Wednesday, September 6, 2017

உழ்ஹியா நிறைவேற்றல் ;நாம் இப்படி சிந்திக்க முடியுமா?

– எம்.என்.இக்ராம் –
உழ்ஹிய்யா என்பது நபியவர்களால் வலியுறுத்தப்பட்ட ஒரு ஸுன்னா. இதனை நாம் ஸுன்னா முஅக்கதா என்கிறோம்.இமாம் அபு ஹனீபா போன்றவர்கள் வசதியுள்ளவர்களுக்கு இது வாஜிப் என்றும் கூறியுள்ளனர்.இக்கடமையை நாம் எமது நாட்டில் பாரம்பரியமாக நிறைவேற்றி வந்துள்ளோம்.எனினும் அண்மைக்காலமாக இது தொடர்பில் பல புரலிகள் பல்வேறு நோக்கங்களையும் மையப்படுத்தி  கிளப்பப்பட்டு வருவதனை நாம் அறிவோம்.
இத்தகைய ஒரு சூழலில் நாம் இக் கடமையை சிறுபான்மையாக வாழுகின்ற ஒரு சூழலிலே எப்படி அமைத்துக் கொள்ளலாம்  என்பது தொடர்பில் சிந்திப்பது பொருத்தம் எனக் கருதுகிறோம். இங்கு நாம் உழ்ஹியா பற்றிய விடயத்தை சரியாக புரிந்து கொள்வதற்கு சிறுபான்மையாக வாழும் போது இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாம் எப்படி சிந்திக்க வேண்டும் என்ற விடயத்தை சற்று விளங்கிக் கொள்வது பொருத்தம் எனக் கருதுகிறோம்.
அண்மையில் ஒரு சகோதரருடன் பிரயாணமொன்று சென்று வரும் வழியில் தொழுதுவிட்டுச் செல்வோம் இலேசாக இருக்கும் என்றேன். அவர் பள்ளிக்குப் பக்கத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு,இலேசுக்காகவா இங்கே தொழ வேண்டும்? நாம் தொழாமலே சென்றிருக்கலாமல்லவா? எனக் கேட்டார். இது அவரது வினா மட்டுமல்ல, இது இஸ்லாத்தைப்பற்றிய நமது சமூகத்தின் புரிதலின் குருக்கு வெட்டு முகம். இஸ்லாம் அடிப்படையிலேயே வாழ்வை இலகு படுத்த வந்த மார்க்கம் “இலகு படுத்துங்கள் கஷ்டப்படுத்த வேண்டாம்… நன்மாராயம் கூறுங்கள் விரண்டோட வைக்க வேண்டாம்…” நபியவர்கள் சொல்லியிருக்கிறாரே. நபியவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை விளக்கும் போது ‘சிரமங்களை இல்லாமல் செய்வதற்காக’ -அஃராப்-157 என குர்ஆன் குறிப்பிடுகிறது. “மார்க்கத்தில் உங்களுக்கு சிரமங்களை வைக்கவில்லை” என ஸுரா ஹஜ்ஜின் இறுதி வசனம் இதனை விளக்குகிறது. இதனை நபியவர்கள் மிகத் தெளிவாகவே பேசியுள்ளார்கள்  “இந்த மார்க்கம் இலகுவானது, யாரும் மார்க்கத்தை கடினமாக்க முனைய வேண்டாம். அப்படி செய்தால் அவரை அது மிகைத்துவிடும்” –புகாரி-
மார்க்கம் அவரை மிகைக்கும் என்பது அவரால் தொடர்ந்து மார்க்கத்தை பின்பற்ற முடியாது போகும் என பத்ஹுல் பாரியில் விளக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் சிறுபான்மையாக இருக்கும் போது மாத்திரமல்ல பொதுவாகவே நாம் மார்க்கத்தை இந்தப் பின்னணியில் இருந்துதான் அணுக வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கிறது. அப்படியாயின் சிறுபான்மையாக வாழும் போது இவ்விடயம் எவ்வளவு தூரம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது இங்கு தெளிவாகிறது. எனினும் எமது நாட்டைப் பொருத்த வரை மார்க்கத்தை வெறும் உபதேச (வஃல்) பாணியிலேயே அணுகிப் பலகிப் போன நாம் இஸ்லாத்தின் சட்டத் துறையையும் அதே பாணியில் அணுக முனைகின்றோம். அதன் விளைவு நாம் இஸ்லாத்தை சிரமப்படுத்தி வைத்துள்ளோம். எனவே சமூகம் ஹலாலான சலுகைகளை அறியாது ஹராத்தில் போய் நிற்கின்ற தெரிவையே பல விடயங்களில் மேற்கொள்கிறது. நாம் இன்று பேசும் பல விவகாரங்களும் எமது கடின போக்கை மாற்றாது விடின் மார்க்கத்தை விட்டும் அவற்றை நீக்கி சிந்திக்கின்ற மார்க்கத்தை சில கிரியைகளுக்கு மட்டுப்படுத்திப் பார்க்கின்ற ஒரு போக்கு எதிர்காலத்தில் தலை தூக்கலாம்.
இந்தப் பின்னணியில் இருந்து கொண்ட நாம் இங்கு முன்வைக்க முனைகின்ற இந்த இடம்பாடுகள் இது பற்றி சிந்திப்பதற்கான ஒரு முன் மொழிவே தவிர முடிவுகளல்ல. இது பிக்ஹுத் துறை, ஷரீஆவின் அடிப்படைகள், நோக்கங்கள் போன்ற துறைகளில் கற்றவர்களது கடமை. அவர்கள் இது போன்ற விவகாரங்களில் எமது நாட்டின் சூழலில் இருந்து சட்டம் சொல்ல முனைவது வாஜிப் என்பதையும் இங்கு நினைவு கூர்வதுடன். இது தொடர்பில் நாம் வாசித்த அபிப்பிராயங்களை கருத்தாடலுக்காக இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.
