது.

 நாம் எதிர் கொள்வதைப் பார்க்கிலும் சூன்யமான மனிதர்களைக் கொண்ட, சவால்கள் நிறைந்த ஒரு உலகையே நபி(ஸல்) அவர்கள் எதிர் கொண்டார்கள்.ஆனால்,அவர்கள் அன்றாடம் தான் எதிர் கொண்ட சவால்களுக்கு முன்னால் மண்டியிட்டு அவற்றைத் தீர்த்து ஓட்டைகளுக்கு ஒட்டுப் போடுகிற பணியில் ஈடுபடவில்லை.மாற்றமாக இத்தகைய சவால்களுக்கு காரணமான மனிதர்களை, சமூக அமைப்பை முழுவதுமாக மாற்றிவிடத்தக்க,அந்த மாற்றத்தை நீடித்து நிலைக்க வைக்கத்தக்க பெறும் பணியை சுமக்கும் தூய்மையும் நெஞ்சுரமும் உள்ள மனிதர்களைக் கொண்ட அணியை உருவாக்குவதையே தனது முதன்மைப் பணியாய்க் கொண்டார்கள்.எனவேதான் நபியவர்களது பணி வெட்ட வெட்ட கிளைக்கும் பயிராய் சாகா வரம் பெற்று இதுவரையிலும் தொடர்கிறது.
 அப்படியல்லாது ஒரு குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்காக,குறித்த ஒரு பணியை நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் அழைப்புக்களும்,முயற்சிகளும் அக் குறித்த பணியுடன் அல்லது பல போது அதனை துவங்கியவரின் சறுக்களுடன் அல்லது மறைவுடன் முற்றுப் பெற்றுப் போகின்றன.அதன் பின்னர் அப்பணி பலவீனமான வாரிசுகளின் கையில் கிடைத்த வாரிசுச் சொத்தாக பந்தாடப்படும்.இதற்கு நமது சமூகத்தில் துவங்கப்பட்ட தனித்துவ அரசியல் இயக்கத்தில் நமக்கு நிறையவே படிப்பினை உள்ளது.இதே நிலைதான் வரலாற்றில் ஸலாஹுத்தீன் அய்யுபியின் குத்ஸை விடுவிப்பதற்கான உன்னதப் போராட்டமும் அதனை விடுவித்த பின்னர்,அவரது மரணத்தின் பின்னர் சிலுவைப் போராளிகளையே துணைக்கழைக்குமளவு வாரிசுகளுக்கிடையிலான அனந்தரச் சொத்துக்கான போராட்டமாக மாறிப் போனது.
 எமது இன்றைய தேவை குறித்த ஒரு சமூகப் பிரச்சினையை,குறித்த ஒரு இடத்தை,சூழலை,தனிநபரை மையப்படுத்தி உருவாகி அழியும் பணியல்ல.மாற்றமாக,இந்த உலகில் நன்மையை வாழ வைக்க,தீமையை ஒழிக்க அவசியமான இந்த மார்க்கத்தை முனனணியில் வாழ வைக்கும் பணி.அதன் மூலம் மாத்திரம்தான் எமது சமூகத்தின் மாத்திரமல்ல,இலங்கை சமூகத்தின் மாத்திரமல்ல,மனித சமூகத்தினதே பிரச்சனைகளுக்கு தீர்வு தேட முடியும்.இந்தப் பணிக்கு முன்னால் உள்ள பெறும் சவால்களாக அதிகார மோகம் கொண்ட மனிதர்களும்,சடவாத இன்பங்களுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்து பழகிப் போன மனிதர்களும்,சமூக அமைப்பும் காணப்படும்.இதனை எதிர் கொள்வதுதான் இந்தப் பணிக்கு முன்னால் இருக்கும் பெறும் சவாலாய் இருக்கும்.இதனை எதிர் கொள்வதாயின் வெறும் சிந்தனைகள் பேசும் மனிதர்களை விடவும் நெஞ்சுரத்துடனும் தூய்மையாயும் இந்தப் பணியை சுமக்கும் பண்பாடு நிறைந்த, இறைவனுக்காய் மாத்தரமே வாழும் தனிமனிதர்களைப் பெற்ற அணியொன்று முதன்மையான தேவையாய் இருக்கும்.எனவே,அதன் உருவாக்கமும் பண்படுத்தலுமே எமது முதன்மையான பணியாய் அமையும்.இத்தைகைய மனிதர்களாளேயே சமூக மாற்றம் சாத்தியம் என அல்-குர்ஆன் எமக்கு வழியுறுத்துகிறது.
