இந்தப்பாகம் பின்வரும் விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது
01. றஸுல் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு
மதீனாவுக்கு ஹிஜ்றத் செய்யுமாறு அனுமதி வழங்குதலும் அதற்கான காரணங்களும்.
02. நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்துக்கு தயாராதலும்,
அதற்காக திட்டமிடுதலும்.
03. நபியவர்களின்
ஹிஜ்ரத்தை நடைமுறைப்படுத்தலும் அதனை முழுமைப்படுத்தலும்.
நாம் முன்னர் அறிந்து
வைத்திருப்பது போன்று மக்காவிலே இஸ்லாமிய தஃவாவின் ஒளி தோற்றம் பெற்றது. பின்னர் அங்கு
சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையிலான போராட்டம் இடம் பெறவேண்டும் என அல்லாஹ்
நாடினான். இது மனித வாழ்விலும் தஃவாக்களிலும் காணப்படுகின்ற அல்லாஹ்வின் பொதுவான
நியதி (சுனன்) ஆகும். “இவ்வாறுதான் நாம் சத்தியத்தையும்
அசத்தியத்தையும் மோதவிடுகின்றோம். வெறும் நுரை பயனற்று அழிந்து போய்விடும். மனிதர்களுக்கு
பயனளிக்கக்கூடியவை பூமியில் நிலைத்திருக்கும். அல்லாஹ் இவ்வாறுதான் உதாரணங்கள்
கூறுகின்றான்”(அர்-ரஃத்:17)
அதற்கு முன் நபியவர்கள் தனது தஃவாவின்
செய்தியை வரகத் இப்னு நவ்பலிடம் கூறியபோது அவர் நபியவர்களுக்கு
கூறிய செய்தியையும் நாம் இங்கு ஞாபகப்படுத்திப் பார்க்கலாம்.
வரகத் இப்னு நவ்பல் : அவ்வேளையில் “நான் இளமைத்துடிப்புள்ள
இளைஞனாக இருந்திருக்கக்கூடாதா? உங்கள் சமூகம் உங்களை வெளியேற்றும் போது
நானும் உயிருடன் இருக்கக்கூடாதா?” நபியவர்கள் : “அவர்கள் என்னை வெளியேற்றுவார்களா?”வரகத்
இப்னு நவ்பல் : “ஆம். நீங்கள் கொண்டுவந்துள்ள செய்தியைப் போன்ற செய்தியை யார் கொண்டுவந்தாலும்
அவர் துன்புறுத்தப்படுவார். அவ்வேளையில்
நான் உயிருடன் இருந்தால் உமக்கு சிறந்த முறையில் உதவி செய்வேன்.”
ஒதுக்குப்புறமாக நலிந்து போய் இருந்த
சத்தியத்திற்கும், பலம் பெற்றிருந்த அசத்தியத்திற்கும் இடையிலான
போராட்டம் பலமடைந்தது. முஸ்லிம்கள் துணிந்து அப்போராட்டத்தில் பொறுமை காத்தார்கள்.
அல்லாஹ் அவர்களுக்கு அந்த துன்பங்களிலிருந்து விடுதலையை அளிக்கும் வரை பொறுமையாகவே
இருந்தார்;கள். காலம் செல்ல முஃமின்களின் மீதான
குறைஷியரின் கொடுமையும் துன்புறுத்தலும் அதிகரித்துக்கொண்டே சென்றது. சில
முஸ்லிம்கள் தமது மார்க்கத்தை விட்டுவிடுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். இன்னும்
சிலர் குறைஷியரின் கரங்களில் அகப்பட்டு கடுமையாக
துன்புறுத்தப்பட்டனர். மற்றும் சிலர் தமது
அகீதாவை பாதுகாத்துக்கொள்ள நாட்டைவிட்டே தப்பியோடினர். அவர்களில்
சிலர் ஹபஷாவுக்கும்,
முகம் போன திக்கிலும் ஓடித்தப்பினர். இந்த
நீண்ட இரவின் மத்தியில் அடர்ந்த இருள்களிற்கிடையே முஃமீன்களுக்கான அல்லாஹ்வின் ஒளி
பிரகாசித்தது. உண்மையான உழைப்பாளிகளுக்கு கிடைக்கக்கூடிய வெற்றி கிடைக்க
ஆரம்பித்தது. “தூதர்கள் நம்பிக்கை இழந்து தாம் பொய்ப்படுத்தப்பட்டுவிட்டோம் என்று
நினைக்கின்ற நேரத்தில் எமது உதவி அவர்களுக்குக் கிடைத்தது”. (யூஸுப் : 110)
யத்ரிப் எனப்பட்ட மதீனா முனவ்வரா தனது
இருகரங்களையும் விரித்து முஃமின்களான முஜாஹித்;களை வாரி அணைத்துக் கொண்டது. பாதுகாப்பான ஓர் இடத்திலே
புதிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை அது அவர்களுக்கு வழங்கியது.
றஸுல் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு
மதீனாவுக்கு ஹிஜ்றத் செய்யுமாறு அனுமதி வழங்குதலும் அதற்கான காரணங்களும்
அல்லாஹ் யத்ரிப் வாசிகளின் உள்ளங்களை
இஸ்லாத்தை நோக்கி விரிவு படுத்தி ஈமானை அவர்களுக்கு விருப்புக்குரியதாக
மாற்றினான். எனவே இஸ்லாம் அங்கு பரவியது. அன்ஸாரிகள் நபியவர்களுக்கும், அங்கு
புகலிடம் தேடி வரும் முஸ்லிம்களுக்கும் உதவி அளிப்பதாக உடன்படிக்கை செய்து
கொடுத்தார்கள். எனவே அங்கு ஹிஜ்ரத் செய்வதற்கு அனைத்து முஸ்லிம்களும் ஆவல் கொண்டனர்.
