Friday, March 24, 2017

பருத்துப் போயுள்ள சுய விம்பங்கள்-உடைப்பது யார்?




ஆன்மீகம் என்னும் போது பெரும்பாலும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கான இபாதத்களே எம் மனக் கண் முன்னே வந்து போகும். எனவேதான் எமது சமூகத்தில் ஒருவர் எவ்வளவு பெரிய மோசடிப் பெருச்சாலியாக இருந்தாலும் அவர் வெளிப்படையான ஆன்மீக இபாதத்களில் ஈடுபட்டுவிட்டால் அவர் நல்ல மனிதராகப் பார்க்கப்படுகிறார். எனவேதான் ஆன்மீக மேம்பாடுதான் சமூக மேம்பாட்டின் அடித்தளம் என்ற உண்மையான விடயம் சமூக அளவில் பொய்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று ஆன்மீகத்துக்கென ஒரு ஆடையும, தோற்றமும் கொடுக்கப்ட்டு, அதிகாரப் பெருச்சாலிகள், சுரண்டல் பேர் வழிகள்எல்லாம் அதற்குள் புகுந்து கொள்வதைக் காண்கிறோம்.
இதன் ஆபத்தான கூறு, முழு மார்க்கமும் அதன் கிரியைகள் முதல் பொருளற்ற ஒரு இயந்திரத் தோற்றம் கொடுக்கப்பட்டு,பலபோது நகைப்புக்காயும், முசுப்பாத்திக்காகவும் பாவிக்கப்படுகின்ற விடயங்களாக மாறிப் போய்விட்டிருக்கின்றன. இதன் விளைவு மார்க்கம் குறித்த, அதன் ஆன்மீக உயிர்ப்புக் குறித்த சந்தேகம் இளம் தலைமுறையிடம் வலுத்து வருகிறது.
இதனை உச்ச அளவில் இஸ்லாமிய கலா நியைங்களிலிருந்தும் மத்ரஸாக்களிலிருந்தும் வெளிவருவோரிடம் நாம் இன்று கண்டு கொள்ளலாம் என்பது கசப்பாயினும் சீரணிக்க வேண்டிய உண்மையாகும்.
ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி நாம் தொலைத்துவிட்ட இஸ்லாமிய நாகரிகத்தின் செழுமை குறித்து குறிப்பிடுகையில் அன்றைய நாட்களில் எந்த அறிவியற் துறையின் கதவைத் திறந்தாலும் அங்கு பாங்கோசை கேட்குமென்றார். இன்று இஸ்லாமிய என்ற அடை மொழி இருக்கின்ற துறைகளிலும், இடங்களிலும் கூட பாங்கோசை மரணித்து ஒலிக்கிறது.
இதற்கு எமது ஆன்மீகம் முழுமையற்றிருப்பது பிரதான காரணமாகும். ஆன்மீக மேம்பாடு எனும் போது உள்ளம், மனம் ஆகிய இரு பகுதிகளுக்கும் உரிய கவனம் கொடுக்கப்பட வேண்டும் என கலாநிதி மஜ்தி ஹிலாலி அவர்கள் குறிப்பிடுவார்கள்.
இன்று நாம் பெரும்பாலும் உள்ளத்துக்கான ஆன்மீக உயிர்ப்பை கொடுக்கும் இபாதத்களில் மாத்திரமே கவனம் செலுத்துகிறோம். அதுவும் கூட உயிர்ப்பற்ற புறத் தோற்ற வணக்கங்ககளிலேயே எமது கவனம் அதிகம் காணப்படுகிறது. நாம் மனதை பண்படுத்தல் என்ற பகுதியை பெரும்பாலும் உபன்னியாசங்களுக்கு அப்பால் செயற்படுத்துவதில்லை.
நபியவர்களதும்,ஸலபுகளதும் காலப்பகுதியில் முக்கியத்துவம் பெற்றிருந்த இப்பகுதி, ஆட்சியும் அதிகாரமும் வந்த போது, கவனமிழந்து போனது. இது வரலாற்றில் பிற்பட்ட காலங்களில் சூபித் தரீக்காக்களால் இடை நிரப்பப்பட்டது. நவீன காலத்தில் இப்பகுதிக்கு இஸ்லாமிய இயக்கங்கள் தமது உருவாக்கத்தில் கூடிய கவனத்தை கொடுத்தது. எனினும், இன்றைய ஆன்மீக அமர்வுகள், ஆன்மீக தர்பியத் எனப்படுபவை இந்தப் பகுதியை கவனத்தில் எடுக்கத் தவறி வருவதைக் காண்கிறோம்.
