
(பயணம்-43 சஞ்சிகைக்காக எழுதப்பட்ட ஆக்கம்)
“நேரம் பொன்னானது என நேரத்தை தங்கத்திற்கு ஒப்பிடுகின்றனர்.இதுஇப்பிரபஞ்சத்தை சடவாதப் பெறுமானம் கொண்டு மாத்திரமே நோக்கத்தெரிந்த சடவாதிகளின் கண்ணோட்டத்தில் சரியாகஇருக்கலாம்.ஆனால்,அதனைப் பார்க்கிலும் விரிந்த பார்வைகொண்டவர்களுக்கு நேரம்தான் வாழ்வாகும்.”
-இமாம் ஹஸனுல் பன்னா-
நேரம் என்று பேசுகின்ற போதே நேர முகாமை தொடர்பான முன்வைப்புகளும் நேரத்துக்கு சமூகம் தராமை தொடர்பான முறைப்பாடுகளும்தான் மனக் கண்முன் வந்து நிற்கும் கருமங்கள்.இது தொடர்பில் பேசுபவர்களும் முறைப்படுபவர்களும் கூட அவற்றை எவ்வளவு தூரத்திற்கு பிரதிபலிக்கின்றனர் என்பது எப்போதும் மனதில் எழும் வினா.எனவே,இது தொடர்பில் அதிகம் ஈடுபாடு கொள்ளாத மனோ நிலைதான் எனக்கிருந்தது.நேரத்தை உச்ச அளவில் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதில்தான் ஈடுபாடு இருந்தது.
தவிர்க்க முடியாமல் இந்த தலைப்பை எழுத வேண்டும் என்ற நிலையில் இதனை எழுத முன்னர் இரு விடயங்களை செய்ய வேண்டுமென தீர்மானித்தேன்.
1-நேர முகாமை,அதற்கான பயிற்றுவிப்பு என்பது தொடர்பில் புரிதலை பெறுதல்
2-இயன்றவரை அதனை நடைமுறைப்படுத்த முயற்சித்தல்.
இந்த இரண்டிலும் வித்தியாசமான அனுபவங்களும் புரிதலுமே கிடைத்தது.குறிப்பாக இஃவான்களின் புரிதலில் நேரத்தின் மீதான கரிசனை,நேரத்தை தியாகம் செய்தல்,நேரத்தை உச்ச அளவில் பயன்படுத்தல்,நேரத்தை பொருத்தமான வகையில் ஒழுங்கு படுத்தல் என்ற வகையிலேயே இது தொடர்பில் பார்க்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை எனது வாசிப்புக்கும் சகோதரர்களின் கருத்துப் பரிமாறல்களுக்கும் உட்பட்ட வகையில் புரிந்து கொள்ள முடிந்தது.
நேரமும் இமாம் பன்னாவும்
இமாம் பன்னா அவர்கள் நேரத்தை பௌதீகப் பெறுமானங்கள் அனைத்தையும் தாண்டி அதனை வாழ்வாகப் பார்த்தார்கள்.இமாமவர்கள் இப் புரிதலை குர்ஆனிலிருந்தும்,(“அல்லாஹ்தான் இரவையும் பகலையும் நிர்ணயம் செய்கிறான்”-முஸ்ஸம்மில்:20-) ஹதீஸிலிருந்தும்,(“ஒருவர் தனது வாழ்வை எப்படி கழித்தார் என மறுமையில் விசாரிக்கப்படும்”) ஸலபுகளின் புரிதல்களிலிருந்தும் (“இமாம் ஹஸனுல் பஸரி,இமாம் இப்னுல் கையிம் அல்-ஜவ்ஸி போன்றோர் இக் கருத்தை பேசியுள்ளனர்”)தான் பெற்றிருக்கிறார்கள்.
“நேரப்பயன்பாட்டில் வெற்றி என்பது வெறுமனே நுணுக்கமான திட்டமிடலிலும் சாதகமான சூழ்நிலையிலும் மாத்திரம் தங்கியதாக இல்லை அது பொருத்தமான நேரத்திலும்(அல்-வக்துல் முனாசிப்) தங்கியுள்ளது” என்ற இமாமவர்களின் கருத்து,குறித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அச்சந்தர்ப்பத்திற்கேற்ற பணியை நிறைவேற்றுவதன் மூலமே நேரத்திலிருந்து முழுமையான பிரயோசனத்தைப் பெற முடியும் என்பதனை விளக்குகிறது.இதனை இஸ்லாம் தொழுகைக்கான நேரத்தை பிரித்து அமைத்திருப்பதில் இருந்தும்,காலை,மாலை என நேரங்களை மற்றும் வெள்ளி,அய்யாமுல் பீழ் என நாட்களை சிறப்பித்திருப்பதில் இருந்தும் மாதங்களை சிறப்பித்திருப்பதில் இருந்தும் புரிந்து கொள்கிறோம்.
