Monday, March 25, 2019

சமூக எழுச்சிக்கான அல்லது மாற்றத்திற்கான இஸ்லாத்தின் செயற்திட்டம் - 04 எம்.என்.இக்ராம்

                                    சிந்தனைகள் தீர்வுகளாக அமைவதெப்போது?
                                                                ikrammn@gmail.com
  


      கடந்த மூன்று இதழ்களில் சமூக எழுச்சிக்கான உழைப்பு என்பது என்ன? சமூக எழுச்சி என்றால் என்ன? சமூக எழுச்சி குறித்த அணுகுமுறைகள் என்பன குறித்து நோக்கினோம். இந்த இதழில் சமூக எழுச்சிக்காக உழைக்கின்ற போது ஒரு வேலைத்திட்டம் காணப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் அது எவ்வாறு அமைய முடியும் என்பது குறித்து நோக்க முயற்சிக்கின்றோம்.
சிந்தனைகள் தீர்வுகளாக அமைவதெப்போது?
            இஸ்லாம் வாழ்க்கைக்கான வழிகாட்டல் அல்லது தீர்வு என்பதன் நடைமுறை வடிவம் குறித்து நாம் சிந்திக்கின்ற போது; மனித இனத்தின் வரலாறு நெடுகிலும், அதன் கால, பூவியியல் மற்றும் சமூக சூழமைவிற்கேற்ப பல்வேறு தோற்றங்களை, வடிவங்களை எடுத்திருப்பதனை காண முடிகின்றது. ஆதம் (அலை) முதல் இன்றைய காலப் பகுதி வரையில் இதனை அவதானிக்க முடியும். ஒவ்வொரு இறைத் தூதரதும் முன்னுரிமை, அணுகுமுறை என்பன மாத்திரமல்லாது உள்ளடக்கம் சார்ந்த அம்சங்களும் கூட அவர்களது கால, இட, சமூக மாறுபாட்டிற்கேற்ப மாறுபட்டமைந்தமையை அல்-குர்ஆன் குறிப்பிட்டு விளக்குகிறது.
உங்களில் ஒவ்வொரு சாராருக்கும் ஒரு பிரத்தியேகமான வாழ்க்கைப் பாதையையும் ஒழுங்கையும் அமைத்துத் தந்தோம், அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே உம்மத்தாக அமைத்திருப்போம்…” அல்-மாஇதா:48
            இறைத் தூதர்களதும் அவர்களது சமூகங்களதும் வரலாறு குறித்து அல்-குர்ஆன் பேசுகின்ற விடயங்கள் இதனை எமக்கு விரிவாக விளக்குகின்றன. உதாரணமாக; மூஸா (அலை) அவர்களதும் இப்றாஹீம் (அலை) அவர்களதும் முன்னுரிமை அம்சங்கள் முற்றிலும் மாறுபட்டவை, அவர்களது அணுகுமுறைகள் வித்தியசமானவை, அவர்களது உள்ளடக்கம் சார் விடயங்களும் வித்தியாசமானவை. இதற்கு அவர்கள் வாழ்ந்த காலம், பூவியியல் அமைவிடம், சமூக சூழமைவு என்பன வேறுபட்டமைந்திருந்தமை காரணமாக இருந்திருக்கின்றன. அல்-குர்ஆனில் பேசப்பட்டுள்ள நபிமார்களின் வரலாற்றை சாதாரணமாக எடுத்து வாசித்துப் பார்ப்பது மாத்திரமே இதனை விளங்கிக் கொள்ள போதுமானதாகும்.
            இந்தப் பிண்ணனியில் இறைத்தூதர்களது காலத்திற்கு பிந்தய காலப் பகுதியை நாம் நோக்குகின்ற போதும் இந்த உண்மையே நிதர்சனமாகின்றது. இஸ்லாமிய உலகில் தோன்றிய பல்வேறு சிந்தனை மரபுகள், சட்ட மரபுகள், சமூகப் போராட்ட மரபுகள்என எதனை எடுத்து நோக்கினும் அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான முன்னுரிமைகளை, அணுகுமுறைகளை மாத்திரமன்றி உள்ளடக்கங்களைக் கொண்டே இயங்கியிருப்பதை அறியலாம். சட்ட மரபில் தோன்றிய இமாம்களும் மத்ஹப்களும் மற்றும் இஸ்லாமிய சீர்திருத்தப் பணியில் தோன்றிய சீர்திருத்த இயக்கங்களும் அமைப்புக்களும் இதற்கான பிரபலமான ஆதாரங்களாகும்.
