Saturday, July 2, 2016

ஸகாதுல் பித்ருடன் தொடர்பான சட்டங்கள்-இமாம் ஹஸனுல் பன்னா


தமிழில்: எம்.என்.இக்ராம்
ஸகாதுல் பித்ர் தொடர்பான சட்டங்கள் யாவை?
01. ஸகாதுல் பித்ரின் சட்டமும் அது கடமையானோரும்
ஸகாதுல் பித்ர் பெரியவர்கள், சிறியவர்கள் அனைவருக்கும் கடமையானது என்பது நான்கு இமாம்களிடமும் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப் பட்ட முடிவாகும். இது ஒருவருக்கு பெருநாள் தினத்தன்று தனக்கும் தனது பொறுப்பிலுள்ளவர் களுக்குமான உணவுத் தேவை போக மீதமுள்ள வற்றிலிருந்து கொடுக்கப்பட வேண்டும். இமாம் அபூ ஹனிபா ஸகாத்தின் நிஸாபை அடைந்தவராயும் தனது வீடு, வாகனம், பாதுகாப்புத் தேவைகள் பூர்த்தியான வராயும் இருப்பவர்தான் ஸகாத்துல் பித்ர் கொடுக்க வேண்டுமென ஷர்த் போடு கிறார். இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ரஸூல் (ஸல்) அவர்கள் ஸகாத்துல் பித்ரை ஒரு ஸாஃ ஈத்தம் பழம் அல்லது ஒரு ஸாஃ பார்லிவிதை போன்றவற்றிலிருந்து கொடுக்கு மாறு முஸ்லிம்களிலுள்ள அடிமைகள் சுதந்திரவான்கள் பெரியவர்கள், சிறியவர்கள் அனைவர்மீதும் விதியாக்கி னார்கள். அது மனிதர்கள் தொழுகைக்குப் போவதற்கு முன்னர் கொடுப்பதுதான் அதிகம் கூலி கிடைக்கக் கூடியது.இது இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படை களுள் ஒன்று. இது தொடர்பாக சட்ட அறிஞர்களின் கருத்துக்கள் காணப்படுவது நாமறிந்ததே.
02. கடமையாகும் காலப் பகுதி
ஸகாதுல் பித்ர் ஷவ்வாலின் முதல் நாள் பஜ்ர் உதயமானதிலிருந்து கடமையாகிறது என்பது இமாம் அபூஹனீபாவின் கருத்து. பெருநாளுக்கு முன்னைய இரவு சூரியன் மறைந்ததிலிருந்து கடமையாகிறது என்பது இமாம் அஹ்மதின் கருத்து. இமாம் மாலிக்கும் இமாம் ஷாபிஈயும் இந்த இரு கருத்தையும் கொண்டிருக் கின்றனர்.
03. யாருக்காக கொடுப்பது?
ஒருவர் தனக்காகவும் தனது பொறுப்பின் கீழ் உள்ள தனது குடும்பம், பணியாளர், மனைவி ஆகியோருக் கும் கொடுக்க வேண்டும். அபூ ஹனீபாவின் கருத்துப் படி ஒருவர் தனது மனைவிக்காக கொடுப்பது கடமை யில்லை என்றாலும் தாரகுத்னியில் வருகின்ற ஒரு ரிவாயத் இவ்வாறுள்ளது. நீங்கள் ஸதகதுல் பித்ரை நீங்கள் உணவளிப்போருக்குக் கொடுங்கள்.
04. கொடுப்பதற்குரிய சிறப்பான நேரங்கள்
பெருநாள் தினத்தன்று பஜ்ருக்கு பின்னர் தொழு கைக்கு முன்னர் இது கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இமாம்கள் பெருநாளுக்கு ஒரு நாள் அல்லது இரு நாளைக்கு முன்னர் ஸகாதுல் பித்ர் கொடுக்க முடியும் என்பதில் ஏகோபித்த கருத்துக் கொண்டுள்ளனர். இதற்கு முன்னர் கொடுக்கலாமா என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இமாம் அபூ ஹனீபா ரமழா னுக்கு முன்னர் இதனை முற்படுத்திக் கொடுக்கலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ளார். இமாம் ஷாபிஈ ரமழானின் முதல் நாளிலிருந்து முற்படுத்திக் கொடுக்கலாம் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்.