உழ்ஹியா தொடர்பில் நாம் நோக்கும் போது பிரதானமாக இரு விவகாரங்கள் இங்கு கலந்துரையாடப்பட வேண்டியுள்ளது.
1-உழ்ஹியாவிற்கு பதிலாக அதனது பெறுமதியை கொடுத்தல்.
2-உழ்ஹியாவை முஸ்லிம் அல்லாதாருக்கு பரிமாறுதல்
1-உழ்ஹியாவிற்கு பதிலாக அதனது பெறுமதியை கொடுத்தல்.
உழ்ஹியாவை பொருத்தவரை அதனது பெறுமதியை கொடுப்பதைப் பார்க்கிலும் அதனை அறுத்துப் பலியிடுவதே மேலானது என்பது எல்லா சட்ட அறிஞர்களம் கருத்தாகும். எனினும் யாரும் கொடுக்க முடியாது என மறுத்ததற்கான ஆதாரங்கள் இல்லை. அதே போன்று எமக்கு சிந்திக்க முடியுமான இடம் பிக்ஹில் ஆரம்பம் முதலே இப்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதே நேரம் பிராணியை பெற முடியாத போது அப்படி செய்யலாம் என இமாம் அஹமத் போன்றோர் அனுமதித்துள்ளனர். இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் உழ்ஹியாவிற்கு அறுப்பு நிகழ்ந்தேயாக வேண்டும் என்ற கடமை இல்லை என்பதைக் காட்ட இறைச்சியை வாங்கி பகிர்ந்தளிக்கும்படி தனது அடிமைக்கு கட்டளையிட்டதாக ஒரு அறிவுப்பு உள்ளது. பிலால் (றழி) அவர்கள் உழ்ஹியாவுக்கு பதிலாக அதன் பெறுமதியை ஒரு அநாதைக்கு கொடுக்க தான் விரும்புவதாக குறிப்பிட்ட றிவாயத் உள்ளது. ஆயிஷா (றழி) அவரகள் காஃபாவுக்கு அருகில் ஆயிரம் மிருகங்களை பலியிடுவதை விட எனது இந்த மோதிரத்தை ஸதகா செய்வதை நான் மேலாகக் கருதுகிறேன் என்று கூறிய றிவாயத் உள்ளது. மாலிகி மத்ஹபில் பலவீனமான ஒரு கருத்து பெறுமதி கொடுப்பது பற்றி பேசுகிறது.
இப்படி இது தொடர்பில் சிறுபான்மையாக இருந்து கொண்டு சிந்திப்பதற்கு பல இடம்பாடுகள் காணப்படுகின்றன. அடுத்து இங்கு பெறுமதியை கொடுக்காது உழ்ஹியாவை கொடுக்க வேண்டும் என வழியுறுத்தியவர்கள் அந்தக் கடமை இல்லாமல் போய்விடக் கூடாது என்ற நியாயத்தைத்தான் முன்வைக்கிறார்கள். அடுத்து உழ்ஹியாவை பிராயணத்தில் இருப்போர் நிறைவேற்றல் சம்பந்தமான ஒரு கருத்தும் இந்த விவகாரத்தில் நாம் நிறையவே சிந்திப்பதற்கான இடங்கள் இருப்பதைக் காட்டுகிறது.
நவீன காலத்தில் ஷெய்க் கர்ளாவி அவர்கள் இந்த விவகாரத்தை அழகாக அணுகுகிறார்கள். இந்தக்கடமையின் நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் உயிருடன் இருந்து இக்கடமையை நிறைவேற்றுபவர்கள் அறுப்பது சிறந்தது என்றும் மரணித்தவர்களுக்காக கொடுக்கும் போது பெறுமதியை கொடுக்கலாம் அதுவும் இறைச்சி தேவையற்ற நாட்டில் இருப்பவர்கள் அதாவது இறைச்சி நிறைய அக்காலப்பகுதியில் கிடைக்குமாயின் மரணித்தவரின் உழ்ஹியா பெறுமதியை கொடுப்பதே சிறந்தது என்கிறார். அதே போன்று முந்பொரு வருடம் உழ்ஹியாவின் பெறுமதியை  கொண்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பில் பேசிய அறிஞர்கள் கவனத்தில் எடுத்த ஒரு விவகாரம் உழ்ஹியா தொடர்பாக பேசப்பட்டிருக்கின்ற அனைத்து பத்வாக்களும் பெரும்பாலும் சாதாரண சூழலில் இருந்தே பேசப்பட்டிருப்பதாகவும் அசாதாரண சூழலில் அது நோக்கப்படவில்லை எனவும் அப்படி நோக்கும் போது அதனை ஸதகா செய்வது உழ்ஹியா கடமையை நிறைவேற்றுவதை விட பெறுமதியானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அதனோடு சேர்த்து நாம் உழ்ஹியாவுக்கு பதிலீடு என்று யோசிப்பதற்கு முன்னர் அதற்கு முன்னர் செய்ய வேண்டிய கடமைகள் என சமூகத்தில், பிரதேச, குடும்ப மட்டங்களில் எத்தனையோ இருக்கின்றன. எனவே அவற்றை முற்படுத்தி இதன் உழ்ஹியாவின் அளவை கவனத்தை குறைக்கும் வகையில் நாம் குறைக்கலாம். அது மாத்திரமன்றி நாம் ஒரு நீண்டகால வியூகம் என்ற