            இது இஸ்லாமிய மரபுக்கு மாத்திரம் சொந்தமான ஒரு நியதியல்ல, மாற்றமாக இது ஒரு உலகப் பொது நியதி. உலகில் தோன்றிய சமூக எழுச்சி இயக்கங்கள், புரட்சிகள், போராட்டங்கள் அனைத்தும் இந்த நியதிக்கு உட்பட்டிருப்பதைக் காண்கிறோம். கடந்த நூற்றாண்டில் உலகப் பொதுச் சிந்தனையாக தன்னை அடையாளப்படுத்தி எழுந்து நின்ற சமவுடமைத் தத்துவத்தின் நடைமுறைக்கு என்ன நடந்தது? ஐரோப்பாவில் எழுதப்பட்ட மார்க்ஸ்ஸின் தத்துவங்கள் ரஷ்யாவில் லெனினிஸ வடிவெடுத்தது. அது பின்னர் ஸ்டாலினஸமாக, தஸ்தோவஸ்கியிஸமாக தோற்ற வடிவம் கண்டன. சீனாவில் மாவோ சேதுங்கினால் இன்னோர் வடிவம் கொடுக்கப்பட்டதுஅது இன்றைய தோற்றத்தில் பல்வேறு மரபுகளும் சிந்தனைப் பள்ளிகளும் கொண்ட ஒரு தத்துவமாக வடிவம் கண்டிருக்கின்றது.
            இவை அனைத்தும் எமக்கு ஒரு பொது உண்மையை சொல்கின்றன. எந்த சிந்தனையும் அதன் நடைமுறைக்கு வரும் போது, கால, பூவியியல் மற்றும் சமூக சூழமைவின் வடிவைப் பெறுவது ஒரு உலகப் பொது நியதி. அந்த வகையில் சமூக எழுச்சிக்காக அல்லது மாற்றத்துக்காக இஸ்லாத்தை ஒரு தீர்வாக முன்வைக்க முயல்கின்ற போதும் இந்த உண்மையை நாம் கவனத்திற் கொண்டாக வேண்டும்.
            இஸ்லாம் உலகிற்கு ஒரு தீர்வாக அமையும் என்பது ஒரு பொது அடிப்படை. அந்த நம்பிக்கையில்தான் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற ஒவ்வொருவரும் அதனை ஏற்கின்றார்கள். ஆனால், அது எப்படி என்று வருகின்ற போது; அதனை தான் வாழும் காலத்திற்கும் தான் வாழும் பூவியியல், சமூக சூழமைவிற்கும் ஏற்ப தீர்வாக முன்வைக்க வேண்டிய பொறுப்பு அதனை ஏற்றவர்களுக்கு இருக்கின்றது. இது மனித முயற்சி சார்ந்த ஒரு விவடயம். இதனை இஸ்லாமிய மரபில் தஜ்தீத் என்றும், இஜ்திஹாத் என்றும் பல்வேறு அமைப்புக்களில் வழங்குகின்றோம். இதனையே இறைத் தூதர்(ஸல்) அவர்கள்இந்த உம்மத்தில் அதன் மார்க்க விவகாரங்களை புணரமைக்கின்ற ஒருவரை ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அல்லாஹ் அனுப்பி வைக்கின்றான்என எளிமையாகக் குறிப்பிட்டார்கள்.
