நாம் இந்தப் பத்தியில் அடுத்து இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் குறித்து எவ்வாறு பேசுவது என்பது தொடர்பில் சில விடயங்களை பரிமார இருந்தோம்.எனினும் அதற்கு முன்னர் மிகவும் சூடேற்றப்பற்று தமக்கேற்றாற் போல் தணிக்கப்பட்ட ஹலால் தொடர்பில் சில கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம் என எண்ணுகிறோம்.
இந்த விடயம் தொடர்பாக நாம் மிகத் தெளிவாக பிற சமுகத்திற்கு சொல்வதில் வெற்றி பெற்றோமா?இந்த விடயத்தை கையாள்வதில் ஒரு திட்டமிட்ட அணுகு முறையில் நகர்ந்தோமா?என எழுகின்ற பல கேள்விகளுக்கு அப்பால் நாம் இப்போது உருவாகியுள்ள சூழலை எவ்வாறு சாதகமாய் எதிர்கொள்வது என்பதனை நன்கு திட்டமிட வேண்டியுள்ளோம்.
நாம் முதலிலேயே தெளிவாகவும் சகல தரப்பு சார்ந்தும் திடமான ஒரு நகர்வை செய்திருந்தால் இந்த விவகாரத்தை நாம் வேறு திக்கில் நகர்த்தியிருக்க முடியும்.எம்மை நோக்கிய எதிர்ப்பை எம்முடனான மோதலை வேறு புள்ளியை நோக்கி நகர்தியிருக்க முடியும்.எனினும் நமது உரையாடலை ஒரு சில தரப்புடன் சுருக்கிக் கொண்டோம்.ஒரு கோண அணுகுமுறையே எம்மை பொறிக்குள் சிக்குண்ட வைத்ததுவோ என சிந்திக்கத் தோன்றுகின்றது.
முதலில் ஹலால் சான்றிதலால் ஏற்படும் பிரச்சினை என்ன என்பதை தெளிவாகவும் விஞ்ஞான புர்வமாகவும் சொல்லுங்கள் அதனை நிவர்த்திப்பது தொடர்பில் நாம் சிந்திக்கலாம் என கோரியிருக்கலாம்.
1-பன்சலைக்கு கொண்டு போக முடியாது-நாம் படையல் செய்வதில்லை,நாம் பெயர் கூறி அறுப்பது மிருகங்களை அதனை நீங்கள் கொண்டு போவதில்லையே.....
2- பணம் சார் விடயத்தை மிகத் தெளிவாக பொது மக்களுக்கு விளக்கியிருக்கலாம்...
3-ஹலால் சான்றிதல் சமூகத்தை சேர்ந்து வாழ வைக்கிறதே தவிர பிரிக்கவில்லை...அது இல்லாத போது முஸ்லிம் சமூகம் அதன் முக்கியத்துவத்தை உணருகின்ற படியால் தெளிவற்ற நிறையவற்றை தவிர்ந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படும்.இதனால் சகஜமான வாழ்வில் பாதிப்பேற்படும்...
4-ஹலால் இலட்சினை பொறிக்கப்பட்டது பௌத்தத்தில் தடை என எங்காவது உள்ளதா?
இப்படி பல கோணங்களில் பொது மக்களை மையப்படுத்தி எமது கருத்துக்களை நகர்த்தியிருக்க முடியும்.ஆனால் BBS தமது வதந்திகளை பரப்ப பொது மக்களையும் ஊடகங்களையும் நோக்காய் கொண்டிருந்த வேளை நாம் குறித்த ஒரு தரப்பை மூடிய நிலையில் சந்திப்பதையே நகர்வாய் கொண்டிருந்தோம்..பின்னர் இன் நிலையில் சிறு மாற்றம் வந்த போதும் நிலமை கை தவறிச் சென்றிருந்தது.எமது இலககு பொது மக்களை நோக்கி இன்னும் திரும்பவில்லை.
