Thursday, November 21, 2013

முன்மாதிரி இஸ்லாமியக் குடும்பம்-02 எம்.என்.இக்ராம்


November 2, 2013 at 11:16pm
  இஸ்லாத்தில் குடும்ப வாழ்வின் முக்கயத்துவம் என்ன?  


  மனித சமூகத்தின் கட்டமைப்பு குடும்பம் என்ற அலகினை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பம் சீராக இருந்தால் சமூகம் சீராக இருக்கும். அது சீர்கெட்டால் சமூகம் சீர்கெட்டு விடும். உண்மையில் குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம். அங்குதான் மனிதன் உயர்ந்த சமூகப் பண்பாடுகளை கற்றுக் கொள்கிறான். குடும்பம் இல்லாவிடின் சமூகம் இருக்க முடியாது. சமூகம் மாத்திரமல்ல குடும்பம் இல்லாவிடின் மனித இனமே இருக்க முடியாது.
        மனிதன் தான் சந்திக்கும் முதலாவதும் ஏகமனதுமான ஒரு சமூக சூழலாக குடும்பம் தான் உள்ளது. மனிதன் தனது பிறப்பு முதல் தனது வாழ்வின் ஒவ்வோர் நகர்விலும் குடும்ப சூழலின் பாதிப்புக்கு உட்படுகிறான். குடும்பத்தின் பாதிப்பை விட்டு தவிர்ந்து வாழும் எந்த மனிதனும் இருக்க முடியாது. இவ்வகையில் மனித சமூகத்தின் தலைவிதியை குடும்பத்தைப் போன்று வேறு எந்த சமூக நிறுவனமும் தீர்மானிக்க முடியாது என்பதை உறுதியாகக் கூறலாம். அவ்வாறு அவை சாதிக்க விரும்பின் குடும்ப அலகின் ஊடாகவே இது இடம்பெற முடியும் என்பதுவும் மிகத் தெளிவான ஓர் உண்மையாகும்.
        எனவேதான் இஸ்லாம் குடும்ப நிறுவனத்துக்கு அதிகூடிய முக்கியத்துவத்தை வழங்கியிருப்பதை நாம் காண்கிறோம். இஸ்லாத்தைப் போன்று குடும்ப நிறுவனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த வேறு எந்தக் கொள்கையையும்,மதத்தையும் நாம் காண முடியாது. இஸ்லாம் குடும்ப உருவாக்கம் எங்கிருந்து துவங்க வேண்டும்? அது எப்படி துவங்க வேண்டும்? அதன் ஷரீஆ ரீதியான வரையறைகள் யாது? அதன் சமூக முக்கியத்துவம் எத்தகையது? குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியிலான உறவு எப்படி அமைய வேண்டும்? குடும்பப் பொருளாதாரம் எந்த வகையில் இருக்க வேண்டும்? என எல்லா வகையிலும் அதன்தொடர்ந்தேர்ச்சையான இருப்புக்குத் தேவையான அனைத்தையும் பற்றிப் பேசியுள்ளது. எந்தளவுக்கெனில் அல்-குர்ஆனில், குடும்பம் பற்றிய சட்டங்கள் மாத்திரமே அதன் கிளைச்சட்டங்களுடன் சேர்த்து பேசப்பட்டுள்ளன.
         அதற்கான காரணம் இஸ்லாமிய சமூக ஒழுங்கில் குடும்பம் அடிப்படை அலகாக உள்ளமையாகும். அதன் மீதுதான் இஸ்லாமிய உம்மத் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எனவே தான் அல்-குர்ஆன் குடும்பத்திற்கு இவ்வளவு பாரிய முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது. ஜாஹிலிய்ய சக்திகளின் தாக்கங்களுக்கு உட்பட்டு அதன் கட்டமைப்பு சீர் குழைந்து விடக் கூடாது என்பதில் அல்-குர்ஆன் கூடிய கவனம் செலுத்துகிறது. எனவே தான் குடும்பம் பற்றி பேசுகின்ற எல்லா வசனங்களும் குடும்பத்தை அல்லாஹ்வுடனும் இறையச்சத்துடனும் தொடர்புபடுத்திப் பேசியிருப்பதை நாம் காண்கிறோம்.
     இஸ்லாமிய சமூக ஒழுங்கு குடும்பக் கட்டமைப்பைக் கொண்டதாகும். இந்த வகையில் தான் இஸ்லாமிய சமூக ஒழுங்கு மனிதனது எல்லா வகையான இயல்புகளையும் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் கவனத்தில் கொண்டமைந்த இயல்பான சமூக ஒழுங்காகக் காணப்படுகின்றது.
