Saturday, March 19, 2016

சமூக எழுச்சிக்கான அல்லது மாற்றத்திற்கான இஸ்லாத்தின் செயற்திட்டம்-01 எம்.என்.இக்ராம்

ikrammn@gmail.com
ஆரம்பமாக
முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை இஸ்லாத்துடனான தனது உறவை சம்பிரதாய பூர்வமாக மட்டுப் படுத்திக் கொண்டு,தானுன்டு தனது வயிறும் வாழ்வுமுண்டு என்ற அளவில் சுருக்கிக் கொண்ட ஒரு சூழலில்,இஸ்லாத்திற்காக,அதன் இலக்குகளுக்காக செயற்பட முனைகின்ற போது,அதற்காக செயற்படும் கணக்கிடத்தக்க ஒரு சிலரும் இஸ்லாத்திற்காக உழைத்தல் என்பது எது?எப்படி என்ற தத்துவார்த்த சர்ச்சைகளுக்குள்ளால் இருந்து தசாப்தங்களாக வெளிவராத ஒரு சூழல் காணப்படுகிறது.இது சுபமானதா அல்லது அசுபமானதா என்பதற்கு அப்பால் இஸ்லாத்தின் இலக்குகளை நோக்கி எமது வாழ்வை வடிவமைப்பதில் ஒரு சிக்கலான சூழலை தோற்றுவித்துள்ளது எனக் குறிப்பிடலாம்.
இத்தகைய சிக்கலான சூழ்நிலை வரலாற்றில் பல கட்டங்களிலும் ஏற்பட்டதுண்டு.இத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம் தத்துவார்த்த வாதப்பிரதிவாதங்களைத் தாண்டி இஸ்லாத்தின் செயற்பரப்பை எளிமையான வடிவங்களால் விடுவித்த சீர்திருத்த செயற்பாடுகள்தான் நிலைபேறான மாற்றங்களை கொண்டு வந்திருப்பதைக் காணலாம்.இதற்கு உமர் இப்னு அப்துல் அஸீஸ்(றஹ்) அவர்களின் சீர்திருத்த முயற்சிகளையும் இமாம் ஹஸனுல் பன்னாவின் சீர்திருத்த முயற்சிகளையும் இரு வேறுபட்ட தளங்களில் இருந்து உதாரணமாகக் குறிப்பிட முடியும்.
இங்குதான் இஸ்லாத்திற்கான உழைப்பு எமது நாட்டைப் பொருத்த வரையில் ஒரு சிக்களில் கட்டுண்டு போயிருப்பதாக நாம் குறிப்பிடுகிறோம்.இதனை நாம் சிந்தனைச் சிக்கல் என்று குறிப்பிடுவதுவா?செயற்பாட்டுச் சிக்கல் என்று குறிப்பிடுவதுவா? என்பது விளங்கவில்லை.
இதனை இலகுவாகச் சொல்வதென்றால்,இஸ்லாத்திற்கான உழைப்பு அல்லது அதன் இலக்குகளை வாழ்வில் செயற்படுத்துவதற்கான உழைப்பு எங்கிருந்து துவங்கப் பட வேண்டும்?அது எதனை முதன்மைப்படுத்த வேண்டும்?அதன் பரப்பெல்லைகள் யாவை? என்பன பல தசாப்தங்களாக தத்துவாரத்த ரீதியாக இஸ்லாத்திற்காக உழைக்க முனையும் பலரும் எழுப்புகின்ற வினாக்கள்.இங்கு பிரச்சினை என்னவென்றால்,இந்த வினாக்களுக்கு பலரும் புத்தகங்களின் பக்கங்களிலிருந்து விடை தேட முயன்று ஈற்றில் சலித்துப் போய் விடை தெரியா பரப்பில் உலாவிக் கொண்டிருப்பர் அல்லது களத்திருந்து ஓய்ந்து போவர்.
