
“முஸ்லிம் சமூகத்துக்கும் ஏனைய சமூகங்களுக்குமிடையிலானஉறவைப் பற்றிய இஸ்லாத்தின் கருத்துக்களை தொகுத்து நோக்கும்போது அது தஃவாவை அடிப்படையாகக் கொண்ட உறவாகவேகாணப்படுகிறது.” –முகவ்வமாதுஸ் ஸில்ம் வகலாயா அல்-அஸ்ர்- அலிஅப்துர்ரஹ்மான் அத்தய்யார்-
(இது ஜமாஅதுஸ் ஸலாமாவின் ஸலாமா சஞ்சிகைக்காக எழுதப்பட்ட கட்டுரை .சஞ்சிகையில் விரிவின் காரணமாக இதில் ஒரு பகுதி பிரசுரிக்கப்படவில்லை.அதனை இங்கே பார்க்கலாம்)
முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிமல்லாதாருக்குமிடையிலான உறவு பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு தொடர்பாக ஆராய்ந்து பார்க்கின்ற போது பெரும்பாலும் எமது ஆரம்பகால அறிஞர்களால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சூழலை மையமாக வைத்தே அவை பார்க்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.ஒரு பெரும்பான்மைக்குள் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் தம்முடன் வாழும் பெரும்பான்மை முஸ்லிமல்லாதாருடன் எவ்வாறான தொடர்பை பேணலாம் என்பது தொடர்பில் பெரிய அளவில் ஆய்வுகள் ஏதும் இடம் பெற்றிருப்பதாக காண முடியவில்லை.
ஐரோப்பிய சிறுபான்மையை வைத்து செய்யப்பட்ட சில ஆய்வுகள் தவிர்த்து இது தொடர்பில் பரந்த ஆய்வுகள் இருப்பதாக அறிய முடியவில்லை.சிறுபான்மை தொடர்பாக பேசப்பட்ட பெரும்பான்மையான ஆய்வுகள் கூட பெரும்பான்மைக்குள் சிறுபான்மை எவ்வாறு தமது தனித்துவத்தை பேணி வாழலாம் என்பதற்கான இஸ்லாமிய பிக்ஹ் சட்ட ரீதியான இடம்பாடுகள் பற்றி பேசியுள்ளனவே தவிர அதற்கப்பால் பெரும்பான்மையுடன் கலந்து வாழும் ஒழுங்குகள்,அவர்களுடனான சமூக ரீதியான (பொருளாதார,அரசியல்,கல்வி,குடும்ப…)உறவுகள் என்பன தொடர்பில் ஒருமுகப்பட்ட அமைப்பில் ஆய்வுகளை காண முடியவில்லை.எனினும் சிதறிய அமைப்பில் அரசியல்,பொருளாதார,சர்வதேச ஒழுங்குகள் தொடர்பில் பேசும் போது இது தொடரபில் தொகுத்து நோக்கத்தக்க பல கருத்துக்களை பல நவீன கால அறிஞர்கள் பேசியுள்ளனர்.
முஸ்லிம் முஸ்லிமல்லாதார் உறவு தொடர்பான பொதுவானஅடிப்படைகள்
முஸ்லிமல்லாதாருடனான உறவு தொடர்பில் அல்-குர்ஆனின் கருத்தை நாம் நோக்கும் போது ஸுரா அல்- மும்தஹினாவின் 8,9வது வசனங்கள் முஸ்லிம்-முஸ்லிமல்லாதார் உறவு தொடர்பில் அடிப்படையான மூலமாக கொள்ளத்தக்க வசனங்கள் என கலாநிதி யூசுப் அல்-கர்ளாவி அவர்கள் தனது “இஸ்லாமிய சமூகத்தில் வாழும் முஸ்லிமல்லாதார்” என்ற நூலின் ஆரம்பத்திலேயே தனியான ஒரு பகுதியாக குறிப்பிட்டு விளக்குகிறார்கள்.
“அல்லாஹ்;மார்க்க விவகாரத்தில் உங்களுடன் போராடாத,உங்களது வசிப்பிடங்களிலிருந்து உங்களை வெளியேற்றாத -முஸ்லிமல்லாதாருடன்- நீங்கள் நீதியாக நடப்பதையும் அவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதையும்உங்களுக்கு தடுத்து விடவில்லை.அல்லாஹ் நீதியாளர்களை விரும்புகிறான்/அல்லாஹ்;மார்க்க விவகாரத்தில் உங்களுடன் போராடுபவர்களுடனும் உங்களை உங்களது வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றியவர்களுடனும்,உங்களை வெளியேற்ற உதவியவர்களுடனும் நீங்கள் நெறுக்கமாக சினேகம் பாராட்டுவதை விட்டுத்தான் உங்களை தடுக்கிறான்.யார் அத்தகையோருடன் நெறுக்கமாக சிநேகம் பாராட்டுகிறார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.“ (அல்-மும்தஹினா:8,9)
இந்த வசனம் குறிப்பிடுகின்ற ‘அல்-பிர்ரு’(நல்லுறவு பாராட்டல்), ‘அல்-கிஸ்த்’(நீதியாக நடத்தல்) என்பன பொதுவாகவே மனிதர்களுடனான உறவில் ஒரு முஸ்லிம் பேண வேண்டிய இரு அடிப்படைகளாகும். இதில் முஸ்லிம், முஸ்லிமல்லாதார் என்ற வேறுபாடு பார்க்கப்படக் கூடாது.இங்கு அவர்கள் எதிர்ப்பு மனப்பாங்குடன் செயற்படுகிறார்களா இல்லையா என்ற விடயம்தான் முக்கியமானது.ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றாதவர் என்பது மாத்திரம் அவர் எதிர்க்கப்படுவதற்கும் அவருடன் போராடுவதற்குமுரிய காரணியாக அமையமாட்டாது.இந்த வசனத்துடன் “மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை,நேர்வழி வழிகேடடிலிருந்து தெளிவாக பிரித்து விளங்கும் நிலையிலுள்ளது..”-பகரா-256- என்ற வசனத்தையும் இணைத்து; ‘முஸ்லிமல்லாதாருடன் உறவாடுவதற்கான அடிப்படைகள்’ என்ற நூலில் விளக்கும் உஸ்தாத் ஸாலிம் பஹன்ஸாவி அவர்கள்; “முஸ்லிம்களைப் பொருத்தவரை அடிப்படையிலேயே இவ்விவகாரத்தில் அவர்களுக்கு பிரச்சினை கிடையாது.இஸ்லாம் முஸ்லிமல்லதாரையும் அவர்களது உரிமைகளையும் ஸுரா பகராவின் இவ்வசனத்தினூடாக அங்கீகரித்து விடுகிறது.இஸ்லாத்தில் ஒருவர் நுழைவதாயின் திருப்தியோடும் தெளிவோடுமே இணைய வேண்டும்.அங்கு நிர்ப்பந்தம் கிடையாது.அத்தோடு இஸ்லாம் முன்னைய வேதங்களையும் மார்க்கங்களையும் அங்கீகரிக்கிறது .ஏனைய சமூகங்களுடன் கூட அது நல்லுறவையே அடிப்படையில் வழியுருத்துகிறது.” என விளக்குகிறார்.