அபூ மூஸா அல்-அஷ்அரி (றழி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள் : றஸுல் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது முஸ்லிம்களைப் பார்த்து
: “நான் மக்காவை விட்டு பேரீச்சை மரங்கள் உள்ள ஒரு பிரதேசத்துக்கு ஹிஜ்ரத்
செய்வதாக கனவு கண்டேன்” என்று கூறினார்கள். அங்கு இருந்தவர்கள் அது யமாமா அல்லது
ஹஜர் என்னும் பிரதேசமாக இருக்கலாம் என யூகித்தனர். ஆனால்
அது (யத்ரிப்) மதீனாவாக இருந்தது. (புஹாரி)
நபி (ஸல்) கூறியதாக ஆயிஷா (றழி) அவர்கள் கூறியதை உர்வா
(றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “உங்களின் ஹிஜ்ரத் பூமியையும், இரு
பற்றைக்காடுகளுக்கிடையே உள்ள, ஈச்சை மரங்களைக்கொண்ட ஒரு கட்டாந்தரையையும்
கண்டேன்.”
அதன் பின்னர் நபியவர்கள்
மக்காவில் இருந்த முஸ்லிம்களுக்கு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து அங்குள்ள சகோதரர்களான
அன்ஸாரிகளுடன் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள். இது தொடர்பாக நபியவர்கள்
பின்வருமாறு கூறினார்கள் : “அல்லாஹ் உங்களுக்கென்று நீங்கள் பாதுகாப்பாய் இருக்கக்
கூடிய சகோதரர்களையும் வசிப்பிடத்தையும் அமைத்துத் தந்துள்ளான்”. (புகாரி, முஸ்லிம்)
எனவே முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கும், அவனது
துhதருக்கும்
கட்டுப்பட்டு கூட்டம் கூட்டமாக மக்காவிலிருந்து வெளியேறிச் சென்றனர். சத்தியத்தின்
போராளியாக இருந்த நபியவர்களுக்கு மதீனாவில் ஓர் இஸ்லாமிய
சமூகத்தையும், அரசையும் உருவாக்குவதற்காக உதவும் நோக்குடன்
அவர்கள் மதீனாவில் குடியேறினார்கள்.
ஸஹாபாக்கள் மதீனாவுக்கு ஹிஜ்றத் சென்றமை
முஸ்லிம்கள் மதீனாவுக்கு தனித்தனியாகவும்
கூட்டம் கூட்டமாகவும் ஹிஜ்ரத் சென்றனர். ஸஹாபாக்களில் மதீனாவிற்கு முதலில் ஹிஜ்ரத்
செய்தவர் அபூஸலமா (றழி) அவர்கள். அதனைத் தொடர்ந்து
அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஸத் இப்னு ஹிலால் உம் ஆமிர் இப்னு
அபீ ரபீஆவும் அவரது மனைவி லைலா பின்த் ஹஸ்மா அல்அதவிய்யாவும் சென்றனர். பின்னர் அப்துல்லாஹ்
இப்னு ஜஹ்ஷ் (றழி) சென்றார். பிறகு உமர் இப்னுல்
கத்தாப் (றழி) சென்றார். அவருடன் அவரின் சகோதரர் ஸைத்
இப்னுல் கத்தாபும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஸுராகா இப்னு முஃதமர் இன்
மகன்களில் இருவரான அம்;ர், அப்துல்லாஹ் ஆகியோரும், ஹப்ஸா
(றழி) அவர்களின் கணவர் ஹுனைஸ் இப்னு ஹுதாபா அஸ்ஸுஹமியும் இன்னும்
பலரும் இணைந்து கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து எஞ்சிய ஸஹாபாக்களும்
சென்றனர். இந்த
ஹிஜ்ரத் பயணம் வரலாற்றில் ஈமானின் தனித்துவத்தையும் வீரத்தையும் பிரதிபலிக்கும்
நிகழ்வாக சான்று பகர்கின்றது.
பெண்களின் ஹிஜ்றத்
ஹிஜ்ரத் ஆண்களுடன் மாத்திரம் சுருங்கிய ஒரு நிகழ்வாக
இருக்கவில்லை அதில் பெண்களும் கலந்து கொண்டனர். அவர்கள் தமது மார்க்கத்தை ஷிர்க்கிலிருந்தும், அநீதியிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், தீமையிலிருந்தும்
பாதுகாத்துக்கொள்வதற்காகவும் புதியதொரு ஈமானிய சமூகத்தை மதீனாவில் தோற்றுவிப்பதில்
தமது பங்களிப்பை செலுத்துவதற்காகவும் மக்காவில் இருந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்
மேற்கொண்டனர். இறை திருப்தியையும் சுவனத்தையும் எதிர்பார்த்து
தமது தூதைச் சுமந்து, தம்மீதான அமானத்தை நிறைவேற்றுவதற்காக அவர்கள்
ஹிஜ்ரத் செய்தனர். இவ்வகையில் பெரும் தொகை முஸ்லிம் பெண்கள்
ஹிஜ்ரத்தில் கலந்து கொண்டனர். ஸைனப் பின்த் ஜஹ்ஷ், ஹம்னா
பின்த் ஜஹ்ஷ், உம்மு கைஸ் பின்த் முஹ்ஸின், உம்மு
ஹபீப் பின்த் ஸுமாமா, உம்மு ஸலமா போன்ற பெண்களை இங்கு
குறிப்பிடலாம். இவர்கள் தவிர்ந்த இன்னும் பல பெண்களும் இதில் கலந்து கொண்டனர். அவர்கள்
அனைவரும் இறை பாதையில் தியாகத்திற்கும் அர்ப்பணத்திற்கும் பொறுமைக்கும்
முன்னுதாரணமாய் திகழ்ந்தனர்.
