Monday, April 11, 2016

குடும்பத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயம்-எம்.என்.இக்ராம்


கடந்த 2016.04.03 முதல் 06 வரை துருக்கியின் தலை நகர் இஸ்தான்பூலில் சர்வதேச ரீதியாக குடும்ப வாழ்வை ஒழுங்கு படுத்தி பாதுகாக்கும் நோக்கில் ஒரு சாசனத்தை வரைவதற்கான சர்வதேச மாநாடு ஒன்று இடம் பெற்றது.இதனை சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியமும் இஸ்லாமிய நாடுகளின் தொண்டு நிறுவனங்களின் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.இதில் தலை சிறந்த அறிஞர்களது குடும்ப வாழ்வு சம்பந்தமான பல்வேறு ஆய்வுகளும் கலந்துரையாடப்பட்டு இறுதியாக குடுமப விவகாரங்களை ஒழுங்கு படுத்தும் நோக்கில் ஒரு சர்வதேச சாசனமும் வெளியிடப்பட்டது.
இந்த சாசனம் 1979 டிசம்பரில் .நாவால் முன்வைக்கப்பட்டCEDAW(Convention on the Elimination of all forms of Discrimination against Women-பெண்களுக்கெதிரான அனைத்துவிதமான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சமவாயம்) என்ற பெண் சமத்துவம் குறித்து வழியுருத்தும் உடன்படிக்கைக்கு சமானமான ஒன்றாகக் கருதப்படுகிறது. CEDAW குடும்ப ஒழுங்கை தகர்த்தெரியும் பல்வேறு எதிர்மறை விடயங்களை உள்ளடக்கியுள்ளது.இதில்  189 நாடுகள் கைச்சாத்திட்டு,அதன் திட்டங்களுக்கு ஒப்புதல வழங்கியுள்ளன.அதில் எமது நாடு உட்பட அறபு இஸ்லாமிய நாடுகளும் உள்ளடங்குகின்றன.அதன் எதிர்மறைப் பாதிப்பை நாம் எமது நாடு உட்பட சர்வதேச அளவில் எதிர் கொண்டு வருகின்றோம்.தன்னினச் சேர்க்கையை சட்ட பூர்வமாக்கள்,விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கள்,திருமணத்திற்காக வயது வரையறைகளை ஏற்படுத்தல்....என குடும்ப வாழ்வை தகர்த்தெரியும் பல அம்சங்களை சட்ட பூர்வமாக அரசுகளை செய்வதற்காக நிரப்பந்திக்கும் ஒரு ஒபபந்தமாக CEDAWகாணப்படுகிறது
அந்த வகையில் குடும்ப வாழ்வை பாதுகாப்பதற்கான இந்த சாசனம் அல்லது ஒப்பந்தம் CEDAW விற்கு பகரமான ஒன்றாக உலக அளவில் . உட்பட சர்வதேச நிறுவனங்கள்,நாடுகளிடம் முன்வைக்கப்பட இருக்கின்றது.இதன் உள்ளடக்கத்தை இங்கு தருகின்றோம்.
குடும்ப சமவாயம்
அறிமுகம்
            குடும்பம்தான் மனித உருவாக்கத்தின்,மனித இனத்தின் நீட்சியினதும் நிலை பேரினதும் ஆரம்ப காப்பிடமாக காணப்படுகிறது.இன்றைய மனித சமூகம் குடும்ப கட்டமைப்பை சிதைவிழிருந்தும் அழிவிலிருந்தும் பாதுகாப்பதற்கும் உயர் விழுமியங்களை விதைப்பதற்குமான பலமான தேவையை கொண்டிருக்கிறது.
            எமது இன்றைய காலப்பகுதியில் குடும்பமானது எல்லா மட்டங்களிலும் பாரியளவிலான ஆபத்துக்களுக்கு உட்படு வருகிறது,பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்து வருகிறது.அவற்றின் காரணமாக குடும்பக் கட்டமைப்பு உடைவை சந்தித்து வருகிறது.