ஸுரா மும்தஹினாவின் 8,9 வது வசனங்களை விளக்க வரும் ஷஹீத் செய்யித் குதுப் அவரகள் “இஸ்லாத்தின் சர்வதேச உறவுகளின் அடிப்படையாக சமாதானமே இருக்கும்.அடிப்படையில் ஒரு முஸ்லிமுக்கும் ஏனைய மனிதர்களுக்குமிடையிலான நிரந்தர உறவாக சமாதானமே இருக்கும்.அவனின் மீதான ஏதாவதோர் அத்துமீறலே தவிர வேறு எதுவும் அதனை பாதிக்கமாட்டாது.அத்துமீறல் என்பது அவனுக்கெதிரான போராகவோ,உடன்படிக்கை மீறலாகவோ,சிந்தனை சுதந்திரத்தை தடுப்பதாகவோ இருக்கலாம்.அப்படியேதும் நடக்காதவரை சமாதானமும் அன்பும் நீதியும் நல்லுறவுமே அடிப்படையானதாய் இருக்கும்“ என விளக்குகிறார்.
முஸ்லிமல்லதாருடனான தொடர்பின் போது ஒரு வகையான ஒதுங்குதல் மனோ நிலையுடன்,தவிர்க்க முடியாத நிர்ப்பந்த சூழலில் வைக்கும் உறவு போன்ற ஒரு தொடர்பை பேணுதல் இஸ்லாத்தின் பார்வையில் எத்துனை பிழையானது என்ற கருத்தை நாம் இங்கு புரிந்து கொள்கிறோம்.இந்த குர்ஆன் வசனத்தில் வரும் ‘அல்-பிர்ரு’ என்ற சொல்லுக்கு இமாம் கராபி குறிப்பிடும் விளக்கம் இதனை இன்னும் தெளிவாக எமக்கு விளக்குகிறது. “அவர்களிலுள்ள பலவீனர்களுடன் சாந்தமாக நடத்தல்,ஏழைகளது தேவைகளை நிறைவேற்றல்,பசித்தோருக்கு உணவளித்தல்,ஆடையற்றோருக்கு ஆடையளித்தல்,அவர்களுடன் நலினமாக நடக்கும் வகையில் மென்மையாகவும் இரக்கமாகவும் உரையாடல்,இது அவர்களுக்கு பயந்தோ,அவர்களிடமிருந்து ஏதாவது அடைந்து கொள்ளும் நோக்குடனோ இடம்பெறக் கூடாது.அவர்களுக்கு நேர்வழி கிடைக்க வேண்டும், அவர்கள் சிறப்பாக வாழ வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.அவர்களது உலக,மார்க்க விவகாரங்கள் என அனைத்திலும் உதவி ஒத்தாசையுடன் நடத்தல்,அவர்களிடமிருந்து ஏதாவது தொந்தரவு ஏற்பட்ட போதிலும் அவர்களது குறைகளை மறைத்தல்,அவர்களது சொத்துக்கள்,குடும்பம்,மானம்,என அவர்களது அனைத்து உரிமைகள்,நலன்களையும் பாதுகாத்தல்,அவர்களுகளுக்கு அநீதி இடம்பெறுமாயின் அதற்கெதிராக அவர்களுக்கு உதவுதல் அவர்களது அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தல்…”(அல-புரூக்-ஷிஹாபுத்தீன் அல்-கராபி)
இங்கு பரந்த அடிப்படையிலான மனித சகோதரத்துவம் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியம் வழியுருத்தப்படுவதைக் காணலாம்.நல்லுறவு என்பதுடன் நீதி என்பதும் முஸ்லிமல்லாதாருடனான உறவில் விரிவாக விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.இதனை அல்-குர்ஆனே ஸுரா மாஇதா:8 இல் விளக்குகிறது “உங்களுக்கு ஒரு சமூகத்துடன் இருக்கும் குரோதமும் எதிர்ப்பும் நீங்கள் நீதியாக நடக்காது தவறிவிட உங்களை தூண்டிவிடாதிருக்க வேண்டும். நீங்கள் நீதியாக நடவுங்கள் அது தக்வாவுக்கு மிகவும் நெறுக்கமானது..” இது மனித சமூகத்தில் நீதியை நிலை நாட்டுவதற்கான அழைப்பு,இது நாம் வெறுக்கின்றவர்களுடன் கூட நீதியாக நடக்குமாறு வேண்டப்படுகின்ற கட்டளை என விளக்கும் உஸ்தாத் பஹ்மி ஹுவைதி அவர்கள்(முவாதினூன் லா திம்மிய்யூன்) இவ்வசனத்துக்கான ஷெய்க் றஷீத் றிழாவின் விளக்கத்தை நீதி என்பது எவ்வகையில் அமைய வேண்டும் என்பதை விளக்குவதற்காக கொண்டு வருகிறார். “ஒரு முஃமினுக்கு நீதியை விடுவதற்கோ,அதனை அநீதியையும் பக்கச்சார்பையும் பார்க்கிலும் மேலாக கருதாது இருக்கவோ எந்த நியாயமும் கிடையாது.அவன் நீதியை மனோ இச்சைக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும்அப்பால் நோக்க வேண்டும்.எத்தகைய காரணமாயினும் ஒரு சாராருடனான சிநேகம்,எதிர்ப்பு என்பவற்றை தாண்டி அதனை நோக்க வேண்டும்…யாரும் ஒரு காபிரிற்காக சாட்சி சொல்வதில் நீதியாய் நடக்கத்தேவையில்லை அல்லது ஒரு முஃமினுக்கு எதிராக காபிரின் உரிமையொன்றை பெற்றுக் கொடுப்பதில் நீதியாய் இருக்கத் தேவையில்லை என தவராக எண்ணிவிடாதிருக்க வேண்டும் எனத்தான் அல்-குர்ஆன் இங்கு இதனை விளக்குகிறது”
ஒரு யுதனுடைய விடயத்தில் அநீதி இடம் பெறப் போவதை தடுப்பதற்காக நபியவர்களை அல்லாஹ் ஸுரா நிஸாவின் 105-113 வரையான வசனங்களை இறக்கி கண்டித்தமையும் நீதி என்ற பெறுமானம் குறிப்பாக முஸ்லிமல்லாதார் விடயத்தில் எவ்வளவு தூரம் பேணப்பட வேண்டும் என்பதை வழியுருத்துகிறது.எனவேதான் நபியவர்களது காலம் முதல் அண்மைய காலங்கள் வரை இதில் முஸ்லிம்கள் மிகக் கவனமாக நடந்திருக்கிறார்கள்.இதனை விரிவாக வரலாற்று நிகழ்வுகளுடன் உஸ்தாத் பஹ்மி ஹுவைதி அவர்கள் தனது முவாதினூன் லா திம்மிய்யூன் என்ற நூலில் விளக்குகிறார்கள்.