“அல்லாஹ்வுடன் தாம் செய்த உடன்படிக்கையை உண்மைப்படுத்தும் அவர்கள்தான் சிறந்த ஆளுமைகள்;அவர்களில் சிலர் தமது இலக்கான ஷஹாதத்தை அடைந்து விட்டனர்.இன்னும் சிலர் எதிர்பார்த்து வாழ்கின்றனர்.அதில் அவர்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.”
“உங்களில் 20 பொறுமையாளர்கள் இருந்தால் 200 பேரை மிகைக்கலாம்.100 பொறுமையாளர்கள் இருந்தால் 1000 பேரை மிகைக்கலாம்.ஏனெனில் காபிர்கள் புரிதலற்ற சமூகமாக உள்ளனர்”
 வரலாற்றில் சமூக மாற்றம் தொடர்பாக சிந்தித்த அனைத்து சீர்திருத்த வாதிகளும்(சிந்தனையாளர்களல்லர்)இந்த உண்மையையே வழியுறுத்தியுள்ளனர்.உதாரணமாக நவீன காலத்தில் இஸ்லாமிய உலகை சுற்றிப் பார்த்த ஷெய்க் அபுல் ஹஸன் அலி நத்வி இந்தக் கருத்தை மிகவும் ஆழமாக விளக்குகிறார்.
 இஸ்லாமிய உலகில் உள்ள சீர்கேடுகளை நீக்கி ஒரு மாற்றத்தை உலகில் ஏற்படுத்த வேண்டுமாயின் உருவாக்கத்தை முதன்மையாய்க் கொண்டவர்களால்தான் அது சாத்தியம் என்ற உண்மையை விளக்கும் உஸ்தாதவர்கள்,அதற்காக அவர்கள் தமது கவனத்தை மூன்று விவகாரங்களில் தொடர்ந்தும் குவிக்க வேண்டும் என்கிறார்
 01-மனிதர்கள் மத்தியில் தஃவாவை பதித்து அவர்களை உருவாக்கும் காலம் வெளிப்படையாக அரசியல் போன்ற சமூகப் பணிகளில் ஈடுபடுவதற்கான காலத்தை முந்தியதாகவும் நீண்டதாகவும் காணப்பட வேண்டும்.
02-தஃவா நிறைந்த ஆபத்துக்களை எதிர் கொள்வதால் ஆளணி உருவாக்கத்தில் தொடர்ந்தும் கவனம் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்
03-தஃவா அணியை அதன் ஆன்மாவுக்கான உயிர்ப்பைக் கொடுப்பதனூடாக பலப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
 இந்த வகையில் எமக்கு முன்னால் எத்தகைய சவால்கள் நிறம் மாறி மாறி வரினும் எம்மிடம் மாறாது முதன்மையாய் இருக்க வேண்டிய பணி அணி உருவாக்கம் என்பதாகும்.இதன் மூலம் மாத்திரமே ஏனைய சவால்களை சரியாகவும் சோரம் போகாமலும் நீடித்து வெல்ல முடியும்.இல்லாவிடின் எமது சமூகப் பணிகள் சுயநலவாதிகளின்,சமூக வியாபாரிகளின்,வேஷதாரிகளின்,புகழேந்திகளின் மடமாக மாறிவிடும்.இதற்கு சமூகத்தில் நிறையவே உதாரணங்கள் உள்ளன.

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...