வகையிலும் உழ்ஹியாவின் அளவை குறைப்பது தொடர்பில் யோசிக்க வேண்டியுள்ளது. அத்தோடு உழ்ஹியா செயற்திட்டங்களை செய்யும் நிறுவனங்கள் மிகக் கண்டிப்பாக இந் நாட்டில் உழ்ஹியாவையும் இப்தாரையும் பார்க்கிலும் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் என்பதை இங்கு உதவியளிக்கும் தனவந்தர்களுக்கு சொல்லியாக வேண்டும். அவர்களால் ஆயிரம் மாடுகளை உழ்ஹியாவுக்கு வாங்குவதற்கு பதிலாக மேற்கால் விலைக்கு வாங்கப்படும் இஸ்லாத்தின் எதிரிகளில் ஒருவரையாவது அல்லது அதற்கு மாற்றமாக இயங்கும் பலமான சக்தியொன்றையாவது இத்தருணத்தில் விலைக்கு வாங்குவதுதான் முதன்மையான கடமையாக இருக்கும் என்ற செய்தியை அவர்களுக்கும் எமக்குமாக நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
2-உழ்ஹியாவை முஸ்லிம் அல்லாதாருக்கு பரிமாறுதல்
அடுத்து உழ்ஹியா தொடர்பில் நாம் கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு விவகாரம்தான் அதனை பங்கீடு செய்தல். இதில் எல்லா அறிஞர்களதும் பொதுவான அபிப்பிராயம் உழ்ஹியாவை மூன்றாகப் பிரித்து அதில் 1/3 ஐ தனக்காகவும் மற்றய 1/3 ஐ அயலவர்கள் உறவினர்களுக்காகவும் மற்றய 1/3 ஐ ஏழைகளுக்காகவும் கொடுப்பது சிறந்தது என்பதாகும். இதில் அறைவாசியை எடுத்து விட்டு அறைவாசியை கொடுக்கலாம் என்ற அபிப்பிராயமும் உண்டு. 2/3 ஐ உரியவர் எடுக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. அதை அவர் முழுமையாக கொடுத்தும் விடலாம் எனினும் ஒரு சிறு பகுதியையாவது எடுத்துக் கொண்டு கொடுப்பதே சிறந்தது என்றவாறான கருத்துக்கள் இதில் நிலவுகின்றன. இதில் ஒருவர் முழுவதையும் கொடுக்காமல் இருந்தாலும் உழ்ஹியா நிறைவேறுமா என்றால் அது நிறை வேறும் என்ற கருத்துத் தான் காணப்படுகிறது. இங்கு தான் இது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டிய முக்கிய விடயத்தை சட்ட அறிஞர்கள் பேசுகிறார்கள் அதாவது உழ்ஹியா கடமை என்பது வேறு அதனை பங்கிடுதல் என்பது வேறு என்ற விடயம்.
இந்த இடத்தில் இருந்து கொண்டு உழ்ஹியாவின் இறைச்சியை முஸ்லிம் அல்லாதாருக்கு கொடுத்தல் தொடர்பில் முன்னைய இமாம்கள் என்ன கருத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதை நாம் பார்க்கும் போது,
இமாம் முஜாஹிதின் ஒரு அறிவிப்பு,அப்துல்லாஹ் இப்னு அம்ர் (றழி) அவர்களது வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட போது அவர் அதிலிருந்து தனது அயல் வீட்டாரான யூதனுக்கு கொடுத்தீர்களா என்று வினாவினார்கள் என திர்மிதியில்(1943)பதிவாகியுள்ளது.இதனை ஷெய்க் அல்பானி ஸஹீஹ் எனக் குறிப்பிடுகிறார்.
இது தொடர்பில் இமாம் இப்னுல் முன்திர் குறிப்பிடுவதாக இமாம் நவவி குறிப்பிடுகிறார்: உழ்ஹியாவிலிருந்து முஸ்லிம்களிலுள்ள ஏழைகளுக்கு கொடுக்க முடியும் என்பதில் அனைத்து அறிஞர்களும் உடன்படுகிறார்கள். எனினும் அதனை முஸ்லிமல்லாதாருக்கு (திம்மீக்கள்) கொடுப்பது தொடரபில் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதங்கள் காணப்படுகின்றன. இமாம் ஹஸனுல்பஸரி, அபூ ஹனீபா, அபூ ஸவ்ர் போன்றோர் இதனை அனுமதிக்கின்றனர். இமாம் மாலிக் நஸாரக்களுக்கு உழ்ஹியாவின் இறைச்சியையோ அதன் தோலையோ கொடுப்பதை மக்ரூஹ் ஆக கருதினார்கள். இமாம் லைஸும் மக்ரூஹ் ஆக கருதினாலும் சமைத்ததை கொடுக்கலாம் என்கிறார். இதனைக் கூறும் இமாம் நவவி அவர்கள் எமது மத்ஹபில் (ஷாபிஈ) வாஜிபான (நேர்ச்சை மூலம்) உழ்ஹியா அல்லாத சாதாரண உழ்ஹியா (ததவ்வுஃ) இறைச்சியை கொடுக்கலாம் என்கிறார்.
