Thursday, November 21, 2013

முன்மாதிரி இஸ்லாமியக் குடும்பம்-02 எம்.என்.இக்ராம்


November 2, 2013 at 11:16pm
  இஸ்லாத்தில் குடும்ப வாழ்வின் முக்கயத்துவம் என்ன?  


  மனித சமூகத்தின் கட்டமைப்பு குடும்பம் என்ற அலகினை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பம் சீராக இருந்தால் சமூகம் சீராக இருக்கும். அது சீர்கெட்டால் சமூகம் சீர்கெட்டு விடும். உண்மையில் குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம். அங்குதான் மனிதன் உயர்ந்த சமூகப் பண்பாடுகளை கற்றுக் கொள்கிறான். குடும்பம் இல்லாவிடின் சமூகம் இருக்க முடியாது. சமூகம் மாத்திரமல்ல குடும்பம் இல்லாவிடின் மனித இனமே இருக்க முடியாது.
        மனிதன் தான் சந்திக்கும் முதலாவதும் ஏகமனதுமான ஒரு சமூக சூழலாக குடும்பம் தான் உள்ளது. மனிதன் தனது பிறப்பு முதல் தனது வாழ்வின் ஒவ்வோர் நகர்விலும் குடும்ப சூழலின் பாதிப்புக்கு உட்படுகிறான். குடும்பத்தின் பாதிப்பை விட்டு தவிர்ந்து வாழும் எந்த மனிதனும் இருக்க முடியாது. இவ்வகையில் மனித சமூகத்தின் தலைவிதியை குடும்பத்தைப் போன்று வேறு எந்த சமூக நிறுவனமும் தீர்மானிக்க முடியாது என்பதை உறுதியாகக் கூறலாம். அவ்வாறு அவை சாதிக்க விரும்பின் குடும்ப அலகின் ஊடாகவே இது இடம்பெற முடியும் என்பதுவும் மிகத் தெளிவான ஓர் உண்மையாகும்.
        எனவேதான் இஸ்லாம் குடும்ப நிறுவனத்துக்கு அதிகூடிய முக்கியத்துவத்தை வழங்கியிருப்பதை நாம் காண்கிறோம். இஸ்லாத்தைப் போன்று குடும்ப நிறுவனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த வேறு எந்தக் கொள்கையையும்,மதத்தையும் நாம் காண முடியாது. இஸ்லாம் குடும்ப உருவாக்கம் எங்கிருந்து துவங்க வேண்டும்? அது எப்படி துவங்க வேண்டும்? அதன் ஷரீஆ ரீதியான வரையறைகள் யாது? அதன் சமூக முக்கியத்துவம் எத்தகையது? குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியிலான உறவு எப்படி அமைய வேண்டும்? குடும்பப் பொருளாதாரம் எந்த வகையில் இருக்க வேண்டும்? என எல்லா வகையிலும் அதன்தொடர்ந்தேர்ச்சையான இருப்புக்குத் தேவையான அனைத்தையும் பற்றிப் பேசியுள்ளது. எந்தளவுக்கெனில் அல்-குர்ஆனில், குடும்பம் பற்றிய சட்டங்கள் மாத்திரமே அதன் கிளைச்சட்டங்களுடன் சேர்த்து பேசப்பட்டுள்ளன.
         அதற்கான காரணம் இஸ்லாமிய சமூக ஒழுங்கில் குடும்பம் அடிப்படை அலகாக உள்ளமையாகும். அதன் மீதுதான் இஸ்லாமிய உம்மத் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எனவே தான் அல்-குர்ஆன் குடும்பத்திற்கு இவ்வளவு பாரிய முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது. ஜாஹிலிய்ய சக்திகளின் தாக்கங்களுக்கு உட்பட்டு அதன் கட்டமைப்பு சீர் குழைந்து விடக் கூடாது என்பதில் அல்-குர்ஆன் கூடிய கவனம் செலுத்துகிறது. எனவே தான் குடும்பம் பற்றி பேசுகின்ற எல்லா வசனங்களும் குடும்பத்தை அல்லாஹ்வுடனும் இறையச்சத்துடனும் தொடர்புபடுத்திப் பேசியிருப்பதை நாம் காண்கிறோம்.
     இஸ்லாமிய சமூக ஒழுங்கு குடும்பக் கட்டமைப்பைக் கொண்டதாகும். இந்த வகையில் தான் இஸ்லாமிய சமூக ஒழுங்கு மனிதனது எல்லா வகையான இயல்புகளையும் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் கவனத்தில் கொண்டமைந்த இயல்பான சமூக ஒழுங்காகக் காணப்படுகின்றது.
          இஸ்லாத்தில் குடும்ப அமைப்பு மனித சமூகத்தில் காணப்படும் இயல்பான ஒரு நிருவனமாக நோக்கப்படுகிறது. மனித இனத்தின் தோற்றத்தின் ஆரம்ப அடிப்படையில் குடும்ப அமைப்பு உருப்பெறுவதாக இஸ்லாம் கருதுகிறது. “நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தோம்.” (தாரியாத்:49) “எல்லாவற்றிலும் சோடிகளைப் படைத்தவன் தூய்மையானவன். புமியில் விளைபவற்றிலும் மனிதர்களிலும் அவர்கள் அறியாதவற்றிலும் இச் சோடிகள் காணப்படுகின்றன.”(யாஸீன்:36)
       அதே போன்று மனித சமூகத்தின் விருத்தியும் ஓர் ஆன்மாவில் இருந்து தோன்றிய ஆதம்,ஹவ்வா என்ற சோடியிலிருந்து தோற்றம் பெற்றதாயும் அவர்களிலிருந்து சந்ததிகள் தோன்றி மனித சமூகம் பரவியதாயும் அல்-குர்ஆன் குறிப்பிடுகிறது.
         “மனிதர்களே! ஓர் ஆன்மாவிலிருந்து உங்களைப் படைத்த உங்களது இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். அந்த ஆன்மாவிலிருந்து அவன் அதன் சோடியைப் படைத்தான். அவர்களிருவரிலுமிருந்து அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். நீங்கள்,தன்னைப் பற்றியும் இரத்த உறவு பற்றியும் உங்களை வினவுகின்ற அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை அவதானிப்பவனாக உள்ளான்.”(நிஸா:01)
     “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். நீங்கள் பரஸ்பரம் அறிமுகமாக வேண்டுமென்பதற்காக உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் மாற்றினோம். அல்லாஹ்விடத்தில் உங்களில் சிறந்தவர் உங்களில் அதிக இறையச்சம் உடையவரே. நிச்சயமாக அல்லாஹ் அறிவுடையவனாகவும் நிபுணத்துவம் மிக்கவனாகவும் உள்ளான்.”(ஹுஜ்ராத்:13)
        அல்லாஹ் ஒரே முறையில் மில்லியன் கணக்கான மனிதர்களை படைக்கும் ஆற்றல் மிக்கவன். என்றாலும் குடும்ப ஒழுங்கினூடாக அது இடம்பெற வேண்டுமென அவன் நாடியிருக்கிறான்.
      அதே போன்று ஆண்-பெண் இரு பாலருக்கும் மத்தியில் காணப்படும் இயல்பான ஈர்ப்பு குடும்ப ஒழுங்கை வலியுறுத்துவதாக இஸ்லாம் கருதுகிறது. மனிதனிடம் காணப்படுகின்ற இயல்பான பாலியல் தேவை ஆணுக்கும் ஆணுக்கும் மத்தியில் அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் இடம் பெறும் மிருகத்தனமான தொடர்பாக அல்லாமல் சீரான குடும்ப ஒழுங்கினூடாக இயல்பாக ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் இடம் பெறும் தொடர்பாக இருக்க வேண்டும் என இஸ்லாம் கருதுகிறது.
    “அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள விடயம் தான் உங்களிலிருந்து நீங்கள் அமைதி பெறுவதற்காக உங்கள் சோடிகளைப் படைத்தமையும் உங்களுக்கு மத்தியில் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியமையும்.”(ரூம்:21)
      ”அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.”(பகரா:187)
 “உங்களது மனைவியர் உங்களது விளை நிலங்கள்.உங்களது விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்.”(பகரா:233) “அல்லாஹ் உங்களது வீடுகளில் உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தினான.”(நஹ்ல்:80)
        மனித இயல்பு தொழிற்படுவதற்கு இஸ்லாம் குடும்ப ஒழுங்கினூடாக இடமளிக்கிறது,இதனூடாக குடும்பம் இயல்பான சமூக ஒழுங்காக மாறுகிறது. இதே ஒழுங்கு பிரபஞ்சத்திலும் காணப்படுகின்றது.அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட இயல்பான இஸ்லாமிய ஒழுங்கும் பிரபஞ்சத்தில் அல்லாஹ்வால் உருவாக்கப்பட்ட ஒழுங்கும் உடன்படுகிறது. இதன் போது உலக வாழ்வு சீராக இயங்குவதற்கான அனைத்து வாயில்களும் திறக்கப்படுகிறது.
       குடும்ப நிறுவனத்தின் இயல்பான இந்தத் தன்மையை சடவாதத்தையும் சியோனிசத்தையும் பின்னணியாகக் கொண்ட சமூகவியல் ஆய்வுகள் மறுக்க முற்படுகின்றன. 'குடும்பம் என்பது ஏனைய சமூக நிறுவனங்களைப் போன்று சமூகத்தின் தேவை கருதி செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட ஒரு சமூக நிறவனம்.அது இயல்பான ஒரு சமூக நிறுவனமல்ல,அது மனித சமூகத்தின் அடிப்படையல்ல. கால ஓட்டத்தில் அது நிலைக்கவும் முடியும், இல்லாமல் போகவும் முடியும்' என அவர்கள் கருதுகின்றனர். இவர்களது இந்த கருத்துச் செல்வாக்கின் காரணமாகத்தான் இன்றைய சடவாத மேற்கு முறைகேடான பாலியல் சாக்கடையில் மூழ்கி சீரழிகிறது. குடும்ப நிறுவனத்திற்கு அவர்கள் இழைத்த துரோகத்தின் விளைவுகளை இன்று அவர்களே அனுபவிக்கின்றனர்.
        அடுத்து, குடும்பம் தான் குழந்தைகளுக்குரிய இயல்பான பராமரிப்புத் தாபனமாகத் திகழ்கிறது. அன்பும் அமைதியும் நிறைந்த சூழலில் குழந்தையை உடல்,உள,ஆன்மீக, அறிவு ரீதியாக பராமரிப்பதில் குடும்பம் பாரிய பங்காற்றுகிறது. மனித சமூகம் தான் நீண்ட குழந்தைப் பருவத்தைக் கொண்டது. அதற்குக் காரணம் அவன் உலகில் சுமந்துள்ள பொறுப்பாகும். “நாம் வானங்கள்,புமி,மலைகள் என்பவற்றிடம் அமானத்தை முன்வைத்தோம். அவை மறுத்தன. மனிதன் அதை சுமந்து கொண்டான.”(அஹ்ஸாப்:72)
     மனிதன் உலகில் கிலாபத் பொறுப்பை சுமந்துள்ளான். அது மனித சமூகத்தின் இருப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு பொறுப்பாகும்.அதனை சுமக்க நீண்ட பயிற்றுவித்தல் அவசியம். அதனை வழங்க குடும்பம் மாத்திரமே பொருத்தமான ஒரு இடமாகக் காணப்படுகின்றது. அதற்கு பிரதியீடாக வேறு எந்த நிறுவனமும் அதனை செய்ய முடியாது.
        மார்க்ஸிஸம்,முதலாளித்துவம் போன்ற கொள்கைகளுடைய சடவாதிகள் அண்மைய நூற்றாண்டுகளில் குடும்பத்தை இல்லாமல் செய்து குழந்தைகளை தமக்குத் தேவையான வகையில் உருவாக்க நினைத்தனர். விளைவு என்னவாயிற்று? பல்லாயிரம் தந்தையற்ற வீதிக் குழந்தைகள்,பாலியல் முறைகேட்டிற்கும், போதைப் பொருட்களுக்கும் அடிமைப்பட்ட இளைஞர்கள், மன அழுத்தத்திற்காட்பட்ட மனநோயாளிகள்,அநாதரவாக விடப்பட்ட முதியோர், பெண் துஷ்பிரயோகம்… என அதன் விளைவுகளை அடுக்கிச் செல்லலாம். இது மனித இயல்புடன் மோதியதன் விளைவு.
            என்ன ஆச்சரியம் என்றால் இதே சிந்தனையை முஸ்லிம்கள் என்று பெயர் தாங்கிய எம்மவருள் பலரும் பின்பற்ற முற்படுவதுதான். அவர்கள் பெண்கள் வேலைக்குப் போவதை நாகரிகமாகக் கருதுகின்றனர். கட்டற்ற ஆண்-பெண் உறவை முன்னேற்றமாகக் கருதுகின்றனர். இதனால் இந்நோய் எமது சமூகத்தினுள்ளும் தொற்றிக் கொண்டது.
   எனவே பாலியல் துஷ்பிரயோகங்களும் முறையற்ற உறவுகளும் என்று குடும்ப அலகு சீர்குலைந்து உள அமைதியும் ஆரோக்கியமும் தொலைந்து விட்டது. நமது சமூகத்தின் எதிர்கால சந்ததியினரான குழந்தைகள் சரியான உள,உடல்,அறிவு,ஆன்மீக ரீதியான போசனைக்குட்படாது தடம் புரண்டு வருகின்றனர்.
            இந்நிலை சீர்பெறுதல் வேண்டும். இஸ்லாமிய குடும்ப வாழ்வு எம்மிடம் முதன்மை பெற வேண்டும். குடும்ப வாழ்வு பற்றிய இஸ்லாமிய சிந்தனைத் தெளிவு இதற்காக எமக்குத் தேவைப்படுகின்றது.