இவ்வகையில் பொருத்தமான பொழுதை பொருத்தமான செயலிற்கு பயன்படுத்தாமல் இருப்பதற்கு தடையாக பொடுபோக்கு,அசமந்தப்போக்கு காரணமாய் அமையும் என்ற கருத்தை அஃராப்-179 ம் வசனத்தில் இருந்து விளக்கும் இமாமவர்கள் நேரத்தை வாழ்வு பற்றிய சரியான புரிதலுடன் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டலை சகோதரர்களுக்கு வழங்குகிறார்.
இமாம் ஹஸனுல் பன்னாவின் வாழ்வை நாம் நோக்கும் போதும் நேரத்தை மிகச் சரியாக பயன்படுத்தியமைக்கான முன்மாதிரியை அவரது வாழ்வில் காணலாம்.இமாமவர்களின் சகோதரர் உஸ்தாத் அப்துர் ரஹ்மான் அவர்கள் அவரது வீட்டில் இமாமவர்கள் எப்படி நேரத்தைக் கழித்தார்கள் எனக் கூறும் போது;“அவரது நடத்தைகளில் மக்களுக்கு தெரியாத ஒரு பகுதி இருந்தது.அது அவருக்கும் அவரது இறைவனுக்கும் இடையிலான தொடர்பு.அதனை அவர் மக்களை விட்டும் மறைத்திருந்தார்.அவரது வீட்டார் மாத்திரமே அதனை அறிபவர்களாக இருந்தனர்.அவர் வீட்டில் இருக்கும் போது தனது குர்ஆனை கையில் எடுத்தவராகவே இருப்பார்.அதனை கீழே வைக்கவே மாட்டார்.குர்ஆனை மனனம் செய்த யாராவது இருந்தால் அவரிடம் குர்ஆனை ஓதிக் காண்பிப்பார்.யாரும் இல்லாவிடன் சிறியவர்களிடம் குர்ஆனை கொடுத்து ஓதிக் காண்பிப்பார்.இப்படி அவர் குர்ஆனின் மூலம் வீட்டை நிரப்புவார்...”
இதன் கருத்து அவர் வேரு எதற்கும் நேரம் ஒதுக்கவில்லை என்பதல்ல.அவரது வாழ்வில் இந்த விடயத்தில் அவர் சமநிலை பேணுபவராக இருந்தார்.எனவேதான் அவரது பிள்ளைகள் அவரை பற்றி சொல்லும் போது ஒவ்வொரு பிள்ளைக்காகவும் தனியான கோப்புகள் வைத்து இமாமவர்களே தனது கையால் அவற்றில் குறிப்பிட்டு ஒவ்வொரு பிள்ளையையும் தனியாக கவனித்தாக குறிப்பிடுகின்றனர்.அதே போன்று அவர் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதிலும் தனது நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தியிருக்கிறார்.இது அவரது நிறைந்த தஃவா செயற்பாடுகளுக்கு மத்தியில் அவர் நேரத்தை எப்படி ஒழுங்கு படுத்தி பயன்படுத்தியிருக்கிறார் என்பதை காட்டுகிறது.அவரது இரவு வணக்கம் பற்றிய உஸ்தாத் உமர் தில்மிஸானி,பஹாஉத்தீன் அமீரி போன்றவர்களது சாட்சியங்களும் இதனையே காண்பிக்கின்றன.
