– எம்.என்.இக்ராம் –
றமழான் மாதத்தின் பிரதான கடமையாக நோன்பு காணப்படுகிறது. அதன் ஏனைய அனைத்து இபாதத்களும் இதனை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளன. இதனை அல்-குர்ஆன் எமக்கு தெளிவாக விளக்குகின்றது. றமழானுடன் தொடர்புபட்டு வந்துள்ள பலமான ஹதீஸ்கள் அனைத்தும் நோன்பையும் அதன் இலக்குகளையுமே வலியுறுத்துவதை அவதானிக்கலாம். ஸகாதுல் பித்ர் என்ற கடமை கூட நோன்பின் விளைவாக ஏற்படுகின்ற கடமையாகவே காணப்படுகின்றது.
“ஈமானை பெற்றவர்களே! உங்களுக்கு முன்பிருந்தோர் மேல் கடமையாக்கப்பட்டது போன்றே உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தக்வா பெற்ற பேணுதலுள்ளவர்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.” –அல்–பகரா:184-
“றமழான் மாதம் அல்குர்ஆன் இறங்கிய மாதமாகும். அது மனிதர்களுக்கு நேர்வழிகாட்டக் கூடியதாகவும் நேர்வழியையும் நலவையும் கெடுதியையும் விளக்குவதாகவும் உள்ளது. யார் அந்த மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர்அதில் நோன்பிருக்கட்டும்…” –அல்–பகரா:185-
நோன்பு என்பது உலகப் பொது வழக்கு என பகராவின் 184 வது வசனம் குறிப்பிடுகிறது. இது அனைத்து சமூகங்களிலும் காணப்பட்ட ஒரு முறைமை என்பதனை நோன்பு அல்லது விரதத்தின் வரலாறு குறித்து தேடிப்பார்க்கும் போது கண்டு கொள்ளமுடியுமாக இருக்கின்றது. அமெரிக்க இயற்கை மருத்துவரான(naturopath) Arnold Devries (1921-1996) ‘Therapeutic Fasting’ என்ற தனது நூலில் இது குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
மேற்கு எல்லா துறைகளிற்கும் மூலச் சிந்தனையாளர்களாகக் கருதக் கூடிய கிரேக்க சிந்தனையாளர்களான சோக்ரடீஸ், பிளேட்டோ போன்றோர் தொடர்ச்சியாக 10 நாட்கள் நோன்பிருக்கும் முறை மனிதனது மனம் மற்றும் உடல் திறனை மேம்படுத்தும் (attain mental and physical efficiency.) என விளக்கியுள்ளார்கள். கணிதத் துறை அறிஞரான பைதகரஸ் தனது பரீட்சைகளுக்கு முன்னர் 40 நாட்கள் நோன்பிருந்திருக்கிறார். தனது மாணவர்களையும் பாடங்களுக்கு வரு முன்னர் நோன்பிருக்குமாறு பணித்திருக்கிறார். பிளேட்டோ வாதியாக அறியப்படுகின்ற சுயசரிதையாளர் Lucius Plutarchus(45-127) இலத்தீன கிறிஸ்த்தவத்தின் தந்தையாகவும் மேற்கின் இறையியலின் நிறுவனராகவும் அறியப்படுகின்ற Tertullian(155-240) ஆகியோர் “ மருந்துப் பாவனைக்குப் பதிலாக ஒரு நாள் நோன்பிருப்பது சிறந்தது (Instead of using medicine better fast a day.)” என குறிப்பிட்டிருக்கிறார்கள். இது இறுதித் தூதரின் வருகைக்கு முற்பட்ட காலமாகும். அதற்குப் பின்னரும் பொதுவாக இது குறித்து நிறையவே பேசப்பட்டுள்ளது. குறிப்பாக எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் அலி இப்னு ஸீனா மூன்று முதல் ஐந்து வாரங்களுக்கு தொடர்ச்சியாக நோன்பிருப்பதை மருத்துவ காரணங்களுக்காக பரிந்துரைத்திருக்கிறார்.