ஹிஜ்றத்தில் நிகழ்ந்த அதிசயங்கள்
மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வது
முஃமீன்களுக்கு இலகுவான காரியமாக இருக்கவில்லை. அது உள்ளத்துக்கு உவப்பான
செயலாகவும் காணப்படவில்லை. முஸ்லிம்கள் தமது வீடுவாசல்களையும் சொத்துக்களையும்
குடும்பத்தினரையும் விட்டுவிட்டு, தம்மையும் கணக்கில் கொள்ளாது அல்லாஹ்வையும்
அவனது துhதரையும்
இந்த உலகில் உள்ள அனைத்து சொத்துக்களையும் விட மேலாகக் கருதிச் சென்றார்கள்.
இவற்றை அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காக விலையாகக் கொடுத்தார்கள். “தமது வீடு
வாசல்களையும் சொத்துக்களையும் விட்டு வெளியேற்றப்பட்ட முஹாஜிர்களான ஏழைகள்
அல்லாஹ்வின் அருளையும் அவனது திருப்தியையும் எதிர்பார்க்கின்றனர். அவர்கள்
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உதவி புரிகின்றனர். அவர்கள்தான்
உண்மையாளர்கள்”. (அல்-ஹஷ்ர் : 08) அவர்கள் வெளியேறிச் சென்றபோது முஷ்ரிக்குகள்
அவர்களை எல்லா இடங்களிலும் பின்தொடர்ந்து, தாக்குவதற்காக எதிர்ப்பார்த்துக்
கொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட இடத்தில் பிடித்து
மக்காவிற்கு திருப்பி அனுப்புவதற்காக அல்லது அவர்களை தாக்குவதற்காக அல்லது அவர்களது
கையில் காணப்பட்ட உடமைகளையும், சொத்துக்களையும் அபகரிப்பதற்காக
முஷ்ரிக்குகள் காத்திருந்தனர். எனினும், அவர்கள் கண்ணியமான, வீரமிக்க
பெரும் போராளிகளாகச் சென்றனர். “அவர்களில் துன்பத்திற்குட்பட்டு, ஹிஜ்ரத்
செய்து, போராடி, பொறுமையுடன்; இருந்தவர்களுக்கு
அல்லாஹ் இருக்கின்றான். உமது இறைவன் அதற்குப் பின்னரும் மன்னிப்பவனாகவும்
அன்புடையோனாகவும் இருக்கின்றான்”. (அந்நஹ்ல் :110)
ஸுஹைப் (றழி) அவர்களின் ஹிஜ்ரத்
ஸுஹைப் (றழி) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத்
மேற்கொண்ட போது அவரைப் பின்தொடர்ந்து சென்ற முஷ்ரிக்குகள் அவரின் அம்புப் பையை
பறித்து சிதறடித்தனர். அதனைப் பார்த்த ஸுஹைப் (றழி) அவர்கள் :
“குறைஷியரே! உங்களுக்குத் தெரியும். நான் உங்களிலேயே சிறந்த முறையில்
அம்பெய்தக்கூடியவன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் என்னைப்பிடிக்க வந்தால்
என்னிடம் இருக்கின்ற அம்புகள் நிறைவுறும் வரை உங்கள் மீது ஏய்வேன். பின்னர், எனது
கையில் ஏதாவது மீதம் இருக்கும் வரையில் எனது வாளைக் கொண்டும் போராடுவேன்” என்றார். இதனைக்கேட்ட
குறைஷியர் : “நீர்
எங்களிடம் ஒன்றுக்கும் வக்கில்லாமல் இழிவான
நிலையில் வந்தாய். எங்களிடம் வந்த பின்னர்தான் உனது செல்வத்தை பெருக்கிக் கொண்டாய்.
எம்மோடிருந்து நீர் அடைய வேண்டியவற்றை அடைந்து கொண்டாய். பின்னர் நீர் உனது
சொத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு வெளியேறப் பார்க்கின்றாய். அல்லாஹ்வின் மீது
ஆணையாக! அது ஒரு போதும் நடக்காது” என்றனர். அதற்கு ஸுஹைப் (றழி) அவர்கள் : “எனது
சொத்துக்களையெல்லாம் உங்களுக்குக் கொடுத்துவிட்டால்,
நீங்கள் என்னை விட்டு விடுவீர்களா?” என்று வினவினார். அவர்கள் : “நீ எங்களுக்கு உனது சொத்தைக்
காட்டித்தந்தால் நாம் உம்மை விட்டு விடுகிறோம்” என்றனர். பிறகு
அவர்கள் அதற்காக ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். பின்னர் ஸுஹைப்
(றழி) அவர்கள் தனது சொத்துக்களைக் கொடுத்து விட்டு றஸுல் (ஸல்) அவர்களுடன் போய்ச்
சேர்ந்து கொண்டார்கள். அவரைப் பார்த்து நபியவர்கள் : “அபூ யஹ்யாவின் வியாபாரம்
இலாபமடைந்து விட்;டது” என்றார்கள். அல்லாஹ் அவர் தொடர்பாக
பின்வரும் வசனத்தை இறக்கினான். “மனிதர்களில் சிலர் அல்லாஹ்வின்
திருப்தியை நாடி தன்னை விற்பனை செய்பவர்களாக இருக்கின்றார்கள். அல்லாஹ் அடியார்கள்
மீது இரக்கமுடையவன்”. (ஸூறதுல் பகறா : 207)
(உஸுதுல்
ஃகாபா)
ஸுஹைப் (றழி) அவர்களின் வீரமும் பலமும்
எப்படி என்பதைப்பாருங்கள் : அவர் தனது ஈமானாலும், அச்சமற்ற
தன்மையாலும் ஒரு பெரும் தொகையினரை எப்படி பயங்காட்டினார். மக்காவிலே
நீண்ட பல வருடங்களாக வியர்வை சிந்தி, களைப்;புற்று, கடின உழைப்பினால் சேர்த்த
சொத்துக்களையெல்லாம் எவ்வாறு தியாகம் செய்தார். இவை அல்லாஹ்வின் பாதையில் செய்யப்பட்ட
தியாகங்களே தவிர வேறு இல்லை. இவை இஸ்லாமிய தஃவாப் பாதையில் அவர் செய்த
தியாகங்கள். தன்னை நிராகரிப்பிலும் அநீதியிலும் வழிகேட்டிலும் இருந்து
காப்பாற்றிக் கொள்வதற்காகக் கொடுத்த விலைகள். தனது பணியை சிறந்த முறையில்
நிறைவேற்றியவருடைய கூலியை அல்லாஹ் வீணாக்குவானா?
