
“இந்த மார்க்கத்தை விலைக்குக் கொடுத்தோர் ஆட்சியாளர்கள் மாத்திரமல்ல அவர்களில் மோசமான மத போதகர்களும் துறவிகளும் அடங்குவர்” –இது உலகப் பற்றற்று வாழ்ந்த போராளியாகவும் தாஈயாகவும் தனது வாழ் கழித்த, அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் அவர்களின் வார்த்தைகள்…இதில் எமக்கு நிறையவே படிப்பினைகள் காணப்படுகின்றன…
நாம் பெயர் கூறி யார் மீதும் பகிரங்கமாக கை நீட்டாவிட்டாலும் பல் தரப்பாலும் சிக்கலுக்குரிய சூழலில் எமது நடவடிக்கைகளை உணர்ச்சிகளுக்கு அப்பால் நகர்த்திச் செல்ல சில உண்மைகளை விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளோம். நாம் நினைப்பது போல் எல்லா விடயங்களும் கருப்பு வெள்ளை என்ற இரு பக்கங்கள் கொண்டதாக மாத்திரம் அமைவதில்லை. அவை பல் பக்கங்களை கொண்டவையாகத்தான் பெரும் பாலும் அமைந்து விடுகின்றன.
அதே போல் அவற்றிற்கு எதிர் வினையாற்றும் நமது நடவடிக்கைகள் போல் அவை உடனடியானவையுமல்ல. ஒரு சில நிகழ்வுகள் உடனடியானவையாக இருந்த போதும் அவற்றை இவ்வாறான நிகழ்வுகளை எதிர்பார்த்திருக்கும் மற்றும் உருவாக்கும் சக்திகள் பல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் சர்வதேச நிகழ்சசி நிரல்களுடன் செயற்படுகின்ற பல்வேறு சக்திகள் காணப்படுகின்றன. ஸியோனிஸம், அமெரிக்கா, ஈரான், சீனா… என இதன் வட்டம் விரிந்தது. இதில் பிராந்திய ரீதியாக எமது நாட்டைப் பொருத்த வரையில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலும் இவற்றுடன் இணைந்தது. இந்த சக்திகள் பரஸ்பரம் தமது நலன்களுக்காக ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டும், ஒன்றுடன் ஒன்று இடை விலகியும் செயற்படுகின்றன. இவற்றுடன் தமது அதிகார நலன்களுக்காக முஸ்லிம் சமூகத்தின் உண்மை முகத்தை சிதைக்கும் நோக்கம் கொண்ட வலைகுடா அமீர்களின் நிகழ்ச்சி நிரல்களும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கன.
அடுத்து இலங்கை போன்ற ஒரு சிறிய தீவில் இத்தகைய சர்வதேச சக்திகளின் கவனம் குவிவதற்குரிய முக்கிய காரணம் இலங்கையின் அமைவிடம் மற்றும் இந்த பிராந்தியத்தில் (ஆசிய பசுபிக்) எழுச்சியடைந்து வரும் இஸ்லாம் என்பனவுமே என்பதனை நாம் எந்த நடவடிக்கையின் போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்தப் பிராந்தியத்தின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இந்துக்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள் முறையே உள்ளனர். இந்த எண்ணிக்கையில் 2050 கள் ஆகும் போது முஸ்லிம்கள் முன்னணி வகிப்பதுடன் இரண்டாம் மூன்றாம் இடங்களில் இந்துக்களும் பௌத்தர்களும் இருப்பர் என்று ஆய்வுகள் எதிர்வு கூறுகின்றன.(http://www.pewforum.org/2015/04/02/asia-pacific/)
பிராந்தியத்தில் வேகமாக வளரும் சனத் தொகையாக முஸ்லிம்கள், இந்துக்களுடன் கிறிஸ்த்தவமும் யூதர்களும் இருப்பர் என்பதுடன் விகிதத்தில் குறைந்து செல்லும் சனத் தொகையில் முக்கியமானதாக பௌத்த சனத் தொகை இருக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. இந்த விடயங்கள் இந்த பிராந்தியத்தில் நிலவும் முரண்பாடுகளை விளங்க எமக்கு உதவும்.(இப்படியான எதிர்வு கூறல் ஆய்வுகள் பலபோது பல மறைமுக நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவகம் செய்வதற்காகவும் புனையப்படுகின்றன என்பதனை கவனத்தில் கொள்ளவும். இங்கு ஒரு மோதல் சூழல் தோற்றுவிக்கப்படுவதற்கான புனைவாகவும் இது இருக்கலாம்)
அதே போல் இந்த பிராந்தியத்தில் உள்ள பிரதான மதங்களுக்கிடையே பெரும்பாலும் நெருக்கமான, இசைந்து செல்லும் இயல்பே காணப்படுகிறது. வரலாற்றிலும் அவ்வாறே இருந்தது. இந்த மதங்களிடையே வேறு பிராந்தியங்களில் உள்ள மதங்களுக்கிடையில் காணப்படும் வரலாற்று ரீதியான பகமைகளோ, குரோதங்களோ கிடையாது. அந்த வகையில் இந்த பிராந்தியத்தின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புபவர்கள் இந்த சக்திகளுக்கிடையிலான மோதலை பெரிதும் விரும்புகின்றனர். அதில்தான் அவர்களது அரசியல், பொருளாதாரம் மற்றும் பூவியியல் நலன்கள் காணப்படுகின்றன.