            இங்குதான் இஸ்லாத்தை தீர்வாக முன்வைக்க முயற்சிப்பவர்கள் அதனை தமது காலப்பகுதிக்கான, தாம் வாழும் பூவியியல் சூழமைவிற்கான , தாம் வாழும் சமூக சூழமைவிற்கான ஒரு திட்டமாக (Project) முன்வைக்க வேண்டியதன் அவசியம் மேல் எழுகின்றது. ஒரு சிந்தனையை நடைமுறை வடிவத்திற்கு கொண்டு வருவதற்கான சிறந்த வழிமுறைதான் அதனை ஒரு தீர்வுத்திட்டமாக வடிவமைத்து முன்வைப்பதாகும்.
            ஒரு திட்டம் குறித்த ஒரு இலக்கை கொண்டிருக்கும், காலப் பகுதி வரையறுக்கப்பட்டிருக்கும், அதற்கு அவசியமான வளங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும், அதனை நடைமுறைப்படுத்துகின்ற வடிவங்கள், வழிமுறைகள், முகவர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். அந்த வகையில் தேவையான உள்ளீடுகளுடன் மிகப் பொறுத்தமான ஒரு விளைவை அடைவதற்கான ஒரு முழுமையான செயற் தொகுதியாக இது காணப்படும். ஒரு திட்டம் வரையப்படுவதற்கு முன்னர் என்ன செய்யப்பட வேண்டும். ஒரு திட்டத்தின் உள்ளார்ந்த செயற் தொகுதிகள் என்ன? அதன் நடைமுறையில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன? அதன் நிறைவில் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் என்ன? அந்த திட்டத்தின் பருமன் கால அளவிலும், உள்ளடக்க அளவிலும் எவ்வாறு அமையலாம்? அதில் தாக்கம் செலுத்தும் காரணிகள் என்ன என்பது குறித்தெல்லாம் திட்ட முகாமை தொடர்பான சமூகவியல் ஆய்வுகள் தாராளமாகவே பேசியுள்ளன. இது இன்று ஒரு தனித் துறையாகவே வளர்ச்சி கண்டுள்ளது.
            திட்டங்கள் நிறுவனங்களது வளரச்சிக்கு பங்களிக்கின்ற ஒரு வழிமுறையாக மாத்திரமன்றி சமூக எழுச்சிக்கான, மாற்றத்திற்கான மிகப் பயனுறுதி வாய்ந்த வழிமுறையாகவும் இன்று அடையாளப்படுத்தப்படுகின்றன. தன் கையில் அற்புத விளக்குகளை சுமந்த அலாவுத்தீனின் அற்புதங்களால், ஆகர்சனங்களால் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்ட ஆகர்சனத் தலைமைத்துவங்களின் காலம் கடந்து அந்த இடத்தை இன்று திட்டங்கள் பிடித்துள்ளன. மனித இனத்தின் விசாலித்த பெருக்கமும், சிக்கலான பிரச்சினைகளும் அதனடியான தேவைகளும் உலகின் பூவியியல் எல்லை தாண்டிய அதன் சங்கமும் தனிமனித ஆகர்சனத் தலைமைத்துவத்தின் பாத்திரத்தை இன்று வலுக் குறைத்து விட்டது. இதற்கான ஒரு முன்னறிவுப்பாகத்தான் பௌதீக முஃஜிஸாக்களிலிருந்து மாறுபட்ட ஒரு வடிவில் இறுதித் தூதரின் வருகை அமைந்திருக்கக் கூடும்.
            எவ்வளவு ஆகர்ஷனம் மிக்க தலைமைகளாயினும் ஒரு சில வினாடிகளில் அவர்களது ஆளுமைகள் பொது வெளியில் சிதைக்கப்படலாம். எவ்வளவு இழிவான ஆளுமையாயினும் ஒரு சில வினாடிகளில் அதன் தோற்றம் உருப் பெருப்பிக்கப்படலாம். ஆனால், நன்கு கட்டப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தை இப்படி சிதைப்பது சிரமமானது. அதனை ஒரு தனிமனிதன் அல்லாமல்  ஒரு சமூகமே சுமக்கும் நிலை காணப்படும்.
