Saturday, March 21, 2020

தேசத்தின் தலைமைகளும் மக்களும் எம்.என்.இக்ராம் (M.Ed)


ஒரு தேசத்தின் வெற்றியான நகர்வில் அந்த தேசத்தின் குடிமக்களுக்கும் தலைமைக்கும் இடையிலான விசுவாசம் பெரும் பங்கு வகிக்கின்றது. மக்களிடம் அந்த விசுவாசத்தை கட்டியெழுப்புவதில் அதன் தலைமைகளுக்கு பாரிய பங்களிப்பு காணப்படுகின்றது. தலைமைகள் எவ்வளவு தூரம் மக்களுக்க விசவாசமாக நடக்கின்றனறோ அந்தளவிற்குத்தான் மக்களது விசுவாசம் தலைமைகளைச் சூழ கட்டியெழுப்பப்படும். தேசத்தை கட்டியெழுப்புவதற்கான மக்களது பங்களிப்புக்கள் உடன்பாடான வகையில் (Positive) அமையப் பெறுவது பெரும்பாலும் இந்த விசுவாசத்தின் அடிப்படையிலாகும்.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் தலைமைகள் குடிமக்களிற்கு எவ்வளவு விசுவாசமாக நடக்கின்றார்கள் என்பதற்கு நிறையவே கண்முன்னால் சான்றுகள் காணப்படினும் அதனை மக்கள் மிக விரைவாகவும் அடிக்கடியும் மறந்து போகின்றனர். எனினும் அதனை நடைமுறையில் விளங்குவதற்கு இன்றைய சூழல் மிகப் பெரிய உதாரணமாகும்.

எமது நாட்டைப் பொறுத்தவரை COVID 19 வைரசின் பரவல் குறித்தான அவதானம் கடந்த மாதம் தொட்டு அதிகரித்து வந்தமை அனைவரும் அறிந்ததே. எனினும் அரசின் தலைமையும் அமைச்சர்களும் அதனை தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டதாக அறிவித்தது, மக்களுக்கு வாக்களித்தது. எமது நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நோயாளியும் மிக விரைவாக சுகப்படுத்தப்பட்டதாக ஊடகங்களின் ஊடாக பெரிய அளவில் பிரச்சாரம் செய்தது.
மக்களும் அதனை விசுவாசித்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். பெரிய அளவில் முன்காப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் சிந்திக்கவில்லை. இதற்கிடையில் கடந்த வாரம் முதல் இந்த வைரஸ் தொற்றின் அவதானம் அதிகரிக்கத் துவங்கியது. எமது நாட்டைச் சேர்ந்த பலரும் இதனால் பாதிப்படைந்த செய்தி மக்களை எட்டியது. இந்த வைரஸ் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்குச் சென்றோர் எந்தவித பரிசோதனை நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுக்காது நாட்டுக்குள் வந்துள்ளதான செய்தியும் அங்கு தொற்றுக்குட்பட்ட பலர் இங்கு வந்து கண்டுபிடிக்கப்பட்டமையும் நிலமையை இன்னும் சிக்கலாக்கியது.
வழமை போன்றே தலைமைகள் மேலான விசுவாசம் உடைப்பெடுத்தது. பலபோது யுத்த வெற்றி நாயகர்களாகவும் மக்களை காக்கும் தெய்வங்களாகவும் போற்றப்பட்ட ஆட்சியாளர்களது கையாலாகத்தனம் வெட்ட வெளிச்சமாகியது. இதனை மறைக்க யுத்தத்தை வெற்றி கொண்ட தமக்கு இதனை வெற்றி கொள்வது பெரிய காரியமல்ல என்ற தோரணையில் பேசத் துவங்கினர். நிலமையின் பாரதூரத்தை விளங்கிக் கொள்ளவில்லை. இதனால் அரசியல் ரீதியான இலாபமடைவதற்கும் முயற்சித்தினர். ஆனால், அதற்கான தருணமாக இது அமைந்துவிடவில்லை. சமூகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களுக்கு பணிய வேண்டிய நிர்ப்பந்தம் தலைமைகளுக்கு ஏற்பட்டது.
இந்தப் பின்னணியிலிருந்து கொண்டு தலைமைகள் எந்தளவு தூரம் மக்களுக்கு விசுவாசமாக செயற்படுகின்றார்கள் என்பதனை மக்கள் விளங்கிக் கொள்வதற்கான ஒரு சந்தரப்பமாக இது அமைந்துள்ளது. எனினும் வழைமை போன்று மக்கள் எந்தளவு தூரம் இதனை விளங்க எடுக்கின்றார்கள் என்பது சந்தேகத்திற்குரியதே.