என்றால் நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம்.
ஆயிரம் தடவை இல்லை என்று சொல்லலாம். ஏனெனில், அல்லாஹ் தனது அடியார்கள் மீது இரக்கமுடையவன்.
அவன் நல்லடியார்களின் கூலியை வீணாக்கவே மாட்டான்.
அபூ ஸலமா (றழி) அவர்களதும், அவரது மனைவியினதும் ஹிஜ்றத்
அபூ ஸலமா (றழி) அவர்களும் அவரது மனைவியும், மகனும்
மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்காக ஆயத்தமானபோது, அவரது மனைவியின் குடும்பத்தார் அவரைப்பார்த்து
: “நீ உமது விருப்பத்தால் எம்மை விட மேலானவனாகப் பார்க்கின்றாய். எமது இந்தப்
பெண்ணைக் கூட்டிக்கொண்டு நாம் உம்மை வேறு இடத்திற்கு போக விடுவோமா?” என்று கேட்டனர். பின்னர் அவர்கள்
அவரது மனைவியையும் மகனையும் அவரிடமிருந்து பறித்துக்கொண்டனர். இதனால்
அபூ ஸலமாவின் குடும்பத்தார் அவரது மனைவியின் குடும்பத்தாருடன்
கோபங்கொண்டு “நீங்கள் எங்கள் மகனிடமிருந்து உங்களது பெண்ணை பிரித்து எடுத்ததால்
நாம் எமது பிள்ளையை அவருடன் விட்டுவிட மாட்டோம்” என்றனர். பின்னர் அபூ
ஸலமா (றழி) அவர்களின் மகன் அவர்களுக்கிடையில் இழுபறிக்குட்பட்டு ஈற்றில் அபூ
ஸலமாவின் குடும்பத்தார் அவரின் மகனைப் பறித்துச் சென்றனர். பின்னர் அபூ
ஸலமா மாத்திரம் மதீனாவுக்கு சென்றார். அதன் பின்னர் தனது
கணவனையும் மகனையும் இழந்த உம்மு ஸலமா (றழி) அவர்கள் கிட்டதட்ட ஒரு வருடகாலம் ஒவ்வோர் நாள்
காலையிலும் மக்காவிற்கும் மினாவிற்கும் இடையே இருந்த “அப்தஹ்” என்ற இடத்திற்குப்
போய் அழுது புலம்பியவாறு காலம் கழித்தார்.
இந்நிலையைக் கண்டு மனமிழகிய உம்மு ஸலமாவின்
குடும்ப உறவினர்களில் ஒருவர் அவரது குடும்பத்தாரிடம் : “நீங்கள் இந்த
அபலையைச் செல்ல விடக்கூடாதா? அவளைவிட்டும் அவளது கணவரையும் பிள்ளையையும்
பிரித்துவிட்டீர்களே” என்றார்.
பின்னர் நிகழ்ந்தவற்றை
உம்மு ஸலமா (றழி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் : அவர்கள் “நீ விரும்பினால் போய்
உனது கணவருடன் சேர்ந்து கொள்ளலாம்” என்றனர். அதன் பின்னர் பனு
அப்துல் அஸத் கோத்திரத்தார் எனது மகனை என்னிடம் திருப்பி ஒப்படைத்தனர். நான்
எனது மகனை எடுத்து எனது மடியில் வைத்துக் கொண்டு எனது ஒட்டகையில் ஏறி மதீனாவில்
இருந்த எனது கணவரைச் சந்திக்கச் சென்றேன். பிரயாணத்தில் என்னுடன் வேறு எவரும்
இருக்கவில்லை. நான் “தன்ஈம்” என்ற இடத்தை தாண்டிச் செல்லும் போது, பனூ
அப்துத் தார் கோத்திரத்தாரின் சகோதரர் உஸ்மான்
இப்னு தல்ஹாவை சந்தித்தேன். அவர் என்னிடம் “அபூ உமையாவின் மகளே! நீ எங்கே
செல்கின்றாய்?” எனக்கேட்டார்.
நான் “மதீனாவில் உள்ள எனது கணவரை
தேடிச்செல்கிறேன்” என்றேன். அதற்கு அவர் : “உம்முடன் யாரும் துணை இல்லையா?” எனக் கேட்டார். அதற்கு நான் “இல்லை அல்லாஹ்வின் மீது ஆணையாக!
அல்லாஹ்வையும் எனது இந்த மகனையும் தவிர என்னுடன் வேறு எவரும் கிடையாது” என்றேன்.
