Wednesday, March 4, 2015

முஸ்லிமல்லாத பெரும்பான்மை சமூகத்தில் வாழ்தல்-முஸ்லிமல்லாதாருடனான உறவாடல் எம்.என்.இக்ராம்

February 23, 2015 at 12:26pm
 
 முஸ்லிம் சமூகத்துக்கும் ஏனைய சமூகங்களுக்குமிடையிலானஉறவைப் பற்றிய இஸ்லாத்தின் கருத்துக்களை தொகுத்து நோக்கும்போது அது தஃவாவை அடிப்படையாகக் கொண்ட உறவாகவேகாணப்படுகிறது.” முகவ்வமாதுஸ் ஸில்ம் வகலாயா அல்-அஸ்ர்அலிஅப்துர்ரஹ்மான் அத்தய்யார்-
 (இது ஜமாஅதுஸ் ஸலாமாவின் ஸலாமா சஞ்சிகைக்காக எழுதப்பட்ட கட்டுரை .சஞ்சிகையில் விரிவின் காரணமாக இதில் ஒரு பகுதி பிரசுரிக்கப்படவில்லை.அதனை இங்கே பார்க்கலாம்)  
முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிமல்லாதாருக்குமிடையிலான உறவு பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு தொடர்பாக ஆராய்ந்து பார்க்கின்ற போது பெரும்பாலும் எமது ஆரம்பகால அறிஞர்களால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சூழலை மையமாக வைத்தே அவை பார்க்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.ஒரு பெரும்பான்மைக்குள் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் தம்முடன் வாழும் பெரும்பான்மை முஸ்லிமல்லாதாருடன் எவ்வாறான தொடர்பை பேணலாம் என்பது தொடர்பில் பெரிய அளவில் ஆய்வுகள் ஏதும் இடம் பெற்றிருப்பதாக காண முடியவில்லை.
   ஐரோப்பிய சிறுபான்மையை வைத்து செய்யப்பட்ட சில ஆய்வுகள் தவிர்த்து இது தொடர்பில் பரந்த ஆய்வுகள் இருப்பதாக அறிய முடியவில்லை.சிறுபான்மை தொடர்பாக பேசப்பட்ட பெரும்பான்மையான ஆய்வுகள் கூட பெரும்பான்மைக்குள் சிறுபான்மை எவ்வாறு தமது தனித்துவத்தை பேணி வாழலாம் என்பதற்கான இஸ்லாமிய பிக்ஹ் சட்ட ரீதியான இடம்பாடுகள் பற்றி பேசியுள்ளனவே தவிர அதற்கப்பால் பெரும்பான்மையுடன் கலந்து வாழும் ஒழுங்குகள்,அவர்களுடனான சமூக ரீதியான (பொருளாதார,அரசியல்,கல்வி,குடும்ப…)உறவுகள் என்பன தொடர்பில் ஒருமுகப்பட்ட அமைப்பில் ஆய்வுகளை காண முடியவில்லை.எனினும் சிதறிய அமைப்பில் அரசியல்,பொருளாதார,சர்வதேச ஒழுங்குகள் தொடர்பில் பேசும் போது இது தொடரபில் தொகுத்து நோக்கத்தக்க பல கருத்துக்களை பல நவீன கால அறிஞர்கள் பேசியுள்ளனர்.
முஸ்லிம் முஸ்லிமல்லாதார் உறவு தொடர்பான பொதுவானஅடிப்படைகள் 
  முஸ்லிமல்லாதாருடனான உறவு தொடர்பில் அல்-குர்ஆனின் கருத்தை நாம் நோக்கும் போது ஸுரா அல்- மும்தஹினாவின் 8,9வது வசனங்கள் முஸ்லிம்-முஸ்லிமல்லாதார் உறவு தொடர்பில் அடிப்படையான மூலமாக கொள்ளத்தக்க வசனங்கள் என கலாநிதி யூசுப் அல்-கர்ளாவி அவர்கள் தனது  “இஸ்லாமிய சமூகத்தில் வாழும் முஸ்லிமல்லாதார்” என்ற நூலின் ஆரம்பத்திலேயே தனியான ஒரு பகுதியாக குறிப்பிட்டு விளக்குகிறார்கள்.
“அல்லாஹ்;மார்க்க விவகாரத்தில் உங்களுடன் போராடாத,உங்களது வசிப்பிடங்களிலிருந்து உங்களை வெளியேற்றாத -முஸ்லிமல்லாதாருடன்- நீங்கள் நீதியாக நடப்பதையும் அவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதையும்உங்களுக்கு தடுத்து விடவில்லை.அல்லாஹ் நீதியாளர்களை விரும்புகிறான்/அல்லாஹ்;மார்க்க விவகாரத்தில் உங்களுடன் போராடுபவர்களுடனும் உங்களை உங்களது வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றியவர்களுடனும்,உங்களை வெளியேற்ற உதவியவர்களுடனும் நீங்கள் நெறுக்கமாக சினேகம் பாராட்டுவதை விட்டுத்தான் உங்களை தடுக்கிறான்.யார் அத்தகையோருடன் நெறுக்கமாக சிநேகம் பாராட்டுகிறார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.“ (அல்-மும்தஹினா:8,9)
  இந்த வசனம் குறிப்பிடுகின்ற ‘அல்-பிர்ரு’(நல்லுறவு பாராட்டல்), ‘அல்-கிஸ்த்’(நீதியாக நடத்தல்) என்பன பொதுவாகவே மனிதர்களுடனான உறவில் ஒரு முஸ்லிம் பேண வேண்டிய இரு அடிப்படைகளாகும். இதில் முஸ்லிம், முஸ்லிமல்லாதார் என்ற வேறுபாடு பார்க்கப்படக் கூடாது.இங்கு அவர்கள் எதிர்ப்பு மனப்பாங்குடன் செயற்படுகிறார்களா இல்லையா என்ற விடயம்தான் முக்கியமானது.ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றாதவர் என்பது மாத்திரம் அவர் எதிர்க்கப்படுவதற்கும் அவருடன் போராடுவதற்குமுரிய காரணியாக அமையமாட்டாது.இந்த வசனத்துடன் “மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை,நேர்வழி வழிகேடடிலிருந்து தெளிவாக பிரித்து விளங்கும் நிலையிலுள்ளது..”-பகரா-256- என்ற வசனத்தையும் இணைத்து; ‘முஸ்லிமல்லாதாருடன் உறவாடுவதற்கான அடிப்படைகள்’ என்ற நூலில் விளக்கும் உஸ்தாத் ஸாலிம் பஹன்ஸாவி அவர்கள்; “முஸ்லிம்களைப் பொருத்தவரை அடிப்படையிலேயே இவ்விவகாரத்தில் அவர்களுக்கு பிரச்சினை கிடையாது.இஸ்லாம் முஸ்லிமல்லதாரையும் அவர்களது உரிமைகளையும் ஸுரா பகராவின் இவ்வசனத்தினூடாக அங்கீகரித்து விடுகிறது.இஸ்லாத்தில் ஒருவர் நுழைவதாயின் திருப்தியோடும் தெளிவோடுமே இணைய வேண்டும்.அங்கு நிர்ப்பந்தம் கிடையாது.அத்தோடு இஸ்லாம் முன்னைய வேதங்களையும் மார்க்கங்களையும் அங்கீகரிக்கிறது .ஏனைய சமூகங்களுடன் கூட அது நல்லுறவையே அடிப்படையில் வழியுருத்துகிறது.” என விளக்குகிறார்.
   ஸுரா மும்தஹினாவின் 8,9 வது வசனங்களை விளக்க வரும் ஷஹீத் செய்யித் குதுப் அவரகள் “இஸ்லாத்தின் சர்வதேச உறவுகளின் அடிப்படையாக சமாதானமே இருக்கும்.அடிப்படையில் ஒரு முஸ்லிமுக்கும் ஏனைய மனிதர்களுக்குமிடையிலான நிரந்தர உறவாக சமாதானமே இருக்கும்.அவனின் மீதான ஏதாவதோர் அத்துமீறலே தவிர வேறு எதுவும் அதனை பாதிக்கமாட்டாது.அத்துமீறல் என்பது அவனுக்கெதிரான போராகவோ,உடன்படிக்கை மீறலாகவோ,சிந்தனை சுதந்திரத்தை தடுப்பதாகவோ இருக்கலாம்.அப்படியேதும் நடக்காதவரை சமாதானமும் அன்பும் நீதியும் நல்லுறவுமே அடிப்படையானதாய் இருக்கும்“ என விளக்குகிறார்.
    முஸ்லிமல்லதாருடனான தொடர்பின் போது ஒரு வகையான ஒதுங்குதல் மனோ நிலையுடன்,தவிர்க்க முடியாத நிர்ப்பந்த சூழலில் வைக்கும் உறவு போன்ற ஒரு தொடர்பை பேணுதல் இஸ்லாத்தின் பார்வையில் எத்துனை பிழையானது என்ற கருத்தை நாம் இங்கு புரிந்து கொள்கிறோம்.இந்த குர்ஆன் வசனத்தில் வரும் ‘அல்-பிர்ரு’ என்ற சொல்லுக்கு இமாம் கராபி குறிப்பிடும் விளக்கம் இதனை இன்னும் தெளிவாக எமக்கு விளக்குகிறது. “அவர்களிலுள்ள பலவீனர்களுடன் சாந்தமாக நடத்தல்,ஏழைகளது தேவைகளை நிறைவேற்றல்,பசித்தோருக்கு உணவளித்தல்,ஆடையற்றோருக்கு ஆடையளித்தல்,அவர்களுடன் நலினமாக நடக்கும் வகையில் மென்மையாகவும் இரக்கமாகவும் உரையாடல்,இது அவர்களுக்கு பயந்தோ,அவர்களிடமிருந்து ஏதாவது அடைந்து கொள்ளும் நோக்குடனோ இடம்பெறக் கூடாது.அவர்களுக்கு நேர்வழி கிடைக்க வேண்டும், அவர்கள் சிறப்பாக வாழ வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.அவர்களது உலக,மார்க்க விவகாரங்கள் என அனைத்திலும் உதவி ஒத்தாசையுடன் நடத்தல்,அவர்களிடமிருந்து ஏதாவது தொந்தரவு ஏற்பட்ட போதிலும் அவர்களது குறைகளை மறைத்தல்,அவர்களது சொத்துக்கள்,குடும்பம்,மானம்,என அவர்களது அனைத்து உரிமைகள்,நலன்களையும் பாதுகாத்தல்,அவர்களுகளுக்கு அநீதி இடம்பெறுமாயின் அதற்கெதிராக அவர்களுக்கு உதவுதல் அவர்களது அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தல்…”(அல-புரூக்-ஷிஹாபுத்தீன் அல்-கராபி)
   இங்கு பரந்த அடிப்படையிலான மனித சகோதரத்துவம் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியம் வழியுருத்தப்படுவதைக் காணலாம்.நல்லுறவு என்பதுடன் நீதி என்பதும் முஸ்லிமல்லாதாருடனான உறவில் விரிவாக விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.இதனை அல்-குர்ஆனே ஸுரா மாஇதா:8 இல் விளக்குகிறது “உங்களுக்கு ஒரு சமூகத்துடன் இருக்கும் குரோதமும் எதிர்ப்பும் நீங்கள் நீதியாக நடக்காது தவறிவிட உங்களை தூண்டிவிடாதிருக்க வேண்டும். நீங்கள் நீதியாக நடவுங்கள் அது தக்வாவுக்கு மிகவும் நெறுக்கமானது..” இது மனித சமூகத்தில் நீதியை நிலை நாட்டுவதற்கான அழைப்பு,இது நாம் வெறுக்கின்றவர்களுடன் கூட நீதியாக நடக்குமாறு வேண்டப்படுகின்ற கட்டளை என விளக்கும் உஸ்தாத் பஹ்மி ஹுவைதி அவர்கள்(முவாதினூன் லா திம்மிய்யூன்) இவ்வசனத்துக்கான ஷெய்க் றஷீத் றிழாவின் விளக்கத்தை நீதி என்பது எவ்வகையில் அமைய வேண்டும் என்பதை விளக்குவதற்காக கொண்டு வருகிறார். “ஒரு முஃமினுக்கு நீதியை விடுவதற்கோ,அதனை அநீதியையும் பக்கச்சார்பையும் பார்க்கிலும் மேலாக கருதாது இருக்கவோ எந்த நியாயமும் கிடையாது.அவன் நீதியை மனோ இச்சைக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும்அப்பால் நோக்க வேண்டும்.எத்தகைய காரணமாயினும் ஒரு சாராருடனான சிநேகம்,எதிர்ப்பு என்பவற்றை தாண்டி அதனை நோக்க வேண்டும்…யாரும் ஒரு காபிரிற்காக சாட்சி சொல்வதில் நீதியாய் நடக்கத்தேவையில்லை அல்லது ஒரு முஃமினுக்கு எதிராக காபிரின் உரிமையொன்றை பெற்றுக் கொடுப்பதில் நீதியாய் இருக்கத் தேவையில்லை என தவராக எண்ணிவிடாதிருக்க வேண்டும் எனத்தான் அல்-குர்ஆன் இங்கு இதனை விளக்குகிறது”
 ஒரு யுதனுடைய விடயத்தில் அநீதி இடம் பெறப் போவதை தடுப்பதற்காக நபியவர்களை அல்லாஹ் ஸுரா நிஸாவின் 105-113 வரையான வசனங்களை இறக்கி கண்டித்தமையும் நீதி என்ற பெறுமானம் குறிப்பாக முஸ்லிமல்லாதார் விடயத்தில் எவ்வளவு தூரம் பேணப்பட வேண்டும் என்பதை வழியுருத்துகிறது.எனவேதான் நபியவர்களது காலம் முதல் அண்மைய காலங்கள் வரை இதில் முஸ்லிம்கள் மிகக் கவனமாக நடந்திருக்கிறார்கள்.இதனை விரிவாக வரலாற்று நிகழ்வுகளுடன் உஸ்தாத் பஹ்மி ஹுவைதி அவர்கள் தனது முவாதினூன் லா திம்மிய்யூன் என்ற நூலில் விளக்குகிறார்கள்.
 முஸ்லிமல்லாதார் என்று வருகின்ற போது அஹ்லுல் கிதாப்களை இஸ்லாம் விஷேடமாக நோக்குகிறது.அஹ்லுல் கிதாப்கள் என்போர் அல்லாஹ்விடமிருந்து இறங்கிய வேதத்தை பின்பற்றுவோர் அந்த வேதம் இப்போது திரபு படுத்தப்பட்டு மாற்றப்பட்டிருக்கலாம்.(அய்ருல் முஸ்லிமீன் பீ முஜ்தமஇல் இஸ்லாமி).இவரக்ளுடன் குடும்ப உறவை வைத்துக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது.அதாவது அவர்களது பெண்களை திருமணம் செய்ய அனுமதிக்கிறது.அத்தோடு அவரகள் அறுத்தவற்றை சாப்பிட அனுமதிக்கிறது(மாஇதா:05).இஸ்லாம் அன்பிலும் இரக்கத்திலும் கட்டியெழுப்பப்பட வேண்டுமெனக் கருதும் குடும்ப வாழ்வை அவர்களுடன் ஒரு முஸ்லிம் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.தனது சந்ததியின் தாயாக அப்படியான ஒருவரை ஏற்கிறது என்றால் முஸ்லிமல்லாதாருடனான தொர்பு பற்றிய இஸ்லாத்தின் பார்வை எத்துனை விசாலமானது.அஹ்லுல் கிதாப்களுடன் மார்க்க விடயத்தில் வாதிடுவதாயினும் சிறந்த முறையில் (அன்கபூத்-46)அது இடம்பெற வேண்டுமென குர்ஆன் கருதுகிறது.
  இவை எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்வு,பிரபஞ்சம்,உயிர்கள்,பொருட்கள்,மனிதன் பற்றிய இஸ்லாத்தின் சமநிலையான பார்வை இந்த உலகில் ஒரு முஸலிமுக்கும் இவை அனைத்துக்கும்  இடையே அழகிய தொடர்பொன்றை ஏற்படுத்துகிறது.இதனை சுருக்கமாக குறிப்பிட்டால் இஸ்லாத்தின் பார்வை இவற்றுக்கிடையே சுமூகமான உறவை ஏற்படுத்துகின்றது,இவற்றுக்கிடையே அழகான பிணைப்பை உண்டுபன்னுகிறது.இவற்றுக்கிடையே மோதலை உண்டு பண்ணவில்லை.சுமூகமான உறவு,சமாதானம் என்பனவே இஸ்லாத்தின் அடிப்படை உறவு.
   இந்த வகையில் மனிதர்கள் அனைவரும் ஒரு ஆன்மாவிலிருந்து தோன்றியவர்கள்(நிஸா-01).அவர்களுக்கிடையே அடிப்படையில் எவ்வித வேறுபாடும் கிடையாது.அவர்கள் அனைவரும் மனிதர்கள் என்ற வகையில் கண்ணியமானவர்கள்(இஸ்ரா-70,தீன்-04).இந்த கண்ணியமே அவனை பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதியாக மாற்றியது.இந்த கண்ணியம் அவன் மனிதன் என்பதற்காக கிடைத்தது.இது அவன் முஸ்லிம்,யூதன்,கிறிஸ்தவன்…என மத அடிப்படையில் கிடைத்ததல்ல.இந்த கருத்தை இஸ்லாத்தின் போதனைகளுக்கும் ஐ.நாவுக்குமிடையே மனித உரிமைகள் என்ற ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலியின் நூலில் அவர் விரிவாக விளக்குகிறார்.அடுத்து அவர்கள் அனைவரும் நபியவர்கள் கூறிவது போல்(படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பத்தினர்) அல்லாஹ்வின் குடும்பத்தினர் என்ற வகையில் அனைத்து வேறுபாடுகளுக்குமப்பால் ஒன்றாக சந்திக்க முடியுமானவர்கள்.நபியவர்கள் மதீனா சாசனத்தில் மதீனாவிலிருந்த யூதர்கள் உட்பட அனைத்து தரப்பையும் ஒரு உம்மத்தாக குறிப்பிட்டது போன்று ஒரு பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு உடன்பாட்டின் கீழ் ஒன்றாக வாழும் வாய்ப்பு மார்க்க எல்லைகளுக்கப்பால் மனிதன் என்ற பெறுமானத்தில் சாத்தியமானது.
       நீதி,சமத்துவம்,சிந்தனை,செயல் சுதந்திரம்,நலன்பேணல்,தீயனவற்றிலிருந்து பாதுகாத்தல்,நல்லனவற்றுக்கு உதவுதல்,பொதுவான அம்சங்களில் ஒருவருடன் ஒருவர் ஒத்துழைத்தல்,பரஸ்பரம் தெளிவு தேவைப்படும் விவகாரங்களில் அழகிய முறையில் கலந்துரையாடல்,நண்பர்கள் யார்?எதிரிகள் யார்? என்பதனை அடையாளம் கண்டு அவர்களுடனான சரியான உறவைப் பேணுதல்….என முஸ்லிம் முஸ்லிமல்லாதார் தொடர்பு பற்றிய பல பகுதிகள் எமது ஆரம்பகால அறிஞர்கள் முதல் நவீன கால அறிஞர்கள் வரை அனைவராலும் விரிவாக உரையாடப்பட்டுள்ளன.எனினும் அவை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மனோ நிலையில் இருந்தே நோக்கப்பட்டிருப்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.                 