இமாம் மாலிகின் கருத்துப்படி கடமையாகும் காலப் பகுதியிலிருந்து அதனை முற்படுத்த முடியாது. ஸகாத் துல் பித்ரை பெருநாள் தொழுகையை விடப் பிற்படுத்துவது தடுக்கப்பட்டதாகும். தொழுகைக்கு முன் கொடுக்காவிட்டால் அது நிறைவேற்றப்பட வேண்டிய கடனாக இருக்கும் என்ற கருத்தை அவர் கொண்டுள்ளார். இப்னு உமர் (ரழி)யின் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னர் அதனை நிறைவேற்று மாறு ஏவியதாக வந்துள்ளது. புகாரியில் வருகின்ற ரிவாயத்தில் அவர்கள் பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரு நாள் முன்னர் கொடுப்பவர்களாக இருந்தனர்என்று வருகிறது.
05. அதன் அளவும் எதிலிருந்து கொடுப்பது என்பதுவும்
கோதுமை, பார்லி அரிசி, ஈத்தம்பழம், காய்ந்த திராட்சை, பாலாடைக்கட்டி (Cottage Cheese) போன்ற ஐந்து பொருட்களும் உணவுக்குப் பயன்படுத்தப்படுமாயின் இவற்றிலிருந்து ஸகாதுல் பித்ர் கொடுக்கலாம் என அனைவரும் ஏகோபித்து உடன்படுகின்றனர். இமாம் அபூ ஹனீபா இதில் பாலாடைக்கட்டியின் பெறுமதி கொடுக்கப்பட முடியாது எனக் கருதுகிறார். இமாம் ஷாபிஈ அரிசி, கோதுமை, தானியம் போன்ற உணவுக்குப் பயன்படுத்தும் கணக்கிடப்பட முடியுமான அனைத்திலிருந்தும் ஸகாதுல் பித்ரா கொடுக்கப் பட முடியும் எனக் கருதுகின்றார். கோதுமை மா, மாப்பண்டம் போன்றவை ஸகாதுல் பித்ராவாகக் கொடுக்கப்பட முடியாது என்கின்றார். இமாம் அஹ்மதும் அபூ ஹனீபாவும் இது முடியும் என்கின்றனர். இமாம் அபூ ஹனீபா ஸகாதுல் பித்ராவின் பெறுமதி நாணயமாக கொடுக்கப்பட முடியும் என்ற கருத்தையும் கொண்டுள்ளார். இதே கருத்தை ஷாபிஈ மத்ஹப் சார்ந்த பிற்பட்ட கால அறிஞர்களும் கொண் டுள்ளனர். இது ஏழைகளுக்கு மிகப் பிரயோசனமானதாயின் அதுவே மிகவும் விரும்பத்தக்கது என்றும் அவர்கள் கருதினர். இந்த விடயத்தில் இவர்களை பின்பற்றுவது சிறந்ததாக இருக்கலாம்.
இங்கு ரஸூல் (ஸல்) அவர்கள் கணக்கிட்ட ஸாஃஅளவில் நபியவர்கள் கூறிய ஐந்து வகைகளிலும் ஒரு ஸாஃ கொடுப்பது கடமையாகும். இமாம் அபூ ஹனீபா வின் கருத்துப் படி கோதுமையில் 1/2 ஸாஃ கொடுக்கலாம். அபூ ஸஈத் அல் குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கி றார்கள் நாம் ரஸூல் (ஸல்) அவர்களின் காலத்தில் உணவில் ஒரு ஸாஃ அல்லது ஈத்தம் பழத்தில் ஒரு ஸாஃ அல்லது பார்லியில் ஒரு ஸாஃ அல்லது காய்ந்த திராட்சையில் ஒரு ஸாஃ அல்லது பாலாடைக் கட்டியில் ஒரு ஸாஃ ஸகாதுல் பித்ர் கொடுத்து வந்தோம். நாம் முஆவியா மதீனாவுக்கு வரும் வரை அப்படியே கொடுத்து வந்தோம். அவர் வந்து ஷாமில் இரு முத்து சிவப்பரிசி ஒரு ஸாஃ ஈத்தம் பழத்துக்குசமனாக இருப்பதை நான் பார்த்தேன் என்று கூறினார். பின்னர் மக்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். அபூ ஸஈத் கூறுகின்றார்: நான் ஏற்கனவே கொடுத்தது போன்றே அதன் பின்னும் கொடுத்து வருகிறேன் (புஹாரி). இமாம் புஹாரியின் ரிவாயத்தில் அபூ ஸஈத் தன்னைப் பற்றி சொன்ன பகுதி இடம்பெறவில்லை.
