Monday, March 30, 2020

மனிதா! வாழ்க்கை வெல்வதற்கல்ல அது வாழ்வதற்கு; அது அனைவருடனும் பகிர்ந்து வாழ்வதற்கு. எம். என். இக்ராம் ikrammn@gmail.com 30.03.2020




            எமது வழமையான வாழ்வு சோலிகள் நிறைந்தது. எமது சோலிகளை நிறைவு செய்து கொள்ளுமளவு எமக்கு நேரம் போதியதாக இல்லை. நாம் அனைவரும் உழைக்கிறோம். எதற்காக உழைக்கிறோம்? இந்தக் கேள்வியை பெரும்பாலும் நாம் கேட்பதில்லை. இடையிடையே கேட்டாலும் அதற்கு நிதானமாக பதில் தேடுவதில்லை. மனிதன் வாழ்க்கைக்காக உழைக்கிறானா அல்லது அவன் உழைப்பதற்காக வாழ்கிறானா? கடுகதியான வாழ்வில் அவனுக்கு அதற்கு பதில் கிடைப்பதில்லை. மனிதன் தனது பிள்ளைகளின் பணியொன்றிற்காக, தனது மனைவியின் காரியமொன்றிற்காக, தனது குடும்பத்தின் விவகாரமொன்றிற்காக மாத்திரமன்றி அவனது சொந்தத் தேவைகளாகக் கருதப்படும் அவனது திருமணத்திற்காக, அவன் தனது சுகயீனத்திற்கு மருத்துவம் செய்வதற்காக விடுமுறை எடுத்துக் கொண்டுதான் அதில் ஈடுபடுகிறான். அது ஏதோ ஒரு அரச, தனியார் நிறுவனத்தில் உத்தியோகம் செய்பவர் மாத்திரமல்ல. சுமாராக அனைவருமே அப்படித்தான். பொருளாதார ரீதியாக மேல் நிலையில் வாழும் எண்ணிச் சிலரைத் தவிர அனைவரதும் வாழ்க்கை வட்டம் இதுதான்.
            இப்போது நாம் வீட்டோடு சேர்த்து மூடப்பட்டிருக்கிறோம். எமது வழமையான வாழ்க்கை வட்டம் முடக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் மனித வாழ்க்கை இயங்கிக் கொண்டுதானிருக்கிறது. விமானங்கள் பறக்கவில்லை என்பதற்காக வானம் இடிந்து வீழ்ந்து விடவில்லை. வாகனங்கள் பிரயாணிக்கவில்லை என்பதால் பாதைகள் எரியுண்டு போகவில்லை. எல்லாம் இயல்பாய் இடம்பெறுகின்றது. இதன் அர்த்தம் மனிதர்கள் இயங்கவில்லை என்பதும் அல்ல. மனிதர்களில் பெரும்பாலானவர்கள் உழைக்கிறார்கள். ஆனால் அவர்களது உழைப்பின் முறைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உணவகங்கள் இயங்கவில்லை என்பதனால் யாரும் பட்டினி கிடக்கவில்லை. அவர்கள் தாமாக சமைத்து உண்கிறார்கள். தன்னிடம் நுகர்விற்கான இயலுமை இல்லை என்பதனால் அவர்களுக்கான வாழ்வின் அத்தியவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இல்லை. யாரும் கேட்காமலேயே அவர்களுக்கான அத்தியவசியப் பொருட்கள் பெரும்பாலும் அவர்களுக்கு வந்து சேர்கின்றன.
            ஒரு சில இடங்களில் குவிந்திருந்த பணம் இன்று அனைவரதும் தேவைகள் நிறைவேற்றப்படுவதற்காக பகிரப்படுகின்றது. அப்படியாயின் செல்வந்தர்களிடம் மாத்திரம் சொத்துக்கள் குவிகின்ற வாழ்வமைப்பில் ஏதோ கோளாறு இருக்கின்றது என்பது எமக்கு துளங்கத் துவங்கியிருக்கிறது… வாழ்க்கை என்பது போட்டியால் ஆனது அல்ல… போட்டியால் ஆன வாழ்வில் வென்றவர்கள் யாரும் இல்லை என்பதுதான் யதார்த்தம். ஆனால், தமது செல்வங்களை சேர்த்து எண்ணிக் கொண்டிருந்தவர்கள் அப்படி ஒரு பிரமிப்பில் தமது வாழ்வை தொலைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற கசப்பான உண்மை வெளிச்சமாகத் துவங்கியிருக்கிறது.

