Sunday, May 17, 2020

பெருநாள் தினத்தை எவ்வாறு அமைத்துக் கொள்வது? எம்.என்.இக்ராம்


அறிமுகம்

பெருநாள் தொழுகை ஹிஜ்ரி முதலாம் வருடம் சட்டமாக்கப்பட்டது. நபியவர்கள் தொடர்ச்சியாக தொழுதுவந்த ஸுன்னா முஅக்கதாவாக (வலியுறுத்தப்பட்ட ஸுன்னா) இது காணப்படுகிறது.
எத்தனை றக்கஅத்துக்கள்?
பெருநாள் தொழுகை இரண்டு றக்கஅத்துக்களைக் கொண்டதாகும். முதல் றக்கஅத்தில் ஆரம்பத் தக்பீரைத் தவிர்த்து 07 தக்பீர்கள் சொல்லப்பட வேண்டும். இரண்டாவது றக்கஅத்தில் ஸுஜுதிலிருந்து எழும்பும் போது சொல்லும் தக்பீரைத் தவிர்த்து 05 தக்பீர்கள் சொல்லப்பட வேண்டும். தொழுகையின் ஏனைய அனைத்து அம்சங்களும் வழமையான தொழுகைகள் போன்றதே.
எவ்வாறு தொழுவது?
இந்த தொழுகைக்கு அதானோ இகாமத்தோ தொழுகைக்காக ஒன்றிணைந்து விட்டோம் என்ற அழைப்போ கிடையாது.
ஒருவர் ஊரில் தங்கியிருப்பினும் பிரயாணத்தில் இருப்பினும் இதனை தொழுது கொள்ள முடியும். இதனை ஒருவர் தனித்தோ கூட்டாகவோ வீட்டிலோ, பள்ளியிலோ, திடலிலோ நிறைவேற்றிக் கொள்ளலாம். இம்முறை நாம் வீட்டில் தனித்தோ அல்லது வீட்டிலுள்ளவர்களுடன் மாத்திரம் கூட்டாகவோ நிறைவேற்றிக் கொள்ளலாம்.
பெருநாள் குத்பா
பெருநாள் குத்பா ஸுன்னத்தான ஒரு விடயமாகும். அப்துல்லாஹ் இப்னு ஸாஇப் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் நபியவர்களுடன் பெருநாள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன். அவர் தொழுகையை நிறைவு செய்ததும் “நாம் குத்பா நிகழ்த்தப் போகின்றோம். யார் உட்கார விரும்புகின்றரோ அவர்கள் உட்கார்ந்து கொள்ள முடியும். யார் இங்கிருந்து செல்ல விரும்புகின்றனரோ அவர்கள் செல்லட்டும்” என்று கூறினார்கள். (நஸாஈ, அபூதாவூத், இப்னுமாஜா) இந்த வகையில் பெருநாள் குத்பா என்பது பெருநாள் தினத்தில் நிறைவேற்றப்படும் கட்டாயமான ஒரு கடமை அல்ல என்பது தெளிவு.
தொழுகை நேரம்
சூரியன் உதித்ததிலிருந்து 06 மீற்றர் உயரத்திற்கு செல்கின்ற நேரத்தில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் 03 மீற்றர் உயரத்திற்கு செல்கின்ற நேரத்தில் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் நிறைவேற்றப்படுவதற்குரிய நேரமாகும்.


நபியவர்களின் பெருநாள் தின முன்மாதிரிகள்.


தக்பீர்
நபியவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் பிறை கண்டதிலிருந்து தொழுமிடத்திற்கு சென்று இமாம் தொழுகைக்காக நிற்கும் வரையில் தக்பீர் சொல்லியிருக்கிறார்கள். இந்த வகையில் இந்த தினத்தை நாம் அதிகமதிகம் தக்பீர் சொல்லி அல்லாஹ்வை பெருமைப்படுத்தும் தினமாக அமைத்துக் கொள்ளலாம். தக்பீர் கூட்டாகவோ தனித்தோ அனைத்து சந்தர்ப்பங்களிலும் சொல்ல முடியும். “الله أكبر الله أكبر لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد.” என்ற தக்பீரை சொல்லிக் கொள்வது இலகுவானது. அத்தோடு அதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதற்கும் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
குளிப்பு, நறுமணம், ஆடை
நபியவர்கள் பெருநாள் தினத்திற்காக குளித்து, தன்னிடமிருந்த அலங்காரமிடப்பட்ட ஆடையை அணிந்து, தன்னிடமிருந்த சிறந்த நறுமனத்தை பூசிக் கொள்வார்கள். ஹஸன் (றழி) அவர்கள் அறிவிக்கிறார் நபி(ஸல்) அவர்கள் “இரண்டு பெருநாள் தினங்களிலும் எம்மிடமிருக்கும் ஆடைகளில் சிறந்ததை அணியுமாறும், எம்மிடமிருக்கும் நறுமணங்களில் சிறந்ததை பூசிக் கொள்ளுமாறும், எம்மிடமிருக்கின்றவற்றில் பெறுமதியானதை உழ்ஹியா கொடுக்குமாறும் ஏவினார்கள்”. (ஹாகிம்) இந்த வகையில் நாம் புதிய ஆடைகள் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எம்மிடம் இருப்பதில் சிறந்த ஆடையை அணிந்து கொள்ளலாம்.
உணவு
நபியவர்கள் ஈதுல்பித்ர் நோன்புப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னர் ஈத்தப் பழங்களை ஒற்றைப் படையாக உண்டு விட்டுச் செல்வார்கள். ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குச் செல்ல முன்னர் எதனையும் சாப்பிடமாட்டார்கள் தொழுது முடிந்து வந்து தனது உழ்ஹியாவினால் சாப்பிடுவார்கள். இந்த வகையில் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் ஒற்றைப் படையாக ஈத்தப் பழங்களை சாப்பிடுவது விரும்பத்தக்கதாகும்.
குழந்தைகள், பெண்களை தொழுமிடத்துக்கு அழைத்து வருதல்
நபியவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தொழுமிடத்துக்கு அழைத்து வரும்படி ஏவினார்கள். அந்த வகையில் தொழுகையில் விதிவிலக்களிக்கப்பட்டவர்களும் அங்கு சமூகம் தந்தார்கள். நாம் இம்முறை வீட்டில் அனைவரும் ஒன்று கூடும் நேரமாக தொழுகைக்குரிய நேரத்தை அமைத்துக் கொள்ளலாம்.
ஸதகா
நபியவர்கள் பெருநாள் தொழுகை முடிந்து ஸதகா செய்வதனை ஊக்கப்படுத்தினார்கள். நாமும் இந்த ஸுன்னாவை பெருநாள் தொழுகைக்கு முன்னர் நிறைவேற்றும் ஸகாதுல் பித்ராவிற்கு மேலதிகமாக பெருநாள் தினத்தில் அதிகம் நிறைவேற்ற முடியும். ஸதகா என்பது யாருக்கு கொடுக்கப்பட் வேண்டும் என்ற வரையறை கிடையாது. அது முஸ்லம்களுக்கு மாத்திரமன்றி முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் கொடுக்கப்பட முடியும். இது அதற்கான சிறந்த காலப்பகுதியாகும்.
தொழுமிடத்துக்கு செல்லும் போதும் வரும்போதும்
நபியவர்கள் பெருநாள் தினத்தில் தொழுமிடத்துக்கு செல்லும் போது ஒரு பாதையாலும் அங்கிருந்து வரும் போது வேறுபாதையாலும் பயணிப்பவராக இருந்தார்கள். இதன் நோக்கம் அதிகமானோரை சந்திப்பதாகும். இதனை இம்முறை நாம் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி அதிகமானோருடன் தொடர்பு கொண்டு சுகம் விசாரித்து வாழ்த்துச் சொல்வதன் வாயிலாக செய்து கொள்ள முடியும்.
உண்டு குடித்து விளையாடி மகிழ்தல்
நபியவர்கள் பெருநாள் தினத்தில் உண்டு குடித்து விளையாடி மகிழ்வதனை ஊக்குவித்தார்கள். அவ்வாறு அவரும் நடந்து கொண்டார்கள். இம்முறை எமது சூழ்நிலையை கருத்திற் கொண்டு இதனை நாம் எமது வீட்டோடு சுருக்கிக் கொள்ளும் வகையில் வடிவமைத்துக் கொள்ளலாம்.
இறுதியாக...
பெருநாள் தினம் குறித்து அல்-குர்ஆன் குறிப்பிடும் போது அத்தினம் மனித சமூகத்துக்கு நேர்வழி கிடைத்தமைக்காக அல்லாஹ்வை பெருமைப்படுத்தி அவனைத் துதித்து நன்றி கூறும் தினம் என எமக்கு அறிமுகம் செய்கின்றது. அந்த வகையில் இந்த பெருநாள் தினத்தை இஸ்லாத்தின் நேர்வழி, அதன் அருள் எம்மைச் சூழ உள்ளவர்களாலும் உணரப்படும் வகையில் நாம் நடந்து கொள்வது மிகவும் முக்கியமானது. அடுத்த மனிதனின் உள்ளத்தில் இஸ்லாம், முஸ்லிம் சமூகம் குறித்த நல்லெண்ணத்தை, மகிழ்ச்சியான மன நிலையை ஏற்படுத்துவது இதன் வாயிலாகும். அந்த வகையில் எம்மைச் சூழ வாழ்வோரின் நிலமைகளை புரிந்து கொண்டு இந்த சிறப்பான நாளை நாம் அழகாக திட்டமிட்டு அமைத்துக் கொள்வோம்.

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...