Friday, November 1, 2013

THE APOSTASY FROM FREEDOM-01 எகிப்தின் சுதந்திரவான்கள்… அழகின் ஆழத்தை வரைந்து கொண்டிருக்கிறார்கள்

October 27, 2013 at 11:19pm
 சுதந்திரத்திலிருந்து மதம் மாறுதல்-01
                                                   முஹம்மத் அஹமத் றாஷித்
                                                                           
    நம்பிக்கைக்குரிய எங்களது முர்ஷித் உஸ்தாத் முஹம்மத் பதீஃ இன் தலைமையில் எகிப்திய இஃவான்கள் மிகவும் சிக்கல் நிறைந்த, கடினமான சூழ்நிலையில் தம்மை நிதானப்படுத்திக் கொண்டு, கடைப் பிடித்த கட்டுக் கோப்பு இங்கு வியந்து பார்க்கத்தக்கது. தேசிய பாதுகாப்புமையத்திற்க்கு முன்பும்,றாபிஆ மைதானத்திலும்,மஸ்ஜித் காஇத் இப்றாஹிமிலும்… எகிப்திய இராணுவமும் பொலிஸும் மேற்கொண்ட மிக மோசமான கொலை வெறியாட்டங்களின் பின்னரும் இஃவான்களும் அவர்களது முர்ஷிதும், மக்தபுல் இர்ஷாதும்,நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (FJP)யின் தலைமைகளும்;சாத்வீகமான முறையில் அதனை எதிர்த்துப் போராடிய முறை மெச்சத்தக்கது. அவர்களது அமைதிப் போராட்டம் அமைதியின் உச்ச எல்லைகளையே கடந்து சென்றது.
         இந்த போராட்டம் சிந்தனைத் தூரிகைகளுக்கு உன்னத ஓவியங்களை பரிசளித்துள்ளது. உண்மையான வரலாற்றாசிரியனுக்கு நம்பிக்கையோடு வரலாற்றின் வரிகளில் இஃவான்களின் போராட்டத்தை சிறப்பாய் பதிய வாய்ப்பளித்துள்ளது. நவீன காலத்திலுள்ள ஈமானிய உயிர் பெற்ற மிகப் பெரும் இஸ்லாமிய இயக்கமான இஃவான்களின் தஃவா; சமூக, அரசியல் தளத்தில் மிகத் தெளிவான, உயர் கலையழகு கொண்ட அழகியளின் ஆழத்தை வரைந்திருக்கின்றது. இதனால் அது எகிப்திலுள்ள எல்லா இஸ்லாமிய வாதிகளதும் சுதந்திரப் போராளிகளதும் போராட்டத்தை வழிநடாத்தும் தலைமையாக மாறியுள்ளது என உறுதியாக சொல்லும் வாய்ப்பை அவர்களுக்கு அழித்துள்ளது. எகிப்தில் மாத்திரமல்ல முழு இஸ்லாமிய உலகிலுமுள்ள சுதந்திரத் தாகமுள்ளோரின் தலைமையாய் அது மாறியுள்ளது.
       இந்த தஃவாவின் ஆரம்பம் சீராய் அமைந்தது. அதன் சிந்தனை முதல் எட்டிலேயே தூய்மையாய் இருந்தது. அது தனது பயணப்பாதை நெடுக கலங்கமற்றுப் பயணித்து வருகிறது. அது சோதனைகளிலும் சாதனைகளிலும் இந்தப் பத்தினித் தனத்தை இழந்து போகவில்லை. அது சமகாலத்தில் வாழ்ந்தது,இஸ்லாமிய உலகின் எல்லாத் திக்கிலும் உம்மத்தின் தலைமை ஆசனத்தை பெற்றுக் கொண்டது. வன்முறையோ, பயங்கரவாதமோ இன்றி இரத்தம் சிந்தாது அது இதனை சாதித்தது. இந்த நீண்ட பயணத்தில் அது தன்னைத்தான் பலியாய்க் கொடுத்திருக்கிறது.இந்த தஃவாவின் இரத்தங்கள் தான் ஓட்டப்பட்டுள்ளன.
          இன்று நாம் மறுமை நாளை அண்மித்த காலத்தில் வாழ்கிறோம். இங்கு நம்பகமானவன் மோசடிகாரனாய் பார்க்கப்படுகிறான். மோசடிக்காரன் நம்பப்படுகிறான். உண்மையாளன் பொய்ப்படுத்தப்படுகிறான். பொய்யன் உண்மைப்படுத்தப்படுகிறான். அற்பர்கள் பொதுவிவகாரங்களை, சமூக விவகாரங்களை பேசுகிறார்கள். சர்வதிகாரி முபாரக்கின் அடிவருடிகளான குண்டர்களும் பஷ்ஷாரின் சேவகர்களும் இன்று சமூக விவகாரங்கள் குறித்து உரையாடுகின்றனர். இந்த வகையில் அமெரிக்கா, ஆலு ஸுஊத்களதும் ஆலு நஹ்யான்களதும் முதலீட்டில் எகிப்திய இராணுவ ஜெனரல்களை இந்த அற்பர்களுக்கு உதவுவதற்கும் சட்டபுர்வ ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கும் தூண்டிவிட்டது ஆச்சரியமான ஒரு விடயமல்ல. ஜனாதிபதி முர்ஸி அபிவிருத்தியினதும் நன்மையினதும் தூணாக நின்றவர்.
       நவீன கால வரலாற்றில் இரத்தம் தோய்ந்த இராணுவப் புரட்சியை மேற்கொள்வதற்காக பொய்யும் புரட்டும் கொண்ட முன் நெற்றிச் சொந்தக்காரர்கள் தமது கூலிப் பட்டாளங்களை தஹ்ரீருக்கு அழைத்து வந்தனர். அல்லாஹ் அவர்களை அழைத்துச் செல்ல ஸபானியாக்களை அழைப்பான்.
           எனவே இத்தகைய சூழலில் இஃவான்கள் அல்லாஹ்வின் வஸிய்யத்தைப் பின்பற்றினர்: “அல்லாஹ்விடம் உங்களது விடயங்களை ஒப்படையுங்கள் (ஸுஜுத் செய்து அவனை நெருங்குங்கள்.)” நாம் ஸுஜுதிலிருந்தோம்,எம்மை ருகூஃவிலும் ஸுஜுதிலும் நோன்பாளிகளாய் இருந்த நிலையிலும் மிக மோசமாய் கொலை செய்தனர். எம்மைப் பற்றி பொய்ப்பிரச்சாரங்கள் செய்தனர். இதை நாம் இறைவனிடமே முறையிட்டோம்.
           எகிப்தின் நிலை என்னை வருத்தத்திற்குட்படுத்தியது, எனது உள்ளத்தை பிழிந்தெடுத்தது. ஏனெனில் எமது சொந்த சகோதரர்கள் நூற்றுக் கணக்கில் கொலை செய்யப்பட்டனர். காயப்பட்டோர் ஆயிரக் கணக்கில் இருந்தனர். எனினும் அதில் நான் நலவையே கண்டேன்.
  இது நபியவர்களுடன் உடன்படிக்கை செய்திருந்த குஸாஆ கோத்திர முஃமின்களை காபிர்கள் கொலை செய்த நிகழ்வை முழுமையாக ஒத்திருக்கிறது.அந்த நிகழ்வை அம்ர் இப்னு ஸாலிம்(றழி) அவர்கள் ஒரு கஸீதாவில் நபியவர்கள் முன் பாடிக்காட்டினார்கள்:
யாஅல்லாஹ் எனது தந்தையும் தந்தையின் தந்தையும் செய்திருந்த உறுதிமிக்க உடன்பாட்டை நான் முஹம்மதிடம் கேட்கிறேன்….
………………………………………………………….
……………………………………………………………..
அவர்கள் எம்மை ருகூஃவிலும் ஸுஜுதிலும் துண்டம் துண்டமாய் வெட்டிக் கொலை செய்துவிட்டனர்….
 இதனைக் கேட்ட நபியவர்கள்:“அம்ர் இப்னு ஸாலிமே!நீர் வெற்றி கொடுக்கப்பட்டுவிட்டாய்” என்றார்கள்.
   எமது சோதனைகளும் ஸஹாபாக்களது சோதனைகளை எட்டுமளவு உயர்ந்து விட்டது.எம்மையும் ருகூஃவிலும் ஸுஜுதிலும் வைத்தே அவர்கள் மோசமாய் படுகொலை செய்தனர்.
 இஃவான்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள்,அவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள்,அவனது மார்க்கத்தை நோக்கி அழைக்கும் அழைப்பாளர்கள்.