பெரும்பான்மை முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிமல்லாதசிறுபான்மைக்குமிடையிலான உறவு 

 எமது ஆரம்பகால இமாம்கள் முஸ்லிமல்லாதாருடனான உறவு தொடர்பிலான நடைமுறை வடிவங்கள் பற்றிய பல்வேறு விவகாரங்களை இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் அணுகியுள்ளனர்.அவை அனைத்தும் முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக,பெரும்பான்மையாக வாழும் நிலையை கருத்திற் கொண்டதாகவே அமைந்து காணப்படுகிறது.என்றாலும் அவற்றை சரியாகப் புரிவது நாம் எமது சூழலில் அவற்றை எப்படி அணுகலாம் என்பதனை விளங்கிக் கொள்வதற்கு உதவியாக அமையும்.
  ஆரம்பகால கால இமாம்கள் இந்த விடயத்தை ‘பாபுஸ் ஸைர்’ என பிக்ஹ் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.ஹிஜ்ரி122 இல் மரணித்த இமாம் ஸைத் இப்னு அலியின் “அல்-மஜ்மூஃ பில் பிக்ஹ்” என்ற நூலே இந்த விடயத்தை முதலில் பேசியதாக உஸ்தாத் பஹ்மி ஹுவைதி குறிப்பிடுகிறார்.நடை முறை விவகாரங்களை பிற்பட்ட காலங்களில் ஆராய்ந்த போதும் முஸ்லிமல்லாதர் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு அல்லாஹ்வால் அவனது வஹியினூடாக உறுதிப்படுத்தப்பட்டதாகும்.மனிதர்கள்கள் அனைவரும் ஒரு ஆன்மாவிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்ற நிலைப்பபாடு மனிதர்கள் எல்லோரையும் சமமாக பார்க்கின்ற வஹியின் நிலைப்பாடு இங்கு மனித இஜ்திஹாத் இதனை தீர்மானிக்கவில்லை.அதன் நடைமுறை வடிவங்கள் பற்றியே இஜ்திஹாத்கள் இடம்பெற்றுள்ளன.
 மதீனா ஹிஜ்ரத்தின் பின்னர் அது தாருல் ஹிஜ்ராவாக பார்க்கப்பட ஆரம்பித்ததிலிருந்து உலகை தாருல் இஸ்லாம்,தாருல் ஹர்ப் என பிரித்துப் பார்க்கின்ற முறை தோற்றம் பெற்றது.இது பிற்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட சில மாற்றங்களுடன் மூன்றாக பகுத்து நோக்கப்பட்டது.தாருல் அஹ்த் என மூன்றாவது ஒரு பிரதேசமும் இந்த இரண்டுடனும் இணைத்துப் பார்க்கப்பட்டது.
   தாரு்ல் இஸ்லாம் என்பது பல்வேறு அறிஞர்களாலும் வரைவிலக்கணப்பட்டுள்ளது.இதில் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.ஹனபி மத்ஹபை சேர்ந்ந இமாம் ஸர்கஸி “இது முஸ்லிம்களது ஆளுகைக்கு கீழுள்ள பிரதேசம்.அங்கு இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன்,முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலும் காணப்படும்.” என வரைவிலக்கணப்படுத்துகிறார்.மாலிகி மத்ஹபை சேர்ந்த இமாம் தஸுகி “முஸ்லிம்களுக்குரிய பிரதேசமாக இருந்து, அங்கு தற்போது இஸ்லாத்தின் கிரியைகள் அனைத்தும் அல்லது பெரும்பாலனவை நிறைவேற்றப்படுமாயின் அதில் தற்போது காபிர்கள் அதிகாரம் செலுத்தினாலும் அது தாருல் இஸ்லாமாக பார்க்கப்பட வேண்டும்” என்கிறார்.  ஷாபிஈ மத்ஹபை சேர்ந்த புஜைரமி என்பவரது கருத்துப்படி முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்த நிலம்.அது அவர்கள் வெற்றி கொண்டதாயினும் சரி.அதிலிருந்து அவரகள் வெளியேற்றப்பட்டிருந்தாலும் அது தாருல் இஸ்லாமாக பார்க்கப்பட வேண்டும் என்கின்றார்.ஹம்பலி மத்ஹபை சேர்ந்த இமாம் இப்னுல் கையிம் (றஹ்) இஸ்லாமிய ஆட்சி நிலவிய பிரதேசம் என குறிப்பிடுகிறார்.இவை பெரும்பாலும் இஸ்லாம் என்பதனை மையமாக வைத்து பார்க்கப்பட்ட பார்வைகள்.இதே கருத்தை  நவீன காலத்திலும் பல அறி‘ஞர்கள் கொண்டுள்ளனர்.எனினும் இவற்றில் ஹனபி,மாலிகி மத்ஹப்களில் வரும் பாதுகாப்பு,இஸ்லாத்தின் அடிப்படைக் கரிரியைகளை நடைமுறைப்படுத்த முடியுமான சூழல் என்பன முஸ்லிம்களது “ஆட்சிக்குட்பட்ட“ என்ற நிபந்தனையை விடவும் இன்றைய சூழலில் கூடுதல் கவனம் கொடுத்துப் பார்க்கப்பட வேண்டிய நிபந்தனைகள் என பல நவீன கால அறிஞர்கள் கருதுகிறார்கள்.இந்த வகையில் முஸ்லிம்களது பாதுகப்பு உத்தரவாதப்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கு இஸ்லாத்தின் கிரியைகளை அல்லது அதில் அதிகமானதை நிறைவேற்ற முடியுமான சூழல் இருப்பின் அப்பிரதேசத்தை ஒரு காபிர் ஆட்சி செய்தாலும் அது தாருல் இஸ்லாமாக பார்க்கப்பட வேண்டும் என்ற கருத்தை பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.இது மாலிகி,ஹனபி மத்ஹபின் கருத்துக்களை சேர்த்து பார்க்கும் போது நாம் பெற முடியுமான முடிவு என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.கலாநிதி அப்துல் வஹாப் கல்லாப் தனது ஸியாஸா அஷ்ஷரஇய்யா என்ற நூலில் இதனை விளக்கும் போது “இங்கு தாருல் இஸ்லாம் தாருல் ஹர்ப் என்ற பிரிப்பு,இஸலாத்தை ஏற்றல் ஏற்காமை என்பதை வைத்து பார்க்கப்படுவதைப் பார்க்கிலும் பாதுகாப்பு பாதுகாப்பின்மை என்பதனை வைத்து பார்க்கப்படுவதே பொருத்தமானது என்கிறார்.றஸுல் (ஸல்) அவர்கள் மதீனா ஸாஸனத்தில் முஸ்லிம்கள்,முஸ்லிமலாதார் என அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரே உம்மத் என பாவித்த பிரயோகத்தின் உள்ளடக்கத்திற்கு பொருந்தி வரக்கூடியதாக பாதுகாப்பை மையப்படுத்திய வரைவிலக்கணம் காணப்படுலதாக உஸ்தாத் பஹ்மி ஹுவைதி குறிப்பிடுகிறார்.
 தாருல் ஹர்ப் என்பதை இஸ்லாம் வாழும் பூமி,வாழாத பூமி என உலகை இரண்டாக பிரித்துப் பார்ப்பவர்கள் அனைவரும் குப்ர் ஆளும் பூமி அல்லது முஸ்லிமல்லாதார் வாழும் பூமி எனவே வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர். இதில் இமாம் ஷாபிஈயின் வரைவிலக்கணம் “முஸ்லிம்களுடன் சமாதான உறவை கொண்டிராத காபிர்களது பூமி” என அமைந்துள்ளது.இவர் இப்படி வரைவிலக்கணப்படுத்துவதற்கு காரணம் முதலில் தாருல் அஹ்த் என்ற மூன்றாவது ஒரு பிரிப்பை அறிமுகம் செய்தவர் இமாம் ஷாபிஈ ஆவார்.தாருல் அஹ்த் என்பது முஸ்லிம்களுடன் சுமூகமான உறவை வைத்திருக்கும் அதே நேரம் அவர்களுடன் போராடாது அவர்களுக்கு கராஜ் வரி செலுத்துவதாக உடன்பட்ட பிரதேசம் என வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது.இப்பிரதேசம் தாருத் தஃவா என இஸ்லாத்தை பேசுவதற்கும் முஸ்லிம் அங்கு சென்று வாழ்வதற்கும் முடியுமான பிரதேசமாக இன்று அடையாளப்படுத்தப்பட முடியும்.
  இப்பிரிப்பின் அடிப்படையில் முஸ்லிம்களுக்குள் சிறுபான்மையாக வாழும் முஸ்லிமல்லதார் திம்மீக்கள் எனவும்.இஸ்லாமிய பூமியை தரிசித்து தங்கிச் செல்ல அனுமதி பெற்றவர்கள் முஸ்தஃமின் எனவும்.முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் அஹ்லுல் ஹர்ப் எனவும் பார்க்கப்படுகின்றனர்.
 இந்த வகையில் வைத்து இம் மூன்று சாராருடனுமான உறவு தொடர்பில் வித்தியாசமான நடைமுநைகளும் சட்டங்களும் பேசப்பட்டுள்ளன.இதில் திம்மீகள் உடனான உறவு பற்றியே இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் விரிவாகப்பார்க்கப்பட்டுள்ளது.அவர்களுடனான தொடர்பை சுருக்கமாக மதீனா சாசனத்தில் நபியவர்களால் குறிக்கப்பட்ட “எங்களுக்கானதெல்லாம் அவர்களுக்குமானது.எங்களுக்கெதிரானதெல்லாம் அவர்களுக்குமெதிரானது”என்ற பின்னர் திம்மிக்களுடனான உறவின் அடிப்படையை  விளக்கும் விதியாக பார்க்கப்பட்ட விதியினை வைத்து விளக்கலாம்.இந்த உறவு பற்றிய ஒழுங்குகள் வரலாறு நெடுகிலும் கால சூழல் மாற்றங்களை கருத்தில் கொண்டு வளர்ந்து வந்து இன்று அது இஸ்லாமிய நாட்டின் பிரஜாவுரிமை (Citizenship) என்பது வரை விரிவடைந்துள்ளது.ஜிஸ்யா வரியின் வடிவங்கள் கூட உமர்(றழி)காலத்தைப் போன்று நவீன ஒழுங்குகளுக்குள் நின்று மாற்றங்களைப் பெறமுடியும்.இங்குதான் சிறுபான்மையாய் வாழும் முஸ்லிமல்லாதாரின் அரசியல் பங்களிப்பு,நாட்டின் பதவிகளுக்கு,பொருப்புக்களுக்கு நியமித்தல் என்பன தொடர்பிலான விடயங்களும் கவனத்திற்குட்படுகின்றது.உதாரணமாக இஸ்லாமிய நாடொன்றின் ஜனாதிபதி வேட்பாளராக ஒரு முஸ்லிமல்லாதவர் போட்டியிட முடியுமா? அவர் ஆட்சிக்கு வர முடியுமா என்ற விடயங்கள் தொடர்பில் பார்க்கும் போது உஸ்தாத் அப்துல் கரீம் ஸைதான் போன்றவர்களின் கருத்து இது தொடர்பில் நாம் எவ்வளவு விரிவாக சிந்திக்க முடியும் என்ற வாயிலை திறந்து விடுகிறது.தற்போதுள் அரசியல் ஒழுங்கும் நாட்டின் தலைமைப்பதவியும் முன்னைய காலப்பகுதியில் இருந்த கிலாபா ஒழுங்கையும் இமாமத் ஒழுங்கையும் பார்க்கிலும் வித்தியாசமானது என்ற வகையில் இது தொடர்பில் முடியும் என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.உண்மையில்இத்தகைய விவகாரங்கள் தொடர்பில் நாம் பேசுகின்ற போது,புதிய இஜ்திஹாதுகளுக்கு வரும்போது,நஸ்ஸுகளையும் வரலாற்றில் இடம் பெற்ற இஜ்திஹாதுகளையும் இஸ்லாத்தின் நீண்ட வரலாற்றுடன் சேர்த்து விளங்க வேண்டும் என்ற உஸ்தாத் பஹ்மி ஹுவைதியின் கருத்து ஆழ்ந்த கவனத்தைப் பெறத்தக்கது.எமது பார்வைகள் பலபோது குருகியதாகக் காணப்படுவதற்கு வரலாற்றை விட்டும் நஸ்ஸுகளையும்,சட்டங்களையும் வேறுபடுத்தி நோக்குவது காரணமாக அமையலாம்.நாம் அரசியல் பரப்பிலும் பொருளாதார மற்றும் சர்வதேச ஒழுங்குகள் என பல பகுதிகளிலும் புதிய கருத்துக்களாக பார்க்கின்ற பல விவகாரங்கள் எமது அறிவுச் செலுமை மிகுந்த வரலாற்றில் நீண்ட தூரம் ஆய்வுக்குட்பட்டவை.துரதிஷ்டவசமாக நாம் விட்ட இடத்திலருந்து கட்டுமானத்தை தொடராமல் அத்திவாரமற்ற வீடு கட்ட அவசரப்படுகிறோம்.இது இன்திபாழாவில் கல்லெரியும் போராட்டமல்ல.அதற்கு அதற்குரிய பெறுமதி அதற்குரிய இடத்தில் உண்டெனினும்.இது அறிவுச் செழுமை மிகு நாகரிகக் கடலில்,வரலாற்றுக்கடலில் பொருமையாய மூச்சடக்கி முத்தெடுக்கும் செயல்.
  முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதாருக்குமான உறவு தொடர்பில் அடுத்து பேசப்படுகின்ற விடயம்.அடிப்படையில் அவர்களுக்கிடையிலான உறவு சமாதானத்தை அடிப்படையாகக் கொண்டதா?போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டதா? என்பது.இதில் இவ்வுறவு அடிப்படையில் சமாதானத்தை அடிப்படையாகக்கொண்டது என்பது மிகப் பெரும்பாலான அறிஞர்களது கருத்தாகும்.இமாம் ஷாபிஈ “அடிப்படையில் முழு உலகும் ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டியதாகும்.அதன்படியே இஸ்லாத்தின் சட்டங்கள் அமைந்துள்ளன.உலகை இரண்டாகப் பிரித்து நோக்குவது விதிவலக்காக தோற்றம் பெற்ற நிலையாகும்” என்று குறிப்பிடும் கருத்து மனிதர்களுக்கிடையிலான தொடர்பு பற்றிய இஸ்லாத்தின் இயல்பான பார்வையை ஆழமாக நோக்கிச் சொல்லப்பட்டது என கலாநிதி வஹ்பத் ஸுஹைலி “இஸ்லாமிய பிக்ஹில் யுத்தங்கள் ஏற்படுத்திய பாதிப்பு“என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார்.இதைப் பார்க்கிலும் அழகான ஒரு அணுகுமுறைதான் முஸ்லிமுக்கும் முஸ்லிமல்லாதாருக்கும் இடையிலான உறவு தஃவாவை அடிப்படையாகக் கொண்டது என்ற உஸ்தாத் அலி அப்துர் ரஹ்மான் அத் தய்யாரின் கருத்தாகும்.சமாதான உறவும் அதனை இல்லாமல் செய்கின்ற போராட்டமும் தஃவாவிற்கான சாதகமான,முட்டுக்கட்டையான நிலைகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என அவர் குறிப்பிடுகிறார்.இது இஸ்லாத்தின் ரூஹுடன் உடன்பட்டுச் செல்லும் கருத்தாக விளங்குகிறது.முஸ்லிம் உம்மத் ஒரு தூதை சுமந்த உம்மத் என்ற வகையில் அவர்களது உறவு வெறும் நல்லுறவு என்பதனை தாண்டி விசாலமான மனதுடன் ஒருவனை,ஒரு சமூகத்தை அணுகும் உறவாகக் காணப்படும்.நபியவர்களதும் ஸஹாபாக்கதும் உறவுகளை பார்க்கின்ற போது இதனையே நாம் விளங்குகிறோம்.உமர்(றழி)அவர்கள் ஜிஸ்யா என்ற பெயரின்றி அதனை விட இரட்டிப்பாக வரி செலுத்த உடன்பட்ட ஒரு கிறிஸ்தவர் அதற்கு உமர்(றழி) அவர்கள் உடன்படாததால் ரோமுடன் போய் சேர்ந்து கொண்டதை எண்ணி கடுமையாக வருத்தப்பட்டார்.இதனால் பின்பு ஒரு முறை ரோமுக்கு படையெடுத்து சென்ற போதும் அவரை பெயர் கூறி அந்த படைத்தளபதியிடம் திரும்பி இஸ்லாமிய பிரதேசத்துக்கு வருமாறு செய்தி அனுப்பினார்.இது அவர் இஸ்லாத்தின் அழைப்பை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இழந்து விட்டாரே என்று உமர்(றழி) அவர்கள் கொண்ட கவலை என்பதனைத்தான் காண்கிறோம்.எனவே,உமர்(றழி) அவர்கள் தனது ஆட்சிக் காலப்பகுதியில் ஜிஸ்யா என்ற பெயரின்றி ஸதகா என்ற பெயரில் வரி செலுத்த உடன்பட்டார்கள்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிமல்லாதபெரும்பான்மைக்குமிடையிலான உறவு
 முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதாருக்குமிடையிலான உறவு பற்றிய இஸ்லாதின் கருத்தையும் அதன் பிரயோக வரலாற்றையும் வாசிக்கும் போது சிறுபான்மை என்ற நிலையிலிருந்து நாம்இந்த விடயத்தை அணுக வேண்டிய தேவை உள்ளதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதிருக்கின்றது.அவ்வளவு தூரம் இஸ்லாத்தின் பார்வை விசாலமானதாகவும் இயல்பானதாயும் அமைந்து காணப்படுகிறது.எனவேதான் உஸ்தாத் பஹ்மி ஹுவைதி அவர்கள் அவ்வுறவைக் குறிக்க “தஸாமுஹ்“ சகிப்புத்தன்மை என்ற சொல்லை பயன்படுத்துவது கூட இது தொடர்பான இஸ்லாத்தின் கருத்தை கொச்சைப்படுத்துவதாக அமையும் என்கின்றார்.இப்படியான பயன்பாடு கிறிஸ்தவ உலகில் காணப்பட்ட மத அடிப்படை வாதத்தின் பின்னணியில் இஸ்லாமிய உலகை நோக்கி வந்த மிகவுமே பிற்பட்ட காலப் பிரயோகம் என அவர் குறிப்பிடுகிறார். 
  எனினும் நாம் வாழும் சூழலை பார்க்கின்ற போது பெரும்பான்மை மனோ நிலையுடன் இஸ்லாத்தை பின்பற்றுகிறோம் என்று கூறுவதும் தவரானது.ஏனெனில் பெரும்பான்மையாக இருந்து இஸ்லாத்தை பின்பற்றும் போது கூட மூடுண்ட அமைப்பிலான,கடும்போக்கு நடைமுறைகளுடன் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் மிகவும் அறிதே.அப்படி நடந்தவைகள் மோசமான ஆட்சியாளர்களது சில அரிதான செயற்பாடுகளாகவே இருந்தன.அதிலும் அவர்களது அணுகுமுறை முஸ்லிமல்லாதாருடன் மாத்திரம் கடுமையாக இருக்கவில்லை முஸ்லிம்களுடன் கூட அவர்கள்அப்படித்தான் நடந்து கொண்டார்கள்.
   முஸ்லிம் பெரும்பான்மையே முஸ்லிமல்லாதாருடன் இஸ்லாத்தின் அடிப்படையான போதனைகளின்படி மிகவுமே திறந்த மனோநிலையுடன் நடந்திருக்கிறார்கள்.அவர்களது உணர்வுகள் புண்படாத வண்ணம் நடக்க வேண்டும் என இஸ்லாம் வழியுறுத்தியுள்ளது என்றிருந்தால் முஸ்லிமல்லாத பெரும்பான்மைக்குள் வாழும் முஸ்லிம் சிறுபான்மை எவ்வளவு தூரம் நெகிழ்வுத்தன்மையுடன் வாழ வேண்டும் என்பது சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடியுமானது.
  இந்த வகையில் சிறுபான்மை முஸ்லிம்கள் மானிட சகோதரத்துவம் என்ற புள்ளியில் முஸ்லிமல்லாதாருடன் சந்திக்க முடியுமான அனைத்துப் புள்ளிகளையும் இணம் கண்டு பொதுத்தளத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்.அரசியல்,பொருளாதாரம்,நாட்டின் அபிவிருத்தி,நலன்.சமூக ஒழுக்கங்களை நிலை நாட்டல்,அநீதிகளை இல்லாமல் செய்தல்..என பெரும் பரப்புகளுள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாயில்கள் காணப்படுகின்றன.குறிப்பாக பொருளாதாரப்பகுதி முஸ்லிமல்லாதாருடன் இணைந்து பணியாற்றுவதற்கான பல இடம்பாடுகளை கொண்டிருப்பதாக பல தனியான ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.இங்கு இஸ்லாமிய வங்கி தொடர்பாக நாம் கொண்டிருக்கின்ற பல கருத்துக்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.அரசியல் பரப்பும் சமூகப் பரப்பும் கூட இத்தகைய பரந்த இடம்பாடுகளைக் கொண்ட பகுதிகளாகும்.அத்தோடு கலை இலக்கியம் ஊடகம் என்பனவும் பொதுவாக மனித நலன்,மானிட விழுமியங்கள் என இணைய முடியுமான பல இடங்களை கொண்டிருக்கிறது. இதன் போது முதலில் நாம் எம்மை தூதை சுமந்த சமூகமாக ஒழுங்கு படுத்திக் கொள்ளுதல் முதன்மையானது.இதில் நாம் இஸ்லாத்தின் மாறாத மற்றும் மாறும் பரப்புக்களை சரியாக இணங்கண்டு கொள்வது அடிப்படையானது.
  அடுத்து நீதி,நல்லுறவு என்ற பாலம் எமக்கும் பெரும்பான்மை சமூகத்துக்குமிடையே போடப்பட வேண்டும்.இங்கு நாம் இனம் என்ற அடையாளத்திலன்றி,உயர்ந்த பெறுமானங்களைக்கொண்ட தஃவா சமூகம் என்ற வகையில் எமது உறவை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் நீதி என்ற பெறுமானத்தின் முன்னால் அனைவரும் சமமாக நோக்கப்படும் நிலை உருவாக வேண்டும்.ஒரு பெரும்பான்மை சகோதரர் சிறுபான்மை முஸ்லிம் ஒருவருக்கு இழைக்கும் அநீதி,அதன் பிரதிபலிப்பாக அவர்களுடன் அநீதியாக நடந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கமாட்டாது.அந் நிகழ்வுகள் குறிப்பிட்ட தனியான நிகழ்வுகளாக பார்க்கப்பட்டு உரிய தீர்வுகள் எட்டப்படுகின்ற முறைமைகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இந்த விடயம் சரியாகப் புரியப்படாமையே நிறைய இனக்கலவரங்களின் வாயிலாக அமைந்து விடுகின்றது.ஒரு குறித்த ஒரு பிரதேசத்தில் குறித்த இரு சாராருக்கிடையில் பிரச்சினை ஏற்படுமாயின் அது அங்கே தீர்க்கப்பட வேண்டும்.அது நீதி என்ற  பெறுமானத்தில் குறித்த விடயத்துக்கு தீர்வு காண்பதுடன் முடிவடைய வேண்டும்.அது ஏனைய பிரதேசத்தவர்களது உறவுகளை பாதிப்பதற்கு எத்தகைய வாய்ப்பும் இருக்க முடியாது.
  உலகில் முஸ்லிம் சிறுபான்மைகளுக்கெதிராக இடம் பெறும் அநீதிகளுக்கு பெறும்பான்மை மாத்திரம்தான் காரணம் எனக் கூறமுடியாது.அதற்கு முஸ்லிம்கள் தவறாக இஸ்லாததை பிரதிநித்துவப்படுத்தியமையும் ஒரு முக்கிய காரணமாகும்.இந்த வகயில் பெரும்பான்மையுடன் சரியான உறவை கட்டியெழுப்ப வேண்டுமாயின் பிக்ஹின் புவியியல்,வரலாற்று,சமூகப்பல்வகைமைகள் உள்வாங்கப்பட்டு அதிலிருந்து எமக்கான பல்வகைமை கொண்ட ஒரு பிக்ஹ் நடைமுறை புலக்கத்தில் விடப்பட வேண்டும்.இங்கு மாலிகி,ஹனபி மத்ஹப் சார்ந்த பிக்ஹ் பாரம்பரியங்களும்,மேற்கிலும் மற்றும் புவிப்பல்வகைமைகளிலும் உருவாகிய பிக்ஹுகளும் கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.அத்தோடு இது பிக்ஹுல் அகல்லிய்யாத் என்ற வடிவத்தை வைத்தும் பார்க்கப்பட முடியுமானது.ஐரோப்பிய அமெரிக்க நாடுகளை வைத்து உருவாக்கப்பட்ட பிக்ஹை கற்பதற்கான வாய்ப்பு எமது நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும்.அது எமது வாழ்வமைப்பை இஸ்லாத்தின் இலகு நடையில் ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பபை வழங்கும்.அந்த பிக்ஹை படிக்கும் போது ஷெய்க் கர்ளாவி குறிப்பிடுவது போல் “இஜ்திஹாத் இன்திகாயி“ எனப்படும் பிக்ஹின் பல் வகைமையுள் எமக்குப் பொருத்தமானதை தெரிவு செய்தல்தான் அதில் அதிகம் என்பதைக் காண்கிறோம்.இந்த இடத்தில் இஸ்லாத்தை கர்ண கடூரமாக கட்மைத்து வைத்துள்ள,அதனை தமது வாழ்விலேயே முழுமையாக பிரதிபலிக்காத உபதேசிகளை வெள்வது பெரும் சவாலாக அமையலாம்.
  இந்த விடயம் மிகவும் விரிவாக கலந்துரையாடலுக்குட்படுத்தப்பட்டு  எமது வாழ்வை  மீள் ஒழுங்கமைப்பது  என்பது எமது நாட்டைப் பொருத்தவரை இஸ்லாத்தை சரியாக பிரதிநித்துவப்படுத்துவதில் மிக முக்கிய அம்சமாக இருக்கும் என்பதை இஸ்லாத்தின் விரிந்த தன்மையையும் எமது வாழ்வையும் சரியாக படித்துப்பார்க்கும் யாரும் மறுக்கமாட்டாரகள்.பலபோது எமது முன்னைய இமாம்களின் கருத்தின்படி  எமது  நாடு இன்றைய  சர்வதேச  சூழலில் தாருல் இஸ்லாமாகவே பார்க்கப்பட முடியுமாக இருக்கின்றது.உண்மையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் கூட இந்த வகைப்பாட்டுக்குள் வர முடியாத சூழல்தான் இன்று காணப்படுகிறது.எனினும் அல்லாஹ்வின் அந்த அருளை  நாம் துஷ்பிரயோகம் செய்துள்ளோம்.நாம் இலங்கை தீவுக்குள் இன்னோர் தீவாய் வாழ்கிறோம்.உண்மையில் முஸ்லிமல்லாதாருடனான உறவு பற்றி பேசும் போது பாவிக்கின்ற நிர்ப்பந்தம் நிர்ப்பந்தம் என்ற சொற்களெல்லாம் நாம் தகவமைத்துக் கொண்ட பிக்ஹில் உள்ள நிர்ப்பந்தங்களே தவிர இஸ்லாத்திலுள்ள நிர்ப்பந்தங்களல்ல.இங்கு இலங்கை முஸ்லிம்களைப் பார்த்து நீங்கள் சில மஞ்சல் தாள்களையுடைய பிக்ஹ் நூல்களுக்குள் உங்களது வாழ்வை சிறைப்படுத்தியுள்ளீர்கள் என உறத்துக் கூவ வேண்டும் போலிருக்கிறது.குறைந்தது ஷாபி மத்ஹபையாவது சரியாக கற்றுத் தேராதவர்களையே  நாம் உலமாக்கள் என்கிறோம்.இந்த வரையரையிலிருந்து வெளிவர  வேண்டியது இன்றைய சூழலில் முதன்மையான மார்க்கக்கடமை.
  கோடிகள் கொடுத்து நாம்அமைத்து வைத்துள்ள,அமைத்துக் கொண்டிருக்கும் பள்ளிவாயில்கள்,வருடா வருடம் கோடிகளுக்கு அருத்துப் பலியிடும் மிருகங்கள்,இஸ்லாம் வலியுருத்தும் சுன்னாவான பல போது பர்ளான உற்பத்தியை விட்டு விட்டு அடுத்தவனது உற்பத்திக்கு ஹலால் கொடுப்பது பற்றிய எமது சிந்திப்பு,முன்பு ஊருக்கு ஊர் என்றிருந்தது மாறி வீட்டுக்கு வீடு என மத்ரஸாக்களை அமைத்து,கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டிடங்களை அமைத்து நாலு தாளை மனனமிட்டு ஒப்புவிக்கும் அறிஞர்களை உருவாக்குகிறோம் என இந்த நாட்டின் திறமையான மனித வளங்களை உயிருடன் கொலை செய்யும் செயலை செய்து கொண்டு இஸ்லாத்தை வளர்ப்பதாக வீராப்புப் பேசுதல் என,இந்த நாட்டின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்காது ஒதுங்கியிருந்து கொண்டு வெரும் தோற்றத்திலும் கிரியைகளிலும் பகட்டுக்காட்டும் எமது இஸ்லாம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதுதான் விடை காண முடியாத புதிராக உள்ளது.                
  இந்த நாட்டிலுள்ள அஹ்லுல் கிதாப்களுடனான உறவு எனத் துவங்கி நமக்கு நெருக்கமானவர்கள் யார்?எதிரிகள் யார்?என துள்ளியமாக இணங்காணப்பட்டு எமது உறவுகளை பேணுவதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமைகள் உருவாக்கிக் கொள்ளப்பட வேண்டும்.அதனுடன் சேர்த்து சிறுபான்மையாய் கட்டுண்டு போயுள்ள மனோ நிலையை உடைக்கும் வகையில் இஸ்லாத்தை அதன் பரந்த தன்மையுடன் பிரதிநிதித்துவப் படுத்தும் சமூகங்களுடனான புத்திஜீவித்துவ உறவு முதல் திருமண உறவு வரை சமூகச் சாளரத்தை திறக்க வேண்டும்.இது உள் நோக்கியும் அஹ்லுல் கிதாப்களில் துவங்கி மற்ற சாராரை நோக்கியும் விரிவடைய வேண்டும்.ஸகாத்,ஸதகா போன்ற விடயங்களில் முஸ்லிமல்லாதாருக்கான பங்குகள் இணங்காணப்பட்டு அவை சரியாக அவர்களை போய்ச் சேர்வதற்கான ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