            மனிதர்களுக்கிடையே காணப்படும் கலாச்சார ரீதியான,நாகரிக ரீதியான தொடர்புகளின் இடைவினையின் காரணமாகவும்,சர்வதேச ரீதியான உடன்படிக்கைகள்,சமவாயங்கள் வாயிலாக ஏற்படுத்திக் கொள்ளப்படும் சட்ட ரீதியான பிணைப்புக்களின் காரணமாகவும் மனித சமூகத்தில் அவற்றின் எதிர்மறையான பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.இவற்றிடையே,குடும்ப நிறுவனத்தை உயர்வாகக் கருதும் மார்க்க போதனைகளை கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகமும் பாரிய பாதிப்புக்களுக்கு உட்பட்டு வருகின்றது.இஸ்லாத்தின் மார்க்கப் போதனைகள் குடும்பத்தின் பலத்தையும்,செயற்திறனையும் பாதுகாக்கும் வகையில்,ஒழுக்க விழுமியங்களையும்,சட்ட அடிப்படைகளையும் கொண்டமைந்துள்ளன.
            இந்த சமவாயம்  மானிட இயல்போடும்,இஸ்லாமிய ஷரீஆ போதனைகள் உறுதிப்படுத்திய அனைத்து இறை வேதங்களதும் போதனைகளுடனும் உடன்படுகின்ற பொது அடிப்படைகளை அத்திவாரமாகக் கொண்டு அமைந்திருக்கிறது.இவை கலாச்சாரப் பல்வகைமையை அங்கீகரிக்கும் .நா வின சமவாயத்துக்கு ஏற்புடைய அமைப்பில் அமைந்து காணப்படுகிறது.
முதற் பிரிவு: குடும்பம் பற்றிய வரைவிலக்கணமும் அதன் நோக்கங்களும்
1.   முதலாம் விதி:
குடும்பம் பற்றிய வரைவிலக்கணம் :குடும்பம் என்பது ஒரு ஆணையும் பெண்ணையும் கொண்டமைந்த ஒரு சமூக நிறுவனமாகும்.இது இரு சாராரதும் திருப்திகரமான மன  ஒப்புதலுக்கமைய மேற்கொள்ளப்படும் சட்டபூர்வமான திருமண உடன்படிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும்.இந்த நிறுவனம் நீதியையும் நன்மையையும்,பரஸ்பர உதவியையும் கலந்தாலோசனையையும் அன்பையும்,இரக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டமைந்திருக்கும்.
2.   இரண்டாம் விதி:குடும்பம் என்பது ஒரு ஆண்,பெண் சோடியையும்,பிள்ளைகள் இருப்பின் அவர்களையும் உள்ளடக்கியதாக அமையப் பெற்றிருக்கும்.
3.   மூன்றாம் விதி:குடும்பத்தின் நோக்கங்களாக பின்வருவன அமையப் பெற்றிருக்கும்
3.1  கணவன் மனைவி இருவரதும் கற்பை பாதுகாத்தல் மற்றும் மானத்தை பாதுகாத்தல்.
3.2  சந்ததியை ஆரோக்கியமாகவும் சமூக ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதுகாத்தலும் பராமறித்தலும்.
3.3  மனித இனத்தின் நிலைப்பேற்றை உறுதிப்படுத்தல்.
3.4  மன அமைதியும் உறுதிப்பாடும்,அன்பு,இரக்கம்
3.5   பாதுகாப்பும்,இஸ்தீரத்தன்மையும் கொண்ட மனித சமூகத்தை கட்டியெழுப்பல்.
3.6  குடும்பம் ஒன்றை சார்ந்திருப்பதற்கான தேவைக்கு பதிலிருத்தல்
இரண்டாம் பிரிவு: குடும்பத்தின் சிறப்பியலபுகளும் பணிகளும்
4.   நான்காம் விதி:குடும்பம் பின்வரும் பண்புகளைப் பெற்றமைந்திருக்கும்
4.1  கணவன் மனைவி இருவருக்கிடையேயும் உரிமைகள் கடமைகள் விடயததில் நீதியையும் நேர்மையையும் நன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில் சமநிலை பேணும்
4.2  மானிட பிறவித்தன்மை,மானிட கண்ணியம்,சமூக,சட்ட ஆள்பேறு,சொத்துடைமை என்பவற்றின் அடிப்படையில் இரு பாலாரினதும் சமத்துவம்.
4.3  பரஸ்பர மன ஒப்புதலும் கலந்தாலோசனையும்
5.   ஐந்தாம் விதி:குடும்பத்தின் பணிகள்
5.1  முழுமையான அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்தல்.அது சிந்தனா,சமூக,பொருளாதார,அரசியல் ரீதியானது என அனைத்து பரப்பையும் அமைந்திருக்கும்.