இமாம் இப்னு குதாமா, காபிருக்கு உழ்ஹியாவிலிருந்து பங்கு கொடுக்கலாம்….ஏனெனில் அது ஒரு உணவு,அதே போல் அது(இறைச்சியை பங்கிடுதல்)ஸதகதுத் ததவ்வுஃ ஆக காணப்படுகிறது.எனவே,ஏனைய ஸதகதுத் தவ்வுஃ ஐ போன்று கைதிகள் திம்மீக்கள் அனைவருக்கும் கொடுக்கலாம் …என்கிறார். (முஃனி-9/450)
இந்த வகையில் உழ்ஹியாவிலிருந்து முஸ்லிம் அல்லாதாருக்கு பங்கு கொடுக்கலாம் என்கிற கருத்தை நாம் பெற இடம்பாடுகள் தாராளமாக உள்ளது என்பதைக் காணலாம். அதிலும் குறிப்பாக அத்தகையோர் அயலவர்களாக,உறவினர்களாக, தேவையுடையோராயின் அப்படி கொடுப்பது சிறந்தது என்ற கருத்து இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இதனை கூடாது என்போர் முஸ்லிம்களது தேவை இருக்க மற்றவர்களை முற்படுத்திக் கொடுக்கக் கூடாது என்ற வகையிலேயே அதற்கு நியாயம் சொல்கிறார்கள். மாற்றமா எம்மில் பலர் நினைப்பது போல் இறைச்சிக்கு புனிதத் தன்மை கொடுத்து அல்ல என்பதனை அவர்களது கருத்துக்களில் இருந்து விளங்கலாம். அத்தோடு நாம் ஏலவே குறிப்பிட்டது போன்று உழ்ஹியா இறைச்சியின் பங்கீட்டை உழ்ஹியா கடமையிலிருந்து பிரித்தே எல்லோரும் நோக்குவதைக் காண்கிறோம்.
நவீன காலத்தில் இமாம் அப்துல்லாஹ் பின் பாஸ் மற்றும் அல்-அஸ்ஹர் பத்வா சபை என்பன எம்முடன் போராடாத காபிர்களுக்கும் கைதிகள் மற்றும் எம்மிடம் அபயம் பெற்றோருக்கும் கொடுக்கலாம் என்கின்றனர் அதுவும் அவரகள் ஏழைகளாக, நெருங்கிய உறவினரகளாக, அயலவராக இருப்பின் இது சிறப்பானது என்பதுடன் அவர்களது உள்ளங்களை பிணைக்கும் நோக்குடனு(தஃலீபுல் குலூப்)ம் இதனை செய்யலாம் என்கின்றனர்.
இந்த வகையில் இவ்விடயத்தை எமது நாட்டின் சூழலில் கவனமாக சிந்திக்க வேண்டும் கொடுத்தாலும் குற்றம் கொடுக்காவிட்டாலும் குற்றம் என்கிற சூழலில் இது கவனமாக சிந்திக்க வேண்டிய விடயம்.இதில் அவர்களில் விருப்பமுள்ள சாராருக்கு கவனமாக, பகிரங்கமாக அல்லாது கொடுக்க முடியுமாயின் நாளடைவில் இதிலிருந்து பிரயோசனம் பெறும் ஒரு பெறும்சாரார் அவர்களில் தோற்றம் பெறுவாராயின் இதற்கான எதிர்ப்புக்கு எதிராக குரல் கொடுக்கும் சாரார் அவர்களிலேயே உருவாகலாம். என்பதுடன் மிருக வளர்ப்பு என்ற வகையிலும் பெறும் சாரார் இக்கடமையால் அவர்களில் பிரயோசனம் பெறும் விவகாரமும் பொருளாதார ரீதியான கணக்குகளுடன் பேசப்பட வேண்டிய தேவையும் உள்ளது.
இப்படி பல்முனையில் இத்தகைய விவகாரங்களை அணுகுவதற்கான வழிகாட்டல்கள் சமூகத்துக்கு வழங்கப்பட உரிய துறை சார்ந்தோர் முயற்சிப்பார்களா? இப்படியான தேவை இருக்கும் சூழலில் இன்னும் மிம்பர் மேடைகளில் காபிர்களுக்கு உழ்ஹியாவில் பங்கு கொடுக்கக் கூடாது, அதனை சாப்பிடக் கொடுக்கக் கூடாது என்கிற கருத்துக்களை பேசுவதையாவது தவிர்ப்பது சிறப்பாக இருக்கும்.

Friday, June 16, 2017

அறபு மொழியை வளர்ப்பதற்கான வளங்களும் சாத்தியப்பாடுகளும்(07.08.2009 மீள்பார்வை)
















எங்களது முன்னோர் செவ்வறபு மொழியின் பெறுமானத்தை உணர்ந்திருந்தனர். எனவே, அதனைப் பரப்புவதற்கும் பாதுகாப்பதற்கும் பெரும் முயற்சியை செலவழித்தனர். இஸ்லாத்தைப் பரப்புவது போன்றேஅதனையும் பரப்பினர். இஸ்லாத்தைக் கற்றுக் கொண்டது போன்றேஅதனையும் கற்றுக் கொண்டார்கள்.
அறபு மொழி பேசாத பிரதேசங்களை வெற்றிகொண்டபோது, அந்தப் பிரதேசத்தில் அறபு மொழியை மேலோங்கச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்கள். அங்கிருந்த ஏடுகள் அனைத்தையும் அறபு மொழிக்கு மாற்றினர். பாரசீகத்திலிருந்து அறபுக்கு மாற்றினர். ஷாம் தேசத்தில், உரோம மொழியிலிருந்து அறபு மொழிக்கு மாற்றினர். எகிப்திலே கிப்தி மொழியிலிருந்து அறபுக்கு மாற்றினர்...” -கலாநிதி இப்றாஹீம் அல் மத்அனி
ஒருவர் ஒரு சிந்தனையை, கொள்கையை விளங்கிக் கொள்வதாக இருந்தால் எப்போதும் அதன் மூலமொழியிலேயே புரிந்துகொள் வதுதான் சிரேஷ்டமானது. அந்த வகையில்தான் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ள முற்படுபவருக்கு அறபு மொழி முக்கியமாகின்றது. எனவேதான், மூலமொழியிலேயே இஸ்லாத்தை முன்வைப்பதற்கான முயற்சிகள் இஸ்லாமிய வரலாற்றில் நிறையவே இடம்பெற்று வந்துள்ளன. இன்று அறபு மொழியை தங்கள் மொழியாகக் கொண்டுள்ள எகிப்து, ஷாம் தேச நாடுகள், பாரசீக நாடுகள், ஆபிரிக்க நாடுகள், மத்திய ஆசிய நாடுகள் என்பன அனைத்தும் அடிப்படையில் அறபு நாடுகள் அல்ல. அவை இஸ்லாத்துடன் சேர்த்து அறபு மொழியை உள்வாங்கிக் கொண்ட நாடுகள். மொழித் துறையில் நவீன உத்திக ளும் காணப்படாத அந்த நாட்களில்தான் இங்கெல்லாம் அறபு மொழி உயிர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இங்கெல்லாம் இஸ்லாமும் அதன் கலாசாரங்களும் பெருமளவில் சிதைவுறாமல் பாதுகாக்கப்படுவதற்கு அறபு மொழியின் பரவல் காரணமாய் அமைந்தது.
