

1. அறிமுகம்
எந்த ஒரு விடயத்தையும் கையாள்வதற்கு பல தரப்பட்ட அணுகு முறைகள் காணப்படுவதுண்டு. அவை கால, சூழல், ஆள், பார்வை வேறுபாடுகளுக்கேற்ப மாறுபட்டு அமைகின்றன. சமூக எழுச்சி அல்லது மாற்றம் குறித்து பேசும் போதும் இந்த உண்மை கவனத்திற்குரியது.
சமூக மாற்றச் செயன்முறை எவ்வாறு அமைய வேண்டும், அது எவ்வாறு அமையும் என்பது தொடர்பாக பல்வேறு நிலைப்பாடுகளும் பார்வைகளும் காணப்படுகின்றன. எனினும், அதற்காக உழைப்போர் அவை குறித்த போதிய தெளிவின்றிக் காணப்படுவது இப் பரப்பில் காணப்படுகின்ற முக்கிய பிரச்சினையாகும்.
அதைப் பார்க்கிலும் சிக்கலுக்குரியது எந்த விதமான நிலைப்பாடுகளும் பார்வைகளுமின்றியே சில தனிமனிதர்கள் மாத்திரமன்றி அமைப்புக்களும் கூட செயற்பட்டுக் கொண்டிருப்பதாகும். இது இப் பரப்பை மிகுந்த சிக்கலுக்குரியதாக மாற்றிவிட்டுள்ளது. எனவே, இங்கு சமூக எழுச்சி குறித்துப் பேசும் போது இது குறித்த தெளிவைப் பெறுவது மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாகக் காணப்படுகிறது.
2. சமூக மாற்றம் குறித்த நிலைப்பாடுகள் அல்லது பார்வைகள்
சமூக மாற்றம் குறித்து பேசுவோரை பொதுவில் மூன்று வகையாகப் பிரித்து நோக்கலாம். ஒருசாரார் சமூக மாற்றம் எவ்வாறு நிகழும் என்பது குறித்த முறைப்படுத்தப்பட்ட எந்த ஒழுங்கையும் கொண்டிராதவர்கள். அடுத்த சாரார் சமூக மாற்றமென்பதை இருக்கும் சமூக ஒழுங்கில் சில சீர்திருத்தங்களை செய்து ஓட்டை உடைசல்களை அடைத்துவிடும் வேலையாகப் பார்ப்பவர்கள். அடுத்து அதனை முழுமையான ஒரு மாற்றமாக நோக்குகின்றவர்கள். இப்பரப்பில் இவர்கள் ஒரு சிறிய தொகையினராகவே காணப்படுகின்றனர்.
3-முறைப்படுத்தப்படாத வேலைத்திட்டங்கள்
முறைப்படுத்தப்பட்ட எந்த ஒழுங்கையும் பின்பற்றாது செயற்படுகின்றவர்களது போக்குகளை நாம் பலவாறு இங்கு அடையாளப்படுத்தலாம்.
1. முழு உலகும் பித்னாவின் களமாக மாறிவிட்டிருக்கிறது. எதிர்பார்க்கப்படும் மஹ்தியின் வருகையைத் தவிர வேறு எதனாலும் இந்த நிலமையை சீர்படுத்த முடியாது என்று கூறிக் கொண்டு சமூக மாற்றத்திற்கான உழைப்பை புறக்கணித்தவர்களாக, அனைத்தையும் எதிர் மனப்பாங்கோடு பார்த்து விமர்சித்துக் கொண்டிருக்கும் ஒரு சாரார் காணப்படுகின்றனர். இவர்களை முஅத்திலாக்கள்-காரண காரியங்களை புறக்கணிப்போர்- என அழைக்கலாம்.
