Monday, September 12, 2016

ஈதுல் அழ்ஹா இறைத் தூதர்கள் கிடைக்கப் பெற்றமைக்கு நன்றி செலுத்தும் தினம்



ஈதுல் அழ்ஹா குறித்து ஸுரா ஹஜ்ஜின் 37 வது வசனம் “அல்லாஹ்வை அதன் இறைச்சியோ,இரத்தமோ சென்று சேர்வதில்லை...எனினும் உங்களிடமிருந்து தக்வா அவனைச் சென்று சேர்கிறது....இவ்வாறு, உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியமைக்காக அவனை பெருமைப் படுத்துவதற்காக அந்த கால்நடைகளை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்..” 
ஈதுல் பித்ர் இறைத் தூதை பெற்றமைக்காக றப்பை பெருமைப்படுத்தும் நாளாக...நேர்வழி என்ற றப்பின் அருளுக்கு நன்றி செலுத்தும் நாளாக இருப்பது போன்றே...ஈதுல் அழ்ஹா இறைத் தூதர்கள் கிடைத்தமையை கொண்டாடும் தினம்
உண்மையில் இந்த இரு நிகழ்வுகளும் ஏன் இபாதத்களாக மாற்றப்பட்டு கொண்டாடப் படுவதற்கானவையாகக் காணப்படுகின்றன? என்ற கேள்வி நமக்கு எழ முடியும்.
ஆம், இதற்கான பதிலை தினமும் நாம் எமது தொழுகைகளில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்...அதுதான் “எமக்கு நேரான பாதையை காட்டித் தருவாயாக“ என்ற பிரார்த்தனை...ஹிதாயத் என்னும் நேர்வழி எமது வாழ்வின் அடிப்படைத் தேவை..அது இல்லாது போகின்ற போதுதான் எமது தனிப்பட்ட வாழ்வில் குழப்பங்கள் தோன்றுகின்றன...குடும் வாழ்வில் சிக்கல்கள் தோன்றுகின்றன...எமது பொருளாதார, அரசியல் மற்றும் சமூக வாழ்வில் பிரச்சினைகள் தேன்றுகின்றன....
எனவேதான் மனிதனைப் படைத்து அவனுக்கு இந்த உலகின் அனைத்தையும் வசப்படுத்திக் கொடுத்த றப்பு அவனுக்கான வழிகாட்டலையும் வழிகாட்டிகளையும் வழங்கினான். முதல் மனிதன் ஆதம் (அலை) ஒரு நபியாக இருந்தமையே இதற்கு போதிய சான்றாகும். இந்தத் தொடரில்தான் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இறுதியாக இந்தத் தூதை சுமந்து வந்து முஸ்லிம் உம்மத்திடம் அந்தப் பணியை தனது இறுதி ஹஜ்ஜின் போது அறபா வெளியில் நின்று....“இந்த செய்தியை இங்கு சமூகம் தந்தோர் தராதோருக்கு எத்தி வையுங்கள்“ என ஒப்படைத்துச் சென்றார்கள்.
இனி இந்தப் பணியை இந்த உம்மத் சுமந்தாக வேண்டும்.இது சாதாரண பணியல்ல...இது இந்த உலகிற்கு தலைமை கொடுக்கும் பணி....இந்த உலகின் அத்தனை ஏற்ற இறக்கங்களுக்காகவும் பதில் சொல்லும், சாட்சி சொல்லும் பணி....அதனை தான் நிவேற்றி விட்டேனா என இறைத் தூதர் அன்று ஹஜ்ஜிலே கூடியிருந்தவர்களிடம் சாட்சி கோரியது இதற்காகத்தான்...அந்த தூதர்கள் இந்தப் பணியை சுமந்து செய்த தியாகங்களுக்கு முன்னால் அந்தப் பணியைக் கூட இன்னும் சரியாக விளங்கிக் கொள்ளாத நாம் எம்மாத்திரம்?!...ஸுரா ஹஜ்ஜின் இறுதியிலும், ஸுரா பகராவிலும் இன்னும் சில இடங்களிலும் “நாம் உங்களை மனித சமூகத்துக்கு சாட்சியாக அமைத்தோம், இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார்” என இதனை குர்ஆன் கூறுகிறது... “உங்களுக்கு நேரும் கஷ்டங்களெல்லாம் அவரால் சகிக்க சிரமமான துன்பங்களாயுள்ளன“ என இறைத் தூதர் இந்தப் பணியை எப்படி சுமந்தார் என குர்ஆன் எமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது... 