            இஸ்லாமிய வேலைப் பரப்பில் இந்த உண்மை; நடைமுறையில் மறக்கப்பட்டு மறுக்கப்பட்டுப் பேவதனைக் கண்கிறோம். ஆகர்ஷனம் மிக்க தனிமனிதர்களைத் தேடுவதிலையே பல வேலைத்திட்டங்கள் கிழடு தட்டிவிடுகின்றன. இன்றைய உலகம் தனிமனிதர்களின் மோதும் தளமாக இல்லை. சமூகங்களின் மோதும் தளமாகவும் அது இல்லை. அது திட்டங்களின் மோதுகைத் தளமாகவே இருக்கின்றன. ஸியோனிஸத் திட்டம், ஈரானியத் திட்டம், சீனத் திட்டம், அமெரிக்கத் திட்டம், இந்தியத்திட்டம்பல்வேறு பொருளாதார மாபியாக்களின் திட்டம்என திட்டங்களின் மோதுகைத் தளமாக மாறிவிட்டுள்ளன. சிக்கல் நிறைந்த அசுர வேகத்தில் இயங்கும் இன்றைய உலகம் ஒரு திறந்த சதுரங்க ஆட்டப் பலகையாக தோற்றம் கண்டுள்ளது. இதில் இஸ்லாம் என்பது எந்த இடத்தில் எந்த வடிவத்தில் தீர்வுத் திட்டமாக கள ஆட்டம் காணும் இடத்தில் உள்ளது. அது எந்தப் பரிமாணத்தில் எந்த எட்டில் எந்த வடிவத்தில் அதன் இருப்பை கொண்டுள்ளது? என்பது எமக்கு முன்னுள்ள பெரு வினா.
            இஸ்லாத்தை தீர்வாகப் பேசுவோர் சிக்குண்டள்ள புள்ளி இதுதான். இஸ்லாம் ஒரு தீர்வுத்திட்டமாக முன்வைக்கப்படுவதைப் பார்க்கிலும் இன்று அது தீர்வைத் தரும் ஒரு போதனையாக சிலாகிக்கப்படுவதே அதிகம். போதனைகள் வாழ்க்கைக்கான திட்டங்களாக கூர் நிலைப் (Micro) படுத்தப்படாத வரை அது நடைமுறைத் தீர்வாக அமையப் பெறுவதில்லை. அவை ஆண்டாண்டு காலமாக மனிதர்களை ஆசுவாசப் படுத்தும், அவர்களுக்கு கேட்பதற்கினிமையான போதனைகளாக மாத்திரமே இருந்து விட்டுப் போகும்.
            பல இஸ்லாமிய அமைப்புக்களால் தசாப்தங்கள் பல கடந்தும் தமது அடைவுகள் குறித்து துள்ளியமாக குறிப்பிட முடியாமையின் புள்ளி இதுதான். இந்த உலகிற்கு, இந்த சமூகத்திற்கு, இந்த நாட்டிற்கு, இந்த பிரதேசத்திற்கு, இந்தப் பிரச்சினைக்கு, இந்த நிறுவனத்திற்குஉரிய இஸ்லாத்தின் தீர்வு இதுதான், அதனை செயற்படுத்தும் வழிமுறை இதுதான், காலம் இதுதான், அதற்கான வளங்கள் இவைதான்என துள்ளியமாக குறிப்பிட முடியுமான இயலுமை இருக்குமாயின் இஸ்லாமிய வேலைத்திட்டம் இலக்கற்று காற்றில் அலைமோதும் சருகாக இருக்க அவசியமில்லை. அதுதான் அலைகளைத் தோற்றுவிக்கும், உலகின் போக்கைத் திசைப்படுத்தும் திட்டமாக மைய நிலையில் இயங்கும்.
