ikrammn@gmail.com
அறிமுகம்
சமூக எழுச்சி அல்லது மாற்றம் குறித்து பேசும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னுமோர் விடயம் காணப்படுகிறது.அது,இந்த விடயத்தில் ஆர்வம் காட்டுவோர் அல்லது ஈடுபடுவோர் தாம் ஏற்படுத்த விரும்புகின்ற மாற்றம் அல்லது எழுச்சி குறித்த முழுமையான வடிவத்தை அல்லது வரைபடத்தை எந்தளவு தூரம் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்ற விடயம்.சாதாரணமாக ஒரு சிறிய காரியம் அல்லது பயணம் மேற் கொள்பவரிடமே இந்தத் தெளிவு மன வரைபடமாக இல்லாத போது அவரது காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதில் பல இடர்பாடுகளை எதிர் கொள்வார்.ஒரு பயணத்தை மேற் கொள்பவர் பல திக்குகளிலும் திசை மாறி சுற்றிவருவார்.
இந்த வெளிப்பாட்டை நாம் சமூக மாற்றத்திற்காக உழைக்கின்ற செயற்களங்களிளே தெளிவாகக் காண்கிறோம்.இந்தத் தெளிவை சரியாக பெற்ற அணி குறி்த்த ஒரு காலப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நோக்கி பயணிப்பதைக் காண்கிறோம்.அப்படி தெளிவற்ற அணி குறித்த ஒரு வட்டத்தில் செக்குப் போன்று சுற்றிச் சுற்றி இருந்துவிட்டு,அதற்கப்பால் நகர முடியாத போது ஆளுக்கொரு சிந்தனையையும் நாளுக்கொரு திட்டத்தையும் வகுத்து வகுத்து,காலத்தையும் வளத்தையும் சில நியாயங்களை சொல்லிக் கொண்டு வீணடிப்பதைக் காண்கிறோம்.
சமூக விவகாரங்கள் குறித்து சிந்திப்பவர்களுள் பெரும்பாலானவர்கள் உணர்வு பூர்வமானவர்கள்.சமூகத்தின் நிலை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பர்.அதனை மாற்றுவதற்காக செயற்பட வேண்டும் என தூய்மையாக விரும்புவர்.எனினும் சமூகத்தின் நிலை,அதனை மாற்றுவதற்கான முறை,அதற்கான உழைப்பு என்பன குறித்து அறிவு பூர்வமாக சிந்திக்கவோ,திட்டமிடவோ முனைய மாட்டார்கள்.இவர்கள் பல போது சமூக எழுச்சிக்கு தடையான செயல்களை செய்பவர்களாக மாறிவிடுவர்.
இன்னுமோர் சாரார் இருப்பர்,அவர்கள் சமூக விவகாரங்கள்,அதன் நிலைகள் குறித்து அறிவதிலும் அதனுடன் தொடர்புபட்ட வகையில் வாசிப்பதிலும் சிந்திப்பதிலும் ஈடுபடுவர்.எனினும்,அது குறித்து விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்வதற்கோ,அதனடியாக வரும் தீர்மானத்தை வைத்து செயற்படவோ முனைய மாட்டார்கள்.இவர்கள் சமூக எழுச்சிக்கான செயற்பாடுகளை அதிகம் விமர்சிப்பவர்களாகவும்.அதனை எப்போதுமே கருப்புக் கண்ணாடியால் நோக்குபவர்களாகவுமே இருப்பர்.இவர்களும் கூட எழுச்சிக்கு தடைக்கற்களாக மாறிவிடுவர்.
இன்னுமோர் சாரார் இருப்பர் அவர்கள் விவகாரங்களை ஆய்வு பூர்வமாக அனுகுவதுடன் அதற்காக செயற்படவும் செய்வார்கள்.என்றாலும் அவர்களது செயற்பாட்டிற்கும் சமூகத்தின் யதார்த்தமான நிலைக்கும் இடையில் பெரும் இடைவெளி நிலவும்.இவர்களது ஆய்வுகளும் செயற்பரப்பும் தத்துவார்த்த வெளியில் சுழுன்று கொண்டிருக்கும்.
அடுத்த சாரார்தான் யதாரத்தமாக விடயங்களை அனுகி நடைமுறை உலகில் தொடர்ச்சியாக செயற்படக் கூடியவர்கள்.இவர்களால்தான் சமூக மாற்றங்களும் எழுச்சிகளும் சாத்தியப்படுகின்றன.இவர்கள் தொடர்ந்தேர்ச்சியாக சிந்தித்துக் கொண்டும் செயற்பட்டுக் கொண்டுமிருப்பர்.
