Monday, March 25, 2019

சமூக எழுச்சிக்கான அல்லது மாற்றத்திற்கான இஸ்லாத்தின் செயற்திட்டம் - 04 எம்.என்.இக்ராம்

                                    சிந்தனைகள் தீர்வுகளாக அமைவதெப்போது?
                                                                ikrammn@gmail.com
  


      கடந்த மூன்று இதழ்களில் சமூக எழுச்சிக்கான உழைப்பு என்பது என்ன? சமூக எழுச்சி என்றால் என்ன? சமூக எழுச்சி குறித்த அணுகுமுறைகள் என்பன குறித்து நோக்கினோம். இந்த இதழில் சமூக எழுச்சிக்காக உழைக்கின்ற போது ஒரு வேலைத்திட்டம் காணப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் அது எவ்வாறு அமைய முடியும் என்பது குறித்து நோக்க முயற்சிக்கின்றோம்.
சிந்தனைகள் தீர்வுகளாக அமைவதெப்போது?
            இஸ்லாம் வாழ்க்கைக்கான வழிகாட்டல் அல்லது தீர்வு என்பதன் நடைமுறை வடிவம் குறித்து நாம் சிந்திக்கின்ற போது; மனித இனத்தின் வரலாறு நெடுகிலும், அதன் கால, பூவியியல் மற்றும் சமூக சூழமைவிற்கேற்ப பல்வேறு தோற்றங்களை, வடிவங்களை எடுத்திருப்பதனை காண முடிகின்றது. ஆதம் (அலை) முதல் இன்றைய காலப் பகுதி வரையில் இதனை அவதானிக்க முடியும். ஒவ்வொரு இறைத் தூதரதும் முன்னுரிமை, அணுகுமுறை என்பன மாத்திரமல்லாது உள்ளடக்கம் சார்ந்த அம்சங்களும் கூட அவர்களது கால, இட, சமூக மாறுபாட்டிற்கேற்ப மாறுபட்டமைந்தமையை அல்-குர்ஆன் குறிப்பிட்டு விளக்குகிறது.
உங்களில் ஒவ்வொரு சாராருக்கும் ஒரு பிரத்தியேகமான வாழ்க்கைப் பாதையையும் ஒழுங்கையும் அமைத்துத் தந்தோம், அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே உம்மத்தாக அமைத்திருப்போம்…” அல்-மாஇதா:48
            இறைத் தூதர்களதும் அவர்களது சமூகங்களதும் வரலாறு குறித்து அல்-குர்ஆன் பேசுகின்ற விடயங்கள் இதனை எமக்கு விரிவாக விளக்குகின்றன. உதாரணமாக; மூஸா (அலை) அவர்களதும் இப்றாஹீம் (அலை) அவர்களதும் முன்னுரிமை அம்சங்கள் முற்றிலும் மாறுபட்டவை, அவர்களது அணுகுமுறைகள் வித்தியசமானவை, அவர்களது உள்ளடக்கம் சார் விடயங்களும் வித்தியாசமானவை. இதற்கு அவர்கள் வாழ்ந்த காலம், பூவியியல் அமைவிடம், சமூக சூழமைவு என்பன வேறுபட்டமைந்திருந்தமை காரணமாக இருந்திருக்கின்றன. அல்-குர்ஆனில் பேசப்பட்டுள்ள நபிமார்களின் வரலாற்றை சாதாரணமாக எடுத்து வாசித்துப் பார்ப்பது மாத்திரமே இதனை விளங்கிக் கொள்ள போதுமானதாகும்.
            இந்தப் பிண்ணனியில் இறைத்தூதர்களது காலத்திற்கு பிந்தய காலப் பகுதியை நாம் நோக்குகின்ற போதும் இந்த உண்மையே நிதர்சனமாகின்றது. இஸ்லாமிய உலகில் தோன்றிய பல்வேறு சிந்தனை மரபுகள், சட்ட மரபுகள், சமூகப் போராட்ட மரபுகள்என எதனை எடுத்து நோக்கினும் அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான முன்னுரிமைகளை, அணுகுமுறைகளை மாத்திரமன்றி உள்ளடக்கங்களைக் கொண்டே இயங்கியிருப்பதை அறியலாம். சட்ட மரபில் தோன்றிய இமாம்களும் மத்ஹப்களும் மற்றும் இஸ்லாமிய சீர்திருத்தப் பணியில் தோன்றிய சீர்திருத்த இயக்கங்களும் அமைப்புக்களும் இதற்கான பிரபலமான ஆதாரங்களாகும்.
