Tuesday, November 8, 2016

தனியார் சட்ட சீர் திருத்தம் - கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய சில விடயங்கள்

         
           இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட சீர் திருத்தம் தொடர்பிலான பேச்சு மீண்டும் மேல் எழுந்துள்ளது. இதில் குறிப்பாக பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான பிரச்சினை முக்கிய ஒரு விடயமாக மேலெழுப்பப் பட்டு வருவது அவதானத்துக்குரியது. இந்த வகையில் இது தொடர்பில் நாம் கவனமாக சிந்திக்க வேண்டிய சில விடயங்கள் காணப்படுகின்றன.
இஸ்லாம் பொதுவில் திருமணத்திற்கு வயதை ஒரு வரையறையாக இடவில்லை. அதே போன்று பொதுவாகவே ஒரு பெண் பிள்ளையை திருமணம் முடிக்க நிர்ப்பந்திக்க முடியாது என்பது ஷரீஆவின் நிலைப்பாடு. அப்படி செய்தால் அது பிரிக்கப்பட முடியும். அதே போன்றுதான் பருவமடையாத நிலையில், பொருப்புக்குரிய தகுதி நிலையடையாத நிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்டாலும் பிள்ளை முடிவெடுக்கும் காலத்தில் அதற்கு பிரிவதற்கும் சேர்வதற்கும் வாய்ப்புள்ளது என்ற ஏற்பாடுகள் ஷரீஆவில் உள்ளன.
இங்கு சிறு வயது திருமணத்தை இஸ்லாம் ஆதரிக்கிறது, ஊக்குவிக்கிறது என்பதாக நாம்  எடுத்துவிடக் கூடாது. திருமணத்துக்குரிய முழு இலக்கும் அடையப் பெற அதற்குரிய தகுதி நிலை தேவை என்ற கருத்தில் எத்தகைய மாற்று நிலைப்பாடும் இல்லை. அந்த வகையில், திருமணம் என வரும் போது, முதிர்ச்சி, தகைமை என்பன பார்க்கப்பட வேண்டும் என்பதனை இஸ்லாம் பொதுவில் வலியுருத்துகிறது. ஆனால், இது நபருக்கு நபர், இடத்துக்கு இடம், குடும்பத்துக்கு குடும்பம், சமூகத்துக்கு சமூகம், பிரதேசத்துக்கு பிரதேசம், நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் என்ற வகையில்தான் இங்கு ஷரீஆ அந்த தகுதியும், முதிர்ச்சியும் அடையப் பெறுவதற்கான காலத்தை வரையறை செய்யவில்லை என்பதைக் காண்கிறோம்.
அதே போன்று இஸ்லாமிய சட்டப்பரப்பில் திருமணம் சார்ந்த விடயங்கள் இரு நோக்குகளில் பார்க்கப்படுகின்றன.
1-இபாதத் சார்ந்த நோக்கு.
2-முஆமலாத் சார்ந்த நோக்கு
இபாதத் சார்ந்த நோக்கில் பார்க்கின்ற போது சிறந்த சந்ததி, கற்பை பேணல்,மார்க்கத்தை பாதுகாத்தல், சமூகத்தை பாதுகாத்தல்… என்பன திருமணத்தின் பிரதான இலக்குகளாகப் பார்க்கப்படுகின்றன. முஆமலாத் சார்ந்த நோக்கில் பார்க்கும் போது திருமணத்தில் பாலியல், மார்க்கம், சமூகம் என்பதைத்தாண்டி வேறு பல விடயங்களும் நோக்காகக் கொள்ளப்படுகின்றன. இதில் இரு சாராருக்கிடையில் பல நோக்குகளில் இடம் பெறும்  வியாபார உடன்படிக்கையை ஒத்த உடன்படிக்கையாக திருமணம் நோக்கப்படுகின்றது. இதன் போது ஒரு சிறு பிள்ளையின் சொத்தை பராமரித்தல் மற்றும் உள்ள அது போன்ற பல்வேறு நலன் சார்ந்த விடயங்களும் ஒரு நோக்காக பார்க்கப்படுகின்றது (இது விரிவாக பேசப்பட வேண்டியது). இந்த வகையில்தான் இஸ்லாமிய சட்டப் பரப்பில் இந்த விடயம் தனித்து நோக்கப்படுகின்றது. இந்த இரண்டு வகை நோக்குகளுக்குள்ளாலும் வயது வரையறை இன்றி பல்வேறு இலக்குகளை மையப்படுத்தி ஆள், இட, சூழல் வேறுபாட்டிற்கு ஏற்ப திருமணங்கள் இடம் பெறுவதற்கான அனுமதி இஸ்லாத்தில் உள்ளது.