இந்தவகையில்தான் எமது நாட்டில் எமது கலாசாரத்தை பாதுகாக்கும் நோக்கில் அறபுத் தமிழ் என்ற ஒரு மொழியை எமது மூதாதையர் உருவாக்கினர். அறபு மொழியை வாழ வைக்கும்நோக்கில் அறபு மத்ரஸாக்களை உருவாக்கினர். எமது வாழ்வின் புழக்கத்தில் அறபு மொழியைத் தக்கவைத்துக் கொள்ளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதனடியாகத்தான் இன்று முஸ்லிம்களின் புழக்கத்தில் அறபுச் சொற்கள் கணிசமாக வழக்கில் இருப்பதைக் காணலாம்.
இந்தப் பின்னணிகளுடன் பார்க்கும்போது இந்நாட்டில் அறபு மொழியைப் பரப்புகின்ற பணி புதிதாய்த் துவக்கப்பட வேண்டிய ஒரு பணியாக அல்லாமல் நாம் தொடர வேண்டிய ஒரு பணியாக இருப்பதைக் காண்கிறோம். இன்று மத்ரஸாக்களில் வாசிப்போடு மாத்திரம் சுருங்கியிருக்கின்ற அறபு மொழியை எமது அன்றாட நடவடிக்கைகளை நோக்கியும் நகர்த்த வேண்டியுள்ளது. அதே போன்று அறபு மத்ரஸாக்களுக்குள் மாத்திரம் அடங்கியுள்ள அறபு மொழியை முஸ்லிம் சமூகத்தை நோக்கியும் கொண்டு வர வேண்டி யுள்ளது.
இதற்குரிய சாதகமான இடம்பாடுகள் இலங்கையில் நிறையவே காணப்படுகின்றன. இலங்கை அறபு நாடுகளில் தனது வேலை வாய்ப்புக்கள் நிமித்தம் தங்கியிருப்பதே இதற்கான ஒரு சாதகமான சந்தர்ப்பமாக நாம் பயன்படுத்தலாம். அதேபோன்று இலங்கைக்கு அறபு நாடுகளுடன் காணப்படுகின்ற இராஜதந்திர உறவு எமக்குரிய சாதகமான சந்தர்ப்பமாகும். இலங்கையிலுள்ள அறபு நாட்டு தூதரகங்கள் இந்த வகையில் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்விக்க அங்கு தொழில்புரியும் சகோதரர்களை தூண்டலாம்.
            அண்மைக் காலங்களில் இலங்கையின் சுற்றுலாத் துறையில் அறபு நாடுகளின் செல்வாக்கு மேலோங்கி வருகின்றது. இதுவும் அறபு மொழியை இந்த நாட்டில் நாம் உயிர்ப்பிப்பதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பமாகக் காண்கிறோம்.
அறபு மொழியைக் கற்பதற்கான அறபுத் தமிழ் அகராதி ஏதோ ஒரு வகையில் பூரணப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அறபு மொழியைக் கற்பதற்கான அடிப்படை நூல்களும் இலங்கைச் சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன. அறபு மொழியை ஓரளவு சரளமாக கற்றறிந்த எண்ணிறைந்த மார்க்க அறிஞர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள். பாடசாலையில் இலங்கைக் கல்வியமைச்சினால் அறபு மொழியை ஒரு பாடமாகக் கற்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி உயர் தரத்திலும் ஒரு பாடமாக அதனைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதோடு பல்கலைக்கழகத்திலும் அதனை ஒரு சிறப்புத் தேர்ச்சிக்குரிய பாடமாகக் கற்க முடியுமான சந்தர்ப்பங்கள் காணப் படுகின்றன. போதிய வளங்கள் இருக்குமிடத்து அது கலாநிதி கற்கை வரை தொடர முடியுமான வாய்ப்புக்கள் இங்கு காணப்படு கின்றன.
இங்கு குறிப்பிடப்பட்ட, இன்னும் குறிப்பிடப்படாத இத்தனை சந்தர்ப்பங்களை வைத்துக் கொண்டும் நாம் இஸ்லாத்தின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற அறபு மொழியை எமது வழக்கில் கொண்டுவருவது சாத்தியமில்லை என்று சொல்வோமாக இருந்தால் எம்மைப் போன்று கண்களை மூடிக் கொண்டு குருட்டு நடை நடந்துகொண்டிருக்கும் மனிதர்கள் யாராகவும் இருக்க முடியாது. இந்த சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப்படாமைக்காக நாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியும் ஆக வேண்டும்.
அத்தோடு மார்க்க ரீதியான தேவையுடன் சேர்த்து இன்று எமது நாட்டில் அறபு மொழியை வளர்ப் பது ஒரு சமூக ரீதியான தேவை யாகவும் காணப்படுகின்றது. இன்று இலங்கை முஸ்லிம்கள் மொழி ரீதியாக பிளவுபட்டுப் போகும் அபாய நிலை தோன்றி வருகின்றது. தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் கல்வியைத் தொடருகின்ற சூழ்நிலை இன்று வெகு வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் எமக்கிடையே ஒரு இணைப்பு மொழியின் தேவை உணரப்படுகின்றது. இதற்கு மிகவும் பொருத்தமான மொழியாக அறபு மொழி காணப்பட முடியும்.