இதனால்தான், மனதை பக்குவப் படுத்துவதற்காக ஆன்மீக அமர்வுகளில், சேர்க்கப்படும் வழமைக்கு மாற்றமான ஒழுங்குகள் ஆன்மீக செயற்பாடுகளுக்கான தடையாக பார்க்கப்படும் ஹாஷ்யம் இன்று நிகழ்ந்து வருகின்றது.  இதனால், தோற்ற அளவில் உயர் ஆன்மீக ஆளுமைகளாக பார்க்கப் படுபவைகள் சொகுசான வாழ்வில், னோ இச்சைகள், ஆசைகளின் முன்னால்; தோற்றம் மறைந்து போவதைக் காண்கிறோம். இதிலிருந்து நாம் மீட்சி பெற வேண்டுமாயின் எமது ஆன்மீக இபாதத்களை உயிர்ப்பிப்பதில் கவனம் செலுத்துவது போன்றே, மனதை பண்படுத்தல் என்ற விடயத்திலும் கவனம் செலுத்துதல் வேண்டும்.
இது எமது மன ஆசைகளை கட்டுப்படுத்தல், மோசமான மன வெளிப்பாடுகளுக்கெதிராக போராடுதல், சிறந்த மென்திறன்களை வளர்த்தல்என்ற பரப்புக்களை கொண்டது. எனவேதான் இப்பகுதியில் கவனத்தை குவிக்கும் மேற்கு, மதமற்ற ஆன்மீகம் குறித்தும், ஆனமீக ஆளுமை குறித்தும் பேசி வருகின்றது. அவர்கள் இதற்கு துணை புரியும் ஆன்மீக இபாதத்களுக்கு பதிலாக வேறு உடல் அசைவு முறைகளை கைக் கொண்டு வருகிறார்கள்.
மனதை பண்படுத்தல் என்ற பகுதியில் மிகவும் கவனம் கூர்ந்து நாம் முக்கியத்துவப்படுத்த வேண்டிய விடயமாக சுயமறுப்பு (நுக்ரானுஸ் ஸாத்) என்ற விடயம் காணப்படுகிறது. ஊடக ஒளியில் பருத்துப் போன விம்பங்கள் நடமாடும் இன்றைய தஃவா, சமூக வெளியில் இது இன்னும் கூடிய கவனத்தை பெற வேண்டிய விடயமாகக் காணப்படுகிறது. தனது செயற்பாடுகளை, திறமைகளை, அடைவுகளை, பதவிகளைவைத்து பெருமிதம் கொண்டு தன்னைப் பற்றிய சுய விம்பத்தை பெருப்பித்து பார்க்கின்ற நிலையை இல்லாது செய்வது என்பதுதான் இங்கு சுயமறுப்பு என்பது.
தன்னை பெருப்பித்துப் பார்த்தல் என்பதன் மூலம் தற்பெருமை. இது இஃலாஸை பாதிக்கிறது. அல்லாஹ்வுக்காக அவனது திருப்திக்காக செய்ய வேண்டிய பணிகளை பிறருக்காக, சமூகத்தின் புகழ்ச்சிக்காக செய்வது. கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு விடயத்தை பிறரின், சமூகத்தின் இகழ்ச்சியை, விமர்சனத்தை பயந்து விட்டுவிடுவது. இதனால் இங்கு முகஸ்த்துதி என்ற மறைவான ஷிர்க் தொடர்பு படுகிறது. இது அல்லாஹ்வுக்கே சவால் விடும் பாவமாகக் காணப்படுகிறது. இதனைத்தான் இப்லீஸ் செய்து ஷைத்தானாக,குழப்பவாதியாக மாறினான்.
 “நான் அவனைவிட சிறந்தவன்,நீ என்னை நெருப்பால் படைத்தாய்,அவனை மண்ணால் படைத்தாய்”-அஃராப்:12-
இறுதி வேதமான அல்-குர்ஆனின் ஆரம்ப வஹியுடன் தொடர்பான வசனங்கள் இதனை மறுப்பதை முதன்மையாகக் கொண்டிருந்தன என உஸ்தாத் ஸல்மான் அல்-அவ்தா குறிப்பிடுகிறார்.
மனிதன் தான் யாரிலும் தேவையற்றவன் என கருதிக் கொண்டு கர்வம் கொண்டு அத்துமீறி நடக்கின்றான்”-அலக்:6, 7-
ஒருவர் தன்னை பெருப்பித்துப் பார்த்தல் அவனை, அவன் சார்ந்த செயலை, உழைப்பை, அணியை, சமூகத்தை அழித்துவிடும் அழிவுக்காரணி என நபியவர்களது ஹதீஸ் குறிப்பிடுகிறது. “அழிவுக் காரணிகளை பொருத்த மட்டில், அவை மனிதன் தான் கட்டுண்டு வாழும் கஞ்சத்தனம், தான் பின்னால் செல்லும் மனோ இச்சை, மனிதன் தன்னில் பெருமிதம் கொள்ளுதல் என்பனவாகும்”(ஸஹீஹுல் ஜாமிஃ-அல்பானி)
எனவேதான் நபியவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே நான் அல்லாஹ்வின் பதையில் போராட விரும்புகிறேன். அதே நேரம் மக்கள் அதனை காண வேண்டும் எனவும் விரும்புகிறேன் என்ற போது நபிவர்கள் பதிலளிக்காது மௌனமாக இருந்தார்கள். அதற்கு அல்லாஹ் பதில் சொன்னான்:
 “யார் தனது றப்பின் சந்திப்பை எதிர்பார்த்து வாழ்கிறாரோ, அவர் நல்ல செயல்களில் ஈடுபட்டுழைக்கட்டும். அதே நேரம் அவர் தனது றப்புக்கு இபாதத் செய்யும் விடயத்தில் எந்த ஒருவரையும் பங்காக்க(ஷிர்க்) முனையாதிருக்கட்டும்” –கஹ்ப்-110-
தனது றப்பின் திருப்திக்காய் தன்னை மறுதலிப்பவனால்தான் இந்த உலகில் மானிட சுபீட்சத்துக்காய் உழைக்க முடியும். ஏனெனில் இந்தநான்ஒரு ஆபத்தான வியாதி. அது பல போது நாம், நமது குடும்பம், நமது பிள்ளை, நமது ஊர், நமது நிறுவனம், நமது பாடசாலை, நமது இயக்கம்என பன்மைக்குள்ளும் ஒழிந்து கொண்டு ஒருவனை ஆட்டுவிக்கும் என்பதனை உஸ்தாத் ஸல்மான் அல்-அவ்தா தனது அன வஅகவாதுஹா’(நான் - அதன் சகோதரிகள்)என்ற நூலில் அழகாக விளக்குகிறார்.
இந்த வியாதியின் ஆபத்து; இதனை இதனால் பீடிக்கப்பட்டவர்கள் வியாதியாக பார்க்காமல் இருப்பதுதான். இந்த நான் அது காயப்படும் போது பல போர்வைக்குள்ளிருந்தும் சீறிப் பாயும். நான் எப்போதும் சரியாகவே இருக்கின்றேன்நீதான் பிழை செய்கிறாய். நான் சொல்வதை நீ கேட்க வேண்டும்நீ சொல்வதை நான் கேட்பதா? நான் எப்படி உனக்கு இரண்டாம் பட்சமாவது?... என இந்த நானின் அட்டகாசங்கள் நாம் அன்றாடம் சந்திப்பவை, சிறு பிள்ளைத் தனமானவை. எம்மை எமது எல்லா செயற்பாடுகளிலும் ஆட்டுவித்துக் கொண்டிருப்பவை. மீள முடியாத பெரும் முட்டுக்கட்டைகளாக இருப்பவை. பல நிறுனங்களை, சமூக அமைப்புக்களை குட்டிச் சுவராக்கிக் கொண்டிருப்பவை.
இந்த நான் இவ்வளவு பெருத்துப் போய் அட்டகாசம் பண்ணுவதற்குக் காரணம், முதிர்ந்து போக முன்னர் புகழ் ஒளி பாய்ச்சப்பட்டு முத்தாய் வர்ணம் தீட்டப்பட்டமை. ஒருவரது வாழ்வின் ஆரம்ப மூன்று தசாப்தங்களும் அவரது உருவாக்கத்தில் முக்கியமானவை. இக்காலப் பகுதியில் உரிய பயிற்சி இன்றி புகழப் படுகின்ற இடத்திற்கு செல்வது ஒருவரது நான் என்ற மமதையை ஊதிப் பெருப்பித்து விடும்.