            பணத் தாள்களின் பெறுமதியால் தமது பலத்தை மட்டிட்டுக் கொண்டிருந்த வல்லரசுகள் சரியத் துவங்கியிருக்கின்றன. தனிமனிதனுடன் (Individualism) சுருங்கிய வாழ்வமைப்பின் அர்த்தம் கேள்விக்குரியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மனித வாழ்வு கூட்டுறவு அமைப்பைக் கொண்டது (Cooperative System) என்ற யதார்த்தம் நவீன உலகில் முதன்முதலாக வெளிப்படையாக தெரியத் துவங்கியுள்ளது. குடும்பம்தான் மனித வாழ்வின் அடிப்படை என்ற ஆரம்ப உண்மையை அனைவரும் சிரமப்பட்டு சீரணிக்கத் துவங்கியுள்ளார்கள்.
            அரசுதான் அனைத்தும் என்ற அதீத அரசியல் மயப்பட்ட வாழ்வமைப்பின் பிம்பம் சரியத் துவங்கியுள்ளது. மக்களே அனைத்தும், அரசு என்பது அவரகளுக்கான சேவகம் என்ற யதார்த்தத்தை அனைவரும் உணரத் துவங்கியுள்ளனர். இருமாப்புக் கொண்ட, அதிகாரத் திமிர் பிடித்த ஆட்சியாளர்களின் பலவீனங்கள் வெட்ட வெளிச்சமாகத் துவங்கியுள்ளன. இதுவரையில் மக்களின் உழைப்பில் வாழ்வர்களாகத்தான் இந்த ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது பகிரங்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனித வாழ்வுக்கு உணவுப் பாதுகாப்பையும், உயிர் பாதுகாப்பையும் வழங்கக் கூடிய சர்வ இயலுமை எந்த அரசுக்கும் கிடையாது என்ற உண்மை உரக்கச் சொல்லப் பட்டுக் கொண்டிருக்கின்றது. மனிதனுக்கும் அவனைப் படைத்தவனுக்குமிடையிலான உறவு தேவாலையங்களுடனோ, மதப் போதகர்களுடனோ மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பதனை பல சிரமங்களுக்கு மத்தியில் அனைவரும் சீரணிக்கத் துவங்கியுள்ளனர்.