அவரது தஃவா செயற்பாடுகள் பற்றி அவரது தோழர்கள் குறிப்பிடும் போது பின்வரும் நிகழ்வை குறிப்பிடுகிறார்கள் “இமாமவர்கள் ஸ்கந்திரியாவிலுள்ள ஒரு பள்ளிவாயிலில் ஜும்ஆ பிரசங்கம் செய்தார்கள்.பின்னர் பக்கத்திலுள்ள மத்திய நிலையத்தில் சற்று களைப்பரினார்.பின்னர் ஜஸீரதுல் ஹல்ரா என்ற தீவிற்கு சென்று பகல் போசனத்தை எடுத்தோம்.பிறகு அப்பிரதேச பள்ளிவாயிலில் இமாமவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.பிறகு அங்கிருந்து றஷீத் என்ற பிரதேசத்துக்கு ஓடத்தில் திரும்பினோம்.அங்கிருந்த ஷுஃபாவில் ஒரு உரையை நிகழ்த்திவிட்டு அங்கிருந்து இன்னோர் ஷுஃபாவின் நிகழ்வொன்றில் உரையாற்ற இமாமவர்கள் சென்றார்கள் இவ்வுரை இஷா தொழுகையை தொடர்ந்து இருந்தது.பிறகு ஸ்கந்திரியா மத்திய நிலையம் வந்து அப்பிரதேச சகோதரர்களுடன் நிர்வாக விடயங்களில் கலந்துரையாடிவிட்டு அங்கு தங்கி அதிகாலையில் கைரோ திரும்பினோம்.” இப்படி ஒரு நாள் இரு நாளல்ல இதுதான் அவரது ஷஹாதத் வரையிலான வாழ்வாக இருந்தது.குறித்த இந்தப் பயணத்தை பற்றி சொல்லும் போது வழியில் பொலிஸ் கடவையில் நின்றிருந்த போது அங்கு நின்ற சில நிமிடங்களை அங்கிருந்த பொலிஸ் சிப்பாயை அறிமுகமாக பயன்படுத்திய நிகழ்வை சகோதரர்கள் குறிப்பிடுகின்றனர்.இதற்கு காரணம் கேட்ட போது “நாம் ஒரு நிமிடம் தரித்தோம் நாம் அதனையும் தஃவாவை பரப்ப பயண்படுத்த வேண்டுமே.” என இமாமவர்கள் பதிலளிதத்தாக குறிப்பிடுகின்றனர்.இதுவும் இமாமவர்களது வாழ்வில் நேரம் எப்படி மிக உயர்ந்த அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை தருகின்றது.அத்தோடு கடமையில் நேரம் தவறாமை,நேரத்திற்கு சமூகம் தருதல் என்ற விடயங்களிலும் இமாமவர்கள் கரிசனை கொண்டிருந்தார்கள்.
நேரத்தில் பயன் பெற இலக்குகளும் அதனை அடைவதற்கானசெயல்களும் முக்கியமானவை

நேரத்தில் கரிசனை கொள்வதென்பது வெறுமனே அது தன்னளவிலான ஒரு இலக்கன்று.ஆனாலும் அதனை மறுதலிக்கவும் முடியாது.ஏனெனில் நேரம்தான் எமது வாழ்வு.வாழ்க்கையில் உயர்ந்த ஒரு இலக்கின்றி நேரம் குறித்து உரையாடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.அதே போன்று இலக்குகள் மாத்திரம் இருந்தும் போதாது இதனை அடைவதற்கான செயற்பாடுகளும் நுணுக்கமாக திட்டமிடப்பட்டிருக்க வேண்டும்.அப்போதுதான் நேரத்திலிருந்து உரிய பயனைப் பெற முடியும்.இந்த வகையில்தான் காலத்தின் மீது சத்தியம் செய்கின்ற இறைவன் அதனை பயன்படுத்துவதில் மனிதன் நஷ்டமடைந்து விடாதிருக்க அதற்கான செயற்திட்டமொன்றையும் முன்வைக்கிறான்(ஸுரா அஸ்ர்).
நேரத்தைப் பற்றி உரையாடுகின்ற எவரும் இது தொடரபில்தான் அதிக கவனம் கொடுத்து பேசுவதைக் காண்கிறோம்.இப்படி அணுகும் போதுதான் இந்த விடயம் முழுமை பெறுகிறது.உஸ்தாத் முஸ்தபா தஹ்ஹான் அவர்கள் “நேர முகாமை” தொடர்பான அவரது நூலை இந்த வகையில் மாணவர் செயற்பாட்டை மையமாக வைத்து அமைத்திருப்பது இது தொடர்பில் நாம் முன்மாதிரியாய் காணத்தக்க ஒரு விடயமாகும்.