            மூஸாவைத் தேடும், உமரைத் தேடும், பன்னாவைத் தேடும் மனிதர்களே! அவர்கள் மீண்டும் வரப் போவதில்லைஅவர்களை வழிப்படுத்திய இஸ்லாம் இருக்கின்றதுஅதனை நீங்கள் வாழும் காலத்திற்கு, இடத்திற்கு, சூழமைவிற்கு ஏற்ப திட்டங்களாக வடிவமைக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்குரியதுஉங்களது பிரச்சினைகளுக்கான, தேவைகளுக்கான தீர்வைத் தேட வேண்டியது நீங்கள்தான்தீர்க்கதரிசிகள் வானிலிருந்து வரப் போவதில்லை. அவர்களை மன்னிலிருந்து நீங்கள் காண வேண்டுமாயின் முதலில் தீர்வுத் திட்டங்களை வடிவமைத்துக் கொள்ளுங்கள்அப்போது இன்றைய காலத்தில் அதனைச் சுமக்கும் நமது காலத்து, தேசத்து உமர்கள் இங்கிருந்து வருவார்கள். இது உமர்கள் திட்டங்களை ஆளும் உலகல்லதிட்டங்களால் உமர்கள் ஆளப்படும் உலகம். இந்த உலகில் முறைமைகளோ திட்டங்களோ அற்ற சிந்தனைகள் வெறும் தனிமனிதர்களால் மாத்திரம் வாழும் பலத்தைப் பெற்றுக் கொள்ளும் என்பது சாத்தியம் குறைந்த ஒரு எதிர்பார்ப்பு.

Thursday, June 14, 2018

ஈதுல் பித்ர் மானிட சுபீட்சத்துக்கான வழிகாட்டல் கிடைக்கப் பெற்றமையை கொண்டாடும் தினம்(10.06.2018 தினகரன் வாரமஞ்சரியில் வெளியான கட்டுரை)



றமழானை தொடர்ந்து வருகின்ற ஈதுல் பித்ர் தொடர்பாக அல்-குர்ஆன் குறிப்பிடும் போதுநீங்கள் றமழானில் நோன்பிருக்கும் காலத்தை பூரணப்படுத்தி, உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டியமைக்காக அவனை பெருமைப்படுத்த வேண்டும்அப்படி செய்தால் நீங்கள் நன்றி செலுத்தியோராவீர்கள்என ஸுரா பகராவின் 185 வது வசனத்தின் இறுதியில் குறிப்பிடுகின்றது. இதே கருத்தை ஈதுல் அழ்ஹாவில் உழ்ஹியா கொடுப்பது சம்பந்தமாக பேசிவிட்டு ஸுரா ஹஜ்ஜின் 37வது வசனத்திலும் அல்-குர்ஆன் ஈதுல் அழ்ஹாவுடன் தொடர்பு படுத்தி விளக்குகிறது.
இவை இரண்டையும் வைத்துப் பார்க்கும் போது, இவ்விரு பெருநாள் கொண்டாட்டங்களும் ஒரு முஸ்லிமுடைய அடிப்படைப் பணியுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளமையைக் காண்கிறோம். இவ்வுலகில் ஒரு முஸ்லிமினுடைய அடிப்படைப் பணி மனித, பிரபஞ்ச  நலனுக்காக இறை வழிகாட்டலில் உழைப்பதாகும். “நீங்கள் மனித சமூகத்துக்காக அனுப்பப்பட்ட சிறந்த சமூகமாக உள்ளீர்கள். ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வை நம்பி ஏற்று, நன்மையை ஏவுகின்றீர்கள் தீமையைத் தடுக்கின்றீர்கள்…” (ஆலஇம்ரான் :110) இங்கு நன்மைகள் என்பது எமக்கும் பிரபஞ்சத்துக்கும் எம்மைப் படைத்தவனுக்கும் நலவாக அமைகின்ற அனைத்தையும் குறிக்கும். எமக்கும் பிரபஞ்சத்துக்கும் அதனைப் படைத்தவனுக்கும் தீங்காக அமைகின்ற அனைத்தும் தீமையாகும். இந்தப் பணியை செய்கின்ற ஒருவராகத்தான் ஒரு முஸ்லிம் இந்தப் பிரபஞ்சத்தில் செயலாற்ற வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.
இந்த வகையில் பார்க்கும் போது இஸ்லாத்தின் இரு பெரும் கடமைகளுடன் தொடர்பாகவே இந்த இரு பெருநாட்களும் அமையப் பெற்றுள்ளமையைக் காண்கிறோம். ஒன்று நோன்பு மற்றயது ஹஜ். இவை இரண்டினதும் உள்ளடக்கத்தை பார்க்கின்ற போது அவை இவ்வுலகில் நிகழ்ந்த இரு பெரும் விடயங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதைக் காணலாம். ஒன்று அல்-குர்ஆன் உட்பட உலகிற்கு அனைத்து வேதங்களும் ஸுஹுபுகளும் இறங்கிய காலப்பகுதி. மற்றயது அந்த வேதத்தை இவ்வுலகில் சுமந்து அதற்காய் முன்னணியில் நின்ற இறைத் தூதர்களது தியாக வாழ்வை நினைவுபடுத்தும் வகையில் நினைவு கூறப்டும் இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுபடுத்தும் நிகழ்வுகளுடன் தொடர்பு படுகிறது.
இந்த தொடர்புகள் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்கின்றன. அதுதான் ஒரு முஸ்லிம் எத்தகைய சூழ்நிலையிலும் அவனது அடிப்படை பணியை விட்டும் தூரப்பட்டு வாழ முடியாது. அது அவனது கொண்டாட்டங்களாயினும் சரியே. அந்த வகையில் இவ்விரு பெருநாட்களும் நேர்வழி கிடைக்கப் பெற்றமையையும் அதற்காக தியாகம் செய்து உழைத்த இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டமையையும் கொண்டாடும்  தினங்கள். எனவேதான் அல்லாஹ் இவ்விரு தினங்களிலும் நேர்வழி கிடைத்தமைக்காக அல்லாஹ்வை பெருமைப்படுத்துங்கள் என அல்-குர்ஆனிலே குறிப்பிடுகிறான்.
உண்மையில் நேர்வழி கிடைத்தல், அதற்காக உழைத்தல் என்பது இந்த பிரபஞ்ச நலனுக்காகவும் இந்த பிரபஞ்சத்தில் வாழும் அனைவரதும் அனைத்தினதும் நலனுக்காகவும் உழைத்தல் என்றுதான் இஸ்லாம் கருதுகின்றது. அந்தவகையில் இவ்விரு பெருநாட்களும் முஸ்லிம் சமூகத்துடன் மாத்திரம் சுருங்கிய கொண்டாடங்களாக அல்லாமல் இந்த உலகின் சுபீட்சத்திற்கான உழைப்பை நினைவு கூறும் தினங்களாகப் பார்க்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்த செய்தியை நாம் இந்த உலகிற்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.
இந்தப் பின்னணியில் ஈதுல் பித்ரை அணுகும் போது அது அழகான ஒரு செய்தியை எமக்குத் தருகின்றது. ஈதுல் பித்ர் றமழானைப் பூர்த்தி செய்ததைத் தொடரந்து வருகின்ற கொண்டாட்டம். றமழானைப் பற்றி அல்-குர்ஆன் குறிப்பிடும் போதுறமழான் மாதம் அல்-குர்ஆன் இறக்கப்பட்ட மாதமாகும். அது மனிதர்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காகவும், நேர்வழியையும் தெளிவையும் விளக்குவதற்காகவும் இறக்கப்பட்டது. எனவே, யார் இந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோனபிருக்கட்டும்…” (அல்-பகரா:185) என நேர்வழிகாட்டலை வழங்குவதற்காக குர்ஆன் இறங்கிய மாதம் என்கிறது. அதே வசனத்தின் இறுதி இந்த மாதத்தை முடிக்கும் போது நேர்வழி பெற்றமைக்காக அல்லாஹ்வை பெருமைப்படுத்துமாறு சொல்கிறது.