          இஸ்லாத்தில் குடும்ப அமைப்பு மனித சமூகத்தில் காணப்படும் இயல்பான ஒரு நிருவனமாக நோக்கப்படுகிறது. மனித இனத்தின் தோற்றத்தின் ஆரம்ப அடிப்படையில் குடும்ப அமைப்பு உருப்பெறுவதாக இஸ்லாம் கருதுகிறது. “நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தோம்.” (தாரியாத்:49) “எல்லாவற்றிலும் சோடிகளைப் படைத்தவன் தூய்மையானவன். புமியில் விளைபவற்றிலும் மனிதர்களிலும் அவர்கள் அறியாதவற்றிலும் இச் சோடிகள் காணப்படுகின்றன.”(யாஸீன்:36)
       அதே போன்று மனித சமூகத்தின் விருத்தியும் ஓர் ஆன்மாவில் இருந்து தோன்றிய ஆதம்,ஹவ்வா என்ற சோடியிலிருந்து தோற்றம் பெற்றதாயும் அவர்களிலிருந்து சந்ததிகள் தோன்றி மனித சமூகம் பரவியதாயும் அல்-குர்ஆன் குறிப்பிடுகிறது.
         “மனிதர்களே! ஓர் ஆன்மாவிலிருந்து உங்களைப் படைத்த உங்களது இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். அந்த ஆன்மாவிலிருந்து அவன் அதன் சோடியைப் படைத்தான். அவர்களிருவரிலுமிருந்து அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். நீங்கள்,தன்னைப் பற்றியும் இரத்த உறவு பற்றியும் உங்களை வினவுகின்ற அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை அவதானிப்பவனாக உள்ளான்.”(நிஸா:01)
     “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். நீங்கள் பரஸ்பரம் அறிமுகமாக வேண்டுமென்பதற்காக உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் மாற்றினோம். அல்லாஹ்விடத்தில் உங்களில் சிறந்தவர் உங்களில் அதிக இறையச்சம் உடையவரே. நிச்சயமாக அல்லாஹ் அறிவுடையவனாகவும் நிபுணத்துவம் மிக்கவனாகவும் உள்ளான்.”(ஹுஜ்ராத்:13)
        அல்லாஹ் ஒரே முறையில் மில்லியன் கணக்கான மனிதர்களை படைக்கும் ஆற்றல் மிக்கவன். என்றாலும் குடும்ப ஒழுங்கினூடாக அது இடம்பெற வேண்டுமென அவன் நாடியிருக்கிறான்.
      அதே போன்று ஆண்-பெண் இரு பாலருக்கும் மத்தியில் காணப்படும் இயல்பான ஈர்ப்பு குடும்ப ஒழுங்கை வலியுறுத்துவதாக இஸ்லாம் கருதுகிறது. மனிதனிடம் காணப்படுகின்ற இயல்பான பாலியல் தேவை ஆணுக்கும் ஆணுக்கும் மத்தியில் அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் இடம் பெறும் மிருகத்தனமான தொடர்பாக அல்லாமல் சீரான குடும்ப ஒழுங்கினூடாக இயல்பாக ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் இடம் பெறும் தொடர்பாக இருக்க வேண்டும் என இஸ்லாம் கருதுகிறது.
    “அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள விடயம் தான் உங்களிலிருந்து நீங்கள் அமைதி பெறுவதற்காக உங்கள் சோடிகளைப் படைத்தமையும் உங்களுக்கு மத்தியில் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியமையும்.”(ரூம்:21)
      ”அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.”(பகரா:187)
 “உங்களது மனைவியர் உங்களது விளை நிலங்கள்.உங்களது விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்.”(பகரா:233) “அல்லாஹ் உங்களது வீடுகளில் உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தினான.”(நஹ்ல்:80)
        மனித இயல்பு தொழிற்படுவதற்கு இஸ்லாம் குடும்ப ஒழுங்கினூடாக இடமளிக்கிறது,இதனூடாக குடும்பம் இயல்பான சமூக ஒழுங்காக மாறுகிறது. இதே ஒழுங்கு பிரபஞ்சத்திலும் காணப்படுகின்றது.அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட இயல்பான இஸ்லாமிய ஒழுங்கும் பிரபஞ்சத்தில் அல்லாஹ்வால் உருவாக்கப்பட்ட ஒழுங்கும் உடன்படுகிறது. இதன் போது உலக வாழ்வு சீராக இயங்குவதற்கான அனைத்து வாயில்களும் திறக்கப்படுகிறது.