இந்த விடயத்தை இமாம் ஹஸனுல் பன்னா அவரகள் தனது றஸாஇலில் பின்வருமாறு விளக்குகிறார்
“பேச்சுக்குரிய களம் கற்பனைக்குரிய களத்தைப் பார்க்கிலும் வேறுபட்டது,செயற்பாட்டுக்குரிய களம் பேச்சுக்குரிய களத்தைப்பார்க்கிலும் வேறுபட்டது,போராட்டத்துக்குரிய களம் செயற்பாட்டுக்குரிய களத்தைப் பார்க்கிலும் வேறுபட்டது.சரியான போராட்டக் களம் தவறான போராட்டக் களத்தைப் பார்க்கிலும் வேறுபட்டது.அதிகமானவர்களுக்கு கற்பனை பண்ண முடியும்,எனினும் உள்ளத்தில் தோன்றும் அனைத்துக் கற்பனைகளையும் வார்த்தைகளாக வடிக்க முடியாது.அதிகமானவர்களுக்கு பேச (கதையாடல்)முடியும்.எனினும் செயற்பாட்டின் போது இந்த அதிகமானோரில் குறைந்த தொகையினரே நின்று பிடிப்பர்,இந்த சிறு தொகையில் அதிகமானோருக்கு செயற்பட முடியுமெனினும் அவர்களில் சொற்ப தொகையினரே கடினமான போராட்ட வாழ்வினதும்,தொடர்ந்த செயற்பாட்டினதும் சுமைகளை சுமப்பர்.இந்த தேர்ந்த சிறு தொகைப் போராளிகளும் கூட அல்லாஹ்வின் பராமரிப்பு இல்லாது போனால் பாதையை தவர விட்டு இலக்கை அடைந்து கொள்ள முடியாது போவர்”
குறைந்த இழப்பில் கூடிய விளைவை கொண்டு தரும் தேர்ந்த போராட்டமாக சமூக மாற்றத்திற்கான அல்லது எழுச்சிக்கான செயற்பாடு மாற வேண்டுமாயின் அது பற்றிய சரியான தெளிவுடன் குறித்த செயற்பாட்டை கொண்டு செல்லும் அணி காணப்பட வேண்டும்.அந்த வகையில் முதலில் சமூக மாற்றம் தொடர்பில் பேசும் போது நாம் பயன்படுத்தும் சில சொற்பிரயோகங்கள் பற்றிய தெளிவை முதலில் பெற்றுக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
1. சமூக எழுச்சி அல்லது மாற்றம் என்றால் என்ன?
சமூக எழுச்சி அல்லது மாற்றம் குறித்து பேசும் போது நஹ்ழா(எழுச்சி),ஸஹ்வா(எழுச்சி),தஃயீர்(மாற்றம்),இஸ்லாஹ்(சீர்திருத்தம்),தஜ்தீத்(புணர் நிர்மானம்) போன்ற பிரயோகங்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.உண்மையில் இந்த சொற்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட செயன்முறைப் பரப்பபை கொண்டதாகக் காணப்படுகிறன.
‘நஹ்ழா’ என்ற சொல் மொழி ரீதியாக பலம்,சக்தி,அதிக இயக்கம்,எழுந்து நிற்றல்,முன்னோக்கிச் செல்லல் போன்ற கருத்துக்களை குறிக்கும்.லிஸானுல் அரப் இதனை குறித்த ஓரிடத்திலிருந்து எழுந்து செல்லல் என குறிப்பிடுகிறது.அதாவது ஒரு நிலையிலிருந்து இன்னோர் நிலைக்கு நகருதல்,இடத்தையும் தோற்றத்தையும் மாற்றுதல் என குறிப்பிடலாம்.அதனை தேங்கி பின்னடைந்திருந்த நிலைக்குப் பிறகு எழுந்து முன்னோக்கிச் செல்லுதல் எனக் கொள்ளமுடியும்.எனவேதான் இதனை நாம் தமிழில் எழுச்சி எனக் குறிப்பிடுகிறோம்.நாம் எழுச்சி எனக் குறிப்பிடும் போது அது மனவெழுச்சி,கிளர்ச்சி நிலை என்பதற்கப்பால் செயற்பரப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடு என்பதனை இங்கு தெளிவாக விளங்கிக் கொள்கிறோம்.அந்த வகையில் ஒரு சமூகம் தான் இருக்கின்ற பின்தங்கிய நிலையிலிருந்து எதிர்பார்க்கப்படும் சிறந்த நிலையை நோக்கி செல்வதற்காக அதனது சிந்தனை,செயற்பாடு,பலம் என அதன் தற் போதைய நிலையிலிருந்து மாறிச் செல்கின்ற,எழுந்து கொள்கின்ற செயற்பாட்டையே நாம் இங்கு எழுச்சி என்கிறோம்.