5.2  பௌதீக ரீதியாகவும் மானசீக ரீதியாகவும் அதன் உறுப்பினர்களை பராமறித்தல்.இது அது கிளைத்த மூலத்தையும் அதிலிருந்து கிளைத்த கிளைகளையும் உள்ளடக்கும்.
5.3  அதன் அங்கத்தவர்களுக்கான தேக ஆரோக்கயத்தை பராமறிப்பதற்கும் உள ஆரோக்கியத்தை பராமறிப்பதற்குமான நிபந்தனைகளை பூர்த்தியாக்க உழைக்கும்.
5.4  அதன் அங்கத்தவர்களது அறிவு,உடல்,உள,உணர்வு சார் ஆற்றல்களை கல்வி புகட்டுவதாலும்,அறிவு புகட்டுவதாலும்,அனுமதிக்கப்பட்ட முறைகளில் ஆசுவாசப்படுத்துவதாலும் வளர்ச்சியுறச் செய்தல்.
மூன்றாம் பிரிவு : குழந்தையும் குடும்பத்தில் அதன் உரிமைகளும்
6.   ஆறாம் விதி:குழந்தை பற்றிய வரைவிலக்கணம்
குழந்தைப் பருவம் சிசுப் பராயத்தில் இருந்து பருவமடையும் வரையான காலமாகும்.
7.   ஏழாம் விதி:குடும்பத்தில் குழந்தையின் உரிமைகள் பின்வருமம் வகையில் அமைந்திருக்கும்.
7.1  உயிர் வாழ்வதற்கும் இருப்பிற்குமான உரிமை.இதற்கு பங்கம் விளைவிக்ககவோ,அதில் அத்து மீறவோ கூடாது.இந்த உரிமை சிசு நிலையிலிருந்து துவங்கும்.
7.2  சட்டபூர்வமான தாய் தந்தையரை சார்ந்திருப்பதற்கும் தனது மார்க்க,கலாச்சார,சமூக அடையாளங்களை சார்ந்திருப்பதற்குமான உரிமை.
7.3  தாய்ப்பாலுக்கான உரிமை.இது குழந்தையினதோ,தாயினதோ ஆரோக்கியத்துக்கு பாதிப்பு வராத வரையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
7.4  பாரமறிப்பை பெறுவதற்கான உரிமை.இது குழந்தைக்கான முழுமையான பரமறிப்பாகும்.அதன் பௌதீக,மானசீக ரீதியான அனைத்து விவகாரங்களையும் பராமறிப்பதைக் குறிக்கும்.இது பெற்றோரின் பிரிவின் போதும் தொடர்ந்திருக்கும் தன்மை கொண்டது.
7.5  செலவை பெற்றுக் கொள்வதற்கான உரிமை.இது உணவு,பாணம்,உடை,வாழ்விடம்,கல்விச் செலவு,மருத்துவச் செலவு,மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான செலவு என ஒரு குழந்தையின் சூழல் வழக்காறு வேண்டி நிற்கும் அனைத்து செலுவுகளையும் உட் பொதிந்ததாகும்.இது பெற்றோரின் பிரிவின் போதும் தொடர்ந்திருக்கும் தன்மை கொண்டது.இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையுடைய பிள்ளைகளுக்கும் இது உரித்துடையதாகும்.
7.6  குழந்தை விவகாரங்களை சுயமாக கையாளும் முதிர் நிலையை அடையும் வரை தன்னையும் தனது சொத்துக்களையும் பராமரிக்கும் பொருப்பாளரின் காப்பை(விலாயா) பெறும் உரிமை.
7.7  பௌதீக ரீதியாகவும் மானசீக ரீதியாகவும் எதிர்ப்படும் அனைத்து அத்து மீறல்கள்,உடல் ரீதியான சுரண்டல்கள்,சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் வேலைக்கமர்த்துதல்,பாலியல் ரீதியான அத்து மீறல்கள்,உடல் வியாபாரம்,நிர்ப்பந்த குடிப் பெயர்ப்பு போன்றவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை.
7.8  சீரான கொள்கை,சிறந்த ஒழுக்க விழுமியங்கள் என்பவற்றால் போசிக்கப்பட்டு வளரவதற்கான உரிமை.