காலாகாலமாக மக்கள் தலைவர்கள் என்போர் மக்களது விடயத்தில் இந்த நாட்டில் இவ்வாறுதான் நடந்து வந்திருக்கிறார்கள். மக்கள் நலனை கருத்திற்கொண்டு செயற்பட்ட தலைமைகள் எண்ணிச் சிலராகத்தான் காணப்படுகின்றனர். அதன் விளைவாகத்தான் நாடும் நாமும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த நாட்டின் கட்சிகளில், சமூக நிறுவனங்களில், தேசிய அமைப்புக்களில், அரச இயந்திரங்களின் உயர்மட்டங்களில் இருப்போரிடம் பெரும் திட்டங்கள் இருப்பதாயும் அதனால் நாமெல்லோரும் பாதுகாப்பும் சௌபாக்கியமும் வளமும் நிறைந்த ஒரு வாழ்வைப் பரிசாகப் பெறப் போகின்றோம் என்பதெல்லாம் ஒரு பெரும் கனவு மாத்திரமே. இதுவெல்லாம் தமது சுய இருப்புக்காக மக்களாகிய உங்களுக்கு தரப்படுகின்ற வாய் வாக்குறுதிகளும், வெற்று அறிக்கைகளுமே. இதற்கப்பால் அதில் எதுவுமில்லை என்பதனை இன்றைய இந்த நெருக்கடி நிலையின் ஆரம்பத்திலிருந்தே இதனை அவதானிப்போருக்கு நன்கு புலப்படுத்தும்.
ஒரு புறம் மக்களும் இந்த நிலமைக்கு காரணமாக இருக்கின்றார்கள். அவர்கள் தமது சொந்த நலன்களிற்காக முன்னே வருபவன் கள்வனா நல்வனா என்று பாராமல் யாருக்கு, எந்தத் தீங்கு வந்தாலும் தனது தேவையை நிறைவு செய்து தருபவனை தனது பிரதிநிதியாகத் தெரிவு செய்கின்றனர். இந்த சுயநலத்தின் தோற்றம் தனிமனிதன், குடும்பம், பிரதேசம், மாவட்டம், சமூகம், இனம்... என பல வடிவங்களில் எமது நாட்டைப் பொறுத்தவரை காணப்படுகின்றது.
இதன் விளைவு இருபக்கமும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உறவே கட்டியெழுப்பப்படுகிறது. இதனால் அதிகாரத்திற்கு வருபவன் கதாநாயகனாகின்றான். மக்கள் அடிமையாகின்றனர். நீண்ட காலத்தில் தோல்வியடைந்த வங்கரோத்து அடைந்த ஆபத்துக்களும், நெருக்கடிகளும் நிறைந்த ஒரு தேசம் அனைவர் முன்னாலும் இருக்கும். அப்படியான நிலையிலும் இருபக்கமும் ஒரு சாரார் பிணத்தின மீதேரியேனும் தனது வயிற்றை நிரப்பும் பிரயத்தனத்தில் ஈடுபடுவார்கள் என்பதற்கு இன்றைய நெருக்கடி நிலைகளின் நிகழ்வுகள் சிறந்த உதாரணம்.
ஒரு நெருக்கடியான நிலையில் மக்களின் நலன்சார்ந்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய நிலையில் மக்களை உயிர்ப் பணயமாக வைத்து தனது அதிகார பலத்தை 2/3 இரண்டாக பலப்படுத்திக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக நெருக்கடி நிலையை பயன்படுத்த நாட்டையும் மக்களையும் காக்க வந்ததாகக் கூறிய தலைமை முடிவெடுக்கின்றது. சர்வதேச ரீதியாக ஏற்பட்ட மசகு எண்ணை விலைக் குறைப்பின் பிரதிபலன்களை இந்த நெருக்டியான நிலையிலும் மக்களுக்கு வழங்காது தவிர்த்து அதனை மறைப்பதற்கு கண்துடைப்பாக வழங்கப்பட்ட பருப்பையும் டின்மீனையும் வாங்குவதற்காக; அடுத்தவன் பிணமாக விழுந்தாலும் பரவாயில்லை என்று கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் என இந்த இரண்டு நிகழ்வுகளும் இருபக்க சுயநலன்களின் மீதும் இந்த தேசத்தின் ஆட்சியாளன் மக்கள் உறவு கட்டியெழுப்பப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
இதற்கு மேலால் இதனை விளங்கிக் கொள்வதற்கு எந்த உதாரணமும் அவசியமில்லை. சாதாரணமாக மக்களின் ஒரு சிறிய தேவையை நிறைவு செய்து கொள்வதற்காக தம்மால் தெரிவு செய்யப்பட்ட, தமது வரியால் கொண்டு நடாத்தப்படுகின்ற தமது பிரதிநிதியை சந்திப்பதற்காக அடிமைகள் போன்று மக்கள் ஒரு முறைக்கு பலமுறை அரச அலுவளகங்களிலும், திணைக்களங்களிலும்,அமைச்சுக்களிலும் அலைமோதுவதைக் காண்கின்ற ஒவ்வொரு தடவையும் இதற்கான உதாரணங்கள்தான்.