அதனைக்கேட்ட அவர் : “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உம்மை தனியே
போக விடமாட்டேன்” என்று கூறிவிட்டு எனது ஒட்டகையின் கடிவாளத்தைப்பிடித்து
இழுத்துக் கொண்டு என்னுடன் துணையாக வந்தார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவரைப் போன்ற
கண்ணியமான ஒரு அரபு மனிதருடன் துணையாகச் சென்றது கிடையாது. அவர் என்னை
மதீனாவில் விட்டுவிட்டு மக்காவிற்கு திரும்பிச் சென்றுவிட்டார்.
ஒரு முஃமினின் உள்ளத்தில் ஈமான் எத்தகைய
மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் பாருங்கள். அகீதா எப்படி எல்லாவிடயங்களிலும்
மிகைக்கும் என்பதைப் பாருங்கள். அல்லாஹ்வின் திருப்தியையும் கூலியையும் எதிர்பார்த்து
சொத்துக்களையும் குடும்பத்தையும் பிள்ளையையும் தியாகம் செய்யும் மனப்பாங்கை அகீதா
ஏற்படுத்துவதைக் காணலாம். ஈமான் துன்பங்களை எப்படி மிகைக்கிறது?. மலைகளை எப்படி உலுக்குகின்றது, தடைகளை எப்படி தாண்டுகிறது என்பதனை இங்கு
விளங்கலாம். இவற்றை தெய்வீக வழிகாட்டலின் ஒளியைப் பெற்ற கொள்கைவாதிகளான முஃமின்களைத்தவிர
வேறு எவராலும் தாங்கிக்கொள்ள முடியாது. அக்கொள்கைவாதிகள் தங்களுக்கிடையே
சத்தியத்தையும் பொறுமையையும் பரஸ்பரம் ஏவிக்கொள்கின்றனர். அவர்களே
அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை உண்மைப்படுத்துகின்றனர். அவர்களில்
சிலர் அதற்காக தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இன்னும்
சிலர் அதனை எதிர்ப்பார்திருக்கின்றனர். அதனை
எதனாலும் மாற்றமுடியாது.
ஹிஜ்றத் தொடர்பாக முஷ்ரிகீன்களின் அச்சம்
முஸ்லிம்கள் ஹிஜ்ரத் சென்;று
மதீனாவில் ஒன்று குவிவதும் அவர்களின் தஃவா அங்கு மேலோங்குவதும் முஷ்ரிகீன்களின்
உள்ளத்தில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்களின் மூளையில் மறைந்திருந்த
தீமையின் தூண்டுதலும், குரோதத்தின் உந்துதலும் அலை மோதின. குறிப்பாக
றஸுல் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் போய் இணைந்துகொள்வது நிச்சயமாகும். அப்படி
நிகழ்ந்தால் முஸ்லிம்கள் மதீனாவில் ஒரு சக்தியாக மாறுவர். அது
முஷ்ரிக்குகளை அச்சுறுத்துவதாக அமையும். ஏனெனில்,
குறைஷியர் ஷாமுக்குச்
செல்லும் வியாபாரப் பாதையிலேயே மதீனா காணப்படுகிறது. குறைஷியரின் வாழ்வாதாரம்
வியாபாரத்திலேயே தங்கியிருந்தது. அவர்களது வியாபாரத் தொடர்புகள் துண்டிக்கப்படுவது
அவர்களது வாழ்வாதாரம் துண்டிக்கப்படுவதற்கு அல்லது தமது நாடி நரம்புகளுக்கு
செலுத்தப்படும் இரத்தம் துண்டிக்கப்படுவதற்குச் சமனானதாகும். முஷ்ரிக்குகள், முஸ்லிம்களின்
சொத்துக்களை பறித்து, அவர்களைத் துன்புறுத்தி
இருப்பிடங்களிலிருந்து அவர்களை துரத்தியடித்தமையினால், அவர்கள்
தம்மை பழிவாங்குவார்கள் என அவர்கள் அச்சம் கொண்டனர்.
றஸுல் (ஸல்) அவர்கள் ஹிஜ்றத்திற்குத் தயாராகுதல்
மக்காவில் இருந்து முஸ்லிம்கள் கூட்டம்
கூட்டமாகவும், தனித்தனியாகவும் ஹிஜ்ரத் செய்தனர். அதனால்
மக்காவில் முஸ்லிம்கள் யாரும் இல்லை என்ற நிலை உருவானது. இதனைக் கண்ட குறைஷியர் இஸ்லாத்திற்கென
ஒரு தேசமும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதெற்கென ஒரு கோட்டையும் உருவாகிவிட்டதாக உணர்ந்தனர். ஏனெனில், மதீனாவுக்குச்
சென்ற முஸ்லிம்களை அங்கிருந்த அன்ஸாரிகள் அன்போடும்,
ஆதரவோடும் அரவணைத்துக் கொண்டனர். இதனையடுத்து
றஸுல் (ஸல்) அவர்களும் ஹிஜ்ரத் செய்வதற்கு சிந்தித்தார்கள். அல்லாஹ்வின் அனுமதி
கிடைக்கும் வரை அவர்கள் அதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
தயார் செய்தல் வெற்றிக்கான அல்லாஹ்வின் (சுனன்)
நியதிகளில் ஒன்றாகும்
அல்லாஹ்வின் தூதர்களை விட அல்லாஹ்வின்
உதவியையும் வெற்றியையும் பெறுவதற்கு தகுதியான மனிதர்கள் வேறு எவரும்
இருக்கமுடியாது. ஏனெனில், அவர்கள்தான் நேர்வழி கொடுத்து அனுப்பப்பட்டவர்கள்.