16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவிஸ் மருத்துவர் Paracelsus “நோன்பு ஒரு மகத்தான தீர்வாகும்(Fasting is the greatest remedy.)” என குறிப்பிடுகிறார். 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த Dr. Hoffman நோன்பு குறித்து “Description of the Magnificent Results Obtained Through Fasting in All Diseases”- அனைத்து நோய்களுக்கும் நோன்பின் மூலம் பெறப்பட்ட மகத்தான முடிவுகளின் விளக்கம்- என்ற நூலை எழுதினார். 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ரஷ்ய அறிஞரான Dr. Von Seeland “ எனது ஆய்வின் முடிவாக நோன்பு என்பது உயர்ந்த அளவில் சாத்தியப்பாடுள்ள ஒரு சிகிச்சை முறை மாத்திரமல்ல அது கல்வி ரீதியாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமுமாகும் என முடிவு செய்தேன். (As a result of experiments I have come to the conclusion that fasting is not only a therapeutic of the highest degree possible but also deserves consideration educationally.)” எனக் குறிப்பிடுகிறார்.
இவை Arnold Devries தனது நூலில் நோன்பின் வரலாறு குறித்து குறிப்பிட்டுள்ள முக்கியமான விடயங்களுள் மிகச் சிலதாகும். இவை நோன்பு என்பது மானிட சமூகத்தின் பொது வழக்கு என்பதனை நிரூபனம் செய்கின்றன. இஸ்லாத்தின் தொடர்பில் பார்க்கின்ற போது ஆதம் (அலை) முதல் இறுதித் தூதர் வரை நோன்பு ஒரு கடமையாக இருந்துள்ளமையைக் காணலாம். நபி தாவூத் (அலை) ஒரு நாள் விட்டு மறு நாள் நோன்பிருக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாக இறைத் தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
“அல்லாஹ்வுக்கு விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்… அவர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பிருப்பார்.” -புகாரி,முஸ்லிம்- அவர் தாலுத் என்ற கொடுங்கோலனை மிகைத்து ஆட்சியமைத்த(அல்-பகரா:251), மிகப் பெறும் பலசாலியாக இருந்தார். உலகில் பெறும் சாம்ராஜ்யம் ஒன்றைக் கொண்டு நடாத்திய வாரிசாக ஸுலைமான் (அலை) அவர்களை உருவாக்கிச் சென்றவர்.
இவை எமக்கு நோன்பு என்பது மனித சமூகத்தின் பொது வழக்கு என்பதற்கப்பால் அது மனித வாழ்வின் அனைத்து வகையான ஆரோக்கியத்திற்கும், வளரச்சிக்கும், விருத்திக்கும் அவசியமான ஒரு விடயம் என்பதனையும் தெளிவுபடுத்துகின்றன. மனிதனின் இயக்கம் குறித்துப் பேசும் போது உயிரியல் ரீதியாக சொல்லப்படுகின்ற விளக்கங்கள் இதனை இன்னும் உறுதிப்படுத்துகின்றன.
கலங்கலாலான மனித உடல் அவனது அனைத்து வகையான இயக்கத்திலும் அதன் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது. கலங்களின் சீரான இயக்கத்திற்கு சத்துள்ள ஆரோக்கியமான உணவுகள் அவசியப்படுவது போன்றே மனிதன் உணவு உட்கொள்ளாமல் தவிரந்து நோன்பிருக்கும் ஒரு காலப்பகுதியும் அவசியப்படுகிறது. எனவே, மருத்துவ ரீதியாக ஆரோக்கியமான வாழ்வுக்கு தினமும் 12 மணித்தியாளங்கள் ஆகாரமின்றி இருத்தல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆகாரமின்றி இருத்தல், வாரத்தில் இரு நாட்கள் ஆகாரமின்றி இருத்தல், மாதத்தில் சில நாட்கள் ஆகாரமின்றி இருத்தல், தொடர்ச்சியாக பரிந்துரைக்கப்படுகின்ற நாட்கள் ஆகாரமின்றி இருத்தல் என பல்வேறு வகையான விரதங்கள் அல்லது நோன்புகள் பரிந்துரைக்கப்படுவதைக் காண்கிறோம்.