அடுத்த நகர்வாய் ஹலால் இலட்சினையை தற்காலிகமாக கொந்தளிப்பை காரணம் காட்டி முழுமையாக அதனை உடனடியாக நிறுத்தியிருக்க முடியும்.இதனால் பிரச்சினையை இன்னோர் புள்ளிக்கு நகர்த்தியிருக்கலாம்.மோதல் நிலை வர்த்தக சம்மேளனத்துக்கும் BBS இற்கும் இடையிலானதாக, BBS இற்கும் அரசுக்குமிடையிலானதாக,அரசுக்கும் வர்த்தகர்களுக்குமிடையிலானதாக...என பல கோணங்களில் நகர இடமிருந்தது.இது இஸ்லாம் எமக்கு காட்டும் பிரச்சினையை நகர்த்தும் பொறிமுறை.இதனை சிலரை சிலருடன் மோதவிடுவதனூடாக உலகில் நலவை காப்பதாக வரும் வசனத்தை வைத்து ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி அவரது நூலொன்றில் விளக்குகிறார்.ஆனால்,அந்த அரசியல் முதிர்வை இன்னும் அடையவில்லை.அதனை கவனமாக அரசு இந்த விவகாரத்தில் கையாண்டது என்பதனையும் நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
அதுவெல்லாம் போக நாம் ஒரு வித்தியாசமான பொறிக்குள் இப்போது இருக்கின்றோம்.அதனை எப்படி சாதகமாக்கலாம் என்பதனை சற்று நாம் இப்போது சிந்திக்க வேண்டும்.நமது இந்த நகர்வு ஹுதைபியாவுக்க ஒப்பிடப் படுகிறதெனின் எம்மிடம் நாம் இருக்கும் நிலையிலிருந்து பத்து மடங்கு முன் நகரும் பொறிமுறையொன்று ,திட்டமிடலொன்று நிச்சயம் அவசியப்படுகிறது.அப்படித்தான் ஹுதைபியா காணப்பட்டது.அது வெறும் விட்டுக் கொடுப்பும் தாழ்ந்து போதலுமல்ல மாற்றமாக வார்த்தைகளை விட்டுக் கொடுத்து இலக்கை நோக்கிய நகர்விற்கான தூர நோக்குடன் செய்யப்பட்ட உடன்பாடு.இதனை ஸுரா பத்ஹ் மிக அழகாக விளக்குகிறது.அது முஸ்லிம் சமூகத்தை அரசியல் முதிர்ச்சி நிலையை நோக்கி நகர்த்திய உடன்படிக்கை.அடுத்து ஹுதைபியா வெற்றியென்பது நபியவர்களின் உருவாக்கத்திற்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ்(அவர்கள் மரத்தின் கீழ் உடன்படிக்கை செய்த போது அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான்).அங்கு வெற்றிக்குறிய பண்புகள் கொண்ட மனிதர்களை அரசியல் போராட்ட நிலையை நோக்கி நகர்த்தியமைதான் ஹுதைபியாவின் வெற்றி.எனவே அதன் பின் இஸ்லாத்தில் இணைந்தோர் பத்து மடங்காய் அதிகரித்தனர்.சூழ்ச்சியில் ஈடுபட்ட யுத சக்தி அறபுத் தீபகற்பத்திலிருந்து இறுதியாய் துடைத்தெறியப்பட்டது.சர்வதேச அளவில் ஆட்சியாளர்களுக்கு தூது கொண்டு செல்லப்பட்டது...இறுதியாய் மக்கா இரத்தம் சிந்தா படையெடுப்பால் வெற்றி கொள்ளப்பட்டது...
நாம் நமது விட்டுக் கொடுப்பை ஹுதைபியாவுக்கு ஒப்பிடையில் இந்த பிண்ணனிகளையெல்லாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.எம்மிடம் ஒரு வழக்கமிருக்கிறது,நமது நிலைப்பாடுகளை ஆதரிக்க வெளிப்படையில் ஒன்றிப்போகும் விடயங்களை நாம் இலேசாக தூக்கிச் சொல்லி விடுவோம்.ஆனால் அந்த விடயத்துக்கும் எமது நிலைப்பாடுகளுக்குமிடையே பாரிய வேறுபாடு காணப்படும்.