முஹம்மத் பதீஃ அன்றாடம் இறைவனிடம் மன்றாடும் போது, மலாஇகாக்கள்: 'ஹிக்மத்தையும் அறிவையும் அணிகளனாய்க் கொண்ட முர்ஷிதே! நீங்கள் வெற்றி கொடுக்கப்பெற்று விட்டீர்கள்,தொடர்ந்த சோதனையில் பொறுமை காத்த உங்கள் ஜமாஅத்துக்கும் வெற்றி கொடுக்கப் பெற்றுவிட்டது' என பதிலளிப்பதாகத் தோன்றுகிறது.
    எகிப்து எங்கிலும் வாழும் இஸ்லாமிய வாதிகளே!இஃவான்களே! ஸலப்களே!சுதந்திர விரும்பிகளே! நீங்கள் வெற்றி கொடுக்கப் பெற்று விட்டீர்கள்.
 இன்றய போராட்டத்தின் தளபதி எகிப்திய மக்களுக்கும் முழு உம்மத்துக்கும் ஈஸா(அலை) அவர்கள் தனது தோழர்களுக்கு விடுத்த அழைப்பை விடுக்கிறார்:
“அல்லாஹ்வின் உதவியாளர்கள் யார்?”
அல்வாஹ் கூறுகிறான்:
“ஈமான் கொண்டவர்களே நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருங்கள்.”
 ஒரு கூட்டம் ஈமான் கொள்ளும். ஒரு கூட்டம் தட்டுத்தடுமாறும்.
அல்லாஹ் சுதந்திரத்தின் காதலர்களுக்கு உதவி புரிவான். அவர்கள் வெற்றி பெறுவார்கள்.
“மூஃமின்களுக்கு நன்மாராயனம் கூறுங்கள்.”
அல்லாஹ் அவர்களுக்கு “அல்லாஹ்வின் உதவியையும் அண்மித்த வெற்றியையும்” கொடுக்கக் காத்திருக்கிறான்.
       வேதனையின் ஆழம் நீண்டிருந்த போதிலும் எனது உள்ளத்தில் அமைதி குடியிருக்கிறது. நான் திருப்தியுடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன். ஏனெனில் இந்த சோதனை இறுதியாய் எமக்கு சார்பாய் பிரசவிக்கும். முனாபிக்குகளும் அநியாயக்  காரர்களும் தோற்றுப் போவார்கள். முர்ஸியோ அவருக்கு ஈடான இன்னோர் சகோதரனோ தலைமைக்கு மீண்டும் வருவார்கள். மீண்டும் எந்த மோசடிகளும் இன்றி சுதந்திரமான ஒரு தேர்தல் நடக்குமாயின்,அதில் கிடைக்கும் புதிய வெற்றி அரசியல் வரலாற்றிலேயே கண்டிராத நூற்றுவீதத்தில் அமைந்திருக்கும். கஷ்டத்தின் பின்னரான விடிவாய் அது இருக்கும். சோகத்தின் பின்னரான மகிழ்வாக அது இருக்கும்.

 இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையிலான நெருக்கம் இன்னும் இன்னும் அதிகரிக்கும். அதன் எல்லா வகையான தலைமைகளுக்கிடையேயும் அன்பும் புரிந்துணர்வும் இன்னுமின்னும் அதிகரிக்கும். இதே போன்று அங்கத்தவர்களுக்கிடையேயும் இந்த புரிந்துணர்வு அதிகரிக்கும். மில்லியன் கணக்கானவர்கள் இந்த ஈமானிய தர்பியத்தின் பாசரையில், ஷரீஆ அறிவைப் பெறும் மஜ்லிஸ்களில்,சமூக சீர்திருத்த செயற்பாடுகளில் இணைந்து கொள்வர். இதனால் இஸ்லாமிய அணி மும்மடங்காக அல்லது அதனைப்பார்க்கிலும் அதிகமாய் அதிகரிக்கும். சில போது அது பத்து மடங்காய் அதிகரிக்கலாம். ஏனெனில் வெற்றியும் சுதந்திரமான சூழலும் உறங்கிக்கிடக்கும் ஆழுமைகளை அதன் விலங்குகளிலிருந்து விடுவிக்கும். தாஈக்கள் குடியரசின் தலைமைகளாக முன் செல்வர். உள்ளங்கள் ஆசுவாசமடையும், சிந்தனைகள் தூய்மை பெறும்,நகர்வுகள் தெளிவாயமையும்,ஈமான் விசாலிக்கும்,போராட்ட உணர்வுகள் ஆர்ப்பரிக்கும். இவையனைத்தும் யுதர்களுடனான இறுதிப் போருக்கான முன்னாயத்தமாய் அமையும். இஸ்ரேல் அழிந்தொழிந்து போகும்.
   ஸியோனிஸத் தலைவர்கள் செய்த மடமைத்தனமான செயல் என்ன தெரியுமா? அவர்கள் மதச் சார்பற்ற சக்திகளை தூண்டி ஜனாதிபதி முர்ஸியை வீழ்த்துவதற்காக அவர்களை கூலிக்கமர்த்தியமைதான் அது. தற்காலிகமான இந்த வீழ்ச்சி, ஸியோனிஸத்தின் தேசத்தையே அழித்துவிடும் ஒரு போராட்டத்தில் கொண்டு போய் விடும் தொடர்ந்தேர்ச்சையான இஸ்லாமிய எழுச்சிக்கு வழி வகுக்கும் என அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. அல்லாஹ் மீதாணையாக நான் அதனை இந்த நிகழ்வுகளில் வாசிக்கின்றேன். அதனை தெய்வீக நியதிகளின் பயணப் பாதையில் காண்கிறேன். அல்லாஹ் எகிப்தினுள்ளே அசத்தியத்தை துடைத்தழித்து விடுவான் என்பதற்கான சமிக்ஞைகளை நான் அதிலே போதியளவு காண்கிறேன். பின்னர் எகிப்து, அனியாயக்காரர்களிடமிருந்து எப்படி தம்மை விடுவித்துக் கொள்ளலாம் என்பதற்கு ஏனைய பிரதேசங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும்.அதன் விளைவாக தூய்மையும் தெளிவும் கொண்ட ஒரு தலைமையின் கீழ், ‘அல்லாஹு அக்பர்' என பொறிக்கப்பட்ட ஒரு பச்சைக் கொடியின் நிழலில் தெளிவான இஸ்லாமிய வழியிலமைந்த ஒரு போராட்டத்துக்கான அழைப்பு இடம் பெறும். அதில் தெளிவான வெற்றியை இஸ்லாமிய வாதிகள் பெறுவர். அந்த வெற்றி இப்போதிருந்து ஒன்பது அல்லது பத்து வருடங்களில் 2022இல் இடம் பெறும்.
  இதனை நான் எனது முன்னைய நூல்களிலும் விரிவுரைகளிலும் கூறியிருக்கிறேன். இதற்கான ஆதாரம் ‘தல்மூத்` இல் காணப்படுகிறது. பலபோது இது முன்னர் பனூஇஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட நபிமார்களது திரிபுபடுத்தப்படாத ஒரு வாக்காக இருக்கலாம்.
  இஸ்ரேல் நிறுவப்பட்டு சரியாக 76 சந்திர வருடங்களின் பின்னர் இது நிகழும். இதன் போது ஹாலி(HALLEY)என்கின்ற வால் மீன் (COMETS)சூரியனில் இருந்து தொலைவில் கீழாக வரும் என்று அதற்கான அடையாளமும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நுணுக்கமான வானவியல் கணிப்பீட்டின் படி நாம் மேலே கூறிய வருடத்தில் இடம் பெறும் என்பதும் வானவியல் ஆய்வுகளில் கூறப் பெற்றுள்ளது. உஸ்தாத் பஸ்ஸாம் ஜர்ராரின் “இஸ்ரேலின் அழிவு” என்கின்ற நூலில் இந்த விடயத்தை உறுதிப்படுத்துகின்ற விரிவான ஆதாரங்களைக் காணலாம்.
         ஷெய்க் ஸபருல் ஹவாலி இது தொடர்பில், 'தல்மூத்தில்' இடம் பெற்றுள்ள பனூஇஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு நபி அன்றிருந்த பபிலோனிய அரசன் நுபுவ்கத் நுஸ்ஸர் என்பவனது கனவுக்கு விளக்கம் சொன்ன  குறிப்பொன்றை வைத்து இஸ்ரேலின் முடிவு சம்பந்தமாக கூறுகின்றார். அந்தக் கனவு விளக்கத்தின் படி 2012 இல் இஸ்ரேல் அழிய வேண்டும். எனினும் அந்த ஆண்டு கடந்தும் அது இன்னும் நிகழவில்லை.
         அந்த வகையில் இந்த இரு அறிவிப்புக்களையும் ஒன்று சேர்த்துப் பார்க்கின்ற போது, பலஸ்தீன விடுதலைக்கான இஸ்லாமிய வாதிகளின் போராட்டம் 2012 இல் துவங்கும். இதனை நாம் 'காஸா' போராட்டத்தில் நின்று பிடிப்பதில் இருந்து குறிப்பிடலாம். போராளிகளிடம் ஏவுகணைகள் தாராளமாய் காணப்படுகின்றன. படையினரின் அணி எண்ணிக்கையிலும் பலமாய் உள்ளது. புமிக்குக் கீழால் அதனது சுரங்க வலைப்பிண்ணல் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் உலகின் எல்லா இடங்களிலும் இஸ்லாமிய எழுச்சியலை முன்னே செல்கின்றது. இதன் விளைவாய் 2022 இல் இறுதிப்போர் மூழும். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.
      இன்று நடக்கும் சுதந்திரப் போராட்டங்கள்,முஸ்லிம்களது விழிப்புணர்வு என்பன,எதிர்வரும் 10வருடங்களில் குத்ஸை மீட்கும் போராட்டத்திற்குவழியமைக்கும் என்பது எனது எதிர்பார்ப்பாகும். இதனை நான் அண்மையில் வெளியிடப்பட இருக்கும் “முகத்தமாதுல் வஇய்யுத் தத்வீரி” என்ற எனது நூலில் விரிவாக பேசியுள்ளேன். அதனைத் தொடர்ந்தும் எதிர்கால முன்னேற்றங்களுக்கு வழிகாட்டும் வகையில் பல நூல்களை வெளியிடவுள்ளேன். இதன் மூலம் தஃவாவின் நகர்வை; சமூக,அரசியல்,அபிவிருத்தி,நாகரிக உருவாக்கம்….என பரந்துபட்ட பரப்பில் முன் கொண்டு செல்வதற்கான போராட்டத்தில் எனது பங்களிப்பை ஆற்ற விரும்புகிறேன்.
  அடுத்து….
காற்று எமது பாய்மரத்தை முன் நகர்த்தும் என்ற நம்பிக்கையில்… காத்திருக்கின்றோம்