இவை மினதனது உடல் ஆரோக்கியத்துடன் மாத்திரம் தொடர்பானதல்ல. அவனது உள ரீதியான , உணர்வு ரீதியான மற்றும் ஒழுக்க நடத்தை ரீதியான பகுதிகளிலும் நோன்பின் தாக்கம் காணப்படுகிறது. இதனை Epigenetics (அதிசனனவியல்) எனும் 20ம் நூற்றாண்டில் உயிரியல் துரையில் மாத்திரமல்லாது வாழ்வியலிலேயே புரட்சியை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் (The Epigenetics Revolution) கலங்களில் மரபணுக்களின் தொழிற்பாடு குறித்த கண்டு பிடிப்பும் அதுசார்ந்த துறையின் வளரச்சியும் இன்னும் ஆழமாகவே விளக்குகிறது. உயிரினங்களின் அனைத்து செயற்பாடுகளும் அவனது உணவு, வாழ்வு முறை என்பவற்றால்தான் தீர்மானிக்கப்படுகின்றன. அவனது உணவும், வாழ்வு முறையும் அவனது கலங்களில் உள்ள மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அவன் பரம்பரையின் கைதியல்ல மாற்றமாக அவன்தான் தனது வாழ்வு முறையை தனது வாழ்வமைப்பால் வடிவமைக்கிறான் என சுருக்கமாக இந்தத் துறை எமது வாழ்வியலுக்கு கொடுத்த இயக்க சக்தியளிக்கும் விளக்கத்தைக் குறிப்பிடலாம்.
இந்தப் பின்னணியில் இருந்து கொண்டு அல்-குர்ஆன் உட்பட அனைத்து வேதங்களும் இறங்கிய காலமாக குறிக்கப்படுகின்ற றமழான் ஏன் நோன்பு என்ற கடமையை நிறைவேற்றுவதற்கான காலப் பகுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது என நாம் சிந்திக்கின்ற போது அல்லாஹ்வின் அற்புதமான ஒரு ஏற்பாடு அங்கிருப்பதை அவதானிக்கலாம்.
உலகில் மனித சமூகத்தின் மாற்றத்திற்காக, வளர்ச்சிக்காக, அபிவிருத்திக்காக வழிகாட்டுவதற்கு அருளப்பட்ட வேதங்கள் இறங்கிய காலப்பகுதி எப்போதுமே மானிட சமூகத்தில் மாற்றத்திற்கான காலப் பகுதியாக இருக்க வேண்டும் என்ற ஏற்பாட்டை அல்லாஹ் அங்கு வைத்துள்ளான் என்பதனை விளங்கிக் கொள்கிறோம். எனவேதான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் றமழானை அபிவிருத்திக்கான மாதம் என்று முதல் நிலையில் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கடுத்ததாக மனித வாழவில் அபிவிருத்தியையும் வளரச்சியையும் ஏற்படுத்தும் வகையில் றமழானில் நிகழும் மாற்றங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
“உங்களை நோக்கி அபிவிருத்தி நிறைந்த மாதம் ஒன்று வருகின்றது. அதில்நோன்பிருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அதில் சைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள், சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அதில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு உள்ளது. யாருக்கு அதனது பிரயோசனம் கிடைக்காது போகின்றதோ அவர் அனைத்து நன்மைகளையும் இழந்தவராகிறார்.”
“றமழானின் ஒவ்வொரு தினமும் இரவு வேளையில் ஒரு அழைப்பாளர் நன்மையை விரும்புபவனே நீ முன்னே வா. தீமையை விரும்புபவனே நீ அதனை நிறுத்திக் கொள் என்று அழைப்பார். அதன் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகிலிருந்து பலரை விடுதலை செய்வான்”.
அடுத்து, நாம் எம்மை மாற்றிக் கொள்வதற்கான காலப் பகுதியாக அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிலுள்ள பிரதான இபாதத்தான நோன்பு எத்தகைய இலக்குகளைக் கொண்டது என்பதனை அல்-குர்ஆனும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
“ஈமானை பெற்றவர்களே! உங்களுக்கு முன்பிருந்தோர் மேல் கடமையாக்கப்பட்டது போன்றே உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தக்வா பெற்ற பேணுதலுள்ளவர்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.” –அல்-பகரா:184-
“நோன்பு என்பது ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் பாவங்களில் ஈடுபடவோ, சச்சரவுகளில் ஈடுபடவோ, மோசமாகவும் கவனயீனமாகவும் நடந்து கொள்ளவோ வேண்டாம். நீங்கள் நோன்புடன் இருக்கும் சந்தர்ப்பத்தில் யாராவது உங்களுக்கு ஏசினால் அல்லது உங்களுடன் சச்சரவுப் பட்டால் நான் நோன்பாளி, நான் நோன்பாளி என்று கூறுங்கள்”.