       குடும்ப நிறுவனத்தின் இயல்பான இந்தத் தன்மையை சடவாதத்தையும் சியோனிசத்தையும் பின்னணியாகக் கொண்ட சமூகவியல் ஆய்வுகள் மறுக்க முற்படுகின்றன. 'குடும்பம் என்பது ஏனைய சமூக நிறுவனங்களைப் போன்று சமூகத்தின் தேவை கருதி செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட ஒரு சமூக நிறவனம்.அது இயல்பான ஒரு சமூக நிறுவனமல்ல,அது மனித சமூகத்தின் அடிப்படையல்ல. கால ஓட்டத்தில் அது நிலைக்கவும் முடியும், இல்லாமல் போகவும் முடியும்' என அவர்கள் கருதுகின்றனர். இவர்களது இந்த கருத்துச் செல்வாக்கின் காரணமாகத்தான் இன்றைய சடவாத மேற்கு முறைகேடான பாலியல் சாக்கடையில் மூழ்கி சீரழிகிறது. குடும்ப நிறுவனத்திற்கு அவர்கள் இழைத்த துரோகத்தின் விளைவுகளை இன்று அவர்களே அனுபவிக்கின்றனர்.
        அடுத்து, குடும்பம் தான் குழந்தைகளுக்குரிய இயல்பான பராமரிப்புத் தாபனமாகத் திகழ்கிறது. அன்பும் அமைதியும் நிறைந்த சூழலில் குழந்தையை உடல்,உள,ஆன்மீக, அறிவு ரீதியாக பராமரிப்பதில் குடும்பம் பாரிய பங்காற்றுகிறது. மனித சமூகம் தான் நீண்ட குழந்தைப் பருவத்தைக் கொண்டது. அதற்குக் காரணம் அவன் உலகில் சுமந்துள்ள பொறுப்பாகும். “நாம் வானங்கள்,புமி,மலைகள் என்பவற்றிடம் அமானத்தை முன்வைத்தோம். அவை மறுத்தன. மனிதன் அதை சுமந்து கொண்டான.”(அஹ்ஸாப்:72)
     மனிதன் உலகில் கிலாபத் பொறுப்பை சுமந்துள்ளான். அது மனித சமூகத்தின் இருப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு பொறுப்பாகும்.அதனை சுமக்க நீண்ட பயிற்றுவித்தல் அவசியம். அதனை வழங்க குடும்பம் மாத்திரமே பொருத்தமான ஒரு இடமாகக் காணப்படுகின்றது. அதற்கு பிரதியீடாக வேறு எந்த நிறுவனமும் அதனை செய்ய முடியாது.
        மார்க்ஸிஸம்,முதலாளித்துவம் போன்ற கொள்கைகளுடைய சடவாதிகள் அண்மைய நூற்றாண்டுகளில் குடும்பத்தை இல்லாமல் செய்து குழந்தைகளை தமக்குத் தேவையான வகையில் உருவாக்க நினைத்தனர். விளைவு என்னவாயிற்று? பல்லாயிரம் தந்தையற்ற வீதிக் குழந்தைகள்,பாலியல் முறைகேட்டிற்கும், போதைப் பொருட்களுக்கும் அடிமைப்பட்ட இளைஞர்கள், மன அழுத்தத்திற்காட்பட்ட மனநோயாளிகள்,அநாதரவாக விடப்பட்ட முதியோர், பெண் துஷ்பிரயோகம்… என அதன் விளைவுகளை அடுக்கிச் செல்லலாம். இது மனித இயல்புடன் மோதியதன் விளைவு.
            என்ன ஆச்சரியம் என்றால் இதே சிந்தனையை முஸ்லிம்கள் என்று பெயர் தாங்கிய எம்மவருள் பலரும் பின்பற்ற முற்படுவதுதான். அவர்கள் பெண்கள் வேலைக்குப் போவதை நாகரிகமாகக் கருதுகின்றனர். கட்டற்ற ஆண்-பெண் உறவை முன்னேற்றமாகக் கருதுகின்றனர். இதனால் இந்நோய் எமது சமூகத்தினுள்ளும் தொற்றிக் கொண்டது.
   எனவே பாலியல் துஷ்பிரயோகங்களும் முறையற்ற உறவுகளும் என்று குடும்ப அலகு சீர்குலைந்து உள அமைதியும் ஆரோக்கியமும் தொலைந்து விட்டது. நமது சமூகத்தின் எதிர்கால சந்ததியினரான குழந்தைகள் சரியான உள,உடல்,அறிவு,ஆன்மீக ரீதியான போசனைக்குட்படாது தடம் புரண்டு வருகின்றனர்.
            இந்நிலை சீர்பெறுதல் வேண்டும். இஸ்லாமிய குடும்ப வாழ்வு எம்மிடம் முதன்மை பெற வேண்டும். குடும்ப வாழ்வு பற்றிய இஸ்லாமிய சிந்தனைத் தெளிவு இதற்காக எமக்குத் தேவைப்படுகின்றது.

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...