ஏனெனில் ஒரு முஸ்லிம் குறைந்தபட்சம் வாசிப்பு என்ற வகையிலாவது அறபு மொழியுடன் தொடர்புபடாமல் இருக்கவே முடியாது. ஏனைய மொழிகளின் தொடர்பு இல்லாமல் அவன் இருக்கலாம். ஆனால், அறபு மொழி அவனுடன் நிமிடத்திற்கு நிமிடம் தொடர்புபடக் கூடியது. அந்த வகையில் எமது சமூகத்தின் ஐக்கியத்தைப் பேணுவதற்கான ஒரு ஊடகமாக அறபு மொழியைப் பயன் படுத்த வேண்டிய தேவையெழுந்து வருகின்றது.
இது இலங்கையுடன் மாத்திரம் சுருங்கிய ஒரு தேவையல்ல. மாற்றமாக இஸ்லாமிய அறிஞர்கள் முழு முஸ்லிம் உம்மாவையும் சிந்தனா ரீதியாக ஒருமுகப்படுத்துவதற்கான பிரதானமான ஒரு வழிமுறையாக இதனைக் காண்கின்றனர். மொழி சிந்தனா ரீதியாக மனிதர்களை ஒருமுகப்படுத்துவதற்கான ஒரு ஊடகம் என மொழியியலாளர்கள் கருதுகின்றனர். அந்த வகையில்தான் முழு உலகையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்காக ஸ்பிராடோஸ் (Spardose) ’ என்ற மொழியை உலகப் பொதுமொழியாகக் கொண்டு வருவோம் என்ற கோஷத்தை சிலர் முன்வைத்தார்கள். ஆனால், அது அதற்கு முன்னால் காணப்பட்ட பல இடர்பாடுகளால் சாத்தியப்படவில்லை. என்றாலும்கூட சர்வதேச தூதைச் சுமந்த சர்வதேச சமூக மாகிய எமக்கு எமது குர்ஆனின் மொழியாகிய அறபு மொழியை இந்த வகையில் உயிர்ப்பிப்பது மிகவுமே சுலபமானது.
யூதர்களால் அழிந்துபோன ஹிப்ரு மொழியை உயிர்ப்பித்து வாழ வைக்க முடியுமானால் ஏன் எம்மால் உயிர்வாழும் ஒரு சிந்தனையின், உயிர்வாழும் ஒரு மொழியை, ஒரு சமூகத்தின் பொது மொழியாகக் கொண்டுவர முடியாது? நமக்கு அதற்கான அனைத்து சாத்தியப்பாடுகள் இருந்தும் நாம் சிலபோது மானசீக ரீதியாக மேற்கின் ஆங்கிலத்தின் முன்னால் தோற்றுப் போய் உள்ளோமோ என சிந்திக்கத் தோன்றுகின்றது.
நம்மால் முடியாது என்று எமது எதிர்கால சந்ததியினராவது எமது கொள்கையின் மொழியை வளர்ப்போம் என்று பார்த்தால், அறபு நாட்டில் பிறந்த குழந்தைகளுக்குக் கூட இங்கு கூட்டிவந்து அறபை மறக்கடித்து ஆங்கிலத்தை ஊட்டுகிறார்கள். பல வருடங்கள் அறபு மொழியைக் கற்று அறபு நாட்டிலும் சென்று அதேமொழியைக் கற்று வந்தவர்கள் ஆங்கில மொழியின் முன்னால் மாத்திரம் சரணாகதியடைந்து வாழ்கிறார்கள். அது போதாதென்று தமது எதிர்கால சந்ததியினரையும் கூட அந்த மொழியின் அடிமைகளாக உருவாக்குகிறார்கள்.
சகோதரர்களே! இப்படி நீங்கள் இருப்பீர்களாயின் உங்கள் பெரும் எதிரியாக குர்ஆன் குறிப்பிடும் யூதர்களை மட்டுமல்ல; யாரையுமே உங்களால் எதிர்கொள்ள முடியாமல் போகும். இங்கு நாம் வேறு மொழிகளை கற்கவோ கற்பிக்கவோ வேண்டாம் என்று சொல்லவில்லை. எமது மார்க்கத்தை உயிர்ப்பிப்பதுடன் தொடர்பான ஒரு மொழியைத் தூக்கியெறிந்து விட்டு நமக்கு வேறொரு மொழி தேவையில்லை என்றே சொல்ல வந்தோம். இந்த வகையில் இலங்கையில் அறபு மொழியை வளர்ப்பதற்கான சில முன்மொழிவுகளை இங்கு குறிப்பிடுகிறோம்.
1.    அறபு மொழியைக் கற்பிப்பதற்கான நிறுவனங்கள் உருவாக்கப்படல்.
2.   அறபு மொழியை சிறுபராயம் முதல் கற்பிப்பதற்கான பொருத்தமான பாடவிதானம் உருவாக்கப்படல்.
3.   ஆய்வு ரீதியாக முற்றுப் பெற்றுள்ள அறபுத் தமிழ் அகராதியை நூலுருப்படுத்தல்.
4.   அறபு மொழியில் சிறப்புத் தேர்ச்சி பெறுவதற்குரிய வாய்ப்புக்களை பயன்படுத்தல்.
5.   சிறுபராயம் முதல் உயர்கல்வி வரை அறபுமொழியைக் கற்பதற்காக எமக்குள்ள வாய்ப்புக்களை சிறப்பாக பயன்படுத்தல்.
6.   அறபு மொழியில் அமைந்த நூல்களையும் சஞ்சிகைகளையும் தாராளமாகக் கிடைக்கச் செய்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தல்.
7.   எமது விவகாரங்களைப் பேசும் வகையில் அமைந்த அறபு மொழியிலான சஞ்சிகைகைளை வெளிக் கொண்டுவருதல்.
8.   எமது எதிர்காலப் பரம்பரையின் பிரதான மொழியாக அறபைக் கொண்டுவருவதற்கு தேவையான அடித்தளங்களை நமது வீடுகளில் இப்போதிருந்தே இடுதல்.
9.   எதிர்கால நோக்கம் கொண்டு அறபு மொழி நூலகங்களை பரவலாக உருவாக்குதல்.
இவை எமது கலந்துரையாடலுக்காக எமது அறிவுக்கெட்டிய வகையில் முன்வைக்கப்பட்டவை. இது தவிர்ந்த இன்னும் பல திட்டங்களை நாம் சிந்திக்கலாம். முதலில் இந்த விடயம் நமக் கிடையே கலந்துரையாடப்பட வேண்டும். அதற்கான தயார்படுத்தல்களில் நாம் ஈடுபட வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.
 அல்குர்ஆன், ஹதீஸ் உட்பட இஸ்லாத்தைக் கற்பதற்கான அனைத்து மூலாதாரங்களும் அடிப்படையில் அறபு மொழியிலேயே காணப்படுகின்றன. அவற்றை வேற்று மொழியில் கொண்டுவரும்பொழுது அதன் முழுக் கருத்தையும் கொடுப்பதும் அதன் உயிரோட்டத்தைப் பேணுவதும் சிரம சாத்தியமான விடயம்.
ஏனெனில், அறபு மொழி சொற் சுருக்கமும் கருத்தாழமும் மிக்க மொழி. அதன் பல சொற்களுக்கு இசைவான பொருட்களையும் உணர்வையும் கொடுக்கும் சொற்களை வேற்று மொழிகளில் குறிப் பாகத் தமிழில் காண்டடைவது சிரமமானதாகக் காணப்படுகிறது.

அந்த வகையில்நாம் இஸ்லாத்தை சரியாகப் புரிந்துகொள்ள நமக்கு உள்ள சிரேஷ்டமான வழி முறை அந்த மொழியை நாம் கற்பதுதான். அறபு மொழியைக் கற்பது வாஜிப் என்ற கருத்தை யாரும் மறுத்ததாகக் கிடையாது. அப்படியாயின் அதனை செயற் படுத்துவதைத் தவிர, அதற்கான வழிமுறைகளைத் தேடுவதைத் தவிர நமக்கு முன்னால் வேறு என்ன தெரிவுதான் இருக்க முடியும்?!!

Sunday, June 11, 2017

தஃவாவில் அறபு மொழியின் முக்கியத்துவம்(17.07.2009 இல் மீள்பார்வையில் வெளியான ஆக்கம்)


தஃவாவில் அல்குர்ஆன் பிரதான இடத்தை வகிக்க வேண்டு மெனப் பார்த்தோம். ஒரு தாஈக்கும் அல் குர்ஆனுக்குமிடையே நெருக்கமான உறவு இருக்க வேண்டுமென்பதில் இரு கருத்து இருக்க முடியாது. அந்த உறவு வெறும் சட ரீதியான உறவாக அல் லாமல் உயிருள்ள ஆத்மார்த்த மான உறவாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தாஈ அல்குர்ஆனிலிருந்து தாக்கம்பெற முடியும்.
அல்குர்ஆனை மூல மொழியில் புரிந்துகொள்ள முடியுமானவர் தான் அதிலிருந்து உயிரோட்டமான தாக்கத்தைப் பெற முடியுமாக இருக்கும். அதன் மொழிபெயர்ப்புக்களை வாசிக்கும் ஒருவரால் அதன் கருத்துக்களைப் படிக்க முடியுமே தவிர அதிலிருந்து பாதிப்புப் பெறுவதென்பது சிரமமான காரியமாகத்தான் இருக்கும். அதன் தொடராக அல்குர்ஆனின் பாதிப்பு இல்லாமல் அதன் கருத்துக்களை மாத்திரம் உள்வாங்கிக் கொண்டு ஒருவர் தஃவாவில் ஈடுபடும்போது அவரது தஃவாவில் நிச்சயம் உயிரோட்டம் குறைவாகத்தான் காணப்படும்.
அவர் தனது அன்றாட வணக்க வழிபாடுகளைக் கூட சிறந்த பாதிப்புடன் நிறைவேற்றுவது சாத்தியமில்லாமல் போகும். அவை வெறுமனேகடமைக்குச் செய்யப்படுவனவாகவே இருக்கும். அதன் தொடராய் தஃவாவும் கடமைக்கான செயற்பாடாய் இருக்குமேயொழிய அந்த மனிதனுடன் முழுமையாக கலந்துவிட்ட ஒரு பணியாக இருக்க மாட்டாது.
இந்த வகையில்தான் தஃவாவில் ஈடுபாடு காட்டிய முன்னைய இமாம்களும் தற்கால இமாம்களும் அல்குர்ஆனின் மொழியான அறபு மொழியை முஸ்லிம்கள் கற்பதை வாஜிப் என்று குறிப்பிடு வார்கள். இதனால்தான் உலகில் உள்ள எந்த முஸ்லிமும் குறைந்த பட்சம் அறபு மொழியை வாசிக்கவாவது கற்றிருப்பதை நாம் காண்கிறோம். அப்படியில்லாதபோது அல்குர்ஆனின் சில வசனங் களைக் கூட உச்சரிக்கவாவது அவன் தெரிந்திருப்பான்.