இந்தப் பின்னணியில்தான் சர்வதேச ரீதியான பின்னணிகளுடன் நின்று பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான பகைமை ஒன்றை விதைக்கும் நடவடிக்கை இந்தியாவில் இந்து-முஸ்லிம் பகைமை போன்று பல்முனைகளிலும் மேற் கொள்ளப்பட்டு வருவதைக் காணலாம்.
இந்த முரண் சூழல் ஒன்றை தோற்றுவிப்பதற்கும், தக்க வைப்பதற்கும் இரண்டு சமூகங்களின் உள்ளிருந்தும் வெளியிருந்தும் பல்வேறு சக்திகள் பயன்படுத்தப்படுவார்கள் என்பதுடன் இத்தகையை சூழலை அதிகார நலன் கொண்ட பெருந் தேசிய சக்திகளும் கவனமாக பயன்படுத்திக் கொள்ளும் அதே வேலை… அவர்களை இத்தகைய மோதலை உருவாக்க விரும்பும் சக்திகளும் மறைமுகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இந்த வகையில் நிதானமிழந்து செயற்படும் தீவிர சிந்தனை பாங்கு கொண்டவர்கள் இத்தகைய நிகழ்ச்சி நிரல்களுக்குள் அவர்களை அறியாமலேயே இலகுவாக உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அனேகம். உதாரணமாக எகிப்தில் மிதவாத இஸ்லாத்தின் எழுச்சியை தடுக்க இத்தகைய தீவிர சக்திகள் எழுபதுகளில் திட்டமிட்டு வளர்க்கப்பட்டு என்பதுகளில் மிதவாத சக்திகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்துடன் இயங்குவதற்கான வாய்ப்பளிக்கப்பட்டு அதிகாரத்துக்கு வெளியில் சமூக உள் வெளியில் உள்ளக முரண்பாடு வழுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு வந்தததை இங்கு நாம் ஒப்பிட்டு பார்க்கலாம்.
முபாரக்கின் உளவுத் துறை இத்தகைய தீவிர ஸலபிப் போக்குடையோரை கையாண்ட விதத்தை உஸ்தாத் பரீத் அப்துல் காலிக் (றஹ்) மேற் கோள் காட்டி உஸ்தாத் றாஷித் அவரது எகிப்தின் சதிப் புரட்சியின் பின்னணி குறித்து விளக்கும் நூலில் விளக்குகிறார். அது எந்தளவுக்கு சென்றது என்றால் பின் நாளில் ஹிஸ்புன் நூராக அறிமுகமான இவர்களின் பிரதித் தலைவராக முபாரக்கின் உளவுத் துரை அதிகாரி ஒருவரே மாறிப் போனது கசப்பான யதார்த்தமாகும். இவர்களுக்கு ஸவுதி உளவுத் துறையுடனும் தொடர்பிருந்தது. அதுதான் அவர்களை இயக்க மற்றைய சக்திகளுக்கான பாதுகாப்பான வழிமுறையாக இருந்தது. இவர்கள் ஹிஸ்புன் நூராக அறிமுகமாக முன்னர் ‘ஷில்லா’ (a small
group of people with shared interests or tastes, especially one that is
exclusive of other people.) க்கள் என அழைக்கப்பட்டனர்.
இவர்கள் 2011 ஜனவரி 25 புரட்சியின் போது முபாரக்கிற்கெதிராக ஆர்ப்பாட்டம் செயவது ஹராம் என பத்வா வழங்கினர். அவர்களது கதீப்கள் புரட்சிக்கெதிராக மிம்பர் மேடைகளை மிக உச்சஸ்தாயியான தொணியில் பயன்படுத்தினர். அது மீடியாக்களிலும் இடம் பிடித்தன.
