யுவோன் ரிட்லி ஒரு பிரித்தானிய பத்திரிகையாளர். 2001 ஒக்டோர் 7ல் ஆப்கான் மீதான
அமெரிக்கத் தாக்குதலுக்கு 10 நாட்களுக்கு முன்பு ஆப்கானினுள் நுழைந்து அங்குள்ள
மக்கள் எவ்வாறு யுத்தத்திற்கு முகம் கொடுக்கத் தயாராகின்றார்கள் என்பதை
பதிவுசெய்வதற்காகச் சென்றபோது தாலிபான்களால் கைதுசெய்யப்பட்டு பல நாட்கள் சிறை
வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டு இரண்டரை
வருடங்களின் பின்னால் இஸ்லாத்தைத் தழுவினார். இஸ்லாத்தை ஏற்றதால் இவரது கணவர்
பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் அல்ஜீரியாவைச் சேர்ந்த ஹாபிழ் ஒருவரை
அல்குர்ஆனின் 10ஸுராக்களை மஹராகப் பெற்று திருமணம் செய்துகொண்டார்.
இஸ்லாத்தை ஆழ்ந்து கற்றதன் பின்னால் ஏற்றுக்கொண்ட இவர் தெளிந்த சிந்தனையுடன்
இஸ்லாமிய உம்மத்தின் விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவருடன் அல் முஜ்தமஃ
சஞ்சிகை லாஹூரில் வைத்து மேற்கொண்ட நேர்காணலின் தேர்ந்த ஒரு பகுதியை வைகறை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
நீங்கள்
ஸைப்ரஸிலிருந்து காஸா சென்ற முதல் அணியில் இருந்தீர்கள். அங்கு சென்றபோது உங்களது
உணர்வுகள் எவ்வாறிருந்தன?
அங்கு ஹமாஸ் சிறந்த பங்காற்றுகிறது. அது தனது பணிகளை
சிறந்த முறையில் தொடர்கின்றது. ஹமாஸ் அமைப்பு அறபு நாடுகளில் தேர்தலில்
குதிக்குமாயின் மக்கள் அவர்களுக்கேவாக்களிப்பார்கள்.
ஏன்?
ஏனெனில், ஹமாஸின் தலைமை காஸாவில் எளிமையாக வும் பணிவாகவும்
வாழ்கின்றது. அங்கு பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யாவுக்கும் ஏனைய மக்களுக்கும்
இடையேவித்தியாசம் கிடையாது. அங்கு அனைவரும் வாழ்விலும் முற்றுகையிலும் சமமாகவே
உள்ளனர்... ஹனிய்யா மக்களுக்கு மத்தியில் பணிவான ஒரு வீட்டில் வாழ்கிறார்.அதனைக்
காண்கின்ற எவரும் ஹமாஸ் மீது மதிப்பெண்ணமே கொள்வர்.
நான் காஸாவில் கண்ட ஆடம்பரமான ஒரேஒரு வீடு பலஸ்தீன
அதிபர் மஹ்மூத் அப்பா டைய வீடுதான். அந்த வீடு ஹொலிவூட் -அமெரிக்க சினிமா
தயாரிப்பாளர்களின் நகர்- வீடுகளை ஒத்திருக்கின்றது. இந்த வீட்டை ஹமாஸ்
தகர்த்துவிடாது இதுவரை பாதுகாத்து வருகின்றது.
ஹமாஸ்
காஸாவை ஒரு சிறைச்சாலையாக மாற்றி யிருப்பதாகக் கூறும் குற்றச்சாட்டு பற்றிய உங்கள்
கருத்து என்ன?
இந்த வாதாட்டங்கள் உண்மையானவையல்ல. நாம் இந்த
விடயத்தை ஆய்வு செய்து பார்த்தோம். காஸாவின் மனித உரிமை நிலமைகள் பற்றி
கவனித்தோம். நாம் காஸாவில் இருக்கும்போது எங்களில் இருவர் அங்கிருந்த
சிறைகளுக்குச் சென்றனர். அவர்கள் அங்கு எல்லாம் இயல்பாக இருப்பதைக் கண்டுள்ளனர்.
அங்கு மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படு வதை, குறிப்பாக சிறைக் கைதிகளின்
உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதை நாம் உறுப்படுத்தினோம்.
நீங்கள்
காஸாவின் சிறைகளுக்குள்ளால் கைதிகளுடன் கதைத்தீர்களா?