முஸ்லிமல்லாதார் என்று வருகின்ற போது அஹ்லுல் கிதாப்களை இஸ்லாம் விஷேடமாக நோக்குகிறது.அஹ்லுல் கிதாப்கள் என்போர் அல்லாஹ்விடமிருந்து இறங்கிய வேதத்தை பின்பற்றுவோர் அந்த வேதம் இப்போது திரபு படுத்தப்பட்டு மாற்றப்பட்டிருக்கலாம்.(அய்ருல் முஸ்லிமீன் பீ முஜ்தமஇல் இஸ்லாமி).இவரக்ளுடன் குடும்ப உறவை வைத்துக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது.அதாவது அவர்களது பெண்களை திருமணம் செய்ய அனுமதிக்கிறது.அத்தோடு அவரகள் அறுத்தவற்றை சாப்பிட அனுமதிக்கிறது(மாஇதா:05).இஸ்லாம் அன்பிலும் இரக்கத்திலும் கட்டியெழுப்பப்பட வேண்டுமெனக் கருதும் குடும்ப வாழ்வை அவர்களுடன் ஒரு முஸ்லிம் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.தனது சந்ததியின் தாயாக அப்படியான ஒருவரை ஏற்கிறது என்றால் முஸ்லிமல்லாதாருடனான தொர்பு பற்றிய இஸ்லாத்தின் பார்வை எத்துனை விசாலமானது.அஹ்லுல் கிதாப்களுடன் மார்க்க விடயத்தில் வாதிடுவதாயினும் சிறந்த முறையில் (அன்கபூத்-46)அது இடம்பெற வேண்டுமென குர்ஆன் கருதுகிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்வு,பிரபஞ்சம்,உயிர்கள்,பொருட்கள்,மனிதன் பற்றிய இஸ்லாத்தின் சமநிலையான பார்வை இந்த உலகில் ஒரு முஸலிமுக்கும் இவை அனைத்துக்கும் இடையே அழகிய தொடர்பொன்றை ஏற்படுத்துகிறது.இதனை சுருக்கமாக குறிப்பிட்டால் இஸ்லாத்தின் பார்வை இவற்றுக்கிடையே சுமூகமான உறவை ஏற்படுத்துகின்றது,இவற்றுக்கிடையே அழகான பிணைப்பை உண்டுபன்னுகிறது.இவற்றுக்கிடையே மோதலை உண்டு பண்ணவில்லை.சுமூகமான உறவு,சமாதானம் என்பனவே இஸ்லாத்தின் அடிப்படை உறவு.
இந்த வகையில் மனிதர்கள் அனைவரும் ஒரு ஆன்மாவிலிருந்து தோன்றியவர்கள்(நிஸா-01).அவர்களுக்கிடையே அடிப்படையில் எவ்வித வேறுபாடும் கிடையாது.அவர்கள் அனைவரும் மனிதர்கள் என்ற வகையில் கண்ணியமானவர்கள்(இஸ்ரா-70,தீன்-04).இந்த கண்ணியமே அவனை பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதியாக மாற்றியது.இந்த கண்ணியம் அவன் மனிதன் என்பதற்காக கிடைத்தது.இது அவன் முஸ்லிம்,யூதன்,கிறிஸ்தவன்…என மத அடிப்படையில் கிடைத்ததல்ல.இந்த கருத்தை இஸ்லாத்தின் போதனைகளுக்கும் ஐ.நாவுக்குமிடையே மனித உரிமைகள் என்ற ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலியின் நூலில் அவர் விரிவாக விளக்குகிறார்.அடுத்து அவர்கள் அனைவரும் நபியவர்கள் கூறிவது போல்(படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பத்தினர்) அல்லாஹ்வின் குடும்பத்தினர் என்ற வகையில் அனைத்து வேறுபாடுகளுக்குமப்பால் ஒன்றாக சந்திக்க முடியுமானவர்கள்.நபியவர்கள் மதீனா சாசனத்தில் மதீனாவிலிருந்த யூதர்கள் உட்பட அனைத்து தரப்பையும் ஒரு உம்மத்தாக குறிப்பிட்டது போன்று ஒரு பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு உடன்பாட்டின் கீழ் ஒன்றாக வாழும் வாய்ப்பு மார்க்க எல்லைகளுக்கப்பால் மனிதன் என்ற பெறுமானத்தில் சாத்தியமானது.
நீதி,சமத்துவம்,சிந்தனை,செயல் சுதந்திரம்,நலன்பேணல்,தீயனவற்றிலிருந்து பாதுகாத்தல்,நல்லனவற்றுக்கு உதவுதல்,பொதுவான அம்சங்களில் ஒருவருடன் ஒருவர் ஒத்துழைத்தல்,பரஸ்பரம் தெளிவு தேவைப்படும் விவகாரங்களில் அழகிய முறையில் கலந்துரையாடல்,நண்பர்கள் யார்?எதிரிகள் யார்? என்பதனை அடையாளம் கண்டு அவர்களுடனான சரியான உறவைப் பேணுதல்….என முஸ்லிம் முஸ்லிமல்லாதார் தொடர்பு பற்றிய பல பகுதிகள் எமது ஆரம்பகால அறிஞர்கள் முதல் நவீன கால அறிஞர்கள் வரை அனைவராலும் விரிவாக உரையாடப்பட்டுள்ளன.எனினும் அவை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மனோ நிலையில் இருந்தே நோக்கப்பட்டிருப்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.
பெரும்பான்மை முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிமல்லாதசிறுபான்மைக்குமிடையிலான உறவு
எமது ஆரம்பகால இமாம்கள் முஸ்லிமல்லாதாருடனான உறவு தொடர்பிலான நடைமுறை வடிவங்கள் பற்றிய பல்வேறு விவகாரங்களை இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் அணுகியுள்ளனர்.அவை அனைத்தும் முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக,பெரும்பான்மையாக வாழும் நிலையை கருத்திற் கொண்டதாகவே அமைந்து காணப்படுகிறது.என்றாலும் அவற்றை சரியாகப் புரிவது நாம் எமது சூழலில் அவற்றை எப்படி அணுகலாம் என்பதனை விளங்கிக் கொள்வதற்கு உதவியாக அமையும்.