ஈதுல் பித்ர் கொண்டாடப்படும் போது இந்தக் கருத்து மறக்கப்படக் கூடாது. றமழானின் அடிப்படைக் கடமை நோன்பாகும். அது ஒரு முஸ்லிமிடம் இஸ்லாம் எதிர்பார்க்கும் பணியை நிறைவேற்றுகின்ற பக்குவத்தை ஏற்படுத்த விரும்புகின்றது. நோன்பிருப்பதன் ஊடாக தனது ஆசாபாசங்கள், உணர்வுகள், தேவைகளை கட்டுப்படுத்தி வாழப் பழகுகின்ற ஒரு முஸ்லிம் குறைந்த அளவில் அடுத்த மனிதனுக்கு தீங்கு செய்யாதவனாக மாற வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கிறது. அதுதான் ஒருவர் முஸ்லிம் என்பதற்கான குறைந்த பட்ச அடையாளம் என்பதனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் முஸ்லிம் என்பவர் தனது நாவாலும் கரத்தாலும் பிறருக்கு தீங்கு செய்யாதவனாவான்”. தன்னுடன் பிரச்சினைப்பட வருபவனுடன் தான் நோன்பாளி எனக் கூறி விலகி நிற்றல், மோசமான வர்த்தை பேசாதிருத்தல், பொய் பேசாதிருத்தல்என நோன்பின் போது தவிர்ந்திருக்கப் பயிற்றப்பட்ட அந்த வழிகாட்டல்கள் இதனையே எமக்கு உணர்த்துகின்றன.
            அடுத்து, ஒரு முஸ்லிம் உயர்ந்த அளவில் தனக்கு விரும்புவதையே அடுத்த மனிதனுக்கும் விரும்புகின்ற, அடுத்தவரகளின் உணர்வுகளை, பிரச்சினைகளை புரிந்து கொள்கின்ற மனோ நிலையும், உணர்வும் வளரப் பெற்றவராக றமழானின் பயிற்சியினூடாக மாற வேண்டும். நீங்கள் உங்களுக்கு விரும்புவதை உங்களது சகோதரனுக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவர்களாகமாட்டீர்கள்”. இது ஒருவர் தான் ஒரு முஸ்லிம் என்பதற்கான உயர்ந்தபட்ச அடையாளமாகும். நோன்பினூடாகவும் றமழானின் ஏனைய வணக்கங்கள், பயிற்சிகள் ஊடாகவும் இந்த நிலையை ஒரு முஸ்லிம் அடையப் பெறுகின்றார்.
ஹதீஸ்கள் றமழானில் நோன்பை விடுத்து, நபியவர்கள் செய்த விஷேடமான நான்கு விடயங்கள் குறித்துப் பேசுகிறது. ஒன்று அல்-குர்ஆனை ஜிப்ரஈல் (அலை) உடன் இருந்து படித்தது. மற்றயது வீசும் காற்றை விட வேகமாக ஸதகா செய்தது. அடுத்தது இஃதிகாப் மற்றும் ஸகாதுல் பித்ர் என்பன. இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் நபியவர்கள் ஏன் வீசும் காற்றை விட வேகமாக ஸதகா செய்தார்கள் என்பதை விளக்கும் போதுஅல்-குர்ஆன் உருவாக்க விரும்பும் முதன்மையான பண்பாக அது உள்ளதுஎன்பார்.
உண்மையில் இது ஆச்சரியமான விடயமல்ல. இறை வேதம் இரண்டு விடயங்களை முதன்மை நோக்காகக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஒன்று இறைத் தொடர்பு மற்றயது மனித நலன். இறை வேதத்துடன் ஆழ்ந்து தொடர்பு படுகின்ற ஒருவர் அல்லாஹ்வுடனும் மனித உலகுடனும் தொடர்பாகின்றார். தனது வாழ்வு அல்லாஹ்வுக்காக மனித நலன் காக்க செலவிடப்பட வேண்டும் என உணர்கிறார். இதன் வெளிப்பாட்டைத்தான் நபியவர்களிடம் நாம் காண்கிறோம். ஸகாதுல் பித்ர் கூட இவற்றுடன் தொடர்பானதாகவே அமைந்துள்ளது. றமழானில் இரவு வணக்கம் நபியவர்களைப் பொருத்தவரை ஏனைய நாட்களை விட்டும் விஷேடமாக அமையவில்லை என ஆயிஷா(றழி) குறிப்பிடுகிறார்கள். அப்படியாயின் இரவு வணக்கம் அல்-குர்ஆனை கற்பதற்கும் அதனடியாக அல்லாஹ்வை நெருங்குவதற்கானதுமான சாதனமாகவே நபியவர்களுக்கு பயன்பட்டிருக்கிறது.