Sunday, October 13, 2013

சுதந்திரத்திலிருந்து மதம் மாறுதல்-மொழி பெயர்ப்புக்கு முன்னைய குறிப்பு எம்.என்.இக்ராம்

    

“ஸியோனிஸம் ஜனாதிபதி முர்ஸியை பதவி கவிழ்ப்பதற்காக மதச்சார்பற்ற சக்திகளை தூண்டிவிட்டு,அதற்காக உதவியும் புரிந்து வருகின்றது.ஆனால்,தற்காலிகமான வீழ்ச்சி,தொடர்ந்தேர்ச்சையான பெரும் இஸ்லாமிய அலையொன்றை தோற்றுவிக்கும் என்பதையும் அது தமது தேசத்தை அழித்துவிடக் கூடிய ஒரு போராட்டமாக மாறும் என்பதையும் அவர்கள் சரியாக புரிந்து கொள்ளத் தவறி விட்டனர்.அல்லாஹ்வின் மீதாணையாக அந்த முடிவை இறை நியதியுடாக நான் உறுதியாகவே காண்கிறேன்.அல்லாஹ் எகிப்தினுள்ளே அசத்திய சக்திகளை முழுமையாக துடைத்தழித்து விடுவான் என்பதற்கான போதிய ஆதாரங்களை நான் அதிலே காண்கிறேன்.
       இதனூடாக எகிப்து நாம் எவ்வாறு அநியாயக்காரர்களிடமிருந்து எம்மை விடுவித்துக் கொள்வது என்பதற்கான ஒரு முன்மாதிரியாக அமையும்.அதனைத் தொடர்ந்து தூய்மையும் தெளிவும் கொண்ட ஒரு தலைமையின் கீழ், 'அல்லாஹு அக்பர்' என பொறிக்கப்பட்ட ஒரு பச்சைக் கொடியின் நிழலில் தெளிவான இஸ்லாமிய வழியிலமைந்த ஒரு போராட்டம் இடம் பெறும்.அதில் தெளிவான வெற்றியை இஸ்லாமிய வாதிகள் பெறுவர்.அந்த வெற்றி இப்போதிருந்து 09 அல்லது 10 வருடங்களில் 2022 இல் இடம் பெறும்.”
                                                                                  - முஹம்மத் அஹமத் றாஷித்- 
                                                              