இந்த வகையில் பார்க்கும் போது திருமணம் என்ற விடயம் தனி நபர், குடும்ப, சூழல் வேறுபாடுகளுக்கு ஏற்ப, குறித்த சாராரின் தேவைகளை கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட முடியுமான ஒரு விடயம். இதில் பொதுவாக யாருக்கும் அநீதிகள் இழைக்கப்டாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் கவனத்தில் கொள்ப்பட்டிருப்பதையே நாம் காண்கிறோம்.
 இந்த வகையில், தனியார் சட்ட சீர் திருத்தம் என்ற விடயத்தில் எமது கவனத்தைப் பெற வேண்டிய பல்வேறு விடயங்கள் காணப்படுகின்ற போதும் வயது வரையறை என்பது மாத்திரம் ஏன் பெரியதோர் விடயமாக நோக்கப்படுகிறது? உண்மையில் இலங்கை முஸ்லிம்களிடம் சிறுவயதுத் திருமணம் பிரச்சிரனைக்குரியதாக உள்ளதா? அது தொடர்பான துல்லியமான ஆய்வுகள் உள்ளனவா? இது ஏன் பிரச்சினைக்குரியதாக பார்க்கப்படுகிறது? மிக மிக சிறிய அளவில் நடக்கும் ஒன்றுக்கு ஏன் பெரிய அளவில் சட்ட ஏற்பாடுகள் தேவை? என்ற கேள்விகள் இதனை பொருத்த வரையில் எழாமல் இல்லை.
            இந்த இடத்தில்தான் இங்கு நாம் இதற்கு பின்னால் உள்ள சர்வதேச சமவாயங்களின் அஜெண்டாக்களையும் விளங்க வேண்டும்.  திருமணத்திற்கான வயது வரையறையை கொண்டு வருதல் என்பது 1979 டிசம்பரில் ஐ.நாவால் முன்வைக்கப்பட்ட CEDAW (Convention on the Elimination of all forms of Discrimination against Women-பெண்களுக்கெதிரான அனைத்துவிதமான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சமவாயம்) என்ற பெண் சமத்துவம் குறித்து வழியுருத்தும் சர்வதேச சமவாயத்தின் முக்கிய நிபந்தனை. இந்த சமவாயத்தில் எமது நாடு உட்பட ஒரு சில நாடுகள் தவிர உலகின் 189 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த சமவாயம் வெளிப்படையில் பல நலன்களை கொண்டிருப்பது போன்றிருந்தாலும் இதற்குப் பின்னால் குறிப்பாக சமூகங்களின் பலத்தை தக்க வைக்கும் இயற்கை அலகான குடும்ப ஒழுங்கை தகர்த்தெரியும் பல்வேறு எதிர்மறை விடயங்களை கொண்டிருக்கின்றது. தன்னினச் சேர்க்கையை சட்ட பூர்வமாக்கள், விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கள், திருமணத்திற்காக வயது வரையறைகளை ஏற்படுத்தல்... என குடும்ப வாழ்வை தகர்த்தெரியும் பல அம்சங்களை சட்ட பூர்வமாக அரசுகளை செய்வதற்காக நிர்ப்பந்திக்கும் ஒரு ஒப்பந்தமாகவே CEDAW காணப்படுகிறது. இந்த வகையில்தான் திருமண வயதெல்லையை மாற்றுதல் என்ற நிபந்தனை GSP+ வரிச் சலுகையை பெறுவதுடன் தொடர்பாகிறது. இதில் திருமணத்திற்கு வயதெல்லை ஏற்படுத்துவது எப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் என நாம் சிந்திக்க முடியும். உண்மையில் சர்வதேச சமூகம் சிறுவர் பாதுகாப்பு,பெண் உரிமை என்பவற்றை (அவற்றுள் பல நலன் வெளிப்படையாக இருப்பதாக தெரிந்தாலும்) பேசுவதன் பின்னால் மிக மோசமான அஜெண்டாக்கள் இருக்கின்றன. இந்த வயது விடயத்தின் பின்னால் உள்ள நோக்கம் சட்டப்படி திருமணம் முடிப்பதை பிற்போட்டு விபச்சாரத்தை ஊக்குவிப்பது. சட்டப்படி செய்தால் குற்றம் மற்றப்படி இருவரும் இணங்கிச் செய்தால் அது மனித உரிமை என்ற நிலைக்கு இட்டுச் செல்வதுதான் இதன் நோக்கம்.