இந்த நோக்கில்தான் இஃவான்களது தர்பியா பாரம்பரியத்திலும் இலக்கு நோக்கிய பயிற்றுவித்தல் என்பது முக்கிய இடத்தை வகிக்கிறது.தஃவாவினது தனி நபர் உருவாக்கம்-குடும்ப உருவாக்கம்-சமூக உருவாக்கம்-ஆட்சியை சீர் திருத்தல்-இஸ்லாமிய தேச விடுதலை-கிலாபத்-மனித சமூகத்திற்கு வழிகாட்டல் என்ற இலக்குகளும் அவற்றுக்கான செயற்பாடுகளும் வரையறுக்கப்பட்டு அவற்றை நோக்கி அங்கத்தவர்கள் பயிற்றுவிக்கப்படுவதானது அவர்களது நேரத்தை சிறந்த முறையில் கையாள்வதற்கான குறித்த இலக்கையும் செயற்பாடுகளையும் வழங்குவதாக அமைகிறது.உஸ்தாத் அப்துல் ஹமீத் கஸ்ஸாலி அவர்கள் இவ்விலக்குகளுள் ஆரம்ப மூன்றையும் குறுங்கால இலக்குகள் எனவும் மற்றயவற்றை நீண்டகால இலக்குகள் எனவும் ‘சமூக எழுச்சிக்கான இஸ்லாமிய செயற்திட்டத்தின் அடிப்படைகள்’ என்ற தனது நூலிலே பிரித்து நோக்குகிறார்.
இங்கு உருவாக்கம் என்று வருகின்ற போதும் அதற்கான சாதனங்களும் வரையறை செய்யப்பட்டுள்ளன. உஸ்ரா-கதீபா-ரிஹ்லா-தௌரா-நத்வா-முஹய்யம்-முஃதமர் போன்றன உருவாக்கத்திற்கான சாதனங்கள்.இவை ஒவ்வொன்றின் மூலமும் எத்தகைய இலக்குகள் அடையப் பெற வேண்டும் என்பதும் வரையரை செய்யப்பட்டுள்ளது.அதே போன்று அவற்றுக்கான கால,நேர வரையறைகளும் காணப்படுகின்றன.
அடுத்து இஃவான்களின் தஃவாவில் தனிநபர் உருவாக்கம் என்பதனை மையமாக வைத்தே ஏனைய அனைத்து செயற்பாடுகளும் முன் கொண்டு செல்லப் படுகின்றது என்ற வகையில் குறித்த தனி நபர் எத்தகைய அடிப்படைகளில்(அர்கானுல் பைஆ) பயிற்றப்பட வேண்டும்.அவை ஒவ்வொன்றிலும் எதிர்பார்க்கப்படுகின்ற அடைவுகள் யாவை?என்பன துல்லியமாக வரையரை செய்யப்பட்டுள்ளதுடன்.அந்த தனிமனிதன் கொண்டிருக்க வேண்டிய பண்புகள்(ஸிபாதுல் அஷரா) யாவை?அவை ஒவ்வொன்றிலும் அவன் அடைய வேண்டிய நடத்தைகள் என்ன?அவற்றை எப்படி படிமுறை ஒழுங்கில் அடையலாம்?அதற்கான பயிற்சித் திட்டங்கள் என்ன?என்பதுவும் கால,நேர வரையறைகளுடன் வரையறுக்கப்பட்டுள்ளன.இந்த அனைத்தும் படி முறை ஒழுங்கில் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பது மற்றுமோர் சிறப்பம்சமாகும் .இதனால் இந்த ஒவ்வொர் படி நிலையிலும் ஒருவர் கொண்டிருக்கும் பண்புகளையும் தயார் நிலைகளையும் பொருத்து அவரிடமிருந்தான செயற் பங்களிப்புகள் வித்தியாசமான வகையில் களத்தில் பொது இலக்கை அடைய பெற்றுக் கொள்ளப்படுகிறது.அத்தோடு இஃவான்களின் பயிற்றுவிப்பில் காலம் என்பது மாற்றமுறாத ஒரு பண்பாக எப்போதும் இருக்கின்றது.இதனைத்தான் இமாமவர்கள் “காலம் சிகிச்சையின் ஒரு பகுதியாகும்”என்கிறார்கள்.
இந்த அனைத்தையும் வைத்து பார்க்கின்ற போது இஃவானிய தர்பியத்துக்குள்ளால் உட்படுத்தப்படுகின்ற ஒருவர் அவரது நேரத்தை சிறப்பாக திட்டமிடுவதற்கு இயல்பாகவே வழிப்படுத்தப்படுகிறார்.அவரது நேரங்கள் வீணாக கழிந்து போவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே காணப்படும்.அதாவது இமாம் பன்னா சொல்வது போன்று நேரங்களைப் பார்க்கிலும் கடமைகள் அதிகமாய்க் காணப்படும்.