அந்நேர்வழியை எத்திவைப்பதில் அவர்கள் மிகப்பெரும் துன்பங்களை எதிர் கொண்டனர். எனினும்
அவர்களையும் காரணகாரியங்களை கைக்கொள்ளுமாறு அல்லாஹ் வேண்டிக்கொண்டான். ஏனெனில், அல்லாஹ்வின்
உதவியும் வெற்றியும் தமது நோக்கை அடைவதற்கான காரணிகளைக் கைக்கொள்வதில் முழு
ஈடுபாடு காட்டாமல், தமக்குத் தேவையானதை அடைவதற்கான பூரணமான
வழிமுறைகளைக் கையாளாமல் கிடைக்கப் பெறுவதில்லை.
எனவேதான், றஸுல் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்திற்கான தனது
திட்டமிடலை சிறப்பாகச் செய்தார்கள். அதற்குத் தேவையான அனைத்து சாதனங்களையும் தயார் செய்தார்கள்.
அவர் தனது நடவடிக்கைகளில் நடப்பவை நடக்கட்டும் என
கண்ணை மூடிக்கொண்டு விட்டுவிடவில்லை. உண்மையில் ஒரு முஃமினின் பண்பு இதுதான். அவன்
தனது காரியங்கள் அனைத்திற்கும் தேவையான விடயங்களை மேற்கொள்வான். அவன் தனது கடமையை
நிறைவேற்றுவதற்காக முழு சக்தியையும் செலவிட்டு பின்னர் அல்லாஹ்வின்
மீது தவக்குல் வைப்பான். அதன் பின்னர் அவன் தோல்வியுற்றால் நிகழ்ந்தவற்றிற்காக
அல்லாஹ் அவனைக் கண்டிக்கமாட்டான்.
“நீங்கள்
உங்களால் முடிந்தவரை பலத்தையும் குதிரைப்படைகளையும் அவர்களுக்கெதிராக தயார் படுத்துங்கள்”.
(அன்பால் : 60)
“ஈமான் கொண்டவர்களே நீங்கள் எச்சரிக்கையாக
இருங்கள். நீங்கள் சிறு சிறு கூட்டங்களாகவோ அல்லது அனைவரும் ஒன்றிணைந்தோ
போராட்டத்துக்குச் செல்லுங்கள்”. (அந்நிஸா : 71)
நபிமார்களின் ஹிஜ்றத்
எல்லா நபிமார்களையும் அவர்களது சமூகத்தார் எதிர்த்துள்ளனர். அவர்கள்
வாழ்ந்த தேசம் அவர்களை வெளியேற்றியுள்ளது. அவர்களின் கோத்திரத்தார் அவர்களை
விரட்டியுள்ளனர். எனவே அவர்கள் தமது சொந்த இடங்களை விட்டு
ஹிஜ்ரத் மேற்கொண்டனர். அப்போது ஏற்பட்ட தடைகள் சிரமங்கள்
அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொண்டனர். நபிமார்களின் தந்தையான இப்றாஹீம் (அலை) அர்கள்
ஈராக்கிலிருந்து பலஸ்தீனுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்.
அவருடன் அவரின் மனைவி ஸாராவும், அவருடைய
சகோதரரின் மகன் லுhத் (அலை) அர்களும் சென்றனர். இதுதொடர்பாக
அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் “அவரை லுhத் (அலை) ஈமான் கொண்டார். அவரிடம்
இப்ராஹீம் (அலை) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : “நான் என் இறைவனுக்காக ஹிஜ்ரத்
செய்கின்றேன். அவன் மிகப்பலம் கொண்டவன், ஞானமுள்ளவன்”. (அல்-அன்கபூத் : 26)
“ஷுஐப் நபியின் சமூகத்தில் காணப்பட்ட கர்வம்
கொண்ட பிரமுகர்கள் அவரிடம் : ‘ஷுஐபே! நாம் உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டிருப்பவர்களையும்
எமது ஊரிலிருந்து விரட்டிவிடுவோம் அல்லது நீங்கள் எங்களது மார்க்கத்திற்கு
திரும்பவேண்டும்’ என்றனர். அதற்கு ஷுஐப் நபி அவர்களிடம் ‘நாம் அதனை வெறுத்தபோதிலுமா?’ எனக்கேட்டார்”. (அல்-அஃராப்:88)
மூஸா (அலை) அவர்கள் தன்னைக் கொலை செய்வதற்காக
மேற்கொள்ளப்பட்ட மோசமான சூழ்ச்சியிலிருந்து தப்பித்து மத்யனுக்கு ஹிஜ்ரத் செய்தார். “நகரத்தின் தொலை துhரத்திலிருந்து ஒருமனிதர் வந்து, ‘மூஸாவே! சமூகப் பிரமுகர்கள் உம்மைக் கொலை செய்ய சூழ்ச்சி செய்கின்றனர். எனவே, நீர் இங்கிருந்து
வெளியேறிச் சென்றுவிடும். நான் உமக்கு உபதேசிக்கின்றவனாய் இருக்கின்றேன்’ என்றார். எனவே
அவர் தனக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்ற
அச்சத்துடன் வெளியேறிச் சென்று ‘எனது இறைவனே அநியாயக்கார சமூகத்திடம் இருந்து
என்னைப்பாதுகாப்பாயாக’ என்றும் பிரார்த்தித்தார்”.
(அல்-கஸஸ் : 20-21)
யூதர்கள் ஈஸாஅலை அவர்களை பொய்ப்பித்து அவரை
கொலை செய்ய முயற்சித்ததால் அவர்களிடம் இருந்து ஈஸா (அலை) அவர்கள் தப்பித்துச்
சென்றார்.
அந்தவகையில் எமது தூதர் முஹம்மத்
(ஸல்) அவர்கள் தனது தூதை எத்திவைக்க முடியாமல் தடுக்கப்பட்டு, அவரை
கொலை செய்ய சூழ்ச்சி செய்த பிரதேசத்தில் இருந்தும் ஹிஜ்ரத் செய்தமை அதிசயமான ஒரு
விடயமல்ல. “முன்னர் சென்றவர்களில் நடைமுறையாகிய அல்லாஹ்வின்
நியதி இதுதான். அல்லாஹ்வின் நியதியில் எவ்வித மாற்றத்தையம் நீங்கள் காணமாட்டீர்கள்”.