நபியவர்களது தஃவா வெறும் அற்புதங்களாலும் நப்பாசைகளாலும் நிறைந்ததல்ல.மாற்றமாக அதில் மனித முயற்சிக்குறிய தேவை அடிப்படையில் காணப்பட்டது.இதுதான் இஸ்லாத்தின் இயல்பு .நாம் உழைக்காது விட்டால் இஸ்லாம் வெற்றி பெற மாட்டாது.அந்த வகையில் எமது அடுத்த நகர்வை பிரார்த்தனைகளுடன் மாத்திரம் நிறுத்திவிடாது திட்டமிட்டு செயற்பட வேண்டும்.சத்தியத்திற்குத்தான் உலகில் இடம் அசத்தியத்திற்கில்லை என்பதை ஆழ மனதில் பதித்துக் கொண்டு அடுத்த எட்டை சிந்தியுங்கள்.
அடுத்து நாம் என்ன செய்யலாம்?
1-இதனை நமது உற்பத்திகளை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பாய் பயன் படுத்தலாம்.
2-நமது உற்பத்திகளை நுகரலாம்
3-நமது நுகர்வு மோகத்தை குறைத்து எமது பொருளாதாரத்தை தன்நிறைவுப் பொருளாதாரமாக மாற்றுவதற்கு குடும்ப ரீதியாக ,பிரதேச ரீதியாக ,நிறுவன ரீதியாக சிந்திக்கலாம்.(குடும்பத்துக்கு தேவையான பிஸ்கட்டை வீட்டில் தயாரித்தல்...பிஸ்கட்டை நமது உள்ளுர் பேகரி தயாரிப்பாளரை வைத்து தயாரித்தல்...பழச்சாறு....)...இதன் அடுத்த விளைவு பல்தேசிய கம்பனிகள் பிற தயாரிப்புகளில் இருந்து நாம் விடுதலை பெறுதலும் ...அவர்கள் மீண்டும் ஹலால் தேடி எம்மை நாடி வருதலும்..
4-வியாபாரிகள் நமது மற்றும் நம்பகமான பொருட்களை மாத்திரம் கடைகளுக்கு விற்பனைக்காக வாங்குதல்...
5-ஹலாலை இஸ்லாத்தை விளக்குவதற்கான ஒரு ஊடகமாக பயன்படுத்தல்..
இப்படி நாம் சரியாக திட்டமிட்டு ஒரு மாதம் செய்தாலே நிலமை தலை கீழாய் மாறும் வாய்ப்புக்கள் வரலாம்....இங்கு நாம் அரசியல் ஆடு களங்களை நன்கு விளங்கி காய் நகர்த்த வேண்டும்...
மீண்டும் சந்திப்போம்...இவை பற்றிய உங்களது கருத்துக்களையும் பகிரும் போது நல்லதோர் கருத்தை வடிவமைக்கலாம்...அல்லாஹ்வே போதுமானவன்.

” ஹலால் தெளிவாயுள்ளது,ஹராமும் தெளிவாயுள்ளது.அவற்றிற்கிடையே தெளிவற்ற சில விடயங்களும் காணப்படுகின்றன.அவற்றை அதிகமான மனிதர்கள் அறியமாட்டார்கள்....”
"யார் ஜாஹிலிய்யத்தை விளங்காமல் இஸ்லாத்தில் மாத்திரம் வளர்ந்தாரோ அவர் இஸ்லாத்தை துண்டு துண்டாக உடைப்பார் என்ற உமர் (றழி) கூற்றை இங்கு நினைவு படுத்தாமல் இருக்க முடியாது."
No comments:
Post a Comment