  இப்படி இத்துறை சார்ந்து ஆழமாக சிந்திக்கும் வாயில்களை திறந்து விடும் வகையில் அதற்கான ஒரு மஜ்மஉல் பிக்ஹின் உருவாக்கம் இவற்றின் முதல் படியாக அமையும்.இங்கு இந்த கட்டுரை இவ்விவகாரம் தொடர்பாக மிகவும் சிறிய பரப்புக்குள் தொகுக்கப்பட்டதாகும்.இதன் தொடர்ச்சி விரிந்த வாசிப்புக்களையும் ஆய்வுகளையும் வேண்டி நிற்கிறது.
உசாத்துணைகள்
  1. முவாதினூன் லா திம்மிய்யூன்-பஹ்மி ஹுவைதி
  2. பீ பிக்ஹில் அகல்லிய்யாத்-கலாநிதி யூசுப் அல்-கர்ளாவி
  3. அய்ருள் முஸ்லிமீன் பீ முஜ்தமஇல் இஸ்லாமி- கலாநிதி யூசுப் அல்-கர்ளாவி
  4. அகல்லிய்யாதுத் தீனிய்யா வஹல்லுள் இஸ்லாமி- கலாநிதி யூசுப் அல்-கர்ளாவி
  5. அஸ்லுல் அலாகா மஅ அய்ரில் முஸ்லிமீன் வல் கவாஇதுல் பிக்ஹிய்யா-அஹமத் தைஜானி ஹாரூன் அப்துல் கரீம்
  6. மின் பிக்ஹில் அகல்லிய்யாதில் முஸ்லிமா-காலித் முஹம்மத் அப்ர்ல் காதிர்
  7. கவாஇதுல் மர்ஜஇய்யா பித் தஆமுல் மஅ அய்ரில் முஸ்லிமீன்-கலாநிதி காலித் ஸஈத் தபூஷீத்
  8. அழ்-ழவாபிதுஷ்ஷரஇய்யா லில் முஆமலாதில் இகதிஸாதிய்யா அல்-ஆலமிய்யா-கலாநிதி ஹுஸைன்ஹுஸைன் ஷஹாதா
  9. அத்-தஆமுல் மஅ அய்ரில் முஸ்லிமீன்-உஸுலு முஆமலதிஹிம் வஇஸ்திஃமாலிஹிம்-கலாநிதி அப்துல்லாஹ் இப்னு இப்றாஹீம் அத்தரீகீ
10.  கவாஇதுத்தஆமுல் மஅ அய்ரில் முஸ்லிமீன்-ஸாலிம் அல்-பஹன்ஸாவி
11.  அகல்லிய்யாதுல் முஸ்லிமா வாகிஅன் வபிக்ஹன்-அஹமத் அர்ராவி
12.  ஸினாஅதுல் பத்வா வபிக்ஹுல் அகல்லிய்யாத்-அப்துல்லாஹ் இப்னு பய்யாஹ்
13.  அஹ்காமுஸ் ஸிம்மிய்யீன் பீ தாரில் இஸ்லாம்-கலாநிதி அப்துல் கரீம் ஸைதான்
அஹ்காமுத்தஆயுஷ் மஅ அய்ரில் முஸ்லிமீன்-முஸ்தபா மக்கீ ஹஸன் அல்-கபீஸி