2. ஆன்மீக, சூபித்துவ வாழ்வுடன் தமது செயற்பாடுகளை சுருக்கிக் கொண்டு உலகத்தை புறக்கனித்து வாழ்வதுதான் விமோசனத்தக்கு வழி என்று கூறுபவர்கள்.பலபோது இவர்களது ஆன்மீகமும் இபாதத் கிரியைகளும் ஷரீஆவின் வரையறைகளை கடந்ததாகவும் அமைந்து விடுவதுண்டு. இவர்களை முகத்திராக்கள்-ஆன்மீகப் போதையில் திளைத்தோர்- என அழைக்கலாம்.
3. சமூகத்தின் யதார்த்த வாழ்வை விட்டும் தூரப்பட்டு மூடுண்ட நிலையில் வாழும் சிலர் முழு சமூத்தையும், அதன் செயற்பாடுகளையும் பித்அத், ஷிர்க் என்ற சொற்களை வைத்து இஸ்லாத்தை விட்டும் தூரப்படுத்திப் படுத்திப் பார்ப்பர். இவர்களை முனப்பிராக்கள்-மக்களை இஸ்லாத்தை விட்டும் விரட்டுபவர்கள் எனக் குறிப்பிடலாம்.
4. தம்மோடு முரண்படுபவர்களுக்கு குப்ர் பட்டம் சூட்டி அதிகமானவர்களை காபிராக்கி அவர்களது இரத்தத்தை ஓட்டுவதை ஹலாலாகக் கருதுபவர்களாக இவர்கள் இருப்பர். இவர்களை முகப்பிராக்கள்-காபிர் பட்டம் சூட்டுபவர்கள் எனக் குறிப்பிடலாம்.
5. தாம் அன்றாடம் சரியெனக் காண்பவற்றைq எந்த வழிமுறையை கொண்டேனும் அடைந்து விட வேண்டும் என செயற்படுபவர்கள். இவர்கள் மாற்றத்துக்கான இறை நியதிகள் குறித்து எந்த சிந்தனையையும் கொண்டிருக்கமாட்டார்கள். இவர்களை முஸ்தஃஜிலாக்கள்-அவசரமாக விளைவுகளைத் தேடுபவர்கள் எனக் குறிப்பிடலாம்.
6. அனைத்து மாற்றங்களும் ஆயுதப் போராட்டத்தால் மாத்திரமே சாத்தியம் எனக் கருதுபவர்கள். இவர்கள் இரத்தம் ஓட்டுவது ஒன்றே தீர்வு என சிந்திப்பவர்கள். இது இஸ்லாத்தின் மைய நிலை சிந்தனைக்கு முற்றிலும் முரணாகின்ற ஆபத்தான ஒரு போக்காகும் .இவர்களை நாம் ஜஸ்ஸாராக்கள்-வெட்டுக் கொத்துக்களால் தீர்வை தேடுபவர்கள்-எனக் குறிப்பிடலாம்.
7. சிந்தனை, அறிவு என்பவற்றால் மாத்திரமே மாற்றம் ஏற்படும் எனக் கருதுபவர்கள். இவர்கள் எப்போதும் சமூக விவகாரங்கள் குறித்த பார்வைகளையும் சிந்தனைகளையும் சட்டங்களையும் பேசுவதோடு தமது பணியை நிறுத்திக் கொள்வார்கள். இவர்களை முனழ்ழிராக்கள்-தத்துவ வித்தகர்கள்-என அழைக்கலாம்.
8. அரசியல் போராட்டமொன்றே சமூக மாற்றத்திற்கான ஏக பாதை எனக் கருதுபவர்கள். இவர்கர்கள் மாற்றத்திற்கான படிமுறை ஒழுங்கை ஏற்கமாட்டார்கள். இவர்களை நாம் முஸய்யஸாக்கள்-அனைத்தையும் அரசியல் மயப்படுத்திப் பார்ப்பவர்கள் எனக் குறிப்பிடலாம்.
9. ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் சில அங்கத்தவர்களை மாத்திரம் வைத்துக் கொண்டு அவர்களது சீர் திருத்தத்தில் மாத்திரம் கவனம் செலுத்திக் கொண்டிருப்போர். அவர்கள் சமூக விவகாரங்களில், போராட்டங்களில் பங்கு கொள்ளாமல் இருப்பதற்கு பல்வேறு நியாயங்களை முன்வைப்பார்கள்.தொழுது நோன்பு பிடித்து அடிப்படையான இபாதத்களில் ஈடுபட்டால் எல்லாம் மாறிவிடும் என்பதற்கு பல்வேறு பிழையான ஆதாரங்களை காட்டுவார்கள். இவர்களை குபூரிய்யாக்கள்- கபுரு வாசிகள் –என அழைக்கலாம்.
10. எப்போதும் எல்லா நிலைகளிலும் தீவிரப் போக்கை கைக் கொள்பவர்கள். இவர்கள் அஸீமா எனப்படும் பலமான நிலைப்பாடுகளையும் ததர்ருப் எனப்படும் தீவிர நிலைப்பாடுகளையும் குழ்ப்பிக் கொள்பவர்கள். அனைத்திலும் தீவிர நிலைக்கு செல்லும் இவர்களை முததர்ரிபாக்கள்-தீவிர போக்குக் கொண்டோர்-என அழைக்கலாம்.
இவை சமூக அமைப்பில் நாம் காணும் பல்வேறு போக்குகளை இணம் கண்டு கொள்ள உதவும். இந்தப் போக்குகள்தான் சமூக மாற்றச் செயன்முறையை பல போது சர்ச்சைக்குரியதாகவும் சிக்கலுக்குரியதாகவும் மாற்றிவிட்டுள்ளது.
4-சீர்திருத்தம் குறித்து மாத்திரம் பேசுவோர்
இவர்கள் சமூகத்தின் போக்கை மாற்றத்திற்குட்படுத்துவது குறித்து சிந்திக்காமல் அதனை உள்ளவாறே வைத்துக் கொண்டு, அதனை சீர் திருத்துவதில் மாத்திரம் கவனம் செலுத்துபவர்கள். அவர்கள் சில ஓட்டைகளை அடைப்பதிலும், உள்ளவற்றை அழகு படுத்துவதிலும் மெருகூட்டுவதிலும் மாத்திரமே கவனமாயிருப்பர். இதனால் சமூகம் இருக்கின்ற அதே நிலையில் தொடர்ந்தும் எந்தவித மாற்றமும் இன்றிக் காணப்படும். இவர்கள் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாத்தல் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல்... கல்வி முன்னேற்றத்திற்காக உழைத்தல், பொருளாதார முன்னேற்றத்திற்காக உழைத்தல்… என சமூகம் இருக்கும் அதே நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, அபிவிருத்திகள், சீர்திருத்தங்கள் என்பவற்றை மாத்திரம் பேசுவார்கள். எம்மால் இருக்கும் சமூக அமைப்பபை மாற்ற முடியாது … அதில் சிறிய சிறிய சீர்படுத்தல்களையும் அபிவிருத்திகளையுமே செய்ய முடியும் என்பதுதான் இவர்களது நிலைப்பாடு.
5-முழுமையான மாற்றம் குறித்துப் பேசுவோர்
சமூக எழுச்சிப் பரப்பில் நாம் அவதானிக்கும் அடுத்த போக்குத்தான் சமூகத்தின் முழுமையான மாற்றம குறத்துப் பேசுபவர்கள். இவர்களை இரண்டு அல்லது மூன்று வகையினரான அடையாளப்படுத்தலாம்.
1. மேல் நிலை மாற்றம் குறித்துப் பேசுவோர்.
2. வேர் நிலை மாற்றம் குறித்துப் பேசுவோர்.
