“அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை உண்மைப்படுத்திய சில ஆளுமைகள் காணப்படுகின்றன.அவர்களில் சிலர் அதனை அடைந்து விட்டனர்.இன்னும் சிலர் எதிர்பாரத்திருக்கின்றனர்.அவர்கள் அதனை முற்றாக மாற்றிவிடமாட்டார்கள்”-அஹ்ஸாப்: 23-
இலங்கை்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான தொடர்பு மிகவும் தொன்மையானது.அது தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டியது.அவ்வகையான ஆய்வுகள் எமக்கு ஒரு செழுமையான வரலாற்றைத் தரலாம்.அதனைத் தாண்டி நமது அண்மைய வரலாற்றை ஒரு முறை மீட்டிப் பார்க்ககையில் நமது வரலாற்றை செழுமைப்படுத்திய நிறைய ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும் கண்டு கொள்கிறோம்.
அறிஞர் தாஸிம் நத்வி,மௌலவி மஸ்ஊத் ஆலிம்,கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்,அறிஞர் ஏ.எம்.ஏ அஸீஸ்...போன்ற பல ஆளுமைகள் நமது அண்மைய வரலாற்றில் நமக்கு தென்படுகின்றனர்.இந்த ஆளுமைகளுக்குள் சற்றும் குறைத்து மதிப்பிட முடியாத ஒருவராகத்தான் நாம் அல் ஹாஜ் நளீம் அவர்களைக் காண்கிறோம்.
1960/70கள் இலங்கையின் வரலாற்றில் முக்கியமான காலப் பகுதி.இலங்கையில் வாழும் பிரதான இனங்கள் தமது தனித்துவத்தை உணர்ந்து கொள்ள ஆரம்பித்த காலப்பகுதி.அக்காலம் இலங்கை முஸ்லிம்களை பொருத்தவரை கல்வி,கலாசாரம்,கொள்கைத் தனித்துவத்தை சமூகத்தளத்தில் சவால்களுக்கு மத்தியில் முன்னெடுப்பு செய்ய வேண்டிய தேவை உணரப்பட்டது.
இக்காலப் பகுதியில்தான் மஸ்ஊத் ஆலிம்,நளீம் ஹாஜியார்,அறிஞர் தாஸிம் நத்வி,ஏ.எம்.ஏ அஸீஸ்,ஹிபதுல்லாஹ் ஹாஜியார்...போன்ற சமூக செயற்பாடடாளர்கள் இலங்கை முஸ்லிம்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் சிந்திக்கத் தலைப்பட்டனர்.முஸ்லிம் சமூகத்தின் கல்விப் பிரச்சினை,பொருளாதாரப் பிரச்சினை,காலாசாரம்,தனித்துவம் சம்பந்தமான பிரச்சினை என அவர்களது சிந்தனைத் தளம் விரிவடைந்தது.
இதே 70 களின் காலப் பகுதியில் சர்வதேச அளவில் இஸ்லாமிய உம்மத் ஒரு எழுச்சிப் போராட்டத்தை முதிரச் செய்து கொண்டிருந்தது.மௌலவி மஸ்ஊத் ஆலிம்,அறிஞர் தாஸிம் நத்வி,அறிஞர் ஏ.எம் ஏ. அஸீஸ் போன்றோரின் சிந்தனைகளை அந்த எழுச்சி அலைகள் பதிக்காமல் விட்டு வைக்கவில்லை.இந்தப் பாதிப்புக்கள் சமூக செயற்பாடுகளுக்காக அவர்களுடன் ஒன்றிணைந்த அனைவரையும் ஈர்த்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
இந்தப் பின்னணியில் இருந்துதான் முஸ்லிம் கிராமங்கள் தோறும் நளீம் ஹாஜியாரால் கட்டப்பட்ட பள்ளிவாயில்களை,வறுமையால் பாதிக்கப்பட்டோருக்கு அவர் கட்டிக் கொடுத்த வீடுகளை,அவரால் செய்யப்பட்ட அவர்களது பிள்ளைகளது கல்வி மற்றும் திருமணங்களுக்கான உதவிகளை...நம்மால் பார்க்க முடிகிறது.(இது இந்தியா வரை வியாபித்துள்ளது)நளீம் ஹாஜியார் உட்பட அவரோடிருந்த சகாக்களால் முன் கொண்டு செல்லப்பட்ட இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கப் பணிகள் இவ்வகையில் கூர்மையாகப் பார்க்கப்பட வேண்டியவை.இலங்கை முஸ்லிம் கல்வி வரலாற்றில் ஒரு பெறும் திருப்பு முனையை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் சாதித்தது.