Monday, November 10, 2014

நேரப் பயன்பாட்டில் வெற்றி - எம்.என்.இக்ராம்

November 10, 2014 at 10:32am

(பயணம்-43 சஞ்சிகைக்காக எழுதப்பட்ட ஆக்கம்)
நேரம் பொன்னானது என நேரத்தை தங்கத்திற்கு ஒப்பிடுகின்றனர்.இதுஇப்பிரபஞ்சத்தை சடவாதப் பெறுமானம் கொண்டு மாத்திரமே நோக்கத்தெரிந்த சடவாதிகளின் கண்ணோட்டத்தில் சரியாகஇருக்கலாம்.ஆனால்,அதனைப் பார்க்கிலும் விரிந்த பார்வைகொண்டவர்களுக்கு நேரம்தான் வாழ்வாகும்.”
                                 -இமாம் ஹஸனுல் பன்னா-
 நேரம் என்று பேசுகின்ற போதே நேர முகாமை தொடர்பான முன்வைப்புகளும் நேரத்துக்கு சமூகம் தராமை தொடர்பான முறைப்பாடுகளும்தான் மனக் கண்முன் வந்து நிற்கும் கருமங்கள்.இது தொடர்பில் பேசுபவர்களும் முறைப்படுபவர்களும் கூட அவற்றை எவ்வளவு தூரத்திற்கு பிரதிபலிக்கின்றனர் என்பது எப்போதும் மனதில் எழும் வினா.எனவே,இது தொடர்பில் அதிகம் ஈடுபாடு கொள்ளாத மனோ நிலைதான் எனக்கிருந்தது.நேரத்தை உச்ச அளவில் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதில்தான் ஈடுபாடு இருந்தது.
 தவிர்க்க முடியாமல் இந்த தலைப்பை எழுத வேண்டும் என்ற நிலையில் இதனை எழுத முன்னர் இரு விடயங்களை செய்ய வேண்டுமென தீர்மானித்தேன்.
1-நேர முகாமை,அதற்கான பயிற்றுவிப்பு என்பது தொடர்பில் புரிதலை பெறுதல்
2-இயன்றவரை அதனை நடைமுறைப்படுத்த முயற்சித்தல்.
 இந்த இரண்டிலும் வித்தியாசமான அனுபவங்களும் புரிதலுமே கிடைத்தது.குறிப்பாக இஃவான்களின் புரிதலில் நேரத்தின் மீதான கரிசனை,நேரத்தை தியாகம் செய்தல்,நேரத்தை உச்ச அளவில் பயன்படுத்தல்,நேரத்தை பொருத்தமான வகையில் ஒழுங்கு படுத்தல் என்ற வகையிலேயே இது தொடர்பில் பார்க்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை எனது வாசிப்புக்கும் சகோதரர்களின் கருத்துப் பரிமாறல்களுக்கும் உட்பட்ட வகையில் புரிந்து கொள்ள முடிந்தது.
 நேரமும் இமாம் பன்னாவும் 
இமாம் பன்னா அவர்கள் நேரத்தை பௌதீகப் பெறுமானங்கள் அனைத்தையும் தாண்டி அதனை வாழ்வாகப் பார்த்தார்கள்.இமாமவர்கள் இப் புரிதலை குர்ஆனிலிருந்தும்,(“அல்லாஹ்தான் இரவையும் பகலையும் நிர்ணயம் செய்கிறான்”-முஸ்ஸம்மில்:20-) ஹதீஸிலிருந்தும்,(“ஒருவர் தனது வாழ்வை எப்படி கழித்தார் என மறுமையில் விசாரிக்கப்படும்”) ஸலபுகளின் புரிதல்களிலிருந்தும் (“இமாம் ஹஸனுல் பஸரி,இமாம் இப்னுல் கையிம் அல்-ஜவ்ஸி போன்றோர் இக் கருத்தை பேசியுள்ளனர்”)தான் பெற்றிருக்கிறார்கள்.
 “நேரப்பயன்பாட்டில் வெற்றி என்பது வெறுமனே நுணுக்கமான திட்டமிடலிலும் சாதகமான சூழ்நிலையிலும் மாத்திரம் தங்கியதாக இல்லை அது பொருத்தமான நேரத்திலும்(அல்-வக்துல் முனாசிப்) தங்கியுள்ளது” என்ற இமாமவர்களின் கருத்து,குறித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அச்சந்தர்ப்பத்திற்கேற்ற பணியை நிறைவேற்றுவதன் மூலமே நேரத்திலிருந்து முழுமையான பிரயோசனத்தைப் பெற முடியும் என்பதனை விளக்குகிறது.இதனை இஸ்லாம் தொழுகைக்கான நேரத்தை பிரித்து அமைத்திருப்பதில் இருந்தும்,காலை,மாலை என நேரங்களை மற்றும் வெள்ளி,அய்யாமுல் பீழ் என நாட்களை சிறப்பித்திருப்பதில் இருந்தும் மாதங்களை சிறப்பித்திருப்பதில் இருந்தும் புரிந்து கொள்கிறோம்.
 இவ்வகையில் பொருத்தமான பொழுதை பொருத்தமான செயலிற்கு பயன்படுத்தாமல் இருப்பதற்கு தடையாக பொடுபோக்கு,அசமந்தப்போக்கு காரணமாய் அமையும் என்ற கருத்தை அஃராப்-179 ம் வசனத்தில் இருந்து விளக்கும் இமாமவர்கள் நேரத்தை வாழ்வு பற்றிய சரியான புரிதலுடன் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டலை சகோதரர்களுக்கு வழங்குகிறார்.
 இமாம் ஹஸனுல் பன்னாவின் வாழ்வை நாம் நோக்கும் போதும் நேரத்தை மிகச் சரியாக பயன்படுத்தியமைக்கான முன்மாதிரியை அவரது வாழ்வில் காணலாம்.இமாமவர்களின் சகோதரர் உஸ்தாத் அப்துர் ரஹ்மான் அவர்கள் அவரது வீட்டில் இமாமவர்கள் எப்படி நேரத்தைக் கழித்தார்கள் எனக் கூறும் போது;“அவரது நடத்தைகளில் மக்களுக்கு தெரியாத ஒரு பகுதி இருந்தது.அது அவருக்கும் அவரது இறைவனுக்கும் இடையிலான தொடர்பு.அதனை அவர் மக்களை விட்டும் மறைத்திருந்தார்.அவரது வீட்டார் மாத்திரமே அதனை அறிபவர்களாக இருந்தனர்.அவர் வீட்டில் இருக்கும் போது தனது குர்ஆனை கையில் எடுத்தவராகவே இருப்பார்.அதனை கீழே வைக்கவே மாட்டார்.குர்ஆனை மனனம் செய்த யாராவது இருந்தால் அவரிடம் குர்ஆனை ஓதிக் காண்பிப்பார்.யாரும் இல்லாவிடன் சிறியவர்களிடம் குர்ஆனை கொடுத்து ஓதிக் காண்பிப்பார்.இப்படி அவர் குர்ஆனின் மூலம் வீட்டை நிரப்புவார்...”
இதன் கருத்து அவர் வேரு எதற்கும் நேரம் ஒதுக்கவில்லை என்பதல்ல.அவரது வாழ்வில் இந்த விடயத்தில் அவர் சமநிலை பேணுபவராக இருந்தார்.எனவேதான் அவரது பிள்ளைகள் அவரை பற்றி சொல்லும் போது ஒவ்வொரு பிள்ளைக்காகவும் தனியான கோப்புகள் வைத்து இமாமவர்களே தனது கையால் அவற்றில் குறிப்பிட்டு ஒவ்வொரு பிள்ளையையும் தனியாக கவனித்தாக குறிப்பிடுகின்றனர்.அதே போன்று அவர் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதிலும் தனது நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தியிருக்கிறார்.இது அவரது நிறைந்த தஃவா செயற்பாடுகளுக்கு மத்தியில் அவர் நேரத்தை எப்படி ஒழுங்கு படுத்தி பயன்படுத்தியிருக்கிறார் என்பதை காட்டுகிறது.அவரது இரவு வணக்கம் பற்றிய உஸ்தாத் உமர் தில்மிஸானி,பஹாஉத்தீன் அமீரி போன்றவர்களது சாட்சியங்களும் இதனையே காண்பிக்கின்றன.
 அவரது தஃவா செயற்பாடுகள் பற்றி அவரது தோழர்கள் குறிப்பிடும் போது பின்வரும் நிகழ்வை குறிப்பிடுகிறார்கள் “இமாமவர்கள் ஸ்கந்திரியாவிலுள்ள ஒரு பள்ளிவாயிலில் ஜும்ஆ பிரசங்கம் செய்தார்கள்.பின்னர் பக்கத்திலுள்ள மத்திய நிலையத்தில் சற்று களைப்பரினார்.பின்னர் ஜஸீரதுல் ஹல்ரா என்ற தீவிற்கு சென்று பகல் போசனத்தை எடுத்தோம்.பிறகு அப்பிரதேச பள்ளிவாயிலில் இமாமவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.பிறகு அங்கிருந்து றஷீத் என்ற பிரதேசத்துக்கு ஓடத்தில் திரும்பினோம்.அங்கிருந்த ஷுஃபாவில் ஒரு உரையை நிகழ்த்திவிட்டு அங்கிருந்து இன்னோர் ஷுஃபாவின் நிகழ்வொன்றில் உரையாற்ற இமாமவர்கள் சென்றார்கள் இவ்வுரை இஷா தொழுகையை தொடர்ந்து இருந்தது.பிறகு ஸ்கந்திரியா மத்திய நிலையம் வந்து அப்பிரதேச சகோதரர்களுடன் நிர்வாக விடயங்களில் கலந்துரையாடிவிட்டு அங்கு தங்கி அதிகாலையில் கைரோ திரும்பினோம்.” இப்படி ஒரு நாள் இரு நாளல்ல இதுதான் அவரது ஷஹாதத் வரையிலான வாழ்வாக இருந்தது.குறித்த இந்தப் பயணத்தை பற்றி சொல்லும் போது வழியில் பொலிஸ் கடவையில் நின்றிருந்த போது அங்கு நின்ற சில நிமிடங்களை அங்கிருந்த பொலிஸ் சிப்பாயை அறிமுகமாக பயன்படுத்திய நிகழ்வை சகோதரர்கள் குறிப்பிடுகின்றனர்.இதற்கு காரணம் கேட்ட போது “நாம் ஒரு நிமிடம் தரித்தோம் நாம் அதனையும் தஃவாவை பரப்ப பயண்படுத்த வேண்டுமே.” என இமாமவர்கள் பதிலளிதத்தாக குறிப்பிடுகின்றனர்.இதுவும் இமாமவர்களது வாழ்வில் நேரம் எப்படி மிக உயர்ந்த அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை தருகின்றது.அத்தோடு கடமையில் நேரம் தவறாமை,நேரத்திற்கு சமூகம் தருதல் என்ற விடயங்களிலும் இமாமவர்கள் கரிசனை கொண்டிருந்தார்கள்.
நேரத்தில் பயன் பெற இலக்குகளும் அதனை அடைவதற்கானசெயல்களும் முக்கியமானவை 