எனவேதான் இமாம் ஷாபிஈ அவர்கள் “ஒருவர் பிஞ்சில் பழுத்தால்(சிறு வயதில் பிரபல்யமடைந்தால்) அதிகமான அறிவை இழப்பார்” எனக் கூறுகின்றார்கள். இது தொடர்பில் துர் இப்னு அதாஃ (றஹ்) குறிப்பிடுவதைப் பாருங்கள் “நீ உனது இருப்பை யாருமறியாத பூமியினுள் புதைத்துவிடு.புதைக்கப்படாத எதுவும் முளைத்ததில்லை.அது விளைந்ததுமில்லை.”
அந்த வகையில்தான் இஸ்லாம் இந்த விடயத்தில் மொத்தமாகவே கவனமாக இருக்கின்றது. நபியவர்கள் தனக்கு முன்னிலையில் ஒருவர் இன்னொருவரை புகழ்வதைப் பார்த்துவிட்டு, “உனக்கு கேடு உண்டாகட்டும். உனது தோழரின் கழுத்தை நீ துண்டித்துவிட்டாய். நீ புகழ்ந்த வார்த்தை அவரது காதில் விழுந்துவிட்டால் அவர் வெற்றி பெறவேமாட்டார்…” –புகாரி,முஸ்லிம்- என்றார்கள்.
இன்னோர் ஹதீஸில்நீங்கள் அதிகமாக புகழும் மனிதர்களைக் கண்டால்,அவர்களது முகங்களின் மீது மண்ணை வாரிப் போட்டு விடுங்கள்” –முஸ்லிம்- என்றார்கள்.இதனை உமர்(றழி)அவர்கள்புகழ்ச்சி என்பது மனிதர்களை அறுத்துப் பலியிடுவதாகும்என கொலைக்கு ஒப்பிட்டார்கள். உண்மையில் இது ஆளுமைக் கொலை. இந்தக் கொலைக்கு உட்பட்டவர்கள் எழுந்து கொள்வது சிரமமானது.
எனினும், இன்று சர்வ சாதாரணமாக தனது ஒரு வேலையை சாதிப்பதற்காக, இன்னொருவனை மட்டந் தட்டுவதற்காக, ஒருவரது திருப்தியை, உதவியை பெறுவதற்காகஎன அற்ப நோக்கங்களுக்காக இது சர்வ சாதாரணமாக இடம் பெருகிறது. அதனையும் தாண்டி சுய புகழ்ச்சி என்னும் வியாதி வேறு. இத்தனையையும் ஊக்கப்படுத்தல், சுய ஊக்கம் எனும் பெயர்களால் நியாயம் காண்பது இதனைப் பார்க்கிலும் ஆபத்தானதாகக் காணப்படுகிறது.
புகழப்பட வேண்டியவன் முதலிலும், முத்தாய்ப்பிலும் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. இந்த உண்மை மறந்து போய், பலவீனமான மனிதர்கள் புகழப்படும் போது, இந்த நோய் அவனுக்குள் குடி கொண்டுவிடுகிறது. அவன் தனது திறமைக்கு, செயலுக்கு, இபாதத்துக்கு மூலமாய் இருந்த தனது றப்பை மறந்து தன்னில் பற்றுக் கொள்கிறான், தனது திறமையில் நம்பிக்கை வைக்கிறான். அப்போது அவன் பலவீனப்பட்டுப் போகின்றான்.
 “ நபியே நீங்கள் சொல்லுங்கள், நான் எனக்கு நன்மையோ, தீமையோ செய்வதற்கு சுய சக்தியற்றவன். அல்லாஹ் நாடியவற்றையே என்னால் செய்வதற்கு முடியுமாக இருக்கின்றது.”
அல்லாஹ்வின் உதவியின்றி சுயமாய் இயங்க சக்தியற்றவனாக மனிதன் இருக்கின்றான். எனவேதான் நபியவர்கள்யா அல்லாஹ் என்னை நீ கண் இமைப் பொழுதாவது என்னிலே தங்க வைத்து விடாதே. யா அல்லாஹ் நீ என்னை என்னில் தங்க வைத்துவிட்டால், என்னை பலவீனத்தில் ஒப்படைத்து விட்டாய், நிர்வாணத்தில் ஒப்படைத்துவிட்டாய், பாவத்தில், தவரில் ஒப்படைத்துவிட்டாய். நான் உனது அருளைத் தவிர வேறு எதிலும் நம்பிக்கை வைக்கவில்லை.”-ஸஹீஹுத் தர்ஈப் வத் தர்ஹீப்-அல்பானி- என பிரார்த்திக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
சற்று சிந்தித்துப் பாருங்கள், சுயமாய் நான் எனது சுவாசத்துக்கான காற்றை சுத்திகரித்துக் கொள்ள வேண்டியிருந்தால், எனது இரத்தத்தை நான் சுயமாய் சுத்திகரித்துக் கொள்ள வேண்டியிருந்தால், எனது சமிபாட்டை சுயமாய் நான் செய்து கொள்ள வேண்டியிருந்தால்முற்றிலும் இவ்வாறுதான் எம்மால் நிகழுகின்ற அத்தனை செயல்களும் அல்லாஹ்வின் உதவியின்றி சுயமாய் இடம் பெற முடியாது. எனினும் அவனது கரத்தை நாம் மறந்து விட்டு நாம் எம்மை அல்லது மனிதர்களை மாத்திரம் அங்கு காண்கிறோம்.இதனால்தான இந்த சுயம் பல இடங்களில் பெருத்து விடுகிறது.