            இது இஸ்லாமிய மரபுக்கு மாத்திரம் சொந்தமான ஒரு நியதியல்ல, மாற்றமாக இது ஒரு உலகப் பொது நியதி. உலகில் தோன்றிய சமூக எழுச்சி இயக்கங்கள், புரட்சிகள், போராட்டங்கள் அனைத்தும் இந்த நியதிக்கு உட்பட்டிருப்பதைக் காண்கிறோம். கடந்த நூற்றாண்டில் உலகப் பொதுச் சிந்தனையாக தன்னை அடையாளப்படுத்தி எழுந்து நின்ற சமவுடமைத் தத்துவத்தின் நடைமுறைக்கு என்ன நடந்தது? ஐரோப்பாவில் எழுதப்பட்ட மார்க்ஸ்ஸின் தத்துவங்கள் ரஷ்யாவில் லெனினிஸ வடிவெடுத்தது. அது பின்னர் ஸ்டாலினஸமாக, தஸ்தோவஸ்கியிஸமாக தோற்ற வடிவம் கண்டன. சீனாவில் மாவோ சேதுங்கினால் இன்னோர் வடிவம் கொடுக்கப்பட்டதுஅது இன்றைய தோற்றத்தில் பல்வேறு மரபுகளும் சிந்தனைப் பள்ளிகளும் கொண்ட ஒரு தத்துவமாக வடிவம் கண்டிருக்கின்றது.
            இவை அனைத்தும் எமக்கு ஒரு பொது உண்மையை சொல்கின்றன. எந்த சிந்தனையும் அதன் நடைமுறைக்கு வரும் போது, கால, பூவியியல் மற்றும் சமூக சூழமைவின் வடிவைப் பெறுவது ஒரு உலகப் பொது நியதி. அந்த வகையில் சமூக எழுச்சிக்காக அல்லது மாற்றத்துக்காக இஸ்லாத்தை ஒரு தீர்வாக முன்வைக்க முயல்கின்ற போதும் இந்த உண்மையை நாம் கவனத்திற் கொண்டாக வேண்டும்.
            இஸ்லாம் உலகிற்கு ஒரு தீர்வாக அமையும் என்பது ஒரு பொது அடிப்படை. அந்த நம்பிக்கையில்தான் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற ஒவ்வொருவரும் அதனை ஏற்கின்றார்கள். ஆனால், அது எப்படி என்று வருகின்ற போது; அதனை தான் வாழும் காலத்திற்கும் தான் வாழும் பூவியியல், சமூக சூழமைவிற்கும் ஏற்ப தீர்வாக முன்வைக்க வேண்டிய பொறுப்பு அதனை ஏற்றவர்களுக்கு இருக்கின்றது. இது மனித முயற்சி சார்ந்த ஒரு விவடயம். இதனை இஸ்லாமிய மரபில் தஜ்தீத் என்றும், இஜ்திஹாத் என்றும் பல்வேறு அமைப்புக்களில் வழங்குகின்றோம். இதனையே இறைத் தூதர்(ஸல்) அவர்கள்இந்த உம்மத்தில் அதன் மார்க்க விவகாரங்களை புணரமைக்கின்ற ஒருவரை ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அல்லாஹ் அனுப்பி வைக்கின்றான்என எளிமையாகக் குறிப்பிட்டார்கள்.
            இங்குதான் இஸ்லாத்தை தீர்வாக முன்வைக்க முயற்சிப்பவர்கள் அதனை தமது காலப்பகுதிக்கான, தாம் வாழும் பூவியியல் சூழமைவிற்கான , தாம் வாழும் சமூக சூழமைவிற்கான ஒரு திட்டமாக (Project) முன்வைக்க வேண்டியதன் அவசியம் மேல் எழுகின்றது. ஒரு சிந்தனையை நடைமுறை வடிவத்திற்கு கொண்டு வருவதற்கான சிறந்த வழிமுறைதான் அதனை ஒரு தீர்வுத்திட்டமாக வடிவமைத்து முன்வைப்பதாகும்.