ஆரம்பகால கால இமாம்கள் இந்த விடயத்தை ‘பாபுஸ் ஸைர்’ என பிக்ஹ் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.ஹிஜ்ரி122 இல் மரணித்த இமாம் ஸைத் இப்னு அலியின் “அல்-மஜ்மூஃ பில் பிக்ஹ்” என்ற நூலே இந்த விடயத்தை முதலில் பேசியதாக உஸ்தாத் பஹ்மி ஹுவைதி குறிப்பிடுகிறார்.நடை முறை விவகாரங்களை பிற்பட்ட காலங்களில் ஆராய்ந்த போதும் முஸ்லிமல்லாதர் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு அல்லாஹ்வால் அவனது வஹியினூடாக உறுதிப்படுத்தப்பட்டதாகும்.மனிதர்கள்கள் அனைவரும் ஒரு ஆன்மாவிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்ற நிலைப்பபாடு மனிதர்கள் எல்லோரையும் சமமாக பார்க்கின்ற வஹியின் நிலைப்பாடு இங்கு மனித இஜ்திஹாத் இதனை தீர்மானிக்கவில்லை.அதன் நடைமுறை வடிவங்கள் பற்றியே இஜ்திஹாத்கள் இடம்பெற்றுள்ளன.
மதீனா ஹிஜ்ரத்தின் பின்னர் அது தாருல் ஹிஜ்ராவாக பார்க்கப்பட ஆரம்பித்ததிலிருந்து உலகை தாருல் இஸ்லாம்,தாருல் ஹர்ப் என பிரித்துப் பார்க்கின்ற முறை தோற்றம் பெற்றது.இது பிற்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட சில மாற்றங்களுடன் மூன்றாக பகுத்து நோக்கப்பட்டது.தாருல் அஹ்த் என மூன்றாவது ஒரு பிரதேசமும் இந்த இரண்டுடனும் இணைத்துப் பார்க்கப்பட்டது.
தாரு்ல் இஸ்லாம் என்பது பல்வேறு அறிஞர்களாலும் வரைவிலக்கணப்பட்டுள்ளது.இதில் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.ஹனபி மத்ஹபை சேர்ந்ந இமாம் ஸர்கஸி “இது முஸ்லிம்களது ஆளுகைக்கு கீழுள்ள பிரதேசம்.அங்கு இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன்,முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலும் காணப்படும்.” என வரைவிலக்கணப்படுத்துகிறார்.மாலிகி மத்ஹபை சேர்ந்த இமாம் தஸுகி “முஸ்லிம்களுக்குரிய பிரதேசமாக இருந்து, அங்கு தற்போது இஸ்லாத்தின் கிரியைகள் அனைத்தும் அல்லது பெரும்பாலனவை நிறைவேற்றப்படுமாயின் அதில் தற்போது காபிர்கள் அதிகாரம் செலுத்தினாலும் அது தாருல் இஸ்லாமாக பார்க்கப்பட வேண்டும்” என்கிறார். ஷாபிஈ மத்ஹபை சேர்ந்த புஜைரமி என்பவரது கருத்துப்படி முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்த நிலம்.அது அவர்கள் வெற்றி கொண்டதாயினும் சரி.அதிலிருந்து அவரகள் வெளியேற்றப்பட்டிருந்தாலும் அது தாருல் இஸ்லாமாக பார்க்கப்பட வேண்டும் என்கின்றார்.ஹம்பலி மத்ஹபை சேர்ந்த இமாம் இப்னுல் கையிம் (றஹ்) இஸ்லாமிய ஆட்சி நிலவிய பிரதேசம் என குறிப்பிடுகிறார்.இவை பெரும்பாலும் இஸ்லாம் என்பதனை மையமாக வைத்து பார்க்கப்பட்ட பார்வைகள்.இதே கருத்தை நவீன காலத்திலும் பல அறி‘ஞர்கள் கொண்டுள்ளனர்.எனினும் இவற்றில் ஹனபி,மாலிகி மத்ஹப்களில் வரும் பாதுகாப்பு,இஸ்லாத்தின் அடிப்படைக் கரிரியைகளை நடைமுறைப்படுத்த முடியுமான சூழல் என்பன முஸ்லிம்களது “ஆட்சிக்குட்பட்ட“ என்ற நிபந்தனையை விடவும் இன்றைய சூழலில் கூடுதல் கவனம் கொடுத்துப் பார்க்கப்பட வேண்டிய நிபந்தனைகள் என பல நவீன கால அறிஞர்கள் கருதுகிறார்கள்.இந்த வகையில் முஸ்லிம்களது பாதுகப்பு உத்தரவாதப்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கு இஸ்லாத்தின் கிரியைகளை அல்லது அதில் அதிகமானதை நிறைவேற்ற முடியுமான சூழல் இருப்பின் அப்பிரதேசத்தை ஒரு காபிர் ஆட்சி செய்தாலும் அது தாருல் இஸ்லாமாக பார்க்கப்பட வேண்டும் என்ற கருத்தை பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.இது மாலிகி,ஹனபி மத்ஹபின் கருத்துக்களை சேர்த்து பார்க்கும் போது நாம் பெற முடியுமான முடிவு என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.கலாநிதி அப்துல் வஹாப் கல்லாப் தனது ஸியாஸா அஷ்ஷரஇய்யா என்ற நூலில் இதனை விளக்கும் போது “இங்கு தாருல் இஸ்லாம் தாருல் ஹர்ப் என்ற பிரிப்பு,இஸலாத்தை ஏற்றல் ஏற்காமை என்பதை வைத்து பார்க்கப்படுவதைப் பார்க்கிலும் பாதுகாப்பு பாதுகாப்பின்மை என்பதனை வைத்து பார்க்கப்படுவதே பொருத்தமானது என்கிறார்.றஸுல் (ஸல்) அவர்கள் மதீனா ஸாஸனத்தில் முஸ்லிம்கள்,முஸ்லிமலாதார் என அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரே உம்மத் என பாவித்த பிரயோகத்தின் உள்ளடக்கத்திற்கு பொருந்தி வரக்கூடியதாக பாதுகாப்பை மையப்படுத்திய வரைவிலக்கணம் காணப்படுலதாக உஸ்தாத் பஹ்மி ஹுவைதி குறிப்பிடுகிறார்.