மனிதன் தனது சுயத்தையும், இயலுமையையும் பற்றிய சரியான கணிப்புக்கு வருவது முக்கியமானது. இதனைத் தான் அல்லாஹ், “மனிதன் தான் எதனால் படைக்கப்பட்டேன் என அவதானித்துப் பார்க்கட்டும்.அவன் உந்திப் பாயும் நீரினால் படைக்கப்பட்டவனல்லவா!”-தாரிக்-
அவனை அல்லாஹ் எதிலிருந்து படைத்தான்? அவனை இந்திரியத் துளியிலிருந்து அவன் படைத்து வடிவமைத்தான்”-அபஸ- என பல இடங்களில் மனிதனின் அற்ப நிலையை அவனுக்கு நினைவு படுத்துகிறான். இதனைத்தான் அடிக்கடி ஸஹாபாக்களும், ஸலபுகளும் நினைவு படுத்திக் கொள்வார்கள். இதனால்தான் அவர்களால் சிந்தனைக்காக, பெறுமானங்களுக்காக, மானிட நலனுக்காக வாழும் மனிதர்களாக இருக்க முடிந்தது. ஆனால் இன்று நாம் சுயத்தை, மனிதர்களை அதிகம் பூஜிக்கத் துவங்கிவிட்டோம். பலபோது பல விடயங்களுக்கு இவரை விட்டால் ஆளில்லை என்கிறோம். அவரும் தனது சுயத்தை அப்படி நினைத்துக் கொள்கிறார்.
எனவே, எமது செயல்கள் நபியவர்கள் எச்சரித்தது போன்று அழிவை நோக்கிச் செல்கின்றன. முன்னேற்றங்கள், மாற்றங்களின் முன்னால் இந்த சுய விம்பம் பெருத்தவர்கள் தடைக் கற்களாக பல இடங்களிலும் குந்திக் கொண்டிருக்கின்றார்கள்.
நாம் பல விடயங்களில் பல போது ஏமாந்து போகிறோம். எமது நான் திருப்திப்படுத்துவதற்காகவே நன்மைகள் என்பவற்றையும் செய்கிறோம். இதற்கு நன்மைகளில் போட்டி போடுகிறோம் என்ற நியாயத்தையும் சொல்கிறோம். நாம் நன்மைகளில் போட்டி போட வேண்டுமாயின் எத்தனை மறைமுகமான நன்மைகள் இருக்கின்றன. நாம் அவற்றில் போட்டி போடுகிறோமா?
நிறைய நபிலான விடயங்களில் எம்மை காட்டிக் கொள்கின்ற நாம் குறைந்த பட்சம் இருண்ட இரவின் ஒளிர்ந்த பகுதியில் றப்போடு உறவாடுகிறோமா? நாம் தனித்திருக்க நேரும் நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அவற்றில் எமது நிலை என்ன? வுழு எம்மோடு ஒட்டியிருக்கிறதா? உம்றாக்களுக்காக இலட்சங்கள் செலவிட முனையும் நாம் மறைவான ஸதகாக்களில் எங்கு இருக்கின்றோம்?... எதற்காக உம்றா?! அதனை விட பாரிய நன்மைகளை ஒருவனின் துயர் துடைப்பதால் பெற முடியாதா? நாம் எமது நானை சுய விசாரணைக்குட்படுத்த வேண்டிய பலமான தேவையில் உள்ளோம்.