            ஒரு திட்டம் குறித்த ஒரு இலக்கை கொண்டிருக்கும், காலப் பகுதி வரையறுக்கப்பட்டிருக்கும், அதற்கு அவசியமான வளங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும், அதனை நடைமுறைப்படுத்துகின்ற வடிவங்கள், வழிமுறைகள், முகவர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். அந்த வகையில் தேவையான உள்ளீடுகளுடன் மிகப் பொறுத்தமான ஒரு விளைவை அடைவதற்கான ஒரு முழுமையான செயற் தொகுதியாக இது காணப்படும். ஒரு திட்டம் வரையப்படுவதற்கு முன்னர் என்ன செய்யப்பட வேண்டும். ஒரு திட்டத்தின் உள்ளார்ந்த செயற் தொகுதிகள் என்ன? அதன் நடைமுறையில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன? அதன் நிறைவில் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் என்ன? அந்த திட்டத்தின் பருமன் கால அளவிலும், உள்ளடக்க அளவிலும் எவ்வாறு அமையலாம்? அதில் தாக்கம் செலுத்தும் காரணிகள் என்ன என்பது குறித்தெல்லாம் திட்ட முகாமை தொடர்பான சமூகவியல் ஆய்வுகள் தாராளமாகவே பேசியுள்ளன. இது இன்று ஒரு தனித் துறையாகவே வளர்ச்சி கண்டுள்ளது.
            திட்டங்கள் நிறுவனங்களது வளரச்சிக்கு பங்களிக்கின்ற ஒரு வழிமுறையாக மாத்திரமன்றி சமூக எழுச்சிக்கான, மாற்றத்திற்கான மிகப் பயனுறுதி வாய்ந்த வழிமுறையாகவும் இன்று அடையாளப்படுத்தப்படுகின்றன. தன் கையில் அற்புத விளக்குகளை சுமந்த அலாவுத்தீனின் அற்புதங்களால், ஆகர்சனங்களால் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்ட ஆகர்சனத் தலைமைத்துவங்களின் காலம் கடந்து அந்த இடத்தை இன்று திட்டங்கள் பிடித்துள்ளன. மனித இனத்தின் விசாலித்த பெருக்கமும், சிக்கலான பிரச்சினைகளும் அதனடியான தேவைகளும் உலகின் பூவியியல் எல்லை தாண்டிய அதன் சங்கமும் தனிமனித ஆகர்சனத் தலைமைத்துவத்தின் பாத்திரத்தை இன்று வலுக் குறைத்து விட்டது. இதற்கான ஒரு முன்னறிவுப்பாகத்தான் பௌதீக முஃஜிஸாக்களிலிருந்து மாறுபட்ட ஒரு வடிவில் இறுதித் தூதரின் வருகை அமைந்திருக்கக் கூடும்.
            எவ்வளவு ஆகர்ஷனம் மிக்க தலைமைகளாயினும் ஒரு சில வினாடிகளில் அவர்களது ஆளுமைகள் பொது வெளியில் சிதைக்கப்படலாம். எவ்வளவு இழிவான ஆளுமையாயினும் ஒரு சில வினாடிகளில் அதன் தோற்றம் உருப் பெருப்பிக்கப்படலாம். ஆனால், நன்கு கட்டப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தை இப்படி சிதைப்பது சிரமமானது. அதனை ஒரு தனிமனிதன் அல்லாமல்  ஒரு சமூகமே சுமக்கும் நிலை காணப்படும்.
            இஸ்லாமிய வேலைப் பரப்பில் இந்த உண்மை; நடைமுறையில் மறக்கப்பட்டு மறுக்கப்பட்டுப் பேவதனைக் கண்கிறோம். ஆகர்ஷனம் மிக்க தனிமனிதர்களைத் தேடுவதிலையே பல வேலைத்திட்டங்கள் கிழடு தட்டிவிடுகின்றன. இன்றைய உலகம் தனிமனிதர்களின் மோதும் தளமாக இல்லை. சமூகங்களின் மோதும் தளமாகவும் அது இல்லை. அது திட்டங்களின் மோதுகைத் தளமாகவே இருக்கின்றன. ஸியோனிஸத் திட்டம், ஈரானியத் திட்டம், சீனத் திட்டம், அமெரிக்கத் திட்டம், இந்தியத்திட்டம்பல்வேறு பொருளாதார மாபியாக்களின் திட்டம்என திட்டங்களின் மோதுகைத் தளமாக மாறிவிட்டுள்ளன. சிக்கல் நிறைந்த அசுர வேகத்தில் இயங்கும் இன்றைய உலகம் ஒரு திறந்த சதுரங்க ஆட்டப் பலகையாக தோற்றம் கண்டுள்ளது. இதில் இஸ்லாம் என்பது எந்த இடத்தில் எந்த வடிவத்தில் தீர்வுத் திட்டமாக கள ஆட்டம் காணும் இடத்தில் உள்ளது. அது எந்தப் பரிமாணத்தில் எந்த எட்டில் எந்த வடிவத்தில் அதன் இருப்பை கொண்டுள்ளது? என்பது எமக்கு முன்னுள்ள பெரு வினா.