இனி, இதனை நினைவு கூற ஏன் இப்றாஹீம்(அலை) அவர்களது பணியின் தியாகங்கள் தெரிவு செய்யப்பட்டன என்ற கேள்வி இங்கு எழுகிறது... இதற்கும் அல்-குர்ஆன் ஸுரா ஹஜ்ஜின் இறுதி வசனத்திலேயே பதில் சொல்கிறது(இந்த வசனம் ஒரு முஸ்லிமின் பணியை சுருக்கமாக சொல்லும் வசனம் என இமாம் பன்னா சொல்வார்)...“ .....இது உங்கள் தந்தை இப்றாஹிமின் மார்க்கம்,அவர்தான் உங்களுக்கு முஸ்லிம் என பெயர் வைத்தார்...” இறைத் தூதர் இதனை ஒரு சமயம் “நான் இப்றாஹிமின் பிரார்த்தனை...” குறிப்பிட்டார்...இதனை ஸுரா பகராவின் 124 முதல் 163 வரையான வசனங்களில் மிகவும் அழகாககவும் ஆழமாகவும் றப்பு விளக்குகிறான்... இப்றாஹீமும் இஸ்மாஈலும் கஃபாவின் அத்திவாரத்தை உயர்த்திவிட்டு எமது சந்ததியில் ஒரு முஸ்லிம் உம்மத்தும்.. ஒரு தூதரும் வர வேண்டும் என்று கேட்ட பிரார்த்தனைக்கான பதில்தான் இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர் இறுதியாக நபிமாரின் பணியை சுமத்திச் சென்ற இந்த முஸ்லிம் உம்மத்தும்... அல்- குர்ஆனை பிரட்டிச் செல்கின்ற போது கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் சில ஸுராக்களின் தொடரும் உள்ளடக்கமும் கூட எனக்கு இந்த செய்தியை நினைவூட்டியது... இதனை ஒரு காத்திராவாக பல இடங்களில் நான் நினைவு கூர்வதுண்டு... அதுதான் ஸுரா அல்- அன்பியா 21 வது ஸுரா அதன் உள்ளடக்கமும் அதுதான்... அதனை அடுத்த 22வது ஸுரா, ஸுரா ஹஜ்...அதன் உள்ளடக்கம் தூது அதன் பணி யார் மீது பொருப்பு என்பது... அடுத்தது ஸுரா முஃமினூன் 23 வது ஸுரா...இது தூதை சுமப்போரின் பண்புகள் குறித்து பேசுகிறது... இறைத் தூதர் நபிமார்களிடமிருந்து பெற்ற இந்தப் பணியை 23 வருடங்கள் சுமந்தார் அல்லது 22 வருடங்கள் சுமந்த பணியை 23வது வருடத்தில் முஸ்லிம் உம்மத்திடம் ஹஜ்ஜின் வாயிலாக ஒப்படைத்துச் சென்றார்... இனி நாம் அதனை சுமக்க வேண்டும்..இதனையே ஹஜ்ஜும் அதன் கிரியைகளும் வருடா வருடம் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது...
இந்தப் பின்னணியில் இருந்து கொண்டு நாம் ஹஜ்ஜையும் அதன் கிரியைகளையும் கொண்டாட்டங்களையும் பார்க்கும் போது அது அர்த்தம் நிறைந்ததாக உள்ளது....உண்மையில் இந்தப் பணியை விட்டும் நமது வாழ்வை கழற்றி வைத்து சிந்தித்துப் பாருங்கள்...அது சிதிலம் சிதிலமாக உடைந்துபோகிறது...அதற்கான அர்த்தம் தொலைந்து பேகின்றது...
