Saturday, July 2, 2016

ஈதுல் பித்ர் இறை வழிகாட்டல் கிடைத்தமையை கொண்டாடும் தினம்- எம்.என்.இக்ராம்

  

றமழானை தொடர்ந்து வருகின்ற ஈதுல் பித்ர் தொடர்பாக அல்-குர்ஆன் குறிப்பிடும் போதுநீங்கள் றமழானில் நோன்பிருக்கும் காலத்தை பூரணப்படுத்தி, உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டியமைக்காக அவனை பெருமைப்படுத்த வேண்டும்அப்படி செய்தால் நீங்கள் நன்றி செலுத்தியோராவீர்கள்என ஸுரா பகராவின் 185 வது வசனத்தின் இறுதியில் குறிப்பிடுகின்றான்.இதே கருத்தை ஈதுல் அழ்ஹாவில் உழ்ஹியா கொடுப்பது சம்பந்தமாக பேசிவிட்டு ஸுரா ஹஜ்ஜின் 37வது வசனத்திலும் குர்ஆன் ஈதுல் அழ்ஹாவுடன் தொடர்பு படுத்தி விளக்குகிறது.
இவை இரண்டையும் வைத்துப் பார்க்கும் போது ஏனையோரின் கொண்டாட்டங்களுக்குப் பகரமாக தரப்பட்ட இவ்விரு கொண்டாட்டங்களும் ஒரு முஸ்லிமுடைய அடிப்படை பணியுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளமையை காண்கிறோம்.
இரு பெரும் கடமைகளுடன் தொடர்பாக இந்த இரு பெருநாட்களும் அமையப் பெற்றுள்ளன. ஒன்று நோன்பு மற்றயது ஹஜ். இவை இரண்டினதும் உள்ளடக்கத்தை பார்க்கின்ற போது அவை இவ்வுலகில் நிகழ்ந்த இரு பெரும் விடயங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதைக் காணலாம்
ஒன்று அல்-குர்ஆன் உட்பட உலகிற்கு வேதங்கள் இறங்கிய காலப்பகுதி. மற்றயது அந்த வேதத்தை இவ்வுலகில் சுமந்து அதற்காய் முன்னணியில் நின்ற இறைத் தூதர்களது தியாக வாழ்வை நினைவுபடுத்தும் வகையில் நினைவு கூறப்டும் இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுபடுத்தும் நிகழ்வுகளுடன்,இடத்துடன் தொடர்பு படுகிறது.
இந்த தொடர்புகள் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்கின்றது. அதுதான் ஒரு முஸ்லிம் எத்தகைய சூழ்நிலையிலும் அவனது அடிப்படை பணியை விட்டும் தூரப்பட்டு வாழ முடியாது. அது அவனது கொண்டாட்டங்களாயினும் சரியே. அந்த வகையில் இவ்விரு பெருநாட்களும் நேர்வழி கிடைக்கப் பெற்றமையையும் அதற்காக தியாகம் செய்து உழைத்த இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டமையையும் கொண்டாடும்  தினங்கள். எனவேதான் அல்லாஹ் இவ்விரு தினங்களிலும் நேர்வழி கிடைத்தமைக்காக அல்லாஹ்வை பெருமைப்படுத்துங்கள் என குர்ஆனிலே குறிப்பிடுகிறான்.
றமழானைப் பற்றி அல்-குர்ஆன் குறிப்பிடும் போதுறமழான் மாதம் அல்-குர்ஆன் இறக்கப்பட்ட மாதமாகும். அது மனிதர்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காகவும், நேர்வழியையும் தெளிவையும் விளக்குவதற்காகவும் இறக்கப்பட்டது. எனவே, யார் இந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோனபிருக்கட்டும்…” என நேர்வழிகாட்டலை வழங்குவதற்காக குர்ஆன் இறங்கிய மாதம் என்கிறது. அதே வசனத்தின் இறுதி இந்த மாதத்தை முடிக்கும் போது நேர்வழி பெற்றமைக்காக அல்லாஹ்வை பெருமைப்படுத்துமாறு சொல்கிறது.
அந்தவகையில் ஈதுல் பித்ர் கொண்டாடப்படும் போது இந்தக் கருத்து மறக்கப்படக் கூடாது. ஹதீஸ்கள் றமழானில் நபியவர்கள் செய்த விஷேடமான மூன்று விடயங்கள் குறித்துப் பேசுகிறது. ஒன்று அல்-குர்ஆனை ஜிப்ரஈல் (அலை) உடன் இருந்து படித்தது. மற்றயது வீசும் காற்றை விட வேகமாக ஸதகா செய்தது. அடுத்தது இஃதிகாப்
இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் நபியவர்கள் ஏன் வீசும் காற்றை விட வேகமாக ஸதகா செய்தார்கள் என்பதை விளக்கும் போதுஅல்-குர்ஆன் உருவாக்க விரும்பும் முதன்மையான பண்பாக அது உள்ளதுஎன்பார்
உண்மையில் இது ஆச்சரியமான விடயமல்ல. இறை வேதம் இரண்டு விடயங்களை முதன்மை நோக்காகக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஒன்று மனித நலன் மற்றயது இறைத் தொடர்பு. இறை வேதத்துடன் ஆழ்ந்து தொடர்பு படுகின்ற ஒருவர் அல்லாஹ்வுடனும் மனித உலகுடனும் தொடர்பாகின்றார்
தனது வாழ்வு அல்லாஹ்வுக்காக மனித நலன் காக்க செலவிடப்பட வேண்டும் என உணர்கிறார். இதன் வெளிப்பாட்டைத்தான் நபியவர்களிடம் நாம் காண்கிறோம். ஸகாதுல் பித்ர் கூட இவற்றுடன் தொடர்பானதாகவே அமைந்துள்ளது. றமழானில் இரவு வணக்கம் கூட நபியவர்களைப் பொருத்தவரை ஏனைய நாட்களைவிட்டும் விஷேடமாக அமையவில்லை என ஆயிஷா(றழி) குறிப்பிடுகிறார்கள். அப்படியாயின் இரவு வணக்கம் அல்-குர்ஆனை கற்பதற்கும் அதனடியாக அல்லாஹ்வை நெருங்குவதற்கானதுமான சாதணமாகவே நபியவர்களுக்கு பயன்பட்டிருக்கிறது.
இங்குதான் இபாதத்களை, அதன் நோக்கங்களை சரியாக புரிந்து நிறைவேற்ற வேண்டிய தேவை எமக்கு ஏற்படுகிறது
இபாதத்கள் வெறுமனே மறுமை நன்மை என்ற ஒன்றை மாத்திரம் நோக்காகக் கொள்ளவில்லை. அவை வாழ்விற்கு உயர்ந்த பொருளை அளித்து அதனை உயர் இலக்குகளை நோக்கி வழிப்படுத்துவதை நோக்காகக் கொண்டமைந்திருப்பதைக் காண்கிறோம்
ஆனால், துரதிஷ்டவாசமாக இபாதத்கள், அதற்கான மறுமை நன்மைகள், அதன் எண்ணிக்கைகள் குறித்துப் பேசப்படும் அளவு அவற்றின் நோக்கங்கள், தாற்பரியங்கள் குறித்துப் பேசப்படுவதில்லை. எனவேதான் சுனாமி வரும் போது, வெள்ளம் வரும் போது அவற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முன்வரும் இளைஞர்கள் றமழான் வரும் போது, பெருநாள் வரும் பேது அதன் நோக்கங்களை நிறைவு செய்ய முன் வராதிருக்கிறார்கள். காரணம் முன்னையதில்  நோக்கம் தெளிவுபின்னயதில் அவர்களுக்கு அது தெளிவு படுத்தப்படுவதில்லை
இறைத் தூது கிடைத்தமையை நினைவு கூர்ந்து கொண்டாடுவதுதான் றமழானும் அதனைத் தொடர்ந்து வரும் பெருநாளும் என்ற விளக்கம் அவர்களுக்கு கொடுக்கப்படுமாயின் அவர்களது உள்ளங்களில் அதற்கு ஒரு பெறுமானம் ஏற்படும். அல்-குர்ஆன் எரிக்கப்படும் போது பொங்கியெழும் உணர்வுகள் இங்கும் வழித்துக் கொள்ளும்
றமழானும், பெருநாள் தினமும் அல்-குர்ஆன் இறங்கியமையை கொண்டாடும் தினம் என்பதால் அல்-குர்ஆன் இறங்கிய நோக்கங்களுள் பிரதானமானதான மனித நலன் காத்தல் என்ற பணியால் அவர்கள் இந் நாட்களை நிரப்புவார்கள். தான் ஒரு தூதை சுமந்த சமூகத்தின் பிரதிநிதி என்ற உணர்வுடன் அவர்களது பெருநாள் கொண்டாட்டங்கள் அமைந்திருக்கும். இதன் போது பெருநாள் கொண்டாட்டங்கள், தான் மகிழ்ந்திருத்தல் என்ற சுயநலம் சார்ந்த எல்லையை தாண்டி அடுத்த மனிதனை மகிழ்வித்தல் என்ற எல்லையை நோக்கி வியாபிக்கும்
மறுமையில் மாத்திரமல்ல உலகிலும் இறை வேதமும் அதற்கான உழைப்பும்தான் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் தரவல்லது என்ற உயர்ந்த செய்தியை உலகிற்கு இந் நாட்கள் கொடுக்கும். இறை வேதத்தை மனித சமூகம் பெற்றமையை கொண்டாடும் சர்வதேச தினமாக எமது ஈதுல் பித்ர் எப்போது பரிணமிக்கப் போகிறது?!.அல்லாஹ் எம்மை பொருந்திக் கொள்ளட்டும்.


No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...