நேரத்தை பயன்படுத்துவதற்கான குறிப்பான வழிகாட்டல்களும்கடமைகளும்
இஃவான்களின் தனிமனித உருவாக்கச் செயற்பாட்டில் ஒரு தனிமனிதன் பெற்றிருக்க வேண்டிய முக்கிய பண்புகளுள் ஒன்றாக நேரத்தின் மீதான கரிசனை குறிக்கப்பட்டுள்ளது.ஒரு சகோதரர் தனது நேரத்தை தஃவாவின் இலக்குகளை அடையும் வகையில் தன்னை பயிற்றுவித்துக் கொள்வதிலும் அதற்காக செயற்படுவதிலும் செலவு செய்ய வேண்டும் என்ற வகையில் தனது நேரத்தில் ஒரு நொடியும் வீணாகப் போய் விடாமல் அதில் கரிசணை கொள்ள வேண்டும் என்பதனைத்தான் இப்பண்பு சுட்டிக்காட்டுகிறது.இந்தக் கரிசணை அடுத்த சகோதரன் தனது நேரத்தை சரியாக பயன்படுத்துவதற்கு உதவும் வகையில் அமைய வேண்டும் என இமாமவர்கள் சகோதரர்களுக்கான தனது உபதேசத்தில் குறிப்பிடுகிறார் “கடமைகள் நேரங்களை பார்க்கிலும் அதிகமாகும் எனவே,பிறர் தமது நேரத்தை பயன்படுத்த அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.அவர்களிடம் உங்களுக்கு ஒரு பணி இருப்பின் அதனை சுருக்கமாக நிறைவு செய்து கொள்ளுங்கள்.”
அதே போன்று களத்தில் செயற்படுமாறு கடமையாய் பணிக்கப்பட்ட ஒரு சகோதரனின் கடமைகள் தொடர்பில் இமாமவர்கள் குறிப்பிட்டுள்ள 40/38 கடமைகளும் கூட இத்தகைய ஒரு சகோதரர் தனது நேரத்தை எப்படி ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்கள்தான்.அவை ஒவ்வொன்றுக்கும் குறித்த சகோதரர்கள் தமது நேரத்தை ஒதுக்குவது அவர்களது கடமையாக மாறுகின்றது.அவை அனைத்தும் நேரம் தொடர்பில் பேசுகின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களாயினும் இங்கு குறிப்பாக நேரத்தை தொடர்புபடுத்தி பேசிய சில கடமைகளை நினைவு படுத்துவது இந்த விடயத்தை விளங்க உதவியாய் அமையும்.
1-(37)எப்போதும் தௌபாவிலும் இஸ்திஃபாரிலும் ஈடுபடுங்கள்.பெரும் பாவங்கள் எப்படிப் போனாலும் சிரிய பாவங்களில் இருந்தே முழுதாக தவிர்ந்திருங்கள்.நேரத்தில் கரிசனையாய் இருங்கள்.ஏனெனில் அதுதான் வாழ்வாகும்.ஹராத்தில் விலாதிருக்க வேண்டுமென்பதால் சந்தேகமானவற்றை விட்டும் பேணுதலாக நடந்து கொள்ளுங்கள்.
2.(06 )நீங்கள் வாசிப்பிலும் எழுத்திலும் திறன் பெற்றிருக்க வேண்டும்.அப்படி இல்லாது விடின் அதனை கற்றுக் கொள்ள வேண்டும்.இஃவான்களின் பத்திரிகைகள்,சஞ்சிகைகள்,பிரசுரங்களை அதிகமாக வாசியுங்கள்.அளவில் சிறிதாக இருப்பினும் உங்களுக்கென்று ஒரு தனியான வாசிகசாலை இருக்க வேண்டும்.நீங்கள் ஒரு துறை சார்ந்த நபராயின் உங்கள் துறையில் ஆழமாகக் கற்க வேண்டும்.பொதுவான இஸ்லாமிய விவகாரங்களில் கூடிய கரிசனை செலுத்த வேண்டும்.அதன் மூலம் அவ்விவகாரங்களை தஃவாவின் போக்குடன் இயைந்த வகையில் நோக்கவும் மதிப்பீடு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
3. (07) அல்-குர்ஆனை அழகாக ஓதவும் அதன் கருத்துக்களை சிறப்பாக விளங்கவும் முற்பட வேண்டும்.முடிந்த வரை ஸீராவையும் ஸலபுகளின் வரலாற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும்.அத்தோடு அகீதாவின் அடிப்படைகளிலும் அன்றாட சட்டங்கள் மற்றும் ஷரீஆ சட்டங்களின் நுணுக்கங்கள் என்பவற்றில் அத்தியவசியமானவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
4. (15) உங்களது தொழிலிற்குரிய உரிமையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு முழுக்கரிசனை செலுத்துங்கள்.அதாவது உங்களது பணியை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் செய்தல் மோசடி செய்யாதிருத்தல்,நேரத்திற்கு செயற்படுதல் போன்றன அதன் உரிமைகளாகும்.