 நேரத்தில் கரிசனை கொள்வதென்பது வெறுமனே அது தன்னளவிலான ஒரு இலக்கன்று.ஆனாலும் அதனை மறுதலிக்கவும் முடியாது.ஏனெனில் நேரம்தான் எமது வாழ்வு.வாழ்க்கையில் உயர்ந்த ஒரு இலக்கின்றி நேரம் குறித்து உரையாடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.அதே போன்று இலக்குகள் மாத்திரம் இருந்தும் போதாது இதனை அடைவதற்கான செயற்பாடுகளும் நுணுக்கமாக திட்டமிடப்பட்டிருக்க வேண்டும்.அப்போதுதான் நேரத்திலிருந்து உரிய பயனைப் பெற முடியும்.இந்த வகையில்தான் காலத்தின் மீது சத்தியம் செய்கின்ற இறைவன் அதனை பயன்படுத்துவதில் மனிதன் நஷ்டமடைந்து விடாதிருக்க அதற்கான செயற்திட்டமொன்றையும் முன்வைக்கிறான்(ஸுரா அஸ்ர்).
 நேரத்தைப் பற்றி உரையாடுகின்ற எவரும் இது தொடரபில்தான் அதிக கவனம் கொடுத்து பேசுவதைக் காண்கிறோம்.இப்படி அணுகும் போதுதான் இந்த விடயம் முழுமை பெறுகிறது.உஸ்தாத் முஸ்தபா தஹ்ஹான் அவர்கள் “நேர முகாமை” தொடர்பான அவரது நூலை இந்த வகையில் மாணவர் செயற்பாட்டை மையமாக வைத்து அமைத்திருப்பது இது தொடர்பில் நாம் முன்மாதிரியாய் காணத்தக்க ஒரு விடயமாகும்.
 இந்த நோக்கில்தான் இஃவான்களது தர்பியா பாரம்பரியத்திலும் இலக்கு நோக்கிய பயிற்றுவித்தல் என்பது முக்கிய இடத்தை வகிக்கிறது.தஃவாவினது தனி நபர் உருவாக்கம்-குடும்ப உருவாக்கம்-சமூக உருவாக்கம்-ஆட்சியை சீர் திருத்தல்-இஸ்லாமிய தேச விடுதலை-கிலாபத்-மனித சமூகத்திற்கு வழிகாட்டல் என்ற இலக்குகளும் அவற்றுக்கான செயற்பாடுகளும் வரையறுக்கப்பட்டு அவற்றை நோக்கி அங்கத்தவர்கள் பயிற்றுவிக்கப்படுவதானது அவர்களது நேரத்தை சிறந்த முறையில் கையாள்வதற்கான குறித்த இலக்கையும் செயற்பாடுகளையும் வழங்குவதாக அமைகிறது.உஸ்தாத் அப்துல் ஹமீத் கஸ்ஸாலி அவர்கள் இவ்விலக்குகளுள் ஆரம்ப மூன்றையும் குறுங்கால இலக்குகள் எனவும் மற்றயவற்றை நீண்டகால இலக்குகள் எனவும் ‘சமூக எழுச்சிக்கான இஸ்லாமிய செயற்திட்டத்தின் அடிப்படைகள்’ என்ற தனது நூலிலே பிரித்து நோக்குகிறார்.
 இங்கு உருவாக்கம் என்று வருகின்ற போதும் அதற்கான சாதனங்களும் வரையறை செய்யப்பட்டுள்ளன. உஸ்ரா-கதீபா-ரிஹ்லா-தௌரா-நத்வா-முஹய்யம்-முஃதமர் போன்றன உருவாக்கத்திற்கான சாதனங்கள்.இவை ஒவ்வொன்றின் மூலமும் எத்தகைய இலக்குகள் அடையப் பெற வேண்டும் என்பதும் வரையரை செய்யப்பட்டுள்ளது.அதே போன்று அவற்றுக்கான கால,நேர வரையறைகளும் காணப்படுகின்றன.
 அடுத்து இஃவான்களின் தஃவாவில் தனிநபர் உருவாக்கம் என்பதனை மையமாக வைத்தே ஏனைய அனைத்து செயற்பாடுகளும் முன் கொண்டு செல்லப் படுகின்றது என்ற வகையில் குறித்த தனி நபர் எத்தகைய அடிப்படைகளில்(அர்கானுல் பைஆ) பயிற்றப்பட வேண்டும்.அவை ஒவ்வொன்றிலும் எதிர்பார்க்கப்படுகின்ற அடைவுகள் யாவை?என்பன துல்லியமாக வரையரை செய்யப்பட்டுள்ளதுடன்.அந்த தனிமனிதன் கொண்டிருக்க வேண்டிய பண்புகள்(ஸிபாதுல் அஷரா) யாவை?அவை ஒவ்வொன்றிலும் அவன் அடைய வேண்டிய நடத்தைகள் என்ன?அவற்றை எப்படி படிமுறை ஒழுங்கில் அடையலாம்?அதற்கான பயிற்சித் திட்டங்கள் என்ன?என்பதுவும் கால,நேர வரையறைகளுடன் வரையறுக்கப்பட்டுள்ளன.இந்த அனைத்தும் படி முறை ஒழுங்கில் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பது மற்றுமோர் சிறப்பம்சமாகும் .இதனால் இந்த ஒவ்வொர் படி நிலையிலும் ஒருவர் கொண்டிருக்கும் பண்புகளையும் தயார் நிலைகளையும் பொருத்து அவரிடமிருந்தான செயற் பங்களிப்புகள் வித்தியாசமான வகையில் களத்தில் பொது இலக்கை அடைய பெற்றுக் கொள்ளப்படுகிறது.அத்தோடு இஃவான்களின் பயிற்றுவிப்பில் காலம் என்பது மாற்றமுறாத ஒரு பண்பாக எப்போதும் இருக்கின்றது.இதனைத்தான் இமாமவர்கள் “காலம் சிகிச்சையின் ஒரு பகுதியாகும்”என்கிறார்கள்.
இந்த அனைத்தையும் வைத்து பார்க்கின்ற போது இஃவானிய தர்பியத்துக்குள்ளால் உட்படுத்தப்படுகின்ற ஒருவர் அவரது நேரத்தை சிறப்பாக திட்டமிடுவதற்கு இயல்பாகவே வழிப்படுத்தப்படுகிறார்.அவரது நேரங்கள் வீணாக கழிந்து போவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே காணப்படும்.அதாவது இமாம் பன்னா சொல்வது போன்று நேரங்களைப் பார்க்கிலும் கடமைகள் அதிகமாய்க் காணப்படும்.
நேரத்தை பயன்படுத்துவதற்கான குறிப்பான வழிகாட்டல்களும்கடமைகளும்  
இஃவான்களின் தனிமனித உருவாக்கச் செயற்பாட்டில் ஒரு தனிமனிதன் பெற்றிருக்க வேண்டிய முக்கிய பண்புகளுள் ஒன்றாக நேரத்தின் மீதான கரிசனை குறிக்கப்பட்டுள்ளது.ஒரு சகோதரர் தனது நேரத்தை தஃவாவின் இலக்குகளை அடையும் வகையில் தன்னை பயிற்றுவித்துக் கொள்வதிலும் அதற்காக செயற்படுவதிலும் செலவு செய்ய வேண்டும் என்ற வகையில் தனது நேரத்தில் ஒரு நொடியும் வீணாகப் போய் விடாமல் அதில் கரிசணை கொள்ள வேண்டும் என்பதனைத்தான் இப்பண்பு சுட்டிக்காட்டுகிறது.இந்தக் கரிசணை அடுத்த சகோதரன் தனது நேரத்தை சரியாக பயன்படுத்துவதற்கு உதவும் வகையில் அமைய வேண்டும் என இமாமவர்கள் சகோதரர்களுக்கான தனது உபதேசத்தில் குறிப்பிடுகிறார் “கடமைகள் நேரங்களை பார்க்கிலும் அதிகமாகும் எனவே,பிறர் தமது நேரத்தை பயன்படுத்த அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.அவர்களிடம் உங்களுக்கு ஒரு பணி இருப்பின் அதனை சுருக்கமாக நிறைவு செய்து கொள்ளுங்கள்.”
 அதே போன்று களத்தில் செயற்படுமாறு கடமையாய் பணிக்கப்பட்ட ஒரு சகோதரனின் கடமைகள் தொடர்பில் இமாமவர்கள் குறிப்பிட்டுள்ள 40/38 கடமைகளும் கூட இத்தகைய ஒரு சகோதரர் தனது நேரத்தை எப்படி ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்கள்தான்.அவை ஒவ்வொன்றுக்கும் குறித்த சகோதரர்கள் தமது நேரத்தை ஒதுக்குவது அவர்களது கடமையாக மாறுகின்றது.அவை அனைத்தும் நேரம் தொடர்பில் பேசுகின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களாயினும் இங்கு குறிப்பாக நேரத்தை தொடர்புபடுத்தி பேசிய சில கடமைகளை நினைவு படுத்துவது இந்த விடயத்தை விளங்க உதவியாய் அமையும்.
1-(37)எப்போதும் தௌபாவிலும் இஸ்திஃபாரிலும் ஈடுபடுங்கள்.பெரும் பாவங்கள் எப்படிப் போனாலும் சிரிய பாவங்களில் இருந்தே முழுதாக தவிர்ந்திருங்கள்.நேரத்தில் கரிசனையாய் இருங்கள்.ஏனெனில் அதுதான் வாழ்வாகும்.ஹராத்தில் விலாதிருக்க வேண்டுமென்பதால் சந்தேகமானவற்றை விட்டும் பேணுதலாக நடந்து கொள்ளுங்கள்.
2.(06 )நீங்கள் வாசிப்பிலும் எழுத்திலும் திறன் பெற்றிருக்க வேண்டும்.அப்படி இல்லாது விடின் அதனை கற்றுக் கொள்ள வேண்டும்.இஃவான்களின் பத்திரிகைகள்,சஞ்சிகைகள்,பிரசுரங்களை அதிகமாக வாசியுங்கள்.அளவில் சிறிதாக இருப்பினும் உங்களுக்கென்று ஒரு தனியான வாசிகசாலை இருக்க வேண்டும்.நீங்கள் ஒரு துறை சார்ந்த நபராயின் உங்கள் துறையில் ஆழமாகக் கற்க வேண்டும்.பொதுவான இஸ்லாமிய விவகாரங்களில் கூடிய கரிசனை  செலுத்த வேண்டும்.அதன் மூலம் அவ்விவகாரங்களை தஃவாவின் போக்குடன் இயைந்த வகையில் நோக்கவும் மதிப்பீடு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
3. (07) அல்-குர்ஆனை அழகாக ஓதவும் அதன் கருத்துக்களை சிறப்பாக விளங்கவும் முற்பட வேண்டும்.முடிந்த வரை ஸீராவையும் ஸலபுகளின் வரலாற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும்.அத்தோடு அகீதாவின் அடிப்படைகளிலும் அன்றாட சட்டங்கள் மற்றும் ஷரீஆ சட்டங்களின் நுணுக்கங்கள் என்பவற்றில் அத்தியவசியமானவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
4. (15) உங்களது தொழிலிற்குரிய உரிமையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு முழுக்கரிசனை செலுத்துங்கள்.அதாவது உங்களது பணியை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் செய்தல் மோசடி செய்யாதிருத்தல்,நேரத்திற்கு செயற்படுதல் போன்றன அதன் உரிமைகளாகும்.
  இப்படி நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்,அதில் கவனமாக இருத்தல் வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களும் கடமைகளும் இமாம் பன்னாவினால் களத்தில் செயற்படுமாறு கடமையாக வேண்டப்பட்ட சகோதரர்களை நோக்கி கொடுக்கப்பட்டுள்ளது.இதே போன்று 30 வது கடமை தஃவாவை எல்லா இடங்களிலும் பரப்புவதற்காகவும் தனது வீட்டிலும் குடும்பத்திலும் தன்னுடன் தொடர்பான அனைவருக்கும் அதன் செய்தியை கொடுப்பதற்காவும் சகோதரன் நேரத்தை ஒதுக்க வேண்டும் என வழியுறுத்தப்பட்டுள்ளது.அதே போன்றுதான் உழைப்பதில் கவனம் செலுத்தல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தல்…என்பன போன்ற பல்வேறு கடமைகளும் நேரத்தை ஒரு சகோதரன் திட்டமிட்டு பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களாகவும் பார்க்கப்பட வேண்டியவைதான்.மோசமான விடயங்களிலிருந்தும் எமது இலக்கை விட்டும் எம்மை திசை திருப்பும் அமைப்புக்கள்,நிறுவனங்கள்,செயற்பாடுகளில் இருந்து தூரப்பட்டிருப்பதற்கான வேண்டுதலும் நேரம் சார்ந்து விளங்கப்பட முடியுமான பகுதி.
 இமாம் பன்னாவின் பத்து உபதேசங்களிலும் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
  1. (2) அல்-குர்ஆனை ஓதுங்கள் அல்லது அதனை வாசியுங்கள் அல்லது அதனை செவிமடுங்கள் அல்லது அல்லாஹ்வை திக்ர் செய்யுங்கள்.உங்களது நேரத்தில் ஒரு பகுதியையேனும் எந்தப் பிரயோசனமும் இன்றி கழித்துவிட வேண்டாம்.
  2. (10) கடமைகள் நேரங்களை பார்க்கிலும் அதிகமாகும் எனவே,பிறர் தமது நேரத்தை பயன்படுத்த அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.அவர்களிடம் உங்களுக்கு ஒரு பணி இருப்பின் அதனை சுருக்கமாக நிறைவு செய்து கொள்ளுங்கள்.
இங்கு நேரத்தை தான் பிரயோசனமானதாக பயன்படுத்துவதோடு நேரத்தை சிறப்பாக பயன்படுத்தும் ஒரு சூழலையும் உருவாக்குதல் வேண்டும் என்ற கவனம் 10 வது உபதேசத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.இது முக்கியமாக நேர முகாமை சம்மந்தமாக நாம் கவனம் செலுத்த வேண்டிய விடயமாகும்.பிரயோசனமான நேரப்பயன்பாடு என்று வருகின்ற போதே அதற்கான சூழல் சரியாக அமையாத போது முழுமையான சாத்தியப்பாடு என்பது சிக்கலானதாக உள்ள போது,நேர முகாமை என்கிறபோது அதற்கான சூழல் இல்லாத போது இன்னும் சிக்கல் நிறைந்ததாக அமையும்.எனவேதான் நேரத்தை சிறப்பாக பயன்படுத்தவும் முகாமை செய்யவும் பொருத்தமான ஒரு சூழலின் உருவாக்கமும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.இது பொதுவாகவே இஃவான்களது தர்பியாவின் அனைத்துக் கூறுகளின் போதும் கவனத்தில் கொள்ளப்படுகின்ற தர்பியாவை கொடுப்பதற்கும் பெறுவதற்கும் பாதுகாப்பதற்குமான பொருத்தமான சூழல் என்ற விடயம் இங்கும் கவனத்தில் கொள்ளப்பட்டிருப்பதை காட்டுகிறது.
 நேரப் பயன்பாட்டில் நேரத்தை உரிய இலக்கை அடைவதற்கான செயற்பாடுகளில் பயன்படுத்துவதறை்காக திட்டமிடும் போது அலக்குகளுக்கும் செயற்பாடுகளுக்குமுரிய அதே முக்கியத்துவம் தினமும் அதனை ஒழுங்குபடுத்துவதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் இருக்கின்றது.
இந்த வகையில் களத்தில் செயற்படுமாறு கடமையாக வேண்டப்பட்ட சகோதரனின் கடமைகளை உடலுக்கானவை,அறிவுக்கானவை,பண்பான நடத்தைகளுக்கானவை,வருமானத்திற்கானவை,பிறருக்கானவை,தஃவாவுக்கானவை,இறைவனுக்கானவை எனப் பிரித்து விளக்கும் இமாமவர்கள் இறுதியாக இவை அனைத்தையும் முழுமைப்படுத்த வேண்டுமாயின்(40) “தினமும் நீங்கள் தூக்கத்திற்கு செல்வதற்கு முன்னர் ஒரு நேரம் எடுத்து இந்தக்கடமைகள் அனைத்தையும் நீங்கள் எந்தளவு தூரம் நிறைவேற்றியுள்ளீர்கள் என்பதனை சுயவிசாரனை செய்து கொள்ளுங்கள்.அவற்றை சிறப்பாக நிறைவேற்றி இருந்தால் அல்லாஹ்வை புகழ்ந்து கொள்ளுங்கள்.அதில் குறை விட்டிருப்பதாகக் கண்டால் அதற்காக தௌபா செய்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவதோடு அதனை சிறப்பாக செய்ய அவனிடம் உதவி கோருங்கள்.அவன் எவ்வளவு சிறந்த உதவியாளனாயும் சினேகத்துக்குரிய பொருப்பாளனாயுமுள்ளான் தெரியுமா?”
 இந்தப் பிண்ணனியில்தான் முஹாஸபா,கணிப்பீடு,மதிப்பீடு என்பன காலத்தோடு இணைந்த வகையில் இஃவான்களின் தர்பியாவில் பயிற்றுவிப்பை நெறிப்படுத்துவதற்கான முக்கிய கருவிகளாக இருப்பதனைக் காணலாம்.இந்த வகையில் ஒரு சகோதரன் தொடர்ந்தேர்ச்சையாக முஹாஸபாவிற்கும் கணிப்பீட்கும் மதிப்பீட்டிற்கும் உட்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப் பட்டுக் கொண்டே இருப்பான்.இது நாளடைவில் அவன் சுயமாய் தன்னை முழுமையாக மீள்பரிசீளனை செய்து ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான திறனை அவனுக்கு வழங்குவதுடன் அவனை சிறந்த ஒரு ஆளுமையாகவும் வளர்த்து விடுகிறது.
 நேரத்தை பயன்படுத்துவதில் முதன்மைப்படுத்தும் ஒழுங்கும் மிகவும் முக்கியமானது.அந்த வகையில் இஃவானிய தர்பியத்திற்கு உட்படும் ஒரு சகோதரன் மிகவும் சிறந்த முறையில் இந்தப் பயிற்சியையும் பெற்றுக் கொள்வான்.இந்த வகையில் அவனிடம் தஃவா முதன்மையானதாக இருக்கும்.தஃவவில் தர்பியத் என்பது முதன்மையாய் இருக்கும்.ஏனெனில் அதுதான் அவனது ஏனைய அனைத்து அம்சங்களிற்குமான அடிப்படையாய் அமைகிறது.எனவேதான் இமாமவர்கள் தஃவாவிற்கான ஒரு சகோதரனின் கடமையை சொல்லும் போது “…சகோதரர்களின் சந்திப்பிற்கு நீங்கள் தவராது சமூகம் தர வேண்டும்.உங்களால் மிகைக்க முடியாத ஒரு காரணம் இருந்தாலே தவிர அவற்றிற்கு சமூகம் தராதிருக்காமல் இருக்க வேண்டும்…“ அதே போன்று தஃவாவுக்கான கடமை எனும் போது தஃவாவின் நலனிற்கு எந்த பிரயோசனமுமற்ற நிறுவனங்கள்,அமைப்புக்களில் தொடர்பு பட்டிருப்பதை தவிரத்தலை முதலில் முற்படுத்தியிருப்பது என்பது முதன்மைப்படுத்தல் தவறி சகோதரர்களின் நேரம் வீணாக சிதரடிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கிலும் கூறப்பட்ட ஒரு விடயமாகும்.இந்த விடயம் குறிப்பாக எமது இலக்கை மய்யப்படுத்திய வாழ்வை வடிவமைக்கையில் நாம் இன்று அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.
இந்தப் பொதுவான அறிமுகத்தை வைத்துப் பார்க்கும் போது ஒரு சகோதரன் இஃவான்களின் தர்பியத்தில் தனது நேரத்தை,வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான அழகிய பயிற்சியை இயல்பாகவே பெறுகிறான்.அது குறித்த ஒரு முன்வைப்பால்,பாடத்தால்,நேரத்திற்கு சமூகமளிக்காமைக்காக கடுமையாக நடந்து கொள்வதால் வழங்கப்படும் பயிற்சி என்பதற்கப்பால் அவனுக்கு ஒரு இலக்கை அதற்கான செயற்பாட்டை அதில் எதனை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற ஒழுங்கை பயிற்றுவித்து இவற்றில் அவனை மதிப்பீடு செய்து நெறிப்படுத்துவதால் வழங்கும் பயிற்சியாகத்தான் இங்கு காண முடிகிறது.நேரம் என்று வரும் போது நிகழிவுகளில் நேரத்துக்கு சமூகமளித்தலை மாத்திரம் கவனத்தில் கொண்டு சகோதரர்களுடன் கடுமையாக நடந்து கொண்டு எமது சந்திப்புக்களின் மூல உயிரான சகோரத்துவத்தை காயப்படுத்துவது எவ்வளவு தூரம் பொருத்தமானது என்று நாம் சிந்திக்க வேண்டும்.இது நேரத்தில் கரிசனையாக இருக்க சகோதரர்களை எப்படி பயிற்றுவிக்க வேண்டும் என்பது பற்றிய முழுமையான பாரவையின்மையின் வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும்.அதே நேரம் நேரத்திற்கு சமூகம் தருதல் என்பது நேரத்தின் மீதான கரிசனையில் முக்கிய ஒரு விடயம் என்பது போல அது ஏற்படுத்தப்பட இலக்கு,செயற்பாடு,முதன்மைப்படுத்தல் ஒழுங்கு என்பன சகோதரனுக்கு தெளிவாயும் அவற்றில் அவன் முழுத்திருப்தியுடன் ஆர்வம் கொண்டவனாகவும் இருத்தலும் முதலில் அவசியமானது.அதே போல் ஒரு நிகழ்விற்கு,பணிக்கு நேரத்திற்கு அல்லது நேரத்திற்கு முன்னர் வருபவர் வேலைப் பழுகள் குறைந்தவராயும் பெரும் இலக்குகளற்றவராகவும் கூட இருக்கலாம்.எனவே,நேத்திற்கு சமூகமளித்தல் என்பது மாத்திரம் ஒருவர் நேரத்தில் கரிசனை உள்ளவராக இருக்கிறார் என்பதற்கான மொத்தக் குறிகாட்டியல்ல மாற்றமாக அவர் தனது வாழ்வில் நேரத்தை எப்படி பிரயோசனமாக உயர் இலக்கிற்காக திட்டமிட்டு முதன்மைப் படுத்த வேண்டியவற்றை முதன்மைப்படுத்தி வாழ்வில் குறித்த இலக்கை சாதிக்கிறார் என்பது முதன்மையான அம்சமாகும்.இதனைத்தான் நேரத்தின் மீதான கரிசனை,பயன்படு எனக் குறிப்பிடப்படுகிறது.
 அடுத்து நேரத்தில் கரிசனை எனும் போது குறித்த பணியை நேரத்திற்கு முடித்தல், நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் முடித்தல் என்ற இரு விடயங்களும் இங்கு பல போது ஒன்றுடன் ஒன்று முரணாக விளங்கப்படுவதுண்டு.இதனையும் இஃவான்களி்ன் தர்பியத் கவனத்தில் கொண்டுள்ளது.தனது கருமங்களை ஒழுங்கு படுத்திக் கொள்வதற்காக சகோதரனுக்கு கொடுக்கப்படும் வழிகாட்டலும் நேரத்தில் கரிசனை என்பதில் வரும் நேர வரையறையும் இங்கு இணைத்துப் பார்க்கப்பட வேண்டியுள்ளது.இந்த வகையில்தான் இன்று பல நிறுவனங்கள் இலக்கு,அடைவு மையப்பட்ட வேலை ஒழுங்குகளைக் கொண்டிருப்பதைக் காணலாம்.இது நேரத்திற்கு சமூகம் தருதல்,நேரத்திற்கு செல்லல்,குறித்த காலத்தில் குறித்த நிகழ்ச்சியை முடித்தல் என்பதால் வரும் விளைவுகளில் திறன் குன்றிய நிலை என்ற பெரும் பிரதிகூலத்தை நிவர்த்திப்பதற்கான ஒழுங்காகும்.இந்த வகையில் பொதுவாகவே வெளித் தோற்றத்தை விட,பெயர்களை விட அதன் உள்ளடக்கமே முக்கியம் என்ற இஃவான்களின் தஃவா பெறுமானத்திற்கமைவாக இவ்விடயத்தில் ஒரு சமநிலையான அணுகு முறை பேணப்படுவதைக் காணலாம்.
 இறுதியாக,சகோதரர்களின் வேண்டுதலை கடமையாகக் கொண்டு என்னிடம் குறைவாயும் குறையாயும் உள்ளவற்றை எழுதுவதோ பேசுவதோ இல்லை என்ற எனது ஒழுங்கை முறித்து இந்த விடயங்களை என்னால் இயன்றவரை தொகுத்திருக்கிறேன். அதற்காக உங்களிடம் ஒரே ஒரு பிரதியுபகாரத்தை எதிர்பார்த்து விடை பெறுகிறேன்.இந்த விடயங்களை எனது வாழ்வில் நடைமுறைப்படுத்துவதை இலகுவாக்கி வைக்க இறை உதவி கிட்ட எனக்காக பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.அல்லாஹ் எம்மை பொருந்திக் கொள்ளட்டும்.  

