December 14, 2013 at 9:53pm

நமது குடும்பங்களில் நிகழ்கின்ற சில விடயங்களைப் பார்க்கின்ற போது தஃவா ரீதியான பங்களிப்புக்களை நமது பெண்கள் எவ்வகையில் சமூகத்திற்கு அல்லது தஃவா அமைப்புக்களுக்கு வழங்குதல் வேண்டும் என்ற தெளிவை இன்னும் சரியாகப் புரிந்து கொண்டதாக விளங்கவில்லை.
இஸ்லாமிய தஃவா ஒரு சமூக மாற்றத்தை அவாவி நிற்கிறது. அது சமூகத்திலுள்ள சகல தரப்பினரதும் மாற்றமாகும். இந்த மாற்றம் சமூகத்திலுள்ள சகல தரப்பினரதும் உழைப்பால் தான் சாத்தியமானதாகும். இங்கு சமூக அமைப்பில் ஆண்கள் பாதி பெண்கள் பாதி. இரு சாராரதும் உழைப்புத்தான் இங்கு சமூக மாற்றமாகப் பரிணமிக்கும்.
ஆனால் இரு சாராரதும் உழைப்பு வித்தியாசமானது. அந்த வித்தியாசம் எது என்பதை நாம் மிகத் துள்ளியமாக அறிந்து, புரிந்து, உணர்ந்து வைத்திருத்தல் அவசியம். இல்லாது விட்டால் நமது பங்களிப்புக்களே சமூகமாற்றத்திற்கு தடையாக அமையலாம். ஒரு பெண் சமூகக் களத்தில் பெண்களுக்கு மத்தியில் ஒரு தாஈயாக செயலாற்றுதல் என்பது இன்று இஸ்லாமிய தஃவாவைப் பொறுத்தவரையில் இன்றியமையாததோர் தேவை. அதே நேரம் அவள் தனது குடும்ப வாழ்வை இஸ்லாமிய அடிப்படையில் தஃவாவில் ஈடுபடும் தனது கணவன்,தந்தை, சகோதரனுக்கு சுமையில்லாத விதத்தில் ஒழுங்கு படுத்துவது என்பது அதைப் பார்க்கிலும் அத்தியவசியமான தேவையாகும்.
நமது குடும்பங்களில் ஏற்படுகின்ற சிறு சிறு பிரச்சினைகளைக் கூட முகங் கொடுக்க முடியாமல் நமது சகோதரிகள் தமது பெற்றோரை, கணவன்மாரை, சகோதரர்களை தேடி ஓடுவதைக் காண்கிறோம். அவர்கள் எத்தகைய முக்கியமான வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவற்றை விட்டு விட்டு வர நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். உதாரணமாக ஒரு குழந்தைக்கு ஏற்படுகின்ற சுகயீனத்தை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் நமது எத்தனையோ சகோதரிகள் பதறிப் போய் விடுகின்றனர். இப்படியானவர்கள் தஃவாவில் நாம் எதிர்பார்த்திருக்கும் சோதனைக் காலங்களில் ஏற்படப் போகும் சிக்கல்களை எப்படித் தான் எதிர்கொள்ளப் போகிறார்களோ!?
இங்கு தான் நாம் நமது சகோதரிகளை எவ்வகையில் பயிற்றுவித்தல் வேண்டும் என்ற விடயம் துலங்குகிறது. அவர்களை நாம் பயான் பண்ணுவதற்கும் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கும் பயிற்றுவிக்க முன்னர் அவர்களை தமது அன்றாட வாழ்வை தஃவாவில், சமூக களத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு பாரமில்லாமல் எப்படி எதிர்க்கொள்வது என்பதற்காய் தயார்ப்படுத்தல் வேண்டும். இதன் கருத்து எமது சகோதரிகள் சமூக ரீதியான பங்களிப்புக்குத் தயார்படுத்தப்படக் கூடாது என்பதல்ல. இங்கு தான் தஃவாவில் பெண்களின் பங்களிப்பு என்பது ஆண்கள் செய்கின்ற அதே வேலைகளை பெண்களாக இருந்து கொண்டு பிரதி செய்வதல்ல என்று நாம் கூற வருகின்ற கருத்தை மிகச் சரியாக சீரணிக்க வேண்டிய தேவையுள்ளது.