இங்கு இஸ்லாத்தினை முன்நிறுத்தி உழைத்த பலரதும்,பல அமைப்புகள் நிறுவனங்களதும் அனுபவங்களை கோர்த்துப் பார்க்கின்ற போது,எல்லோரும் ஒன்றுபடுகின்ற ஒரு புள்ளியை நாம் இணம் காண முடியுமாக இருக்கிறது.அதுதான் இஸ்லாமிய ஆளுமைப் பிரச்சினை என்பது.இதனை சரியாகச் சொல்வதென்றால்,எல்லாரும் சொல்கிறார்கள்தான் ஆனால்,அவரது வாழ்வில் அதனைக் காண முடியவில்லை என்ற அங்களாய்ப்பு.இது இதனை உணர்கின்றவர்களிடத்திலுமிருக்கிறது.உணராதாரிடமும் உள்ளது.இதனை இன்னோர் வடிவில் சொன்னால் பிறழ்வாளுமைப் பிரச்சினை.
கசப்பாக இருந்தாலும் அனைவராலும் உணரப்படுகின்ற, பரிமாறப் படுகின்ற ஒரு முதன் நிலைப் பிரச்சினையாக இது காணப்படுகிறது.எனினும் அனைவரும் மிக இலகுவாக கடந்து போய் தமக்கான ஒரு சௌகரிய வட்டத்தில் வாழ்வதற்காக இதனை கிடப்பில் போற்று விடுகின்றனர்.இதனை மறப்பதற்கும் மறைப்பதற்கும் சிந்தனா, தத்துவ சர்ச்சையில் மூழ்கி மிதப்பதை ஆசுவாசமாகக் கருதுகின்றனர்.இதனால்,காலாகாலமாக இந்தப் பிரச்சினை அப்படியே இருந்து கொண்டிருக்கும் அதே வேலை இஸ்லாத்திற்கான உழைப்பும் ஒரு வட்டத்தைத் தாண்டி மேலே போகாமல் திண்டாடிக் கொண்டிருக்கும்.
இதனை அல்-குர்ஆன் மிக எளிமையாகக் குறிப்பிடுகிறது. “அல்லாஹ் ஒரு சமூகம் தன்னைத் தானே மாற்றாதவரை அவர்களை மாற்றமாட்டான்”.இந்தக் கருத்தை ஷஹீத் செய்யித் குதுப் அவர்கள் தனது ஹாதத் தீன் என்ற நூலில் குர்ஆனின் இதே எளிமையுடன் விளக்குகிறார்கள்.இஸ்லாம் என்பது மனித சமூகத்திற்கான தெய்வீக வழிகாட்டல்.அதனை மனிதர்கள் எவ்வளவு தூரத்திற்கு தம்மிலும்,தம்மைச் சூழவும்,தாம் வாழும் சூழலை,தமது சக்தியை,வளங்களை கருத்திற்கொண்டு பிரதிபலிக்கிறார்களோ அந்தளவிற்கு அது வெற்றி பெறும்.அதே நேரம் அதற்கான உழைப்பு என்பது அவர்களும் மார்க்கமும் சந்திக்கின்ற புள்ளியிலிருந்து ஆரம்பிக்கும்.அது அவர்கள் எந்த எல்லை வரை செல்கிறார்களோ அதுவரை அவர்களை அழைத்துச் செல்லும்.
இதுதான் எமது சமூக மாற்றத்திற்கான அல்லது சீர்திருத்தத்திற்கான அல்லது எழுச்சிக்கான வேலைப் பரப்பை அடையாளப்படுத்தும் எளிய வார்த்தைகள்.இங்கு வார்த்தை மேதமைகளோ,தத்துவார்த்த மயக்கங்களோ கிடையாது.செயற்பாட்டாளர்களுக்கான இடைவெளி மாத்திரமே காணப்படுகிறது.இங்குள்ள கேள்வி,ஒரு ஆரம்பப் பள்ளி ஆசானைப் போன்று பிள்ளைகளிடம் தானும் படித்து பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லிக் கற்பித்து அவர்களை சிக்களற்ற, வெளிப்படைத் தன்மையுள்ள ஆளுமைகளாய் வடிவமைக்கும் நிதானம் கொண்ட அந்த சிற்பிகள் யார் என்பதுதான்.

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...