 'சுதந்திரத்திலிருந்து மதம் மாறுதல்'எகிப்தில் சட்ட புர்வமாக,ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஆட்சிக் கெதிராக இடம் பெற்ற இராணுவப் புரட்சியின் ஆழ,அகலங்களை சரியாக படம் பிடித்துக் காட்டும் ஒரு நூல்.இது அறபுலகின் முக்கிய சிந்தனையாளர்களுள் ஒருவரான ஷெய்க் றாஷிதினால் புரட்சியின் ஆரம்ப நாட்களில் எழுதப்பட்டது.தஃவாவின் ஆழ்ந்த அனுபவப் பார்வையுடன் இந்தப் புரட்சியின் பின்னணி,அதன் எதிர்கால விளைவுகள்,அந்த விளைவுகளை எப்படி உருவாக்கலாம் என்பது பற்றி இந்நூல் உரையாடுகிறது.
     இந்த நூலில் எதிர்வு கூறப்பட்ட ஒவ்வொரு விடயத்தையும் வரிக்கு வரி நாம் இன்று களத்திலே காண்கிறோம்.இந்தப் புரட்சியின் இலக்கு எகிப்திலே ஜனாதிபதி முர்ஸியின் ஆட்சியை கவிழ்ப்பது என்பதைப் பாரக்கிலும் இஸ்லாத்தையும் இஸ்லாமிய வாதிகளையும் புண்டோடு அழித்து ஒழிப்பதுதான் என்பதை இந்நூலின் வரிகள் சொல்வது போல் நாம் களத்தில் காணும் யதார்த்தமாகும்.
       அமெரிக்காவின் இராணுவ,அரசியல் கொள்கைகளை தீர்மானிப்பதற்கு வேண்டிய ஆய்வுகளை செய்து வழங்கும் 'RAND'என்ற நிறுவனம் இந்தப் புரட்சிக்கு நான்கு மாதங்களுக்கு முன் வெளியிட்ட ஓர் ஆய்வில் இந்த இராணுவப் புரட்சிக்கான தேவையை எதிர்வு கூறியிருந்தது. “அமெரிக்கா தனது முதற்தர எதிரியாக 'அல்-காஇதா'வை கொண்டிருந்தது போல் இன்று 'அல்-இஃவானுல் முஸ்லிமூன்'அமைப்பை கொள்ள வேண்டும்.ஏனெனில் அறபு வசந்தத்தை தொடர்ந்து அது அதிகாரத் தளங்களை கைப்பற்றி வருகின்றது.அவர்கள் மிகவும் உறுதியான  நிலைப்பாடுகளைக் கொண்ட ஓர் அமைப்பு.அமெரிக்க அரசியலுடன் இயைந்து செல்லும் வகையில் அவரகளை மாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.எனவே அவரகளது ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து,அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும்.”இந்தப் பின்னணியில் இருந்துதான் எகிப்தின்,இஸ்லாமிய உலகின் இன்றைய நிகழ்வுகளை நாம் பார்க்க வேண்டியுள்ளது.மேற்கிற்கும் ஸியோனிஸத்திற்கும் உலக அரங்கில் பெரும் சவாலாக இருப்பவர்கள் இந்த இஸ்லாமிய வாதிகளே.அவர்கள் விலை கொடுத்து வாங்கப்பட முடியாதவர்கள்.இதனை ஒரு சந்தர்பபத்தில், அமெரிக்காவின் முன்னால் தலைவர்களுள் ஒருவரான கிளின்டன் ஹமாஸின் அரசியற்பிரிவுப் பொருப்பாளர் காலித் மிஷ்அலிடம் “ஹமாஸின் தலைவர்களே உங்களுக்கு விலை கிடையாது” என நேரடியாகவே குறிப்பிட்டிருந்தார்.
   குறிப்பாக இன்று எகிப்தில் இடம் பெறும் கொலைகள் எமக்கு பெரும் அழிவாக தென்பட்ட போதும் எகிப்தின் சனத் தொகையுடன் ஒப்பிட்டு நோக்கும் போது தச விகிதத்திலையே அந்த இழப்புக்கள் காணப்படுகின்றன.இது ஆயுதப் போராட்டமொன்று இடம் பெறுமாயின் 50மூ ஆல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்த வகையில் நோக்கும் போது இராணுவப் புரட்சிக்கெதிரான  போராட்டத்தின் வெற்றி அதன் சாத்வீகத் தன்மையை பாதுகாப்பதிலேயே தங்கியுள்ளது.எனவேதான் இந்த போராட்டங்களில் கலந்து கொள்ள சிறுவர்களும் பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சாத்வீகப் போராட்டத்தை பலமாகக் கொண்டு செல்வதற்காக அனுபவ ரீதியாக வழிகாட்டுகின்ற இரு ஆய்வுகளை இந்த நூலுடன் சேர்த்து அதற்குப் புறம்பாக ஷெய்க் றாஷித் அவர்கள் தனது முக நூல் பக்கத்திலே பதிவேற்றியிருந்தார்.(சாத்வீகப் போராட்டம்50 வரையறைகள்,சரவதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை நோக்கி) 
   எகிப்தில் இடம் பெறும் இந்தப் போராட்டம் முஸ்லிம் சமூகத்திற்கான சரியான தலைமையை இனம் காட்டியுள்ளது.அது கடந்த 85 வருடங்களாக புடம் போடப்பட்ட சக்தி.அது இன்று முஸ்லிம் உம்மத்தின் தலைமையை சுமக்கிறது.அதன் பின்னால் முஸ்லிம் உம்மத்தின் அனைத்து சக்திகளையும் இந்தப் போராட்டம் ஒன்று திரட்டிக் கொடுத்துள்ளது.இது இன்றைய உலகின் அசத்தியத்தின் தலைமையான ஸியோனிஸத்திற்கும் இஸ்லாத்திற்குமிடையிலான இறுதிப் போராட்டத்திற்கான பாதையை செப்பனிடுகிறது.
     இந்தப் போராட்டம் புழைல் இப்னு இயாலோ,ஜுனைதுல் பக்தாதியோ,இமாம் கஸ்ஸாலியோ கண்டு கொள்ளாத ஒரு பெரும் திரளை ஈமானியத் தர்பியத்திற்காக ஒன்று திரட்டிக் கொடுத்துள்ளது.இந்தத் திரள் இலட்சியக் கணவு கண்ட தத்துவவியலாளர்களாலும் பெற்றுக் கொடுக்க முடியாமல் போன ஒரு முன்னுதாரணத்தை உலகிற்கு பெற்றுக் கொடுத்துள்ளது.இத்திரள் 85 வருட ஆழம் கொண்ட அத்திவாரத்தைக் கொண்டது.ஒரு நீண்ட பயிற்றுவித்தலின் விளைவு.இதனுடன் மேற்காக றபாத் முதல் கிழக்காக தெற்குப் பிலிப்பீனின் மராவா நகர் வரையும்,வடக்காக ஸைபீரியாவினருகே உள்ள தத்ரிஸ்தான் முதல் தெற்காக ஆபிரிக்காவின் மொஸாம்பிற்க் வரையும் பரந்துள்ள உலகின் பெரும் பரப்பில் வாழும் பல மில்லியன் கணக்கான உள்ளங்களும் ஒன்றிணைந்துள்ளன.எனவே றாபியாவில் இணைந்த அந்த திரளை களைத்து விடுவதில் எகிப்தின் சர்வதிகாரம் வெற்றி கண்டாலும் அதனை அழிப்பது ஒரு போதும் சாத்தியமற்றது.இந்த வகையில் இந்தப் போராட்டத்தினூடாக இஸ்லாமிய தஃவா சாதித்துக் கொள்ள முடியும் என எதிர் பார்க்கப் படுகின்ற விடயங்களை பதினைந்து அடிப்படைகளில் ஷெய்க் றாஷித் அவர்கள் இந்நூலின் இறுதியில் தொகுத்து குறிப்பிடுகிறார்.
   அதே போன்று இந்நூலின் பெரும் பகுதியை பிடித்துள்ள விடயம்தான் இந்தப் புரட்சியின் பின்னணிணில் இயங்கியவர்களை அடையாளப்படுத்தல் என்ற விடயம்.அமெரிக்கா,இஸ்ரேல்,ஈரான்,வலைகுடா நாடுகள்,மதச்சார்பற்ற சக்திகள்,போலி இஸ்லாமிய வாதிகள்,கிப்திய கிறிஸ்த்தவர்கள் என எகிப்தில் இஸ்லாமிய வாதிகளின் ஆட்சியை வீழ்த்த துணை நின்ற அணைத்து சக்திகளும், அவற்றின் ஈனத்தனமான செயற்பாடுகளுடன் இங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.இங்கு பணத்துக்கு விலை போன,விலை கொடுத்து வாங்கிய அனைவரும் அவர்களது பின்னணிகளுடன் திரை கிழிக்கப்படுகிறார்கள்.அறபு இஸ்லாமிய உலகிலும்,உலகின் ஏனைய பாகங்களிலும் அமெரிக்க,ஸியோனிஸ அரசியல் எப்படி செயற்படுகிறது என்பதற்கான ஒரு பெறும் தெளிவை எகிப்திய இராணுவப் புரட்சி வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்நூல் பெற்றுத் தருகின்றது.பாகிஸதானின் பிரதமராக இருந்த அலி புட்டோவின் மகள் பெனாஸிர் புட்டோவின் டயரிக் குறிப்பொன்றின் ஊடாக இந்த விடயம் மிகவும் எளிமையாக விளக்கப்படுகிறது.தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் வசித்த பெனாஸிரை அமெரிக்க வெளியுறவுத்துறையை சார்ந்த சில அதிகாரிகள் சந்தித்து பகிஸ்தானின் பிரதமராக பெனாஸிர் வருவது தொடர்பிலான அவரது விருப்பத்தை கோரியுள்ளனர்.இதன்போது அரசியல் அனுபவமோ கட்சியோ மக்களாதரவோ இல்லாத தான் எப்படி பிரதமராக வரலாம் என அவர் வினாத் தொடுத்துள்ளார்.அதற்கு அவ்வதிகாரிகள் தங்களது விருப்பம் மாத்திரமே எமக்குத் தேவை மற்றயதை நாம் பார்க்கிறோம் என்றிருக்கின்றனர்.பிறகு அவர் பாகிஸ்தான் போய் இறங்கும் போது அவரது பெயர் சொல்லி கோஷமெழுப்பும் பல்லாயிரக் கணக்கானோர் தன்னை விமான நிலையத்துக்கு வெளியே வரவேற்க காத்திருந்ததாக குறிப்பிடும் அவர்,அன்றுதான் உலக அரசியலை தான் சரியாக விளங்கிக் கொண்டதாக அவரது டயரிக் குறிப்பு குறிப்பிடுகிறது.இதுதான் உலக நாடுகளிலுள்ள ஜனநாயக ஆட்சியின் இரகசியம் என்பதை நாம் அறிய வரும் போது அத்தனை அரசியல் வாதிகள் மீதும் காறி உமிழ வேண்டும் போலிருக்கிறது.
     மொத்தத்தில் எகிப்திய இராணுவப் புரட்சியுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு அறிக்கைகளையும் ஆய்வுகளையும் பின்னிணைப்பாகக் கொண்ட இந்நூல் 255 பக்கங்களைக் கொண்டது.இது இன்று எகிப்திலும் இஸ்லாமிய உலகிலும் நடக்கும் நிகழ்வுகளை நம்பிக்கையுடன் நோக்க வழி செய்கிறது.இஸ்லாத்திற்காக உழைப்போராலும் சமூகத்தை தலைமை தாங்கி வழி நடாத்த முற்படுவோராலும் கட்டாயம் படிக்கப்பட வேண்டிய ஒரு நூலாக இது காணப்படுகிறது.எமது நாட்டிலும் எம்மைச் சூழ நடப்பவற்றை புரிந்து கொள்வதற்கான ஒரு பின்னணியை இந்நூல் எமக்குப் பெற்றுத்தருகிறது.ஒரு முஸ்லிம் எங்கு வாழ்ந்த போதிலும் இந்தப் போராட்டத்தை நம்பிக்கையுடன் நோக்குவதும் விளக்குவதும் அதற்காக தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதும் அவன் மீதுள்ள கடமையாகும்.உண்மையில் இது ஒரு முஸ்லிமின் கடமை மாத்திரமல்ல மனித சமூகத்திற்கு சுபீட்சத்தை விரும்பும் ஒவ் வொருவரதும் கடமை என்பதை இன்றைய நிகழ்வுகள் எமக்கு உறுதிப்படுத்திக் கொண்டுள்ளன.
    அந்த வகையில் இந்நூலின் மொழி பெயர்கப்பட்டுள்ள ஆரம்பப்பகுதிகளையும் அடுத்தடுத்த பகுதிகளைம் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த நாட்களில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். 

Friday, October 4, 2013

பிறை விவகாரம்-நாம் எப்படிப் பார்க்க வேண்டும்,தலைமை எப்படி நடக்க வேண்டும்?

August 8, 2013 at 6:27pm
அதிகாலை ஸஹர் நேரம் முதல் தொலைபேசி அழைப்பு:சேர் ஊர்ல ஒரே குழப்பமாய் உள்ளது நோன்பு பிடிக்க முடியுமா? இது கிழக்குக்கு வெளியில் இருந்து வந்த ஓர் அழைப்பு...ஆம் கட்டாயம் பிடிக்கத்தானே வேண்டும் இதில் தலைமையின் முடிவுதான் முடிவு...அந்த நேரம் முதல் நோன்பை விடவா என கேட்டு வந்த எனது மாணவியர் முதல் சகோதரர்கள் அனைவரதும் அழைப்புகளுக்கெல்லாம் எனது பதில் அதுவாகத்தான் இருந்தது...எனக்கு பக்கத்தில் வசிக்கும் எனது நண்பர் ஒருவரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட வண்ணம் சுபஹுக்கு பின்னர் வந்தார்...அவர் வரும் போதே விடயம் என்னவென்று தெரியும்...நான் மிகவும் நிதானமாக வெளியே சென்றேன்...அவர் என்ன நிலைப்பாடு என்றார்...தலைமையின் முடிவுதான் முடிவு என்றேன்...கிண்ணியாவில் கொண்டாடுகிறார்களாமே....அது அவரகளது முடிவு...நாம் தலைமையை பின்பற்றுவதுதான் ஷரீஆ என்றேன்...அவர் கோபவயப்பட்டவராக...நீங்க என்ன பொது மகனுக்கு சொல்வதை சொல்கிறீர்கள்...என்றார்...இல்லை,இந்த விடயத்தில் ஷரீஆ அணுகுமுறையைத்தான் சொல்கிறேன் என்றேன்...பிறகு நீண்ட உரையாடலில்...ஜம்இய்யா இதனை சமூகத்துக்கு விளக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் அவர் விடை பெற்றார்.
      ழுஹர் தொழுகை முடிந்து பள்ளிக்கு வெளியே உரையாடல்....சிலர் இன்று நோன்பு பிடிப்பது ஹராம் என்றனர்...நான் கேட்டேன்...நீங்கள் அதனை எப்படி தீர்மானிப்பீர்கள்?...காலையில் வந்த நண்பர் சொன்னார்...நோன்பை விட்டவர்களை பிழை சொல்ல முடியாதென...இல்லை அவர்கள் விட்டால் பிழை...இது தலைமை எடுக்கும் முடிவுதான்...வேண்டுமென்றால் தலைமை இப்போது எமது முடிவு பிழை நீங்கள் நோன்பை விடுங்கள் என்றால் விடலாம்...இல்லாத போது முடியாது என்றேன்...
   இங்கு நான் சொல்ல வந்த விடயம் நாம் பொதுமகனாய் எப்படி விடயத்தை பார்க்க வேண்டும் என்பதனைத்தான்...இப்படியான விவகாரங்களில் தலைமையின் முடிவினையே நாம் பின்பற்ற வேண்டும்.இத்தகைய விவகாரங்களில் தலைமைதான் முடிவெடுக்கும் தனிமனிதர்களல்ல...தனிமனிதர்கள் முடிவெடுத்தால்...வீட்டுக்கு வீடு பெருநாளும் நோன்பும் வித்தியாசப்படும்...தலைமை இதில் தவறு இழைக்கழாமா என்றால் நிச்சயம் சாத்தியம் உண்டு...ஆனால் அதற்காய் தலைமையை தூக்கி எறிந்துவிட முடியாது...நஸீஹத் செய்யலாம்..கட்டுப்படுவதுடன் இணைந்து அது நடக்க வேண்டும்...இந்த விவகாரம் -மஃஸியா-என்ற வட்டத்தில் வருவதல்ல...இது இஜ்திஹாதில் வரும் தவறு...இதில் கட்டுப்படுவதில் தவறு கிடையாது...மாற்றமாக கட்டுப்படாதிருப்பதே பாவம்...
    நாம் இந்த விவகாரத்தில் கவனிக்க வேண்டிய விடயம் நாம் உம்மதுத்தஃவா -தஃவா சமூகம்...நாம் வெறும் உம்மதுர்ரஹபனா-கிரியைகள் புரியும் துறவுச்சமூகமல்ல...நாம் இஸ்லாத்தை கிரியை கண்ணோட்டத்தல் மாத்திரம் பார்ப்பதே நிறைய நாம் குழம்பிப் போவதற்குக் காரணம்...என்னிடத்தில இவ்விவகாரத்தில் தெளிவு கேட்டவர்களுள்...ஆன்மீகம் மிகைத்த ஒருவர் நோன்பை விட்டதாகச் சொன்னார்...நிச்சயமாய் அவர் விடுவார் ஏனெனில் அவரில் இஸ்லாத்தை அப்படிப்பார்க்கும் போக்கே மிகைத்துள்ளது...தலைமை-கட்டுப்பாடு -ஷுறா -இஜ்மா-நஸீஹத்...இவை எல்லாம் இஸ்லாத்தை சமூகமாய்,தஃவாவாய் பார்க்காதவர்களால் விளங்கிக் கொள்ள முடியாதவை...
   இங்கு தலைமைக்கு கட்டுப்படுவதுதான் இபாதத் என்பதை பலருக்கு விளங்குவது கடினம்...அதற்கு மாறு செய்வதுதான் பாவம் என்பதை விளங்குவது கடினம்...எனவே இஸ்லாம் பற்றிய எமது பார்வை மாறவேண்டியுள்ளது...இந்தப் பெருநாள் வெறும் தொழுகையல்ல தூது-குர்ஆன் கிடைத்தமையை கொண்டாடுதல்...தூதுக்காய் உழைப்பவன் சற்று களைப்பாறுதல்....இந்த உண்மையை சமூகம் விளங்குமா?!
..................................................................................
  அடுத்து இந்த விவகாரத்தை தலைமை எப்படி கையாண்டிருக்கலாம்?
    இந்த விடயத்தை ஒரு பிரதேச சமூகமும் அதன் தலைமைகளுமே உருதிப்படுத்தும் வேலையில் எமது நிபந்தனைகளில் இருந்து வெளியில் சென்று அதனை நீண்ட கலந்துரையாடலுக்கு உற்படுத்தி அழகான ஒரு முடிவுக்கு வந்திருக்க முடியும் என்பது இந்த விவகாரத்தின் இரு பகுதியையும் பாரக்கும் போது கிடைக்கின்ற பதில்...யாரும் தவறு விடலாம் என்ற வகையில் இந்த இடத்தில் நாம் தவறிவிட்டோமோ என எண்ணத் தோன்றுகிறது...
...அடுத்து இந்த விவகாரத்தை நேற்று இரவே விளக்கியிருக்கலாம் எனினும் பிந்தியாவது நீண்ட தாமதமின்றி விளக்கியது சிறந்தது
....ஆனால்,அது தலைமையொன்றின் நிதானமான விளக்கமாக அமையாமை கவலையை தந்தது.
....தலைமை எப்போதும் நிதானமாய் விவகாரங்களை அணுக வேண்டும்...இந்த உறையை கேட்ட போது எனக்கு பல வருடங்களாக பழக்கப்பட்ட ஒருவரின் தொணி நினைவில் வருவதை தவிர்க்க முடியாமல் இருந்தது...இதனை எனது நண்பர் ஒருவரும் பதிவொன்றில் குறித்திருந்தார்...அந்தத் தொணி 200,300 மாணவர்களுக்கு சரிவரலாம்..அதுவும் இன்று வழக்கொழிந்து விட்டது...ஆனால் ஒரு சமூகத்தை வழிநடாத்த பயன் தரமாட்டாது...
....ஜம்இய்யாவுக்கு தனது கிளைகளுடன் எவ்வளவு சரியான தொடர்புள்ளது என்ற கேள்வி இங்கு எழுவதை தவிர்க்க முடியவில்லை...ஒரு கிளையின் தலைவர் அதுவும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசக்கிளையின் தலைவர் யாரென் தேசியத் தலைவருக்கு தெரியாதிருப்பது வருந்தத்தக்கது...
....நான் என்ற தோறனையில் பேச்சு அமைந்தமை காட்டமாக இருந்தது...குர்ஆன் கூட அப்படிப் பேசுவதில்லை..நாம் குர்ஆனிய மாதத்தின் இருதியில் இருக்கிறோம் ...அதன் அணுகுமுறை எம்மில் சிறு சாயலையாவது காட்டியிருக்க வேண்டும்...
...யாரும் என்னை விமர்சித்தது கிடையாது...என்ற தோரனையில் பேச்சு இருந்தது...யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களல்லர்...இதில் நாம் முன்மாதிரியாய் அவற்றை ஏற்கத் தெரிய வேண்டும்..
....அடுத்து விளக்கம் தேவைப்பட்ட விடயம் பேசப்படவில்லை...இது எமது உலமாக்களது முன்வைப்பு முறையிலுள்ள பெரும் குறைபாடு....இதன் விளைவுகளை கடந்த காலங்களில் நன்றாகவே அணுபவித்தோம்...
....கிண்ணியாவில் என்ன நடந்தது?அது பற்றிய நிலைப்பாடு என்ன? நாம் இதனை எப்படி அணுக வேண்டும்?இதில் எம்மிலும் பிழை நேர்ந்திருக்க வாய்ப்புள்ளது...என்று அழகாக விடயத்தை விளக்கியிருக்கலாம்...ஆனால,அவர் பேசிய சில வாரத்தைகள் கண்டிக்கத்தக்கது..சுனாமியில் நாங்க தேவை இதற்கு தேவையில்லையா என்ற தொணி மனதுகளை புண்படுத்துவதாய் இருந்தது...அங்குள்ள சகோதரர்களும் வேண்டாம் பிள்ளைத்தனமாக இவ்விவகாரத்தை அணுகவில்லை...அவர்களது அணுகுமுறையிலும் நியாயமுள்ளது...எனவே எல்லோருக்குமான தலைமை விடயங்களை கவனமாய் அணுக வேண்டும்
.....இது எனது நஸீஹத்கள்...சமூகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு செல்ல வேண்டிய இத் தருணத்தில் கவனமாய் நடக்க வேண்டியுள்ளது...இது சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகத்தை வேறருக்கும் சூழ்ச்சிகளின் உச்ச தருணம் ...எனவே நாம் இணைவுகளை நோக்கி சமூகத்தை கவனமாய் வழி நடாத்த வேண்டும்

1000 பாடசாலை திட்டத்தில் முஸ்லிம் தனித்துவ பாடசாலைகளின் நிலை யாது?


July 17, 2011 at 11:41am
ஆரம்பப்பாடசாலை,இடைநிலைப்பாடசாலை,உயர்தரப்பாடசாலை என பொதுவாக பாடசாலைகள் பிரிக்கப்படப்போவதாக கூறுகிறார்கள். இதன் போது தெற்கில் சிதறிய அமைப்பில் காணப்படும் முஸ்லிம் மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்கு போகவேண்டிய நிலை வந்தால் அதன் சாதக பாதகங்கள் யாது?..... இங்கு அரசின் இந்த திட்டத்தில் நிறைய நலன்கள் உள்ளன..நாம் முஸ்லிம்கள் என்ற வகையில்தான் கலாச்சார சிக்கல்கள் காணப்படுகின்றன.பல்கலைக்கழக மாணவர்களுக்கான பயிற்சிகளின் போது கூட பல பயிற்றுவிப்பாளர்களால் எமது கலாசார விடயங்கள் கேலி செய்யப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.இந்த நிகழ்வுகள் முன்னெடுப்புக்களில் இருந்து அரசு தான் ஏலவே சொன்ன தேசிய கல்விக்கொள்கை ஒன்றை கட்டியெழுப்ப விரும்புகிறது என விளங்குகிறது. மேற்கின் திறந்த கலாசாரத்தினடியாக கட்டியெழுப்பப் பட்டுள்ள கல்வித்திட்டத்தைப் பார்க்கிலும் இது சிறந்ததுதான்.எனினும் சிறுபான்மையான நாம் இயன்றவரை நமது தனித்துவத்தை பேணவேண்டியுள்ளது.
எனவே நமது உரிமைப்போராட்டங்களை வெறும் பெயர்களுக்கும் வெளித் தோற்றங்களுக்குமான போராட்டமாக அல்லாமல் பண்புகள் ,பெறுமானங்கள்,சிந்தனைகளுக்கான போராட்டங்களாக மாற்றலாம்.இதில் நாம் இன அடையாளங்களுக்கு அப்பாலும் பலரை இணைத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக, இங்கு பாடசாலை மறுசீரமைப்பில் முஸ்லிம் பெயர்தாங்கிய ஆண் பெண் கலவன் பாடசாலைகளை தக்கவைக்க போராடுவதை விட்டு விட்டு இஸ்லாத்தின் பெறுமானத்தை வைத்து ஆண் பெண் வேறு வேறாக கற்கும் நிலையை உருவாக்கப் போராடலாம். பல்கழலைக்கழக பயிற்சிகளிலும் இதே விடயத்தையே முன் கொண்டு செல்வது சிறந்தது.
இப்படி நிறைய விடயங்களை சிந்திக்க வேண்டிய சூழலே முன்னால் வருகிறது.வேறுமனே பெயர்களுக்காகவும் வெளித் தோற்றங்களுக்காகவும் போராடி பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்வதோடு,போராடிப் பெற்ற பெயர்களை வைத்து எமது பெறுமானங்களை பேணிக் கொள்ள முடியாமல் சீரழிவதை விட பெறுமானங்களை வென்றெடுக்கும் நேர்மையான சக்தியாக முஸ்லிம்கள் தம்மை அடையாளப் படுத்திக் கொள்வோம் உண்மையில் முஸ்லிம் என்பவன் இனத்தால் அல்ல பண்பாலே அடையாளப் படுத்தப்பட வேண்டியவன்.

ஹலால் அடுத்து என்ன?


   நாம் இந்தப் பத்தியில் அடுத்து இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் குறித்து எவ்வாறு பேசுவது என்பது தொடர்பில் சில விடயங்களை பரிமார இருந்தோம்.எனினும் அதற்கு முன்னர் மிகவும் சூடேற்றப்பற்று தமக்கேற்றாற் போல் தணிக்கப்பட்ட ஹலால் தொடர்பில் சில கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம் என எண்ணுகிறோம்.
    இந்த விடயம் தொடர்பாக நாம் மிகத் தெளிவாக பிற சமுகத்திற்கு சொல்வதில் வெற்றி பெற்றோமா?இந்த விடயத்தை கையாள்வதில் ஒரு திட்டமிட்ட அணுகு முறையில் நகர்ந்தோமா?என எழுகின்ற பல கேள்விகளுக்கு அப்பால் நாம் இப்போது உருவாகியுள்ள சூழலை எவ்வாறு சாதகமாய் எதிர்கொள்வது என்பதனை நன்கு திட்டமிட வேண்டியுள்ளோம்.
  நாம் முதலிலேயே தெளிவாகவும் சகல தரப்பு சார்ந்தும் திடமான ஒரு நகர்வை செய்திருந்தால் இந்த விவகாரத்தை நாம் வேறு திக்கில் நகர்த்தியிருக்க முடியும்.எம்மை நோக்கிய எதிர்ப்பை எம்முடனான மோதலை வேறு புள்ளியை நோக்கி நகர்தியிருக்க முடியும்.எனினும் நமது உரையாடலை ஒரு சில தரப்புடன் சுருக்கிக் கொண்டோம்.ஒரு கோண அணுகுமுறையே எம்மை பொறிக்குள் சிக்குண்ட வைத்ததுவோ என சிந்திக்கத் தோன்றுகின்றது.
   முதலில் ஹலால் சான்றிதலால் ஏற்படும் பிரச்சினை என்ன என்பதை தெளிவாகவும் விஞ்ஞான புர்வமாகவும் சொல்லுங்கள் அதனை நிவர்த்திப்பது தொடர்பில் நாம் சிந்திக்கலாம் என கோரியிருக்கலாம்.
    1-பன்சலைக்கு கொண்டு போக முடியாது-நாம் படையல் செய்வதில்லை,நாம் பெயர் கூறி அறுப்பது மிருகங்களை அதனை நீங்கள் கொண்டு போவதில்லையே.....
  2- பணம் சார் விடயத்தை மிகத் தெளிவாக பொது மக்களுக்கு விளக்கியிருக்கலாம்...
3-ஹலால் சான்றிதல் சமூகத்தை சேர்ந்து வாழ வைக்கிறதே தவிர பிரிக்கவில்லை...அது இல்லாத போது முஸ்லிம் சமூகம் அதன் முக்கியத்துவத்தை உணருகின்ற படியால் தெளிவற்ற நிறையவற்றை தவிர்ந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படும்.இதனால் சகஜமான வாழ்வில் பாதிப்பேற்படும்...
4-ஹலால் இலட்சினை பொறிக்கப்பட்டது பௌத்தத்தில் தடை என எங்காவது உள்ளதா?
    இப்படி பல கோணங்களில் பொது மக்களை மையப்படுத்தி எமது கருத்துக்களை நகர்த்தியிருக்க முடியும்.ஆனால் BBS தமது வதந்திகளை பரப்ப பொது மக்களையும் ஊடகங்களையும் நோக்காய் கொண்டிருந்த வேளை நாம் குறித்த ஒரு தரப்பை மூடிய நிலையில் சந்திப்பதையே நகர்வாய் கொண்டிருந்தோம்..பின்னர் இன் நிலையில் சிறு மாற்றம் வந்த போதும் நிலமை கை தவறிச் சென்றிருந்தது.எமது இலககு பொது மக்களை நோக்கி இன்னும் திரும்பவில்லை.
    அடுத்த நகர்வாய் ஹலால் இலட்சினையை தற்காலிகமாக கொந்தளிப்பை காரணம் காட்டி முழுமையாக அதனை உடனடியாக நிறுத்தியிருக்க முடியும்.இதனால் பிரச்சினையை இன்னோர் புள்ளிக்கு நகர்த்தியிருக்கலாம்.மோதல் நிலை வர்த்தக சம்மேளனத்துக்கும் BBS இற்கும் இடையிலானதாக, BBS இற்கும் அரசுக்குமிடையிலானதாக,அரசுக்கும் வர்த்தகர்களுக்குமிடையிலானதாக...என பல கோணங்களில் நகர இடமிருந்தது.இது இஸ்லாம் எமக்கு காட்டும் பிரச்சினையை நகர்த்தும் பொறிமுறை.இதனை சிலரை சிலருடன் மோதவிடுவதனூடாக உலகில் நலவை காப்பதாக வரும் வசனத்தை வைத்து ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி அவரது நூலொன்றில் விளக்குகிறார்.ஆனால்,அந்த அரசியல் முதிர்வை இன்னும் அடையவில்லை.அதனை கவனமாக அரசு இந்த விவகாரத்தில் கையாண்டது என்பதனையும் நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
    அதுவெல்லாம் போக நாம் ஒரு வித்தியாசமான பொறிக்குள் இப்போது இருக்கின்றோம்.அதனை எப்படி சாதகமாக்கலாம் என்பதனை சற்று நாம் இப்போது சிந்திக்க வேண்டும்.நமது இந்த நகர்வு ஹுதைபியாவுக்க ஒப்பிடப் படுகிறதெனின் எம்மிடம் நாம் இருக்கும் நிலையிலிருந்து பத்து மடங்கு முன் நகரும் பொறிமுறையொன்று ,திட்டமிடலொன்று நிச்சயம் அவசியப்படுகிறது.அப்படித்தான் ஹுதைபியா காணப்பட்டது.அது வெறும் விட்டுக் கொடுப்பும் தாழ்ந்து போதலுமல்ல மாற்றமாக வார்த்தைகளை விட்டுக் கொடுத்து இலக்கை நோக்கிய நகர்விற்கான தூர நோக்குடன் செய்யப்பட்ட உடன்பாடு.இதனை ஸுரா பத்ஹ் மிக அழகாக விளக்குகிறது.அது முஸ்லிம் சமூகத்தை அரசியல் முதிர்ச்சி நிலையை நோக்கி நகர்த்திய உடன்படிக்கை.அடுத்து ஹுதைபியா வெற்றியென்பது நபியவர்களின் உருவாக்கத்திற்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ்(அவர்கள் மரத்தின் கீழ் உடன்படிக்கை செய்த போது அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான்).அங்கு வெற்றிக்குறிய பண்புகள் கொண்ட மனிதர்களை அரசியல் போராட்ட நிலையை நோக்கி நகர்த்தியமைதான் ஹுதைபியாவின் வெற்றி.எனவே அதன் பின் இஸ்லாத்தில் இணைந்தோர் பத்து மடங்காய் அதிகரித்தனர்.சூழ்ச்சியில் ஈடுபட்ட யுத சக்தி அறபுத் தீபகற்பத்திலிருந்து இறுதியாய் துடைத்தெறியப்பட்டது.சர்வதேச அளவில் ஆட்சியாளர்களுக்கு தூது கொண்டு செல்லப்பட்டது...இறுதியாய் மக்கா இரத்தம் சிந்தா படையெடுப்பால் வெற்றி கொள்ளப்பட்டது...
  நாம் நமது விட்டுக் கொடுப்பை ஹுதைபியாவுக்கு ஒப்பிடையில் இந்த பிண்ணனிகளையெல்லாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.எம்மிடம் ஒரு வழக்கமிருக்கிறது,நமது நிலைப்பாடுகளை ஆதரிக்க வெளிப்படையில் ஒன்றிப்போகும் விடயங்களை நாம் இலேசாக தூக்கிச் சொல்லி விடுவோம்.ஆனால் அந்த விடயத்துக்கும் எமது நிலைப்பாடுகளுக்குமிடையே பாரிய வேறுபாடு காணப்படும்.
   நபியவர்களது தஃவா வெறும் அற்புதங்களாலும் நப்பாசைகளாலும் நிறைந்ததல்ல.மாற்றமாக அதில் மனித முயற்சிக்குறிய தேவை அடிப்படையில் காணப்பட்டது.இதுதான் இஸ்லாத்தின் இயல்பு .நாம் உழைக்காது விட்டால் இஸ்லாம் வெற்றி பெற மாட்டாது.அந்த வகையில் எமது அடுத்த நகர்வை பிரார்த்தனைகளுடன் மாத்திரம் நிறுத்திவிடாது திட்டமிட்டு செயற்பட வேண்டும்.சத்தியத்திற்குத்தான் உலகில் இடம் அசத்தியத்திற்கில்லை என்பதை ஆழ மனதில் பதித்துக் கொண்டு அடுத்த எட்டை சிந்தியுங்கள்.
   அடுத்து நாம் என்ன செய்யலாம்?
      1-இதனை நமது உற்பத்திகளை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பாய் பயன் படுத்தலாம்.
  2-நமது உற்பத்திகளை நுகரலாம்
 3-நமது நுகர்வு மோகத்தை குறைத்து எமது பொருளாதாரத்தை தன்நிறைவுப் பொருளாதாரமாக மாற்றுவதற்கு குடும்ப ரீதியாக ,பிரதேச ரீதியாக ,நிறுவன ரீதியாக சிந்திக்கலாம்.(குடும்பத்துக்கு தேவையான பிஸ்கட்டை வீட்டில் தயாரித்தல்...பிஸ்கட்டை நமது உள்ளுர் பேகரி தயாரிப்பாளரை வைத்து தயாரித்தல்...பழச்சாறு....)...இதன் அடுத்த விளைவு பல்தேசிய கம்பனிகள் பிற தயாரிப்புகளில் இருந்து நாம் விடுதலை பெறுதலும் ...அவர்கள் மீண்டும் ஹலால் தேடி எம்மை நாடி வருதலும்..
4-வியாபாரிகள் நமது மற்றும் நம்பகமான பொருட்களை மாத்திரம் கடைகளுக்கு விற்பனைக்காக வாங்குதல்...
5-ஹலாலை இஸ்லாத்தை விளக்குவதற்கான ஒரு ஊடகமாக பயன்படுத்தல்..
         இப்படி நாம் சரியாக திட்டமிட்டு ஒரு மாதம் செய்தாலே நிலமை தலை கீழாய் மாறும் வாய்ப்புக்கள் வரலாம்....இங்கு நாம் அரசியல் ஆடு களங்களை நன்கு விளங்கி காய் நகர்த்த வேண்டும்...
         மீண்டும் சந்திப்போம்...இவை பற்றிய உங்களது கருத்துக்களையும் பகிரும் போது நல்லதோர் கருத்தை வடிவமைக்கலாம்...அல்லாஹ்வே போதுமானவன்.
 

” ஹலால் தெளிவாயுள்ளது,ஹராமும் தெளிவாயுள்ளது.அவற்றிற்கிடையே தெளிவற்ற சில விடயங்களும் காணப்படுகின்றன.அவற்றை அதிகமான மனிதர்கள் அறியமாட்டார்கள்....” 
"யார் ஜாஹிலிய்யத்தை விளங்காமல் இஸ்லாத்தில் மாத்திரம் வளர்ந்தாரோ அவர் இஸ்லாத்தை துண்டு துண்டாக உடைப்பார் என்ற உமர் (றழி) கூற்றை இங்கு நினைவு படுத்தாமல் இருக்க முடியாது."

Wednesday, June 30, 2010

மௌலானா மௌதூதியின் பார்வையில் தப்லீக் ஜமாஅத்

கலாநிதி நூர் முஹம்மத் ஜுமுஆ
தமிழில்: எம்.என். இக்ராம்
இஸ்லாமிய எழுச்சியின் ஆரம்பத்தை நாம் நோக்கும்போது அது அறபு இஸ்லா மிய உலகு, இந்தியா, துருக்கி போன்ற பல்வேறு இடங்களிலுமிருந்து தோற்றம் பெற்றிருப்பதைக் காணலாம்.
இந்த எழுச்சியைத் தோற்றுவித்த அதன் ஆரம்பப் பரம்பரையினரை நாம் பார்க்கின்றபோது பல்வேறு ஜமாஅத்துக்களையும் தோற்று வித்த அவர்களிடம் ஒரே வகையான பண்புகள் இருந்திருப்பதைக் காண்கிறோம். அன்பு, சகோதரத்துவம், தூய்மை, உண்மை, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பிரார்த் தித்துக் கொள்ளுதல் போன்ற உயர்ந்த பண்புகள் அவர்களிடம் காணப் பட்டிருக் கின்றன.
இதற்கான ஓர் உதாரணத்தை இமாம் மௌதூதியிடம் நாம் காண்கிறோம். அன்று பாகிஸ்தானி லும் இந்தியாவிலும் இயங்கிவந்த ஜமாஅத்தே இஸ்லாமியின் உத்தி யோகபூர்வப் பத்திரிகையாக இருந்த தர்ஜுமானுல் குர்ஆன்சஞ்சிகையில் தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகரின் பாசறையில் சில நாட்கள்என்ற தலைப்பில் இமாம் மௌதூதி அவர்கள் ஒரு கட்டுரையை எழுதி வந்தார். அதில் சில பகுதிகளை நாம் அவரது வார்த்தையிலேயே இங்கு நோக்கலாம்.
இந்தியாவின் தலைநகரான டில்லிக்கு அருகாமையில் உள்ள மேவாத் எனும் பிரதேசத்தைத் தரிசிக்கும் வாய்ப்பொன்று எனக்குக் கிடைத்தது. இதற்கு முன்னர் நான் இந்தப் பிரதேசத்தில் முஹம்மத் இல்யாஸ் கான் திஹ்லவியின் தலைமை யில் இஸ்லாமிய எழுச்சி யொன்று பரவிக்கொண்டிருக்கும் செய்தியைக் கேள்விப் பட்டிருக்கின்றேன். அந்த எழுச்சி அந்தப் பிரதேசத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருப்பதாகவும் அறிந்தேன். எனவே, இந்த சலனமற்ற மௌன சீர்திருத்தப் புரட்சியின் விளைவுகளைக் காண்பதற்கு நான் பெரும் தாகத்துடன் இருந்தேன்.
புவியியல் ரீதியாக மேவாத்; டில்லி, அல்வர், ஜோர்ஜ்ஜானா, போன்ற பல பிரதேசங் களை எல்லை களாகக் கொண்ட பெரும் பரப்புள்ள ஒரு பிரதேசம். எனது அறிவின்படி அஷ்ஷெய்க் நிழாமுத்தீன் மஹ்பூப் இலாஹியுடையதும் அவரது சகாக் களதும் முயற்சியினால்தான் இங்கு இஸ்லாம் பரவியிருக்கின்றது. எனி னும் வினசத்திற்குரிய விடயம்; இந்த அத்தனை முயற்சிகளும் இஸ்லாமிய அரசுகளின் பொடுபோக்குத் தனத்தால் வீணாகிப் போய் விட்டன.
இந்தப் பிரதேச மக்கள் தலை நகருக்கு மிக அருகாமையில் இருந்தபோதும் அறியாமையின் பிடிக்குள்ளும் கோத்திர வழக்காறுகளின் இருளுக்குள்ளும் நீண்ட பல வருடங்களாக மூழ்கிப் போயினர். காலப் போக்கில் இந்தப் பிரதேசத்தில் இஸ் லாத்தின் அடையாளங்கள் படிப்படியாக மங்கிப் போயின. இறுதியில் அதன் எந்த எச்சசொச்சங்களும் இல்லாமல் அழிந்துபோயின. அங்குள்ளவர்களுக்கும் தாம் முஸ்லிம்கள் என்பதைத் தவிர வேறெதுவுமே தெரியாத நிலை உருவாகியிருந் தது.
இஸ்லாத்தின் தோற்றங்களோ அடையாளங்களோ அங்கு காணப் படவில்லை. ஷஹாதத் கலிமாவை மொழியத் தெரிந்த ஒரு கிராமவாசி கூட இருக்கவில்லை. இந்நிலையில் தொழுகை பற்றியும் ஏனைய இஸ்லாமிய கடமைகள் பற்றியும் அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்களா என்பது பற்றி நாம் பேச வேண்டியதே கிடையாது.
அவர்களிடம் ஜாஹிலிய்ய அறியாமையின் அனைத்து அடையாளங்களும் காணப் பட்டன. ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட நிர்வாண கோலத்திலிருந்தார்கள். அவர்கள் தங்களுக்கிடையே எந்த வெட்க உணர்வுமின்றி கலந்து பழகினார்கள். களவு, வழிப்பறிக் கொள்ளை, பொய், ஏமாற்று, வஞ்ச கம், விபச்சாரம் என சீர்கேட்டுக் கும் பின்னடைவுக்குமான என்னென்ன அடையாளங்கள் தேவையோ அவை அத்த னையையும் அங்கே காண முடியுமாக இருந்தது.
இத்தகைய காரிருள் நிறைந்த ஜாஹிலிய்யத் அலை மோதுகின்ற ஒரு சூழலில் தான் அஷ்ஷெய்க் இல்யாஸ் அவர்கள் அந்தப் பிர தேசத்தில் தனது முயற்சியை மேற் கொண்டார்கள். தனது கடும் பிரயத்தனத்தினால் அங்கே ஒன்றன்பின் ஒன் றாக இஸ்லாத்தின் மெழுகு வர்த்திகளை ஏற்றிவைத்தார்கள். முதலில் அவர் அல்லாஹ்வை நோக்கி மனிதர்களை அழைக்க ஆரம்பித்தார்கள். ஜாஹிலிய்யத் தின் அனைத்து வடிவங்களையும் கொண்டிருந்த இப்பிரதேச மக்களிடையே ஒரு சிறு காலப்பகுதிக்குள்ளால் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திவிட அவர்களால் முடியுமாக இருந்தது.
இப்போது அங்குள்ள சிறுவர்களுக்கு ஒழுக்கத்தையும் அடிப்படைப் பண்பாடுகளை யும் சுத்தத்தையும் மார்க்கத்தையும் என வாழ்வின் அரிச்சுவடிகளைக் கற்றுக் கொடுப்பதற்காக 250 பாடசாலைகள் காணப்படுகின்றன. இந்தப் பாடசாலைகளில் கற்று வெளியேறுபவர்கள் டில்லிக்கு அருகிலுள்ள நிழாமுத்தீன் மஹ்மூத் இலா ஹியினுடைய கிராமத்தில் அமைந்துள்ள சன்மார்க்க பல்லைக்கழகத்தில் சேர்ந்து தமது கல்வியைத் தொடர வாய்ப்பு அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு அறிவு போதிக்கப் படுவதோடு அதனுடன் இணைந்த வகையில் இஸ்லாமிய தர்பிய்யத்தும் கற்பித்தல் பயிற்சி யும் வழங்கப்படுகிறது. சமூகத்திற்கு தஃவாவை முன்வைப்பதற்கும், அங்கு சீர்தி ருத்தத்தை மேற்கொள்வதற்கும் தேவையான கலைகளும் அவர்களுக்குக் கொடுக் கப்படுகிறது. பின்னர் அவர்கள் தஃவாவுக்காகப் பின்தங்கிய பிரதேசங்களுக்கு அனுப்பப்படுகி றார்கள்.
ஷெய்க் இல்யாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அவர்கள் மேற்கொள்ளும் சீர்திருத்தப் பணியினதும் தர்பிய்யத்தினதும் உழைப் பினதும் விளைவுகளை நான் எனது கண்களால் பார்த்தேன். அந்தவகையில், இங்குள்ள சில கிராமங்களில் தொழுகைக்கும் செல்லாத ஒரு சிறு குழந்தையைக் கூட நாம் காண முடியாது. சிறிது காலத்திற்கு முன்னர் ஆடு, மாடுகள் தங்கும் கொட்டில்களாகக் காணப்பட்ட பள்ளிவாசல்கள் அனைத்தும் இன்று ஐந்து வேளையும் அதான் கூறப்பட்டு தொழுகை நடத்தப்படக்கூடிய இடங்களாகக் காணப்படுகின்றன.
ஷெய்க் இல்யாஸ் அந்த நாட் டுப்புற மனிதர்களிடம் தஃவாவுக் கான ஆர்வத்தை உண்டுபண்ணியுள்ளார்கள். சீர்திருத்தத்திற்காக செயற்படும் வேட்கையை உயிர்ப் பித்துள்ளார்கள். ஜாஹிலிய்யத்தினதும் வழிகேட்டினதும் குறியீடுகளாகக் காணப் பட்ட மனிதர்களைப் பண்படுத்தி மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் தாஈக்களாக உயர்த்தியுள்ளார்கள்.

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...