இந்தப் பின்னணியில் இருந்து கொண்டு ரஸுல்(ஸல்) அவர்களின் சமூகத்தில் பெண்கள் செய்த பங்களிப்பை சற்று மீள்பரிசீலனை செய்து பாருங்கள். அங்கு,அபுபக்ர்,உமர்,காலீத்… (ரழி) போன்ற ஆளுமைகளை சராசரியாக நாம் பெண்களில் கண்டு கொள்ள முடிவதில்லையே என நான் பல போது சிந்தித்ததுண்டு. ஆனால் நான் ஆண்களை அப்படியே பிரதி பண்ணி பெண்களில் அப்படியான ஆளுமைகளைத் தேடியது பிழை என்பதை பிறகுதான் புரிந்து கொண்டேன். ஏன் நாம் யுத்த கலத்திலும் தஃவா களத்திலும் தமது வாழ்வின் அதிக நாட்களை ஸஹாபாக்கள் செலவு செய்து கொண்டிருந்த போது பெரும் பெரும் போராளிகளாக தமது பிள்ளைகளை உருவாக்கிய ஸஹாபிப் பெண்மணிகளை உயர்ந்த ஆளுமைகளாகக் கண்டு கொள்வதில்லை?! காரணம் நாம் பார்க்கின்ற பார்வையிலுள்ள கோளாறு தான். அந்தப் பெண்கள் தமது பிள்ளை சுகயீனமுற்றதாக தமது கணவன்மாரை, பெற்றோரை தேடி ஓடியதில்லை. மௌத்தாகிப்போன குழந்தையையே மறைத்து வைத்து விட்டு களைப்புற்று வந்த தனது கணவனுக்கு ஆறுதல் கொடுத்த ஆளமைகளைத்தான் நாம் அங்கு கண்டு கொள்கிறோம்.
அதே நேரம் அவர்களில் ஆயிஷா (ரழி) போன்ற சிறப்புத் திறமை கொண்டவர்கள் இருந்தார்கள் என்பதை நாம் இங்கு மறுக்கவில்லை. இது அந்தப் பெண்களின் பொதுப் பண்பை மறுக்காது. இதே கண்ணோட்டத்துடன் நவீன காலத்திற்கு வாருங்கள். இமாம் பன்னாவின்,அவரது சகாக்களின் குடும்ப வாழ்வுகளை நோக்குங்கள். அங்கு பொதுவாக சமூக மாற்றத்திற்கான மறைமுக என்று நாம் கருதும் பங்களிப்புக்களையே பெண்கள் செய்திருப்பதைக் காண்கிறோம். இந்த வகையிலேயே அவர்களது பெண் பிள்ளைகள் பயிற்றப்பட்டிருக்கிறார்கள். குழந்தை மருத்துவம், வீட்டு முகாமை… இவைதான் அவர்களில் பலர் தமது மேல் படிப்புக்காக தெரிவு செய்துள்ள துறைகள். இவர்கள் தமது இந்தப் பங்களிப்பை மிகச் சரியாக புரிந்து தம்மைப் பயிற்றுவித்து ஒழுங்குபடுத்தியதால்தான் இஃவான்கள் சிறைகளில் தள்ளப்பட்ட போது இயக்கத்தை கவனமாக எடுத்துச் செல்ல அவர்களால் முடிந்தது.
முஸ்தபா மஷ்ஹுரைப் பற்றி அவரது மகள் கூறுகையில் அவர் முதலுதவி,வீட்டு முகாமை, அலங்காரம் (painting), குழந்தை மருத்துவம் போன்ற பகுதிகளில் போதிய பயிற்ச்சியை தனது பெண் பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வழி செய்ததாகக் குறிப்பிடுகிறார். அதேபோல் அவர்களில் ஸைனப் கஸ்ஸாலி, அமீனா குதுப் போன்ற சிறப்பாளுமைகள் இருந்ததையும் நாம் மறுக்கவில்லை. இஃவான்களின் தஃவா கடுமையான சோதனைகளுக்கு மத்தியில் சமநிலை குழையாமல் செல்வதற்கு பெண்களின் நாம் கண்டு கொள்ளாத, பலபோது கருத்திற் கொள்ளாத இத்தகைய பங்களிப்பு உள்ளது என்பதை நாம் மிகச் சரியாக அவர்களது வரலாற்றைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
சகோதரிகளே! நாம் தஃவாவில் நமது பங்களிப்புக்களை சரியாகப் புரிந்து அதற்கேற்ப நம்மைப் பயிற்றுவித்துக் கொண்டு, நமது சகோதரர்களுக்கு சுமையாக இருக்காமல், அவர்களுக்கு உதவியாய் இருந்து கொண்டு தஃவாவில் நமது பங்களிப்புக்களை செய்ய முற்படுவோம். அல்லாஹ் எமக்கு சரியான பாதையைக் காட்டுவானாக.
மீள்பார்வை-இதழ்:133-03.08.2007உம்முல்ஹின்த் (தட்டச்சு2013)