எனவேதான் குடும்ப வாழ்வை பாதுகாப்பது தொடர்பில் இஸ்தான்பூலில் அண்மையில் ஒரு சமவாயம் நிறைவேற்றப்பட்டது. இது குடும்ப வாழ்வை தகர்ப்பதற்கான சர்வதேச சமவாயமான CEDAW வினை எதிர்கொள்ளும் வகையில், குடும்ப வாழ்வை பாதுகாப்பதற்காக துருக்கியை மையப்படுத்தி இஸ்லாமிய உலகில் மேற் கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டத்தின் ஒரு அங்கம். இவ்வருட ஏப்ரல் மாதப் பகுதியில் துருக்கியில் குடும் வாழ்வு பற்றிய ஒரு மாநாடு இடம் பெற்றது. அதில் பல ஆய்வுக் கட்டுரைகளும் முன்வைக்கப்பட்டுத்தான் இந்த சமவாயம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பின்னணியில் அதன் விதிகள் இங்கு கவனத்தில் கொள்ளப்படுவது சிறந்தது. அதில் குடும்ப வாழ்வுடன் தொடர்பான அனைத்தையும் உள்ளடக்கும் வகையிலான விதிகள் காணப்படுகின்றன. இதில் அவர்கள் வயதை குறிக்காது முதிர்ச்சி, தகைமை என்பதனையே குறிப்பிட்டுள்ளார்கள்.(11. பதினோராம் விதி:திருமண ஒப்பந்தத்திற்கு தம்பதியினரின் தகுதி நிலை,பொருப்பை சுமப்பதற்கான இயலுமை என்பன நிபந்தனைகளாகக் கொள்ளப்படும்.)
திருமண வயதெல்லை தொடர்பான விடயத்தில் நாம் ஏன் இப்படி சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாகக் குறிப்பிடலாம்.13 வயதுடைய பிள்ளை… தாய் அருகில் இல்லை... இரவில் தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் பக்கத்தில் கத்தியுடனேயே இந்தப் பிள்ளையின் இரவுகள் கழிந்தன...குடும்பத்தார் எடுத்த தீர்மானம் அவரை திருமணம் செய்து கொடுப்பது... இது வயது வரையரை 16 அல்லது 18 ஆக இருந்தால் அந்தப் பிள்ளையின் நிலை என்ன?... ( அந்தப் பிள்ளை மிகச் சிறப்பான வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கிறது)
இது சிந்திக்க வேண்டிய ஒரு பகுதி. இங்கு திருமணம்தான் ஏக தீர்வு என்றில்லாவிட்டாலும் அதுவும் மிகவும் முக்கியமான ஒரு தீர்வாக இத்தகைய சூழ் நிலையில் அமைய முடியும். எமது சமூகத்தில் குடும்பங்களுக்குள்ளால், அயலவர்களால், நெருங்கியவர்களால் சிறு பராயத்திலேயே பாலியல் தொந்தரவுகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் ஆட்படும் பெண் பிள்ளைகள், ஆண் பிள்ளைகளின் தொகை கணிசமாக இருப்பதாகவே நாம் செவியுரும் பல செய்திகள் சொல்கின்றன. இது பல வழிகளில் இடம் பெறுகன்றன.
சொந்த தகப்பனால், சகோதரர்களால்…,நெருங்கிய உறவுகளால், சகோதரிகளின் கணவர்களால்... என இதன் பயங்கரம் அதனை அறிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் இது மானம் எனும் போர்வையால் மூடப்பட்டிருக்கும் ஒரு நரகம். இதனை தேசிய அளவில் காதி சபையில் செயற்படுகின்ற ஒரு சகோதரரும் உறுதிப்படுத்தினார். அங்கு வருகின்ற பிரச்சினைகளுள் அதிகமானவை நெருங்கிய உறவுகளுக்கு மத்தியில் ஏற்பட்ட தகாத உறவு சார்ந்தது என்கிறார் அவர். இந்த வகையில் பார்க்கும் போது இத்தகையவர்களுக்கு புணர் நிர்மானமளிப்பதற்கான வசதிகள் எம்மிடம் எந்தளவு உள்ளது?... இத்தகைய அச்சுருத்தலுக்கு, அல்லது குற்றத்துக்கு உட்படுத்தப் படுவோருக்கான பாதுகாப்பை எப்படி வழங்குவது? பாதுகாப்பு என்பதனைத் தாண்டி இப்படியான ஒரு நிலைக்கு உட்படுத்தப்பட்டவர் வழி பிறழ்வதற்கான வாய்ப்புகளே அதிகம். இலங்கையில் விபச்சாரத் தொழிலுக்கு வரும் பெண்களுள் அதிகாமானவர்கள் காதலர்களால் ஏமாற்றப்பட்டவர்களும்,துஷ்பிரயோகத்துக்குட்பட்டவர்களும் என்ற ஒரு செய்தி அண்மைய சிங்கள நாளிதழ் ஒன்றில் புள்ளிவிபரங்களுடன் பதியபபட்டிருந்தது.