இதற்கப்பால் மக்களது சுமூகமான, இயல்பான வாழ்வை, காரியங்களை குழப்பி, அதனை பிரச்சினையாக மாற்றி அதனைத் தீர்த்துத்தருவதாக நெருக்கடியை ஏற்படுத்தி அதிகாரத்துக்கு அலைகின்ற, பதவிக்கு அலைகின்ற மக்கள் பிரதிநிதிகளாக தம்மைக் கூறிக் கொள்ளும் கொள்ளையர்களது தொல்லையும் ஒரு புறம் பலமானதாக இந்தப் பரப்பில் காணப்படுகின்றது.
அதற்கப்பால் இந்த அதிகாரக் கும்பலை அண்டி பிழைப்பு நடாத்துகின்ற அதிகாரக் கைக் கூலிகளின் கெடுபிடிகள் இன்னோர் பக்கம். இவற்றையெல்லாம் இந்த நெருக்கடியான சூழலில் தெளிவாக அவதானிக்கலாம்.
ஒரு தேசமாக நாம் எழுந்து நிற்க வேண்டுமாயின் இந்தச் சூழ்நிலையில் மாற்றம் கொண்டுவந்தாக வேண்டும். இன்றைய நெருக்கடி நிலையை வெற்றிகொள்வதற்கு நாம் எப்படி சுயநலன்களுக்கு அப்பால் ஒரு தேசமாக எழுந்து நிற்க வேண்டிய தேவை காணப்படுகின்றதோ, அதே போன்று ஒரு தேசமாக நாம் நெருக்கடி நிலையிலிருந்து எழுந்து நிற்பதற்கும் அதே செயன்முறையை கடைப்பிடித்தாக வேண்டியுள்ளது. அதற்கான பாடத்தை எத்தனை முறை கற்றும் நாம் மீண்டும் மீண்டும் அதனை மறந்தே போகின்றோம்.
கொள்கையாக்க நிலையில் சிந்திக்கும் தூர நோக்குக் கொண்ட, சுயநலமற்ற தலைமைகள் எமக்கு அவசியப்படுகின்றனர். நாட்டின் தலைமைக்கும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கும் இத்தகையவர்கள் எமக்கு அவசியப்படுகின்றனர். அந்தத் தலைமைகள் அன்றாடக் கூலி தனது அன்றைய நாளை திட்டமிடுவது போன்று நாட்டின் போக்கை தனது தலையால் மட்டுமே திட்டமிட்டு கட்டளை பிறப்பிக்கின்ற ஒரு வராக இருக்கக் கூடாது. துறைசார்ந்த வல்லுனர்கள், மூளைசாளிகள் என அனைவரையும் ஒன்று திரட்டி தீர்மானம் எடுத்து வழிநடாத்தும் தூரதிருஷ்டிகொண்ட தலைமையாக இருக்க வேண்டும்.
அதற்கு அடுத்த மட்டத்தில் பொதுநலனிற்காய் தம்மை அர்ப்பணித்து செயலாற்றும் செயல்திறன் கொண்ட ஒரு ஊழியர்ப்படை அவசியப்படுகின்றனர். அவர்கள் எப்போதும் தேசத்தின் அபிவிருத்தி இலக்குகளை தமது இலக்குகளாய்க் கொண்டு புத்தாக்கத்துடன் பணியாற்றும் ஊக்கம் கொண்டோராய் இருக்க வேண்டும்.
மறுபுறம் தமது சொந்த நலனை விட பொது நலனை முற்படுத்தி சிந்திக்கும் குடிமக்கள் அவசியப்படுகின்றனர். அபிவிருத்தி அடைந்த ஒரு தேசத்தில்தான் ஒவ்வொரு தனிமனிதனும், குடும்ப்பமும் பிரதேசமும் மாவட்டமும் சமூகமும் பாதுகாப்பாயும், அமைதியாயும், உரிய வசதிவாய்ப்புக்களுடனும் வாழமுடியும் என்ற பொதுச் சூத்திரத்தை புரிந்தவர்களாக அவர்கள் காணப்பட வேண்டும்.
இந்த வகையில் எமது தேசம் கட்டியெழப்பப்பட வேண்டுமாயின் அதனை வழிநடாத்துவதற்கான பரந்த அளவிலான ஒரு மக்கள் சக்தி, இயக்கம் இந்த நாட்டில் கட்டியெழுப்பப்பட வேண்டும். அது இன,மத, மொழி, பிரதேச, கட்சி பேதங்களுக்கு அப்பால் தேசிய தளத்தில் பணியாற்றக் கூடிய அமைப்பாக காணப்பட வேண்டும். சமூகத்திற்காக பணியாற்றக் கூடிய சுயநலமற்ற சிறந்த தலைமைத்துவப் பண்பு கொண்ட மனிதர்கள் அதனைச் சூழ ஒன்று திரட்டப்பட வேண்டும். அங்குதான் இரு பக்கமும் விசுவாசம் பலப்படுத்தப்பட்ட ஒரு தேசத்தின் நிரமாணத்திற்கான உழைப்பு உண்மையாய் சாத்தியப்படும்.
எம்.என்.இக்ராம் (M.Ed)
20.03.2020

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...