Friday, June 16, 2017

அறபு மொழியை வளர்ப்பதற்கான வளங்களும் சாத்தியப்பாடுகளும்(07.08.2009 மீள்பார்வை)
















எங்களது முன்னோர் செவ்வறபு மொழியின் பெறுமானத்தை உணர்ந்திருந்தனர். எனவே, அதனைப் பரப்புவதற்கும் பாதுகாப்பதற்கும் பெரும் முயற்சியை செலவழித்தனர். இஸ்லாத்தைப் பரப்புவது போன்றேஅதனையும் பரப்பினர். இஸ்லாத்தைக் கற்றுக் கொண்டது போன்றேஅதனையும் கற்றுக் கொண்டார்கள்.
அறபு மொழி பேசாத பிரதேசங்களை வெற்றிகொண்டபோது, அந்தப் பிரதேசத்தில் அறபு மொழியை மேலோங்கச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்கள். அங்கிருந்த ஏடுகள் அனைத்தையும் அறபு மொழிக்கு மாற்றினர். பாரசீகத்திலிருந்து அறபுக்கு மாற்றினர். ஷாம் தேசத்தில், உரோம மொழியிலிருந்து அறபு மொழிக்கு மாற்றினர். எகிப்திலே கிப்தி மொழியிலிருந்து அறபுக்கு மாற்றினர்...” -கலாநிதி இப்றாஹீம் அல் மத்அனி
ஒருவர் ஒரு சிந்தனையை, கொள்கையை விளங்கிக் கொள்வதாக இருந்தால் எப்போதும் அதன் மூலமொழியிலேயே புரிந்துகொள் வதுதான் சிரேஷ்டமானது. அந்த வகையில்தான் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ள முற்படுபவருக்கு அறபு மொழி முக்கியமாகின்றது. எனவேதான், மூலமொழியிலேயே இஸ்லாத்தை முன்வைப்பதற்கான முயற்சிகள் இஸ்லாமிய வரலாற்றில் நிறையவே இடம்பெற்று வந்துள்ளன. இன்று அறபு மொழியை தங்கள் மொழியாகக் கொண்டுள்ள எகிப்து, ஷாம் தேச நாடுகள், பாரசீக நாடுகள், ஆபிரிக்க நாடுகள், மத்திய ஆசிய நாடுகள் என்பன அனைத்தும் அடிப்படையில் அறபு நாடுகள் அல்ல. அவை இஸ்லாத்துடன் சேர்த்து அறபு மொழியை உள்வாங்கிக் கொண்ட நாடுகள். மொழித் துறையில் நவீன உத்திக ளும் காணப்படாத அந்த நாட்களில்தான் இங்கெல்லாம் அறபு மொழி உயிர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இங்கெல்லாம் இஸ்லாமும் அதன் கலாசாரங்களும் பெருமளவில் சிதைவுறாமல் பாதுகாக்கப்படுவதற்கு அறபு மொழியின் பரவல் காரணமாய் அமைந்தது.
இந்தவகையில்தான் எமது நாட்டில் எமது கலாசாரத்தை பாதுகாக்கும் நோக்கில் அறபுத் தமிழ் என்ற ஒரு மொழியை எமது மூதாதையர் உருவாக்கினர். அறபு மொழியை வாழ வைக்கும்நோக்கில் அறபு மத்ரஸாக்களை உருவாக்கினர். எமது வாழ்வின் புழக்கத்தில் அறபு மொழியைத் தக்கவைத்துக் கொள்ளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதனடியாகத்தான் இன்று முஸ்லிம்களின் புழக்கத்தில் அறபுச் சொற்கள் கணிசமாக வழக்கில் இருப்பதைக் காணலாம்.