7.9  ஆன்ம சமநிலை,தேசத்தை சார்ந்திருத்தல்,பரஸ்பர ஒத்துழைப்பு,சமாதானம்,நீதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட மானிடக் கூட்டுறவு என்பவற்றை பெறும் வகையில் கல்வியும் பயிற்சியும் பெறுவதற்கன உரிமை.
7.10       தனது சுயத்தை பாதுகாத்த வண்ணம் ஆன்மாவையும் மனதையும் உயரச்சி பெறச் செய்யும் வகையில் போசிக்கப்பட்டு வளர்வதற்கான உரிமை.
7.11       கற்பைப் பேணி, பிறழ்வு நடத்தை,குடும்ப நிறுவனத்துக்கு வெளியே பாலியல் தொடர்புகள் வைப்பது என்பவற்றை விட்டும் தவிர்ந்தும் அதன் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வூட்டப்பட்டும் போசிக்கப்பட்டு வளர்வதற்கான உரிமை.
நான்காம்பிரிவு: நீட்சி பெற்ற குடும்பம் அல்லது பெரும் குடும்பம்
8.   எட்டாம் விதி: பெரும் குடும்பம்
8.1  பெரும் குடும்பம் என்பது குடும்பததின் எஞ்சிய உறவுகளையும் இரத்த பந்தங்களையும் உள்ளடக்கிய குடும்பமாகும்.
8.2  பெரும் குடும்பம் பின்வரும் பெறுமானங்களை பேணி அமையும்
8.2.1      இரத்த பந்தம்,நன்மை,அன்பு,பரஸ்பர இரக்கம் என்பவற்றுக்கான பெறுமானங்களை பேணுதல்.
8.2.2      பௌதீக ரீதியான,மானசீக ரீதியான பராமரிப்பு,சமூகக் காப்பு போன்றவற்றை போதியளவு தமது குடும்பத்துக்குள்ளால் பெற்றுக் கொடுத்தல்.விஷேடமாக தேவையுடையோர்,வயது முதிர்ந்தோர்,விஷேட தேவையுடையோர் போன்றவர்கள் இந்த விடயத்தில் கவனத்துக்குறியோராவர்.அவர்களை கவனிப்பற்று விடுதல் கூடாது.
8.2.3      விஷேட தேவையுடையோருக்கு கௌரவமான வாழ்வை உத்தரவாதப்படுத்தல்.
8.2.4      பிரச்சினைகளின் போது இணக்கப்பாடு ஏற்படுத்தல்.
8.2.5      உறவினரை சேர்ந்து நடப்பதன் மூலம் பொதுவாகவும்,பிரச்சினைகள் ஏற்படும் போது இணக்கப்பாடு ஏற்படுத்துவதன் மூலமும்,அவர்களது சுக,துக்கங்களில் ஆதரவளிப்பதன் மூலமும் அவர்களுக்கு உபகாரம் புரிதல்.
ஐந்தாம் பிரிவு: குடும்ப ஒழுங்கு
9.    ஒன்பதாம் விதி:திருமனம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே இடம் பெறும் சட்ட பூர்வமான உடன்படிக்கையாகும்.இது மாத்திரமே குடும்பம் என்ற ஒழுங்கு ஏற்படுவதற்கான ஏக வழியாகும்.
10.  பத்தாம் விதி:திருமண ஒப்பந்தம் சுதந்திரமான தெரிவு,ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான திருப்திகரமான மன ஒப்புதல்,நன்மையான தொடர்பு,பரஸ்பர உபகாரம் என்பவற்றின் அடிப்படையில் அமையப் பெறும்.
11.  பதினோராம் விதி:திருமண ஒப்பந்தத்திற்கு தம்பதியினரின் தகுதி நிலை,பொருப்பை சுமப்பதற்கான இயலுமை என்பன நிபந்தனைகளாகக் கொள்ளப்படும்.
12.  பண்ணிரெண்டாம் விதி:திருமண ஒப்பந்தத்தின் அடியாக தம்பதியினருக்கு பரஸ்பர உரிமைகளும் கடமைகளும் உரித்தாகின்றன.அவை பரிபூரணமக நிறைவேற்றப்படுவது கடமையாகும்.