இனி இந்தப் பின்னணியில் இருந்து கொண்டு நாம் ஹஜ்ஜின் ஒவ்வொரு நிகழ்வாய் விளக்க முடியும் அதனை குர்ஆன் அழகாக விளக்குகிறது...அதனை இங்கு ஒவ்வொன்றாய் பகிர்ந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்...இங்கு நாம் எல்லோருமாய் நிறை வேற்றும் உழ்ஹியா குறித்து சற்று நோக்குவோம்...
இதனை ஸுர ஸாப்பாத்தின் 100வது வசனத்திலிருந்து 113 வது வசனம் வரை சுருக்கமாக றப்பு விளக்குகிறான்.....இப்றாஹீம் (அலை) தனது தூதை சுமக்க ஒரு ஸாலிஹான சந்ததியை கேட்கிறார்...றப்பு அவரது முதுமையில் அதற்கு பதில் கொடுக்கிறான் .. தூதை சுமக்கும் நிதானம் கொண்ட ஒரு நபி அவருக்கு சந்ததியாகக் கிடைக்கிறது...அவரது பிரார்த்தனை உண்மையா என்ற சோதிப்பத்தான் இஸமாஈலை அறுப்பது பற்றிய கட்டளை...அதில் அவர் வென்று விடுகிறார்...அவரை றப்பு முஹ்ஸின் என புகழாரம் சூடி ஒரு ஆட்டை பரிசாக வழங்குகிறான்...றப்பு தனது அடியானின் உள்ளத்தை பொருத்த வரை ரோசம் கொண்டவன் என்று இறைத் தூதர் சொல்வார்...அதில் தன்மீதான அன்பை பார்க்கிலும்வேறு எதுவும் மிகைக்கக் கூடாது என அவன் விரும்புகிறான்...அதற்கு அவன் பொருத்தமானவன்...இத்தனை நிஃமத்களை எமக்கு அவன் தந்த பின்பும் அவன் அதை உரிமை கோருவதில் என்ன தவரு இருக்கப் போகிறது?!.இதை குர்ஆன் இன்னும் பல இடங்களிலும் விரிவாக விளக்கும்....இதில் நபி இப்றாஹீம்-இஸ்மாஈல் உறவு....அவர்கள் இறை கட்டளையை நிறைவேற்றவும் மகனிடம் ஆலோசனை கேட்ட தந்தை மகன் ஜனநாயக உறவுகள் எல்லாம்இங்கு பேசவில்லலை...அதனைத்தாண்டி....நாம் ஒரு விஷேட நிகழ்விருந்தால் எப்படி ஒரு பிராணியை அறுத்து விருந்துவைப்போமோ...அதனைப் பாரக்கிலும் ஒரு விஷேட நிகழ்வுதான் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் அல்லது ஈதுல் அழ்ஹா...இது எமக்கான விஷேட தினம் மாத்தரமல்ல..இது மானிட சமூகத்துக்கான விஷேட தினம்...ஆனால் ,இந்த வணக்கத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் பின்னால்... நாம் இந்தப் பணியை சுமக்கும் தயார் நிலையுடன் இருக்கிறோமா?..மானிட சமூகத்துக்கு தலைமை வழங்கும் தகுதி நமக்கு இருக்கிறதா?...மானிட சமூகத்தின் அத்தனை துன்பங்களும் நம்மை சுடுகிறதா?...அதற்காக கவலைப் படுகிறோமா?....அதற்காக நாம் எம்மை எமது உடமைகளை, சந்ததிகளை தியாகம் செய்யும் மனப் பக்குவத்தை பெற்றுள்ளோமா?....என வினாக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன....இந்த ஈதுல் அழ்ஹா இவற்றுக்கு விடை தருமா?!

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...