இல்லை, என்றாலும் எம்முடன் ஸைப்ரஸிலிருந்து வந்த ஒருவர்
சிறைகளுக்குச் சென்று கைதிகளுடன் கதைத்தார். இங்கு முக்கியமான விடயம் இவர் ஹமாஸை
வெறுக்கும் அதனை எதிர்க்கும் ஒருவர். எனினும், சிறைகளுக்குள்ளால் மிகவுமே
உயர்ந்த மனிதநேயத்துடன் கைதிகள் நடாத்தப்படுவதாகவும் அங்கே அவர் எந்த ஒரு மனித
உரிமை மீறலையும் காணவில்லை எனவும் குறிப்பிட்டார். அவர் சிறைகளுக்குள் ளால்
நிலமைகள் இவ்வளவு இயல்பாய் இருப்பதையிட்டு அதிர்ச்சியடைவதாயும் தான் அங்கு
மிகவும் மோசமான நிலமைகள் இருக்கும், மனித உரிமை மீறல்கள் நிறைந்திருக்கும் என
எதிர்பார்த்துச் சென்றதாகவும் என்னிடம் கூறினார்.
நீங்கள்
காஸாவுக்குள்ளால் பல நாட்கள் தங்கியிருந் தீர்கள். அங்கு பாதுகாப்பற்ற சுழல், அச்சமான ஒரு நிலை
காணப்பட்டிருக்குமே?
நிலமை முற்றிலும் மாற்றமாகவே இருந்தது. நான்
பாதுகாப்பாய் இருப்பதாகவே உணர்ந்தேன். உங்களுக்கு ஒரு உண்மையை சொல்கிறேன். நான்
உலகிலுள்ள நிறைய நகர்களை சுற்றி வந்துள்ளேன். ஆனால், நான் காஸாவில் கண்டது போன்ற
பாதுகாப்பானசூ ழலை அங்கு எங்குமே காணவில்லை. உங்களால் நடு இரவில் காஸா நகரின்
வீதிகளில் முற்றிலும் பாதுகாப்பாக சுற்றி வர முடியும் என்பதுவே இதனைக் காண்பிக்கப்
போதுமான சான்றாகும்.
நீங்கள்
காஸாவின் சாதாரண மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினீர்களா?
ஆம், நான் பாதையில் இருந்த மக்களுடன் கதைத்தேன். நான்
கதைத்தவர்களுள் அதிகமானோர் ஹமாசுக்கு எதிரானவர்களாய் இருந்தனர். அவர்கள் அதனை
எந்த அச்சமுமின்றி முழு சுதந்திரத்துடன் கூறினர். நான் அவர் களுக்குச் சொன்னேன்:
நீங்கள் அறபு நாடுகளின் வீதிகளுக்குச் சென்று சுதந்திரமாகப் பேசும் இந்த அனுபவத்தை
பரவலாக கண்டுபார்க்க வேண்டும். நீங்கள் அங்குள்ள அரசுகளை எந்த வித அச்சமுமின்றி
எதிர்த்துப் பார்க்க வேண்டும்.
காஸா பள்ளத்தாக்கில் ஹமாஸின் அதிகாரத்திற்குப்
பின்னர் குற்றச் செயல்கள் 80%மாக குறைந்திருப்பதாகக் கூறும் பக்கச்சார்பற்ற ஒரு
கணிப்பீட்டை பார்வையிட்டேன். மக்கள் தமது விருப்பப்படி ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பதைக்
கண்டேன். இந்த வகையான ஒரு விழாவுக்கு நான் காஸா நகர மேயருடன் சென்றிருந்தேன். நான்
நினைத்தேன் காஸாவை ஹமாஸ் தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்த பின்னர் இவ்வகையான
விடயங்கள் தடைசெய்யப்பட்டிருக்கும் என்று. எனினும், நிலமை சுமூகமாக இருப்பதைக்
கண்டு நான் அதிர்ச்சியுற்றேன்.
ஹனிய்யாவை
சந்தித்த பின்னர் உங்களது உணர்வு எவ்வாறிருந்தது?
நான் நினைக்கிறேன்; காஸா இஸ்லாமிய உலகிலேயே
ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மிகச் சில இடங்களுள் ஒன்று என்று. ஹனிய்யா
அரசியற் தீட்சண்யம் மிக்க ஒரு தலைவர். அவரால் மக்களை ஒன்றுதிரட்டி தலைமைத்துவத்தை
கொடுக்க முடியும். அவருக்கு முன்னர் முன்னாள் அதிபர் அரபாத் இதனை
பெற்றிருந்தபோதும் மஹ்மூத் அப்பாசுக்கு இந்த சிறப்புக்கள் கிடையாதென நான்
நினைக்கிறேன்.
உங்களது
பார்வையில் அபூ மாஸினுக்கும் ஹனிய்யாவுக்கும் இடையிலான வேறுபாடு யாது?
எமது வருகைக்கு அபூ மாஸின் நன்றி கூறி ஒரு
வார்த்தையாவது கூறவில்லை. அவர் நாம் சென்று மூன்று நாட்களில் அல்ஜஸீராவுக்கு
அளித்த பேட்டியொன்றில் எமது வருகை முக்கியமானதொன்றாக இல்லை என கருத்துக்
கூறியிருந்தார். நாம் அங்கு சென்றது முற்றுகைக்கெதிரான பெரும் வெற்றியாக கருதப்பட்ட
போதிலும் நாம் செய்ததை அவர் குறைத்து மதிப்பிட்டார். அபூ மாஸின் ரமல்லாவில்
உட்கார்ந்து கொண்டு மில்லியன் கணக்கான யூரோக்களை பெற்றுக் கொண்டிருக்கிறார்.
அவற்றில் எதனையும் அவர் காஸா மக்களுக்குக் கொடுப்பதில்லை.
ஆம், உண்மையில்
இருவருக்குமிடையேபெரும் வேறுபாடுள்ளது.
நான் இஸ்மாயில் ஹனிய்யாவின் வீட்டுக்கு
அழைக்கப்பட்டிருந்தேன். அவரதும் அவரது நண்பர்களதும் வீடுகள் சாதாரணமாகவே இருந்தன.
அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டே காணப்பட்டது. நாம் மெழுகுவர்த்தியின் ஒளியிலேயே
அமர்ந்திருந்தோம். இராப்போசன விருந்து தவிர்க்கப்பட்டது. நாம் மெழுகுவர்த்தி
ஒளியில் சில மாம்பழத் துண்டுகளையே பரிமாறிக் கொண்டோம். அங்கிருக்கின்ற மக்கள் தமது
பிரதமரும் தம்மைப் போன்றே கஷ்டப்படுகின்றார் என்பதை அறிந்தே வைத்துள்ளனர்.
ஸைப்ரஸிலிருந்து
காஸாவுக்குச் சென்ற இரண்டாவது குழுவில் நீங்கள் ஏன் இணைந்து கொள்ளவில்லை?
நான் அதில் கலந்துகொள்ள விரும்பியிருந்தேன்.
என்றாலும் ஆப்கானிஸ்தானிற்குச் சென்று அங்கே அமெரிக்கச் சிறைகளில் உள்ள முஸ்லிம்
அல்லது அறபுப் பெண்கள் பற்றிய ஓர் விவரணப் படம் எடுப்பதற்காக லாஹூரிற்கு வரவேண்டிய
தேவை இருந்தது. அந்தப் பெண் கைதிகளைப் பற்றி யாருக்கும் தெரியாது. அமெரிக்க
இராணுவம் அங்கு பெண் கைதிகள் இருப்பதை மறுத்தே வருகிறது.
நீங்கள்
எப்படி அவர்களைப் பற்றி அறிந்தீர்கள்?
அங்கே 650ம் இலக்க பெண்
கைதி ஒருவர் பெகராம் சிறையில்(Bagram Prison)உள்ளார். அவரது பெயர் ஷாபிலா.
அவர் பாகிஸ் தானைச் சேர்ந்தவர் என நான் நம்புகிறேன். அங்கு இன்னும் பல பெண்
கைதிகள் இருப்பதாகவும் நான் நம்புகிறேன். அவர்கள் அறபுப் பெண்களாக அல்லது முஸ்லிம்
பெண்களாக அல்லது அமெரிக்க முஸ்லிம் பெண்களாக இருக்க முடியும். நான் ஆப்கான் சென்று
அவர்களது எண்ணிக்கையையும் உண்மை நிலையையும் அறிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
குறிப்பாக அமெரிக்கர் அங்கே பெண் சிறைக் கைதிகள் இல்லை என வாதிட்டுக்
கொண்டிருக்கின்றனர்.
நான் பென்டகனுடன் மூன்று முறை தொடர்புகொண்டு
ஆப்கானிலுள்ள அமெரிக்கச் சிறைகளில் முஸ்லிம் பெண் கைதிகள் உள்ளனரா என வினவினேன்.
அவர்கள் அதனை மறுத்தே வந்தனர். என்றாலும் இறுதியாக அவர்களிடம் 650ம் இலக்க பெண்
கைதியொருவர் இருப்பதாக பதில் தந்தனர்.
நான் கேட்கிறேன், அவர்கள் ஏன் உண்மையை வெளியிட
பயப்படுகின்றனர்? ஏன் பெண் சிறைக்கைதிகளின் எண்ணிக்கையை வெளியிட
மறுக்கின்றனர்? நான் நினைக்கிறேன் அவர்கள் அந்தப் பெண் கைதிகளுடன்
மிக மோசமாக நடந்து கொண்டிருப்பர். எனவேதான் உண்மையை வெளியிட அவர்கள்
பயப்படுகின்றனர்.
பெகராமிற்குள்ளால் இன்னும் பல இரகசியச் சிறைகள்
இருப்பதாக நான் உறுதியாகக் கூறுவேன். நான் அவற்றைத் தேடி ஆப்கானிற்கு எனது ஆய்வுப்
பயணத்தை ஆரம்பிக்க இருக்கிறேன்.
இந்தப் பணியில் நீங்கள்
ஆபத்திருப்பதாக உணர வில்லையா?
இல்லை, நான் அதில் எந்த ஆபத்தும் இருப்பதாக உணர வில்லை.
நீங்கள் அவர்களுக்கு பயந்தால் அவர்கள் உம்மை பின்தொடர்வர். அவர்களது
முகத்துக்கெதிரே நின்றால் அவர்கள் உமக்குப் பயப்படுவார்கள்.
நீங்கள் ஹிஜாப் அணிந்த முஸ்லிம்
பெண்ணாக இருக்கிறீர்கள். பயங்கரவாதிகளாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் பெண்
கைதிகள் பற்றி தேடிச் செல்கிறீர்கள். நீங்கள் கைதுசெய்யப்பட்டு மிக மோசமாக கொலை
செய்யப்படுவீர்கள் என பயப்படவில்லையா?
இல்லை, நான் இந்த வகையான எந்த விடயங்களுக்கும் பயப்படவில்லை.
நான் ஒரு முஸ்லிம் பெண் என்ற வகையில் எனது பணியை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக
உள்ளேன். இஸ்லாமிய உலகில், நிரபராதிகளான அந்த பெண் கைதிகளை விடுவிப்பதற்காக
போராடக் கூடிய ஆண்கள் உருவாகும்வரை நான் எனது பணியை செய்வேன்.
ரஸூல் (ஸல்) அவர்களது காலப் பகுதியில் ஒரு யூதன்
முஸ்லிம் பெண்ணொருவரை நிர்வாணப்படுத்த முயன்ற போது முஸ்லிம்கள் அதற்கெதிராக மிகக்
கடுமையாகப் பதில் கொடுத்தனர். அப்பாஸிய கலீபா முஃதஸிம் பில்லாஹ்வின் காலத்தில் ஒரு
எதிரி முஸ்லிம் பெண்ணொருவரை நிர்வாணப்படுத்த முயன்றபோது அவள் “வா முஃதஸிமா” என அழைத்தாள்.
அங்கே நாம் முஃதஸிமைக் கண்டோம். அவளுக்காக வேண்டி ‘அமூரியா’ என்ற போராட்டமே
இடம்பெற்றது. அதில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.
இன்று அபூகரீப் சிறைச்சாலையிலும் ஈராக்கிய, ஆப்கானிய
சிறைகளிலும் முஸ்லிம் பெண்கள் கைதுசெய்யப்பட்டு, மானபங்கப்படுத்தப்படுகின்றனர்.
அவர்களில் ஒருவர்தான் 650ம் இலக்கக் கைதி ஷாபிலாவும். ஆனால், அவர்களுக்காக
ஒருவரும் அசைகிறார்களில்லை.
ஆப்கானில் வேறும் கைதிகள் இருப்பதாக
உறுதிப்படுத்தக் கூடிய ஆதாரங்கள் உங்களிடம் இருக்கின்றதா?
சிறிது காலத்திற்கு முன்னர் அல்-அறபிய்யா செய்திச்
சேவை பெகராம் சிறையிலிருந்து தப்பி வந்த நான்கு அறபுக் கைதிகளை பேட்டி கண்டது.
அவர்களில் ஒருவர்; அமெரிக்கப் படைகளால் கைதுசெய்யப்பட்டிருந்த ஒரு யுவதி
அவர்களால் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்படுவதை தான் கண்டதாகக் கூறினார்.
அந்த யுவதி ஆண்களுக்கு மத்தியில் சிறைவைக்கப்பட்டிருந்தாள். ஆண்கள் மலசலம்
கழிக்கும் இடங்களையேஅவளும் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தாள். அவர்கள்
குளிக்கும் குளியலறைகளே அவளுக்கும் குளிக்க ஒதுக்கப் பட்டிந்தது. அங்கே
மறைப்புக்கள் இருக்கவில்லை. இந்த செயல் அங்கிருந்த ஏனைய ஆண் கைதிகளை
அச்சத்திற்குள்ளாக்கியது. எனவே அவர்கள் உண்ணாவிரதமும் இருந்தார்கள் என அவர் மேலும்
பல தகவல்களைக் கூறினார். ஆனால், இந்தத் தகவல்களைத் தந்த அவர் தற்போது எங்கே என
யாருக்குமே தெரியாது.
ஆப்கானிய அரசு அங்கு
செல்வதற்கான அனுமதியை உங்களுக்குத் தருமா?
ஆம்... நான் ஆப்கானிய அரசிடம் எனக்கான வீசாவை
பெற்றுவிட்டேன். பிறகு அமெரிக்கர்களை தொடர்பு கொண்டு நான் பெகராம் இற்கு வருவதாகக்
கூறினேன். அவர்கள் எனக்கு அங்கே நுழைய அனுமதிப்பதில்லை எனக் கூறினர். நான்
அவர்களுக்குச் சொன்னேன், நான் அங்கு வந்தே தீருவேன். நான் மதிலுக்கு வெளியே
நின்று உங்களை படம்பிடித்து நீங்கள் அங்கே நுழைய எனக்கு அனுமதி தரவில்லை என்பதாக
தொடர்பு சாதானங்களில் பரப்பி விடுவேன் என்பதாக.
நீங்கள் ஏன் இந்த வகையிலான
ஆபத்தான பணிகளில் ஈடுபடுகிறீர்கள்?
இது நான் செய்த பணி, தொடர்ந்தும் செய்யும் பணி, அதுதான்
உண்மையைத் தேடும் பணி. ஆண்கள் அவர்களிடம் வேண்டப்படும் பணியை செய்யும் வரையில்
நான் எனது போராட்டத்தை தொடர்வேன். முஸ்லிம் பெண்ணிடம் மிகப் பெரும் இயலுமைகள்
காணப்படுகின்றன.
அடுத்து அவளால் நிறையவே பணிகள் ஆற்ற முடியும்.
ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ள பலத்தை தேடி அதில் புத்தாக்கப் பணிகளை மேற்கொள்ளுமாறு
வேண்டப்பட் டுள்ளனர். அந்த இடத்திற்கு ஒருவர் வந்தடைந்துவிட்டால் தனது பாதையின்
ஆரம்பத்திற்கு வந்துவிட்டதாக அர்த்தம். எங்களிடம் திறமையான பட வரைஞர்கள், வைத்தியர்கள்
காணப்படுகின்றனர். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு பத்திரிகையாளர் என்பதை அறிந்து
வைத்துள்ளேன். நான் இந்தத் துறையில் என்னால் முடிந்த பணிகளை செய்கிறேன். எனது
தொழிலினூடாக எனது மார்க்கத்திற்கும் சமூகத்தின் பிரச்சினைகளுக்கும் என்னால் முடிந்த
பணிகளை நான் செய்வேன்.
அப்படியாயின் ஜிஹாத் பற்றிய
உங்களது புரிதல் யாது?
எனது கண்ணோட்டத்தில் 2001 செப்டம்பர் 11 தாக்குதல் ஜிஹாத்
அல்ல. ஆனால், ஈராக்கிலும் ஆப்கானிலும் பலஸ்தீனிலும் நடக்கின்ற
எதிர்ப்புப் போராட்டங்கள் ஆக்கிரமிப்புக்கெதிரான சட்டரீதியான போராட்டங்கள்.
அவற்றுக்கு உதவுவது கடமையாகும்.
மேற்கு ஊடகங்கள் தொடர்ந்தும்
இஸ்லாத்துக்கெதிராக செயற்படுகின்றனவே?
இஸ்லாத்தை ஒழித்துக் கட்டுவதற்கான சூழ்ச்சித்
திட்டத்தில் ஒன்றாகவே ஊடக ரீதியான தாக்குதல்களும் உள்ளன.
இந்த எதிர்ப்புகள் இஸ்லாம்
பற்றிய அறியாமையால் இடம்பெறுகின்றனவா?
இல்லை... அவை இஸ்லாம் பரவிவிடும் என்ற பயத்தினால்
மேற்கொள்ளப்படுபவை. அமெரிக்கா மதுவால் குற்றச் செயல்கள் பரவுவதாகக் கண்டு அதன் சில
மாநிலங்களில் பொலிஸ் அதிகாரத்தின் மூலம் மதுவை தடைசெய்ய முயன்றது. என்றாலும் அது
அந்த முயற்சியில் தோல்வி கண்டது.
அதேநேரம் ஒரு அமெரிக்க முஸ்லிம் எந்த பொலிஸ்
அதிகாரமும் இன்றி எந்த பெரிய முயற்சியுமின்றி தானாகவே மதுபானம் குடிப்பதை
விட்டுவிடுவதை காண்கின்றபோது தானாகவே மதுபானத்தை விட்டுவிடச் செய்யுமளவு
இஸ்லாத்தில் பொதிந்துள்ள மாபெரும் சக்தி அவர்களை கலக்கமடையச் செய்கிறது. அதேபோன்று
இஸ்லாத்தில் மாபெரும் சக்தியொன்றுள்ளது என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். அது அவர்களை
பயம் கொள்ளச் செய்கிறது.
மேற்கு முஸ்லிம் பெண்ணைப் பற்றி
கொண்டுள்ள தவறான நிலைப்பாடு பற்றிய உங்கள் கருத்து யாது?
முஸ்லிம் பெண் என்பவள் நான் அறிந்த வகையில் ஒரு பலமான
பெண். அவள் வாழ்வின் அனைத்துப் பாகங்களிலும் சிறந்த முறையில் தனது பணியை
மேற்கொள்கின்றாள். அவள் வாழ்வின் விளிம்பில் வாழும் ஒதுங்கிய ஒரு பெண்ணல்ல.
முஸ்லிம் பெண்கள் மத்தியில் காணப்படுகின்ற சில சகோதரிகள் முஸ்லிம் பெண்கள்
விடயத்தில் மேற்கை குழப்பத்தில் ஆழ்த்திவிடுகின்றனர்.
ஏன் மேற்கு ஹிஜாப் விடயத்திலும்
சொத்துரிமை விடயத்திலும் இஸ்லாம் பெண்ணுக்கு அநியாயம் செய்வதாகக் கூறுகிறது?
ஹிஜாப் சுதந்திரத்துக்கு எதிரானது என்று சொல்பவர்கள்
அடிப்படையில் ஹிஜாபின் உண்மை நிலையை விளங்காதவர்கள். ஹிஜாப் விவகாரம்
கலந்துரையாடுவதற்குரிய விடயமல்ல. அது அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட ஒன்று. அது
பற்றி குர்ஆன் வசனங்கள் தெளிவாகவே இடம் பெற்றுள்ளன.
இஸ்லாத்தில் சொத்துரிமை பற்றிய விடயத்தை பொறுத்த வரை
அங்கே ஆணின் பங்கு பெண்ணின் பங்கைப் பார்க்கிலும் இரண்டு மடங்கு என்ற விடயம்
மேற்போக்கான பார்வையில் சமத்துவம் அற்றதாக விளங்கும். ஆனால் இந்த விடயத்தை ஆழமாக
நோக்கினால் அங்கே பூரண நீதி காணப்படுவதைக் காணலாம்.
இஸ்லாத்திற்கெதிராக செயற்படும்
தஸ்லீமா நஸ்ரின், இயான் ஹெர்ஸி, அமீனா வதூத் போன்றவர்கள் பற்றிய
உங்கள் கருத்து யாது?
அவர்கள் சரியான இஸ்லாத்தை அறியாதவர்கள். அவர்கள்
முற்றிலும் வேறோர் விடயத்தையே பேசுகின்றனர். அடுத்து இஸ்லாம் அதனை
ஏற்றுக்கொள்ளுமாறு யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை. நான் அவர்களுக்குச்
சொல்கிறேன். இஸ்லாம் உங்களுக்கு சரியாகப் படவில்லையாயின் அதன் எல்லையை விட்டுச்
சென்று நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். ஏன் நீங்கள் இன்னும் முஸ்லிம்களாக
இருக்கின்றீர்கள்?
அவர்கள் யாரையாவது நீங்கள்
சந்தித்ததுண்டா?
இல்லை.... அவர்களில் யாரையும் சந்திப்பதை நான்
விரும்பவில்லை.
ஸல்மான் ருஷ்தி பற்றி என்ன
சொல்கிறீர்கள்?
ஸல்மான் ருஷ்தியின் எதிர்ப்பு இஸ்லாத்திற்கு எதிராக இருந்தது
என்பதைவிட இஸ்லாத்திற்கு சார்பாகவே அது மாறியது. அது மேற்கில் வாழும் முஸ்லிம்களை
துயில் எழுப்பிவிட்டது. அவர்கள் அதனால் தமது உரிமைகளை விளங்கிக் கொண்டார்கள்.
எதிர்க்கப்படும் தமது மார்க்கத்தை விளக்குவதற்காக தாம் செயற்பட வேண்டும், தமது
மார்க்கத்தைப் பாதுகாக்க வேண்டுமென அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.
தன்னை ஒரு முஸ்லிமாக காண்பித்துக் கொண்டு கிறிஸ்த்தவ
தேவாலயத்துக்குச் சென்று தனக்குரிய ஞாபகச் சின்னத்தைப் (Medal) பெறும் முன்னர்
அங்குள்ள பாதிரிப் பெண்ணின் காலில் விழுந்து வணங்கும் ஸல்மான் ருஷ்தி போன்ற மனிதனை
நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அந்தப் பாதிரிப் பெண் மஸீஹின் பெயரால் இந்த Medal ஐ உங்களுக்கு
அளிக்கின்றேன் என்றாள். இதனை அவர் தனது நூலொன்றிலும் குறிப்பிட்டுள்ளாரே. இவரைப்
பற்றி சொல்லுவதற்கு எனக்கு வார்த்தைகள் கிடையாது. இதுபோன்ற மனிதர்களைப் பற்றி
நாம் ஏன் அலட்டிக் கொள்கிறோம் என எனக்குத் தெரியாது.
துருக்கி, தூனீசியா போன்ற சில
இஸ்லாமிய நாடுகளில் ஹிஜாபுக்கெதிராக இடம்பெறும் தாக்குதல்கள் பற்றிய உங்கள்
கருத்து யாது?
நான் சில மாதங்களுக்கு முன்பு துருக்கிக்குச்
சென்றேன். அங்கே ஒரு பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்துமாறு அழைக்கப்பட்டிருந்தேன்.
நான் அங்கு செல்லும் போது எனது ஹிஜாபை அணிந்து சென்றேன். எனது ஹிஜாபை கலட்டாமல்
பல்கலைக்கழகத்தினுள் நுழைவதை அங்கிருந்த சிலர் தடுக்க முற்பட்டனர். என் விடயத்தில்
குறுக்கிட்ட மனிதனோடு நான் பேசினேன். நான் அவனுக்குச் சொன்னேன். நீ செய்கின்ற
இந்த செயலுக்கு ஒரு நாள் அல்லாஹ்வின் முன்னால் நீ விசாரிக்கப்படுவாய் என்பது
உனக்குத் தெரியுமா? நீ ஹிஜாபை கழட்டுமாறு கேட்பது உனது சகோதரியாக
இருந்தால் உனது நிலை என்ன?
அந்த மனிதன் எனது பேச்சால் அதிர்ச்சியுற்று என்னிடம்
மன்னிப்புக் கேட்டான். பிறகு நான் எனது தொழிலின் கட்டளைகளை செய்கிறேன் என்று அவன்
எனக்குச் சொன்னான். நான் அவனுக்குச் சொன்னேன்; “இந்த மாதிரியான வார்த்தைகளை
தனது சகோதரிகள், மஹ்ரமிகள் மீது ரோஷ உணர்வு இல்லாத ஒருவன்தான்
சொல்வான்.”
உண்மையில் நான் பல்கலைக்கழகத்தினுள்ளே எனது
ஹிஜாபுடனேயே சென்றேன். நான் எனது உரையை அங்கு நிகழ்த்தினேன். அந்த உரையில் ஹிஜாபை
தடுப்பவர்களுக்குச் சொன்னேன்: “மிகவும் இழிவான விடயம் நான் தென் துருக்கிக்குச்
சென்றால்; நான் மதுபானம் குடிப்பதை யாரும் தடுக்க மாட்டார்கள்.
அதையும் விட இழிவானது நான் மனிதர்கள் முன்னால் எனது முழு உடையையும் கழற்றினாலும்
என்னை யாரும் தடுக்கப் போவதில்லை” எனது உரையினிடையே நான் கேட்டேன்: “ஹிஜாபை தடுக்கும்
ஜெனரல்கள் தமது மனைவிமாருக்கும் பெண் பிள்ளை களுக்கும் ஹிஜாபை கழற்றிவிட்டு தென்
துருக்கிக்குச் சென்று நான் மேலே சொன்ன இந்த விடயங்களையெல்லாம் செய்ய
அனுமதிப்பார்களா?” இதன்போது சபை கடும் கோபத்தில் சலசலத்தது. ஏனெனில், துருக்கியர் தமது
மனைவிமாரையும் பெண் பிள்ளைகளையும் மோசமாக சொன்னால் கடுமையாக கோபாவேசப்படுவார்கள்.