13.  பதின் மூன்றாம் விதி:குடும்பத்துக்கான செலவீனங்களை கணவன் தனது இயலுமைக்கும்,வசதிக்குமேற்ப சுமந்து கொள்வார்.வசதி பெற்ற மனைவி குடும்பத்துக்கான செலவீனங்களில் பங்களிப்பு செய்வது அவளது உபகாரமாகவே அமையும்.
14.  பதின் நான்காம் விதி:குடும்பம் என்பது ஒரு இணை நிறுவனமாகும்.அதனை நடாத்திச் செல்வது தம்பதியருக்கிடையேயான கூட்டுப் பொருப்பாகும்.கணவனுக்கு இதில் முதன்மைப் பொருப்பு காணப்படுகின்றது.அவன் குடும்ப விவகாரங்களை கலந்தாலோசனை,திருப்திகரமான பரஸ்பரமன ஒப்புதல்,நீதி,சமயோசிதம்,அன்பு,நல்லுறவு என்பவற்றினடிப்படையில் நிர்வகிப்பான்.
15.   பதின் ஐந்தாம் விதி:குடும்ப விவகாரங்களை நடாத்திச் செல்வது பங்களிப்புக்களில் சமநிலை பேணல்,முழுமைப்படுத்தல் என்ற அடிப்படையில் இடம் பெறும்.
16.  பதின் ஆறாம் விதி:குடும்பத்துக்குள்ளால் கடமைகள்,உரிமைகள் என்பவற்றை பங்கீடு செய்வது,தனி நபர்களின் இயல்பு நிலை வேறுபாட்டுக்கமையக் காணப்படும் சிறப்பு நிலையை கருத்தில் கொண்டு அமையும்.இது பெறுமானங்களில் பொருத்தப்பாடுடைமை,பரஸ்பர கௌரவ நிலை என்பவற்றை கருத்திற் கொண்டும் ஒருவரை தரம் குறைத்து அல்லது இரண்டாம் பட்சமாக நோக்குவதை மறுதத நிலையிலும் இடம் பெறும்.
17.  பதின் ஏழாம் விதி:பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளாக பூரண உபகாரம்,பராமறிப்பு,நல்லுறவு என்பன காணப்படுகின்றன.
18.  பதின் எட்டாவது விதி:குடும்ப உறுப்பினருக்கிடையிலான அனைத்து வகையான அநியாயங்களும்,துஷ்பிரயோகங்களும்,தீய பாதிப்பை கொண்டு வரும் செயற்பாடுகளும் தடுக்கப்பட்டதாகும்.
19.  பத்தொன்பதாவது விதி:உரிமைகளுக்கான உத்தரவாதத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் திருமண ஒப்பந்தத்திற்குறிய ஆவணம் பேணப்பட வேணடும்.
ஆறாம் பிரிவு: திருமண உறவை முடிவுக்கு கொண்டு வருதல்.
20.  இருபதாவது விதி:திருமண உறவின் அடிப்படை அது தொடரச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டமைவதாகும்.எனினும் அதனை தொடர்ச்சியாக பேண முடியாத போது,அதில் ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வுகளை தேடுவதற்கான அனைத்து வழிகளும்,படிகளும் இல்லாது போகின்ற போது மணவிலக்கை (தலாக்கை) நாட வேண்டி ஏற்படும்.
21.  இருபத்தொராவது விதி:மணவிலக்கு(தலாக்)இடம் பெறும் நிலையில் அது சட்ட பூர்வமானதாகவும்,சிறப்பான அமைப்பிலும் இடம்பெற வேண்டும்.
22.  இருபத்தி இரண்டாவது விதி:திருமண உறவு தொடர முடியாத நிலை ஏற்படுகையில் கணவனுக்கு சிறந்த முறையில் தலாக் சொல்லும் உரிமை காணப்படுகிறது.அதே போன்று தலாக்கை அல்லது குலூஃவை கோரும் உரிமை மனைவிக்கும் உண்டு.
23.  இருபத்தி மூன்றாவது விதி:தலாக் இடம் பெற முன்னர் ஏற்படும் பிரச்சினைகள்,பிளவுகளின் போது,தம்பதியினர் இருவரதும் குடும்பம் சார்பில் இரு சமயோசித புத்தியுள்ள,நீதியான மனிதர்களின் தலையீட்டின் மூலம் அவர்களுக்கிடையே இணக்கப்பாட்டையும் மீளுறவையும் ஏற்படுத்தி வைக்க முடியும்.