 அந்த வகையில் இவர்களுக்கான தீர்வுகளுள் முக்கியமானதாக பாதுகாப்பான திருமண ஏற்பாடு இருக்க முடியாதா? வயதுக் கட்டுப்பாடு இருக்குமாயின் குறித்த வயதை அடையும் வரையில் இவர்கள் எங்கு எப்படி பாதுகாக்கப்படுவது சாத்தியம்?
இது இப்படியான சூழ் நிலையால் பாதிக்கப்படும் ஆண்களுக்குள்ள பிரச்சினையும் கூட. தனிப்பட்ட முறையில் அப்படியான விடயங்களால் பாதிக்கப்பட்ட சிலரை கையாண்ட போது, அவர்களது பாலியல் உணர்வுகள் விகாரமாக தூண்டப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்தது. இவர்களுக்கான தீர்வுகள் என்ன?...இஸ்லாம் திறந்து வைத்துள்ள ஒரு வாயிலை மூடிவிட்டு தீர்வுகள் தேடி வேறு எங்கு போவது? இது நாம் இது தொடர்பில் சிந்திப்பதற்கான ஒரு விடயம் மாத்திரமே.
அந்த வகையில் நிதானமான ஒரு பரந்த பார்வையுடனேயே இந்த விடயம் அணுகப்பட வேண்டும். உண்மையில் எமது நாட்டில் உள்ள பிரச்சினை சிறுவர் திருமணம் என்பதை விட சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் இளைஞர் நெறிபிறழ்வு என்பனதான். அடுத்து, இலங்கை முஸ்லிம் பெண்களின் திருமண வயது பிந்திப் போவதுதான் எமது சமூகத்தில் உள்ள பிரச்சினையாகக் காணப்படுகிறது. 25, 30 வயது தாண்டியும் திருமணத்தில் இணையாதவர்களுடைய பிரச்சினைதான் அதிகம். சீதனம், உயர் கல்வி மற்றும் பல்வேறு விடயங்கள் இதற்கான காரணமாகப்  பார்க்கப்படுகிறன. இப்படியிருக்க வயதுக்கு வரையரை குறித்து பேசுகின்ற இடத்தில் வயது வரையறை என்றல்லாமல், முதிர்ச்சி, தகுதி என்பன உறுதிப்படுத்தப்படும் ஒழுங்கொன்று குறித்து திருத்தத்தில் சிந்திக்கப்படுவதே சிறந்தது என்பது எனது தாழ்மையான அவதானம். இப்போது உள்ள வரையறையும் வெறும் வயது என்பதனை மாற்றி இந்த இடத்தில் அநீதிகளும், துஷ்பிரயோகங்களும் இடம் பெறாமல் குடும்ப வாழ்வின் நோக்கங்கள் பாதுகாக்கப்படும் வகையிலான ஒரு சட்ட ஏற்பாட்டை செய்வதே பொருத்தம். இதனை அண்மையில் இஸ்தான்பூலில் வெளியிடப்பட்ட குடும்ப வாழ்வை பாதுகாப்பதற்கான சமவாயமும் உறுதிப்படுத்துகிறது.
அடுத்து, இந்த விடயத்துடன் தொடர்பான வகையில் காழி நீதிமன்ற ஒழுங்கு, தலாக், சீதனம், மஹர் போன்றவற்றிலேயே சிக்கல்கள் நிறைய இருக்கின்றன.எமது கவனம் இந்தப் பகுதிகளிலேயே குவிய வேண்டும். தனியார் சட்டத்தில் சீர் திருத்தத்திற்குரிய பகுதிகள் நிறைய காணப்டுகின்ற போது எமது கவனம் ஒரு சிறிய விடயத்தில் குவிந்து மற்றயவை கவனமற்றுப் போய்விடக் கூடாது. இந்த சந்தர்ப்பம் இத்தகைய சிக்களுக்குரிய விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கே பயன்படுத்தப்பட வேண்டும்.