I. மூடுண்ட நிலையில் மாற்றம் குறித்துப் பேசுவோர்.
II. திறந்த மனப்பாங்குடன் மாற்றத்தை அணுகுவோர்.
1-மேல் நிலை மாற்றம் குறித்துப் பேசுவோர்
இங்கு மேல் நிலை மாற்றம் குறித்துப் பேசுவோர் சமூகத்தின் மேல் நிலையிலுள்ள அதிகார சக்திகள், கட்டமைப்புக்களின் மாற்றமே முழுமையான சமூக மாற்றத்தை சாத்தியப்படுத்தும் எனக் கருதுவர். இவர்கள் மாற்றம் என்பது மேலிருந்து கீழ் நோக்கி இடம் பெற வேண்டும் எனக் கருதுவர். அரசியல் அதிகாரத்தைப் பெறுதல், இராணுவ அதிகாரத்தினை பயன்படுத்தல் போன்ற வழிமுறைகள் இவர்களால் பின்பற்றப்படும். இங்கு இந்த மாற்றத்திற்குட்படும் தரப்பிலுள்ள தனிமனித்ர்களோ, குடும்பங்களோ, சமூகமோ குறிப்பிட்ட மாற்றத்தை அங்கீகரிக்க வேண்டும் அல்லது அவர்களில் அது பாதிப்பு செலுத்த வேண்டும் என்ற தேவை இருக்கமாட்டாது. அதிகாரத்தால் அவர்கள் கட்டுப்படுத்தப்படுவதனூடாகவே இந்த மாற்றம் இடம் பெறும், நிலைக்கும். இந்த வழிமுறைதான் ஒரு சமூகத்தை, நாட்டை ஆக்கிரமிப்பவர்களால் இலகுவாக பயன்படுத்தப்படுகின்ற முறையாகும். இது நீடித்து நிலைக்கும் ஒரு சமூக அமைப்பின் நாகரிகத்தின் உருவாக்கத்திற்கு வழியமைக்கமாட்டாது. மாற்றமாக குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட சக்தியால் மக்களை ஆள்வதற்கும், அவர்கள் மேல் அதிகாரம் செலுத்துவதற்கும் இது உதவலாம்.
இவர்களைப் பொருத்த வரையில் தெளிவான ஒரு வேலைத்திட்டமோ இலக்கோ காணப்படமாட்டாது. மக்கள் சக்தியில் இவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்பது மாத்திரமல் இவர்களது வேலைத்திட்டம் மக்கள் சக்தியை சார்ந்தும் அமையமாட்டாது. இரகசிய முன்னெடுப்புக்களை அதிகம் சார்ந்திருப்பதுடன், அதிரடி நடவடிக்கைகளையே தமது வழிமுறையாகக் கொண்டிருப்பர்.. அதிகமான பாதுகாப்புக் கெடுபிடிகளுக்க உட்படக் கூடியதாக இவர்களது வேலைத்திட்டம் காணப்படும். இவர்களது வேலைத்திட்டம் மாற்றத்திற்காக உழைக்கும் ஒரு சிறு குழுவின் ஆதிக்கத்திற்கு எப்போதுமே உட்பட்டிருக்கும்.
2-வேர் நிலை மாற்றம் குறித்துப் பேசுவோர்
இந்தப் பரப்பில் காணப்படுகின்ற அடுத்த சாரார்தான் வேர் நிலை மாற்றம் குறித்துப் பேசுவோர். இவர்கள் மாற்றம் என்பது கீழ் நிலையிலிருந்து மக்களை மாற்றுவதனூடாக இடம் பெறும் என்று நம்புகின்றவர்கள். இவர்களுள் இருசாரார் காணப்படுகின்றனர் .