24.  இருபத்தி நான்காவது விதி:தலாக் இடம் பெறும் பட்சத்தில்,அதன் வகை தீர்மானிக்கப்பட்டு அதற்குரிய தேவைகள் நன்மையான முறையில் நிறைவேற்றப் படுவதோடு,அதனடிப்படையில் குடும்ப உறுப்பினர்களின் உரிமைகள் பெற்றுக் கொடுக்ப்படும்.
ஏழாம் பிரிவு:குடும்பத்தை பாதுகாப்பதில் அரசினதும் தன்னார்வ நிறுவனங்களதும் பொருப்பு
25.  இருபத்தி ஐந்தாவது விதி:அரசு குடும்பத்தை பாதுகாப்பதற்காக பின்வரும் விடயங்களை நிறைவேற்றுவது அதன் பொருப்பாகும்.
25.1   யாப்பு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் குடும்ப ஒழுங்கிற்கான பாதுகாப்பை வழங்குதல்.
25.2 குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் சமூக நிறுவனங்களை பங்கு கொள்ளச் செய்தல்.
25.3  தலாக்,மரணம் பேன்ற சந்தரப்பங்களின் போது பெண்ணையும் பிள்ளைகளையும் போக்கற்று அநாதரவாகும் நிலையிலிருந்து பாதுகாக்கும் வகையில் வசிப்பிடத்துடன் கூடிய புகழிடத்தை திருப்திகரமாக பெற்றுக் கொடுத்தல்.
25.4  குழந்தைகளின் மேலதிக நலன்கள் என்ற வகையில் அவர்களது கல்வியை தொடர்வதற்கும்,அவர்களது பௌதீக,மானசீக ரீதியான தேவைகளை நிறைவு செயது கொள்வதற்குமான ஏற்பாட்டை செய்து கொடுத்தல்.
25.5  குடும்பத்திற்கான மகிழ்ச்சியை பெற்றுக் கொடுக்கும் வகையிலும்,அதன் நிலைப்பையும்,இஸ்தீரத் தன்மையையும் பேணும் வகையிலும் சீரான குடும்ப கலாச்சாரத்தை பரப்புவதற்கான நடவடிக்க மேற்கொள்ளல்.
25.6  திருமணத்தை எதிர் நோக்கியிருப்பவர்களை குடும்பத்தின் பொருப்புக்களை சுமப்பதற்காக தகுதி படுத்தல்,குடும்ப உளவள ஆலோசனை நிலையங்கள்,குடுமப்பிரச்சினைகளில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தும் நல்லினக்க சபைகள் என்பவற்றை ஏற்படுத்தல் என்பவற்றில் சிவில் சமூக நிறுவனங்கள் தமது பங்களிப்புக்களை நிறைவேற்றச் செய்தல்.
25.7  திருமணத்திற்கான வழிகளை இலகுபடுத்தலும் அதற்காக தூண்டுதலும்.
எட்டாம் பிரிவு: சொததுப் பகிர்வு,மரணசாசனம்,இத்தா
26.  இருபத்தி ஆறாவது விதி:சொத்துப் பகிர்வு நீதி,பூரணப்படுத்தல்,பொருப்புணர்வு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையும்.
27.  இருபத்தி ஏழாவது விதி:மரணித்தவரது சொத்து அதற்குரியவர்களுக்கு உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.எந்த வாரிசும்(சொ்த்துப் பங்கு பெற வேண்டியவர்) அவருக்குரிய சொத்துப் பங்கை பெறுவதைவிட்டும் தடுக்கப்படவோ,அதனை கையாளுவதை விட்டும் தடுக்கப்படவோ கூடாது.
28.  இருபத்தி எட்டாவது விதி:மரண சாசனம் ஒரு நன்மையான காரியமாகக் கருதப்படும்.அதனை சட்ட ஏற்பாடுகளுக்கு ஏற்ப நிறைவேற்றுவது கடமையாகும்.
29.  இருபத்தி ஒன்பதாவது விதி:தலாக் சொல்லப்பட்ட பெண் அல்லது கணவனை இழந்த பெண் பரம்பரையை பேணுவதற்காகவும்,உள நிலையை கவனத்திற் கொள்ளும் வகையிலும் இத்தா இருத்தல் வேண்டும்.

07.04.2016

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...