சீதனம் தடுக்கப்படுவதற்கான சட்ட ஏற்பாடு குறித்து இங்கு சிந்திக்கலாம். தலாக் என்பது பிரிவுக்கான சட்டம் என்பதைத் தாண்டி குடும்ப வாழ்வின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு எட்டு என்ற இஸ்லாத்தின் பார்வைக்கேற்ப, தலாக் முறை ஒழுங்கு படுத்தப்படுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இது பார்க்கப்பட வேண்டும். அப்படி தலாக் முறை ஒழுங்குபடுத்தப்பட்டால் குடும்பங்கள் பிரிவதற்கான வாய்ப்புகள் நிறைய தடுக்கப்பட்டு அவை சேர்வதற்கான இடமாகவே காழி நீதி மன்றங்கள் அமையும். மஹருக்கான (சமூக பொருளாதார நிலைக்கு தகுந்த) ஏற்பாடு இங்கு செய்யப்பட வேண்டும். குடும்ப பராமறிப்பு உறுதிப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடு மற்றும் திருமணத்திற்கு  பெண்ணின் சம்மதம் பெறப்பட்டதனை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடு.... என இதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள்  நிறையவே உள்ளன. இதை விட்டு எமது கவனம் திசை திருப்பப் படுதல் கூடாது.
இந்த வகையில் , தனியார் சட்ட சீர் திருத்தங்களை மேற் கொள்ளும் போது தகுதி வாய்ந்தவர்களது ஆலோசனைகளும் அவதானங்களும் பெற்றுக் கொள்ளப்படுவதுடன் சர்வதேச ரீதியாக இது தொடர்பான வேலைத்திட்டங்களில் ஈடுபடுபவர்களது அவதானங்களும் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்வதுவும் மிகவுமே சிறந்ததாக அமையும்.

Monday, September 19, 2016

Hijab Concept ஹிஜாப் ஒரு வேர் நிலைப் பார்வை- பகுதி-01
















மனித வாழ்வில் அதன் போக்கிலும், அமைப்பிலும் தாக்கம் செலுத்துகின்ற பிரதான அம்சங்களாக பின்வரும் 03 அம்சங்கள் காணப்படுகின்றன. அவை:
  1.            மனிதனுக்கும் இறைவனுக்குமிடையிலான தொடர்பு
  2.      மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையிலான உறவு
  3.      மனிதனுக்கு தனது சக மனிதனுடன் உள்ள தொடர்பு
இதில் மானிடத் தொடர்பில் பிரதானமாக இரு விடயங்கள் முக்கியமானவை:
  1. ஆண்-பெண் தொடர்பு
  2. தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு
இவற்றுள் நாம் பேச எடுத்த விடயம் ஆண் - பெண் தொடர்பு குறித்த பர்வையிலிருந்து எழுகின்ற ஒரு விவகாரம்.
ஹிஜாப் என்றால் என்ன? அது ஏன் அவசியம்? என்பதனை விளங்க ஆண் - பெண் தொடர்பு குறித்த இஸ்லாத்தின் பார்வையின் முக்கிய புள்ளிகளையாவது புரிந்து கொள்வது முக்கியமானது.

  1. ஆணும் பெண்ணும் அடிப்படையில் சமத்துவமானவர்கள், அவர்கள் வாழ்வின் உரிமைகளிலும் கடமைகளிலும் சம பங்காளர்கள்.
“உங்களில் ஆணாயினும் பெண்ணாயினும் அவர்கள் செய்த எந்த ஒரு செயலையும் நான் வீணாக்கிட மாட்டேன் என அவர்களது றப்பு அவர்களுக்கு பதிலளித்தான். நீங்கள் இருபாலாரும் ஒருத்தரை ஒருத்தர் சாரந்துள்ளீர்கள்….” –ஆல இம்ரான்-195-
“முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர்  பொருப்பாளர்களாகவும் உதவியாளர்களாக உள்ளனர். அவர்கள் நன்மையை ஏவுகின்றனர், தீமையை தடுக்கின்றனர்…” –தௌபா:71-
                                         2.ஆண்,பெண் இயல்பு அடிப்படையில் வாழ்வில் அவர்களது பணி, பொருப்புக்களில் வேறுபாடு கொண்டவர்கள்.