அடுத்து ஸாஃ இன் அளவு யாது என்பதில் புகஹாக் களுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இமாம் ஷாபிஈ, மாலிக், அஹ்மத், அபூ யூசுப் போன்றோர் அது ஈராக்கிய கணிப்பில் இறாத்தல் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இமாம் அபூ ஹனீபா அது ஈராக்கிய கணிப்பில் 8 இறாத்தல் என்கிறார். இமாம் ஷாபிஈயிடம் எகிப்து அளவுப் படி இரண்டு கதஹுகள்...
நவீன அளவியலில்
01 ஸாஃ கோதுமை = 2.176 Kg கோதுமை
01 ஸாஃ அரிசி = 2.520 Kg அரிசி
01ஸாஃ பருப்பு = 2.185 Kg பருப்பு
01 ஸாஃ பார்லி = 2.250 Kg பார்லி
2.5    Kg அல்லதுஅதை விடக் கூடிய பெறுமதியான உணவு அல்லது அதற்குச் சமனான பணம் கொடுப் பதுவே பாதுகாப்பான வழிமுறையாகும்.
06. யாருக்குக் கொடுப்பது?
ஷாபி மத்ஹபினடிப்படையில் அது ஸகாத் கொடுக்கப்படும் எட்டு பிரிவினருக்கும் கொடுக்கப்பட முடியும். ஷாபி மத்ஹப் அறிஞரான இமாம் அஸ்தக்ரி அதனை ஏழைகள், மிஸ்கீன்களில் மூன்று பேருக்கு கொடுக்கலாம் என்கிறார். இமாம் அஹ்மத், மாலிக், அபூ ஹனீபா ஆகியோர் ஒரு ஏழைக்குக் கொடுப்பதே சிறந்தது என்கின்றனர். அதேபோல் ஒரு ஜமாஅத் இணைந்து ஒரு ஏழைக்குக் கொடுப்பதையும் அவர்கள் ஆகுமாக்குகின்றனர்.
இந்தக் கருத்தோடு ஷாபிஈ மத்ஹப் இமாம்களான இப்னுல் முன்திர், அபூ இஸ்ஹாக் போன்றோர் உடன்படுகின்றனர். இவர்கள் இந்தக் கூட்டத்தில் பித்ரா கொடுப்பவர் இருந்தால் அவரும் அதற்குத் தேவையுடையவராயின் அதிலிருந்து பங்கு பெறலாம் என இவர்கள் கருதுகின்றனர். இமாம் மாலிக் அது கூடாது என்கிறார். அத்தோடு ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகளுக்கும் கொடுக்கக் கூடாது. பாட்டன், பாட்டி, பிள்ளைகளின் பிள்ளைகள் போன்ற செலவழிப்பது கடமையற்றோருக்கு பித்ரா கொடுக்கப்படலாம். இமாம் அபூ ஹனீபாவின் கருத்துப்படி சகோதரர், சாச்சா, மாமி முறையிலுள்ளோருக்குக் கொடுக்கலாம். இது தொடர்பில் இமாம் மாலிக், ஷாபிஈயிடம் இரு கருத்துக்களுண்டு. அதில் பிரபல்யமானது இது கூடாது என்பதாகும். பித்ரா காபிருக்குக் கொடுக்கப்படக் கூடாது. ஆனால் திம்மிக்கு கொடுக்கப்பட முடியும் பனூ ஹாஷிம்களுக்கு கொடுக்கப்படக் கூடாது.