வரலாற்றில் இஸ்லாமிய தஃவாவை பரப்புவதில் ஈடுபட்ட தாஈக் கள் அறபு மொழியையும் அதனுடன் சேர்த்துப் பரப்புவதில் இயல் பாகவே ஈடுபட்டுள்ளார்கள். இஸ்லாமிய தஃவா வரலாறும் அதன் வளர்ச்சியும் என்ற உரையில் ஷெய்க் முஹம்மத் அஹ்மத் றாஷித் அவர்கள் இந்தக் கருத்தை மிக அழகாக விளக்குகின்றார்கள். இஸ் லாமிய வரலாற்றில் தஃவா சென்று சேர்ந்த இடங்களிலெல்லாம் தஃரீப் எனப்படும் அறபு மயமாக்கல் என்ற பணியும் இடம் பெற்றேவந்துள்ளது.
அந்தப் பணி இடம்பெறாமல் போனது மிகவும் அரிதே. எனவே தான் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்குட்பட்டிருந்த நாடுகளில் உத்தி யோகபூர்வ மொழியாக அறபு மொழி இருந்திருப்பதைக் காண்கிறோம் என்கிறார்.
நவீன காலாத்தின் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இந்தியாவி லிருந்து பிரிக்கப்பட்டபோது மஸ்ஊதுன் நத்வி போன்ற அறிஞர்கள் பாகிஸ்தானின் உத்தியோகபூர்வ மொழியாக அறபு மொழியை மாற்ற முயற்சித்தனர். எனினும் அந்த முயற்சிகள் திட்டமிடப் படாமல் செய்யப்பட்டன. எனவே, பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாக மாறாமல் போனமைக்கு இதுவும் ஒரு பிரதான காரணமென ஷெய்க் முஹம்மத் அஹ்மத் றாஷித் அவர்கள் விளக்குகிறார்கள். இஸ்லாத்திற்கெதிராக போர்தொடுத்த எதிரிகள் பிரதானமாக செவ்வறபு மொழியை வழக்கிலிருந்து ஒதுக்கி கிளைமொழி களை மேலோங்கச் செய்வதில் திட்டமிட்டு செயற்பட்டனர்.அதன் விளைவாக அறபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்குள்ளேயே ஒரு சாரார் இன்னோர் சாராருடன் தொடர்பு வைக்க முடியாமல் போனது. அத்தோடு செவ்வறபு மொழியில் அமைந்துள்ள அல்குர்ஆனையும் ஹதீஸையும் விட்டும் மக்கள் தூரமாயினர்.
அதேபோன்று மொழியை அடிப்படையாகக் கொண்டு தேசிய உணர்வுகளை ஊட்டி முஸ்லிம் தேசத்தை பல நாடுகளாகப் பிரித்த னர். இந்த நடவடிக்கையின் உச்ச நிலையைத்தான் நாம் இறுதியாக இஸ்லாமிய கிலாபத் வீழ்ச்சியுறச் செய்யப்பட்ட துருக்கியில் கண் @டாம். தொழுகைக்கான அதான் துருக்கிய மொழியில் அமைய வேண்டும். ஓதல்களும் அம்மொழியில்தான் இருக்க வேண்டும் என்பன போன்ற வாதங்களெல்லாம் அங்கு முன்வைக்கப்பட்டன.
இதனால்தான் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் செவ்வறபு மொழியை பேசுமாறு தமது சகோதரத்துவ அமைப்பைச் சார்ந்தவர்களை ஊக்குவித்தார்கள். அதனை இஸ்லாமிய அடையாளங்களுள் ஒன்றாகக் கருதினார். இமாம் பன்னாவின் பைனல் அம்ஸி வல் யௌம் என்ற ரிஸாலாவில் இஸ்லாமிய சமூகத்தின் வீழ்ச்சிக்கான காரணிகளை அவர் அடையாளப்படுத்துகிறார்.
அதில் ஒரு காரணியாக அறபு மொழி தெரியா ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தமையையும் ஒரு காரணமாகக் குறிப்பிடுகிறார். அறபு மொழி தெரியாதவர்கள் ஆட்சிக்கு வந்தமையால் அவர்களால் இஸ்லாத்தை சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போனதாயும், அல்-குர் ஆனிலிருந்து பாதிப்புப் பெற முடியாமல் போனதாயும், இதனால் அவர்களால் சமூகத்தை சரியாக வழி நடத்த முடியாமல் போனதாயும் அவர் அந்த ரிஸாலாவில் விளக்கிச் செல்கிறார்.
இந்தப் பின்னணிகளுடன் பார்க்கின்றபோது இஸ்லாமிய தஃவாக் களத்தில் இஸ்லாமிய சிந்தனையைப் பரப்புவதில் சரிநிகராக நாம் அறபு மொழியையும் பரப்ப வேண்டிய தேவை இருப்பதையும் உணர்கிறோம். அறபு மொழியல்லாத மாற்று மொழிகளை தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்களுக்கு மத்தியில் தஃவாப் பணி யில் ஈடுபடுபவர்கள் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.அறபுமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடையே செவ்வறபு மொழியைப் பரப்புவதும் தஃவாவின் பணியாக இருக்கும். இந்தப் பணி பெருமளவு தூரத்திற்கு அறபு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதை காண்கிறோம். சென்ற நூற்றாண் டின் 50களுக்கு முன்னரேயே அதன் அவசியம் பற்றி ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி போன்றவர்களாலும் பேசப்பட்டது. அதன் விளைவாக அறபு மொழியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட நிறுவனங்கள் இன்று அந்நாடுகளில் செயற்பட்டு வரு வதைக் காண்கிறோம்.
இந்தவகையில் எமது நாட்டில் நாம் இதனை எப்படித் தொடங்க முடியும். அதற்கான சாத்தியப்பாடுகள் என்ன என்பது தொடர்பில் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் நோக்குவோம். அல்லாஹ் எம்மைப் பொருந்திக் கொள்ளட்டும்.

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...