இந்தப் பின்னணிகளுடன் பார்க்கும்போது இந்நாட்டில் அறபு மொழியைப் பரப்புகின்ற பணி புதிதாய்த் துவக்கப்பட வேண்டிய ஒரு பணியாக அல்லாமல் நாம் தொடர வேண்டிய ஒரு பணியாக இருப்பதைக் காண்கிறோம். இன்று மத்ரஸாக்களில் வாசிப்போடு மாத்திரம் சுருங்கியிருக்கின்ற அறபு மொழியை எமது அன்றாட நடவடிக்கைகளை நோக்கியும் நகர்த்த வேண்டியுள்ளது. அதே போன்று அறபு மத்ரஸாக்களுக்குள் மாத்திரம் அடங்கியுள்ள அறபு மொழியை முஸ்லிம் சமூகத்தை நோக்கியும் கொண்டு வர வேண்டி யுள்ளது.
இதற்குரிய சாதகமான இடம்பாடுகள் இலங்கையில் நிறையவே காணப்படுகின்றன. இலங்கை அறபு நாடுகளில் தனது வேலை வாய்ப்புக்கள் நிமித்தம் தங்கியிருப்பதே இதற்கான ஒரு சாதகமான சந்தர்ப்பமாக நாம் பயன்படுத்தலாம். அதேபோன்று இலங்கைக்கு அறபு நாடுகளுடன் காணப்படுகின்ற இராஜதந்திர உறவு எமக்குரிய சாதகமான சந்தர்ப்பமாகும். இலங்கையிலுள்ள அறபு நாட்டு தூதரகங்கள் இந்த வகையில் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்விக்க அங்கு தொழில்புரியும் சகோதரர்களை தூண்டலாம்.
            அண்மைக் காலங்களில் இலங்கையின் சுற்றுலாத் துறையில் அறபு நாடுகளின் செல்வாக்கு மேலோங்கி வருகின்றது. இதுவும் அறபு மொழியை இந்த நாட்டில் நாம் உயிர்ப்பிப்பதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பமாகக் காண்கிறோம்.
அறபு மொழியைக் கற்பதற்கான அறபுத் தமிழ் அகராதி ஏதோ ஒரு வகையில் பூரணப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அறபு மொழியைக் கற்பதற்கான அடிப்படை நூல்களும் இலங்கைச் சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன. அறபு மொழியை ஓரளவு சரளமாக கற்றறிந்த எண்ணிறைந்த மார்க்க அறிஞர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள். பாடசாலையில் இலங்கைக் கல்வியமைச்சினால் அறபு மொழியை ஒரு பாடமாகக் கற்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி உயர் தரத்திலும் ஒரு பாடமாக அதனைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதோடு பல்கலைக்கழகத்திலும் அதனை ஒரு சிறப்புத் தேர்ச்சிக்குரிய பாடமாகக் கற்க முடியுமான சந்தர்ப்பங்கள் காணப் படுகின்றன. போதிய வளங்கள் இருக்குமிடத்து அது கலாநிதி கற்கை வரை தொடர முடியுமான வாய்ப்புக்கள் இங்கு காணப்படு கின்றன.
இங்கு குறிப்பிடப்பட்ட, இன்னும் குறிப்பிடப்படாத இத்தனை சந்தர்ப்பங்களை வைத்துக் கொண்டும் நாம் இஸ்லாத்தின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற அறபு மொழியை எமது வழக்கில் கொண்டுவருவது சாத்தியமில்லை என்று சொல்வோமாக இருந்தால் எம்மைப் போன்று கண்களை மூடிக் கொண்டு குருட்டு நடை நடந்துகொண்டிருக்கும் மனிதர்கள் யாராகவும் இருக்க முடியாது. இந்த சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப்படாமைக்காக நாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியும் ஆக வேண்டும்.
அத்தோடு மார்க்க ரீதியான தேவையுடன் சேர்த்து இன்று எமது நாட்டில் அறபு மொழியை வளர்ப் பது ஒரு சமூக ரீதியான தேவை யாகவும் காணப்படுகின்றது. இன்று இலங்கை முஸ்லிம்கள் மொழி ரீதியாக பிளவுபட்டுப் போகும் அபாய நிலை தோன்றி வருகின்றது. தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் கல்வியைத் தொடருகின்ற சூழ்நிலை இன்று வெகு வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் எமக்கிடையே ஒரு இணைப்பு மொழியின் தேவை உணரப்படுகின்றது. இதற்கு மிகவும் பொருத்தமான மொழியாக அறபு மொழி காணப்பட முடியும்.
ஏனெனில் ஒரு முஸ்லிம் குறைந்தபட்சம் வாசிப்பு என்ற வகையிலாவது அறபு மொழியுடன் தொடர்புபடாமல் இருக்கவே முடியாது. ஏனைய மொழிகளின் தொடர்பு இல்லாமல் அவன் இருக்கலாம். ஆனால், அறபு மொழி அவனுடன் நிமிடத்திற்கு நிமிடம் தொடர்புபடக் கூடியது. அந்த வகையில் எமது சமூகத்தின் ஐக்கியத்தைப் பேணுவதற்கான ஒரு ஊடகமாக அறபு மொழியைப் பயன் படுத்த வேண்டிய தேவையெழுந்து வருகின்றது.
இது இலங்கையுடன் மாத்திரம் சுருங்கிய ஒரு தேவையல்ல. மாற்றமாக இஸ்லாமிய அறிஞர்கள் முழு முஸ்லிம் உம்மாவையும் சிந்தனா ரீதியாக ஒருமுகப்படுத்துவதற்கான பிரதானமான ஒரு வழிமுறையாக இதனைக் காண்கின்றனர். மொழி சிந்தனா ரீதியாக மனிதர்களை ஒருமுகப்படுத்துவதற்கான ஒரு ஊடகம் என மொழியியலாளர்கள் கருதுகின்றனர். அந்த வகையில்தான் முழு உலகையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்காக ஸ்பிராடோஸ் (Spardose) ’ என்ற மொழியை உலகப் பொதுமொழியாகக் கொண்டு வருவோம் என்ற கோஷத்தை சிலர் முன்வைத்தார்கள். ஆனால், அது அதற்கு முன்னால் காணப்பட்ட பல இடர்பாடுகளால் சாத்தியப்படவில்லை. என்றாலும்கூட சர்வதேச தூதைச் சுமந்த சர்வதேச சமூக மாகிய எமக்கு எமது குர்ஆனின் மொழியாகிய அறபு மொழியை இந்த வகையில் உயிர்ப்பிப்பது மிகவுமே சுலபமானது.
யூதர்களால் அழிந்துபோன ஹிப்ரு மொழியை உயிர்ப்பித்து வாழ வைக்க முடியுமானால் ஏன் எம்மால் உயிர்வாழும் ஒரு சிந்தனையின், உயிர்வாழும் ஒரு மொழியை, ஒரு சமூகத்தின் பொது மொழியாகக் கொண்டுவர முடியாது? நமக்கு அதற்கான அனைத்து சாத்தியப்பாடுகள் இருந்தும் நாம் சிலபோது மானசீக ரீதியாக மேற்கின் ஆங்கிலத்தின் முன்னால் தோற்றுப் போய் உள்ளோமோ என சிந்திக்கத் தோன்றுகின்றது.
நம்மால் முடியாது என்று எமது எதிர்கால சந்ததியினராவது எமது கொள்கையின் மொழியை வளர்ப்போம் என்று பார்த்தால், அறபு நாட்டில் பிறந்த குழந்தைகளுக்குக் கூட இங்கு கூட்டிவந்து அறபை மறக்கடித்து ஆங்கிலத்தை ஊட்டுகிறார்கள். பல வருடங்கள் அறபு மொழியைக் கற்று அறபு நாட்டிலும் சென்று அதேமொழியைக் கற்று வந்தவர்கள் ஆங்கில மொழியின் முன்னால் மாத்திரம் சரணாகதியடைந்து வாழ்கிறார்கள். அது போதாதென்று தமது எதிர்கால சந்ததியினரையும் கூட அந்த மொழியின் அடிமைகளாக உருவாக்குகிறார்கள்.