புரட்சியின் பின்னர் ஸவுதி உளவுத் துரையின் வழிகாட்டலுடன் இவர்கள் புரட்சியாளர்களுடன் வெளிப்படையில் இணைந்து கொண்டனர். இந்த நாட்களில் இவர்களை எகிப்தின் மிதவாத இஸ்லாமிய வாதிகள் கண்டு கொள்ளவில்லை என சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் பலர் குற்றம் சுமத்துகின்றனர்.மிதவாதிகள் மதச் சார்பின்மை சக்திகளை ஒதுக்கி இவர்களில் நம்பிக்கை வைத்தனர். ஆனால், அது பெரும் இடியாக அவர்களுக்கெதிராகவே வந்து வீழ்ந்தது.
பின்னர்,அவர்கள் எதிர் புரட்சியின் ஆதரவாளர்களாக, ஸீஸீயின் கையாட்களாக மாறிப் போயினர். குருகிய காலப் பகுதியில் இத்தகைய மூன்று முகங்களுக்கான சொந்தக் காரர்களாக இருப்போர் யார் என்பதனை ஊகித்துக் கொள்ளுங்கள். ஹிஸ்புன் நூர் தலைவர் பர்ஹாமி இறுதியாக முர்ஸிக்கு எதிராக நிற்பதற்கு சொன்ன நியாயம் அவர் ஷரீஆவை வைத்து ஆட்சி நடாத்தப்படவில்லை என்பதாகும்..
இதே போன்று எகிப்தின் உத்தியோக பூர்வ இடங்களில் இருந்த உலமாக்கள் புரட்சியின் போதும் எதிர்புரட்சியின் போதும் எப்படி பயன்படுத்தப்பட்டார்கள் என்பது வெளிப்படையான விடயம். இதனால்தான் எகிப்தில் நடந்த அத்தனை அநியாயங்களும் பத்வா வாங்கி செய்யப்பட்டவை என்பார்கள். இது எகிப்துக்கும் இஸ்லாமிய உலகிற்கும் புதிதல்ல.1954 இல் இவர்கள்தான் அப்துன் நாஸரால் பயன்படுத்தப்பட்டனர்.
அதே போன்று மிதவாத இஸ்லாமிய இயக்கங்களுக்கு உள்ளால் இருந்த பலரும் கூட பல வழிகளில் இப்படி விலைக்கு வாங்கப்பட்ட வரலாறுகள் காணப்படுகின்றன. இவை எமது கவனத்தை பெற வேண்டிய முக்கிய விடயங்கள்.
இந்தப் பின்னணியை விளங்கும் போது, இங்கு நாம் இரு விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று நாம் இப்படிக் கூறும் போது ஆதாரமின்றி நாம் இவற்றை எமது சூழலில் உள்ளவர்களில் பிரயோகித்து, நிரபராதிகள் மீது கையை நீட்டிவிடக் கூடாது. இங்கு இந்த விடயம் முன்வைக்கப்பட்ட நோக்கம் அதுவல்ல. மாற்றமாக இந்த அவதானம் எமக்கு வேண்டும் என்பதுவும். அப்படி எந்த சக்கதியாவது அடையாளப்படுத்தப்பட்டால் அது ஆதார பூர்வமாக உரிய தளங்களில் சுட்டிக் காட்டப்பட வேண்டும் என்பதுடன் இத்தகைய வலைகளில் யாரும் தம்மை அறியாமல் சிக்கியிருந்தால் அவர்கள் அவற்றிலிருந்து கவனமாக தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதும்தான்.
அடுத்த விடயம், நாம் இங்கு விலைக்கு வாங்கள், உளவுத் துறைகளால் பயன்படுத்தப்படல் என்பது நேரடியாக இடம்பெறும் என எண்ணக் கூடாது. அப்படியும் சில சக்திகள் வாங்கப்படுவர். பெரும்பாலும் மறைமுகமான உதவிகள், நெருக்கங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாகவே இது இடம் பெறலாம்.