(அல்-அஹ்ஸாப் : 62)
ஹிஜ்றத் என்பது ஒரு மானுஷ்யப் பயணம் அது ஒரு தெய்வீக
அற்புதமல்ல
றஸுல் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து
மதீனாவுக்குச் சென்ற ஹிஜ்ரத் மனித இயல்புக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு
மானுஷ்யப் பயணம். ஒரு நபி மேற்கொண்ட போராட்ட வியூகம். றஸுல் (ஸல்) அவர்களை
முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்ற முனையும் இஸ்லாமிய ஊழியர்களுக்கும், போராளிகளுக்கும்
ஒரு நடைமுறைப் பாடமாக இது அமைந்து காணப்பட்டது. நபியவர்களின் ஹிஜ்ரத், இஸ்ரா
மிஃராஜ் போன்ற ஒரு அற்புதப் பயணமாக அமையவில்லை. மாற்றமாக இது ஒரு போராட்ட வியூகம்.
ஒரு முன்மாதிரி. போராட்டத்திற்கும் செயற்பாட்டிற்குமான பாதை. சத்தியப்பாதையில்
எவ்வாறு பொறுமையாக இருப்பது, தியாகம் செய்வது, திடசங்கற்பம்
பூணுவது என்பதற்கான பாடம். நல்லவற்றிலிருந்து தீயவற்றை வேறுபடுத்தி அறிவதற்கும், போராளிகளையும்
போராட்டத்திற்கு செல்லாமல் இருப்பவர்களையும் பிரித்தறிவதற்குமுரிய பரீட்சை. “மனிதர்கள்
தாம் ஈமான் கொண்டோம் என்று சொல்லிவிட்டால் சோதிக்கப்படாமல் விட்டு விடப் படுவோம்
என எண்ணியிருக்கின்றார்களா? நாம் அவர்களுக்கு முன்பு இருந்தவர்களைக் கூட
அவர்களில் உண்மையாளர்களையும் பொய்யர்களையும் அறிந்து கொள்வதற்காக சோதித்தோம்”.
(அல்-அன்கபூத் : 2-3)
பாடங்களும் படிப்பினைகளும்
01. அல்லாஹ்வுக்கு துhய்மையாக கட்டுப்பட்டு வாழும் ஒரு முஸ்லிம்
தனது தேசத்தையோ சொத்துக்களையோ பொருட்படுத்தமாட்டான். ஏனெனில் அவை அனைத்தையும் அவன்
அல்லாஹ்வின் பாதையில், அவனது மார்க்கத்திற்கு உதவும் பாதையில்
தியாகம் செய்வான்.
02. முஸ்லிம்கள் வேதனைகளையும் கஷ்டங்களையும்
தாங்கிக் கொள்ளுதல் என்ற சோதனையிலிருந்து சொத்துக்களையும் பிள்ளைகளையும் தமது
தேசத்தையும் விட்டுச் செல்லல் என்ற சோதனையை நோக்கிச்சென்றார்கள். ஆனால்,
அவர்கள் இரு சோதனைகளிலும் வெற்றி பெற்றார்கள்.
03. றஸுல் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி
முஸ்லிம்கள் அனைவரும் மதீனாவை நோக்கிச் சென்றனர். இது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும்
கட்டுப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பயணமாகும். அதே போன்று இப்பயணத்திற்கு ஹிஜ்ரத்துக்கு
முன்னர் நபியவர்கள் கண்ட கனவும் காரணமாய் அமைந்தது.
04. மதீனா வாசிகள், பெரும் திரளாக தம்மிடம் வந்த முஹாஜிர்களை
சிறந்;த முறையில் வரவேற்று சகோதரத்துவத்தோடும்
விட்டுக் கொடுப்போடும் நடந்து கொண்டனர். றஸுல் (ஸல்) அவர்கள் மதீனாவை வந்தடைய முன்னரே
மதீனாவாசிகள் இவ்விடயங்களில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தனர்.
அவர்கள்தான் இஸ்லாமிய அரசின் அத்திவாரமாக
அமைந்தனர்.
05. ஒரு தாஈ தன் மீதான அநியாயம் மிகைத்து
தனக்கும் தனது தஃவாவுக்கும் அழிவு நிகழும் எனப் பயந்தால் அவன் தான் வாழும்
இடத்தைவிட்டு ஹிஜ்ரத் செய்வது கடமையாகும்.
06. ஒரு முஸ்லிம் சக முஸ்லிமுக்கு உதவுவது கடமையாகும்.
இது அவர்களுக்கிடையே இனரீதியான, குலரீதியான, இடரீதியான எத்தகைய வேறுபாடுகள்
காணப்பட்டபோதிலும் இடம் பெறவேண்டிய ஒரு கடமையாகும்.
07. கைதிகள், பலவீனர்கள் போன்றோரை விடுதலை செய்வதற்காகவும்
அவர்களை அநியாயக்காரர்கள், அடக்கு முறையாளர்களின் கரங்களிலிருந்து காப்பாற்றுவதற்காகவும்
செயற்படவேண்டும். அவர்கள் எந்த இடத்தில் எந்த நாட்டில் இருந்த போதிலும் அதற்காக
முடியுமான அனைத்து வழிமுறைகளையும், சட்டங்களையும், சொத்துக்களையும்,
அதிகாரத்தையும் பயன்படுத்தவேண்டும்.