தாருல் ஹர்ப் என்பதை இஸ்லாம் வாழும் பூமி,வாழாத பூமி என உலகை இரண்டாக பிரித்துப் பார்ப்பவர்கள் அனைவரும் குப்ர் ஆளும் பூமி அல்லது முஸ்லிமல்லாதார் வாழும் பூமி எனவே வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர். இதில் இமாம் ஷாபிஈயின் வரைவிலக்கணம் “முஸ்லிம்களுடன் சமாதான உறவை கொண்டிராத காபிர்களது பூமி” என அமைந்துள்ளது.இவர் இப்படி வரைவிலக்கணப்படுத்துவதற்கு காரணம் முதலில் தாருல் அஹ்த் என்ற மூன்றாவது ஒரு பிரிப்பை அறிமுகம் செய்தவர் இமாம் ஷாபிஈ ஆவார்.தாருல் அஹ்த் என்பது முஸ்லிம்களுடன் சுமூகமான உறவை வைத்திருக்கும் அதே நேரம் அவர்களுடன் போராடாது அவர்களுக்கு கராஜ் வரி செலுத்துவதாக உடன்பட்ட பிரதேசம் என வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது.இப்பிரதேசம் தாருத் தஃவா என இஸ்லாத்தை பேசுவதற்கும் முஸ்லிம் அங்கு சென்று வாழ்வதற்கும் முடியுமான பிரதேசமாக இன்று அடையாளப்படுத்தப்பட முடியும்.
இப்பிரிப்பின் அடிப்படையில் முஸ்லிம்களுக்குள் சிறுபான்மையாக வாழும் முஸ்லிமல்லதார் திம்மீக்கள் எனவும்.இஸ்லாமிய பூமியை தரிசித்து தங்கிச் செல்ல அனுமதி பெற்றவர்கள் முஸ்தஃமின் எனவும்.முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் அஹ்லுல் ஹர்ப் எனவும் பார்க்கப்படுகின்றனர்.
இந்த வகையில் வைத்து இம் மூன்று சாராருடனுமான உறவு தொடர்பில் வித்தியாசமான நடைமுநைகளும் சட்டங்களும் பேசப்பட்டுள்ளன.இதில் திம்மீகள் உடனான உறவு பற்றியே இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் விரிவாகப்பார்க்கப்பட்டுள்ளது.அவர்களுடனான தொடர்பை சுருக்கமாக மதீனா சாசனத்தில் நபியவர்களால் குறிக்கப்பட்ட “எங்களுக்கானதெல்லாம் அவர்களுக்குமானது.எங்களுக்கெதிரானதெல்லாம் அவர்களுக்குமெதிரானது”என்ற பின்னர் திம்மிக்களுடனான உறவின் அடிப்படையை விளக்கும் விதியாக பார்க்கப்பட்ட விதியினை வைத்து விளக்கலாம்.இந்த உறவு பற்றிய ஒழுங்குகள் வரலாறு நெடுகிலும் கால சூழல் மாற்றங்களை கருத்தில் கொண்டு வளர்ந்து வந்து இன்று அது இஸ்லாமிய நாட்டின் பிரஜாவுரிமை (Citizenship) என்பது வரை விரிவடைந்துள்ளது.ஜிஸ்யா வரியின் வடிவங்கள் கூட உமர்(றழி)காலத்தைப் போன்று நவீன ஒழுங்குகளுக்குள் நின்று மாற்றங்களைப் பெறமுடியும்.இங்குதான் சிறுபான்மையாய் வாழும் முஸ்லிமல்லாதாரின் அரசியல் பங்களிப்பு,நாட்டின் பதவிகளுக்கு,பொருப்புக்களுக்கு நியமித்தல் என்பன தொடர்பிலான விடயங்களும் கவனத்திற்குட்படுகின்றது.உதாரணமாக இஸ்லாமிய நாடொன்றின் ஜனாதிபதி வேட்பாளராக ஒரு முஸ்லிமல்லாதவர் போட்டியிட முடியுமா? அவர் ஆட்சிக்கு வர முடியுமா என்ற விடயங்கள் தொடர்பில் பார்க்கும் போது உஸ்தாத் அப்துல் கரீம் ஸைதான் போன்றவர்களின் கருத்து இது தொடர்பில் நாம் எவ்வளவு விரிவாக சிந்திக்க முடியும் என்ற வாயிலை திறந்து விடுகிறது.தற்போதுள் அரசியல் ஒழுங்கும் நாட்டின் தலைமைப்பதவியும் முன்னைய காலப்பகுதியில் இருந்த கிலாபா ஒழுங்கையும் இமாமத் ஒழுங்கையும் பார்க்கிலும் வித்தியாசமானது என்ற வகையில் இது தொடர்பில் முடியும் என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.உண்மையில்இத்தகைய விவகாரங்கள் தொடர்பில் நாம் பேசுகின்ற போது,புதிய இஜ்திஹாதுகளுக்கு வரும்போது,நஸ்ஸுகளையும் வரலாற்றில் இடம் பெற்ற இஜ்திஹாதுகளையும் இஸ்லாத்தின் நீண்ட வரலாற்றுடன் சேர்த்து விளங்க வேண்டும் என்ற உஸ்தாத் பஹ்மி ஹுவைதியின் கருத்து ஆழ்ந்த கவனத்தைப் பெறத்தக்கது.எமது பார்வைகள் பலபோது குருகியதாகக் காணப்படுவதற்கு வரலாற்றை விட்டும் நஸ்ஸுகளையும்,சட்டங்களையும் வேறுபடுத்தி நோக்குவது காரணமாக அமையலாம்.நாம் அரசியல் பரப்பிலும் பொருளாதார மற்றும் சர்வதேச ஒழுங்குகள் என பல பகுதிகளிலும் புதிய கருத்துக்களாக பார்க்கின்ற பல விவகாரங்கள் எமது அறிவுச் செலுமை மிகுந்த வரலாற்றில் நீண்ட தூரம் ஆய்வுக்குட்பட்டவை.துரதிஷ்டவசமாக நாம் விட்ட இடத்திலருந்து கட்டுமானத்தை தொடராமல் அத்திவாரமற்ற வீடு கட்ட அவசரப்படுகிறோம்.இது இன்திபாழாவில் கல்லெரியும் போராட்டமல்ல.அதற்கு அதற்குரிய பெறுமதி அதற்குரிய இடத்தில் உண்டெனினும்.இது அறிவுச் செழுமை மிகு நாகரிகக் கடலில்,வரலாற்றுக்கடலில் பொருமையாய மூச்சடக்கி முத்தெடுக்கும் செயல்.
முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதாருக்குமான உறவு தொடர்பில் அடுத்து பேசப்படுகின்ற விடயம்.அடிப்படையில் அவர்களுக்கிடையிலான உறவு சமாதானத்தை அடிப்படையாகக் கொண்டதா?போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டதா? என்பது.இதில் இவ்வுறவு அடிப்படையில் சமாதானத்தை அடிப்படையாகக்கொண்டது என்பது மிகப் பெரும்பாலான அறிஞர்களது கருத்தாகும்.இமாம் ஷாபிஈ “அடிப்படையில் முழு உலகும் ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டியதாகும்.அதன்படியே இஸ்லாத்தின் சட்டங்கள் அமைந்துள்ளன.உலகை இரண்டாகப் பிரித்து நோக்குவது விதிவலக்காக தோற்றம் பெற்ற நிலையாகும்” என்று குறிப்பிடும் கருத்து மனிதர்களுக்கிடையிலான தொடர்பு பற்றிய இஸ்லாத்தின் இயல்பான பார்வையை ஆழமாக நோக்கிச் சொல்லப்பட்டது என கலாநிதி வஹ்பத் ஸுஹைலி “இஸ்லாமிய பிக்ஹில் யுத்தங்கள் ஏற்படுத்திய பாதிப்பு“என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார்.இதைப் பார்க்கிலும் அழகான ஒரு அணுகுமுறைதான் முஸ்லிமுக்கும் முஸ்லிமல்லாதாருக்கும் இடையிலான உறவு தஃவாவை அடிப்படையாகக் கொண்டது என்ற உஸ்தாத் அலி அப்துர் ரஹ்மான் அத் தய்யாரின் கருத்தாகும்.சமாதான உறவும் அதனை இல்லாமல் செய்கின்ற போராட்டமும் தஃவாவிற்கான சாதகமான,முட்டுக்கட்டையான நிலைகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என அவர் குறிப்பிடுகிறார்.இது இஸ்லாத்தின் ரூஹுடன் உடன்பட்டுச் செல்லும் கருத்தாக விளங்குகிறது.முஸ்லிம் உம்மத் ஒரு தூதை சுமந்த உம்மத் என்ற வகையில் அவர்களது உறவு வெறும் நல்லுறவு என்பதனை தாண்டி விசாலமான மனதுடன் ஒருவனை,ஒரு சமூகத்தை அணுகும் உறவாகக் காணப்படும்.நபியவர்களதும் ஸஹாபாக்கதும் உறவுகளை பார்க்கின்ற போது இதனையே நாம் விளங்குகிறோம்.உமர்(றழி)அவர்கள் ஜிஸ்யா என்ற பெயரின்றி அதனை விட இரட்டிப்பாக வரி செலுத்த உடன்பட்ட ஒரு கிறிஸ்தவர் அதற்கு உமர்(றழி) அவர்கள் உடன்படாததால் ரோமுடன் போய் சேர்ந்து கொண்டதை எண்ணி கடுமையாக வருத்தப்பட்டார்.இதனால் பின்பு ஒரு முறை ரோமுக்கு படையெடுத்து சென்ற போதும் அவரை பெயர் கூறி அந்த படைத்தளபதியிடம் திரும்பி இஸ்லாமிய பிரதேசத்துக்கு வருமாறு செய்தி அனுப்பினார்.இது அவர் இஸ்லாத்தின் அழைப்பை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இழந்து விட்டாரே என்று உமர்(றழி) அவர்கள் கொண்ட கவலை என்பதனைத்தான் காண்கிறோம்.எனவே,உமர்(றழி) அவர்கள் தனது ஆட்சிக் காலப்பகுதியில் ஜிஸ்யா என்ற பெயரின்றி ஸதகா என்ற பெயரில் வரி செலுத்த உடன்பட்டார்கள்.
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிமல்லாதபெரும்பான்மைக்குமிடையிலான உறவு
முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதாருக்குமிடையிலான உறவு பற்றிய இஸ்லாதின் கருத்தையும் அதன் பிரயோக வரலாற்றையும் வாசிக்கும் போது சிறுபான்மை என்ற நிலையிலிருந்து நாம்இந்த விடயத்தை அணுக வேண்டிய தேவை உள்ளதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதிருக்கின்றது.அவ்வளவு தூரம் இஸ்லாத்தின் பார்வை விசாலமானதாகவும் இயல்பானதாயும் அமைந்து காணப்படுகிறது.எனவேதான் உஸ்தாத் பஹ்மி ஹுவைதி அவர்கள் அவ்வுறவைக் குறிக்க “தஸாமுஹ்“ சகிப்புத்தன்மை என்ற சொல்லை பயன்படுத்துவது கூட இது தொடர்பான இஸ்லாத்தின் கருத்தை கொச்சைப்படுத்துவதாக அமையும் என்கின்றார்.இப்படியான பயன்பாடு கிறிஸ்தவ உலகில் காணப்பட்ட மத அடிப்படை வாதத்தின் பின்னணியில் இஸ்லாமிய உலகை நோக்கி வந்த மிகவுமே பிற்பட்ட காலப் பிரயோகம் என அவர் குறிப்பிடுகிறார்.
எனினும் நாம் வாழும் சூழலை பார்க்கின்ற போது பெரும்பான்மை மனோ நிலையுடன் இஸ்லாத்தை பின்பற்றுகிறோம் என்று கூறுவதும் தவரானது.ஏனெனில் பெரும்பான்மையாக இருந்து இஸ்லாத்தை பின்பற்றும் போது கூட மூடுண்ட அமைப்பிலான,கடும்போக்கு நடைமுறைகளுடன் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் மிகவும் அறிதே.அப்படி நடந்தவைகள் மோசமான ஆட்சியாளர்களது சில அரிதான செயற்பாடுகளாகவே இருந்தன.அதிலும் அவர்களது அணுகுமுறை முஸ்லிமல்லாதாருடன் மாத்திரம் கடுமையாக இருக்கவில்லை முஸ்லிம்களுடன் கூட அவர்கள்அப்படித்தான் நடந்து கொண்டார்கள்.
முஸ்லிம் பெரும்பான்மையே முஸ்லிமல்லாதாருடன் இஸ்லாத்தின் அடிப்படையான போதனைகளின்படி மிகவுமே திறந்த மனோநிலையுடன் நடந்திருக்கிறார்கள்.அவர்களது உணர்வுகள் புண்படாத வண்ணம் நடக்க வேண்டும் என இஸ்லாம் வழியுறுத்தியுள்ளது என்றிருந்தால் முஸ்லிமல்லாத பெரும்பான்மைக்குள் வாழும் முஸ்லிம் சிறுபான்மை எவ்வளவு தூரம் நெகிழ்வுத்தன்மையுடன் வாழ வேண்டும் என்பது சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடியுமானது.
