Friday, August 8, 2014

பெரியவர்கள் என்னும் சிறியவர்கள்

  அண்மையில் வெளியீட்டுக்காய் காத்திருக்கும் கலாநிதி மஜ்தி ஹிலாலியின் ”உளப்பலவீனம்-தோற்றப்பாடுகளும் தீர்வுகளும்” என்ற நூலுக்கு எழுதிய அறிமுகக் குறிப்பு

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. மானிட மாணிக்கமாய் வாழ்ந்த இறைதூதர் (ஸல்) அவர்களுக்கும் அவரது தோழர்கள் மற்றும் அவர்களைத் தொடர்ந்த நல்லடியார்களுக்கும் சாந்தியும் சமாதானமும் கிட்டட்டும்.
        2005களின் இறுதியில் அல்லது 2006களின் ஆரம்பத்தில்தான்  கலாநிதி மஜ்தி ஹிலாலியுடையழாஹிரது ழஃபுன் நப்ஸி வ ஸுபுலு இலாஜிஹாஎன்ற நூல் கிடைத்தது. அதன் முன்னுரையை வாசிக்கையில் 'இந்த நூலை வாசிப்பவர்கள் அது தம்மை நோக்கியே பேசுகிறது' என்ற உணர்வுடன் வாசிக்க வேண்டும் என்ற வார்த்தைகளே இந்த நூலை முழுமையாக வாசிக்கத் தூண்டியது. அதனை இரு முறை வாசித்து முடித்து ஒரு போட்டோ கொப்பிப் பிரதியும் எடுத்து வைத்துக் கொண்டேன். அது வரையில் கலாநிதி மஜ்தி ஹிலாலி பற்றி அவர் தர்பிய்யா துறைசார் அறிஞர் என்ற ஒரு குறிப்பைத் தவிர பெரிதாக அறிமுகம் தெரியாது. இந்த நூலே அவரை அறிமுகப்படுத்தி அவரில் ஆர்வம் கொள்ள என்னைத் தூண்டியது.
         பின்னர் மீள்பார்வையில் இருந்த போது பயணம் சஞ்சிகைக்காக இதனை மெல்ல மெல்ல மொழிபெயர்க்கத் துவங்கினேன். இந்த சிறிய நூலை ஆண்டுகள் இடைவெளியில் 2013.12.31 தான் முழுமையாக நிறைவு செய்து கொள்ள முடிந்தது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
       அது மனதில் எந்தக் கலங்கங்களும் இல்லாத, இலட்சிய வேட்கையுடன்இளமையின் தூய்மையா அல்லது உலகமறியாத பால்யமா என்று தெரியாது - யாரையும் எவரையும் பற்றிய எந்த அபிப்பிராயங்களும் நுழைந்து கொள்ளாத ஒரு நேரத்தில் தான் தஃவாவை எட்டிப்பார்த்தேன்.
      அந்தப் பாதையின் இடை நடுவே ஒரு அதிர்ச்சி எனக்காய் காத்துக் கிடந்தது. அதில் தான் உண்மையில் நான் இலட்சிய உலகில் இருந்து இறங்கி வந்து மனித உலகை படிக்க ஆரம்பித்தேன். என் முன்னால் பெரு விருட்ச்சங்களாக இருந்த பெரும் விம்பங்கள் உடைந்து நொருங்க, சிறு அற்பங்களாய் இருந்தவர்கள் மகாத்மாக்களாயினர். மனிதர்களின் மறுபுறம் கண்ட அந்த நிகழ்வுகள் தான் இத்தகைய நூல்களில் என்னை ஆர்வம் கொள்ளச் செய்தது.
      மனிதன் தனது பலவீனத்தை அறிந்து மற்றவன் பலவீனங்களை மறைக்கையில் மகாத்மாவாகின்றான். அவன் தனது பலவீனத்தை மறந்து பிறர் குறை காண்கையில் அற்பனாகின்றான். பேச்சுக்களுக்கும் தோற்றங்களுக்கும் பு(POO)டனைகளுக்கும் அப்பால் நின்று மனிதன் தன்னை சுய விசாரிப்புக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியவனாய் உள்ளான். இல்லாத போது அவன் கண்ணாடி முன்னே அவனது விம்பம் ஊதிப் பெருக்கப் பெருக்க மனிதர்களின் முன்னே உடைந்து சில்லாகிப் போகிறான். அவனது