            இஸ்லாத்தை தீர்வாகப் பேசுவோர் சிக்குண்டள்ள புள்ளி இதுதான். இஸ்லாம் ஒரு தீர்வுத்திட்டமாக முன்வைக்கப்படுவதைப் பார்க்கிலும் இன்று அது தீர்வைத் தரும் ஒரு போதனையாக சிலாகிக்கப்படுவதே அதிகம். போதனைகள் வாழ்க்கைக்கான திட்டங்களாக கூர் நிலைப் (Micro) படுத்தப்படாத வரை அது நடைமுறைத் தீர்வாக அமையப் பெறுவதில்லை. அவை ஆண்டாண்டு காலமாக மனிதர்களை ஆசுவாசப் படுத்தும், அவர்களுக்கு கேட்பதற்கினிமையான போதனைகளாக மாத்திரமே இருந்து விட்டுப் போகும்.
            பல இஸ்லாமிய அமைப்புக்களால் தசாப்தங்கள் பல கடந்தும் தமது அடைவுகள் குறித்து துள்ளியமாக குறிப்பிட முடியாமையின் புள்ளி இதுதான். இந்த உலகிற்கு, இந்த சமூகத்திற்கு, இந்த நாட்டிற்கு, இந்த பிரதேசத்திற்கு, இந்தப் பிரச்சினைக்கு, இந்த நிறுவனத்திற்குஉரிய இஸ்லாத்தின் தீர்வு இதுதான், அதனை செயற்படுத்தும் வழிமுறை இதுதான், காலம் இதுதான், அதற்கான வளங்கள் இவைதான்என துள்ளியமாக குறிப்பிட முடியுமான இயலுமை இருக்குமாயின் இஸ்லாமிய வேலைத்திட்டம் இலக்கற்று காற்றில் அலைமோதும் சருகாக இருக்க அவசியமில்லை. அதுதான் அலைகளைத் தோற்றுவிக்கும், உலகின் போக்கைத் திசைப்படுத்தும் திட்டமாக மைய நிலையில் இயங்கும்.
            மூஸாவைத் தேடும், உமரைத் தேடும், பன்னாவைத் தேடும் மனிதர்களே! அவர்கள் மீண்டும் வரப் போவதில்லைஅவர்களை வழிப்படுத்திய இஸ்லாம் இருக்கின்றதுஅதனை நீங்கள் வாழும் காலத்திற்கு, இடத்திற்கு, சூழமைவிற்கு ஏற்ப திட்டங்களாக வடிவமைக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்குரியதுஉங்களது பிரச்சினைகளுக்கான, தேவைகளுக்கான தீர்வைத் தேட வேண்டியது நீங்கள்தான்தீர்க்கதரிசிகள் வானிலிருந்து வரப் போவதில்லை. அவர்களை மன்னிலிருந்து நீங்கள் காண வேண்டுமாயின் முதலில் தீர்வுத் திட்டங்களை வடிவமைத்துக் கொள்ளுங்கள்அப்போது இன்றைய காலத்தில் அதனைச் சுமக்கும் நமது காலத்து, தேசத்து உமர்கள் இங்கிருந்து வருவார்கள். இது உமர்கள் திட்டங்களை ஆளும் உலகல்லதிட்டங்களால் உமர்கள் ஆளப்படும் உலகம். இந்த உலகில் முறைமைகளோ திட்டங்களோ அற்ற சிந்தனைகள் வெறும் தனிமனிதர்களால் மாத்திரம் வாழும் பலத்தைப் பெற்றுக் கொள்ளும் என்பது சாத்தியம் குறைந்த ஒரு எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...