இப்பணிகள் எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற் போல் அல்லது இவ்வாறான பணிகளை சுமக்கும் சமூக செயற்பாட்டாளர்களை பயிற்றுவிக்கும் ஒரு தளமாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ஜாமிஆ நளீமியா.ஜாமிஆ நளீமியா நளீம் ஹாஜியாரும் அவரோடிருந்தவர்களும் முஸ்லிம் சமூகத்துக்காக விட்டுச் சென்ற ஒரு வக்பு சொத்து.
நளீம் ஹாஜியாரினதும் அவரது தோழர்களதும் பணிகள் அனைத்தின் மீதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு பணியாகத்தான் ஜாமிஆ நளீமியாவின் தோற்றம் அமைந்தது.இலங்கை முஸ்லிம்களது அனைத்துத் தளங்களிலும் பாதிப்புச் செலுத்தியுள்ள ஒரு கல்வி நிறுவனமாக ஜாமிஆ நளீமியா இன்று மாறியுள்ளது.அதன் சிந்தனை வீச்சுகள் இலங்கை முஸ்லிம்களையும் தாண்டி தமிழ் பேசும் உலகை நோக்கியும் வியாபிக்கிறது.
நளீம் ஹாஜியாரையும் இலங்கை முஸ்லிம்களையும் சர்வதேச முஸ்லிம் உம்மத்துக்கு அறிமுகம்(அண்மைய காலத்தில்) செய்த இடமாக நாம் ஜாமிஆ நளீமியாவைக் குறிப்பிடலாம்.நளீம் ஹாஜியார் ஞாபகப்படுத்தப் படும் போதெல்லாம் அதனுடன் சேர்த்து நளீமியாவும் மனக் கண் முன் தோன்றும்.அதே போன்று நளீம் ஹாஜியாரின் பங்களிப்புக்கள் பற்றிப் பேசும் போதெல்லாம் அங்கு மஸ்ஊத் ஆலிம்,ஹிபதுல்லாஹ் ஹாஜியார் போன்றோர் அவருடன் சேர்ந்து கொள்கிறார்கள்.இந்த அணியுடன் கலாநிதி சுக்ரியும் இணைந்து கொள்கிறார்.
1980 களின் பின்னால் இலங்கையில் உத்வேகம் பெற்ற இஸ்லாமிய எழுச்சியில் ஜாமிஆ நளீமியாவுக்கும் பல்கலைக் கழக மாணவர் சமூகத்துக்கும் பாரிய பங்களிப்புள்ளது.இந்தப் பங்களிப்பின் வேர்கள் நளீம் ஹாஜியாரையும் அவருடனிருந்த இஸ்லாமிய சிந்தனையாளர்களையும் போய்ச் சேர்கிறது.இது விரிவாக நிகழ்வுகளின் குறிப்புகளுடன் பார்க்கப்பட வேண்டியது.சில போது நாம் இப்படிக் குறிப்பிடுகையில் பலருக்கு வியப்பான கேள்விகள் எழக் கூடும்.ஏனெனில் முற்றத்து மல்லிகை மணப்பதில்லை என்பதுதான் அது.நாம் எப்போதும் அயல் வீட்டையும் அயல் முற்றத்தையும் பார்த்து வியந்து பழகியவர்கள்.நமக்கு நமது பூர்வீகங்கள் எப்போதும் அந்நியமானவை.இந்த அந்நியம் எப்பொழுதும் தொடரக் கூடாது.அது வரலாற்றை விட்டும் நம்மை அந்நியப்படுத்திவிடும்.வரலாற்றில் தோன்றிய ஒவ்வோர் ஆளுமைக்கும் அதேற்கேயுரிய பாத்திரத்தை கொடுக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
மேற்கின் காலனியம் நம்மில் வளர்த்த,நம்மை சிறுமையாகப் பார்க்கும் இந்த மனோ நிலை மோசமானது.தென்னாபிரிக்க மக்கள் தமது வரலாற்று செழுமைகளுடன் காலனித்துவத்தை எதிர்த்து உதைத்தெழும்பியது போல் நாமும் நமது வரலாற்றுச் செழுமைகளுடன் தனித்துவமாய் சிந்திக்க முற்பட வேண்டும்.இங்குதான் நளீம் ஹாஜியாரையும், நமக்குள்ளால் நிகழ்ந்து வரும் இஸ்லாமிய எழுச்சியையும் நாம் எப்படிப் பார்க்க வேண்டும் என்ற பார்வை நமக்கு வெளிச்சமாகிறது.இஸ்லாமிய எழுச்சி என்பது வெறுமனே சிந்தனையின் எழுச்சி மாத்திரமல்ல,அது செயற்பாட்டின் எழுச்சி.அதில் நளீம் ஹாஜியார் போன்றோருக்கும் பெரும் பங்குள்ளது.