ஸகாதுல் பித்ராவை ஒரு பிரதேசத்திலிருந்து இன்னோர் பிரதேசத்துக்கு நகர்த்துவது தொடர்பில் இமாம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது. இமாம் அபூ ஹனீபா இதனை மக்ரூஹ் என்கிறார். ஆனால் நெருங்கிய உறவிலுள்ள தேவையுடையோர் அல்லது தனது பிரதேசத்தைப் பார்க்கிலும் தேவையுடையோர் வேறு பிரதேசத்தில் காணப்படின் அவர்களுக்கு நகர்த்துவது ஆகும் என்கிறார். இமாம் மாலிக் இமாமின் முடிவின்றி நகர்த்தக்கூடாது. ஏனெனில் அவரே தனது பிரதேசத்து தேவைகள் பற்றி அறிந்தவர் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார். இமாம் ஷாபிக்கும் இது தொடர்பில் இரு கருத்துள்ளது. அதில் சரியானது நகர்த்தக் கூடாது என்பதாகும். இமாம் அஹ்மத் தனது பிரதேசத்தில் தேவையுடையோர் இருக்க கஸ்ர் செய்யும் தூரமளவு  தூரப் பிரதேசத்திற்கு நகர்த்தக் கூடாது என்ற கருத்தைக் கொண்டுள்ளார்.
07. அதன் தாத்பரியமும் அதை நிறைவேற்றாதாருக்குரிய தண்டனையும்
இது நோன்பாளியை தூய்மைப்படுத்தும். அது அவர் நோன்பின் மூலம் தாக்கமடைந்து கொடை கொடுப்பவராக மாறுவதைக் காட்டும் நடைமுறை. அதேபோல் இது ரமழானில் உதவி கேட்டு வரும் ஏழைகள், மிஸ்கீன்கள் அவ்வாறான நிலைக்குட்படுவதை தவிர்ப் பதற்கான வழி, அவர்களும் முஸ்லிம் சமூகத்தின் ஏனைய உறுப்பினர்கள் போல் சமமாக இருந்து பெருநாளில் சந்தோசத்தை அனுபவிக்க வழியமைக்கும்.
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்: ரஸூல் (ஸல்) அவர்கள் ஸகாதுல் பித்ரை நோன்பாளியை கேளிக்கைகள், தவறான வார்த்தைகள் என்பவற்றிலி ருந்து தூய்மைப்படுத்தும் வகையில் கடமையாக்கினார்கள் (அபூ தாவூத்). இப்னு உமர் அறிவிக்கும் ஹதீஸ் அவர்களை இக்காலத்தில் வலம் வருவதிலிருந்து தவிர்ந்திருக்கச் செய்யுங்கள் (தாரகுத்னி). ஜரீர் (ரழி) அறிவிக்கிறார் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ரமழானின் நோன்பு வானுக்கும் பூமிக்குமிடையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது ஸகாதுல் பித்ரின் மூலம்தான் உயர்த்தப்படுகிறது (ஹப்ஸ் இப்னு ஷாஹின்). கஸீர் இப்னு அப்துல் முஸ்னி தனது தந்தை -பாட்டனிடமிருந்து அறிவிக்கிறார். அவரது பாட்டன் நபியவர்களிடம் யார் ஸகாத் கொடுத்து தனது இறைவன் பெயரை ஞாபகப்படுத்தி தொழுகிறாரோ அவர் வெற்றி பெற்றார் (அஃலா: 15). என்ற வசனம் தொடர்பில் கேட்டபோது நபியவர்கள்: அது ஸகாதுல் பித்ர் தொடர்பில் இறங்கியதாக குறிப்பிட்டார் என்கிறார்.” (இப்னு குஸைமா)
(1353 ரமழான் 27 / 1935 ஜனவரி ஜரீததுல் இஃவானுல் முஸ்லிமீன் 35 -2008  அல்லது 2009 களில் மீள்பார்வையில் வெளியாகிய எனது மொழி பெயர்ப்பு)

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...