இந்த வகையில் சிறுபான்மை முஸ்லிம்கள் மானிட சகோதரத்துவம் என்ற புள்ளியில் முஸ்லிமல்லாதாருடன் சந்திக்க முடியுமான அனைத்துப் புள்ளிகளையும் இணம் கண்டு பொதுத்தளத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்.அரசியல்,பொருளாதாரம்,நாட்டின் அபிவிருத்தி,நலன்.சமூக ஒழுக்கங்களை நிலை நாட்டல்,அநீதிகளை இல்லாமல் செய்தல்..என பெரும் பரப்புகளுள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாயில்கள் காணப்படுகின்றன.குறிப்பாக பொருளாதாரப்பகுதி முஸ்லிமல்லாதாருடன் இணைந்து பணியாற்றுவதற்கான பல இடம்பாடுகளை கொண்டிருப்பதாக பல தனியான ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.இங்கு இஸ்லாமிய வங்கி தொடர்பாக நாம் கொண்டிருக்கின்ற பல கருத்துக்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.அரசியல் பரப்பும் சமூகப் பரப்பும் கூட இத்தகைய பரந்த இடம்பாடுகளைக் கொண்ட பகுதிகளாகும்.அத்தோடு கலை இலக்கியம் ஊடகம் என்பனவும் பொதுவாக மனித நலன்,மானிட விழுமியங்கள் என இணைய முடியுமான பல இடங்களை கொண்டிருக்கிறது. இதன் போது முதலில் நாம் எம்மை தூதை சுமந்த சமூகமாக ஒழுங்கு படுத்திக் கொள்ளுதல் முதன்மையானது.இதில் நாம் இஸ்லாத்தின் மாறாத மற்றும் மாறும் பரப்புக்களை சரியாக இணங்கண்டு கொள்வது அடிப்படையானது.
அடுத்து நீதி,நல்லுறவு என்ற பாலம் எமக்கும் பெரும்பான்மை சமூகத்துக்குமிடையே போடப்பட வேண்டும்.இங்கு நாம் இனம் என்ற அடையாளத்திலன்றி,உயர்ந்த பெறுமானங்களைக்கொண்ட தஃவா சமூகம் என்ற வகையில் எமது உறவை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் நீதி என்ற பெறுமானத்தின் முன்னால் அனைவரும் சமமாக நோக்கப்படும் நிலை உருவாக வேண்டும்.ஒரு பெரும்பான்மை சகோதரர் சிறுபான்மை முஸ்லிம் ஒருவருக்கு இழைக்கும் அநீதி,அதன் பிரதிபலிப்பாக அவர்களுடன் அநீதியாக நடந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கமாட்டாது.அந் நிகழ்வுகள் குறிப்பிட்ட தனியான நிகழ்வுகளாக பார்க்கப்பட்டு உரிய தீர்வுகள் எட்டப்படுகின்ற முறைமைகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இந்த விடயம் சரியாகப் புரியப்படாமையே நிறைய இனக்கலவரங்களின் வாயிலாக அமைந்து விடுகின்றது.ஒரு குறித்த ஒரு பிரதேசத்தில் குறித்த இரு சாராருக்கிடையில் பிரச்சினை ஏற்படுமாயின் அது அங்கே தீர்க்கப்பட வேண்டும்.அது நீதி என்ற பெறுமானத்தில் குறித்த விடயத்துக்கு தீர்வு காண்பதுடன் முடிவடைய வேண்டும்.அது ஏனைய பிரதேசத்தவர்களது உறவுகளை பாதிப்பதற்கு எத்தகைய வாய்ப்பும் இருக்க முடியாது.
உலகில் முஸ்லிம் சிறுபான்மைகளுக்கெதிராக இடம் பெறும் அநீதிகளுக்கு பெறும்பான்மை மாத்திரம்தான் காரணம் எனக் கூறமுடியாது.அதற்கு முஸ்லிம்கள் தவறாக இஸ்லாததை பிரதிநித்துவப்படுத்தியமையும் ஒரு முக்கிய காரணமாகும்.இந்த வகயில் பெரும்பான்மையுடன் சரியான உறவை கட்டியெழுப்ப வேண்டுமாயின் பிக்ஹின் புவியியல்,வரலாற்று,சமூகப்பல்வகைமைகள் உள்வாங்கப்பட்டு அதிலிருந்து எமக்கான பல்வகைமை கொண்ட ஒரு பிக்ஹ் நடைமுறை புலக்கத்தில் விடப்பட வேண்டும்.இங்கு மாலிகி,ஹனபி மத்ஹப் சார்ந்த பிக்ஹ் பாரம்பரியங்களும்,மேற்கிலும் மற்றும் புவிப்பல்வகைமைகளிலும் உருவாகிய பிக்ஹுகளும் கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.அத்தோடு இது பிக்ஹுல் அகல்லிய்யாத் என்ற வடிவத்தை வைத்தும் பார்க்கப்பட முடியுமானது.ஐரோப்பிய அமெரிக்க நாடுகளை வைத்து உருவாக்கப்பட்ட பிக்ஹை கற்பதற்கான வாய்ப்பு எமது நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும்.அது எமது வாழ்வமைப்பை இஸ்லாத்தின் இலகு நடையில் ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பபை வழங்கும்.அந்த பிக்ஹை படிக்கும் போது ஷெய்க் கர்ளாவி குறிப்பிடுவது போல் “இஜ்திஹாத் இன்திகாயி“ எனப்படும் பிக்ஹின் பல் வகைமையுள் எமக்குப் பொருத்தமானதை தெரிவு செய்தல்தான் அதில் அதிகம் என்பதைக் காண்கிறோம்.இந்த இடத்தில் இஸ்லாத்தை கர்ண கடூரமாக கட்மைத்து வைத்துள்ள,அதனை தமது வாழ்விலேயே முழுமையாக பிரதிபலிக்காத உபதேசிகளை வெள்வது பெரும் சவாலாக அமையலாம்.
இந்த விடயம் மிகவும் விரிவாக கலந்துரையாடலுக்குட்படுத்தப்பட்டு எமது வாழ்வை மீள் ஒழுங்கமைப்பது என்பது எமது நாட்டைப் பொருத்தவரை இஸ்லாத்தை சரியாக பிரதிநித்துவப்படுத்துவதில் மிக முக்கிய அம்சமாக இருக்கும் என்பதை இஸ்லாத்தின் விரிந்த தன்மையையும் எமது வாழ்வையும் சரியாக படித்துப்பார்க்கும் யாரும் மறுக்கமாட்டாரகள்.பலபோது எமது முன்னைய இமாம்களின் கருத்தின்படி எமது நாடு இன்றைய சர்வதேச சூழலில் தாருல் இஸ்லாமாகவே பார்க்கப்பட முடியுமாக இருக்கின்றது.உண்மையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் கூட இந்த வகைப்பாட்டுக்குள் வர முடியாத சூழல்தான் இன்று காணப்படுகிறது.எனினும் அல்லாஹ்வின் அந்த அருளை நாம் துஷ்பிரயோகம் செய்துள்ளோம்.நாம் இலங்கை தீவுக்குள் இன்னோர் தீவாய் வாழ்கிறோம்.உண்மையில் முஸ்லிமல்லாதாருடனான உறவு பற்றி பேசும் போது பாவிக்கின்ற நிர்ப்பந்தம் நிர்ப்பந்தம் என்ற சொற்களெல்லாம் நாம் தகவமைத்துக் கொண்ட பிக்ஹில் உள்ள நிர்ப்பந்தங்களே தவிர இஸ்லாத்திலுள்ள நிர்ப்பந்தங்களல்ல.இங்கு இலங்கை முஸ்லிம்களைப் பார்த்து நீங்கள் சில மஞ்சல் தாள்களையுடைய பிக்ஹ் நூல்களுக்குள் உங்களது வாழ்வை சிறைப்படுத்தியுள்ளீர்கள் என உறத்துக் கூவ வேண்டும் போலிருக்கிறது.குறைந்தது ஷாபி மத்ஹபையாவது சரியாக கற்றுத் தேராதவர்களையே நாம் உலமாக்கள் என்கிறோம்.இந்த வரையரையிலிருந்து வெளிவர வேண்டியது இன்றைய சூழலில் முதன்மையான மார்க்கக்கடமை.