இங்கு இந்த சொல்லை நாம் பயன்படுத்தும் போது இன்னுமோர் பின்னணியையும் விளங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பிரயோகம் ஐரோப்பாவில் கி.பி14ம் நூற்றாண்டு முதல் கி.பி 17 வரை ஏற்பட்ட கிறிஸ்த்தவத்தின் அடக்கு முறைக்கெதிரான அறிவியல் எழுச்சியை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாகும்.இந்த வகையில் 'எழுச்சி' என்பதனை மதத்தை விட்டு தூரமான சிந்தனா ரீதியான செயற்பாடாகவும் மற்றும் நடைமுறையிலுள்ள அனைத்தையும் புறக்கணிக்கும் செயற்பாடாகவும் என ஐரோப்பிய பின்னணியில் நோக்குவதுண்டு.
நாம் இங்கு இந்த சொல்லை பிரயோகிப்பது இஸ்லாமிய பின்புலத்திலிருந்தாகும்.இதனை அறிஞர் மாலிக் பின் நபி, கலாநிதி ஜாஸிம் ஸுல்தான்,அப்துல் ஹமீத் அல்-கஸ்ஸாலி…போன்ற இஸ்லாமிய எழுச்சி செயற்பாட்டை ஆய்வு ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நோக்கிய பலரும் இஸ்லாத்தின் சமூக மாற்ற வேலைத்திட்டத்தை குறிப்பதற்காக இஸ்லாமிய பின்புலத்திலிருந்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த சொல்லைப் பற்றி பேசும் போது,இதே கருத்தில் முற்றிலும் இஸ்லாமிய பின் புலத்திலிருந்து பாவிக்கப்படுகின்ற 'ஸஹ்வா' என்ற சொல்லையும் இங்கு தொடர்பு படுத்தி விளங்கிக் கொள்வது பொருத்தமாகும்.இஸ்லாமிய எழுச்சியை குறிப்பதற்கான இந்தப் பிரயோகம் 20ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு பிரயோகமாகும்.இது தூக்கத்திலருந்து விழித்தல்,போதையிலிருந்து விழித்தல்,வானில் மேக மூட்டமற்ற நிலை..என மொழி ரீதியாக கருத்துக் கொடுக்கிறது.இதனை பிரயோகத்தில் நவீன காலத்தில் முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய ரீதியாக எழுச்சியடைந்தமையை குறிக்க பயன்படுத்துவர்.அப்படி பயன்படுத்துவோரில் பலர் அவ்வெழுச்சியை இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹாபின் செயற்பாட்டிலிருந்து துவங்குவர்.சிலர் அதனை இஸ்லாமிய எழுச்சி சர்வதேச ரீதியாக சமூகமயப்படத்துவங்கிய 1970 பதுகளிலிருந்து துவங்குவது பொருத்தம் எனக் குறிப்பிடுவர்.இன்னும் சிலர் இச்சொல் எழுச்சி செயற்பாட்டை மொத்தமாக குறிக்க பொருத்தமற்றது என மொழி ரீதியான பிரயோக நிலையிலிருந்து குறிப்பிடுவர்.இது எழுச்சி செயன் முறையின் ஆரம்ப செயல் நிலை என எழுச்சி செயற்பாட்டை ஆய்வு ரீதியாக விளக்க முற்பட்டவர்கள் இதனை அடையாளப்படுத்துவர்.ஸஹ்வா என்ற பிரயோகத்தை ஆரம்ப செயல் நிலையாக பார்ப்பதே அதன் மொழி ரீதியான உள்ளடக்கத்தை வைத்துப் பார்க்கும் போது பொருத்தமானதாகும். எனினும் இஸ்லாமிய இலக்கியப் பரப்பில் இச் சொல் நஹ்ழா என்ற சொல் குறிக்க வருகின்ற பரப்பை குறிப்பதற்காக பெருமளவில் பாவிக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் இங்கு மனதில் கொள்வதுவும் அவசியமாகும்.