மனதின் சிற்றெதிர்பார்கைகளால் சிறுமையடைந்து விடுகிறான். கண்ணாடி முன்னே விம்பங்களை பார்த்துப் பழகிய பின்னர் மக்கள் கண்களில் இருக்கும் விம்பங்கள் எங்கள் காதுகளுக்கு எட்டுவதில்லை. கடைசியில் அடம்பிடிக்கும் சிறுபிள்ளையைக் கையாள்வது போல் சமூகம் எம்மைக் கையாள ஆரம்பிக்கும். நாம் சமூகத்தின் கையில் கிடைத்த புகழ்ச்சிக் கருவியாய் மாறிப் போவோம். அவர்கள் எம்மிடம் இருந்து பெற வேண்டியதை பெற்றுக் கொள்வர். இறுதியில் நாம் சக்கையாய் உமிழப்படுவோம். முடிந்து பார்த்தால் எமக்காய் இம்மையிலோ மறுமையிலோ உண்மையாய் எதுவும் மீதம் இருக்காது.
      இந்த உண்மையை குறிப்பாக தஃவாக் களத்தில் உள்ளவர்கள் உணர மறுக்கின்றார்கள். இதனால் பாதையின் பயணம் பாதசாரிகளைச் சமாளிக்கவே சரியாய்ப் போகிறது. இன்று களத்தில் இறுவகையான மனிதர்களைக் காண்கிறோம். ஒரு சாரார் பெரியவர்களாகிப்போன சிறியவர்கள். மற்றைய சாரார் சிறியவர்களாய் இருந்து கொண்டு பருத்துப் போக பிம்பிக் கொண்டிருப்பவர்கள். முன்னையவர்கள் சமூகத்தைப் பார்த்துப் பார்த்து தம்மைப் பார்க்க மறுத்து விட்டார்கள். பின்னையவர்கள் முன்னையவர்களிடம் எடுக்க வேண்டியதை எடுக்க மறந்து எடுக்கக் கூடாததை எடுத்துக் கொண்டு விட்டார்கள்.இது தஃவா களத்தை சிக்கல் நிறைந்ததாக மாற்றிவிட்டிருக்கிறது.பெரும் விம்பங்களை சமாளித்தல் என்பது ஒரு புரம் பிரச்சினைக்குரியதாய் மாறியிருக்கும் ஒரு சூழலில்;உருவாகி வரும் குட்டிக் குட்டி சிலைகளை கையாள்வதும் இன்னுமோர் சிக்களாய் களத்தில் உருவெடுத்துள்ளது.
அதனைப் பார்க்கிலும் பெரும் சிக்கல் இத்தைகைய பலவீனங்கள் சரியாகப் புரியப்பட்டு சிகிச்சை செய்யப்படாததால் பெரும் பெரும் நிறுவனங்கள் சரிவை கண்டு கொண்டிருக்கின்றன.முன்னே வரத்துடிக்கும் நிறுவனங்கள் முட்டுக் கட்டைகளை எதிர் கொண்டுள்ளன.பெரும் பெரும் சமூக செயற்பாடுகள் இத்தகையவர்களை தடை தாண்ட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டுள்ளன.தாம் சீர் திருத்தம் செய்வதாக எண்ணிக் கொண்டு சீர் கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை இந்தத் தருணத்திலாவது இந்த மனிதர்கள் உணர்ந்து விழித்துக் கொள்வார்களா?!இவை கோபத்தில் சொல்லும் வாரத்தைகளல்ல,அந்த மனிதர்களிலும் சமூகத்திலும் மார்க்கத்திலும் கொண்ட ஆழ்ந்த அன்பினால் எழும் வார்த்தைகள்.
இத்தகைய ஆபத்துக்களில் இருந்து எம்மை காத்துக் கொள்ள இது போன்ற வழிகாட்டல் நூல்கள் எமக்கு பெரும் துணை புரிகின்றன.யாரும் இங்கு மலக்குகள் இல்லை, இத்தகைய பலவீனங்களை விட்டும் தூரப்பட்டு வாழ்வதற்கு.இங்கு பலவீனங்களைப் பார்க்கிலும் அது தன்னிடம் இருப்பதாய் புரிந்து கொண்டு அதற்கெதிராய் போராடாமைதான் மிகப் பெரும் பலவீனமாய் உள்ளது.பலவீனங்களை அடையாளப்படுத்தி அதற்கெதிராய் போராடுபவர்களை பலவீனர்களாய்ப் பார்க்கும் மகாத்மாத் தனம்தான் இன்னும் எம்மிடம் இருக்கின்றது.