I-மூடுண்ட அமைப்பிலான வேர் நிலை மாற்றம்
இவர்கள் சமூகத்தின் தற்போதைய நிலையை ஜாஹிலிய்ய சமூக அமைப்பு எனக் கூறி அதன் எந்த முறைமைகளுக்குள்ளும் நுழையாது மாற்றம் என்பது தனிமனித மாற்றத்தால் மாத்திரமே சாத்தியம் என்று கருதுபவர்கள். இவர்கள் அரசியல் செயற்பாடுகள், மக்கள் நலன் வேலைத்திட்டங்கள் என்பவற்றை முழுமையாக புறக்கணிப்பவர்களாக இருப்பர். தேர்தல்களில் போட்டியிடல், சமூக அமைப்புக்கள், நிறுவனங்கள்… என்பவற்றில் பங்கு கொண்டு செயலாற்றல் என்பவற்றை தவிர்ந்திருந்து அவையெல்லாம் தனிமனித மாற்றத்தின் வளர்ச்சியின் அடியாக மீண்டும் புதிதாக உருவாக்கப்பட வேண்டிய வடிவங்கள் எனக் கருதுவார்கள்
II-வெளிப்படைத் தன்மை கொண்ட வேர் நிலை மாற்றம்
இவர்கள் மாற்றத்திற்குரிய அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு முழுமையான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள். இவர்களிடம் மாற்றத்திற்குரிய இலக்குகள் வழிமுறைகள் தெளிவாகக் காணப்படும். மக்கள் சக்தியை மாற்றத்திற்குடுபடுத்தத் தக்க அனைத்து வகையான மாற்றத்திற்குரி வழிமுறைகளான கல்வி, அரசியல், பொருளாதாரம்…என அனைத்து வழிமுறைகளையும் கையாள்வார்கள். தனிமனித மாற்றம் குறித்து கவனம் செலுத்துகின்ற அதே நேரம் அரசியல் மாற்றம் குறித்தும் கவனம் செலுத்துவார்கள்.
இவர்களது வேலைத்திட்டம் மிகத் தெளிவானதாகக் காணப்படும். அது மக்கள் சக்தியை மையப்படுத்தியதாக, அதனை அடித்தளமாகக் கொண்டதாக அமைந்திருக்கும். இவர்களுக்கு பொதுவில் எந்த இரகசிய வேலைத்திட்டங்களோ, நிகழ்ச்சி நிரல்களோ காணப்பட மாட்டாது. அனைத்தும் மக்கள் நலன் கொண்டதாக, மக்கள் மயப்பட்டதாக அமைந்திருக்கும். மாற்றத்திற்கான இவர்களது உழைப்பு ஜனநாயக பூர்வமானதாக முன்னெடுக்கப்படும். குறிப்பிட்ட ஒரு குழுவின் ஆதிக்கம் அங்கு இருக்கமாட்டாது. முழுமையான மாற்றம் என்பதை இவர்கள் ஒரே முறையில் இடம் பெறும் தலைகீழ் மாற்றமாகக் கருத மாட்டார்கள். மாற்றமாக அது படிமுறை ஒழுங்கில் எல்லா வகையான இறை நியதிகளையும் கவனத்தில் கொண்டதாக இடம் பெறும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பார்கள். எனவே, சமூகத்திலுள்ள மாற்த்திறகான உழைப்புக்களான அரசியல் வேலைத்திட்டம் முதல் அனைத்து வகையான வேலைத் திட்டங்களிலும் பங்கு கொண்டு மாற்றத்திற்காக இவர்கள் உழைப்பார்கள்.
இங்கு பொதுவில் சமூக எழுச்சி அல்லது மாற்றத்துக்கான செயற்பரப்பை எளிய வடிவில் பகுப்பாய்வு செய்து பார்த்திருக்கிறோம். இதிலிருந்து எத்தகைய வேலைத்திட்டம் இங்கு பொருத்தமானது? எந்த வேலைத்திட்டம் இஸ்லாத்தின் பொது அடிப்படைகளுடனும் இலக்குகளுடனும் இயைந்து போகும் பண்பு கொண்டது என்பதை இதனை வாசிக்கும் ஒருவரே ஒப்பிட்டு தீர்மானிக்க முடியும். இறைத் தூதர்களது சமூக மாற்றத்திகான உழைப்பின் பண்புகளுடன் எந்த வடிவம் அதிகம் நெருக்கமானது? எந்த வேலைத்திட்டம் யதார்த்தப் பண்பு கொண்டது என்பதனையும் இங்கு அவரே தீர்மானித்துக் கொள்ள முடியும் எனக் கருதுகிறோம்.