அடுத்து இப்பரப்பில் பயன்படுத்தப்படும் சொற்பிரயோகம்தான் ‘தஃயீர்’ என்ற சொல்.இது,ஒன்றை ஒரு நிலையிலிருந்து இன்னோர் நிலைக்கு மாற்றுதல்,இதற்கு முன்னர் இல்லாத ஒன்றை ஏற்படுத்தல்,ஒன்று சீர் பெறுவதற்காக இருக்கின்ற நிலையை மாற்றி வைத்தல் போன்ற பொருள்களைக் கொடுக்கும்.இங்கு,இந்த சொல் மாற்றம் எனும் போது ஒன்றின் அடிப்படை அப்படியே இருக்க தோற்றம் மாறுவதையும் குறிக்கும்.அதே போல் ஒன்று முழுமையாக மாற்றத்துக்குட்படுவதையும் குறிக்கும்.இந்த இரண்டு கருத்தையும் குறிக்கும் வகையில் குர்ஆன் இச் சொல்லை பாவித்துள்ளது.சமூகமாற்றத்திற்கான அடிப்படை விதியை குர்ஆன் இச் சொல்லை பயன்படுத்தியே விளக்குகிறது.“அல்லாஹ் ஒரு சமூகம் தன்னைத் தானே மாற்றாதவரை அவர்களை மாற்றமாட்டான்”.இந்தச் சொல்லும் சமூக எழுச்சி அல்லது மாற்றம் என்ற பரப்பில் காணப்படும் செயன்முறைத் தொடரில்(Process) ஒரு பகுதியை குறிக்கின்றது.எனினும் மொத்தச் செயன்முறையும் ஏதோ ஒரு வகையில் மாற்றம் என்ற செயலுடன் தொடர்புருவதால் மொத்தமாகவும் இதனைப் பயன்படுத்த முடியுமெனினும் ஒரு போதாமை உணரப்படவே செய்கிறது.ஏனெனில் சில மாறா அடிப்படைகளும்,மாற்றத்தை வேண்டாத பகுதிகளும் சமூக எழுச்சிச் செயன்முறையில் காணப்படலாம்.
அடுத்து,‘இஸ்லாஹ்’ என்ற சொல்லும் ‘தஜ்தீத்’என்ற சொல்லும் இப்பரப்பில் பயன்படுத்தப் படும் பிரயோகங்களுள் முக்கியமானவையாகும்.இஸ்லாஹ் என்ற சொல் பஸாத்(சீர் கேடு)என்பதன் எதிர் பதமாகும்.இது ஒன்றை சீர்படுத்தல்,ஒன்றிலிருக்கும் சீர்கேடுகளை,மோசமானவற்றை அகற்றல்,ஒன்றின் சீரான நிலையை தொடர்ந்து பேணல்,ஒன்றை சிறப்பாக தயார்படுத்தல்… எனப் பொருள்படும்.இது இரண்டு விடயங்களுக்கிடையிலான அல்லது இருவருக்கிடையிலான பொருத்தப் பாடின்மைகளை நீக்குதல் என்ற கருத்தில் இருவருக்கிடையே அல்லது இரண்டு விடயங்களுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.இந்தப் பின்னணியில் குர்ஆனும் இச் சொல்லை சமூக சீர் திருத்த செயற்பாடு,இருவருக்கிடையே சமரசம் செய்தல்..போன்ற கருத்துக்களில் பயன்படுத்தியுள்ளது.இதனையும் எழுச்சி செயன்முறையில் காணப்படும் ஒரு தன்மை வாய்ந்த செயற்பரப்பை குறிக்கும் ஒரு சொல்லாகக் காணலாம்.அடுத்து இதனுடன் தொடர்பாக குறிப்பிடப்படும் அடுத்த சொற்பிரயோகம்தான் தஜ்தீத் எனும் புதுப்பித்தல், புணரிநிர்மாணம் செய்தல்,பழமைப்பட்டு,இத்துப்போன நிலையிலிருந்து அடிப்படை நிலைக்கு கொண்டுவருதல்…என்ற கருத்தைக் கொடுக்கும் சொல்லாகும்.இந்த சொல் மார்க்கத்தை புணர் நிர்மாணம் செய்தல் என்ற கருத்தில் நேரடியாக ஹதீஸில் பாவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியப் பரப்பில் மார்க்கத்தின் சிந்தனா,பிரயோக நிலைகளில் வருகின்ற தொய்வினை நீக்கி பழைய நிலைக்கு செம்மைப்படுத்தல் என்ற பரப்பில் பாவிக்கப்பட்டுள்ளது.இது பெரும்பாலும் மார்க்கத்தின் பிரயோக நிலைச் சிந்தனைகளில் ஏற்படுத்தப் படும் கால இடப் பொருத்தமான மாற்றங்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது என சிலர் கருதுவர்.இன்னும் சிலர் இது மொத்த மாற்றப்பரப்பையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது எனக் குறிப்பிடுவர்.