இந்த வகையில் இன்று எமது நாட்டில் அடிக்கடி கொந்தலிக்கும் நிலைகளுக்கு பின்னால் ஸியோனிஸம், அமெரிக்கா, சீனா, இந்தியா, ஈரான் மற்றும் வலைகுடா அமீர்களின் நிகழ்ச்சி நிரல்கள் கவனமாக இடம் பெறுகின்றன என்பதனை நாம் நன்கு புரிய வேண்டும். அத்துடன் அதிகாரத்திற்கு அலையும் பெருந் தேசிய மற்றும் மேற்கு, இந்திய நிகழ்ச்சி நிரல்களுக்குள்ளால் செயற்படும் குருந் தேசிய சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களும் காணப்படுகின்றன என்பதனை நாம் விளங்கிக் கொண்டு எமது செயற்பாடுகளை குருங்கால மற்றும் நீண்டகால திட்டமிடல்களுடன் முன் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த இடத்தில் நாம் கவனமாக விளங்க வேண்டிய ஒரு விடயம் இருக்கிறது. அதுதான், இந்த அனைத்து சக்திகளும் ஒரே நோக்கம் கொண்டவையல்ல என்பதுடன் தமது நலன்கள் என்று வருகின்ற போது ஒன்றுடன் ஒன்று கவனமாக தொடர்பாகின்றவர்கள் என்பதையும் விளங்க வேண்டும். அந்த தொடர்பு ஒன்றை ஒன்று பயன்படுத்துவதாகக் கூட அமைகிறது. இதனால் தமது நலன்களுக்கான விலை ஒரு சமூகம் என்றிருந்தாலும் அதை அவர்கள் செய்வார்கள்.
இந்த பின்புலங்கள் சரியாக புரியப்படாதவிடத்து, இந்த சக்திகளின் நலன்களுக்காக இந்த நாட்டினதும் பல சமூகங்களினதும் நலன்கள் பலியிடப்படலாம். தீவிர சக்திகள் முதலில் அதிகார எதிர்ப்பாளர்களாக வெளிவந்து, பிறகு அவர்களே சமூகத்தின் நலன்களை அடகு வைத்து அதிகாரத்துக்கு சோரம் போபவர்களாக மாறிப் போவர். மட்டுமன்றி சமூகப் பிரமுகர்கள் பலர் அவர்களை அறியாமலேயே இத்தகைய நிகழ்ச்சி நிரல்களுக்கு பயன்படுத்தப்பட்டு, நாளடைவில் அவற்றிற்கு சேவகம் செய்பவர்களாக மாறிப் போவர்.
இந்த வகையில் எமது நாட்டை பொருத்த வரை பௌத்தர்கள் மற்றும் ஏனைய சக்திகளுடன் இணைந்த ஒரு வாழ்வமைப்பையும், ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கெதிரான தீமைகளை அவர்களுள் உள்ள நல்ல சக்திகளுடன் இணைந்து எதிர்கொள்ளும் வேலைத்திட்டத்தையும் கொண்டு செல்வது குறித்து சிந்திப்பதே இந்த நாட்டுக்கும் அனைத்து சமூகங்களுக்கும் நலன் பயப்பதாக அமையும். குறிப்பாக இந்த விடயத்தை ஷெய்க் றாஷித் அவர்கள் அறபு வசந்தத்துக்கெதிராக எகிப்தில் துவங்கிய எதிர் புரட்சியின் போது பொதுவில் உலகில் பௌத்தம் என குறிப்பாகவே குறிப்பிட்டு அது போன்ற சக்திகளுடன் இணைந்து அநீதியான சக்திகளுக்கெதிரான ஒரு பெறும் போராட்டத்தை சர்வதேச அளவில் வடிவமைக்க இது சந்தர்ப்பமாகக் கொள்ளப்படல் வேண்டும் என்று குறிப்பிட்டமையின் ஆழ அகலம் இப்போதுதான் புரிகிறது.
இந்தப் பிராந்திய எல்லையில் இந்த நாட்டில் வாழ்பவர்கள் சாதாரணமானவர்களல்லர் என்பதையும் எமது பெருமானத்தை எம்மைப் பார்க்கிலும் எமது எதிரிகள் நன்கு விளங்கி வைத்துள்ளனர் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் நாம் நன்குணர வேண்டும். அடுத்து எமது எதிரிகள் பௌத்தர்களோ அல்லது நேரடியாக அடுத்த சமூகங்களோ அல்ல என்பதையும் எமது உண்மையான எதிரிகள் மனித சமூகத்திற்கெதிராக தமது சுயநலன்களை நோக்காகக் கொண்டு செயற்படும் இத்தகைய மாபியாக்கள் என்பதையும் புரிந்து இந்த சூழலை நாம் எதிர் கொள்ள முற்பட வேண்டும். அந்த வகையில் பரஸ்பரம் இணைந்து பயணிக்கும் உறவை இந்த நாட்டில் இன, மதங்களுக்கிடையே தோற்றுவிக்கும் ஒரு பெரும் வேலைத் திட்டமே இத்தகைய மோதல்களை நிரந்தரமாகக் குறைக்கும் என்பதனை நாம் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.இந்த உண்மை எமது சக
சமூகத்தினருக்கும் விளக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment