IKRAM NASEER·THURSDAY, OCTOBER 15, 2015
ஓர் அகப் பயணம்
2010 களின் நடுப்பகுதியில் “இஸ்லாமிய வீட்டை உருவாக்குவதில் கணவன்-மனைவியின் பங்களிப்பு” என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தக் கிடைத்தது.அந்த உரையில் குடும்ப வாழ்வின் அடிப்படை நோக்கம் மற்றும் துணை நோக்கங்கள் குறித்து விளக்கிய விடயம் அனைவரதும் கவனத்தில் பதிந்தது.அந்த உரையின் பின்னர் ஒரு சகோதரர்,இதனை கட்டாயம் பத்திரிகையில் எழுதுமாறு வேண்டிக் கொண்டார்.எனினும் நான் அதுவரை “முன்மாதிரி இஸ்லாமிய குடும்பம்” என்ற தொடரை எழுதி வந்தமையால் அதன் தொடரில் அதனை எழுதலாம் என்றிருந்தேன்.எனினும் அதன் பின்னர் உயர் கல்விக்காக வெளியே செல்ல வேண்டி வந்தமையால் அதனை செய்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் 2011 கள் முதல் ஹாதியாவில் இறுதி வருட மாணவிகளுக்கு குடும்ப வாழ்வை ஒரு பாடமாக கற்பிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அது தவிர ஒரு சிறிய வட்டத்தில் அது தொடர்பான விரிவுரைகளை நடாத்தக் கிடைத்தது.அது தவிர குடும்ப வாழ்வு தொடர்பாக பொதுத் தளத்தில் பெரிதாக உரையாடக் கிடைக்கவில்லை.
2015.10.02 செய்த ஒரு குத்பாவில் அண்மைய நாட்டு நிலையை கருத்திற் கொண்டு,இப்றாஹீம்(அலை) அவர்களது குடும்ப வாழ்வை மையப் படுத்தி,குடும்ப வாழ்வின் அடிப்படை இலக்கான சந்ததி உருவாக்கம் தொடர்பாக பேசக்கிடைத்தது.குத்பா முடிந்து அறைக்கு வந்ததும் ஒருவர் பின் ஒருவராக இளைஞர்கள் முதல் வயோதிபர் வரை அறைக்கு வந்தனர்.அதில் ஒருவர் இதனை நீங்கள் ஒரு நூலாக எழுத வேண்டும்.எவ்வளவு போனாலும் பரவாயில்லை,அதற்கு நான் பணம் தருகிறேன் என்றார்.பணமல்ல,நேரம்தான் பிரச்சினை என்றேன்.அதற்கவர்,இல்லை நீங்கள் இதுமாதிரியான விடயத்துக்கு நேரம் ஒதுக்குவது உங்களது பிரதான கடமை.நீங்கள் நேரம் ஒதுக்கித்தான் ஆக வேண்டும் என்றார்.
பின்னர் மிகப் பெறும் குற்ற உணர்வுடன் வீடு வந்து சேர்ந்தேன்.முதலில் 2010 களில் இதனை உணர்த்திய சகோதரரிடம் மன்னிப்புக் கோருகிறேன்.அடுத்தாக சமூகத்திடம் மன்னிப்புக் கோருகிறேன்.சமூகத்திற்கு மிக அவசியமாக வழிகாட்டல் அவசியப்படுகின்ற ஒரு விடயம் தொடர்பில் இது வரை நாம் ஒரு வட்டத்தில்தான் உரையாடி இருக்கின்றோம்.இஸ்லாமிய வாழ்வமைப்பில் மாத்திரமல்ல மானிட வாழ்வமைப்பிலேயே மனிதனால் புறக்கணித்து வாழ முடியாத ஒரு பரப்பான குடும்ப வாழ்வுக்கெதிராக கட்டமைக்கப்பட்டுள்ள ஸியோனிஸ கருத்தியலின் பாட்பட்ட வாழ்வொழுங்குக்குள்ளால் மக்கள் தினரி மூர்ச்சையாகிக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் நாம் இது குறித்து சமூகத்துடன் உரையாடாமல் இருந்ததை ஒரு பாவமாகக் கருதுகிறேன்.மக்களின் உண்மையான பிரச்சினை மையம் கொண்டிருப்பது இங்குதான்.சமூகமற்றத்தின் மையப் புள்ளி இங்குதான் சூழ் கொண்டுள்ளது.இந்தப் புள்ளியை புரியாமைதான் எமது சமூக செயற்பாடுகளில் நாம் எதிர் கொள்ளும் பிரதான பிரச்சினை.
உண்மையில் இந்த தளத்துடனான எனது வாசிப்புக்கான பின்னணியுடன் இது தொடர்பாக உரையாடுவது,இங்கு குறிப்பிடும் கருத்துக்களை மிகச் சரியாக வாசகன் விளங்க உதவியாக இருக்கும்.
2003 கள்தான் இதன் ஆரம்பம்.இலட்சிய உலகில் செய்யித் குதுபுடனும்,ஷெய்க் அல்-கஸ்ஸாலியுடனும் வாழ்ந்து கொண்டிருந்த காலமது.சமூக மாற்றம்,சிந்தனைகள்,தப்ஸீர்,அரசியல்,மொழி,இலக்கியம்,தலித்கள்,பெண்ணியம்...என பல தளங்களிலும் வாசிப்பதும் விவாதிப்பதும் என்று ஒரு புறம்.மறுபுறம் செயற்பாட்டுத் தளத்தில் வேகமாக செயற்படல்...என வாழ்ந்து கொண்டிருந்த காலம்.திடீரென யாரும் எதிர்பாராத விதமாக எம்மை இலட்சிய உலகிலிருந்து யதார்த்த உலகை நோக்கி கொண்டு வந்த அந்தப் பேரிடி இறங்கியது.அது எமது இலட்சிய உலகை அப்படியே சிதிலமாக்கியது.ஒரு கணம் அதிர்ந்து உடைந்து போனோம். பின்னர் மெல்ல,மெல்ல எழுந்தோம்.
எமது வாசிப்புத் தளமும் சிந்தனைத்தளமும்,உரையாடல் தளமும் மாறிப் போனது.சமூகப் பிரச்சினைகள் குறித்து சிந்தித்தோம்.மாற்றங்களின் தளங்கள் குறித்தும் அதன் சாத்தியப்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினோம்.எமது இரவுகள் தூங்காமலே விடிந்தன.உரையாடல்கள் மக்களின் நடைமுறை சிக்கல்களை நோக்கித் திரும்பின.சமூகத் தீமைகள் எமது கவனத்தை ஈர்த்தன.எதையும் கேள்விக்குட்படுத்தாமல் நம்ப மறுத்தன.
இங்குதான் எனது வாசிப்பு பாலியல் என்று துவங்கி குடும்ப வாழ்வு,இளைஞர்கள்,திருமணம் என்ற தளத்தை நோக்கி வந்தது.பிக்ஹ் பாடங்களில் அப்துல் மஜீத் ஸன்தானியின் ஸவாஜ் பிரண்ட் தொடர்பாக விவாதித்தோம்.கர்ளாவியின் ஸவாஜுல் மிஸ்யார் நூலை பிக்ஹ் பாட ஆசிரியரே கொண்டு வந்து தந்தார்...
இந்த விடயங்கள் நீண்ட கலந்துரையாடல்களாகவும் அவதானத்தை ஈர்க்கும் விடயங்களாகவும் மாறின...ஒரு ஆசான்...“எமது பிள்ளைகளும் இது பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருப்பார்களென...? என ஆச்சரியமாய்க் கேட்டார்....குடும்ப வாழ்வு என்பது ஒரு தனிப்பட்ட விவகாரமாக மாத்திரமே பலரது கருத்துக்களில் பிரதிபலித்தன...குடும்ப வாழ்வு இலட்சிய வாழ்வுக்கான தடையாகப் பார்க்கப்பட்டது...இந்த வேலிகெலால் உடைக்கப்படும் விவாதங்கள் சூடெரின...நளீமியாவின் எனது இறுதி வருட ஆய்வுக் கட்டுரையாக “இஸ்லாமிய எழுச்சியில் குடும்பத்தின் பங்களிப்பு” என்பது அமைந்திற்று.அங்குதான் ஸியோனிஸத்தின் புரடகோல் அறிமுகமாகியது.உலகம் எங்கு? எப்படி? எப்படி செல்கிறது என்பது புரிந்தது.நாம் அணியும் ஆடையின் அலங்காரங்கள் முதல் நாம் கற்கும் துறைகள்..அதனுள்ளே பேசப்படும் சிந்தனைகள் வரை யாரோ தீர்மானிக்கிறார்கள் என்பதனை புரிந்தோம்...இடை நடுவே...2004.04.15 எனது குடும்ப வாழ்வை ஆரம்பித்தேன்.அதனை பாவமாகப் பார்த்தவர்கள் பலர்...அதனை ஒரு முற்போக்குத் தீர்மானமாகப் பார்த்தவர்கள் சிலர்....எனது ஆய்வுக் கட்டுரை 2006 இல்தான் சமர்ப்பிக்கப்பட்டது.வெறும் சிந்தனை உலகில் சஞ்சரிக்காமல் யதார்த்தமாய் அந்தப் பயணம் தொடர்ந்தது....
இஸ்லாமிய குடும்பம் அறிமுகமும் நோக்கமும்
“இஸ்லாமிய குடும்பம் என்பது இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த திருமணத்தின் மூலம் உருவாக்கப்படும் ஒரு சமூக நிறுவனமாகும்.அது சமூகத்தின் சீரான இயக்கத்திற்கு –பிரதானமாக அதன் தனிநபர்களை இஸ்லாமிய அடிப்படையில் பயிற்றுவிப்பதன் மூலம் -பங்களிப்புச் செய்யும் ஒரு மூல அலகாக தொழிற்படும்.இஸ்லாமிய சமூகத்தின் தனித்துவமும் அதன் கொள்கையும் இலட்சியங்களும் இந்நிறுவனத்தின் மூலமே பாதுகாக்கப்படும்.”
இஸ்லாமியப் இலக்கியப் பரப்பில் குடும்ப வாழ்வு குறித்து சமூகவியல் ரீதியாக பார்க்கப்பட்டிருப்பது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.சட்ட ரீதியாகவே இது அதிகம் பார்க்கப்பட்டுள்ளது.அதற்குரிய தேவை இல்லாமல் இருந்தமை அதற்கு காரணமாக இருக்கலாம்.அது நவீன காலத்தில் இஃவான்களின் செயற்பரப்பில்தான் சமூக ரீதியான பார்வையை பெற்றிருக்கிறது.“அகவாதுல் முஸ்லிமாத் வ பினாஉல் உஸ்ரா அல்-குர்ஆனியா ” இந்த கருத்தை தந்தது.பலஸ்தீன போரட்டத்தில் குடும்பங்களின் பங்களிப்பு சம்மந்தமான சிறிய ஆய்வுக் குறிப்புகளும் இதற்கு மேலும் பலம் தந்தது.அடுத்து சமூகவியல் பற்றிய ஆய்வுகள் இதனை செழுமைப் படுத்தியது.குறிப்பாக பண்பாட்டு மானிடவியல் மற்றும் இன்னும் பல பரந்த தேடல்களிலிருந்து இந்த வரைவிலக்கணத்தை கண்டடைந்து.வரைவிலக்கணங்களுக்குரிய பண்புகளை நாளிர் ஆசிரியரிடம் கொடுத்து சரிப்படுத்திக் கொண்டேன்....
No comments:
Post a Comment