நளீம் ஹாஜியார் பணத்தை கொடையாக மாத்திரம் தந்துவிட்டுச் சென்ற ஒரு முதலாளி அல்ல.அவர் ஒரு சிந்தனைப் பாரம்பரியத்தின் முதுகெழும்பாய் இருந்தவர்.நளீம் ஹாஜியார் வாழ்ந்த பூமியும்,அவரது உரைகளும்,அவரது தோழர்களும்,அவர நீர் வார்த்த சிந்தனையும் இதனை எமக்கு தெளிவாய் உணர்த்தும் சான்றுகள்.இந்தச் சான்றுகள் அழிந்து போகாமல் பாதுகாக்கப்பட வேண்டியவை.ஏனெனில்,அவை எமது வரலாறு.எமது வரலாற்றோட்டத்தில் ஒரு திருப்பு முனைக்குக் காரணமாய் அமைந்தவர்தான் நளீம் ஹாஜியார்.எனவேதான் நாம் அவரை அறிவுத் தந்தை என்கிறோம்.அல்லாஹ் அவரையும் அவரது பணிகளையும் பொருந்திக் கொள்ளட்டும்.அவருக்குப் பின்னால் எம்மை அவன் நேர் வழியில் செலுத்தட்டும்.
(நாம் ஒரு முறை வகுப்புத் தோழர்களுடன் வளாகத்தில் இருக்கையில் ஹாஜியார் வந்து நிர்வாகக் கட்டிடத்தின் கீழ் அமர்ந்தார்.அவருடன் உரையாடிக் கொண்டிருந்தோம்...அவரது மரணம் குறித்தே அதிகம் கதைத்தார்...அவரை அடக்கம் செய்யுமாறு நிர்வாகக் கட்டிடத்திற்கு முன்னால் இருந்த ஓர் இடத்தை காண்பித்தார்....அதுட ஹிகமத் என்ன தெரியுமா எனக் கேட்டுவிட்டு...வருபவர்கள் எனக்கு அப்பதான் துஆ செய்வார்கள் என்றார்...இந்த உரையாடிலிடையே ஹாஜியார் நான் இல்லாட்டி இதனை (நளீமியாவை)நீங்கள்தான் பார்த்துக் கொள்ளனும் செய்வீர்கள் தானே என்றார்.அப்போது அவரது பார்வையும் எனது பார்வையும் விபத்தாக நோக்கிக் கொண்டிருந்தன...அந்த வசனங்களின் பாதிப்பு இன்னும் மனதில் ஆளமாய் உள்ளது...எனவேதான்,அவர் மரணித்த போது விபத்துக்குள்ளாகி கால் சுகயீனமுற்றிருந்த போதும் சகோதரர்களின் உதவியுடன் இரவோடிரவாகச் சென்று அவரது ஜனாஸாவை தரிசித்து கப்ருக் குழியிலும் இரங்கிவிட்டு,இரண்டு ரக்காஅத்துக்கள் பள்ளியில் தொழுது பிரார்த்தித்துவிட்டு...ஜனஸாவில் கலந்து கொள்ள முடியாமையால் திரும்பினேன்....
அதன் தொடரில் அந்தக் காலப் பகுதியின் பிற்பாடு...பத்திரிகையில் வேலை செய்யும் காலத்தில் ஹாஜியார் வபாத்தான 27.09.2005 தினத்தின் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பை எழுதி வந்தேன்.ஒரு முறை பத்திரிகையின் பக்கங்களின் உள்ளடக்கமெல்லாம் நிறைவுற்ற பின்னர் ஹாஜியாரைப் பற்றி எழுத வேண்டும் என்ற போது அப்போது மீள்பார்வைக்கு பொருப்பாக இருந்த சகோதரர் சிறாஜ் தனது பத்தியை அதற்காக தந்தார்.2010 பின் அது இடம் பெறவில்லை.நேற்று இரவு வேறோர் தேவைக்காக மீள்பார்வை இதழ்களை புரட்டிய போது ஹாஜியார் பற்றிய கட்டுரைகள் கண்களில் பட்டது.அப்போது,அந்த நினைவுகள் உயிர்த்துக் கொண்டன.இன்று ஹாஜியாரின் நினைவுப் பேருரை இடம் பெற இருக்கிறது என்பதால் அவற்றில் ஒன்றை பதிவிடலாம் என்று இங்கு தருகிறேன்.அவர் பற்றி எழுதிய மற்றைய குறிப்புகளையும் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் காலங்களில் பதிவிட முனைகிறேன்.)
No comments:
Post a Comment