Sunday, May 28, 2017

அல்-குர்ஆன் தஃவாவில் முதன்மை பெறட்டும் (மீள்பார்வையில் 03.07.2009 இல் வெளியான கட்டுரை)




இஸ்லாமிய தஃவா தொடர்பில் பேசுகின்ற அறிஞர்கள் தஃவா விற்கான மூலாதாரங்கள் தொடர்பாக பேசுவார்கள்.  அதில் முதலாவது மூலாதாரமாக அல்குர்ஆனைக் குறிப்பிடுவார்கள். உண்மையில் இஸ்லாத்துடன் தொடர்புபடுகின்ற எந்த விடயத்துக்குமேஅடிப் படை மூலாதாரமாக அல்குர்ஆனேகாணப்படும். அல்குர்ஆனை மூலாதாரங்களின் மூலாதாரமாக எமக்குக் குறிப்பிடலாம்.
இந்த வகையில் தஃவாவில் ஈடுபடுகின்றவர்கள் தஃவா தொடர் பான தெளிவைப் பெற்றுக் கொள்ள நாடவேண்டிய அடிப்படை யான இடமாக அல்குர்ஆனேகாணப்பட வேண்டும். எனவே, தஃவாவில் ஈடுபடுகின்ற ஒரு தாஈக்கும் அல்குர்ஆனிற்குமிடையே மிகவும் நெருங்கிய தொடர்பு காணப்பட வேண்டும். அது மேலோட்ட மான, கடமைக்கான தொடர்பல்ல. அது ஆத்மார்த்தமான தொடர்பாக இருக்க வேண்டும். இதனைப் பற்றி சொல்கின்றபோது இமாம் ஹஸனுல் பன்னாஹ் அவர்கள்; “அல்-குர்ஆனுடைய விடயத் தில் எமது இந்த உம்மத் நடந்து கொள்வதைப் போன்று, ஒரு விட யத்தைப் பாதுகாப்பவரேஅதனை வீணாக்குவதை, ஒரு விடயத்தில் கவனம் செலுத்துபவரேஅதில் பொடுபோக்காக இருப்பதை வேறு எதிலும் நான் கண்டதில்லை.” என்கிறார்.
உண்மையில் அல்-குர்ஆனுக்கும் எமக்குமிடையிலான தொடர்பை மிக அழகாக விளக்கும் வார்த்தைகள்தான் இவை. அல்-குர்ஆனோடு நாம் உறவு வைத்துள்ளோம். ஆனாலும், நாம் அதில் பொடுபோக் காக இருக்கிறோம். அல்-குர்ஆனை நாம் உயர்வாக மதிக்கிறோம். ஆனால், நாமேஅதனைப் பற்றி பொருட்படுத்தாமல் இருக்கிறோம். தஃவாவில் ஈடுபடுகின்ற ஒரு தாஈயின் நிலையும் இவ்வாறு இருக்குமாயின் அது மிகவும் ஆபத்தான ஒரு அறிகுறியாகும்.
எமது முன்னோர்களான ஸலப்கள் அல்-குர்ஆனுடனான உறவை அழகாகப் பேணினார்கள். அவர்களில் சிலர் அல்-குர்ஆனை மூன்று நாட்களில் ஓதி முடிப்பவர்களாக இருந்தனர். இன்னும் சிலர் ஒரு வாரத்தில் ஓதி முடிப்பவர்களாக இருந்தனர். மற்றும் சிலர் ஒரு மாத காலத்தில் ஓதி முடிப்பவர்களாக இருந்தனர். இதைவிட குறைந்த எல்லையோ, கூடிய எல்லையோ அல்-குர்ஆனுடனான அவர்களது தொடர்புக்கு காணப்படவில்லை. ஏதாவது வேலைப் பழுவினால் ஒரு நாளைக்குரிய பகுதியை அவர்களால் ஓத முடியாதுபோனால் தூக்கத்திற்குச் செல்லுமுன்னர் அல்-குர்ஆனைத் திறந்து அதில் ஒரு சில பகுதிகளை யாவது ஓதிவிட்டுத் தான் தூங்கு வார்கள்.
அவர்களது இந்தத் தொடர்பு வெறுமனேஅல்குர்ஆனை எந்தப் பாதிப்பும் இல்லாது ஓதுகின்ற தொடர்பு அல்ல. மாற்றமாக அதனால் அவர்கள் பாதிப்புற்றார்கள். பாருங்கள்! உமர் (ரழி) என்றாலேஅவரது கடின இயல்பு எமக்கு ஞாபகம் வரும். ஆனால், ஒரு வசனத்தை ஓதி அதன் பாதிப்பால் மாதக்கணக்கில் நோயுற்றுப் போனர் அந்த மனிதர். அவரை எல்லோரும் நோய்விசாரிக்கச் சென் றார்கள். ஏன்? அல்குர்ஆனை ஓதியமையால், அதன் வசனங்களின் பாதிப்பால் அவர் நோயுற்றிருந்தார் என்பதனாலேயாகும்.
முஸ்லிம்களின் முதல் கலீபா அபூபக்ர் (ரழி) அவர்களைப் பாருங்கள். நபியவர்கள் அவர்களது இறுதிக் காலப்பகுதியில் மக்களுக்கு இமாமத் செய்வதற்காக முற்படுத்தியபோது ஆயிஷா (ரழி); யா றஸூலல்லாஹ்! அவரை இமாமத் செய்ய அனுப்ப வேண்டாம். ஏனெனில் அவர் ஓத ஆரம்பித்தால் அழத் துவங்கிவிடுவார். அதனால் அவர் ஓதுவது மக்களுக்கு விளங்காது என்றார்கள்.
இவர்களே இவ்வாறு எனின் அல்-குர்ஆன் எனும் தெய்வீக வஹியை தன் உடல் வியர்க்க, முகம் சிவக்க கடும் பாரத்துடன் சுமந்து பெற்றுக் கொண்ட இறைத் தூதர் பற்றி சொல்லவா வேண்டும். ஆயிஷா (ரழி) சொல்வதுபோல் அவரது வாழ்வே அல்-குர்ஆன்தான். “ஹூதும் அதன் சகோதரிகளும் என்னை நரைக்கச் செய்துவிட்டன” என அவர் கூறுகிறார். அவர் இந்த வேதத்தை ஓதும்போது பாத்திரத்தில் நீர் கொதிப்பது போன்று அருகிலுள்ளவர்களுக்கு சத்தம் கேட்கும். யா ரஸூலல்லாஹ்! உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும். உங்கள் தோழர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும்.
சகோதரர்களே! தாஈக்களின் தலைவர்கள் இப்படித்தான் இருந் தார்கள். இதனால்தான் தாஈக்களின் தலைவர் (ஸல்) அவர்கள் “அல் குர்ஆனை ஓதும்போது நீங்கள் அழுங்கள். முடியாவிடின் சிரமப்பட்டு, வழிந்து அழுகையைக் கொண்டுவாருங்கள்” என்றார்கள். இதன்கருத்து என்ன?
அல்-குர்ஆனால் நீங்கள் பாதிப்புப் பெற வேண்டும் என்பதுதான். அல்-குர்ஆனால் பாதிப்புப் பெறாத ஒரு மனிதனால் அல்-குர்ஆனின் தூதை சுமக்கவும், அதனை மக்களுக்கு எத்திவைக்கவும், வேறு என்ன தகுதிதான் இருக்கப் போகின்றதுவோஅல்லாஹ்தான் அறிவான்.
இதனால்தான், ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி அவர்கள்; “அல்-குர்ஆனை சரியாக ஓதத் தெரியாதவனை, ஸுன்னாவை சரியாக உச்சரிக்கக் கூட தெரியாதவனை மிம்பர்களில் ஏற விட்டதுதான் நாம் செய்த முதல் தவறு” என்றார்.
நவீனகாலத்தில் தாஈக்களின் இமாம் என்று சொல்லப்படுகின்ற இமாம் ஹஸனுல் பன்னாவைப் பாருங்கள். அவர் வீட்டிலிருக்கும் போது எப்பொழுதும் கையில் குர்ஆனுடனேயே இருப்பார். நித்தமும் அதனை ஓதிக் கொண்டும் அதன் கருத்துக்களை சிந்தித்துக் கொண்டுமே இருப்பார். வீட்டில் யாராவது குர்ஆனை மனனமிட்ட வர்களிருந்தால் அவர்களை சரிபார்க்கச் சொல்லி அவர் ஓதுவார். இல்லாதபோது சிறிய ஒருவரிடம் அல்-குர்ஆனைக் கொடுத்து பார்க்கச் சொல்லி அவர் ஓதுவார்.
ஓதும்போது இடைக்கிடை தஸ்பீஹ்களை மொழிந்து கொள்வார். குர்ஆனின் கருத்துக்களில் ஆழ்ந்திருப்பார். நபியவர்கள் ஓதிய முறையை அறிந்து அதன்படியே ஓதுவார். அவர் ஓதும்போது அவரது உள்ளமும் உடலும் நடுங்குவதைக் காணலாம். தண்டனை களைக் கூறும் வசனங்களின் முன்னால் மண்டியிட்டு விடுவார். சுபசோபனங்களை கூறும் வசனங்களின் முன்னால் முகம் மலர்ந்து நிற்பார். அப்போது; தான் இருக்கின்ற இடங்களையும் சிலசம யம் மறந்துபோவார். இவை அவரைப் பற்றி அவரது தந்தை சொன்ன சாட்சியங்கள்.
இமாம் ஹஸனுல் பன்னாவிடம் காணப்பட்ட அல்-குர்ஆனிலே ஓரக் குறிப்புக்கள் எழுதப்படாத இடங்களே இல்லை எனும் அளவு அவர் அல்-குர்ஆனில் ஆழ்ந்துபோய் அதன் சிந்தனைகளைகளைக் குறித்துக் கொள்பவராக இருந்திருக்கிறார். அல்-குர்ஆனுடனான இத்தகைய உறவுதான் உயிருள்ள ஒரு தஃவாவை உலகில் தோற்று வித்தது. அதன் பாதிப்புக்களை விசாலமாக்கியது.
அல்குர்ஆனுடனான இந்த உறவு தஃவாக் களத்தைப் பொறுத்த வரை ஒரு அடிப்படைத் தேவை. தஃவா வரலாற்றை நாம் ஒரு முறை மீட்டிப் பார்க்கையில் அல்-குர்ஆனுடனான உறவு பலவீனப் பட்டுப் போகின்ற போதெல்லாம் தஃவாவும் உயிரற்று பலவீனப் பட்டுப் போயிருப்பதைக் காணலாம். அதனுடனான உறவு பலமாக இருந்திருக்கின்ற காலங்களில் தஃவா, சமூகத்தில் ஓர் உயிருள்ள செயற்பாடாக இருந்திருப்பதைக் காணலாம்.
அல்-குர்ஆன் தஃவாவில் முதன்மைப்படுத்தப்பட வேண்டுமென்ற கருத்தில் எமது ஸலப்கள் மிகத் தெளிவாகவே இருந்திருக்கிறார்கள். இதற்கு மிகவும் தெளிவான பதிலை முஆத் (ரழி) அவர்கள் தருகிறார்கள்: “நபியவர்கள் அவர்களை யெமனுக்கு அனுப்பும் போது நீங்கள் அங்கு மக்களது விடயங்களில் எதனை வைத்து முடிவுகளைப் பெறுவீர்கள், அல்லது தீர்ப்புக் கூறுவீர்கள்? என்று கேட்டதற்கு அவர் சொன்ன முதலாவது பதில்: அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு என்பதாகும்.
நாம் சொல்லவந்த விடயத்தை விளக்க இதனைவிடத் தெளிவான ஒரு வார்த்தை எமக்குத் தேவை யில்லை. இன்று எமது தஃவாக் களத்திலே வார்த்தைகள் மேலோங்கி உயிர் மங்கிப் போயிருப்ப தைக் காண்கிறோம். அந்த உயிர் தஃவாக் களத்தை நோக்கி கொண்டுவரப்பட வேண்டுமாயின் அல்-குர்ஆன் மீண்டும் களத்தை நோக்கி வந்தாக வேண்டும்.

எமது விழாக்களையும் கூட்டங்களையும் நிகழ்வுகளையும் ஆரம்பிக்கும்போது அவற்றை அலங்கரிக்கும் அல்-குர்ஆன் எமது உள்ளங்களையும் அலங்கரிக்க வேண்டும். அங்கு கடமைக்காக ஓதப்படும் வசனங்கள் எமது வாழ்வுக்காக ஓதப்பட வேண்டும். அல்-குர்ஆனை சுமந்த மனிதர்கள் தஃவாவை சுமக்க வேண்டும். அல்லாஹ் எம்மைப் பொருந்திக் கொள்ளட்டும்.

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...