“யார் பொய் பேசுவதையும் பொடுபோக்குத் தனத்தையும் அவற்றின் படி செயற்படுவதையும் விட்டு விடவில்லையோ அவர் தான் உண்பதையும் குடிப்பதையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எத்தகைய தேவையும் கிடையாது”.
இங்கு நோன்பு நோற்கின்ற போது எமது உள, உடல், நடத்தை மாற்றம் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தக்வா என்பது எந்த நிலையிலும் நன்மையை விரும்புகின்ற, செய்கின்ற; தீமையை வெறுக்கின்ற, செய்யாதிருக்கின்ற நிலையாகும். இது நோன்பின் முலம் எதிர்பார்க்கப்படுகின்ற மொத்த மாற்றத்தைக் குறிப்பிடுகின்றது. “நோன்புஎனக்குரியது நானே அதற்கு கூலி கொடுப்பேன்” என்ற ஹதீஸ் இதனை இன்னும் உறுதிப்படுத்துகிறது.
நோன்பு நோற்றல் என்பது அடிப்படையில் ஒருவரது மனதுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். மனக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியாதவர்களால் நோன்பிருப்பது சிரமமானதாகும். சுய மனக்கட்டுப்பாடு உள்ளவர்களே நோன்பை சரியாக நோற்க முடியும். அப்படியான பயிற்சியை பெறுகின்றவர் எந்த நிலையிலும் ஆரோக்கியமான, சிறந்த செயற்பாடுகளிலேயே ஈடுபடுவார். சட்டம் இருக்கலாம் இல்லாதிருக்கலாம் தன்னை யாரும் அவதானிக்கலாம் அவதானிக்காதிருக்கலாம் அவர் ஒரு நேர்மையானவராக இதன் மூலம் மாற்றப்படுகிறார். இங்கு அல்லாஹ்வை நோக்கிய ஆன்மீக நெருக்கம் இயல்பாய் ஏற்படுகிறது.
அடுத்து நோன்பாளியின் உடலில் ஏற்படுகின்ற உயிரியல் ரீதியான மாற்றங்களும் அவரது உள, உணர்வு மற்றும் ஒழுக்க நடத்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தொடர்ச்சியாக நோன்பிருப்பதால் அவரது கலங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. அவற்றில் ஏற்பட்டிருந்த கோளாறுகள் சீர் செய்யப்படுகின்றன. உடலில் சேமிக்கப்பட்டிருந்த தேவையற்ற மற்றும் நச்சுச் சேமிப்புக்கள் அகற்றப்படுகின்றன. அவரது நோயெதிர்ப்பு முறைமை(Immune System) புதுப்பிக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறது. ஹோர்மோன்கள் புதுப்பிக்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் நோன்பாளியினை மானசீகமாக மாற்றுகிறது. அவரது உணர்வுகளை புதுப்பிக்கின்றன. அவரது ஒழுக்க நடத்தைகள் மாறுவதற்கு இவை காரணமாக அமைகின்றன.
இந்த எதிர்பாரக்கப்படுகின்ற மாற்றங்கள் நிகழ வேண்டுமாயின் நோன்பு மிகச் சரியாக நிறைவேற்றப்பட வேண்டும். நோன்பை மிகச் சரியாக அமைத்துக் கொள்வதில் எமது உணவு ஆரோக்கியமானதாகவும் உரிய அளவிலும் எடுக்கப்பட வேண்டும்.