Thursday, October 2, 2014

உழ்ஹியாவை நிறைவேற்றல் நாம் இப்படி சிந்திக்க முடியுமா?எம்.என்.இக்ராம்

October 1, 2014 at 2:10pm
    உழ்ஹிய்யா என்பது நபியவர்களால் வலியுறுத்தப்பட்ட ஒரு ஸுன்னா.இதனை நாம் ஸுன்னா முஅக்கதா என்கிறோம்.இமாம் அபு ஹனீபா போன்றவர்கள் வசதியுள்ளவர்களுக்கு இது வாஜிப் என்றும் கூறியுள்ளனர்.இக்கடமையை நாம் எமது நாட்டில் பாரம்பரியமாக நிறைவேற்றி வந்துள்ளோம்.எனினும் அண்மைக்காலமாக இது தொடர்பில் பல புரலிகள் பல் வேறு நோக்கங்களையும் மையப்படுத்தி  கிளப்பப்பட்டு வருவதனை நாம் அறிவோம்.
  இத்தகைய ஒரு சூழலில் நாம் இக் கடமையை சிறுபான்மையாக வாழுகின்ற ஒரு சூழலிலே எப்படி அமைத்துக் கொள்ளலாம்  என்பது தொடர்பில் சிந்திப்பது பொருத்தம் எனக் கருதுகிறோம்.இங்கு நாம் உழ்ஹியா பற்றிய விடயத்தை சரியாக புரிந்து கொள்வதற்கு சிறுபான்மையாக வாழும் போது இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாம் எப்படி சிந்திக்க வேண்டும் என்ற விடயத்தை சற்று விளங்கிக் கொள்வது பொருத்தம் எனக் கருதுகிறோம்.
 அண்மையில் ஒரு சகோதரருடன் பிரயாணமொன்று சென்று வரும் வழியில் தொழுதுவிட்டுச் செல்வோம் இலேசாக இருக்கும் என்றேன்.அவர் பள்ளிக்குப் பக்கத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு,இலேசுக்காகவா இங்கே தொழ வேண்டும்?நாம் தொழாமலே சென்றிருக்கலாமல்லவா?எனக் கேட்டார்.இது அவரது வினா மட்டுமல்ல,இது இஸ்லாத்தைப்பற்றிய நமது சமூகத்தின் புரிதலின் குருக்கு வெட்டு முகம்.இஸ்லாம் அடிப்படையிலேயே வாழ்வை இலகு படுத்த வந்த மார்க்கம் “இலகு படுத்துங்கள் கஷ்டப்படுத்த வேண்டாம்…நன்மாராயம் கூறுங்கள் விரண்டோட வைக்க வேண்டாம்…“நபியவர்கள் சொல்லியிருக்கிறாரே.நபியவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை விளக்கும் போது ‘சிரமங்களை இல்லாமல் செய்வதற்காக’-அஃராப்-157 என குர்ஆன் குறிப்பிடுகிறது.“மார்க்கத்தில் உங்களுக்கு சிரமங்களை வைக்கவில்லை”என ஸுரா ஹஜ்ஜின் இறுதி வசனம் இதனை விளக்குகிறது.இதனை நபியவர்கள் மிகத் தெளிவாகவே பேசியுள்ளார்கள்  ”இந்த மார்க்கம் இலகுவானது,யாரும் மார்க்கத்தை கடினமாக்க முனைய வேண்டாம்.அப்படி செய்தால் அவரை அது மிகைத்துவிடும்” –புகாரி-மார்க்கம் அவரை மிகைக்கும் என்பது அவரால் தொடர்ந்து மார்க்கத்தை பின்பற்ற முடியாது போகும் என பத்ஹுல் பாரியில் விளக்கப்பட்டுள்ளது.இந்த வகையில் சிறுபான்மையாக இருக்கும் போது மாத்திரமல்ல பொதுவாகவே நாம் மார்க்கத்தை இந்தப் பின்னணியில் இருந்துதான் அணுக வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கிறது.அப்படியாயின் சிறுபான்மையாக வாழும் போது இவ்விடயம் எவ்வளவு தூரம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது இங்கு தெளிவாகிறது. எனினும் எமது நாட்டைப் பொருத்த வரை மார்க்கத்தை வெறும் உபதேச (வஃல்) பாணியிலேயே அணுகிப் பலகிப் போன நாம் இஸ்லாத்தின் சட்டத் துறையையும் அதே பாணியில் அணுக முனைகின்றோம்.அதன் விளைவு நாம் இஸ்லாத்தை சிரமப்படுத்தி வைத்துள்ளோம்.எனவே சமூகம் ஹலாலான சலுகைகளை அறியாது ஹராத்தில் போய் நிற்கின்ற தெரிவையே பல விடயங்களில் மேற் கொள்கிறது.நாம் இன்று பேசும் பல விவகாரங்களும் எமது கடின போக்கை மாற்றாது விடின் மார்க்கத்தை விட்டும் அவற்றை நீக்கி சிந்திக்கின்ற மார்க்கத்தை சில கிரியைகளுக்கு மட்டுப்படுத்திப் பார்க்கின்ற ஒரு போக்கு எதிர்காலத்தில் தலை தூக்கலாம்.
 இந்தப் பின்னணியில் இருந்து கொண்ட நாம் இங்கு முன்வைக்க முனைகின்ற இந்த இடம் பாடுகள் இது பற்றி சிந்திப்பதற்கான ஒரு முன் மொழிவே தவிர முடிவுகளல்ல.இது பிக்ஹுத் துறை,ஷரீஆவின் அடிப்படைகள், நோக்கங்கள் போன்ற துறைகளில் கற்றவர்களது கடமை.அவர்கள் இது போன்ற விவகாரங்களில் எமது நாட்டின் சூழலில் இருந்து சட்டம் சொல்ல முனைவது வாஜிப் என்பதையும் இங்கு நினைவு கூர்வதுடன்.இது தொடர்பில் நாம் வாசித்த அபிப்பிராயங்களை கருத்தாடலுக்காக இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.
   02
உழ்ஹியா தொடர்பில் நாம் நோக்கும் போது பிரதானமாக இரு விவகாரங்கள் இங்கு கலந்துரையாடப்பட வேண்டியுள்ளது.
1-உழ்ஹியாவிற்கு பதிலாக அதனது பெறுமதியை கொடுத்தல்.
2-உழ்ஹியாவை முஸ்லிம் அல்லாதாருக்கு பரிமாறுதல்

1-உழ்ஹியாவிற்கு பதிலாக அதனது பெறுமதியை கொடுத்தல்.

  உழ்ஹியாவை பொருத்த வரை அதனது பெறுமதியை கொடுப்பதைப் பார்க்கிலும் அதனை அறுத்துப் பலியிடுவதே மேலானது என்பது எல்லா சட்ட அறிஞர்களம் கருத்தாகும்.எனினும் யாரும் கொடுக்க முடியாது என மறுத்ததற்கான ஆதாரங்கள் இல்லை.அதே போன்று எமக்கு சிந்திக்க முடியுமான இடம் பிக்ஹில் ஆரம்பம் முதலே இப்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.அதே நேரம் பிராணியை பெற முடியாத போது அப்படி செய்யலாம் என இமாம் அஹமத் போன்றோர் அனுமதித்துள்ளனர்.இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் உழ்ஹியாவிற்கு அறுப்பு நிகழ்ந்தேயாக வேண்டும் என்ற கடமை இல்லை என்பதைக் காட்ட இறைச்சியை வாங்கி பகிர்ந்தளிக்கும்படி தனது அடிமைக்கு கட்டளையிட்டதாக ஒரு அறிவுப்பு உள்ளது.பிலால் (றழி) அவர்கள் உழ்ஹியாவுக்கு பதிலாக அதன் பெறுமதியை ஒரு அநாதைக்கு கொடுக்க தான் விரும்புவதாக குறிப்பிட்ட றிவாயத் உள்ளது.ஆயிஷா (றழி) அவரகள் காஃபாவுக்கு அருகில் ஆயிரம் மிருகங்களை பலியிடுவதை விட எனது இந்த மோதிரத்தை ஸதகா செய்வதை நான் மேலாகக் கருதுகிறேன் என்று கூறிய றிவாயத் உள்ளது.மாலிகி மத்ஹபில் பலவீனமான ஒரு கருத்து பெறுமதி கொடுப்பது பற்றி பேசுகிறது.
  இப்படி இது தொடர்பில் சிறுபான்மையாக இருந்து கொண்டு சிந்திப்பதற்கு பல இடம்பாடுகள் காணப்படுகின்றன.அடுத்து இங்கு பெறுமதியை கொடுக்காது உழ்ஹியாவை கொடுக்க வேண்டும் என வழியுறுத்தியவர்கள் அந்தக் கடமை இல்லாமல் போய்விடக் கூடாது என்ற நியாயத்தைத்தான் முன்வைக்கிறார்கள்.அடுத்து உழ்ஹியாவை பிராயணத்தில் இருப்போர் நிறைவேற்றல் சம்பந்தமான ஒரு கருத்தும் இந்த விவகாரத்தில் நாம் நிறையவே சிந்திப்பதற்கான இடங்கள் இருப்பதைக் காட்டுகிறது.
  நவீன காலத்தில் ஷெய்க் கர்ளாவி அவர்கள் இந்த விவகாரத்தை அழகாக அணுகுகிறார்கள். இந்தக்கடமையின் நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் உயிருடன் இருந்து இக்கடமையை நிறைவேற்றுபவர்கள் அறுப்பது சிறந்தது என்றும் மரணித்தவர்களுக்காக கொடுக்கும் போது பெறுமதியை கொடுக்கலாம் அதுவும் இறைச்சி தேவையற்ற நாட்டில் இருப்பவர்கள் அதாவது இறைச்சி நிறைய அக்காலப்பகுதியில் கிடைக்குமாயின் மரணித்தவரின் உழ்ஹியா பெறுமதியை கொடுப்பதே சிறந்தது என்கிறார்.அதே போன்று கடந்த வருடம் உழ்ஹியாவின் பெறுமதியை  கொண்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பில்  பேசிய அறிஞர்கள் கவனத்தில் எடுத்த ஒரு விவகாரம் உழ்ஹியா தொடர்பாக பேசப்பட்டிருக்கின்ற அனைத்து பத்வாக்களும் பெரும்பாலும் சாதாரண சூழலில் இருந்தே பேசப்பட்டிருப்பதாகவும் அசாதாரண சூழலில் அது நோக்கப்படவில்லை எனவும் அப்படி நோக்கும் போது அதனை ஸதகா செய்வது உழ்ஹியா கடமையை நிறைவேற்றுவதை விட பெறுமதியானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
 அதனோடு சேர்த்து நாம் உழ்ஹியாவுக்கு பதிலீடு என்று யோசிப்பதற்கு முன்னர் அதற்கு முன்னர் செய்ய வேண்டிய கடமைகள் என சமூகத்தில்,பிரதேச,குடும்ப மட்டங்களில் எத்தனையோ இருக்கின்றன.எனவே அவற்றை முற்படுத்தி இதன் உழ்ஹியாவின் அளவை கவனத்தை குறைக்கும் வகையில் நாம் குறைக்கலாம்.அது மாத்திரமன்றி நாம் ஒரு நீண்ட கால வியூகம் என்ற வகையிலும் உழ்ஹியாவின் அளவை குறைப்பது தொடர்பில் யோசிக்க வேண்டியுள்ளது.அத்தோடு உழ்ஹியா செயற்திட்டங்களை செய்யும் நிறுவனங்கள் மிகக் கண்டிப்பாக இந் நாட்டில் உழ்ஹியாவையும் இப்தாரையும் பார்க்கிலும் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் என்பதை இங்கு உதவியளிக்கும் தனவந்தர்களுக்கு சொல்லியாக வேண்டும்.அவர்களால் ஆயிரம் மாடுகளை உழ்ஹியாவுக்கு வாங்குவதற்கு பதிலாக மேற்கால் விலைக்கு வாங்கப்படும் இஸ்லாத்தின் எதிரிகளில் ஒருவரையாவது அல்லது அதற்கு மாற்றமாக இயங்கும் பலமான சக்தியொன்றையாவது இத்தருணத்தில் விலைக்கு வாங்குவதுதான் முதன்மையான கடமையாக இருக்கும் என்ற செய்தியை அவர்களுக்கும் எமக்குமாக நாம் நினைவு படுத்திக் கொள்ளலாம்.
2-உழ்ஹியாவை முஸ்லிம் அல்லாதாருக்கு பரிமாறுதல்

   அடுத்து உழ்ஹியா தொடர்பில் நாம் கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு விவகாரம்தான் அதனை பங்கீடு செய்தல்.இதில் எல்லா அறிஞர்களதும் பொதுவான அபிப்பிராயம் உழ்ஹியாவை மூன்றாகப் பிரித்து அதில்1/3 ஐ தனக்காகவும் மற்றய 1/3 ஐ அயலவர்கள் உறவினர்களுக்காகவும் மற்றய 1/3 ஐ ஏழைகளுக்காகவும் கொடுப்பது சிறந்தது என்பதாகும்.இதில் அறைவாசியை எடுத்து விட்டு அறைவாசியை கொடுக்கலாம் என்ற அபிப்பிராயமும் உண்டு.2/3 ஐ உரியவர்எடுக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.அதை அவர் முழுமையாக கொடுத்தும் விடலாம் எனினும் ஒரு சிறு பகுதியையாவது எடுத்துக் கொண்டு கொடுப்பதே சிறந்தது என்றவாறான கருத்துக்கள் இதில் நிலவுகின்றன.இதில் ஒருவர் முழுவதையும் கொடுக்காமல் இருந்தாலும் உழ்ஹியா நிறைவேறுமா என்றால் அது நிறை வேறும் என்ற கருத்துத் தான் காணப்படுகிறது.இங்கு தான் இது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டிய முக்கிய விடயத்தை சட்ட அறிஞர்கள் பேசுகிறார்கள் அதாவது உழ்ஹியா கடமை என்பது வேறு அதனை பங்கிடுதல் என்பது வேறு என்ற விடயம்.
 இந்த இடத்தில் இருந்து கொண்டு உழ்ஹியாவின் இறைச்சியை முஸ்லிம் அல்லாதாருக்கு கொடுத்தல் தொடர்பில் முன்னைய இமாம்கள் என்ன கருத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதை நாம் பார்க்கும் போது,
 இமாம் முஜாஹிதின் ஒரு அறிவிப்பு,அப்துல்லாஹ் இப்னு அம்ர் (றழி) அவர்களது வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட போது அவர் அதிலிருந்து தனது அயல் வீட்டாரான யூதனுக்கு கொடுத்தீர்களா என்று வினாவினார்கள் என திர்மிதியில்(1943)பதிவாகியுள்ளது.இதனை ஷெய்க் அல்பானி ஸஹீஹ் எனக் குறிப்பிடுகிறார்.
 இது தொடர்பில் இமாம் இப்னுல் முன்திர் குறிப்பிடுவதாக இமாம் நவவி குறிப்பிடுகிறார்:உழ்ஹியாவிலிருந்து முஸ்லிம்களிலுள்ள ஏழைகளுக்கு கொடுக்க முடியும் என்பதில் அனைத்து அறிஞர்களும் உடன்படுகிறார்கள்.எனினும் அதனை முஸ்லிமல்லாதாருக்கு(திம்மீக்கள்)கொடுப்பது தொடரபில் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதங்கள் காணப்படுகின்றன.இமாம் ஹஸனுல்பஸரி,அபூ ஹனீபா,அபூ ஸவ்ர் போன்றோர் இதனை அனுமதிக்கின்றனர்.இமாம் மாலிக் நஸாரக்களுக்கு உழ்ஹியாவின் இறைச்சியையோ அதன் தோலையோ கொடுப்பதை மக்ரூஹ் ஆக கருதினார்கள்.இமாம் லைஸும் மக்ரூஹ் ஆக கருதினாலும் சமைத்ததை கொடுக்கலாம் என்கிறார்.இதனைக் கூறும் இமாம் நவவி அவர்கள் எமது மத்ஹபில் (ஷாபிஈ) வாஜிபான (நேர்ச்சை மூலம்) உழ்ஹியா அல்லாத சாதாரண உழ்ஹியா (ததவ்வுஃ) இறைச்சியை கொடுக்கலாம் என்கிறார்.
  இமாம் இப்னு குதாமா, காபிருக்கு உழ்ஹியாவிலிருந்து பங்கு கொடுக்கலாம்….ஏனெனில் அது ஒரு உணவு,அதே போல் அது(இறைச்சியை பங்கிடுதல்)ஸதகதுத் ததவ்வுஃ ஆக காணப்படுகிறது.எனவே,ஏனைய ஸதகதுத் தவ்வுஃ ஐ போன்று கைதிகள் திம்மீக்கள் அனைவருக்கும் கொடுக்கலாம் …என்கிறார். (முஃனி-9/450)
 இந்த வகையில் உழ்ஹியாவிலிருந்து முஸ்லிம் அல்லாதாருக்கு பங்கு கொடுக்கலாம் என்கிற கருத்தை நாம் பெற இடம்பாடுகள் தாராளமாக உள்ளது என்பதைக் காணலாம். அதிலும் குறிப்பாக அத்தகையோர் அயலவர்களாக,உறவினர்களாக,தேவையுடையோராயின் அப்படி கொடுப்பது சிறந்தது என்ற கருத்து இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.இதனை கூடாது என்போர் முஸ்லிம்களது தேவை இருக்க மற்றவர்களை முற்படுத்திக் கொடுக்கக் கூடாது என்ற வகையிலேயே அதற்கு நியாயம் சொல்கிறார்கள்.மாற்றமா எம்மில் பலர் நினைப்பது போல் இறைச்சிக்கு புனிதத் தன்மை கொடுத்து அல்ல என்பதனை அவர்களது கருத்துக்களில் இருந்து விளங்கலாம்.அத்தோடு நாம் ஏலவே குறிப்பிட்டது போன்று உழ்ஹியா இறைச்சியின் பங்கீட்டை உழ்ஹியா கடமையிலிருந்து பிரித்தே எல்லோரும் நோக்குவதைக் காண்கிறோம்.
 நவீன காலத்தில் இமாம் அப்துல்லாஹ் பின் பாஸ் மற்றும் அல்-அஸ்ஹர் பத்வா சபை என்பன எம்முடன் போராடாத காபிர்களுக்கும் கைதிகள் மற்றும் எம்மிடம் அபயம் பெற்றோருக்கும் கொடுக்கலாம் என்கின்றனர் அதுவும் அவரகள் ஏழைகளாக, நெருங்கிய உறவினரகளாக, அயலவராக இருப்பின் இது சிறப்பானது என்பதுடன் அவர்களது உள்ளங்களை பிணைக்கும் நோக்குடனு(தஃலீபுல் குலூப்)ம் இதனை செய்யலாம் என்கின்றனர்.
  இந்த வகையில் இவ்விடயத்தை எமது நாட்டின் சூழலில் கவனமாக சிந்திக்க வேண்டும் கொடுத்தாலும் குற்றம் கொடுக்காவிட்டாலும் குற்றம் என்கிற சூழலில் இது கவனமாக சிந்திக்க வேண்டிய விடயம்.இதில் அவர்களில் விருப்பமுள்ள சாராருக்கு கவனமாக, பகிரங்கமாக அல்லாது கொடுக்க முடியுமாயின் நாளடைவில் இதிலிருந்து பிரயோசனம் பெறும் ஒரு பெறும்சாரார் அவர்களில் தோற்றம் பெறுவாராயின் இதற்கான எதிர்ப்புக்கு எதிராக குரல் கொடுக்கும் சாரார் அவர்களிலேயே உருவாகலாம்.என்பதுடன் மிருக வளர்ப்பு என்ற வகையிலும் பெறும் சாரார் இக்கடமையால் அவர்களில் பிரயோசனம் பெறும் விவகாரமும் பொருளாதார ரீதியான கணக்குகளுடன் பேசப்பட வேண்டிய தேவையும் உள்ளது.
  இப்படி பல் முனையில் இத்தகைய விவகாரங்களை அணுகுவதற்கான வழிகாட்டல்கள் சமூகத்துக்கு வழங்கப்பட உரிய துறை சார்ந்தோர் முயற்சிப்பார்களா? இப்படியான தேவை இருக்கும் சூழலில் இன்னும் மிம்பர் மேடைகளில் காபிர்களுக்கு உழ்ஹியாவில் பங்கு கொடுக்கக்  கூடாது,அதனை சாப்பிடக் கொடுக்கக் கூடாது என்கிற கருத்துக்களை பேசுவதையாவது தவிர்ப்பது சிறப்பாக இருக்கும்.   