இதேபோன்று,இஹ்யாஉ(உயிர்ப்பித்தல்),இஆததுல் பினாஃ(மீளக் கட்டியெழுப்பல்),தன்மியா(அபிவிருத்தி)…போன்ற சொற்களும் இப்பரப்பில் பயன்படுத்தப்படுகின்றன.எனினும் நஹ்ழா என்பதன் மூலம் நாடப்படும் எழுச்சி என்ற பிரயோகம்,அதனுடன் தொடர்பான அனைத்துப் பிரயோகங்களையும் ஒன்று சேர்த்துக் கருத்துக் கொடுப்பதை அவதானிக்கலாம்.
இங்கு நாம் பேச வருகின்ற தலைப்பை புரிந்து கொள்ள இந்த பிரயோகங்களை விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.காரணம் மொழி சிந்தனைகளையும்,கருத்துக்களையும்,செயற்பாடுகளையும் வடிவமைக்கிறது.இந்தப் பிரயோகங்களை நாம் விளக்கியது போன்று மேலோடட்டமாக விளங்கும் போதே சமூக எழுச்சிப் பரப்பில் இடம் பெறும் வாதப் பிரதிவாதங்களின் பின் புலங்களை ஓரளவு விளங்கிக் கொள்ள முடியுமாக இருக்கும்.இங்கு நாம் இதனை விளக்கியமைக்கு, அத்தகைய வாதப் பிரதிவாதங்களுக்கு வெளியில் நின்று சரளமாக இத்தலைப்பை சாதாரண வாசகர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதுவும் ஒரு நோக்கமாகும். அதே நேரம் இப்பரப்பில் விவாதிப்பவர்கள் தெளிவுடன் இதனை அணுகுவதற்கு வசதியளிக்கும் என்பது அடுத்த நோக்கமாகும்.
உண்மையில் அல்-குர்ஆன் நபிமார்கள் மேற் கொண்ட பணியை விளக்க,தஃவா,இஸ்லாஹ்,ஜிஹாத்,கிதால்,தப்ஷீர்,தன்தீர்,அம்ரு பில் மஃரூப்,அன்நஹ்யு அனில் முன்கர்,தஃயீர்,தன்வீர்,ஸிராஜ்…என பல பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளது.இவை அனைத்தினூடாகவும் சிறந்ததோர் மனித நாகரிகத்தை கட்டியெழுப்ப அவர்கள் உழைத்தார்கள் என குர்ஆன் விளக்கும்.
அந்த வகையில்,இன்று உலக அளவிலும் சரி,தேசிய அளவிலும் சரி,சமூக மட்டத்திலும் சரி மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டம் ஒரு நாகரீகத்தை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடாகும்.அதனை நாம் சாதாரணமாக சிந்தனைகளை பேசுவதன் ஊடாகவோ,கருத்துக்களை வாதிப்பதனூடாகவோ மாத்திரம் செய்து விட முடியாது.அது ஒரு நாகரீகத்தை உருவாக்கும் பணி.மாலிக் பின் நபி தனது ஷுரூதுன் நஹ்லா என்ற நூலிலே,“தான் அந்த நூலை எழுதும் போது உடகார்ந்திருக்கும் அறையில் ஒரு சிலதைத் தவிர அனைத்துமே மேற்கு நாகரிகத்தின் உற்பத்திகளாகக் காணப்படுகின்றன.நாகரீகங்கள்தான் உற்பத்திகளை மேற் கொள்கின்றன.நாம் உற்பத்திகளால் நாகரீகங்களை வடிவமைக்க முடியாது.நாம் இன்னோர் நாகரிகத்திலிருந்து அனைத்தையும் வாங்க முடியாது.நாம் மனிதனையும் + மண்ணையும் + நேரத்தையும் வைத்து +2 இஸ்லாமிய மார்க்க சிந்தனை எனும் சாந்தைக் குழைந்து = நமது நாகரிகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.அதுதான் எமக்கான உற்பத்திகளை தரும் ” எனக் கூறுவது போன்று ஒரு பாரிய பணி.எனவே,அதனை மேற்கொள்வதற்கு ஒரு பாரிய வேலைத்திட்டம் தேவை.அது எப்படி அமையலாம் என்பதை அடுத்து வரும் அமர்வுகளில் கலந்துரையாடலாம், இன்ஷாஅல்லாஹ்.
No comments:
Post a Comment