இப்படி நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்,அதில் கவனமாக இருத்தல் வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களும் கடமைகளும் இமாம் பன்னாவினால் களத்தில் செயற்படுமாறு கடமையாக வேண்டப்பட்ட சகோதரர்களை நோக்கி கொடுக்கப்பட்டுள்ளது.இதே போன்று 30 வது கடமை தஃவாவை எல்லா இடங்களிலும் பரப்புவதற்காகவும் தனது வீட்டிலும் குடும்பத்திலும் தன்னுடன் தொடர்பான அனைவருக்கும் அதன் செய்தியை கொடுப்பதற்காவும் சகோதரன் நேரத்தை ஒதுக்க வேண்டும் என வழியுறுத்தப்பட்டுள்ளது.அதே போன்றுதான் உழைப்பதில் கவனம் செலுத்தல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தல்…என்பன போன்ற பல்வேறு கடமைகளும் நேரத்தை ஒரு சகோதரன் திட்டமிட்டு பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களாகவும் பார்க்கப்பட வேண்டியவைதான்.மோசமான விடயங்களிலிருந்தும் எமது இலக்கை விட்டும் எம்மை திசை திருப்பும் அமைப்புக்கள்,நிறுவனங்கள்,செயற்பாடுகளில் இருந்து தூரப்பட்டிருப்பதற்கான வேண்டுதலும் நேரம் சார்ந்து விளங்கப்பட முடியுமான பகுதி.
இமாம் பன்னாவின் பத்து உபதேசங்களிலும் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
- (2) அல்-குர்ஆனை ஓதுங்கள் அல்லது அதனை வாசியுங்கள் அல்லது அதனை செவிமடுங்கள் அல்லது அல்லாஹ்வை திக்ர் செய்யுங்கள்.உங்களது நேரத்தில் ஒரு பகுதியையேனும் எந்தப் பிரயோசனமும் இன்றி கழித்துவிட வேண்டாம்.
- (10) கடமைகள் நேரங்களை பார்க்கிலும் அதிகமாகும் எனவே,பிறர் தமது நேரத்தை பயன்படுத்த அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.அவர்களிடம் உங்களுக்கு ஒரு பணி இருப்பின் அதனை சுருக்கமாக நிறைவு செய்து கொள்ளுங்கள்.
நேரப் பயன்பாட்டில் நேரத்தை உரிய இலக்கை அடைவதற்கான செயற்பாடுகளில் பயன்படுத்துவதறை்காக திட்டமிடும் போது அலக்குகளுக்கும் செயற்பாடுகளுக்குமுரிய அதே முக்கியத்துவம் தினமும் அதனை ஒழுங்குபடுத்துவதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் இருக்கின்றது.
இந்த வகையில் களத்தில் செயற்படுமாறு கடமையாக வேண்டப்பட்ட சகோதரனின் கடமைகளை உடலுக்கானவை,அறிவுக்கானவை,பண்பான நடத்தைகளுக்கானவை,வருமானத்திற்கானவை,பிறருக்கானவை,தஃவாவுக்கானவை,இறைவனுக்கானவை எனப் பிரித்து விளக்கும் இமாமவர்கள் இறுதியாக இவை அனைத்தையும் முழுமைப்படுத்த வேண்டுமாயின்(40) “தினமும் நீங்கள் தூக்கத்திற்கு செல்வதற்கு முன்னர் ஒரு நேரம் எடுத்து இந்தக்கடமைகள் அனைத்தையும் நீங்கள் எந்தளவு தூரம் நிறைவேற்றியுள்ளீர்கள் என்பதனை சுயவிசாரனை செய்து கொள்ளுங்கள்.அவற்றை சிறப்பாக நிறைவேற்றி இருந்தால் அல்லாஹ்வை புகழ்ந்து கொள்ளுங்கள்.அதில் குறை விட்டிருப்பதாகக் கண்டால் அதற்காக தௌபா செய்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவதோடு அதனை சிறப்பாக செய்ய அவனிடம் உதவி கோருங்கள்.அவன் எவ்வளவு சிறந்த உதவியாளனாயும் சினேகத்துக்குரிய பொருப்பாளனாயுமுள்ளான் தெரியுமா?”