கோடிகள் கொடுத்து நாம்அமைத்து வைத்துள்ள,அமைத்துக் கொண்டிருக்கும் பள்ளிவாயில்கள்,வருடா வருடம் கோடிகளுக்கு அருத்துப் பலியிடும் மிருகங்கள்,இஸ்லாம் வலியுருத்தும் சுன்னாவான பல போது பர்ளான உற்பத்தியை விட்டு விட்டு அடுத்தவனது உற்பத்திக்கு ஹலால் கொடுப்பது பற்றிய எமது சிந்திப்பு,முன்பு ஊருக்கு ஊர் என்றிருந்தது மாறி வீட்டுக்கு வீடு என மத்ரஸாக்களை அமைத்து,கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டிடங்களை அமைத்து நாலு தாளை மனனமிட்டு ஒப்புவிக்கும் அறிஞர்களை உருவாக்குகிறோம் என இந்த நாட்டின் திறமையான மனித வளங்களை உயிருடன் கொலை செய்யும் செயலை செய்து கொண்டு இஸ்லாத்தை வளர்ப்பதாக வீராப்புப் பேசுதல் என,இந்த நாட்டின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்காது ஒதுங்கியிருந்து கொண்டு வெரும் தோற்றத்திலும் கிரியைகளிலும் பகட்டுக்காட்டும் எமது இஸ்லாம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதுதான் விடை காண முடியாத புதிராக உள்ளது.
இந்த நாட்டிலுள்ள அஹ்லுல் கிதாப்களுடனான உறவு எனத் துவங்கி நமக்கு நெருக்கமானவர்கள் யார்?எதிரிகள் யார்?என துள்ளியமாக இணங்காணப்பட்டு எமது உறவுகளை பேணுவதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமைகள் உருவாக்கிக் கொள்ளப்பட வேண்டும்.அதனுடன் சேர்த்து சிறுபான்மையாய் கட்டுண்டு போயுள்ள மனோ நிலையை உடைக்கும் வகையில் இஸ்லாத்தை அதன் பரந்த தன்மையுடன் பிரதிநிதித்துவப் படுத்தும் சமூகங்களுடனான புத்திஜீவித்துவ உறவு முதல் திருமண உறவு வரை சமூகச் சாளரத்தை திறக்க வேண்டும்.இது உள் நோக்கியும் அஹ்லுல் கிதாப்களில் துவங்கி மற்ற சாராரை நோக்கியும் விரிவடைய வேண்டும்.ஸகாத்,ஸதகா போன்ற விடயங்களில் முஸ்லிமல்லாதாருக்கான பங்குகள் இணங்காணப்பட்டு அவை சரியாக அவர்களை போய்ச் சேர்வதற்கான ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இப்படி இத்துறை சார்ந்து ஆழமாக சிந்திக்கும் வாயில்களை திறந்து விடும் வகையில் அதற்கான ஒரு மஜ்மஉல் பிக்ஹின் உருவாக்கம் இவற்றின் முதல் படியாக அமையும்.இங்கு இந்த கட்டுரை இவ்விவகாரம் தொடர்பாக மிகவும் சிறிய பரப்புக்குள் தொகுக்கப்பட்டதாகும்.இதன் தொடர்ச்சி விரிந்த வாசிப்புக்களையும் ஆய்வுகளையும் வேண்டி நிற்கிறது.
உசாத்துணைகள்
- முவாதினூன் லா திம்மிய்யூன்-பஹ்மி ஹுவைதி
- பீ பிக்ஹில் அகல்லிய்யாத்-கலாநிதி யூசுப் அல்-கர்ளாவி
- அய்ருள் முஸ்லிமீன் பீ முஜ்தமஇல் இஸ்லாமி- கலாநிதி யூசுப் அல்-கர்ளாவி
- அகல்லிய்யாதுத் தீனிய்யா வஹல்லுள் இஸ்லாமி- கலாநிதி யூசுப் அல்-கர்ளாவி
- அஸ்லுல் அலாகா மஅ அய்ரில் முஸ்லிமீன் வல் கவாஇதுல் பிக்ஹிய்யா-அஹமத் தைஜானி ஹாரூன் அப்துல் கரீம்
- மின் பிக்ஹில் அகல்லிய்யாதில் முஸ்லிமா-காலித் முஹம்மத் அப்ர்ல் காதிர்
- கவாஇதுல் மர்ஜஇய்யா பித் தஆமுல் மஅ அய்ரில் முஸ்லிமீன்-கலாநிதி காலித் ஸஈத் தபூஷீத்
- அழ்-ழவாபிதுஷ்ஷரஇய்யா லில் முஆமலாதில் இகதிஸாதிய்யா அல்-ஆலமிய்யா-கலாநிதி ஹுஸைன்ஹுஸைன் ஷஹாதா
- அத்-தஆமுல் மஅ அய்ரில் முஸ்லிமீன்-உஸுலு முஆமலதிஹிம் வஇஸ்திஃமாலிஹிம்-கலாநிதி அப்துல்லாஹ் இப்னு இப்றாஹீம் அத்தரீகீ
11. அகல்லிய்யாதுல் முஸ்லிமா வாகிஅன் வபிக்ஹன்-அஹமத் அர்ராவி
12. ஸினாஅதுல் பத்வா வபிக்ஹுல் அகல்லிய்யாத்-அப்துல்லாஹ் இப்னு பய்யாஹ்
13. அஹ்காமுஸ் ஸிம்மிய்யீன் பீ தாரில் இஸ்லாம்-கலாநிதி அப்துல் கரீம் ஸைதான்
அஹ்காமுத்தஆயுஷ் மஅ அய்ரில் முஸ்லிமீன்-முஸ்தபா மக்கீ ஹஸன் அல்-கபீஸி
No comments:
Post a Comment