சகோதரர்களே! இப்படி நீங்கள் இருப்பீர்களாயின் உங்கள் பெரும் எதிரியாக குர்ஆன் குறிப்பிடும் யூதர்களை மட்டுமல்ல; யாரையுமே உங்களால் எதிர்கொள்ள முடியாமல் போகும். இங்கு நாம் வேறு மொழிகளை கற்கவோ கற்பிக்கவோ வேண்டாம் என்று சொல்லவில்லை. எமது மார்க்கத்தை உயிர்ப்பிப்பதுடன் தொடர்பான ஒரு மொழியைத் தூக்கியெறிந்து விட்டு நமக்கு வேறொரு மொழி தேவையில்லை என்றே சொல்ல வந்தோம். இந்த வகையில் இலங்கையில் அறபு மொழியை வளர்ப்பதற்கான சில முன்மொழிவுகளை இங்கு குறிப்பிடுகிறோம்.
1.    அறபு மொழியைக் கற்பிப்பதற்கான நிறுவனங்கள் உருவாக்கப்படல்.
2.   அறபு மொழியை சிறுபராயம் முதல் கற்பிப்பதற்கான பொருத்தமான பாடவிதானம் உருவாக்கப்படல்.
3.   ஆய்வு ரீதியாக முற்றுப் பெற்றுள்ள அறபுத் தமிழ் அகராதியை நூலுருப்படுத்தல்.
4.   அறபு மொழியில் சிறப்புத் தேர்ச்சி பெறுவதற்குரிய வாய்ப்புக்களை பயன்படுத்தல்.
5.   சிறுபராயம் முதல் உயர்கல்வி வரை அறபுமொழியைக் கற்பதற்காக எமக்குள்ள வாய்ப்புக்களை சிறப்பாக பயன்படுத்தல்.
6.   அறபு மொழியில் அமைந்த நூல்களையும் சஞ்சிகைகளையும் தாராளமாகக் கிடைக்கச் செய்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தல்.
7.   எமது விவகாரங்களைப் பேசும் வகையில் அமைந்த அறபு மொழியிலான சஞ்சிகைகைளை வெளிக் கொண்டுவருதல்.
8.   எமது எதிர்காலப் பரம்பரையின் பிரதான மொழியாக அறபைக் கொண்டுவருவதற்கு தேவையான அடித்தளங்களை நமது வீடுகளில் இப்போதிருந்தே இடுதல்.
9.   எதிர்கால நோக்கம் கொண்டு அறபு மொழி நூலகங்களை பரவலாக உருவாக்குதல்.
இவை எமது கலந்துரையாடலுக்காக எமது அறிவுக்கெட்டிய வகையில் முன்வைக்கப்பட்டவை. இது தவிர்ந்த இன்னும் பல திட்டங்களை நாம் சிந்திக்கலாம். முதலில் இந்த விடயம் நமக் கிடையே கலந்துரையாடப்பட வேண்டும். அதற்கான தயார்படுத்தல்களில் நாம் ஈடுபட வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.
 அல்குர்ஆன், ஹதீஸ் உட்பட இஸ்லாத்தைக் கற்பதற்கான அனைத்து மூலாதாரங்களும் அடிப்படையில் அறபு மொழியிலேயே காணப்படுகின்றன. அவற்றை வேற்று மொழியில் கொண்டுவரும்பொழுது அதன் முழுக் கருத்தையும் கொடுப்பதும் அதன் உயிரோட்டத்தைப் பேணுவதும் சிரம சாத்தியமான விடயம்.
ஏனெனில், அறபு மொழி சொற் சுருக்கமும் கருத்தாழமும் மிக்க மொழி. அதன் பல சொற்களுக்கு இசைவான பொருட்களையும் உணர்வையும் கொடுக்கும் சொற்களை வேற்று மொழிகளில் குறிப் பாகத் தமிழில் காண்டடைவது சிரமமானதாகக் காணப்படுகிறது.

அந்த வகையில்நாம் இஸ்லாத்தை சரியாகப் புரிந்துகொள்ள நமக்கு உள்ள சிரேஷ்டமான வழி முறை அந்த மொழியை நாம் கற்பதுதான். அறபு மொழியைக் கற்பது வாஜிப் என்ற கருத்தை யாரும் மறுத்ததாகக் கிடையாது. அப்படியாயின் அதனை செயற் படுத்துவதைத் தவிர, அதற்கான வழிமுறைகளைத் தேடுவதைத் தவிர நமக்கு முன்னால் வேறு என்ன தெரிவுதான் இருக்க முடியும்?!!

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...