08. முஸ்லிம்கள் தமக்கிடையே விசுவாசமாய் நடந்து
கொள்வது கட்டாயக் கடமையாகும். பிறருடன் அவ்வாறு நடந்து கொள்வது கூடாது.
09. ஸஹாபாக்கள் தாம் முஷ்ரிக்குகளிடமிருந்து
பெரும் துன்பங்களை எதிர் கொள்ளாமல் எவ்வாறு பாதுகாப்பாக ஹிஜ்ரத் செய்யலாம்
என்பதற்கான அனைத்து வழிமுறைகளையும், வாய்;ப்புக்களையும் பயன்படுத்தினர்.
10. இஸ்லாமிய தஃவாவிலும்,
அரசிலும் பெண்களுக்கு உரிய அந்தஸ்த்துக்
காணப்படுகிறது. ஏனெனில், அவர்கள் ஹிஜ்ரத்தின் போது பெரும்
முன்னுதாரணமாகத் திகழ்ந்தனர்.
11. ஸுஹைப் ரூமி (றழி) அவர்கள் தனது மார்க்கத்திற்காக
ஹிஜ்ரத் செய்தபோது சொத்துக்களை தியாகம் செய்வதில் ஒரு சிறந்த நடைமுறை
முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்.
12. உம்மு ஸலமா (றழி) அவர்கள் தனது ஈமானின் மூலம்
சொத்துக்கள் குடும்பம் பிள்ளைகள் அனைத்தையும் இறைதிருப்தியை நாடி மிகைத்துவிடுகிறார்.
13. முஷ்ரிக்குகள் எப்போதும் எல்லா இடங்களிலும்
முஸ்லிம்களை அமைதியாக இருக்கவிடுவதில்லை. அவர்கள் எப்போதும் முஸ்லிம்களை பின் தொடர்ந்து
கொண்டே இருப்பர்.
14. ஒரு சிறந்த தலைமைத்துவத்தின் பண்பாக தயார்படுத்தலும்
திட்டமிடலும் காணப்படும். அந்தத் தலைமை எப்போதும் எல்லா விடயங்களையும் தனது
கணிப்பில் வைத்திருப்பதோடு, குறைந்த இழப்போடு இலக்கை அடைந்து கொள்வதற்காக
செயற்படும்.
15. றஸுல் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் அவருக்கு
முன்பிருந்த நபிமார்களின் ஹிஜ்ரத்தின் தொடராகவே இருந்தது.
16. ஹிஜ்ரத் என்பது முஜாஹிதீன்களையும்,
போராட்டத்திலிருந்து பின்வாங்குபவர்களையும்
பிரித்தறிந்து கொள்வதற்காக இடம்பெறும் ஒரு பரீட்சை. தியாகம் செலவழித்தல் பற்றிய ஓர் பாடம். செயற்களம் எவ்வாறு என்பது பற்றிய ஒரு
பயிற்றுவித்தல். பொறுமை, நிலைத்திருத்தல தொடர்பான ஒரு படிப்பினை.
17. ஹிஜ்ரத் என்பது றஸுல் (ஸல்) அவர்களை
பின்பற்றுகின்ற முஜாஹித்களுக்கான ஒரு செயல் ரீதியான முன்மாதிரி. அது இஸ்ரா மிஃராஜ்
போன்ற ஒரு அற்புதமாக அல்லாமல் மனிதனின் சக்திக்குட்பட்;ட பௌதீக செயற்பாடாகவே காணப்படுகின்றது.
18. உமர் (றழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமை
முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றியாகவும் உதவியாகவும் காணப்;பட்டது. அவரின் ஹிஜ்ரத்தும் அவ்வாறே
அமைந்தது.
19. சோதனையிலும் கஷ்டத்திலும் பயிற்றுவிக்கப்பட்ட
முஸ்லிம்கள், அல்லாஹ்வின் பாதையில் துன்புறுத்தலுக்கும்
சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு அதில் பொறுமை காத்து இஸ்லாமிய அரசொன்றை
உருவாக்குவதற்காக இறை திருப்தியை நாடி ஹிஜ்றத் செய்தனர்.
அந்த இஸ்லாமிய அரசு பூமிவாழ் மாந்தர் அனைவருக்கும் இஸ்லாமிய நாகரிகத்தின்
பெறுமானங்களை பரப்பும் என அவர்கள் சிந்தித்ததால் இத்தகைய தியாகங்களை மேற்கொண்டனர்.
20. ஒரு முஸ்லிம் தனிமனிதனோ சமூகமோ தமக்கென்றோரு
இஸ்லாமிய அரசு காணப்படாதபோது தமது பணியை நிறைவேற்றவோ,
உலகிற்கு ஒழுக்க பண்பாட்டுப் பெறுமானங்களை
முன்வைக்கவோ, இஸ்லாமிய ஒழுங்குகளை யதார்த்தங்களை
முன்வைக்கவோ முடியாது. எனவேதான், ஒரு முஸ்லிம் இஸ்லாமிய அரசொன்றை நிறுவுவதற்காக
செயற்படுவான். அந்த அரசு தன்னைப் பாதுகாக்கும், தனது பணியை செய்வதற்கு தடையாக அமையும்
காரணங்களை நீக்கிவிடும் என அவன் நம்புகின்றான்.
21. றஸுல் (ஸல்) அவர்கள் தனது தோழர்களின்
இயலுமைகள் பொருத்தமற்ற இடத்தில், இது வரை தயார்படுத்தப்படாத பூமியில் வீணடிக்கப்படக்கூடாது
என்பதில் கவனமாக இருந்தார்கள். எனவே, அந்த இயலுமைகளை பொருத்தமான இடத்தில்
பொருத்தமான காலப்பகுதியில் பயன்படுத்திக்கொண்டார்கள்.
No comments:
Post a Comment