“ஆண்கள் பெண்களைப் போன்றவர்களல்லர்” – ஆல இம்ரான்:36-
“ஆண்கள் பெண்களின் நிர்வாகிகளாயிருப்பர்….” –நிஸா :34-
“ஆண்கள் பெண்களை பார்க்கிலும் படி நிலை வேறுபாடு கொண்டோராவர்…” –பகரா :228-

  3.ஆண்-பெண் இருபாலாரும் தமக்கிடையே இயல்பான ஈர்ப்புக் கொண்டவர்கள்.

“உங்களுக்கு உங்களில் இருந்தே துணையை படைத்தது அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். நீங்கள் உங்கள் துணையிடம் அமைதிபெற வேண்டும் என்பதற்காகவே அவன் அவ்வாறு செய்தான். அவன் உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தினான்” –ரூம்: 21-
          ஆண், பெண்ணின் சமூக வகிபாகம் மற்றும் அவர்களுக்கிடையான ஈர்ப்பும் வேறுபாடும் அவர்களுக்கிடையிலான உறவு தொடர்பில் சில ஒழுங்குகளும் வரையறைகளும் ஏற்படுத்தப்பட வேண்டியமையை வலியுறுத்துகின்றது. அதிலும் குறிப்பாக இருபாலாரதும் உறவில் மானிட விருத்தி தங்கியிருப்பது இதனை இன்னும் வலியுருத்துகிறது. 
              இரு பால் உறவு வெறும் இன்பம் சார்ந்த தொடர்பாக மாத்திரம் முடிந்து போவதாயின் இந்த தேவை பல போது அவசியப்படமாட்டாது. எனினும் இந்த வேறுபாட்டுக்கு இடையேயான பிணைப்பு மானிட வாழ்வின் அடிப்படை நோக்கம் ஒன்றை கொண்டிருப்பது இந்த உறவை ஒழுங்கு படுத்த வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதனுடன் மாத்திரம் இது சுருங்கி விடுவதில்லை. மானிட வாழ்வின் பொருள் இந்த உறவின் ஒழுங்கில்தான் பொதிந்துள்ளது.

 ஹிஜாப் ஒரு ஆடையல்ல அது ஒரு முறைமை


         
   இந்தப் பின்னணியில் இருந்தே இஸ்லாம் முன்வைக்கும் ஹிஜாப் சிந்தனை புரியப்பட வேண்டும். அதனை ஒரு ஆடையாக மாத்திரம் புரிந்து கொள்வது, அதுவும் பெண்ணுக்கான ஆடையாக மாத்திரம் புரிவது ஹிஜாப் குறித்த இஸ்லாத்தின் சிந்தனையை புரிவதில் விடப்படுகின்ற குறைபாடாகவே காணப்படும்.
            ஹிஜாப் குறித்து ஆரம்பமாக பேசிய வசனங்களாகக் கருதப்படும் ஸுரா அஹ்ஸாபின் வசனங்களை நாம் பார்த்தாலும், அதற்கடுத்து பேசிய வசனங்களாகப் பார்ககப்படும் ஸுரா நூரின் வசனங்களை பார்த்தாலும் அவை அனுமதி பெறுதல் என்ற விடயத்தில் இருந்தே ஹிஜாப் குறித்த பேச்சை ஆரம்பிப்பதை அவதானிக்கலாம்.
“ஈமான் கொண்டவர்களே! நபியினுடைய வீட்டுக்கு உங்களுக்கு அனுமதி கிடைத்தாலேயன்றி சாப்பாட்டிற்காக  உள் நுழைய வேண்டாம்….“ -அஹ்ஸாப்:53-
“ஈமான் கொண்டவர்களே! உங்களது அல்லாத பிறரது வீட்டிலே நீங்கள்,உங்களது வருகையை அறிவித்து உங்களுக்கான முன் அனுமதியை பெற்று, அங்கு வசிப்போருக்கு ஸலாம் கூறாத வரை நுழைய வேண்டாம். அதுதான் உங்களுக்கு சிறந்ததாகும். இதனை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள்…, அந்த வீட்டிலே எவரும் இருப்பதை காணாத போதும் அனுமதி கிடைக்காத வரை அங்கே நுழைய வேண்டாம். நீங்கள் திரும்பி சென்று விடுங்கள் என்று கூறப்பட்டால் திரும்பி சென்று விடுங்கள். அது உங்களுக்கு தூய்மையானதாகும். நிங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான்…., யாரும் வசிப்பிடமாக கொள்ளாத ஒரு வீட்டில் உங்களுக்கான ஒரு பொருள், தேவை இருப்பின் அங்கே நுழைவதில் குற்றம் கிடையாது. நீங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்துபவற்றையும் அல்லாஹ் அறிபவனாக உள்ளான்” -நூர் 27-29-
            இங்கு, உடம்பிற்கு ஹிஜாப் அணிவதற்கு முன்னர் மனதுக்கு ஹிஜாப் அணிவிக்க வேண்டிய தேவை இருப்பதை விளங்குகிறோம். இதனை ஸுரா நூரின் 58,59 வது வசனங்களும் இன்னும் உறுதிப் படுத்துகின்றன.