நாம் எமது நானின் முன்னால் ஏமாந்து போய் இருந்து விட்டு மறுமையில் கைசேதப்படக் கூடாது. மறுமையில் நரகிற்கு செல்லும் அந்த மூன்று நல்ல தோற்றங்களில் (ஆலிமென்று போற்றப்பட இஸ்லாத்தை போதித்த அறிஞன், வீரனென போற்றப்பட போராடிய ஷஹீத், கொடையாளி என போற்றப்பட செலவு செய்த செல்வந்தன்) ஒரு தோற்றமாய் நாமிருக்கக் கூடாது.
இந்த ஆபத்திலிருந்து தப்புவது எப்படி? இந்த விம்பங்களை உடைப்பது யார்? அதற்கு முதலும் இறுதியுமாக தகுதி பெற்றவர்கள் குறித்த நபர்கள்தான். அவர்கள் இதன் பாரதூரத்தை விளங்க வேண்டும். இல்லாத போது அவர்கள் உலகிலும் மறுமையிலும் இழிவடைந்து போகும் தருணம் தமக்கு வராது போகாது என்பதனை மறந்து விடக் கூடாது.
அடுத்து நாம் எமது பயிற்றுவிப்புக்களில் இது குறித்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆன்மீகமென்பதை வெறுமனே இபாதத்களின் தோற்றங்கள் எண்ணிக்கைகளுடன் சுருக்கிப் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேண்டும். ஏனெனில் நாம் எமது வேலைத் திட்டங்களில் எதனைத்தான் செய்த போதும் இந்த இடத்தில் ஏற்படும் ஒரு பாதிப்பு முழுமையாகவே எமது வேலைத் திட்டத்தை அப்படியே உடைத்துப் போட்டுவிடும். இதற்கு எமக்கு நிறையவே பாடங்கள் உண்டு. எனினும் அவற்றை நாம் அடிக்கடி மறந்து போவதுதான் வருந்தத் தக்கது.
இந்த விடயங்கள் ஆன்மீகப் பயிற்றுவிப்பு தொடர்பான நூல்களில் நிறையவே பேசப்பட்டுள்ளன. இஹ்யா உலூமுத் தீன், மதாரிஜுஸ் ஸாலிகீன் என்பன போன்ற நூல்களிலும், நவீனகாலத்தில் தனித்த தலைப்புக்களிலும் இது குறித்து பலர் பேசியிருக்கின்றனர். இதன் பயிற்றுவித்தல் முறைகள் இபாதத்கள் போலன்றி விரிவாக சிந்திக்கப்பட முடியுமானவை. இது தொடர்பில் உளவியலும், உளவளத் துணையும் பேசியுள்ள விடயங்கள், அவை கொண்டுள்ள பயிற்சிகள் என்பனவும் எமது கவனத்தை பெற வேண்டியவை.
இதன் தேவை ஒருவரது குழந்தைப் பராயம் முதலே காணப்படுகிறது. நாம் இது குறித்து ஒரு அவதானக் குறிப்பையே பகிர்ந்து கொண்டோம். இது குறித்த வாசிப்புக்களும், கலந்துரையாடல்களும், முன்னெடுப்புக்களும் ஏனைய எல்லா விடயங்களையும் பார்க்கிலும் முக்கியமானவை. ஏனெனில் நாம் தாண்ட விரும்பும் பல தடைகள் இதன் மூலமன்றி தாண்டிவிட முடியாதவை. அல்லாஹ்வுக்கு பயந்த, தனது மனதுடன் போராடும் விழிப்புப் பெற்ற மனிதர்கள் இல்லாமைதானே எத்தனை திறமைசாலிகள், சிந்தனை மூளைகள் உழைப்பாளிகள், கொடையாளிகள் இருந்தும் எம்மால் உயர் இலக்குகளை நோக்கி பயணித்துக் கொள்ள முடியாமைக்கான காரணம்.
உசாத்துணைகள்
1.    ஹத்திம் ஸனமக வகுன் இன்த நப்ஸிக ஸஈரன்-மஜ்தி ஹிலாலி-பதிப்பு 2004
2.    அன வஅகவாதுஹா ரிஹ்லதுன் பீ அஸ்ராரித் தாத்-ஸல்மான் அல்-அவ்தா-பதிப்பு 2013
3.    ழாஹிரது ழஃபுன் நப்ஸ் வஸுபுலு இலாஜிஹா-மஜ்தி ஹிலாலி (உளப் பலவீனம் தோற்றப்பாடுகளும் தீர்வுகளும்- தமிழ் பெயர்ப்பு வெளியீடு 2016)
4.    இணையக் கட்டுரைகள்








No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...