 பலவீனத்தை ஏற்பவன்,அதனை மாற்றிக் கொள்ள உழைப்பவன் அவன் மகாத்மாவாகிறான்.தனது பலவீனத்தை மறைத்து தனக்கு நிறம் புசிக் கொள்பவன் மரணத்துக்கு முன்னமே புதை குழியில் நுழைந்தவனாகிறான்.
இந்த உண்மையை தஃவாக்களத்தில் உழைக்கும் நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.முன்னே இருக்கும் பெரியோர் தம்மை சுயவிசாரனை செய்து கொள்ள வேண்டும்.பின்னே இருக்கும் சிறியோர் முன்னோரிலிருந்து படிப்பினை பெற வேண்டும்.இதற்கு இன் நூல் பாதை சமைக்குமாயின் அதன் நோக்கம் நிறைவடைய இறையருள் கிட்டியது எனலாம்.இந்த விடயத்துடன் தொடர்பான கலாநிதியுடையஹத்திம் ஸனமக வ குன் இன்த நப்ஸிக ஸஈரன்(உனது சிலையை நீயே உடைத்தல்;உன்னில் நீ சிறியவனாய் வாழ்தல்)”என்ற நூலும் தஃவா
களத்தில் வாசிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.அதன் சிறு பகுதியை மொழி பெயர்த்துள்ளேன்.அதனை தொடர்ந்தேர்ச்சையாக முடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்க இறைவனை பிரார்த்தியுங்கள்.
இங்கு தாஈக்களை நோக்கி இவ்வரிகளில் பேசும் போது மற்றையவர்கள் தூய்மையானவர்கள் என்பது இதன் கருத்தன்று.மாற்றமாக தாஈக்களின் மாற்றத்திலேயே சமூக மாற்றம் தங்கியிருக்கிறது.எனது வாழ்வின் முதற் பணியாக தாஈக்களை நோக்கிப் பேசுவதையே கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் இதனை இங்கு கூறுகிறேன்.நானும் அவர்களில் ஒருவன் என்ற வகையில் இது என்னை நோக்கிய சுய விமர்சனமும் கூட.இது மொழி பெயர்க்க வேண்டும் என்பதற்காய் மொழி மாற்றம் செய்யப்பட்ட நூலல்ல.மாற்றமாக களத்தில் உள்ள ஒரு தேவையை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காய் மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தைகள்.
 இந்நூலை பயணம் சஞ்சிகையில் பிரசுரித்து,அதனை நூலாக வெளியிட அனுமதி தந்த மீள்பார்வை நிறுவனத்திற்கும்,இதனை வெளியிட முன்வந்த …………நிறுவனத்திற்கும்,குறிப்பாக இதில் கூடிய கரிசனை எடுத்துக் கொண்ட ஷெய்க் ஹஸன் அவர்களுக்கும்,இதனை அழகுற வடிவமைத்த சகோதரர் அஸாருக்கும் அல்லாஹ் நிறப்பமான கூலியை வழங்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.சில மனிதர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் விம்பங்களின்றி பெரும் நன்மைகளை பெருக்களாய் பெருபவர்கள். அத்தகைய மனிதர்களின் பங்களிப்பை உளமாற இங்கு நினைவு கூர்வதோடு,அத்தகைய மனிதர்களுடன் நாளை மறுமையில் பக்கம் நிற்க இறையருள் கிட்ட வேண்டுமெனவும் இச்சந்தர்ப்பத்தில் கையேந்துகிறேன். நிறைகள் ஏக வல்லவனைச் சாரும் குறைகள் எம்மிலிருந்துள்ளவை.
                   உங்கள் சகோதரன்
                            எம்.என்.இக்ராம்

04.01.2014 

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...