இந்தப் பிண்ணனியில்தான் முஹாஸபா,கணிப்பீடு,மதிப்பீடு என்பன காலத்தோடு இணைந்த வகையில் இஃவான்களின் தர்பியாவில் பயிற்றுவிப்பை நெறிப்படுத்துவதற்கான முக்கிய கருவிகளாக இருப்பதனைக் காணலாம்.இந்த வகையில் ஒரு சகோதரன் தொடர்ந்தேர்ச்சையாக முஹாஸபாவிற்கும் கணிப்பீட்கும் மதிப்பீட்டிற்கும் உட்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப் பட்டுக் கொண்டே இருப்பான்.இது நாளடைவில் அவன் சுயமாய் தன்னை முழுமையாக மீள்பரிசீளனை செய்து ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான திறனை அவனுக்கு வழங்குவதுடன் அவனை சிறந்த ஒரு ஆளுமையாகவும் வளர்த்து விடுகிறது.
நேரத்தை பயன்படுத்துவதில் முதன்மைப்படுத்தும் ஒழுங்கும் மிகவும் முக்கியமானது.அந்த வகையில் இஃவானிய தர்பியத்திற்கு உட்படும் ஒரு சகோதரன் மிகவும் சிறந்த முறையில் இந்தப் பயிற்சியையும் பெற்றுக் கொள்வான்.இந்த வகையில் அவனிடம் தஃவா முதன்மையானதாக இருக்கும்.தஃவவில் தர்பியத் என்பது முதன்மையாய் இருக்கும்.ஏனெனில் அதுதான் அவனது ஏனைய அனைத்து அம்சங்களிற்குமான அடிப்படையாய் அமைகிறது.எனவேதான் இமாமவர்கள் தஃவாவிற்கான ஒரு சகோதரனின் கடமையை சொல்லும் போது “…சகோதரர்களின் சந்திப்பிற்கு நீங்கள் தவராது சமூகம் தர வேண்டும்.உங்களால் மிகைக்க முடியாத ஒரு காரணம் இருந்தாலே தவிர அவற்றிற்கு சமூகம் தராதிருக்காமல் இருக்க வேண்டும்…“ அதே போன்று தஃவாவுக்கான கடமை எனும் போது தஃவாவின் நலனிற்கு எந்த பிரயோசனமுமற்ற நிறுவனங்கள்,அமைப்புக்களில் தொடர்பு பட்டிருப்பதை தவிரத்தலை முதலில் முற்படுத்தியிருப்பது என்பது முதன்மைப்படுத்தல் தவறி சகோதரர்களின் நேரம் வீணாக சிதரடிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கிலும் கூறப்பட்ட ஒரு விடயமாகும்.இந்த விடயம் குறிப்பாக எமது இலக்கை மய்யப்படுத்திய வாழ்வை வடிவமைக்கையில் நாம் இன்று அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.
இந்தப் பொதுவான அறிமுகத்தை வைத்துப் பார்க்கும் போது ஒரு சகோதரன் இஃவான்களின் தர்பியத்தில் தனது நேரத்தை,வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான அழகிய பயிற்சியை இயல்பாகவே பெறுகிறான்.அது குறித்த ஒரு முன்வைப்பால்,பாடத்தால்,நேரத்திற்கு சமூகமளிக்காமைக்காக கடுமையாக நடந்து கொள்வதால் வழங்கப்படும் பயிற்சி என்பதற்கப்பால் அவனுக்கு ஒரு இலக்கை அதற்கான செயற்பாட்டை அதில் எதனை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற ஒழுங்கை பயிற்றுவித்து இவற்றில் அவனை மதிப்பீடு செய்து நெறிப்படுத்துவதால் வழங்கும் பயிற்சியாகத்தான் இங்கு காண முடிகிறது.நேரம் என்று வரும் போது நிகழிவுகளில் நேரத்துக்கு சமூகமளித்தலை மாத்திரம் கவனத்தில் கொண்டு சகோதரர்களுடன் கடுமையாக நடந்து கொண்டு எமது சந்திப்புக்களின் மூல உயிரான சகோரத்துவத்தை காயப்படுத்துவது எவ்வளவு தூரம் பொருத்தமானது என்று நாம் சிந்திக்க வேண்டும்.