இங்குதான் இபாதத்களை, அதன் நோக்கங்களை சரியாக புரிந்து நிறைவேற்ற வேண்டிய தேவை எமக்கு ஏற்படுகிறது. இபாதத்கள் வெறுமனே மறுமை நன்மை என்ற ஒன்றை மாத்திரம் நோக்காகக் கொள்ளவில்லை. அவை வாழ்விற்கு உயர்ந்த பொருளை அளித்து அதனை உயர் இலக்குகளை நோக்கி வழிப்படுத்துவதை நோக்காகக் கொண்டமைந்திருப்பதைக் காண்கிறோம். ஆனால், துரதிஷ்டவாசமாக இபாதத்கள், அதற்கான மறுமை நன்மைகள், அதன் எண்ணிக்கைகள் குறித்துப் பேசப்படும் அளவு அவற்றின் நோக்கங்கள், தாற்பரியங்கள் குறித்துப் பேசப்படுவதில்லை.
இறைத் தூது கிடைத்தமையை நினைவு கூர்ந்து கொண்டாடுவதுதான் றமழானும் அதனைத் தொடர்ந்து வரும் பெருநாளும் என்ற விளக்கம் எம்மிடம் இருக்குமாயின் எமது உள்ளங்களில் அதற்கு ஒரு பெறுமானம் ஏற்படும். றமழானும், பெருநாள் தினமும் அல்-குர்ஆன் இறங்கியமையை கொண்டாடும் தினம் என்பதால் அல்-குர்ஆன் இறங்கிய நோக்கங்களுள் பிரதானமானதான மனித நலன் காத்தல் என்ற பணியால் இந் நாட்களை நாம் அழகுபடுத்துவோம். அப்போது இந்த நாட்கள் குறிப்பாக எம்மைச் சூழ வாழும் சகோதர சமூகத்தினருக்கு விருப்பத்துக்குரிய நாட்களாக, அவர்களாலும் பெரிதும் விரும்பப்படுகின்ற, கொண்டாடப்படுகின்ற நாட்களாக மாறும். உண்மையில் நத்தார் பண்டிகை அனைவருக்கும் அருள் சுமந்து வரும், உதவி கொண்டுவரும் நாட்களாக இன, மத பேதங்களுக்கப்பால் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகின்றது. ஆனால் அதனைப் பார்க்கிலும் அவ்வாறு பார்க்கப்படுவதற்கான பொருள் பொதிந்த நாட்களாக இருக்கும் எமது றமழானையும் பெருநாட்களையும் நாம் எம்முடன் மாத்திரம் சுருக்கிவிட்டோம்.
 எனவே, தான் ஒரு தூதை சுமந்த சமூகத்தின் பிரதிநிதி என்ற உணர்வுடன் இந்த பெருநாள் கொண்டாட்டங்கள் அமைந்திருக்குமாயின் தான் மகிழ்ந்திருத்தல் என்ற சுயநலம் சார்ந்த எல்லையைத் தாண்டி அடுத்த மனிதனை மகிழ்வித்தல் என்ற எல்லையை நோக்கி இந்த நாட்களின் செயற்பாடுகள் வியாபிக்கும். இறை வேதமும் அதன் போதனைகளும் அதற்கான  உழைப்பும்தான் இந்த உலகிற்கு மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் தரவல்லது என்ற உயர்ந்த செய்தியை இந் நாட்கள் கொடுக்கும். மானிட சுபீட்சத்துக்கு வழிகாட்டியாய் அமைந்துள்ள இறை வேதத்தை மனித சமூகம் பெற்றமையை கொண்டாடும் சர்வதேச தினமாக எமது ஈதுல் பித்ர் அப்போது பரிணமிக்கும். அல்லாஹ் எம்மை பொருந்திக் கொள்ளட்டும்.
http://vaaramanjari.lk/2018/06/10/கட்டுரை/‘ஈதுல்-பித்ர்’

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...