இந்த அனுபவத்தை அறபு உலகில்
மீட்டிப் பார்க்க திட்டங்கள் உள்ளதுவா?
ஆம்.. நானும் என்னைப் போன்று ஐரோப்பாவில் இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்ட எனது சில நண்பிகளும் தூனீசியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம். நாம்
ஹிஜாபுடன் விமான நிலையத்தில் போய் இறங்கி தூனீசியா வீதிகளில் தூனீசிய முஸ்லிம்
பெண்களின் ஹிஜாபை பாதுகாப்பதற்காக சுற்றி வருவோம். தூனீசியா அரசு எம்மை என்ன செய்யும்
எனத்தான் பார்ப்போமே? எங்களில் ஒருவருடைய ஹிஜாபையாவது கழற்றுவதற்கு அங்கு
யார் துணிவார்கள் என்றுதான் பார்ப்போமே?
தூனிஸ், கடற்கரைகளில் பெண்கள் நிர்வாணமாக இருப்பதற்கும் மது
அருந்துவதற்கும் அனுமதிக்கின்றது. உல்லாசப் பயணத்துறையால் பணம் சம்பாதிப்பதற்காகவே
அது இதையெல்லாம் செய்கிறது. அதேநேரம் அங்குள்ள பொலிஸார் ஹிஜாப் அணிந்துள்ள பெண்கள்
மீது அத்துமீறு கிறார்கள். அவர்கள் ஹிஜாப் அணிந்துள்ளார்கள் என்ற ஒரே
காரணத்துக்காகவே இவர்கள் இதனையெல்லாம் செய்கிறார்கள்!
நான் சொல்வதெல்லாம் இந்த உலகில் நாம்
செய்பவற்றுக்கெல்லாம் மறுமையில் விசாரிக்கப்படுவோம். முஸ்லிம்களுக்கு தாம் என்ன
செய்ய வேண்டும் என்பது தெளிவாகவே தெரியும். ஹிஜாப் அணியாது ஒரு முஸ்லிம் பெண்
இருந்தால் அதுபற்றி நான் விசாரிக்கப்படமாட்டேன். அவள்தான் அவளைப் பற்றி
விசாரிக்கப்படுவாள். நான் என்னைப் பற்றி விசாரிக்கப்படுவேன். நான் என்ன பதில்
சொல்ல வேண்டுமென்பது எனக்குத் தெளிவாகத் தெரியும்.
ஹிஜாபுக்கெதிராக போராடும்
முஸ்லிம் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அவர்களைப் பொறுத்தவரை அவர்களிடம் பேசுவதற்கு எந்த
விடயமும் கிடையாது. அவர்கள் என்னைப் போன்று இஸ்லாத்தை ஏற்றுள்ளவர்களையும்
ஹிஜாபையும் பற்றி மோசமாக சித்தரிக்க முற்படுகின்றனர். நான் அவர்களுக்குச் சொல்வது; நீங்கள்
இஸ்லாத்துக்கெதிராக விரும்பியதை செய்யுங்கள். ஆனால், இஸ்லாத்திற்காக நாம்
விரும்பியதை செய்வதற்கும் எம்மை விட்டுவிடுங்கள் என்பதுதான்.
மேற்கில் இஸ்லாத்தின் எதிர்காலத்தை
நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அல்லாஹ்வின் அருளால் அது சிறந்ததோர் எதிர்காலம்.
ஏனெனில், மேற்கிலுள்ள மக்கள் மோசமான பழக்கவழக்கங்களால், தாம் வாழும்
மலட்டுத் தனமான வாழ்க்கைப் போக்கால் சலித்துப் போயுள்ளனர். அவர்கள் உண்மையை தேடத்
துவங்கிவிட்டார்கள். இன்னும் நூறு வருடங்கள் போகும் முன்னர் மேற்கை இஸ்லாம் ஆளும்
என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். உண்மை என்னவென்றால் மேற்கில் இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டவர்கள் பாரிய சக்தியாக மாறிவருகின்றனர். இன்ஷா அல்லாஹ் குத்ஸை விடுவித்துத்
தரும் ஸலாஹுத்தீன் மேற்கிலிருந்து வருவார்.
No comments:
Post a Comment