“மனிதன் நிரப்புகின்ற பாத்திரங்களுள் அவனுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கக்கூடியது அவனது வயிராகும். மனிதனுக்கு தனது முள்ளந்தண்டை நிமிர்த்துமளவுபலத்தை அளிக்க்க்கூடிய சில கவள உணவு போதுமானதகும். அவசியப்படின் அவனதுவயிற்றில் 1/3ஐ உணவுக்கும் 1/3ஐ நீருக்கும் 1/3ஐ காற்றுக்கும் ஒதுக்கிக் கொள்வதுபோதுமானதாகும்”
இங்கு உணவின் தரம் மற்றும் அதன் அளவு குறித்த பரிந்துரை தரப்படுகின்றது. இந்த இரண்டும் ஒருவரது நோன்பு சரியான விளைவை தருவதற்கு அவசியமானதாகும். இது குறித்து நோன்பு சம்பந்தமாக இடம் பெற்றுள்ள எண்நிறைந்த ஆய்வுகள் எமக்கு பரிந்துரைக்கின்றன. குறிப்பாக சொல்வதாயின் இயற்கையான, இரசாயனக் கலப்பற்ற உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும். மனித உடலுக்கு அதிகளவில் தீங்கு விளைவிக்கத்தக்க மாச்சத்துள்ள உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அத்தோடு உணவின் அளவைப் பார்க்கிலும் தரத்தில் கவனம் செலுத்தி அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.(இதனை விரிவாக விளங்க போசாக்கு மற்றும் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்ளலாம்).
இந்த வகையில் நோன்பை அமைத்துக் கொண்டால் நோன்பின் பிரயோசனத்தை அதிகப்படுத்தும் றமழானின் ஏனைய வணக்கங்களை நிறைவேற்றுவது எமக்கு எளிதான காரியமாக அமையும். அப்போது எமது தொழுகை சிறந்த பயனைத் தரும். எமக்கு தியான நிலையிலிருந்து அல்-குர்ஆனை கற்பதற்கான ஆரோக்கியம் கிடைக்கும். எம்மை சீர் செய்வதற்கான கவனத்தை எடுத்துக் கொள்கின்ற மனோ நிலை உருவாகும். எமது உணர்வுகள் சீர்பெற்று பொய் என்கின்ற தீமைகளின் தலையாய நிலை முதல் அத்தனை தீமைகளில் இருந்தும் தவிர்ந்திருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
றமழானில் பாவமன்னிப்புப் பெறல், றமழானை குற்றப்பரிகாரமாக அமைத்தல் தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை இந்தப் பின்னணியில் இருந்து விளங்கும் போது அவை எமது வாழ்விற்கான ஒட்டுமொத்த மாற்றத்தை பரிந்துரைப்பதை அவதானிக்கலாம். அந்த மாற்றம் நோன்பை ஆரோக்கியமாக அமைப்பதிலேயே தங்கியிருக்கிறது என்பது எமக்கு விளங்குகின்றது.
உணவுக்கு முன்னால், பெண்ணிற்கு முன்னால் தனது மனதை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவனிடமிருந்து அடுத்த விடயங்களில் நேர்மையை, நலவை எதிர்பார்ப்பது சிரமம். இந்தப் பயிற்சியை நோன்பு எமக்கு சிறப்பாக வழங்குகின்றது. இந்தப் பயிற்சியை பெறும் நாம் குறைந்த அளவில் அடுத்த மனிதனுக்கு தீங்கு செய்யாதவனாக மாற வேண்டும்.“முஸ்லிம் என்பவர் தனது நாவாலும் கரத்தாலும் பிறருக்கு தீங்குசெய்யாதவனாவான்”
உயர்ந்த அளவில் எமக்கு விரும்புவதையே அடுத்த மனிதனுக்கும் விரும்புகிற, அடுத்தவரக்ளின் உணர்வகளை, பிரச்சினைகளை புரிந்து கொள்கின்ற மனவெழுச்சி நுண்மதி/ஆன்மீக நுண்மதி (Emotional intelligence/ Spiritual intelligence) வளரப் பெற்றவர்களாக மாற வேண்டும். இதன் வெளிப்பாடாகவே றமழான் கால ஸதகாக்களும் ஸகாதுல் பித்ரும் அமையப் பெறும்.
“நீங்கள் உங்களுக்கு விரும்புவதை உங்களது சகோதரனுக்கும் விரும்பாதவரை ஈமான்கொண்டவர்களாகமாட்டீர்கள்”.
இந்த றமழானை இந்தப் பின்னணியில் பயன்படுத்திக் கொள்வோம். சுவனத்துக்குச் செல்ல வாய்ப்பளிக்கும், அதில் உயரந்த அந்தஸ்த்தைப் பெற்றுத்தரும் நோன்பாளியாக வாழ்வில் தொடர்ச்சியாக வாழ்வதற்குரியவர்களாக எம்மை மாற்றிக் கொள்ள முயற்சிப்போம்.
No comments:
Post a Comment