“ஈமான் கொண்டோரே! உங்களது வலக்கரம் சொந்தமாக்கப்பட்டவர்களும், பருவமடையாத உங்களது பிள்ளைகளும் நாளின் மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி பெறட்டும். அவை பஜ்ரு தொழுகைக்கு முன்னைய பொழுது, பகல் பொழுதில் உங்களது ஆடைகளை தளர்த்தி வைக்கும் நேரம், இஷாவுக்கு பின்னைய நேரம் என்பனவாகும். இவை உங்களுக்கான மூன்று அவ்ரத்துக்களாகும். அதனை தவிரவுள்ள நேரங்களில் அனுமதி குறித்த விடயத்தில் உங்களுக்கோ அவர்களுக்கோ பிரச்சினை கிடையாது. அவர்கள் உங்களை சுற்றிச் சுற்றி வருவோர். நீங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறீர்கள். அல்லாஹ் இவ்வாறுதான் உங்களுக்கு வசனங்களை விளக்குகிறான். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனும் ஞானம் கொண்டவனாயுமுள்ளான்……, உங்கள் குழந்தைகள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களை முந்தியவர்கள் அனுமதி கோரியது போல்  அவர்களும் அனுமதி கோரட்டும். அல்லாஹ் இவ்வாறுதான் உங்களுக்கு அவனது வசனங்களை விளக்குகிறான். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனும் ஞானம் கொண்டவனாயுமுள்ளான்” –நூர்: 58,59-
            இங்கு முதலில் அல்-குர்ஆன் அவ்ரத் என்பதை விரிவான பொருளில் பாவித்திருப்பதை விளங்கிக் கொள்வது அவசியம். அது உடலின் ஒரு பகுதி என்பதை தாண்டி மேலுள்ள வசனத்தில் குறித்த சில நேரத்தை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறித்த சந்தர்ப்பத்தில் குறித்த சாராருக்கு மறைக்கப்பட வேண்டிய ஒரு விடயமாக நாம் அவ்ரத்தை விளங்கிக் கொள்கிறோம்.
            இந்த வகையில் ஆடைக்கு முன்னர் வீடும், அறைகளும் இங்கு அவ்ரத்தாக பார்க்கப்பட வேண்டிய தேவை இருப்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன. ஒருவருடைய வீடு, எந்த வெளித் தலையீடுகளும் இன்றி தனித்த தன்மையுடன் (Privacy) இருக்க வேண்டும். அதற்குள்ளால் நுழைதல் முன் அனுமதி இல்லாமல் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணம் உள்ளால் இருப்பவர் மானசீக ரீதியாகவும், உடல், ஆடை… என எல்லா வகையிலும் சுதந்திரமாக இருப்பதற்கான வாய்ப்பை வழங்குவது என்பதுடன் வெளியால் இருப்பவர் உள்ளே இருப்பவரின் அனுமதி இன்றி அவரது மறைவான விடயங்களில் தலையீடு செயயாது இருப்பதுடன், காண்பதற்கு கூடாதவற்றை காண்பதன் ஊடாக தவறான நடத்தைகள் ஏற்படாது பாதுகாப்பதுமாகும். எனவேதான் அனுமதி மறுக்கப்படுவதற்கும் இங்கு இடம் இருக்கின்றது. (இதுவேதான் தொலைத் தொடர்பு சாதனங்களினாலான நுழைவுக்குமுறிய ஒழுங்குமாகும். ஆனால் துரதிஷ்ட வசமாக அப்படி பதில் அளிக்காவிடில் பலருக்கு காரணம் சொல்ல வேண்டிய துர்ப்பாக்கியம் இன்று நிலவுகிறது.) ஏனெனில், ஒருவர் எத்தகைய சூழலில் இருக்கிறார் என்பது யாராலும் குறித்துக் கூற முடியாது.