Saturday, August 23, 2014

எமது முதன்மைப் பணி (மீள்பார்வையின் 300 வது இதழுக்காக எழுதிய கட்டுரை)

“அதிகமானோர் ஏனைய எல்லா பணிகளைப் பார்க்கிலும் இஸ்லாமிய தஃவா என்பது இலகுவான ஒரு பணி என நினைக்கின்றனர்.அது தமது வாழ்வில் தாம் ஆற்றும் கருமங்களிலையே இலகுவான கருமம் என எண்ணுகின்றனர்.ஆனால் அது ஒரு அரசியல் மாற்றத்திற்கான அழைப்பின் பணியைப் பார்க்கிலும்,பொருளாதார மாற்றத்திற்கான அழைப்பின் பணியைப் பார்க்கிலும்,அறிவியல் மாற்றத்திற்கான அழைப்பின் பணியைப் பார்க்கிலும்,சிந்தனை மாற்றத்திற்கான அழைப்பின் பணியைப் பார்க்கிலும் மிகவும் பரந்தது,சிக்கல் நிறைந்தது,அதிக ஆபத்துக்களைக் கொண்டது.
  ஒரு புரட்சியை செய்வது,ஒரு குறித்த சூழ்நிலையை மாற்றுவது,ஒரு ஒழுங்கை அகற்றிவிட்டு இன்னோர் ஒழுங்கை பிரதியீடு செய்வது என்பது மிகவும் இலகுவான காரியம்.அதற்கு பண்பாட்டு மாற்றமோ,மானிட நடத்தைக்கான உயிர்ப்பிப்போ அவசியப்படாது.இத்தகைய பணிக்காக செயற்படும் தலைமைகள் தமது பணிக்கான அழைப்பில் தூய்மையாய் இருப்பர்,அதற்காக உழைப்பர்,போராடுவர்.எனினும் அவர்களிடம் ஒழுக்கப் பண்பாடுகளோ,உயிர்ப்பு மிக்க மானிட நடத்தைகளோ காணப்படமாட்டாது.அவர்களது வாழ்வு மோசமான, கரை படிந்த்தாக காணப்படும்.எனினும் அவர்கள் இதனை தமது பணிக்கு முரணான ஒரு அம்சமாக பார்ப்பதில்லை.எனினும்,அல்லாஹ்வை நோக்கிய அழைப்பு,தஃவா;பண்பாட்டையும்,ஆன்மாவையும்,சிறந்த ஒழுக்கங்களையும்,மார்க்க,மானிட நடத்தையின் உயிர்ப்பையும் மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  எனவே,இந்தப் பணியை செய்வதற்கு;ஆழ்ந்த ஈமான்,உண்மையான நம்பிக்கை,உயர்ந்த தியாகம்,அரிதாய்க் காணக்கிடைக்கும் பிறர் நலன் முற்படுத்தல்,தெளிவான துணிவு,புரிதல் கொண்ட சிந்தனை,சரியான அறிவு,இறை ஞாபகத்தல் திளைத்த நாவு,இறை தொடர்புள்ள உள்ளம் என்பன அவசியப்படுகின்றன.இந்தப் பணியை செய்வோர் இறைவன் முன்நிலையில் பணிந்து போய்,அவனுக்கு முழுமையாய் அடிமைப்பட்டு(உபுதிய்யா வல்குஷுஃ)வாழ்வோராய்,அவனிடம் மன்றாடிப் பிரார்த்திப்போராய்,முழுமையாக றப்பானிய அச்சில் வார்க்கப்பட்டு வாழ்வோராய் இருக்க வேண்டும்.
 இஸ்லாமிய தஃவா என்பது வெறுமனே எத்திவைத்தலும் அறிவு போதித்தலுமல்ல.அது எத்தவைத்தல்,அறிவு போதித்தல்,உருவாக்கல் பண்படுத்தல் என நபியவர்களின் பணியை பிரதி செய்வதாக அமையும்-உம்மி சமூகத்திற்கு மத்தியில் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதரான அவர்,அவர்களுக்கு குர்ஆனை ஓதிக் காண்பித்து,அவர்களை பண்படுத்தி,வேதத்தையும் ஹிக்மத்தையும் அவர்களுக்கு கற்பிப்பார்.- ”


(முதக்கிராது ஸாஇஹின் பிஷ் ஷர்கில்அறபி-உஸ்தாத் அபுல் ஹஸன் அலி நத்வி)
 இன்று சமூகம் எதிர் கொள்ளும் சவால்களை பார்க்கின்ற பலரும்,எமது முதன்மைப் பணி என்ன என்பதனை வரையறை செய்வதில் பல்வேறு நிலைப்பாடுகளை முன்வைப்பதைக்காணலாம்.இனவாதப் பிரச்சினையை அதன் அகோரத்தைக் காண்போர் அதற்குப் பதிலளிப்பதுதான் எமது முதன்மைப் பணி என்கின்றனர்.இளைஞர்களின் நிலையை கண்டு மனம் வெதும்புவோர் அவர்கள் எதிர் கொள்ளும் குறித்த சில பிரச்சினைகளை தீர்ப்பதுதான் எமது பணி என்கின்றனர்.ஊடக உலகில் எமது சமூகத்தின் பின்னடைவைக் காண்கின்றவர்கள் ஊடகப் பணியே எமது முதன்மைப் பணி என்கின்றனர்.அரசியல் வங்கரோத்து நிலையைக் காண்போர் அரசியல் பணியை முற்படுத்துவர்.அறிவுப் பின்னடைவைக் காண்போர் அறிவை முற்படுத்துவர்.ஆன்மீக வணக்க வழிபாடுகளில் பின்னடைவைக் காண்போர் அதனை முற்படுத்துவர்.
 அதே நேரம் சமூகம் இதில் எதைத் தெரிவு செய்து முற்படுத்துவது எனத் தெரியாமல் ஒவ்வொரு பிரச்சாரத்தின் பின்னாலும் திணரிக் கொண்டிருக்கின்றது.உண்மையில் எதை முற்படுத்துவது என்று சொல்ல முடியாதளவு எமது பிரச்சினைகள் எமக்கு முன்னால் மலை போல் குவிந்துள்ளன.ஆனால்,இவற்றைப் பேசும் மனிதர்களை காண்கின்ற அளவுக்கு,இவற்றை தமது பிழைப்புக்காக,தம்மை,தமது விம்பத்தை முதன்மைப்படுத்துவதற்காக பயன்படுத்துபவர்களைப் பார்க்கின்ற அளவுக்கு,இவற்றுக்காக உண்மையாய் கவலைப்பட்டு,உண்மையாய் இவற்றை சுமந்து அவற்றை மாற்ற முனையும் நெஞ்சுரம் கொண்ட தூய மனிதர்களைக் காண்பது மிகவும் அரிதாகவே உள்ளது.
 ஆயிரமாயிரம் இனவாத எதிர்ப்பு பிரச்சாரங்களை,இளைஞர் சங்கங்களை,ஊடக நிறுவனங்களை,அரசியல் கட்சிகளை,அறிவு நிலையங்களை,ஆன்மீக வணக்கஸ்தளங்களை,சிந்தனைத் தொட்டிகளை உருவாக்கிவிடலாம்,கட்டிப் போடலாம். ஆனால்,இவற்றை நெஞ்சுரத்துடன் தூய்மையாய்,தொடர்ச்சியாய் சுமந்து செல்லும் மனிதர்களை எங்கே தேடுவது?
 இங்குதான் எமக்கு முன்னால் எத்தகைய சவால்கள் மாறி மாறி வந்த போதும் தூய்மையும் துணிவும் கொண்ட மனிதர்களைக் கொண்ட அணி உருவாக்கம் என்ற பணி என்றுமே மாறாத,நிலையான முதன்மைப் பணியாய் இருக்க வேண்டும் என்ற உண்மை மிகத் தெளிவாய் புலப்படுகிறது.

 நாம் எதிர் கொள்வதைப் பார்க்கிலும் சூன்யமான மனிதர்களைக் கொண்ட, சவால்கள் நிறைந்த ஒரு உலகையே நபி(ஸல்) அவர்கள் எதிர் கொண்டார்கள்.ஆனால்,அவர்கள் அன்றாடம் தான் எதிர் கொண்ட சவால்களுக்கு முன்னால் மண்டியிட்டு அவற்றைத் தீர்த்து ஓட்டைகளுக்கு ஒட்டுப் போடுகிற பணியில் ஈடுபடவில்லை.மாற்றமாக இத்தகைய சவால்களுக்கு காரணமான மனிதர்களை, சமூக அமைப்பை முழுவதுமாக மாற்றிவிடத்தக்க,அந்த மாற்றத்தை நீடித்து நிலைக்க வைக்கத்தக்க பெறும் பணியை சுமக்கும் தூய்மையும் நெஞ்சுரமும் உள்ள மனிதர்களைக் கொண்ட அணியை உருவாக்குவதையே தனது முதன்மைப் பணியாய்க் கொண்டார்கள்.எனவேதான் நபியவர்களது பணி வெட்ட வெட்ட கிளைக்கும் பயிராய் சாகா வரம் பெற்று இதுவரையிலும் தொடர்கிறது.
 அப்படியல்லாது ஒரு குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்காக,குறித்த ஒரு பணியை நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் அழைப்புக்களும்,முயற்சிகளும் அக் குறித்த பணியுடன் அல்லது பல போது அதனை துவங்கியவரின் சறுக்களுடன் அல்லது மறைவுடன் முற்றுப் பெற்றுப் போகின்றன.அதன் பின்னர் அப்பணி பலவீனமான வாரிசுகளின் கையில் கிடைத்த வாரிசுச் சொத்தாக பந்தாடப்படும்.இதற்கு நமது சமூகத்தில் துவங்கப்பட்ட தனித்துவ அரசியல் இயக்கத்தில் நமக்கு நிறையவே படிப்பினை உள்ளது.இதே நிலைதான் வரலாற்றில் ஸலாஹுத்தீன் அய்யுபியின் குத்ஸை விடுவிப்பதற்கான உன்னதப் போராட்டமும் அதனை விடுவித்த பின்னர்,அவரது மரணத்தின் பின்னர் சிலுவைப் போராளிகளையே துணைக்கழைக்குமளவு வாரிசுகளுக்கிடையிலான அனந்தரச் சொத்துக்கான போராட்டமாக மாறிப் போனது.
 எமது இன்றைய தேவை குறித்த ஒரு சமூகப் பிரச்சினையை,குறித்த ஒரு இடத்தை,சூழலை,தனிநபரை மையப்படுத்தி உருவாகி அழியும் பணியல்ல.மாற்றமாக,இந்த உலகில் நன்மையை வாழ வைக்க,தீமையை ஒழிக்க அவசியமான இந்த மார்க்கத்தை முனனணியில் வாழ வைக்கும் பணி.அதன் மூலம் மாத்திரம்தான் எமது சமூகத்தின் மாத்திரமல்ல,இலங்கை சமூகத்தின் மாத்திரமல்ல,மனித சமூகத்தினதே பிரச்சனைகளுக்கு தீர்வு தேட முடியும்.இந்தப் பணிக்கு முன்னால் உள்ள பெறும் சவால்களாக அதிகார மோகம் கொண்ட மனிதர்களும்,சடவாத இன்பங்களுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்து பழகிப் போன மனிதர்களும்,சமூக அமைப்பும் காணப்படும்.இதனை எதிர் கொள்வதுதான் இந்தப் பணிக்கு முன்னால் இருக்கும் பெறும் சவாலாய் இருக்கும்.இதனை எதிர் கொள்வதாயின் வெறும் சிந்தனைகள் பேசும் மனிதர்களை விடவும் நெஞ்சுரத்துடனும் தூய்மையாயும் இந்தப் பணியை சுமக்கும் பண்பாடு நிறைந்த, இறைவனுக்காய் மாத்தரமே வாழும் தனிமனிதர்களைப் பெற்ற அணியொன்று முதன்மையான தேவையாய் இருக்கும்.எனவே,அதன் உருவாக்கமும் பண்படுத்தலுமே எமது முதன்மையான பணியாய் அமையும்.இத்தைகைய மனிதர்களாளேயே சமூக மாற்றம் சாத்தியம் என அல்-குர்ஆன் எமக்கு வழியுறுத்துகிறது.
“அல்லாஹ்வுடன் தாம் செய்த உடன்படிக்கையை உண்மைப்படுத்தும் அவர்கள்தான் சிறந்த ஆளுமைகள்;அவர்களில் சிலர் தமது இலக்கான ஷஹாதத்தை அடைந்து விட்டனர்.இன்னும் சிலர் எதிர்பார்த்து வாழ்கின்றனர்.அதில் அவர்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.”
“உங்களில் 20 பொறுமையாளர்கள் இருந்தால் 200 பேரை மிகைக்கலாம்.100 பொறுமையாளர்கள் இருந்தால் 1000 பேரை மிகைக்கலாம்.ஏனெனில் காபிர்கள் புரிதலற்ற சமூகமாக உள்ளனர்”
 வரலாற்றில் சமூக மாற்றம் தொடர்பாக சிந்தித்த அனைத்து சீர்திருத்த வாதிகளும்(சிந்தனையாளர்களல்லர்)இந்த உண்மையையே வழியுறுத்தியுள்ளனர்.உதாரணமாக நவீன காலத்தில் இஸ்லாமிய உலகை சுற்றிப் பார்த்த ஷெய்க் அபுல் ஹஸன் அலி நத்வி இந்தக் கருத்தை மிகவும் ஆழமாக விளக்குகிறார்.
 இஸ்லாமிய உலகில் உள்ள சீர்கேடுகளை நீக்கி ஒரு மாற்றத்தை உலகில் ஏற்படுத்த வேண்டுமாயின் உருவாக்கத்தை முதன்மையாய்க் கொண்டவர்களால்தான் அது சாத்தியம் என்ற உண்மையை விளக்கும் உஸ்தாதவர்கள்,அதற்காக அவர்கள் தமது கவனத்தை மூன்று விவகாரங்களில் தொடர்ந்தும் குவிக்க வேண்டும் என்கிறார்
 01-மனிதர்கள் மத்தியில் தஃவாவை பதித்து அவர்களை உருவாக்கும் காலம் வெளிப்படையாக அரசியல் போன்ற சமூகப் பணிகளில் ஈடுபடுவதற்கான காலத்தை முந்தியதாகவும் நீண்டதாகவும் காணப்பட வேண்டும்.
02-தஃவா நிறைந்த ஆபத்துக்களை எதிர் கொள்வதால் ஆளணி உருவாக்கத்தில் தொடர்ந்தும் கவனம் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்
03-தஃவா அணியை அதன் ஆன்மாவுக்கான உயிர்ப்பைக் கொடுப்பதனூடாக பலப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
 இந்த வகையில் எமக்கு முன்னால் எத்தகைய சவால்கள் நிறம் மாறி மாறி வரினும் எம்மிடம் மாறாது முதன்மையாய் இருக்க வேண்டிய பணி அணி உருவாக்கம் என்பதாகும்.இதன் மூலம் மாத்திரமே ஏனைய சவால்களை சரியாகவும் சோரம் போகாமலும் நீடித்து வெல்ல முடியும்.இல்லாவிடின் எமது சமூகப் பணிகள் சுயநலவாதிகளின்,சமூக வியாபாரிகளின்,வேஷதாரிகளின்,புகழேந்திகளின் மடமாக மாறிவிடும்.இதற்கு சமூகத்தில் நிறையவே உதாரணங்கள் உள்ளன.