இது நேரத்தில் கரிசனையாக இருக்க சகோதரர்களை எப்படி பயிற்றுவிக்க வேண்டும் என்பது பற்றிய முழுமையான பாரவையின்மையின் வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும்.அதே நேரம் நேரத்திற்கு சமூகம் தருதல் என்பது நேரத்தின் மீதான கரிசனையில் முக்கிய ஒரு விடயம் என்பது போல அது ஏற்படுத்தப்பட இலக்கு,செயற்பாடு,முதன்மைப்படுத்தல் ஒழுங்கு என்பன சகோதரனுக்கு தெளிவாயும் அவற்றில் அவன் முழுத்திருப்தியுடன் ஆர்வம் கொண்டவனாகவும் இருத்தலும் முதலில் அவசியமானது.அதே போல் ஒரு நிகழ்விற்கு,பணிக்கு நேரத்திற்கு அல்லது நேரத்திற்கு முன்னர் வருபவர் வேலைப் பழுகள் குறைந்தவராயும் பெரும் இலக்குகளற்றவராகவும் கூட இருக்கலாம்.எனவே,நேத்திற்கு சமூகமளித்தல் என்பது மாத்திரம் ஒருவர் நேரத்தில் கரிசனை உள்ளவராக இருக்கிறார் என்பதற்கான மொத்தக் குறிகாட்டியல்ல மாற்றமாக அவர் தனது வாழ்வில் நேரத்தை எப்படி பிரயோசனமாக உயர் இலக்கிற்காக திட்டமிட்டு முதன்மைப் படுத்த வேண்டியவற்றை முதன்மைப்படுத்தி வாழ்வில் குறித்த இலக்கை சாதிக்கிறார் என்பது முதன்மையான அம்சமாகும்.இதனைத்தான் நேரத்தின் மீதான கரிசனை,பயன்படு எனக் குறிப்பிடப்படுகிறது.
அடுத்து நேரத்தில் கரிசனை எனும் போது குறித்த பணியை நேரத்திற்கு முடித்தல், நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் முடித்தல் என்ற இரு விடயங்களும் இங்கு பல போது ஒன்றுடன் ஒன்று முரணாக விளங்கப்படுவதுண்டு.இதனையும் இஃவான்களி்ன் தர்பியத் கவனத்தில் கொண்டுள்ளது.தனது கருமங்களை ஒழுங்கு படுத்திக் கொள்வதற்காக சகோதரனுக்கு கொடுக்கப்படும் வழிகாட்டலும் நேரத்தில் கரிசனை என்பதில் வரும் நேர வரையறையும் இங்கு இணைத்துப் பார்க்கப்பட வேண்டியுள்ளது.இந்த வகையில்தான் இன்று பல நிறுவனங்கள் இலக்கு,அடைவு மையப்பட்ட வேலை ஒழுங்குகளைக் கொண்டிருப்பதைக் காணலாம்.இது நேரத்திற்கு சமூகம் தருதல்,நேரத்திற்கு செல்லல்,குறித்த காலத்தில் குறித்த நிகழ்ச்சியை முடித்தல் என்பதால் வரும் விளைவுகளில் திறன் குன்றிய நிலை என்ற பெரும் பிரதிகூலத்தை நிவர்த்திப்பதற்கான ஒழுங்காகும்.இந்த வகையில் பொதுவாகவே வெளித் தோற்றத்தை விட,பெயர்களை விட அதன் உள்ளடக்கமே முக்கியம் என்ற இஃவான்களின் தஃவா பெறுமானத்திற்கமைவாக இவ்விடயத்தில் ஒரு சமநிலையான அணுகு முறை பேணப்படுவதைக் காணலாம்.
இறுதியாக,சகோதரர்களின் வேண்டுதலை கடமையாகக் கொண்டு என்னிடம் குறைவாயும் குறையாயும் உள்ளவற்றை எழுதுவதோ பேசுவதோ இல்லை என்ற எனது ஒழுங்கை முறித்து இந்த விடயங்களை என்னால் இயன்றவரை தொகுத்திருக்கிறேன். அதற்காக உங்களிடம் ஒரே ஒரு பிரதியுபகாரத்தை எதிர்பார்த்து விடை பெறுகிறேன்.இந்த விடயங்களை எனது வாழ்வில் நடைமுறைப்படுத்துவதை இலகுவாக்கி வைக்க இறை உதவி கிட்ட எனக்காக பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.அல்லாஹ் எம்மை பொருந்திக் கொள்ளட்டும்.
No comments:
Post a Comment