            அதிலும் ஒரு வீட்டிற்குள்ளும் ஒருவருடைய தனித்த அறை என்பது அவருக்கு இன்னும் சுதந்திரத்திற்குரிய இடம். அதிலும் அல்-குர்ஆன் உதாரணமாக குறிப்பிட்ட நேரம் போன்ற ஒருவர் மிக சுதந்திரமாக இருப்பதற்கான பொழுதுகள் முக்கியமானவை. இங்கு வெளியே இருப்பவரால் உள்ளிருப்பவரது சுதந்திரம் பாதிக்கப்படக் கூடாது என்ற கவனம் இருப்பது போலவே உள்ளே இருப்பவரால் வெளியே இருப்பவரது மனோ நிலை பாதிக்கப் படக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
            ஒருவரது பாலியல் உணர்வு முதல் அவரது மன உணர்வு மற்றும் சிந்தனை நடத்தை சார் சீர்மைக்கு இப்படியான சுதந்திரமான இடங்களும் பொழுதுகளும் முக்கியமானவை. அல்- குர்ஆனின் இந்த வசனங்களை வாசித்துச் செல்கின்ற போது இந்த வசனங்கள் ஹிஜாபை ஒரு தடையாக அல்லாமல் ஒரு சுதந்திர எல்லையை பெற்றுத் தரும் ஒரு தடுப்பாகவே குறிப்பிடுவதை பார்க்க முடிகிறது.
            இங்கு, அல்-குர்ஆன் ஒருவருக்கு பார்க்கக் கூடாத நிலையில், பருவத்தில், பார்க்கக் கூடாதவர்களது காட்சிகள் காண்பிக்கப்படக் கூடாது என்பதில் முதல் கவனம் எடுத்திருப்பதைக் காண்கிறோம். அதுதான் முதலில் இங்கு தடுக்கப் பட வேண்டியவை. அவை ஒருவனது ஆழ் மனக் காட்சியாக பதிந்துவிட்டால் அதன் விளைவு மிகவும் பாரதூரமானது. அதனைத்தான் நாம் இன்று உலகில் கட்டறற பாலியல் கலாச்சார சூழலின் விளைவாக அன்றாடம் அனுபவிக்கின்றோம்.
            இங்குதான் ஹிஜாப் குறித்த இஸ்லாத்தின் வழிகாட்டல் எங்கிருந்து நடைமுறைப்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்ற விடயம் எமக்கு துளங்குகிறது… எவனோ வடிவமைத்த ஆடையை அணிவது குறித்து சர்ச்சைப்படும் நாம்… குந்தியிருக்க வீடற்று வாழும் எத்தனையோ ஆயிரம் மக்கள் எப்படி இந்த வழிகாட்டலை நடை முறைப்படுத்துவார்கள் என சிந்திக்க வேண்டியுள்ளது… இரண்டு சுவர்களுக்கும் ஒரு முந்தானைக்கும் மத்தியில் வாழும் குடும்பங்களது கதி என்ன? மாற்றி அணிய ஆடை அற்று ஒட்டுத் துணியுடன் வாழும் மக்களது நிலை என்ன?... பள்ளிவாயில்களுக்கும், உழ்ஹியாக்களுக்கும், நிகாப் மாநாடுகளுக்கும்… கொட்டப்படும் இலட்சங்கள், மணித்தியாளங்கள், மனித வளங்கள் ஏன் இங்கு செலவழிக்கப்படக் கூடாது?... இது, மனிதனின் மானம் காக்கும் பணி…. இதற்கு யார் வகை சொல்வது? இஸ்லாத்தில் ஹிஜாபை நடைமுறைப்படுத்துவது என்பது ஒரு கருப்புத் துணியை பல்லாயிரங்கள் கொடுத்து எடுத்து உருவத்தை மூடுவது அல்ல… அது இங்கிருந்துதான் துவங்கப்பட வேண்டும்… அங்கு தொடங்கி… உடலை விற்கும் விரசமான சினிமாக்கள், பாடல்கள், இணையத் தளங்கள், பத்திரிகைகள்… இவற்றுக்கு மாற்றீடு கொண்டு வருவது வரை நீள வேண்டும்… இல்லாவிட்டால் நாம் போடும் கருப்புப் போர்வைக்குள் பாலியல் பூதம் ஒன்று எப்போதுமே  குமுறிக் கொண்டிருக்கும்….

            தொடரும்…..

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...