Friday, August 8, 2014

பெரியவர்கள் என்னும் சிறியவர்கள்

  அண்மையில் வெளியீட்டுக்காய் காத்திருக்கும் கலாநிதி மஜ்தி ஹிலாலியின் ”உளப்பலவீனம்-தோற்றப்பாடுகளும் தீர்வுகளும்” என்ற நூலுக்கு எழுதிய அறிமுகக் குறிப்பு

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. மானிட மாணிக்கமாய் வாழ்ந்த இறைதூதர் (ஸல்) அவர்களுக்கும் அவரது தோழர்கள் மற்றும் அவர்களைத் தொடர்ந்த நல்லடியார்களுக்கும் சாந்தியும் சமாதானமும் கிட்டட்டும்.
        2005களின் இறுதியில் அல்லது 2006களின் ஆரம்பத்தில்தான்  கலாநிதி மஜ்தி ஹிலாலியுடையழாஹிரது ழஃபுன் நப்ஸி வ ஸுபுலு இலாஜிஹாஎன்ற நூல் கிடைத்தது. அதன் முன்னுரையை வாசிக்கையில் 'இந்த நூலை வாசிப்பவர்கள் அது தம்மை நோக்கியே பேசுகிறது' என்ற உணர்வுடன் வாசிக்க வேண்டும் என்ற வார்த்தைகளே இந்த நூலை முழுமையாக வாசிக்கத் தூண்டியது. அதனை இரு முறை வாசித்து முடித்து ஒரு போட்டோ கொப்பிப் பிரதியும் எடுத்து வைத்துக் கொண்டேன். அது வரையில் கலாநிதி மஜ்தி ஹிலாலி பற்றி அவர் தர்பிய்யா துறைசார் அறிஞர் என்ற ஒரு குறிப்பைத் தவிர பெரிதாக அறிமுகம் தெரியாது. இந்த நூலே அவரை அறிமுகப்படுத்தி அவரில் ஆர்வம் கொள்ள என்னைத் தூண்டியது.
         பின்னர் மீள்பார்வையில் இருந்த போது பயணம் சஞ்சிகைக்காக இதனை மெல்ல மெல்ல மொழிபெயர்க்கத் துவங்கினேன். இந்த சிறிய நூலை ஆண்டுகள் இடைவெளியில் 2013.12.31 தான் முழுமையாக நிறைவு செய்து கொள்ள முடிந்தது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
       அது மனதில் எந்தக் கலங்கங்களும் இல்லாத, இலட்சிய வேட்கையுடன்இளமையின் தூய்மையா அல்லது உலகமறியாத பால்யமா என்று தெரியாது - யாரையும் எவரையும் பற்றிய எந்த அபிப்பிராயங்களும் நுழைந்து கொள்ளாத ஒரு நேரத்தில் தான் தஃவாவை எட்டிப்பார்த்தேன்.
      அந்தப் பாதையின் இடை நடுவே ஒரு அதிர்ச்சி எனக்காய் காத்துக் கிடந்தது. அதில் தான் உண்மையில் நான் இலட்சிய உலகில் இருந்து இறங்கி வந்து மனித உலகை படிக்க ஆரம்பித்தேன். என் முன்னால் பெரு விருட்ச்சங்களாக இருந்த பெரும் விம்பங்கள் உடைந்து நொருங்க, சிறு அற்பங்களாய் இருந்தவர்கள் மகாத்மாக்களாயினர். மனிதர்களின் மறுபுறம் கண்ட அந்த நிகழ்வுகள் தான் இத்தகைய நூல்களில் என்னை ஆர்வம் கொள்ளச் செய்தது.
      மனிதன் தனது பலவீனத்தை அறிந்து மற்றவன் பலவீனங்களை மறைக்கையில் மகாத்மாவாகின்றான். அவன் தனது பலவீனத்தை மறந்து பிறர் குறை காண்கையில் அற்பனாகின்றான். பேச்சுக்களுக்கும் தோற்றங்களுக்கும் பு(POO)டனைகளுக்கும் அப்பால் நின்று மனிதன் தன்னை சுய விசாரிப்புக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியவனாய் உள்ளான். இல்லாத போது அவன் கண்ணாடி முன்னே அவனது விம்பம் ஊதிப் பெருக்கப் பெருக்க மனிதர்களின் முன்னே உடைந்து சில்லாகிப் போகிறான். அவனது மனதின் சிற்றெதிர்பார்கைகளால் சிறுமையடைந்து விடுகிறான். கண்ணாடி முன்னே விம்பங்களை பார்த்துப் பழகிய பின்னர் மக்கள் கண்களில் இருக்கும் விம்பங்கள் எங்கள் காதுகளுக்கு எட்டுவதில்லை. கடைசியில் அடம்பிடிக்கும் சிறுபிள்ளையைக் கையாள்வது போல் சமூகம் எம்மைக் கையாள ஆரம்பிக்கும். நாம் சமூகத்தின் கையில் கிடைத்த புகழ்ச்சிக் கருவியாய் மாறிப் போவோம். அவர்கள் எம்மிடம் இருந்து பெற வேண்டியதை பெற்றுக் கொள்வர். இறுதியில் நாம் சக்கையாய் உமிழப்படுவோம். முடிந்து பார்த்தால் எமக்காய் இம்மையிலோ மறுமையிலோ உண்மையாய் எதுவும் மீதம் இருக்காது.
      இந்த உண்மையை குறிப்பாக தஃவாக் களத்தில் உள்ளவர்கள் உணர மறுக்கின்றார்கள். இதனால் பாதையின் பயணம் பாதசாரிகளைச் சமாளிக்கவே சரியாய்ப் போகிறது. இன்று களத்தில் இறுவகையான மனிதர்களைக் காண்கிறோம். ஒரு சாரார் பெரியவர்களாகிப்போன சிறியவர்கள். மற்றைய சாரார் சிறியவர்களாய் இருந்து கொண்டு பருத்துப் போக பிம்பிக் கொண்டிருப்பவர்கள். முன்னையவர்கள் சமூகத்தைப் பார்த்துப் பார்த்து தம்மைப் பார்க்க மறுத்து விட்டார்கள். பின்னையவர்கள் முன்னையவர்களிடம் எடுக்க வேண்டியதை எடுக்க மறந்து எடுக்கக் கூடாததை எடுத்துக் கொண்டு விட்டார்கள்.இது தஃவா களத்தை சிக்கல் நிறைந்ததாக மாற்றிவிட்டிருக்கிறது.பெரும் விம்பங்களை சமாளித்தல் என்பது ஒரு புரம் பிரச்சினைக்குரியதாய் மாறியிருக்கும் ஒரு சூழலில்;உருவாகி வரும் குட்டிக் குட்டி சிலைகளை கையாள்வதும் இன்னுமோர் சிக்களாய் களத்தில் உருவெடுத்துள்ளது.
அதனைப் பார்க்கிலும் பெரும் சிக்கல் இத்தைகைய பலவீனங்கள் சரியாகப் புரியப்பட்டு சிகிச்சை செய்யப்படாததால் பெரும் பெரும் நிறுவனங்கள் சரிவை கண்டு கொண்டிருக்கின்றன.முன்னே வரத்துடிக்கும் நிறுவனங்கள் முட்டுக் கட்டைகளை எதிர் கொண்டுள்ளன.பெரும் பெரும் சமூக செயற்பாடுகள் இத்தகையவர்களை தடை தாண்ட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டுள்ளன.தாம் சீர் திருத்தம் செய்வதாக எண்ணிக் கொண்டு சீர் கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை இந்தத் தருணத்திலாவது இந்த மனிதர்கள் உணர்ந்து விழித்துக் கொள்வார்களா?!இவை கோபத்தில் சொல்லும் வாரத்தைகளல்ல,அந்த மனிதர்களிலும் சமூகத்திலும் மார்க்கத்திலும் கொண்ட ஆழ்ந்த அன்பினால் எழும் வார்த்தைகள்.
இத்தகைய ஆபத்துக்களில் இருந்து எம்மை காத்துக் கொள்ள இது போன்ற வழிகாட்டல் நூல்கள் எமக்கு பெரும் துணை புரிகின்றன.யாரும் இங்கு மலக்குகள் இல்லை, இத்தகைய பலவீனங்களை விட்டும் தூரப்பட்டு வாழ்வதற்கு.இங்கு பலவீனங்களைப் பார்க்கிலும் அது தன்னிடம் இருப்பதாய் புரிந்து கொண்டு அதற்கெதிராய் போராடாமைதான் மிகப் பெரும் பலவீனமாய் உள்ளது.பலவீனங்களை அடையாளப்படுத்தி அதற்கெதிராய் போராடுபவர்களை பலவீனர்களாய்ப் பார்க்கும் மகாத்மாத் தனம்தான் இன்னும் எம்மிடம் இருக்கின்றது.
 பலவீனத்தை ஏற்பவன்,அதனை மாற்றிக் கொள்ள உழைப்பவன் அவன் மகாத்மாவாகிறான்.தனது பலவீனத்தை மறைத்து தனக்கு நிறம் புசிக் கொள்பவன் மரணத்துக்கு முன்னமே புதை குழியில் நுழைந்தவனாகிறான்.
இந்த உண்மையை தஃவாக்களத்தில் உழைக்கும் நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.முன்னே இருக்கும் பெரியோர் தம்மை சுயவிசாரனை செய்து கொள்ள வேண்டும்.பின்னே இருக்கும் சிறியோர் முன்னோரிலிருந்து படிப்பினை பெற வேண்டும்.இதற்கு இன் நூல் பாதை சமைக்குமாயின் அதன் நோக்கம் நிறைவடைய இறையருள் கிட்டியது எனலாம்.இந்த விடயத்துடன் தொடர்பான கலாநிதியுடையஹத்திம் ஸனமக வ குன் இன்த நப்ஸிக ஸஈரன்(உனது சிலையை நீயே உடைத்தல்;உன்னில் நீ சிறியவனாய் வாழ்தல்)”என்ற நூலும் தஃவா
களத்தில் வாசிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.அதன் சிறு பகுதியை மொழி பெயர்த்துள்ளேன்.அதனை தொடர்ந்தேர்ச்சையாக முடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்க இறைவனை பிரார்த்தியுங்கள்.
இங்கு தாஈக்களை நோக்கி இவ்வரிகளில் பேசும் போது மற்றையவர்கள் தூய்மையானவர்கள் என்பது இதன் கருத்தன்று.மாற்றமாக தாஈக்களின் மாற்றத்திலேயே சமூக மாற்றம் தங்கியிருக்கிறது.எனது வாழ்வின் முதற் பணியாக தாஈக்களை நோக்கிப் பேசுவதையே கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் இதனை இங்கு கூறுகிறேன்.நானும் அவர்களில் ஒருவன் என்ற வகையில் இது என்னை நோக்கிய சுய விமர்சனமும் கூட.இது மொழி பெயர்க்க வேண்டும் என்பதற்காய் மொழி மாற்றம் செய்யப்பட்ட நூலல்ல.மாற்றமாக களத்தில் உள்ள ஒரு தேவையை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காய் மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தைகள்.
 இந்நூலை பயணம் சஞ்சிகையில் பிரசுரித்து,அதனை நூலாக வெளியிட அனுமதி தந்த மீள்பார்வை நிறுவனத்திற்கும்,இதனை வெளியிட முன்வந்த …………நிறுவனத்திற்கும்,குறிப்பாக இதில் கூடிய கரிசனை எடுத்துக் கொண்ட ஷெய்க் ஹஸன் அவர்களுக்கும்,இதனை அழகுற வடிவமைத்த சகோதரர் அஸாருக்கும் அல்லாஹ் நிறப்பமான கூலியை வழங்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.சில மனிதர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் விம்பங்களின்றி பெரும் நன்மைகளை பெருக்களாய் பெருபவர்கள். அத்தகைய மனிதர்களின் பங்களிப்பை உளமாற இங்கு நினைவு கூர்வதோடு,அத்தகைய மனிதர்களுடன் நாளை மறுமையில் பக்கம் நிற்க இறையருள் கிட்ட வேண்டுமெனவும் இச்சந்தர்ப்பத்தில் கையேந்துகிறேன். நிறைகள் ஏக வல்லவனைச் சாரும் குறைகள் எம்மிலிருந்துள்ளவை.
                   உங்கள் சகோதரன்
                            எம்.என்.இக்ராம்

04.01.2014 

Sunday, December 22, 2013

“நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?” அப்துல் வஹ்ஹாப் அல்-மிஸைரி

December 22, 2013 at 12:10am

 அப்துல் வஹ்ஹாப் அல்-மிஸைரி அமெரிக்க ஆங்கில இலக்கியத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று மிகத் தீவிர கம்யுனிஸ்டாக இருந்தவர். இப்போது மேற்கு சிந்தனையின் ஆழம் கண்டு அதனை ஆழ்ந்து விமர்சிக்கும் பெரும் இஸ்லாமிய சிந்தனையாளர்களில் ஒருவர்.  

குடும்பம், வீடு என்பன முழுமையானதொரு சட்ட ஒழுங்கைக் கொண்ட நிறுவனம். அதுவே சமூக அமைப்பின் அடிப்படை,முதல் அலகு. இந்த வகையில் அந்நிறுவனத்துள்ளே செய்யப்படும் பணிகள் பாரிய பாதிப்பை குறிப்பிட்ட சமூகத்தின் மீதும் நாகரிகத்தின் மீதும் ஏற்படுத்துகின்றன. இக்கருத்து இப்போது மறக்கப்பட்டு, குடும்பமும் வீடும் ஒரு சிறையாகவும் பெண்ணின் ஆழுமையை அழிக்கும் இடமாகவும் கருதப்படுகிறது. வீட்டுக்கு வெளியே தொழில் புரிவது தான் “தொழில்” ஆகவும் பெண்ணுக்கு கண்ணியத்தைத் தருவதாகவும் கருதப்படுகிறது. இக்கருத்து மேற்க்கத்தேய சிந்தனை ஆதிக்கத்தால் பெண்களின் மனதில் கூட ஆழப் பதிந்துள்ளது. இக்கருத்தையே சிந்தனையாளர் அப்துல் வஹ்ஹாப் அல் மிஸைரி அவர்கள் தமக்கேயுரிய பாணியில் அழகாகத் தருகிறார்.

 

“நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?”
 “நான் வீட்டு மனைவி மட்டுமே!”         
  “இன்று என்ன தொழில் செய்தீர்கள்?”
   “ஒன்றும் செய்யவில்லை சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்.”
   பெண் விடுதலை இயக்கங்கள், பெண்-மையப்படுத்திய போராட்டங்கள் உருவாக முன்னால் அமெரிக்காவில் 60களில் இத்தகைய உரையாடல்களைப் பல்லாயிரம் முறை நான் கேட்டிருப்பேன். இப்போது இத்தகைய உரையாடல்களை எகிப்தில் கேட்கிறேன். இத்தகைய உரையாடல்களுக்குப் பின்னால் உள்ள பொருள் யாது என நோக்குவது மிக அவசியம் எனக் கருதுகிறேன்.
   “நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்…”
     “பெண்ணே! இங்கு வேலை செய்தல், தொழில் புரிதல் என்பது வீட்டுக்கு வெளியே பொதுவாழ்வில் உழைப்பது மட்டுமே. கணக்கிடவும் அளவிடவும் முடியுமானது மட்டுமே. குறிப்பிட்டளவு கூலியாகப் பணம் பெற முயுமானது மட்டுமே தொழில். உன் தனிப்பட்ட வாழ்வில் நீ மேற்கொள்ளும் ஏனைய தொழிற்பாடுகள் அனைத்தும்; பிள்ளைகளை வளர்த்தல், குடும்பத்தை பராமரித்தல் போன்ற மிக உயர்ந்த செயற்பாடுகள் உட்பட தொழிலாக மாட்டாது. அவை வீட்டுக்குள்ளே நிகழ்பவை. அதற்கு நீ எந்தக் கூலியும் பெற்றுக்கொள்வதில்லை. அதனை அளவிடவும் முடியாது.அது பொது வாழ்வோடு தொடர்பற்றது. தனிப்பட்ட வாழ்கைக்குரியது. வீட்டில் நான் உழைப்பது எனது மனித ஆளுமையை உறுதி செய்கிறது என்று நீ சொல்லாதே. அது மனிதப் பெறுமானங்களையும், மனித இயல்பு குறித்த சிந்தனையையும் பயமுறுத்துவதாக அமைந்து விடும். இவை விஞ்ஞான புர்வமான விடயங்கள் அன்று. அதாவது பௌதீக, சடவாத உண்மைகள் அன்று. ஒரு அரசாங்க அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதை விட வீட்டில் இருப்பதால் என் சமூகம் என்னால் அதிகமான பிரயோசனம் பெறும் என்றும் சொல்லி விடாதே. ஏனெனில் வரலாற்றின் பொதுவான ஓட்டம் அனைத்துப் பெண்களும் தொழில் புரிய வேண்டும் எனக்காட்டுகிறது. அனைவரும் சந்தைகளிலும் தொழிற்ச்சங்கங்களிலும் பொது வாழ்விலும் ஓடி உழைக்க வேண்டும் என்கிறது”  
      “இந்த விளக்கத்தை நான் ஏற்றுக் கொண்டால்- ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில், அதுவே ஏற்றுக் கொள்ளப்பட்ட பௌதீக விஞ்ஞான புர்வமான கருத்து.” (அப்போது நான்) வெறுமனே ஒரு வீட்டு மனைவி மட்டுமே. நான் வீட்டின் உள்ளே செய்யும் வேலைகள் அனைத்தும் தொழிலன்று.
       “இன்று என்ன தொழில் செய்தீர்கள்?”
  “நான் வீட்டைக் கூட்டித் துப்புரவாக்கினேன், உணவு சமைத்தேன், எனது மூத்த மகளை பாடசாலைக்கு அனுப்பி வைத்தேன். எனது இளைய மகளுக்கு உணவு ஊட்டினேன். கணவனை வேலை விட்டு வரும்போது எதிர்க் கொண்டேன். இவ்வாறு அனைவருக்கும் அமைதி கொடுக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன். இவ்வளவு வேலையையும் நான் செய்தபோதும் அவை நான் வீட்டிற்குள்ளே செய்யும் கூலி பெறாத செயற்பாடுகள். எனவே நான் எதுவும் செய்யவில்லை. சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்.
       இத்தகையதொரு சாதாரண உரையாடலில் கூட, உழைத்தல் என்ற சொல் முற்றிலும் ஒரு கொள்கை சார் பிரயோகமாக மாறி அச்சொல் தன் குற்றமற்ற தன்மையை இழந்துள்ளமையையும் வரையறுத்த ஒரு கலைச் சொல் பிரயோகமாக மாறியுள்ளமையையும் அவதானிக்கிறோம். அக்கலைச் சொல் மேற்க்கத்தேய மதச்சார்பற்ற அறிவு எல்லையின் உள்ளேயே முழுமையாக விளங்கப்பட முடியுமான நிலையையும் இங்கு அவதானிக்க முடியும்.
      உனது வீட்டுக்கு வெளியே பொது வாழ்வில் கூலி பெற்று விளையும் உழைப்பே பொருளாதார மனிதனின் உழைப்பாகும். பொருளாதார மனிதன் என்பவன் ஒரு உற்பத்தியாளன். ஒரு நுகர்வோன் ஆவான். அவன் சந்தையின், தொழிற்ச்சாலையின் ஒரு பகுதி. அவனது  நகர்வுகளையும், அமைதி நிலையையும் அளவிட முடியும். ஆனால் தனிப்பட்ட வாழ்வில் இயங்கும் வெறும் மனிதன் நிறைய வேலைகளைச் செய்ய முடியும். ஆனால் அவற்றில் பலவற்றை அளவிட முடியாது. எனவே அவை அறிவியலுக்கான ஒரு பொருளாகக் கொள்ளப்பட முடியாது. இந்த வகையில் அந்த அப்பாவி மனைவி பௌதீக சடவாத கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது எதுவுமே செய்யவில்லை. எனவே, அவள் உழைக்க வேண்டுமானால் அதாவது சம்பளம் பெற்று தனது கண்ணியத்தை மீள அடைய வேண்டுமாயின் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். அதனால் பிள்ளைகள் சீரழிந்து போகலாம். குடும்பக் கட்டுக் கோப்பு உடையலாம். நாகரிகத்தின் தனிப்பண்பு இழக்கப்படலாம். (ஏனெனில் தாயே பிள்ளைகளுக்கு நாகரிகத்தையும் பெறுமானங்களையும் கற்றுக் கொடுக்கிறாள். எனினும் இவை எல்லாம் இரண்டாம் தரமான விடயங்களே.)
                                                                                   நன்றி:மீள்பார்வை முஹர்ரம் மலர்-1421(2000) 

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...