            மொத்தத்தில் மனிதன் தான் தொலைத்துவிட்டு எங்கோ தேடிய வாழ்வை மீளக் கண்டடடைவதற்கான பாதையை உலகிற்கு முன்னறிவிப்புச் செய்து கொண்டிருக்கின்றது இன்றைய இந்த வாழ்க்கை. இது ஒரு இடரல்ல, மனிதன் அவனாகவே தொலைத்துவிட்டு உலகம் முழுதும் தேடியலைந்த வாழ்வை மீட்டிக் கொடுப்பதற்கான ஒரு இடைவேளை.
            மனிதனே! நீ எதனைத் தேடி ஓடிக் கொண்டிருந்தாய்? நீ எதனைப் பெருக்குவதற்காக உனது வாழ்க்கையை விட்டும் பாராமுகமாக ஓடிக் கொண்டிருந்தாய்? ஓ! அந்த மரணம் உனக்கு முன்னால் வரும் வரை இந்த யதார்த்தத்தை நீ உணர நேரமெடுக்கப் போவதில்லை என்ற வாக்கு இன்று உண்மையாகிப் போனதே! உனது உழைப்புக்கான உண்மையான ஊதியம் உனக்கு வந்து சேரவில்லை. அது எங்கோ உலகில் இருந்த எண்ணிச் சிலரிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. அவர்களுக்கும் அது பிரயோசனம் கொடுக்கவில்லை. அதனைச் சேர்க்கும் களோபரத்தில் அவர்களும், அனைவருமாய் சேரந்து நாம் தொலைத்தது எமது வாழ்வை. மரணம் என்பது கூட வாழ்வை தொலைப்பதற்கல்ல அது மரணத்திற்குப் பின்னும் முன்னும் வாழ்வை அழகாக வாழ்வதற்குத்தான் என்ற உண்மையைக் கூட எம் கண்களை விட்டு இந்த பணம் சேர்க்கும் களோபரம் மறைத்துவிட்டதுவே. வாழ்க்கையை வாழ்பவர்களுக்க மரணம் வாழ்வைத் தொலைத்தலல்ல. உலகில் வாழ்வைத் தொலைத்து விட்டு பொருட்களில் அதனைத் தேடியவர்களுக்கே அதில் இழப்புக்கள் இருக்கும். சேர்ப்பதல்ல வாழ்வு, கொடுப்பதுதான் வாழ்வு. கொடுப்பவைதான் உனக்கு வாழ்வில் எஞ்சும்… நீ சேர்ப்பவையல்ல என்ற வார்த்தைகளின் உண்மை விளங்குகின்றதுவா?  ஆக, சேர்த்தவர்களுக்குத்தான் இழப்பதற்கென்று ஒன்று இருக்கின்றது. கொடுத்தவர்களுக்கு அது வரவு மாத்திரம்தான். ஆகா! இந்த கணிதச் சூத்திரம் கூடத் தெரியாமல் கணித மேதைகளாக நாம் இருந்துவிட்டோமல்லவா?


            மனிதன் தான் வாழ்வதற்காக என்ற தேடலில் அவன் வாழ மறந்து சேர்த்தவைகள் அவனுக்கு பிரயோசனமளிக்கப் போவதில்லை என்ற யதார்த்தம் நவீனமாய் செய்தி சொல்கின்றதல்லவா? அடுத்தவனின் இடத்தைப் பறித்து, அடுத்தவனின் சொத்தைக் களவாடி, அடுத்தவன் தன்னை விட மேலே போய்விடக் கூடாது என்பதற்காக அத்தனை குழிபறித்தல்களையும் செய்து எண்ணி எண்ணி நீங்கள் சேர்த்து வைத்தவைகள், கட்டி வைத்தவைகள், கட்டியெழுப்பிய வியாபாரங்கள், கட்டியெழுப்பிய சமூக அந்தஸ்த்துக்கள், ஓடிப் போய் பெற்றுக் கொண்ட பதவிகள்… அத்தனையும் சரிந்து போகக் கூடியன என்பதனை கண்முன்னே காண்கிறீர்கள் இல்லையா? நம்ரூதின் மூக்குத் துவாரத்திற்குள்ளால் நுழைந்த கொசுவை விட ஒரு அற்ப அங்கி உண்ணை ஆட்டுவிக்கின்றதா? மனிதா! நீ பலவீனமாய் படைக்கப்பட்டிருக்கிறாய் என்பது உனக்குப் புரிகிறதா? இப்போதும் பிரபஞ்சத்தின் விதிகளுடன் மோதி நீ வெல்ல முடியாது. பிரபஞ்சத்தின் விதிகளிடம், அந்த விதிகளை இயற்றி இயக்குபவனிடம் நீ மண்டியிடுவதால் மாத்திரமே நீ தப்பிக்க முடியும். மனிதா! வாழ்க்கை வெல்வதற்கல்ல அது வாழ்வதற்கு. அது அனைவருடனும் பகிர்ந்து வாழ்வதற்கு.



No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...